logo

|

Home >

hindu-hub >

temples

திருச்சோபுரம் (தியாகவல்லி)

இறைவர் திருப்பெயர்: மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.

இறைவியார் திருப்பெயர்: தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : பரம தீர்த்தம், கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள குளமுமே.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், அகத்தியர், காகபுஜண்டரிஷி ஆகியோர்.

Sthala Puranam

thirusopuram temple

  • கோயில் உள்ள பகுதி 'திருச்சோபுரம்' என்றும், பக்கத்தில் உள்ள பகுதி 'தியாகவல்லி' என்றும் சொல்லப்படுகிறது.

     

  • இங்குள்ள மூர்த்தி அகத்தியர் பிரதிஷ்டை செய்தது என்று சொல்லப்படுகிறது.

     

  • திருமுறைப் பெயர் 'சோபுரம்' என்பது. 'சோழபுரம்' என்பது மருவி 'சோபுரம்' என்றாயிற்று என்றும்; திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்குத் திருப்பணி செய்த காரணத்தால் 'தியாகவல்லி' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

     

  • இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்ததாம். இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி ' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல் மேட்டைத் தோண்டிக் கோயிலை கண்டுபிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

     

  • இது தொடர்பாக; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.

     

  • "கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது."

     

  • இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருந்து 'காகபுஜண்டரிஷி' இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :   சம்பந்தர்    -    1. வெங்கண்ஆனை யீருரிவை (1.51); 

பாடல்கள்     :   சம்பந்தர்    -       வரந்தையான் சோபுரத்தான் (1.61.3); 

                    சுந்தரர்     -       சுற்றுமூர் சுழியல் (7.31.2); 

                  சேக்கிழார்    -      அரசிலியை அமர்ந்து அருளும் (12.28.1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கோயிலுக்குப் பின்னால் அண்மையில் கடல் உள்ளது.

     

  • மணற்பாங்கான பகுதி விசாலமான இடப்பரப்பு.

     

  • திரிபுர சக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

     

  • கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.

     

  • கோயில் குருக்கள் குடும்பத்தினரின் நன்முயற்சியால்தான் இக்கோயில் செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

     

  • பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.

     

  • சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.

     

  • சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடதுபுறம்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் - தியாகவல்லி என்று பெயர்ப் பலகை உள்ளது) சென்று, 'இரயில்வே' கேட்டைக் கடந்து நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து கோயிலை அடையலாம். (கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் காலையில் 10 மணிக்குள்ளும், மாலையில் 4 மணிக்குப் பிறகும் செல்வது நலம்.) தொடர்பு : 09442585845

Related Content