logo

|

Om symbol9.011 - திருமுகத்தலை - புவனநா யகனே திருவிசைப்பாOm symbol

திருமுறை : ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா-திருப்பல்லாண்டு

Odhuvar

Odhuvar Song

Source language

பதம் பிரிக்க

Translation language

Click on the songs to view the meaning


புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
  பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
  பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
  அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
  தனியனேன் தனிமைநீங் குதற்கே.  1

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
  புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
  வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
  வெள்ளமாய் உள்ளமா யினையே.  2

கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்
  கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்
  முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே !
  பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு
  எளிமையோ பெருமையா வதுவே.  3

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்
  கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்
  பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து
  மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்
  நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !  4

அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
  ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)
  என்னைஆள் ஆண்டநாய கனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச
  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்
  பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.  5

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
  விழுமிய விமானமா யினதே.  6

விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்
  வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்
  கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
  முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
  பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.  7

என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)
  என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்
  ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
  கனியுமாய் இனியை ஆயினையே.  8

அம்பரா அனலா; அனிலமே புவிநீ
  அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
  ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
  எந்தையும் தாயுமா யினையே.  9

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
  முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன்
  பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலையம் பாகின் அனையசொற் கருவூர்
  அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
  சிவபதம் குறுகிநின் றாரே.  10