பிறங்கெருக்கத் தம்புலியூர் வாழும் பேரியாழ் பேணுதிரு நீலகண்டப் பெரும்பாண னார்சீர் நிறந்தருசெம் பொற்பலகை யால வாயி னிமலன்பாற் பெற்றாரூர் நேர்ந்துசிவன் வாயி றிறந்தருளும் வடதிசையே சேர்ந்து போற்றித் திருஞான சம்பந்தர் திருத்தாள் வாழ்த்தி யறந்திகழுந் திருப்பதிகம் யாழி லேற்றி யாசிறிருப் பெருமணஞ்சேர்ந் தருள்பெற் றாரே.
நடுநாட்டிலே திருவெருக்கத்தம்புலியூரிலே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருப்புகழை யாழில் இட்டுப்பாடுவாராகி, சோழநாட்டில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக் கொண்டு சென்று, பாண்டிநாட்டிற் சேர்ந்து, மதுரையில் இருக்கின்ற சொக்கநாத சுவாமியினுடைய திருக்கோயில் வாயிலை அடைந்து நின்று, பரமசிவன் மேலனவாகிய பாணிகளை யாழில் இட்டு வாசித்தார். சொக்கநாத சுவாமி அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு அன்றிரவிலே தம்முடைய அடியார்களெல்லாருக்கும் சொப்பனத்திலே தோன்றி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் மற்றநாள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சுவாமிக்குத் திருமுன்பே கொண்டுவந்தார்கள். திருநீலகண்டப் பெரும்பாணர் அது சுவாமியுடைய ஆஞ்ஞை என்று தெளிந்து, திருமுன்பே இருந்து யாழ் வாசித்தார். அப்பொழுது "இந்தப் பாணர் அன்பினோடு பாடுகின்ற யாழ் பூமியிலே உள்ள சீதம் தாக்கினால் வீக்கு அழியும். ஆதலால் இவருக்குப் பொற்பலகை இடுங்கள்' , என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்கு எழுந்தது. அதைக் கேட்ட அடியார்கள் பொற்பலகையை இட, திருநீலகண்டப் பெரும்பாணர் அதில் ஏறி, யாழ் வாசித்தார்.
பின்பு பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, திருவாரூரிற் சேர்ந்து, திருக்கோயில்வாயிலை அடைந்து, யாழ் வாசிக்க பரமசிவன் வடதிசையிலே ஒரு திருவாயில் வகுக்க; திருநீலகண்டப் பெரும்பாணர் அதன் வழியாகப் புகுந்து, திருமூலட்டானப் பெருமானாகிய வன்மீகநாதரை வணங்கினார். நெடுநாளாயினபின், அவ்விடத்தினின்றும் நீங்கி, சீர்காழியை அடைந்து, சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய திருவடிகளை வழிபட்டு, அவரை ஒருபொழுதும் பிரியாது. அவர் பாடியருளுந் திருப்பதிகங்களை யாழில் இட்டு வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்று, திருநல்லூர்ப் பெருமணத்திலே அவருடனே சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
தத்துவங்களிற் சிவதத்துவங்கள் ஐந்துஞ் சிவனுக் கணுக்க மாதல் ஒரு பொதுநிலையும் அவ்வைந்துள் முதன்மைத் தாகிய நாதம் அவற்கணுக்கமாதல் சிறப்பு நிலையுமாம். சிவாலய வழிபாட்டநுசரணைகளில் நாத விந்நியாசமான இசை முக்கியத்துவம் பெற்றிருத்தல் இவ்வுண்மைக்கு நிதர்சனமாகும். சிருஷ்டியின்போது சிவபெருமான் நாதம் என்ற தத்துவத்தையே முதலிற் படைத்து அதிலிருந்து படிமுறைக் கிரமமாக மற்றைத்தத்துவங்களைத் தோற்றுவித்துப் பிரபஞ்சத்தை ஆக்குதலும் சங்காரத்தின்போது தத்துவங்களைக் கீழிருந்து மேலாகப் படிமுறையான் ஒடுக்கிச் சென்று முடிவாக நாதத்தில் ஒடுக்குதலுமாகிய உண்மை சைவசாஸ்திரங்களாலறியவிருத்தலும் சிவயோக சாதனையிற் சிவனை அணுகுவோர் நாதத்தைத் தலைக்கூடுதலாகிய நாதசம்மியம் பெற்று அதனந்தத்திலேயே சிவனையடையும் அநுபவ உண்மை ஒன்றிருத்தலும் அதி உயர்நிலையான சிவநடனம் நாதாந்த நடனம் எனும் வழக்கிருத்தலும் சிவன் நாதன் என்றே பெயர் பெற்றிருத்தலும் பல்லாற்றானும் நாததத்துவஞ் சிவனுக்கணுக்கமாதல் காட்டும்.
இந்த நாதம் என்பது தன் சூக்குமத் தன்மை நுட்பத்தாற் சிவன்போல் எங்கும் வியாபகமாயுள்ள தொன்றாயினும் அசுத்தப் பிரபஞ்சமாய் விரியுந் தூலமாயை யாகிய பிரகிருதி மாயைக்குட் சூக்குமமாய் நிலைத்திருக்குஞ் சுத்தமாயையே அதன் ஆதார நிலையாகக் கொள்ளப்படும். அத்தன்மையாற் சரீரமாகிய பிண்டத்திற் சுத்தமாயைத் தொழிற்பாட்டுக் குகந்த நிலைகளாகிய ஆறா தாரங்களில் இந்த நாதக் கூறுகள் சூக்குமமாயுறைந்து கிடந்து பொருத்தமான சூழ்நிலைகள் அமையும்போது உயிரின் முயற்சியால் அதன் ஆற்றலுக் கேற்ப வெளிவந்திசைக்கும் மிடற்றிசை என்றும் அம்மிடற்றிசை நுட்ப முணர்ந்தோரின் காலங்கடந்த அநுபவ பாரம்பரியத்திற் கண்டறியப் பட்டவாறு புறவுலகாகிய அண்டத்திலும் அச் சுத்த மாயை சார்பான நாதஞ் சூக்குமமா யமைந்திருக்குஞ் சாதனங்களின் மூலம் அமையும் வேய்ங்குழல், வீணை, யாழ் என்ற கருவிகளிற் புரியுஞ் செயல்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுங் கருவியிசையென்றும் இந்த நாதம் இருவகையாய் உலகில் நிகழ்வதாகும். மிடற்றிசையாயினுஞ் சரி கருவியிசை யாயினுஞ் சரி தூல மாயையாகிய பிரகிருதி மாயையா லுளவெனப்படும் உடற்குற்றம் மனக்குற்றம் முதலிய அசுபத்தன்மைகளால் மலினப்படுத்தப்பட்டு விடுஞ் சார்பினின்று விலகி நிற்கத் தக்கவர்களாய் மனமாசகற்றித் திருவருள் நெறிப்பட்டு நிற்குஞ் சிவபக்தர்களாய் உள்ளோரால் இசைக்கப்படும்போது சுத்தமாயைப் பண்பு மங்காத சுத்த நாதமாகவே யெழுந்து நாத தத்துவத்துக்கு மிக அணுக்கனாயிருக்கும் நாதனாகிய சிவனை வசீகரிக்குந் தன்மைத்தாய் அமையும். ஆதிகால இசை வல்லுநனான இராவணன் வெள்ளி மலைக்கீழ் நெரிந்து கிடந்தபோது சிவபக்தி மேலிட்டு நின்று யாழ் இசைபாடிச் சிவனருளுபகாரத்துக்குப் பாத்திரமான பிரபல்யமான செய்தி இதற்குதாரணமாகும். அது தேவாரத்தில், "தருக்கிமிக வரையெடுத்த அரக்கனாகந் தனரவிரலா லூன்றிப் பாடல் கேட்டு இரக்கமெழுந் தருளியநம் பெருமான் தன்மேல் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே" எனவும் திருத்தொண்டர் புராணத்தில், "எண்ணமிலா வல்லரக்கன் எடுத்து முறிந்திசை பாட அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப் பாடருள் செய்தார்" எனவும் வரும்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவர் பெயர் குறிக்கின்றவாறு, நீண்டகால யாழிசை அநுபவ பாரம்பரியத்திற் பழுத்துக் கனிந்த மரபான யாழ்ப்பாணர் மரபில் வந்துதித்துப் பூர்வ புண்ணிய மிகுதியினாலே சிவனடிமைத் தொண்டியல்புங் கைவரப் பெற்றவராய்த் தாமிசைக்கும் யாழிசையாகிய கருவியிசையும் மெய்யன் புருக்கத்தோடெழும் உள்ளிசையாகிய மிடற்றிசையும் ஒருங்கே கைவரப் பெற்றுள்ளவர். தம்மோடுடனாய் உளங்கலந்து மிடற்றிசை நிகழ்த்தவல்ல பாடினியாரைத் தமக்குத் துணைவியாகப் பெற்ற பேறுமுள்ளவர். இவர் சிவபெருமானின் திருவருள் திறங்களையே பொருளாகக் கொண்டமைந்த கீர்த்தனங்களுக்கு யாழிசைக் கிசைவாம் வகையிற் பண்ணமைத்துச் சிவதலங்களில் இசைபாடுந் திருத்தொண்டிற் பிரபல்ய முற்றிருந்தார். அத்தொடர்பில், மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலிலும் திருவாரூர்த் திருக்கோயிலிலும் அவர் யாழிசைக்கு மகிழ்ந்து எளிவந்தருளிய சிவபெருமானால் நிகழ்ந்த கௌரவ கண்ணியமான அருளிச்செயல்கள் அற்புதகரமாய் அமைந்திருந்தன. திருவாலவாய்க் கோயில் திருவாய்தலில் நின்று இவர் யாழிசைத்த போது சிவபெருமான் ஆலயத் தொண்டர்க்கு அவசர அறிவித்தல் கொடுத்து அவர் தமது சந்நிதியில் அணுகச் சென்றிருந்து யாழ் இசைக்க ஏற்பாடு செய்தமையும் அங்கும் அவரது யாழ் தரையிற் சீதந் தாக்குதலால் நரம்பிளகப் பெற்றுவிடுஞ் சார்பைத் தவிர்க்குங் கருணையினால் அசரீரியாக அறிவித்து நாயனார்க்குப் பொற்பலகையிடுவித்ததுமாகிய அற்புதங்கள் ஒருபுறமும் திருவாரூர்த் திருக்கோயில் வாய்தலில் நின்று யாழிசைத்த நாயனாரைச் சிவபெருமான் வடதிசையில் வாயில் வேறு வகுப்பித்து உட்புக அழைத்துக்கொண்ட அற்புதம் ஒரு புறமுமாக இரண்டும் அவர் இசை நல இன்பத்துக்குச் சிவபெருமான் எளிவந்தருளிய மகிமை தெரிவிப்பனவாகும். அவை அவர் புராணத்தில், "மற்றவர் கருவிப் பாடல் மதுரைநீ டாலவாயிற் கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டுதன் தொண்டர்க்கெல்லாம் அற்றைநாட் கனவிலேவ அருட்பெரும் பாணனாரைத் தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார்" - "அந்தரத் தெழுந்த ஓசை அன்பினிற் பாணர்பாடும் சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில்வீக் கழியு மென்று சுந்தரப் பலகை முன்நீ ரிடுமெனத் தொண்டரிட்டார் செந்தமிழ்ப் பாணனாருந் திருவருள் பெற்றுச் சேர்ந்தார்" எனவும் "கோயில்வாயில் முன்னடைந்து கூற்றஞ் செற்ற பெருந்திறலும் தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க் களிக்குந் தண்ணளியும் ஏயுங் கருவியிற் றொடுத்தங் கிட்டுப்பாடக் கேட்டங்கண் வாயில்வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்" எனவும் முறையே வரும்.
மேல் இந்த நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மகிமை கேட்டுச் சீகாழிக்குச் சென்று கண்டு வணங்கி அவரநுசரணையில் சீகாழித் திருக்கோயிலை வழிபட்டபோது, "ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கிங் கியற்றும்" என அவராற் கேட்டுக் கொள்ளப்பெறும் பாக்கியமும் உடையராயினார். அச்சார்பில் அங்கு இவர்தம் பாடினியாரும் உடனிசைக்க இசைபாடி யாழிசைத்த காலை விளைந்த இசை மாதுரியமும் அது சிவப் பிரீதியானவாறும் இசையுலகில் அது பெற்ற வரவேற்புஞ் சேக்கிழார் வாக்கில் "யாழிலெழும் ஓசையுடன் இருவர் மிடற்றிசை யொன்றி வாழி திருத் தோணியுளார் மருங்கணையு மாட்சியினைத் தாழுமிரு சிறைப்பறவை படிந்ததனி விசும்பிடைநின் றேழிசைநூற் கந்தருவர் விஞ்சையரு மெடுத்திசைத்தார்" என வந்திருப்பதனால் அறியப்படும். இதிலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் பெரு நண்பும் பெற்றுக் கொண்டவராகி அவர் விருந்தாளியாய் அங்குத் தங்கியிருக்கையில் அவர் பாடியருளிய முதற்றிரு பதிகங் கேட்டுருகி அதையுந் தம் யாழிலிட்டுப் பொருத்தமுற வாசித்துப் பலரும் அதிசயிக்கத் தக்க வகையிற் பேரிசை இன்பம் பெருக்கியதுடன் மேல் அவர் பாடும் திருப்பதிகங்களையுந் தாம் யாழிலிட்டு வாசித்துப் பலனடைதற்கு அவர்பால் அநுமதியும் பெற்றுக் கொண்டவ ராயினார். அது சேக்கிழார் திருவாக்கில், "சிறிய மறக்கன்றளித்த திருப்பதிக இசை யாழின் நெறியிலிடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் அறிவரிய திருப்பதிக இசையாழில் இட்டடியேன் பிறிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும் எனத் தொழுதார்" - "மற்றதற்குப் பிள்ளையார் மனமகிழ்வுற் றிசைந்தருளப் பெற்றவர்தாம் தம்பிரான் அருளிதுவே எனப் பேணிச் சொற்றமிழ் மாலையி னிசைகள் சுருதி யாழ்முறை தொடுத்தே அற்றை நாட் போலென்றும் அகலாநண் புடனமர்ந்தார்" என வரும்.
இங்ஙனம் தமது யாழிசைத் தொண்டும் தமது ஆத்மிகமும் உயர் பலனுறுதற்குச் சேர்விட மறிந்து சேர்ந்து கொண்டவராகிய பாணனார் திருஞானசம்பந்தரை அகலா நண்புடன் பிறிவின்றியிருந்து அவருடன் கூடவே தம் பாடினியாருடன் திருப்பெருமண நல்லூரிற் சிவ ஜோதியிற் கலந்தருளிய பேறு போற்றத்தகும்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. திருநீலகண்ட யாழ்பாண நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. thirunIlakaNda yAzpANar nAyanAr purANam in English prose
3. Tiruneelakanta Yaazhppana Nayanar Puranam in English Poetry