கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார் காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன் பயிலாநோ யுடன்வீயத் துயரம் நீடும் பசுக்களைக்கண்டு அவனுடலிற் பாய்ந்துபோத அயலாகப் பண்டையுடல் அருளால் மேவி ஆவடுதண் டுறையாண்டுக்கு ஒருபா வாகக் குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக் கோதிலா வடகயிலை குறுகி னாரே.
திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, "பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்" என்று ஆலோசித்து, "இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா" என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.
மூலனுடைய மனைவி "நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்" என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, "இவருக்கு ஈனம் அடுத்தது போலும்" என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, "என்செய்தீர்" என்று, தளர, திருமூலநாயனார் "உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, "இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்" என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.
சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, "சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்" என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.
திருச்சிற்றம்பலம்.
சற்சமயமாகிய சைவஞ் சார்ந்தோர் படிமுறையானே சாதித்து உயர்பலனாகிய சிவப்பேறடைதற்குரிய நெறிகளாகவுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்குஞ் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே தருவதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பனவாதலின் சரியை என்பது உடலையும் உறுப்புகளையும் சிவப்பணியில் நிறுத்துதலாகவும் கிரியை என்பது சிவப்பணிநிற்கும் உடலுறுப்புக்களின் இணக்கத்தோடு உள்ளுறுப்புக்களாகிய இந்திரியங்களை நெறிப்படுத்திக்கொண்டு உள்ளத்தைச் சிவபூசைமூலம் சிவ ஆராதனையில் நிறுத்துதலாகவும் யோகம் என்பது சிவப்பணிவசப்பட்ட உடலுள்ளங்களின் அநுசரணையுடன் அந்தக்கரணங்களை நெறிப்படுத்தி உயிரைப் பாசப்பற்று விட்டுச்சிவத்திற் சென்றுலயிக்கச் செய்வதாகவும் ஞானம் என்பது சிவத்தில் லயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும். அது, "பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற் சித்தங் குருவருளாற் சிவமாகுமே" என வருகின்ற திருமந்திரத்தினால் விளங்கும். சைவத் திருமுறைகளிற் பத்தாவதாகிய திருமந்திரத்தை அருளிச்செய்த திருமூலநாயனார் சைவநாற்பாதங்களின் விரிவு விளக்கங்கள் அவற்றின் ஆழ அகலங்கள் எல்லாம் ஒருங்ககப்பட மூவாயிரம் மந்திரங்களை அடக்கிய திருமந்திர நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூற்றில்வரும், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" (தமிழ்-தமிழாகமம், சிவாகம உள்ளுறை நாற்பாத விளக்கமே. அதனையே திருமூலர் தமிழிற் செய்துள்ளார்) என்ற அகச்சான்றினாலும் ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை" என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.
மேற்கண்ட திருமூலர் கருத்தின் வண்ணம், குறித்த நாற்பாதங்களில் முதல் மூன்றுங் கடைபோதற்குத் திருவருளும் நான்காவதாகிய ஞானப் பலப் பேற்றுக்குக் குருவருளும் இன்றியமையாதனவாம். யதார்த்தத்தில் திருவருளே குருவருளு மாதலின் பயிற்சி பலப்பேறு ஆகிய இரண்டுந் திருவருளை இன்றியமையாதன எனலும் ஒக்கும். அத்திருவருள் விசேடதரமாக அமையும் போது முதன் மூன்றும் மேற்காட்டியவாறு சிவப்பேற்றை நேரேதரும் ஞானப் பேற்றுக்குப் படிமுறையான சாதனங்களாவதுடன் இடைக்காலப் பயன்களாகிய சிவசாலோகம், சிவசாமீபம், சிவசாரூபம் என்பனவற்றையுந் தரவல்லனவாம். இம்மூன்றும் பதமுத்திகள் என்றும் நான்காவதாகிய ஞானத்தின் பேறாகிய சிவசாயுச்சியம் பரமுத்தி எனவும் ஆகமங்களாற் குறிக்கப்படும். இப்பேறுகள் நான்குஞ் சிவசம்பந்திகளாதற் கிணங்க இவற்றைத் தரும் சரியை ஆதியனவும் சிவசம்பந்திகளேயாம். அங்ஙனமாகவும் அவற்றுட் சரியை கிரியை இரண்டுஞ் சிவசரியை சிவகிரியை என வழங்காதிருக்க யோகம், ஞானம் என்ற இரண்டும் சிவயோகம் சிவஞானம் என வழங்க வந்த தென்னையெனின், சரியை கிரியை இரண்டும் சைவத்தின் தனிச்சிறப்பான வழக்குகளாதலின் அவற்றை இனஞ்சுட்டிக் கூறல் அவசியமன்றாகலானும் யோகம் ஞானம் இரண்டும் மற்றுஞ் சமயதர்சனங்களிலும் இடம்பெற்று வழங்குதல் உண்டாகலின் அவற்றை இனஞ்சுட்டிக்கூற வேண்டும் அவசியமுண்டாகலானும் என்க. அவற்றுள் சிவஞானஞ் சார்பான விசேட விளக்கம் முன் திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் புராண சூசனத்திற் கண்ட அளவே அமையும் ஆதலின் சிவயோகம் சார்பான விசேட விளக்கம் மாத்திரம் இங்கு இடம்பெறலாகும்.
ஒன்று மற்றொன்றனோடிணைதல் அல்லது ஒன்று மற்றொன்றிற் பொருந்துதல் என்ற பொருளில் வழங்கும் யோகம் என்பது உயிர்க்கொள்கையுள்ள சமயதர்சனங்கள் பலவற்றில் உயிர் தனது இலட்சியத்திற் பொருந்துதல் என்ற நிலையைக் குறிப்பதாகும். அவ்வகையில் அது சைவமல்லாதவற்றில் சாங்கிய யோகம், பதஞ்சலி யோகம், சாக்த யோகம் முதலனவாக வழங்கும். அவை ஒவ்வொன்றுஞ் சுட்டும் முடிவுகள் தத்தமுள் வேறுபடுதலாலும் பெயரொப்புமையால் ஒன்றோடொன்று மயங்காமைப்பொருட்டு அவைபற்றிய தாரதம்மிய விளக்கம் வேண்டப்படும். அது பின்வருமாறு:
சிவயோகம் உட்பட எல்லா யோகங்களுக்கும் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற அட்டாங்கங்களையும் அடிப்படையுண்மையாகக் கொண்டிருக்கும் பாங்குண்டு. அவ்வகையில், எட்டாவது அங்கமாகிய சமாதிபற்றிக் கூறுகையில் உயிர் தெளிவுற்ற புத்தியோடு கூடுதலே அதாவது, புருடன் இருவினை இன்பதுன்பங்களாற் களங்கமுறுவதல்ல அவை புத்தியளவில்மட்டுஞ் சம்பந்தமுள்ளனவாயிருக்கப் புருடன் சாட்சி மாத்திரமாயிருக்கும் என்ற புத்தித்தெளிவுபெற்றுக் கைவல்யமடைதலே சமாதி என்பது சாங்கிய யோகத்தின் நிலையாகும். அங்ஙனமன்று, தத்துவப்படிநிரையில் இருபத்தைந்தாவது தத்துவமாகிய புருடனுக்கும் மேல் இருபத்தாறாவது தத்துவமாகிய இறைவன் உளன். அவனைக் கூடுதலே சமாதி என்பது பதஞ்சலி யோகத்தின் நிலையாம். இதற்கு மேலும் எட்டுத் தத்துவங்கள் கடந்து முப்பத்தைந்தாந் தத்துவமான சக்தியுடன் கூடுதலே சமாதி என்பது சாக்த யோகிநிலை யென்பர். சத்தியைக் கூடுதல் மட்டில் அமையாது சக்திக்கும் மேற்பட்ட சிவத்தைக் கூடுதலே சமாதி என அவை அனைத்தையும் மேலிட்டு நிற்கின்றது சிவயோகம். இதன்நிலை இவ்வாறாதல், "மாயநட்டோரையும் மாயா மலமென்னும் மாதரையும் வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று தன் தாதையைக் கூடிப்பின் தாயைமறந் தேயுமதே நிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே" என்ற பட்டினத்துப்பிள்ளையார் பாடலாற் பெறப்படும். அட்டாங்கயோக நெறியில் இயம நியமாதிகளால் பொறிபுலன் கரணங்களையும் அவற்றின் தோற்ற மூலமாகிய முக்குணங்களையுமடக்கி உகந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமக் கிரமப்படி இடைகலை பிங்கலை நாடிவழிப் பிராண இயக்கத்தைத் தடுத்துக் கும்பகஞ் செய்தல் மூலம் நடு நாடியாகிய சுழுமுனையைத் திறந்து மேல்நோக்கி எழுங்குண்டலினி சகாயத்துடன் முன்னேறிப் போய் நாததத்துவத்தைக் கூடுதலாகிய, நாத சம்மியம் பெற்று அதனாதரவில் ஐந்தெழுத்துண்மை "சி" என்ற ஓரெழுத்துண்மையாகக் கண்டு திருவருள் மயமான பரவெளியிற் புக்குச் சிவத்தோடழுந்திச் சிவ உருப்பெறுதல் சிவயோகத்தின் செயற்பாட்டு ரீதியான விளக்கமாம். அது, "முக்குணம் புலனைந்துடனடக்கி மூலவாயுவை எழுப்பிரு வழியைச் சிக்கெனும் படி அடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலியுடன்போய்த் தக்க ஐந்தெழுத் தோரெழுத் துருவாந்தன்மை கண்டருள் தரும் பரவெளிக்கே புக்கழுந்தின ரெமதுருப் பெறுவர் புவியில் வேட்டுவ னெடுத்த மென்புழுப்போல்" என வருந் திருவாத வூரடிகள் புராணச் செய்யுளால் நிறுவப்படும். இச்செய்யுளில், "ஒரு வழியைத்திறந்து தாண்டவச் சிலம்பொலியுடன் போய்" என வரும்பகுதி, "மூலதாரத்து மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தனியக்கமுங் குமுதசாகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக்கரத்தின் ஈரெட்டுநிலையும், உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி" எனவும் "அருள்தரும் பெருவெளி" என்பது, கருத்தினிற் கபால வாயில் காட்டி" எனவும் வரும் விநாயகரகவற் பகுதிகளோடொத்த கருத்தினவாதல் அறியத்தகும். அதன் விளக்கம் வருமாறு:
பிராணாயாமத்தின் போது நிகழுங் கும்பகத்தின் ஆற்றலாற் குண்டலியைச் சுவாவிக்கப்பண்ணிச் சுழுமுனை நாடிவழி மேலெழுப்புதல் மூலாதாரத்து மூண்டெழுகனலைக் காலாலெழுப்புதல் ஆகவும் அந்நிலையில் திருவருளால் விரிந்து தோன்றுஞ் சக்தி கலைகளாகிய பதினாறும் இடைச்சக்கரத்தின் ஈரெட்டுநிலையாகவும் இவற்றினால் விளக்கமுறும் மூலாதாரம் முதலான ஆறாதாரங்களும் உடற்சக்கரத்தின் உறுப்பாகவும் இவற்றின் சார்பில் நிகழுஞ் சாதனை மூலம் சிவசக்தி மேலெழுகையில் எட்டாங்கலையாகிய நாதாந்தத்தை அடைந்தபோது தானாகத்திறக்கும் உச்சித் தொளை வாயிலாகச் சீவசத்தி மேலுள்ள துவாதசாந்தவெளி (பன்னிரண்டங்குல உயரமுள்ள வெளி)யை அடையக் காட்டுதல் கருத்தினிற் கபால வாயில் காட்டுதலாகவும் கொள்ளப்படும். இங்கு இடம்பெறும் சத்தி கலைகள் பதினாறும் எண்ணிக்கைபற்றிச் சோடச கலைகள் எனவும் சிறப்பான முத்திப் பேற்றைத் தருவன என்ற பொருள்பற்றிப் பிரசாத கலைகள் எனவும் வழங்கும். அவை உந்தியிலிருந்து துவாத சாந்தம் வரை முறையே மேதாகலை, அர்கீச கலை, விடகலை, விந்துகலை, அர்த்தசந்திரகலை, நிரோதினிகலை, நாதகலை, நாதாந்தகலை, சக்திகலை, வியாபினிகலை, வியோமரூபிணி கலை, அநந்தைகலை, அநாசிருதகலை, அநாதைகலை, சமனைகலை, உன்மனைகலை எனப் பெயர்பெறும். இவற்றுள் முதல் எட்டும் கபாலவாயிலுக்குக் கீழ் அமையும் உந்தி, இருதயம், கண்டம், புருவமத்தி, நடுநெற்றி, மேல்நெற்றி, சிரசு, சிரசுநுனி என்ற இடங்களை முறையே தமக்கு ஆதாரமாகக் கொண்டு நிகழ்தலின் ஆதாரகலைகள் எனவும் ஏனையயெட்டும் உச்சித் தொளைக்கு மேல் வெளியில் நிகழ்வதால் நிராதாரகலைகள் எனவும் பெயர்பெறும். சிவயோக சாதனையில் இப்பதினாறு கலைகளையுந் தாண்டியபின்பே, விநாயகரகவல் கூறும், "இருத்தி முத்தி இனிதெனக் கருளி" - "என்னையறிவித்தெனக்கருள் செய்து ---" என்றவாறான உயர்பலப் பேறு வாய்ப்பதாகும். அது, "ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று மீதானத்தே செல்க உந்தீபற விமலற்கிடமதென்றுந்தீபற" எனத் திருவுந்தியாரில் வருவது கொண்டறியப்படும்.
இவ்விளக்கத்தின் மூலம் சிவயோகம் முற்றிலும் திருவருளாகிய சக்தியுபகாரத்தின் மூலம் நடைபெற்றுச் சிவத்தைச் சேர்ப்பிப்பது எனல் துணியப்படும். இதற்கு முன்னையவான சரியை கிரியைகளும் சக்தியுபகாரமும், அதனை உணர்ந்துருகும் அன்பும் இல்லாமற் கடைபோகமாட்டா என்பதும் பலந்தரா என்பதும், "கங்கையாடிலென் காவிரியாடிலென் கொங்கு தண்குமரித்துறையாடிலென் ஓங்கு மாகட லோதநீராடிலென் எங்குமீச னெனாதவர்க்கில்லையே" எனவும் "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்குநிற்கும். பொன்னார்சடைப்புண்ணியன் பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு நக்குநிற்பன் அவர் தமைநாணியே" எனவும் வருந் தேவாரங்களானும் "கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமலரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கல்லது தேனமர் புங்கழல் சேரவொண்ணாதே" எனவும் "வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் பாசிக்குளத்தின் வீழ்கல்லா மனம் பார்க்கின் மாசுற்றசோதி மணிமிடற்றண்ணலை நேசித்திருந்த நினைவறியாரே" எனவும் வருந் திருமந்திரங்களானும் யோகத்தின் எட்டாவதுறுப்பாகிய சமாதிதானும் அன்பின்றி அமையாதென்பது, "நம்பனை யாதியை நான்மறை யோதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப் போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட்டாரே" எனவருந் திருமந்திரத்தானும் இனிது விளங்கக் கிடத்தலின் சைவநோக்கில், யோகமும் திருவருள் உபகாரம்பற்றிய உணர்வழுத்தமும் அதன்வழியுருகும் அன்பும் இல்வழி இல்லையாதல் துனியப்படுவதாம். எனவே, சரியை கிரியைகளுக்கும் திருவருளுணர்வுக்கும் முக்கியந் தராதனவும் உண்மையான சிவப்பேற்றைத் தோற்றாதனவும் ஆகிய சாங்கிய யோகம், பதஞ்சலி யோகங்களையும் திருவருளுணர்வைப் பேணுவதாயினும் அணுகுமுறை விதிகளில் விபரீதத்துக்கும் இடமளிக்குந் தன்மையுள்ள பஞ்சமகாரம் முதலியவற்றுக்கும் இடமளிப்பதாகவும், முழுமுதலான சிவப்பேற்றை அலட்சியம் பண்ணுவதாகவும் உள்ள சாக்த யோகத்தையும் விடச் சிவயோகம் தன்பண்பாலும் பயனாலும் மிக உயர்வுளதாதல் அறிந்து கடைப்பிடிக்கற் பாலதாம்.
யோகநெறியிற் பயில்வார் தமது பொறிபுலன்களை அடக்கிச் சம்பந்தப்படும் ஆதாரங்களிற் செய்யுஞ் சாதனை யாற்றலினாலே பிரபஞ்சப் பொருள் இயல்புகளை ஒரோவோர் வேளை மாற்றவும் பஞ்சபூத ஆற்றல்களை அதிட்டித்து நிற்கவும் அவற்றுள் ஒன்றன் பண்பை மற்றொன்றுக்கு மாற்றவும் பிறர் மனம் புத்திசித்தங்களை வசீகரிக்கவும் அவற்றில் அதிசயகரமான மாற்றங்கள் விளைக்கவும் இவைசார்ந்த பலவேறு சித்துக்களை விளைக்கவும் வல்லுநராதல் பிரசித்தம். அது தாயுமானவர் பாடலில், "கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாங் கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம் கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலி னிரதம் வைத்தைந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் விண்ணவரையேவல் கொளலாம் சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு சரீரத்தினும் புகுதலாம் சலமேல் நடக்கலாங் கனன்மேலிருக்கலாந் தன்னிகரில் சித்தி பெறலாம் சிந்தையை யடைக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேஜோ மயானந்தமே" என வருஞ் செய்யுளில் வைத்தறியப்படும். ஆனால், இவையெல்லாஞ் சித்தாகா, இவை ஒவ்வொன்றும் நீரிற் குமிழி போல் அவ்வபோது தோன்றித் தோன்றி மறையும் சில ஜால வித்தைகளே, இவற்றில் மயங்காது, தானே சித்தன் எனும் பெயர்க்குரியனான சிவனையடைந் தொன்றுதலே யதார்த்தமான சித்து என்பது உண்மை நெறி நிற்கும் மஹான்களின் உள்ளக்கிடையாகும். "சித்தியெனிற் கண்கட்டுவித்தையல்ல சில்லறையாங் கருமத்துச் செய்கையல்ல மித்தையெனுஞ் சூனியமாய் மாலமல்ல மின்னணுவாம் விஞ்ஞான வித்தையல்ல சித்தியெனில் ஈசனுட னொன்றாஞ் சித்தி சிவனாவான் அவனேதான் சித்தன் சித்தன் அத்துவிதன் காரைக்காற் சித்தன் சொன்ன அருமைமிகு நூல் மென்மேல் வாழிவாழி" எனக் காரைச் சித்தர் கனகவைப்பு என்ற நூலுக்குத் திருக்கோவலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் அளித்திருக்குஞ் சாற்றுகவியால் அது புலனாகும். இத்தகு உறுதிநிலை பெற்றுள்ள உண்மை யோகிகளுக்கும் சாமானிய சித்துக்கள் காலாகாலங்களில் தாமாக விளைதலும் சிலர் அவற்றைக் கண்டுங் காணாதவர்கள் போலக் கழியவிடுதலும் சிலர் தம் கருணை இயல்புக் கொத்த சீவகாருண்யங் காரணமாகப் பரோபகாரந் தேவையளவில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் அவற்றில் அழுந்தாதிருத்தலும் பெரியோர்கள் வாயிலாக அறியப்படும். காலாகாலங்களிற் பல்லாயிரக்கணக்காக இடம் பெற்றுள்ளனவாக அறியப்படும் இச்சித்துக்களில், பரகாயப் பிரவேசம், அணிமா, லகிமா, பிராப்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எட்டுவகைச் சித்திகள் முக்கியமானவையாகக் கொள்ளப்பட்டு அட்டமாசித்திகள் என வழங்கும். திருமூலர் போன்ற மகாயோகிகள் இச்சித்திகளையும் பொருந்துமாற்றார் பயன் செய்து தாம் பிறப்பறுத்துச் சிவப்பேறடைதற்குச் சாதனங்களாக்குமாறும் உளதாகும். அது திருமூலர் திருவாக்கில், "பரிசறிவானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவெளி கண்டேன் அரியதெனக்கில்லை அட்டமாசித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே" என வருவதனால் துணியப்படும்.
திருமூலநாயனார் சக்தி அருளாற் கடைபோகப் பெற்ற சிவயோகத்தில் அதற்காம் இடைநிலைப் பேறாகிய சிவசாரூப்பியமே பெற்றுத் திகழ்ந்த மஹா உத்தம சிவயோகியாவார். அது, "நந்தியருளாலே நாதனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவனாயினேன் நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந்தேனே" என அவர் பாடலில் வரும். திருக்கைலாசத்தில் ஞானப் பெருமுதல்வராகிய நந்தி யுபதேசம்பெற்ற யோகியருள் ஒருவராகிய இவர் அங்கிருந்து தலயாத்திரைக் கிரமமாகத் திருவாவடுதுறையடைந்திருக்கையில் அங்கு ஒருபோது பொன்னியாற்றங்கரையில் பசுக்கூட்டமொன்று ஆறாத்துயரில் துடிப்பதைக் கண்டு கருணாவசத்தராயினார். மேய்ப்பானாகிய மூலன் என்னு மிடையன் "விஷந்தீண்டி" இறந்து கிடக்க அப்பசுக்கூட்டம் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கதறித் துடித்துச் சுழன்று கவலையிலாழ்வ தாயிற்று. அது சேக்கிழார் வாக்கில், "மற்றவன் தன் உடம்பினை அக் கோக்குலங்கள் வந்தணைந்து சுற்றிமிகக் கதறுவன சுழல்வன மோப்பனவாக நற்றவ யோகியார் காணா நம்பரரு ளாலே ஆ உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பவன் என உணர்கின்றார்" என வரும். அந்நிலையில் நாயனார் தமது பரகாயப் பிரவேச சித்தியின் மூலம் பசுக்கள் துயர்நீங்கி மகிழ்வுறக் காணுங் கருணையோடு தம்முடலைச் சேமமாயிருக்கத்தக்க ஒருவகையில் வைத்துவிட்டு உயிரற்ற மூலன் உடலில் தம் உயிரைப் பாய்ச்சித் திருமூலராய் எழுந்தார். அந்நிலையில், அப்பசுக்கூட்டம் அடைந்த ஆனந்தக் களிப்புநிலை சேக்கிழார் வாக்கில், "பாய்த்தியபின் திருமூல ராயெழலும் பசுக்களெலாம் நாத்தழும்ப நக்கிமோந் தணைந்து கனைப்பொடு நயந்து வாய்த்தெழுந்த களிப்பினால் வாலெடுத்துத் துள்ளிப்பின் நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேய்ந்தனவால்" என வந்திருத்தல் காணலாம். அது கண்டு மென்மேற் கருணைகூரப் பெற்ற நாயனார் அன்று முழுவதும் அப்பசுக்களின் சம்க்ஷணையிலேயே கழித்துக் களிப்புறுவாராயினர். பசுக்களின் துயர் போக்குதல் மட்டுமே அவர் அச்சக்தியை மேற்கொண்ட நோக்கமாதலின் வரலாற்றிற் கண்டவாறு மூலன் மனைவியின் வேண்டுதற்கிசையாமை அவர்க்கியல் பேயாம், கருதியது முடிந்த அளவில் தமது உடலில் மீளப்பாய்ந்து தம்போக்கிற் செல்லவிருந்த நாயனார் கருத்துத் திருவுளச் சம்மதம் பெறாதாயிற்று. பசுக்கள் துயர்தீர்க்க நாயனார் மூலனுடலிற் புகுந்த கருணையை, சிவாகமப்பொருளைத் தமிழில் உலகுக்குணர்த்தும் தன் கருணைச் செயலுக்குத் திருவருள் இடமாக்கிக் கொண்டுவிட்டது. தமது சொந்த உடல் வைத்த இடத்தில் இல்லாதொழியக் கண்டபோது நாயனார் தமது ஞானதிருஷ்டியால் அவ்வுண்மையைத் தெளியலாயினர். அது அவர்புராணத்தில், "தண்ணிலவு சடையார் தாம் தந்த ஆகமப்பொருளை மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க எண்ணிறந்த உணர்வுடையார் ஈசர் அருள் என உணர்ந்தார்", என வந்திருக்கக் காணலாம். அங்ஙனமாக, திருவுளம் இருந்தவாறே திருமூலநாயனார் அதன் ஆணையிலிருந்து பேரப்பிரியமாட்டாது மூவாயிரம் ஆண்டுகள் ஏகாந்தமான சமாதிநிலையில் இருந்து கொண்டே திருமந்திரம் மூவாயிரம் அருளிச் செய்வாராயினர்.
அதியுயர் சித்திப் பேறுற்ற மஹோத்தம சிவயோகியாகியாகிய இத்திருமூலநாயனார் செயற்பாட்டிலேயே திருவுளச் செயலின் தலையீடு இருந்தவாறிவ்வாறாக, ஒருபேறுமற்ற வெறும் மானிடங்களாகிய நம்மாலும் ஏதும் ஆகும் என்றென்றே சதா எண்ணும் எம்மனோர் நிலை அந்தோ! பெரிதும் இரங்கற்பாலதாம்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. திருமூல நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. thirumUla nAyanAr purANam in English prose
3. Tirumooladeva Nayanar Puranam in English Poetry