நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப் போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான் மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப் பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப் பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன் விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.
சோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத்திலே, நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி, மற்றொன்றையும் மறந்தும் நினையாதவர். அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவினாலே சீவனஞ் செய்து கொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகைமுதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுகின்றவர்.
அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில்வாயிலிலே நின்றுகொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார்.
அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் "நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே" என்று துக்கித்து, "இதுவும் சுவாமியுடைய அருள்தான்" என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் "நாளைக்குப் போவேன்" என்றார். இப்படியே "நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்" என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.
ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை பிடித்துந்துதலால், தம்முடைய ஊரினின்றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.
அத்திருப்பதியைச் சுற்றிய திருமதில்வாயிலிலே புகுந்து, அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத்திரு வெல்லையை வலஞ்செய்துகொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ் செய்து உள்ளே போகக் கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார் "சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே! என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்" என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று "ஐயரே! சபாநாயகருடைய ஆஞ்ஞையினாலே இப்பொழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்" என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் "அடியேன் உய்ந்தேன்" என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து, சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணிய மயமாகிய பிராமணமுனி வடிவங்கொண்டு உபவீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ்சலிசெய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர்கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிராமணர் முதலியோர் யாவரும் காணாமையால் ஆச்சரியங்கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய ஸ்ரீபாதங்களைக் கொடுத்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.
யாவராயினும், தங்கள் தங்கள் சாதிக்கு விதித்த விதிகடவாது நின்று சிவனை வழிபடின் முத்தி பெறுவர். அவ்விதி கடந்தோர் பயன் பெறார். இத்திருநாளைப்போவார் நாயனார் தாம் முற்பிறப்பில் செய்த புண்ணிய மிகுதியினாலே சிவனிடத்து மெய்யன்பு உடையராகி, தாம் இழிவாகிய புலையர் குலத்திற் பிறந்தமையால் அதற்கு ஏற்பச் சிவனுக்குத் தொண்டு செய்தலே முறைமையாம் என்று சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய ஒருமுகக் கருவிகளுக்கும் மிருதங்கம் முதலிய இருமுகக் கருவிகளுக்கும் தோலும், வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்தலும், ஆலயங்களின் திருவாயிற் புறத்திலே நின்றுகொண்டு ஆனந்த மிகுதியினாலே கூத்தாடிப் பாடுதலும் செய்தனர். வாத்தியங்கள் கொடுத்தல் புண்ணியம் என்பது "பொங்குபேரி பொருமுர சம்மிரு - தங்கமோடு திமில்பட காதியுஞ் - சங்கு தாளந் தகுமிசைக் காகளம் - விங்கு சீரொலி வேணுவும் வீணையும்." "சொன்ன வின்னவை சோதிநிலா வணி - மன்ன வற்கு வழங்கிய மாதவ - ரன்ன வன்றனை யொத்தயு தந்தருந் - துன்னுகற்ப மவன்பதி தோய்வரால்" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது "நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும் - விரித்த பானு வயுதம் விரிகதிர் - பொருந்து தேரிற் புலவ ரரம்பையர் - கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி." "துதியுங் கீதமுஞ் சோதிமுன் பத்தியாற் - கெதியி னோதிடக் கேட்டவர் தாவர - மதியில் கீடங் கிருமி வரன்பதி - வதியு மோதினர்க் கென்கொல் வகுப்பதே" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. இவை எல்லாம் தம்மிடத்து இடையறாத மெய்யன்போடு செய்தமையால் அன்றோ; சிவன் திருப்புன்கூரிலே இவர் விரும்பியபடியே தமக்குமுன் உள்ள இடபதேவரை விலகச் செய்து இவருக்குக் காட்சி கொடுத்தருளினார்.
சிவஸ்தலங்கள் எல்லா வற்றுள்ளும் சிதம்பரமே மேலானது. அது தில்லைவாழந்தணர் புராணத்துச் சூசனத்தில் விரித்துரைக்கப்பட்டது. இந்த ஸ்தலத்டிற் கனகசபையின் கண்ணே கருணாநிதியாகிய சபாநாயகர் செய்தருளும் ஆனந்த நிருத்தத்தை மெய்யன்போடு தரிசித்தவர் முத்தி பெறுவர்.
அது, "மெய்மைநற் சரியை பத்தி விளங்கிய ஞான மேவா - வெம்மையொப் பவர்க்கு முத்தி யிறையிலி யாகவிட்ட - மும்மைநற் பதிகடம்மின் முளைத்தவர் முடிந்தோர் மூவாச் - செம்மலர்க் கழல்கண்டோர்கள் சிவத்தினைச் சேர்வ ரன்றே. பிறந்தில மாரூர் தன்னிற் பேசிய காசி மேவி - யிறந்தில மிரண்டு முத்தி யின்பமும் பின்ப தாநா - முறைந்திடுந் தில்லை ஞான யோகமார் தான மாமாற் - செறிந்தடி காணச் சீவன் முத்தராய்த் திரியலாமே. தேசமார் மன்ற கன்று சிவகதி தேடியுற்றார் - காசியி லில்லை தில்லை கதிதரு மென்ற ணைந்தாற் - பாசமதகல முத்தி பணித்திடு மென்றா ரென்றா - லீசன தருளிரக்கத் தெல்லையார் சொல்லுவாரே. கன்றம ரன்பாலான்பால் கவர்தருங் கால மேனும் - வென்றிகொ ளம்பு வீழும் வேலையா யினுமி மைப்பிற் - சென்றுறு மமையமேனுந் திருவடி தெளிய நோக்கி - நின்றவர் காண நின்றார் நீள்பவ நீங்கி னாரே. ஆரண வுருவார் தில்லை யம்பல மெய்தப் பெற்றோ - ரோருணர் வாவ ரென்று மொன்றல ரொன்றா ரல்லர் - காரண ராகா ரொத்த கருத்திலர் நிருத்த வின்பப் - பூரண ரவர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே" என்னும் கோயிற் புராணத்து வியாக்கிர பாதமகா முனிவர் இரணியவன்ம சக்கிரவர்த்திக்கு உபதேசித்த பொருளையுடைய திருவிருத்தங்களானும், "பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தா - லுரை யுணர்வுக் கெட்டா வொருவன் - வரைமகடான் - காணும் படியே கருணையுருக் கொண்டாடல் - பேணுபவர்க் குண்டோ பிறப்பு." என்னும் உண்மை விளக்கத் திருவெண்பாவானும் உணர்க.
பல சிவஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்தலே தொழிலாகக் கொண்ட இந்நாயனாருக்குச் சிதம்பர தரிசனத்திலே வேட்கை மிக்குற்றது. இவ்வேட்கையின் மிகுதி, அது விளைந்த அன்றிரவு இவருக்கு நித்திரை இன்மையானும்; மற்ற நாள் இவர் தாம் தில்லைக்குச் செல்லில் கோயிலுனுள்ளே புகுதல் தமது சாதிக்கு இயையாது என்பதை நினைந்து, போகாதொழிந்தாராயினும், அவ்வாசை குன்றாது மேன்மேலும் வளர்தல் பற்றி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று பல நாள் கழித்து, ஆசையை அடக்கல் கூடாமையால் பின் தில்லையின் எல்லையை அடைந்தமையானும்; தெளியப்படும் இவ்வாறு மிக்க ஆசையுடன் சென்றும்; தில்லையினுள்ளே வேதவிதிப்படி ஓமம் செய்யப்படுதலைக் கண்டு, உட்புகாதொழிந்து, இரவு பகல் திருவெல்லையை வலஞ் செய்து வணங்கினமையால், வேதாகம விதிக்கு அஞ்சி, சாதிநெறி கடவாது நின்ற இவரது பெருந்தன்மை துணியப்படும். பின்னும் இவருக்குச் சிதம்பர தரிசனத்தில் ஆசை குன்றாது மேன்மேலும் வளர்ந்தமை பெருவியப்பாமே! இவ்வாறே சிவனிடத்து இடையறாது மேன்மேலும் பெருகும் மெய்யன்பினால் வளர்ந்தோங்கிய ஆசையினாலன்றோ; கருணாநிதியாகிய நடேசர் இவர் கருத்தை முற்றுவித்தருளத் திருவுளங் கொண்டு, தில்லை மூவாயிரரைக் கொண்டு திருமதிற்புறத்த்லே திருவாயிலுக்கு முன் அக்கினி வளர்ப்பித்து, இந்நாயனாரை அதிலே புகுவித்து, இவர் புலை உடம்பை ஒழித்துப் பிராமண முனிவடிவங் கொண்டு எழுந்து, கனகசபையிற் புகுந்து தமது திருவடிகளை வணங்கிக் கொண்டிருக்கும் பொருட்டு அருள் செய்தார். இதனால், சிவன் தம்மை வழிபடும் அடியார்கள் கருத்தை முடித்தருளுவர் என்பது துணியப்படும். "வாயானை மனத்தானை மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் - தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச் சுடர்த் திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற - தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் - சேயானைத்ட் தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே" என்றார் திருநாவுக்கரசுநாயனார். ஆதலால், சிவ புண்ணியங்களை நாம் செய்வது அருமை என்று விரும்பாதொழிதல் குற்றம் என்பதும், இடைவிடாது விரும்பின், சிவனது திருவருளினால் அது முற்றும் என்பதும், இப்பிறப்பின் முற்றாதாயினும் மறுபிறப்பின் முற்றுதல் ஒருதலை என்பதும், தெளிக. "நொந்தபங்கயனை நோக்கி நுடங்குட லளவே யன்றோ - வந்தமில்காலஞ் சேய்த்தன்றதுவுமென் றயரக் கண்டு - மிந்தநீ யிறந்தாற் பேறிங்கென்னென வனந்த னின்றென் - சிந்தையிங் கிதுவாச் செத்துந் திருநடங் காண்பே னென்றான்" எனக் கோயிற் புராணத்திற் கூறியவாற்றானும் உணர்க.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. திருநாளைப் போவார் (நந்தனார்) நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. Thirunaalaippovaar (Nandhanar) Nayanar puranam in English prose
3. Thirunalaippovar Nayanar Puranam in English Poetry