அநாதி மல முத்த பதியாகிய பரசிவன் தமக்கு ஒரு பிரயோசனமுங் குறியாது அநாதிமல பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மலநீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள், படைத்தலாவது சென்மமுடைய பிராணிகளின் சமுகமாயும், போகோப யோகிகளாகிய பரிகரங்களோடு இயைந்ததாயும் இருக்கின்ற சகத்தை அந்த வந்த நானாவித யோனிகளில் உற்பவிப்பித்தல். காத்தலாவது தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும் தத்தம் விடயத்தில் நியோகிக்க நிறுத்துதல், அழித்தலாவது சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல், மறைத்தலாவது தத்தம் வாசனைக்குத் தக்க போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல், அருளலாவது தீக்ஷாகிருத்தியமாகிய அனுக்கிரகம்.
இப்பஞ்சகிருத்திய கருத்தாவாகிய பதிக்கு உரிய முக்கிய குணங்களாவன சருவஞ்ஞதை, திருத்தி, அநாதி போதம், சுவதந்திரதை, அலுப்தசத்தி, அநந்தசத்தி என்னும் ஆறுமாம். இவை தமிழின் முறையே முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கை யுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் எனப்படும். எல்லாப் பொருள்களையும் புலப்படக்காணும் அறிவு உள்வழியல்லது எல்லாத் தொழிலும் இயற்றுதல் கூடாமையாயின் முற்றறிவும், தமதனுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றனை வேண்டிற் பரிபூரணத்தன்மை யெடுபட்டுக் கடவுட்டன்மை கெட்டுப் போதலின் வரம்பிலின்பமும், முற்றறிவுடையவழியும் அஃதநாதியன்றி அவாந்தரத்தில் வந்ததேற் காரண பூர்வகமாய் வந்ததெனின் வரம்பின்மைக் குற்றமும், காரணமின்றி வந்ததெனிற் காரண காரிய நியமமின்மைக் குற்றமும் அடுக்குமாதலின் இயற்கை யுணர்வும், பிறர் வயமுண்டேற் பாசத்தடையுமுளதாகி வேண்டிய தெய்தாமையும் வேண்டாத தெய்தலுமாகிய குற்றம் பற்றுதலின் தன்வயமும், ஆற்றல் குன்றுமாயின் எக்காலத்தும் எத்தேசத்தும் இளைப்பின்றித் தொழிலியற்றுதல் ஏலாமையிற் குறைவிலாற்றலும், அவ்வாற்றல் வரம்புப்பட்ட பரிமாணமுடையதாயின் வரம்புப்படாத தொழிலியற்றல் கூடாமையின் வரம்பிலாற்றலுமாகிய இவ்வறு குணங்களும் பதிக்கு இன்றியமையாமை காண்க. அப்பதியானவர், அநாதியே உள்ள முற்றறிவு முற்றுத்தொழிலாகிய சிவத்துவம் இயைதலாற்றான், சிவத்துவம் என்னும் அதிசுத்தம் இயைதலாற்றான் ஸி என்னுந்தாது கிடத்தலெனப் பொருள்படுதலின் இறுதிக்காலத்து உலகமெல்லாம் தம்மிடத்து ஒடுங்கிக் கிடத்தலாற்றான், சற்சனங்களுடைய மனங்கள் தம்பாற் கிடத்தலாற்றான், ஸி என்னுந் தாது மெலிவித்தலெனவும் கூருவித்தலெனவும் பொருள்படு மாதலான் ஆன்மாக்களின் பாச சத்தியை மெலிவித்துச் சிற்சத்தியைக் கூருவித்தலாற்றான், காந்திப்பொருடரும் வஸி என்னுஞ்சொல் வர்ண விபரியயமுறுதலாற்றான், சிவனெனப்படுவர்.
அச்சிவனது ஆஞ்ஞையினாலே அவ்வான்மாக்கள் கர்மானுசாரமாக நால்வகைத் தோற்றமும், எழுவகைப் பிறப்பும், எண்பத்துநான்கு நூறாயிர யோனிபேதமும் உடையராய்ப் பிறந்திறந்து உழலுங்காலத்திலே, முன்னர்ப் பெளத்தம் முதலிய புறச்சமயங்களிலே நின்று அவ்வச் சமய நூல்களில் விதிப்படி ஒழுகுவர்கள். அப்புறச்சமயிகளுக்கு, அவரவராலே சொல்லப்பட்ட கர்த்திருகாரணங்களை அதிஷ்டித்துக் கொண்டு அந்தக் கர்த்திருகாரண சொரூபியாய் இருந்து, சிவனே அருள் செய்வர். அது "அறிவினான் மிக்க வறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே யாரருள் புரிந்து - வெறியுமாகட விலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் - குறிகொள் பாடலினின்னிசை கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த - செறிவு கண்டு நின்றிரு வடியடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே" என்னுஞ் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தாலும் "அறுவகைச் சமயத்தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி பொருளாய் வேறாங் - குறியது வுடைத்தாய்வேதா கமங்களின் குறியி றந்தங் - கறிவினி லருளான் மன்னி யம்மையோ டப்பனாகிச் - செறிவொழியாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்" எனவும் "யாதொரு தெய்வங் கொண்டீரத் தெய்வ மாகியாங்கே - மாதொரு பாக னார் தாம் வருவர்மற் றத்தெய்வங்கள் - வேதனைப் படுமிறக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு மாதலா லிவையிலாதான றிருந்தருள் செய்வனன்றே" எனவும் வருஞ் சிவஞான சித்தித் திருவிருத்தங்களாலும் அறிக.
புறச் சமயங்களிலே நின்று செய்த புண்ணியங்களினாலே, பின் வைதிக மார்க்கத்திலே புகுந்து, வேதத்திலும் அதன் வழிநூலாகிய மிருதி முதலியவற்றிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்துக்கும் பிரமசரிய முதலிய நான்காச்சிரமத்துக்கும் விதித்த பசு புண்ணியங்களைச் செய்து, சுவர்க்கத்திற் சென்று போகந்துய்த்து, மீண்டு பூமியிலே பிறப்பார்கள். அவர்கள் முன்செய்த வைதிக புண்ணிய மிகுதியினாலே சைவாகத்தால் உணர்த்தப்படும் சைவத்திற் பிரவேசித்து, சரியை, கிரியை யோகங்களை முறையே அநுட்டித்து அவற்றின் பலங்களாகிய சாலோக்கிய சாமீப்பிய சாரூப்பிய பதங்களைப் பெறுவார்கள். அவர்களுள், போகத்திலே வைராக்கியம் உற்றவர்கள் திரும்பப் பூமியில் வாராது சிவானுக் கிரகத்தினாலே பரமுத்திமான்க ளாவார்கள். போகத்திலே வைராக்கியம் உறாதவர்கள் திரும்பப் பூமியிலே பிறந்து சிவஞானத்தைப் பொருந்தி, பரமுத்தியாகிய சிவ சாயுச்சியத்தைப் பெறுவார்கள். இதற்குப் பிரமாணம், சிவநெறிப் பிரகாசம். "இப்படி யவத்தை யோரைந் தெய்தியே பிறப்பிறப்பாம் - வெப்புறுங் காலந் தன்னில் வேதத்தின் வழிய தன்றிப் - பொய்ப் பொருட் சமயந் தன்னிற் புரிந்திடுந் தவத்தினாலே - தப்பிலா வேதஞ் சொன்ன சமயத்தைச் சார்ந்து நின்றே. வன்னமோர் நான்கினுக்கு மாசிலாச் சிரமங்கட்குஞ் - சொன்னவா றிடறிலாதே செய்துபின் சுவர்க்கந் துய்த்துப் - பின்னர்மா நிலத்தின் வந்து சிவதன்மை பெரிதென் றெண்ணி - முன்னையா கமங்கள் சொன்ன படிதவ முயல்வமென்றே. எண்ணியோர் குருவைச் சேர்ந்தே யெழில்பெறு சமய தீக்கை - நண்ணியே சரியை தன்னை நவையற வியற்றியத்தாற் - புண்ணிய சிவலோ கத்தைப் பொருந்தியங் குள்ள போக - மண்ணலா ரருளப் பெற்ற தருந்திமே லவனிமீதே, உதித்தருள்செய் குருவாலே விசேட தீக்கை யுற்றுணர்ந்து சிவபூசை யூனமறச் செய்தே - துதித்திடுநற் சாமீபஞ் சிவன்பாற் பெற்றுத் துய்த்திடுவர் பெரும்போகந் தொலைந்தகாலை - நதிச்சடையா னருளாலே புவியினண்ணி நாடரிய சிவயோக மியற்றி நன்றாய்த் - திதிக்கொழிவாங் காலமுறு மளவுமந்தச் சிவனுடைய சாரூபஞ் சேர்ந்துநின்றே. ஆகத்தி லாளசயிலராகிச் சற்று மளவிறந்து மேன்மேலு மடைவதான - போகத்திற் பற்றிலரே யாகிலுல கெல்லாம் பொன்றிடுங்கா விவர்தாமும் பொருந்திடுவர் முத்தி - மோகத்தைத் தவிராதோர் பினைச்சிருட்டி கால முளைத் துலகிற் குருவாலே முத்திபெற மலத்தின் - பாகத்தை யடைந்ததனாற் சத்தி பதிந்திடவே பரஞானத்தான் முத்தி பலிக்குமவர் பாலே" எ-ம். சிவஞான சித்தியார். "தானமியா கந்தீர்த்த மாச்சிரமந் தவங்கள் சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோ - ரீனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப் பளவின் மீள்வ ரீசனியோ கக்கிரியா சரியையினி னின்றோ - ரூனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லா மொடுங்கும் போதரன் முனிலா தொழியினுற்பவித்து - ஞானநெறி யடைந்தடைவர் சிவனையங்கு நாதனே முன்னிற்கினணுகுவர் நற்றாளே" எ-ம் கோயிற் புராணம். "சுருதிவழி யொழுகினர்கள் சுவர்க்கத்தா ராகமநூற் - சரியை கியா யோகர் சாலோக சாமீப - வுருவுவமை யினராக வுதவுது மெம்முடனாகும் - பெருகியஞா னிகளெம்மைப் பெற்றார் போக்கற்றாரே" எ-ம் சிவதருமோத்தரம். "இருவினை யுணர்ந்த புத்த ரவர்முத லிகலும்வாத - தெரிசன மனைத்துஞ் சேர்ந்தார் சிவசமயத்தைச் சேர்வார் - பொருவிலி புகன்ற வாக்கிற் கருமநன் னெறியும் புக்கே - விரவுவர் ஞானயோகம் விடுவர்மெய் யடைவர் மெய்யே, எடுத்ததோ ராக்கைதன்னி லிருண்மல சத்தி தன்னைத் - தடுத்தருள் சைவ நூலின் சாதன மதனைத் தள்ளி - விடுத்துவீ றற்ற நூலின் சாதனம் விரும்பு வார்முன் - னடுத்தவா ரமுதம் விட்டுப் புற்கையா தரிப்பா ரன்றே" எ-ம் வருமாறு காண்க.
இதுகாறுங் கூறியவாற்றால், சைவசித்தாந்தத்தன்றிப் பரமுத்தி சித்தியாது என்பதும், அப்பரமுத்திக்குச் சாதனம் சிவஞானமே என்பதும், அச்சிவஞானத்தைப் பயப்பன சரியை முதலிய மூன்றுமே என்பதும், வேதத்துள் விதித்த வேள்வி முதலியன வெல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, தீவினை போல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் உடையனவேயாம். ஆதலால், தீவினைகள் இருப்பு விலங்கும், வேதத்துள் விதித்த வேள்வி முதலிய தருமங்களின் பயனாகிய இன்பம் முன் பசித்து உண்டு. பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போலும். அவ்வேள்வி முதலியன போல அனுபவ மாத்திரையாற் கெடுதலின்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங்களால் எய்தப்படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் பசித்தலில்லாத தேவர்களுக்கு அவ்வமுத வுண்டியாலாய பயனைப் போலும் அவ்வமுத வுண்டி நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாகிய பெரும்பயனைத் தருதன்மாத்திரையே யன்றிப் பசிதீர்த்தலாகிய அவாந்தரப் பயனையுந் தருதல் போல, சரியை முதலியனவும் சிவஞானத்தைப் பயத்தல் மாத்திரையே யன்றித் தத்தம் பதமுத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம்.
மேற்கூறிப்போந்த சரியை முதலிய நான்கு பாதங்களுள்ளும், சரியை கிரியை என்னும் இரண்டும் கூடி, சிவத்தருமமென ஒருபெயரான் வழங்கவும் பெறும், அந்தச் சிவதர்மம் மெல்வினை வல்வினை என இருவகைப்படும். அவற்றுள் மெல்வினையாவது சைவாகமத்தின் சரியை கிரியைகளுக்கு விதித்தவழி ஒழுகும் விதி மார்க்கம். வல்வினையாவது அவ்விதிமார்க்கத்தில் வழுவாது நின்று அந்நிலையின் முதிர்ச்சியினாலே பின்னுண்டாகிய பிறப்பின்கண்ணே சிவனிடத்தில் எல்லையன்றி எழுந்து அதிதீவிரமாய் முறுகி வளரும் அன்பின் பெருக்கத்தினாலே உலகநெறி கடந்து ஒழுகும்பத்தி மார்க்கம் இதற்குப்பிரமாணம், திருக்களிற்றுப்படியார். "நல்லசிவ தன்மத்தானல்லசிவ யோகத்தா - னல்லசிவ ஞானத்தா னானழிய - வல்லதனா - லாரேனு மன்புசெயினங்கே தலைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்" எ-ம். "மெல்வினையேயென்ன வியனுலகி னார்க்கரிய - வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற் - சிவதன்ம மாமதனிற் சென்றதிலே செல்வாய் - பவகன்ம நீங்கும் படி" எ-ம். "ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே தீதிலறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே - நல்வினையாமென்று நமக்குமெளி தானவற்றை - மெல்வினையே யென்றது நாம் வேறு" எ-ம். "வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள் - கரங்களினா லன்றுகறி யாக - விரங்காதே - கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை - வல்வினையே யென்றதுநா மற்று." எ-ம். "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே - தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் சேதிப்பக் - கண்டீசர் தாமாம் பரிசளத்தார் கண்டாயே - சண்டீசர் தஞ்செயலாற்றான்" எ-ம், "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டியறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதேநாம்" வரும்.
இங்ஙனங் கூறிய சரியை முதலிய நான்கு பாதங்களிலே நின்று முத்திபெற்ற மெய்யடியார்களுட் சிறந்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மருமாகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரத்தை கனகசபையின் கண்ணே ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் கருணாநிதியாகிய சிவனது திருவருளினாலே பசுகரண மெல்லாஞ் சிவகரணமாய் நிகழப் பெற்ற சிவாநுபூதிமானாகிய குனறத்தூர்ச் சேக்கிழார் நாயனார், தமிழுலகம் உய்தற் பொருட்டு, திருத்தொண்டர் புராணம் எனப் பெயர் தந்து விரித்தருளிச்செய்தார். இப்புராணம் தன்னை ஓதல் கேட்டல் செய்வார்க்குச் சிவனடியார்களது அத்தியற்புத பத்தித்திறத்தையும் அவர்கட்கு எளிவந்த சிவனது அத்தியற் புதப் பிரசாதத்தையும் உணர்த்தி, அவர் நெஞ்சை அழலிடைப்பட்ட மெழுகுபோலக் கசிந்துருகச் செய்தலிற் றனக்கு உயர்வொப்பின்றி விளங்கும் பெருமையுடைமை பற்றிப் பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் எனவும் பெயர் பெற்றது. இப்பெரியபுராணம் சைவ சித்தாந்த நூற்கருத்தோடு மாறுபடாத வேதமுடி வாகிய உப நிஷத்துக்களின் தாற்பரியங்களை உள்ளடக்கிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் நான்கனோடு கூட்டி, கல்வியறிவொழுக்கங்களான் ஆன்ற மகத்துக்களாலே தொன்று தொட்டு அருட்பா என வழங்கப்படும்.
பிரஞ்ஞையில்லாத சில பிராமணர் இப்பெரியபுராணத்துக்கு அப்பிராமாணியம் பேசுவர், இப்புராணத்துக்கு தில்லைவாழந்தணர் மடபதிகள் முதலிய எண்ணிறந்த அடியார்கள் கேட்கச் சிதம்பர சபாநாதர் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்தருளினார் எனவும் இது முற்றிய அநபாயசோழ மகாராஜாவுக்கு, சோழனே சேக்கிழார் நாம் "உலமெலாம்" என்று அடி எடுத்துக் கொடுக்க, நம்முடைய தொண்டர்களது அடிமைத்திறத்தை விரித்துப் புராணம் பாடி முடித்தான். நீ அதைக் கேள், என் யாவரும் கேட்ப அருளிச் செய்தார் எனவும் தில்லை வாழந்தணர்களுள் ஒருவராகிச் சிவானுபூதிமான் எனப் பிரசித்தி பெற்ற உமாபதிசிவாசாரியார் சேக்கிழார் புராணத்துட் கூறுதலானும், பரமசிவன் உமாதேவிக்குச் சதுர்யுக தருமங்களுங் கூறிய பின்னர், இனிக் கலியுகத்திலே அறுபத்துமூன்று தொண்டர்கள் பிறந்து தம்மேற் பத்தி செய்வர்கள் எனவும், அவர்கள் சரித்திரத்தை உபமன்னியு முனிவர் பத்தர் குழாங்கட்குக் கூறுவர் எனவும் கூறி, அச்சரித்திரத்தை முன்னுரைத்தமை பரமேதிகாசமாகிய சிவரகசியத்திலே நவமாம்மிசத்திற் பெறப்படுதலானும், சங்கராச்சாரியர் இப்பெரிய புராணத்துட் கூறப்படும் அறுபத்து மூவருள் சிலரது அடிமைத்திறத்தை "வழியிலும் இடப்பட்ட செருப்பானது பசுபதியின் அங்கத்துக்குக் கூர்ச்சமாகின்றது; வாய்நிறைந்த நீரால் நனைத்தல் புரப்பவருக்குத் திவ்வியாபிஷேகமாகின்றது; சற்றே புசிக்கப்பட்ட மாமிச சேஷத்தின் கவளமானது திவ்வியோபகார மாகின்றது; வனசரன் பத்தச் சேஷ்டனாகின்றான். பத்தி எதைச் செய்கின்றிலது!" எனச் சிவானந்தலகரியினும், "கீரீசரே, மனைவிக்கும் புதல்வனுக்கும் தந்தைக்கும் துரோகஞ் செய்தவர்களுக்குப் பிரசன்னராயினீர். நானோ பிறருக்குத் துரோகஞ் சிறிதும் செய்யவல்லனல்லன். என்னிடத்து நீர் எவ்வாறு பிரீதி செய்வீர்! அறியேன்" எனச் சிவபுசங்கத்திலும் சிறப்பித்துரைத்தலானும், அப்பிராமணர் கூற்றுத் தூரம்போய்த் துச்சமாய் விடும்.
இப்பெரியபுராணமானது, தன்னை உணர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்குத் தமிழ்வேதமாகிய தேவாரத்தின் வரலாறும் மகிமையும் ஓரோவிடங்களில் அதன் பொருளும் விளங்குதல் கூடாமையானும், தன்னை அத்தியந்த ஆசையுடன் ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பத்திசைவராக்கிய ஞானங்களைப் பயக்குங் கருவியாய் இருத்தலானும், சிவஞான சித்தியார், திருக்களிற்றுப்படியார் முதலிய சைவசித்தாந்த நூல்களினும் உரைகளினும் சிவானுபவத்துகுத்தான் கூறும் நாயன்மார் பலருடைய சரித்திரங்களில் உதாரணங் காட்டுதலானும், சர்வாதிகாரிகளாகிய ஆதிசைவருக்கும் பிறருக்கும்தான் அதிகரித்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் ஆகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரங்களையும் உணர்ந்து அவர்கள் மகிமையைத் தெளிந்தாலன்றிச் சிவாலயங்கள் எங்கும் முறையே அவர்களுக்குப் பிரதிட்டை பூசை திருவிழாக்கள் செய்தற் கண்ணும் அவைகளைச் சேவித்தற் கண்ணும் ஊக்கமும் அன்பும் நிகழாமையானும், சைவர்கள் யாவரும் ஒருதலையாகக் கற்றுணரவேண்டும் நூலாம்.
சிவன் பிரமாண்டத்துள்ளே கைலாச நிலயராகிய ஸ்ரீகண்ட சரீர சரீரியாய் இருந்து, பிரமவிட்டுணு முதலியோர்க்கும் சுவேதர் உபமன்னியு முதலியோர்க்கும் கிருஷ்ணர் அர்ச்சுனர் முதலியோர்க்கும் அறுபத்துமூவர் முதலியோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலியயோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலிய திருத்தொண்டரது சரித்திரத்தை விரித்துரைக்கப்புகுந்த ஆசிரியர் முன்னர் அவ்வறுபத்துமூவர்க்கு அருள் செய்த சிவன் கைலாசத்தில் பிரம விட்டுணு முதலியோர் சேவிப்ப வீற்றிருந்தருளும் பெருஞ்சிறப்பைக் கூறுதல் முறைமை யாதலானும், அதனை ஈண்டுச் சுருக்கிக் கூறி, அங்ஙனங் கூறுமுகத்தாற் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவசேவியருமாம் என்பது குறிப்பித்தார். பல பிரமாணங்களாலே சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது ஐயமறத் துணிந்த வழியன்றி, அவர்பாற் பத்தி எய்தல் கூடாமையானும், ஒரோவழி எய்தினும், வைணவர் முதலியோர் மறுக்கும்வழி மயக்கமெய்துதல் பற்றி அது குன்றுமாதலானும், அத்ப்பிரபலப் பிரமாணமாகிய அதர்வசிகை முதலிய சுருதிகளால் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவ சேவியருமாம் என்பது சிறிது காண்பிப்பாம்.
அதர்வசிகையிலே "அந்தத் தியானம் யாது? அன்றியும் தியானிப்போன் யாவன்? தியானிக்கற்பாலரும் யாவர்?" என்ற உபக்கிரமத்தில் இருந்த வினாக்களுக்கு இசையத் தியானத்தையும் தியானிப்போனையும் நிரூபணஞ் செய்த பின்னர், தியானிக்கற்பாலரை நிச்சயித்தற்குச் சொல்லுமாறு, மிகவுந் "தியானிக்கற்பாலராகிய ஈசானரைத் தியானிக்க, அந்தப் பிரம விஷ்ணு ருத்திரேந்திரர்களாகிய இவரெல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட (உற்பத்தியாகின்றன,) காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் (உற்பவித்தல்) இன்று, காரணமும் சருவை சுவரிய சம்பன்னரும் சருவேசுவரரும் சம்புவுமாகியவரே ஆகாச மத்தியத்திலே தியானிக்கற் பாலர்" என்பது தொடங்கி, "மற்றதெல்லாம் விட்டுச் சுகத்தைச் செய்பவராகிய சிவனொருவரே தியானிக்கற்பாலர். அதர்வசிகை முற்றிற்று" என்பது வரையும், இங்கே யோக ரூடியினாற் பரமசிவனிலே வர்த்திக்கும் ஈசானரென்னுஞ் சொல் யோகத்தினாற் சுவாபாவிக நிரதிசயைசுவரிய பரத்தன்மையுடையரென்று பொருள்படுதலானும், ரூடியினாலே பரமசிவனுக்குப் பெயராதலானும், அனைத்தினும் மேலாகிய பயன் வேண்டினோராகிய உயர்ந்தோரால் பரமசிவன் தியானிக்கற் பாலரென்னுங் கருத்துப் பற்றி ஈசான சத்தத்தால் விசேடிய நிர்த்தேசம் பண்ணப்பட்டது "மிகவுந் தியானிக்கற்பாலராகிய" என்று தியானிக்கப்பட தக்கவரென வற்புறுத்தி அதிகமாகத் துதித்தது ஈசானரன்றி மற்றையோர் இப்பெற்றிப் பட்டவ அன்றென்னும் உறுதியைத் தொனிப்பித்தற்கு, தேவ மனுஷாதி ரூபமாகிய சகலப் பிரபஞ்சத்தினும் பிரமா முதலிய நால்வருக்கும் மிக்க தலைமை கூறி, அவர்களது ஐசுவரியங்களும் வரையறைப்பட்டவைகளென்று உணர்தற்கு "பிரம விஷ்ணு" என்பது முதல் "பூதங்களூடனே கூட" என்பது வரையும் பூதம், இந்திரியம் முதலிய வற்றிற்குச் சமமாக அவர்களுக்கு உற்பத்தியுடையை காட்டப்பட்டது. இவ்வுற்பத்தியுடைமை பரமசிவனுக்கு உண்டாயின், அவருக்கும் அது போலத் தியானிக்கப் பாலராந் தன்மையின்றாகுமென்று ஆசங்கித்து "காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் உற்பவித்தலின்று" என்று சொல்லப்பட்டது. பிரமாதிகளுக்கு உற்பத்தி கூறுஞ் சொல்லாற்றலால் அவர்களுக்கு அருந்தா பத்தியாற் பெறப்பட்ட காரணம் எதுவோ அந்த ரூபமாகிக் காரணங்களாகிய பிரமா விஷ்ணு ருத்திரர்களையும் மந்திரோப நிடதப் பிரசித்தமான காலமுதலியவற்றையும் படைத்தோராகியும் ஆதிசிருட்டியைச் சங்கற்பித்தோராகியும் இருக்கும் இப்பெற்றிப்பட்ட ஈசானர் யாண்டாயினும் உற்பவித்தல் இன்று என்பது இதன் பொருளாம். இதனால் பிரமாதிகட்குக் காரணம் யாது அது பிறத்தலின்று என்ற இவ்வளவு பொருளுமே பிரசித்தம். ஈசான ரென்றது இல்லையெனின்; அங்ஙனமாயினும், ஈசானருக்குத் தியேயத்துவம் விதித்துப் பிரமாதிகட்குத் தியேயத்துவம் பிரித்து நீக்கும் பொருட்டு அவர்களிடத்திற்றோஷந் தோற்றுவித்தபின்பு, அந்தத் தோஷம் ஈசானருக்கும் உண்டாயின் தியேயத்துவம் இன்றாகுமென்று அவசரத்திற் போந்த சங்கை யகற்றற்கு அவருக்கே அத்தோஷமின்மை கூறவேண்டுதல் அவசியமாதலின், ஆண்டு ஈசானரென வருவித்துப் பொருளுரைப்பதே சால்பு, அங்கே ஆகாசமத்தியத்திலே என்றது உபாசனா ஸ்தானம் கூறியவாறு, அதற்குப் பரமாகாசமாகிய கைலாசமென்னும் பெயருடைய பரசிவலோகமென்பது கருத்து, அதனால் இருதயகமலம் இரவிவிம்ப முதலிய எவ்வெவ் விடங்களிற் சிவனைத் தியானிக்கினும், அவ்வவ்விடங்கள் அனைத்தினும் சோதி மயமாகிய கைலாசத்தை விபாவித்து, அதன் மத்தியத்தில் இருப்பவராகச் சிவனைத் தியானிக்க என்று உணர்த்தப்பட்டது; சருவேசுவரரென்றது சிவனது நாமமாகக் கூறப்பட்டது; "ஓங்காரமாகிய சருவேசுவரரைத் துவாதசாந்தத்திலே (உபாசிக்க)" என்று தாபநீயோப நிடதத்திற் பிரயோகித்தலாலும், புராணங்களில் வழங்கலாலும், அவருக்கு அப்பெயருண்மையாலென்க. அதுவன்றி, சருவைசுவரிய முடையவரென்னும் பொருள்படக் கூறிற் புனருத்தமாதலின், அற்றன்றென்க. அன்றியும், இரவி கிரணத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கமலங்களே கமலங்களாகும் என்பதனுள் இரண்டாங் கமலபதம் கமலகுண சமூக மென்னும் பொருள்படுமாறுபோல, முன்னையது ரூடியாகவும் பின்னையது யோகரூடியாகவும் பொருள் பட்டு, சம்பு வானவர் உற்பத்தியின்றிப் பிரமாதிகட்குங் காரணமாயிருத்தன் மாத்திரத்தால் அபரிச்சின்னைசுவரியரென்றதன்று. பின்னும் அசாதாரணமாகிய சருவேசுவர சத்தத்தாற் கூறப்படுதலானும் சருவேசுவரரென்றதென்று கருத்தாகி உபபத்தியுடைய அனுவாதமாகக்கூறியதெனினும் அமையும், இந்த அருத்தத்தையே ஆதரவினாலே கண்டோக்தியினாலும் "சிவனொருவரே தியானிக்கற்பாலர்" என்று சுருதி விளக்குகின்றது. அங்ஙனம் அச்சுருதியின் பொருளை உபவிருங்கணங்கள் தாமே தெளிவுற விளக்குகின்றன. அவற்றுள், சைவபுராணத்திலே சிவனது சர்வோத்கருஷ நிச்சயப்பிரகரணத்திலே (1) "எவரிடத்திலிருந்து பிரம விஷ்ணுருத்திரேந்திர பூர்வமான இஃதனைத்தும் சகலபூதேந்திரியங்களுடனேகூட ஆதியிற்பிறந்தன" (2) காரணங்களைப் படைத்தோரும் கருதினோரும் பரமகாரணமுமாகிய எவர்யாண்டாயினும் எப்போதாயினும் பிறிதொன்றினின்று பிறக்கின்றிலர்" (3) "சருவைசுவரிய பரிபூரணராகியும் தாமே பெயரினாற் சருவேசுவரராகியும் சம்புவாகியுமிருக்கிற அவரே ஆகாசமத்தியத்திலிருப்பவராக முமுட்சுக்களாலே தியானிக்கற்பாலர்" என கூறப்பட்டது. இங்கே "பிரம விஷ்ணு" என்பது முதல் "பூதங்களுடனேகூட" என்பது வரையுமுள்ள சுருதியின் பொருள் முதற்சுலோகத்திற் காட்டப்பட்டது. இதில் "எவரிடத்திலிருந்து" என்னும் நிர்த்தேசவசனமும் இரண்டாஞ்சுலோகத்திலே "எவர்" என்பதும் மூன்றாஞ்சுலோகத்தில் "அவர்" என்னும் பிரதி நிர்த்தேசத்தைக் கொண்டு முடிதலால், பிரமாதிகள் சிவனிற்றோன்றியோர் என்பது தெளிவுறவுணர்த்தப்பட்டது. மூன்றாஞ்சுலோகத்திலே "பெயரினாற் சருவேசுவரர்" என்று அஃது அவர்க்குப் பெயராமாரு காட்டப்பட்டது. அரிவம்மிசம் பிரமாண்ட புராணம் முதலியவற்றினும் இவ்வாறே காட்டப்பட்டது. அங்ஙனமாகச் சுருதியிற்றானே பிரமா முதலிய சகல தேவதைகளினும் வேறுபிரித்துச் சிவனுக்கே சருவேசுவரத்துவம் வியவஸ்த்தாபித்திருக்கவும், அவரினும் அதிகமாகிய பிற தெய்வம் உண்டென்று கற்பித்தல் பேதைமையேயாம்.
அற்றேல், "இரணிய கர்ப்பன் ஆதியிலுள்ளவன்" என்றும் "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றும் "அக்கினியே தேவரனைவர்க்கும் முன்னே தலைவன்" என்றும் இத்தொடக்கத்துச் சுருதிகளிலே பிறதேவதைகட்கும் வரையறைப்படாத தலைமையுண்டென்று கூறியதேதெனின், அது கூறுதும், அநேகருக்கு விகற்பித்துக் கூறினமையால், சருவேசுவரத்துவம் சம்பவியாது; வஸ்துவில் விகற்பங் கூடாமையால், ஒருங்கு சம்பவித்தலும் இன்று; ஒருவர்க்கொருவர் தலைவராதல் உண்மை வருதலால், விகற்ப பேதத்தினாலே சகலருடைய தலைமையும் கால பரிச்சின்னமாதலின் ஒருவருக்கும் தலைமையின்றெனலுங் கூடாது; தோஷம் உண்மையால், ஆதலால், அப்பெற்றிப்பட்ட வசனங்களுட் சில வசனங்கள் பிரதீதமாகிய பொருளுடையன என்றும், சில பிறிதோராற்றாற் பெறப்படும் பொருளுடையன என்றும் எல்லாரும் உடன்பட்டுக் கொள்ளல் வேண்டும். அங்கே இவை இவை பிரதீதமாகிய பொருளுடையன ஏனையவை பிறபொருளுடையன என்று நமது புத்தியாற் கற்பிக்கப்பட்ட நியாயங்களால் வியவஸ்தாபிப்பதிலும், உபவிருங்கணங்கட்கு அனுசாரமாக வியவஸ்தாபித்தலே மேன்மை; ஆன்மாக்களது புத்தியானது நிச்சயமில்லா நிலைமைத்தாதலின் அதனால் ஊக்கிக்கப்பட்ட நியாயங்களினாலே நிச்சயம் சித்தி பெறாமையானும், "வேதமானது அற்பக்கல்வியுடையானுக்கு "என்னையிவன் கடப்பான்" என்று அஞ்சுகின்றது. இதிகாச புராணங்களாலே வேதப் பொருளைத் தெளிந்தறிய வேண்டும். தன்னாலே அறிந்து கொள்ளப்பட்ட வேதப் பொருளிலே அறியாமை உண்டாகும்; ஆயினும் முனிவராலே நிச்சயிக்கப்பட்ட அந்தப் பொருளிலே பெரியோர்க்கு என்ன சங்கை யுண்டாகும்" என்னும் வியாச வசனத்தினாலுமென்க. ஆதலால், அனேக உபவிருங்கணங்களின் வலிமையாலே அதர்வசிகையே பிரதீதார்த்தம் உள்ளதென்றும், அவ்விதமாகிய உபவிருங்கணங்கள் இல்லாதனவாகிப் பிறதேவதைகட்குத் தலைமை கூறும் பிற சுருதிகள் வேறு பிரமாணங்களால் விரோதிக்கப்பட்டு சுருங்கி நிற்கின்ற அவ்வவர் தலைமையைப் பொருளாகவுடையனவென்றும் உடன்படுதலே பொருத்தம். நியாயத்தாற் பலாபலம் விசாரியாது திருப்தியடையாதவரைக் குறித்து, இந்தச் சுருதி மற்றையவற்றினும் மிகுபலம் உடைத்தென்பது நிறுத்துதும், பல சுருதிகள் தம்முள் விரோதம்டைந்தபோது பலமுடையது செம்பொருள்படுதலும் பலமில்லது பிறிதோராற்றாற் பெறப்படுதலுமே நியாயம். அங்ஙனமே சுருதியின் "சாதுர் மாசிய யாகஞ்செய்தவனுக்கு அழிவில்லாத புண்ணியம் உண்டாகின்றது" என்னுஞ் சுருதி "எப்படி இம்மையிற் கன்மங்களாலீட்டிய லோகம் நாசமடையும் அப்படித்தான் மறுமையிற் புண்ணியங்களாலீட்டிய லோகமும் நாசமாம்" என்று பொருட்பலம் பற்றிப் பிறிதொன்றிற் செல்லாமற் கிளர்ந்த பிரபலச்சுருதியால் வாதிதமாகிச் சுருங்கிய பொருட்பட்டு நிற்றலின், அழிவில்லாத என்பதற்கு ஒருகாலாவதியைக் குறித்து அழியாத என்பது பொருளாம். அதுபோலவே, ஈண்டும் சிவனது தலைமை கூறக் கிளர்ந்த கருதி ஏனனத் தேவர்களின் தலலமைகூறக் கிளர்ந்த சுருதிகளைச் சுருங்கிய பொருட்படுத்தும்; ஏனைத் தேவர்கட்குக் குற்றங்கூறி அவர்களினின்றும் பிரித்துச் சிவனது தலைமை கூறலானும், ஏனைச் சுருதிகள் இங்ஙனங்கூறாது ஓரோவிடத்து ஓரொருவர்க்குத் தலைமைமாத்திரம் கூறலானுமென்க. இன்னும் சிவனது தலைமை முமூட்சுக்களால் உபாசிக்கப்படும் பரதேவதையை நிச்சயிக்கத் தொடங்கிய உபநிடதத்தில் உரைக்கப்பட்டது ஏனையோரது தலைமை கர்மதேவதா நிச்சயப்பிரகரணங்களிற் கூறப்பட்டது. அதனாலும் இதற்குப் பிரபலத்துவம். இந்தச் சுருதி சிவனது தலைமையே கூறி, "அதர்வசிகை முற்றிற்று" என்று ஏனையோரினின்றும் பிரித்துச் சிவனது நிரதிசயமாகிய ஐசுவரியம் உணர்த்தி முடிவுபெற்றது. ஏனைச் சுருதிகள் அங்ஙனமல்ல. அதனாலும் இது பிராபல்லியம்.
அற்றேல், "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனுமாகயவனை" என்று நாராயணோபநிடதத்து இருத்தலானும், "தேவர்களுள்ளே அக்கினி கடைப்பட்டவன்; விஷ்ணு சீர்த்தலைவன்; அவர்கட்கிடையே மற்றத் தேவதை களனைத்தும்" என்னும் வெகுவிருசபிரமாணத்திலே சகல தேவதைகளினும் உயர்ந்தவன் என்கையாலும், லோகாட்சி கிருகியத்திலே "அக்நயே பிருதிவ்யதிபதயேசுவாகா" என்பது முதல் "பிரமனே லோகாதிபதயே சுவாகா" என்பது வரையுமுள்ள மந்திரங்களாலே அக்கினி, சோமன், வாயு, சூரியன், இந்திரன், யமன், வருணன், குபேரன், மகாசேனன், உருத்திரன், பிரமன் என்பவர்களுக்குப் பிருதிவி, நட்சத்திர, அந்தரிக்ஷ, தியு, சுர, பிரேத, சலில, யக்ஷ, சேநா, பூத லோகங்களுள் ஒவ்வொன்றற்கு அதிபதியாந்தன்மை காட்டியபின்பு "விஷ்ணுவே சர்வாதிபதயே சுவாகா" என்று சுருக்கப்படாத சர்வாதிபதித்தன்மை காட்டினமையாலும் நாராயணன் தானே நிரதிசயைசுவரியமுடையனெனின் அற்றன்று. "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனு மாகியவனை" என்றது "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றற்றொடக்கத்தன போலச் சுருங்கிய பொருட்படும் "முதல்வனான அக்கினியே தேவர்களுக்கு முகம்" "அக்கினிமுன்னே தேவதைகளுக்குத் தலைவன்" "அக்கினி தேவதைகட்குத் தலைவனாகச் செல்லுக" "அக்கினியே சகலதேவதைகளும்" என்றற்றொடக்கத்துச் சுருதிகளாலும், பருவங்களுள் இளவேனில் போலவும் மனிதருள் அந்தணா போலவும் தேவதைகளுள் அக்கினி என்றற் றொடக்கத்து மிருதிகளானும், "அக்கினிமுதலியோர்" என்றற்றொடக்கத்து விஷ்ணுபுராண வசனங்களாலும். "அக்கினியே முக்கியதேவன்" என்னுஞ் சைமினி சூத்திரத்தாலும், அக்கினியின்மேன்மை பிரசித்தமாதலாற் சகலதேவதைகளிலும் அக்கினி கடைப்பட்டோனென்பதே பொருந்தாது. ஆதலிற் காட்டிய சுருதியிலே "அக்கினிகடைப்பட்டவன்" என்றது சில தேவதைகளைக் குறித்தே அக்கினிக்குக் கடைத்தன்மை கூறுதலிற் சுருக்கப்பட்ட பொருளுடையதேயாம். அதற்குச் சமானமான யோக க்ஷேமத்திலே விஷ்ணு தலைவனென்ற வழியும், அப்படிச் சில தேவதைகளைக் குறித்தே தலைவனென்று சுருங்கிய பொருட்படும். லேர்காட்சி கிருகியத்திலே காட்டிய மந்திரங்கள் கிருச்சிராங்கங்களாகிய பன்னிரண்டோமங்களினும் தனியே தனியே விநியோகிக்கப்பட்டவைகளாம். அவை ஒவ்வொரு பொருளைக் கூறுதலி னொவ்வொரு வாக்கியங்களாம். ஆதலின் வேறு வேறு வாக்கியங்கள் கூடி ஒருங்கு முடிந்து பொருட்படாமையால் தனித்தனியே நான்காம் வேற்றுமை யுருபீற்றவாய் முடியும். அந்த வாக்கியங்கள் கூடி அக்கினி முதலியோரினின்றும் பிரித்து விஷ்ணுவினது சருவைசுவரியம் உணர்த்தற்கு வலியுடையனவல்ல. இந்த மந்திரங்களிற் கூறிய உருத்திரனை யொழிந்தோரனைவரும் லோக பாலராதலின் இந்த உருத்திரனும் லோகபாலனென்பது பெறப்படும். லோகபாலருத்திரன் சிவகலை பெற்ற கணநாதருள் ஒருவனென்று கூர்மபுராணத் துரைக்கப்பட்டது. அதனால் இங்கே சிவனினின்றும் பிரித்து விஷ்ணுவினது தலைமை கூறப்பட்டதென்று சங்கித்தற்கு இடமேயில்லை. ஆதலால், அதர்வசிகைப்படியே சிவனது நிரதிசயமான ஐசுவரியஞ் சாதிக்கப்பட்டது; அதர்வ சிகையே எல்லாவற்றிலும் மிகு பலமுடையதாதலால்.
அதர்வசிரசின் முதற்கண்டத்திலே "தேவர்கள் சுவர்க்க லோகத்தை அடைந்தனர். அந்தத் தேவர்கள் உருத்திரரை வினாவினர்" என்று தொடங்கி "நீர் ஆர்" என்று வினாவின தேவர்களுக்கு அவர் கூறினர்; "நானொருவனே ஆதியிலேயிருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்; என்னையன்றி வேறொருவனில்லை; அப்படியே என்னையறிந்தவன் எல்லாமறிவான்" என்பது முதலிய சிவவசனத்தாற் சிவனது சருவாத்துமத்தன்மை காட்டப்பட்டது. பின்னர் "அதன்பின் தேவர்கள் உருத்திரரைக் கண்டிலர்; அந்தத் தேவர்கள் உருத்திரரைத் தியானித்தனர். அதன்பின் தேவர்கள் ஊர்த்துவ்வாகுவை யுடையவரைத் துதித்தனர்" என்று தேவர்களால் உபாசிக்கப்படுந் தன்மையும் துதிக்கப்படுந் தன்மையும் காட்டப்பட்டன. பின்பு இரண்டாங் கண்டத்திலே "எவர் உருத்திரர்; அவர் பகவான்; பூர், புவர், சுவர் (ஆகியவர்) அவரே பிரமாவும்; அவருக்கு வணக்கம் வணக்கம். விஷ்ணுவுமவர்; மகேசருமவர்" என்பது முதலியவற்றால் பிரமா விஷ்ணு ருத்திரன் உமை இலட்சுமி சரசுவதி இந்திரன் முதலியோரும் மகாபூதம் முதலியவும் அவரது விபூதியேயென்று காட்டப்பட்டது. மூன்றாம் நாலாம் கண்டங்களிலே சிவநாமத் தொகுதியை விரித்துரைத்து, அவரது மேன்மை விளக்கப்பட்டது. ஐந்தாங் கண்டத்திலே அவரை உபாசித்தலாற்றான் மோக்ஷமென்று கூறி, உபாசனாப்பிரகாரமாகிய பாசுபத யோகங் காட்டப்பட்டது. இப்படியே அதர்வ சிரசிலுள்ள வசனங்களெல்லாம் பரமசிவனது சர்வோத்கருஷத்தை விளங்கக் கூறும். இதற்கு உபவிருங்கணம், இலிங்கபுராணத்தில் "அதன் பின்பு தேவர்கள் மயங்கி, நீர்யாவரென வினாவினர் அவர் கூறுவார். நானொருவனே புராதனனும் பகவானுமாகிய உருத்திரன். நானே ஆதியிலே யிருந்தேன் இருக்கிறேன் இருப்பேன். தேவர்களே, இந்த உலகத்திலே எனக்கு வேறானவ னொருவனுமில்லை. நான் நித்தியாநித்தியன்; குற்றமற்றவன்; பிரமாவுக்குத் தலைவனாகிய பிரமாநான்." என்று தொடங்கி "தருமாதருமங்களாலே எனது மகிமையாற் சகலத்தையும் பரிபாகம் பண்ணுவேன் என்று சொல்லி, உருத்திரபகவான் அங்கே மறைந்தார். பின்பு தேவர்களவரைக் கண்டிலர்." என்பது முதலாக இரண்டத்தியாயங்களினாலும் அதர்வ சிரசு முற்றுஞ் சிவபரமென்று உணர்த்தப்பட்டது. இப்படியே சூதசங்கிதை வாயுசங்கிதை ஆதித்திய புராணம் என்பவற்றினும் உணர்த்தப்பட்டது.
இப்படியே சுருதிகளும் அவைகளின் உபவிருங்கணங்களும் சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது தெளிவுற விளக்குதலால், விஷ்ணு முதலிய பிறரைச் சிவனினும் அதிகமென்றாயினும் சிவனோடு சமமென்றாயினும் கொள்ளுதல் சிவநிந்தையாகிய அதிபாதகமேயாம். ஆதலால், சிவனே பரம்பொருள் என்று துணிந்து, அவரையே மெய்யன்போடு மனம் வாக்குக் காயங்களினாலே வழிபடுக.
பின்னே நிகழும் அடியார்களது சரித்திரத்தை உமாதேவிக்கு முன்னே அருளிச் செய்யப் புகுந்த பரமசிவன் அச்சரித்திரம் உபமன்னியுமுனிவராலே பத்தர்குழாங்களுக்குக் கூறப்படுமெனக் கூறினாரென்று சிவரகசியத்து நவமாம் மிசத்திற் கூறப்பட்டது. அப்படியே திருத்தொண்டர் சரித்திரம் சொன்னவர் உபமன்னியுமுனிவர் என்பது இங்கும் பெறப்பட்டது. உபமன்னியுமுனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷைசெய்தமையால், அவரை "யாதவன் றுவரைக் கிறையாகிய மாதவன்முடிமே லடிவைத்தவன்" என்றார் அச்சரித்திரம் வருமாறு கிருஷ்ணர் புத்திரபாக்கியத்தின் பொருட்டு நெடுங்காலம் சிவபூசை பண்ணியும், சிவன் வெளிப்படாதொழிந்தார். அக்காலத்தில் ஒருநாள் உபமன்னியுமகாமுனிவர் சிவபூசைக்குப் பத்திரபுஷ்பங்களில்லையென்று தமக்கு வின்ணப்பஞ் செய்ததமது சீடனை நோக்கி, கிருஷ்ணர் சிவபூசை செய்து கழித்த பத்திரபுஷ்பங்களைக் கொண்டு வரும் பொருட்டு ஆஞ்ஞாபித்து அவைகளாலே சிவபூசை செய்து முடித்தார் அதை அறிந்த கிருஷ்ணர் வந்து, சங்கைபேச; உபமன்னியுமுனிவர், சைவாகமத்தில் விதித்தபடி சிவதீக்ஷை பெற்று மந்திரக்கிரியா பாவனைகளாலே சிவனைப் பூசித்தாலன்றி இவை நிருமாலியமாகா; சிவனும் வெளிப்படார் என்றார். அது கேட்ட கிருஷ்ணர் அம்முனிவருக்கு ஆளாகி, அவரிடத்தே சிவதீக்ஷை பெற்று சிவபூசை செய்து, தாம் விரும்பிய பயனைப் பெற்றார். கிருஷ்ணர் சிவதீக்ஷை பெற்ற சரித்திரம் வாயுசங்கிதையில் உத்தரகாண்டத்திலும் மகாபாரதத்தில் அனுசானபர்வத்தில் பதினான்காம் அத்தியாயத்திலும் கூர்மபுராணத்திலும் சொல்லப்பட்டது.
இங்கே உபமன்னியு முனிவருக்குக் கொடுக்கப்பட்ட மாதவன் முடிமேலடி வைத்தமையும், அத்தர் தந்த அருட்பாற்கடலுண்டமையும் ஆகிய விசேடணங்களால் இவரது பெருமையும், இவராலே புகழ்ந்துரைக்கப்பட்ட சுந்தரமூர்த்திநாயனாரது பெருமையும், அவராலே திருத்தொண்டத் தொகையிற்றுதிக்கப்பட்ட திருத்தொண்டரது பெருமையும் தொனிக்கின்றன.
சுந்தரமூர்த்திநாயனாரும் அநிந்திதை கமலினி என்னும் பெண்களும் முறையே சிவனுக்கும் உமாதேவிக்கும் புஷ்பங் கொய்யும்போது இச்சைகொண்டமையால், பூமியிலே பிறந்து போகம் அனுபவிக்கும்படி சபிக்கப்பட்டார்கள் என்று சொல்லுகையால்; புஷ்பம் எடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்யும்போது நினைவு வேறாதலாகாதென்பது துணியப்பட்டது. அது "கொந்தலர் கொய்யும் போது கூர்விழி மைய லாலே - பைந்தொடி மடவார் தம்மைப் பார்த்தலாற் கைலை வெற்பிற் - சுந்தரன்பட்ட காதை யறிதிரோ துணர்மென் போதா - லந்தணர் கீழ்க ளாவா கீழ்களந் தணர்க ளாவார்" என்னும் புட்பவிதி செய்யுளாலுமறிக. கைலாசவாசிகளாய்ச் சிவனை இடைவிடாது சேவிக்கும் அன்பர்களுக்கு இக்குற்றத்தின் பொருட்டு இத்தண்டம் கிடைத்தாயின், ஒன்றுக்கும் பற்றாத சிறியேங்கள் குற்றஞ் செய்யின் எத்துணைப் பெருந்தண்டம் கிடைக்குமோ என்று அஞ்சி நடுங்கி, சிவபுண்ணியங்களைச் செய்யும்போது சிறிதாயினும் மனசைப் பிறிதொன்றிற் செல்ல விடாமற் சிவனுடைய திருவடிகளிலே செலுத்துக.
தன்கீழ் வாழ்வோர் குற்றஞ்செய்யின், அக்குற்றத்தை நாடி, யாவரிடத்தும் கண்ணோட்டம் வையாது நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லப்பட்ட தண்டத்தை ஆராய்ந்து, அவ்வளவினதாகச் செய்வதே அரசனுக்கு முறையாம். அது "ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் - தேர்ந்துசெய் வஃதேமுறை" என்னுந் திருக்குறளால் அறிக. இம்முறையானது ஒரு பக்கத்திலே சாயாமற் செவ்வியகோல்போலுதலில், செங்கோலெனப்படும். இன்னும், பொதுப்பட உயிர்களைக் காத்தல் தரும மாயினும், பசுக்களையும் பெண்களையும் பிராமணரையும் சிவனடியார்களையும் காத்தல் பெருந் தருமமாம். அது "ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் - தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங் - காவலன் காப்பவன் காவா தொழிவனேன் - மேவு மறுமைக்கு மீளா நரகமே" என்னுந் திருமந்திரத்தாலும், "வெற்றியின் விழுமி தம்ம வெருவினோர் மேற்செலாமை - மற்றதின் விழுமிதைய வழுநரை நெறியின் மாட்டல் - சொற்றவிவ் விரண்டின் மேலும் விழுமிதுதுகடீர் நல்லா - னற்றவர் மறையோர்க் குற்ற நலிவினை நலிதறானே." "வெடித்தடங்கயற் கண்ணியர் மைந்தர்வேதியர் கோ - நெடிற்கொ டுங்கொலை சூழ்ந்திட நீக்கருந் தீதிற் - படிற்றனாண்மையிற் காப்பது காத்தது பலியா - விடிற்ற னாவியை விடுத்திடா வேந்துமோர் வேந்தோ" என்னும் இரகுவம்மிசச் செய்யுள்களாலும் அறிக.
இப்படியே செங்கோலை முட்டாமற் செலுத்தியவிதம் இந்த மனுசக்கிரவர்த்தியிடத்திற் காணப்பட்டது; இவர், பசுக்கன்றைக்கொன்றவன் தாம் நெடுங்காலம் பெருந்தவஞ் செய்து அரிதிற் பெற்ற ஏகபுத்திரனாயிருப்பவும், பசுக்கொலைக்கு உயிர்த் தண்டமல்லாத பிராயச்சித்தம் ஸ்மிருதியில் விதிக்கப்பட்டமையால், இக்குற்றத்தின் பொருட்டுப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுதலன்றி, இவனைக் கொலை செய்தல் தகுதியன்றென்று மந்திரிகள் தடுப்பவும், நடுவு நிலைமை சிறிதும் தவறாது அவனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்த பெருந்தன்மையுடையராதலால் என்றறிக. பசுக் கொலை செய்தவர்களுக்கு உயிர்த்தண்டமல்லாத பிராயச்சித்தம், ஸ்மிருதியில் விதிக்கப்பட்டதாயின், இவர் உயிர்த்தண்டஞ் செய்தமை குற்றமன்றோ எனின், இந்தப் பசுவானது, தன்னினம்போலன்றி மனிதருக்கு உரிய அறிவை உடையதாகி, ஆராய்ச்சி மணியை அசைத்தமையால் எல்லையின்றி எழுந்த இரக்கம் பற்றி, அப்பசுவின் கன்றைக் கொன்றமையை மனிதரது குழந்தையைக் கொன்றைமையாகக் கொண்டராதலாலும், சிவனது திருவாரூரிற் பிறந்த உயிரைக் கொன்றமை சிவாபராதமாமெனத் துணிந்தாராலாலும் அது குற்றமாகாது புண்ணியமாயிற்றென்றுணர்க. அது "அவ்வுரையில் வருநெறிக ளவைநிற்க வறநெறியின் - செவ்வியவுண்மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீ - ரெவ்வுலகிலெப் பெற்ற மிப்பெற்றித் தாமிடரால் - வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்." "போற்றி சைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச - வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த் - தோற்றமுடை யுயிர்கொன்றா னாதலி னாற்றுணிபொருடா - னாற்றவு மற்றவற் கொல்லு மதுவேயா மெனநினைமின்." என இவ்வரசர் கூறியவற்றால் அறிக.
பிற உயிர்களுக்கு வருந்துன்பத்தைத் தமக்கு வரும் துன்பத்தைப்போலக் கொண்டு பேணும் இரக்கமுடைமையே அறிவினாலாகும் பெரும் பிரயோசனமாம். எவ்வளவு நூல்களைக் கற்றார்களாயினும், எவ்வளவு தருமங்களைச் செய்தார்களாயினும், இவ்விரக்கமில்லாதவர்கள் நரகத் துன்பம் அடைதல் சத்தியம். இதற்குப் பிரமாணம், சைவ சமயநெறி; "அன்பு மருளு மறிவுக் கடையாள - மென் பருணர்ந்தோர் சிவன்வாக் கீண்டு." எ-ம். திருவள்ளுவர் குறள்: "அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் - தந்நோய்போற் போற்றாக் கடை." எ-ம். பதிபசுபாச விளக்கம்: "கலையெலா முணர்ந்தா னேனுங் கரிசறத் தெளிந்தானேனு - மலையென வுயர்ந்தா னேனு மனமயலகன்றா னேனு - முலகெலாம் புகழப் பல்லோர்க் குதவிய கையனேனு - மிலகிய விரக்க மின்றே லெழுநர கடைவ னன்றே" எ-ம் அருட்பிரகாசம்: "உயிர்நித்தமென்றறிந் தாலுநல் லோர்பல் லுயிரதுற்ற - துயருக் கிரங்கல் புதுமை கொல்லோவருட் டோன்றலந்நாட் - செயிருற்ற தேவர் முறைகேட் டிரங்கித் திருவுளத்தூ - டயர்வுற் றுகுத்தகண் ணீரக்க மாமணி யாயிடினே." எ-ம். வரும். இம்மனுசக்கிரவர்த்தியிடத்து இவ்விரக்கம் உண்மை "அவ்வுரைகேட்ட வேந்த னாவுறு துயர மெய்தி - வெவ்விடத் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங் - கிவ்வினை விளைந்தவாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ் - செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந்தேறான்.", "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந் தறத்தினீடு - மென்னெறி நன்றா லென்னு மென் செய்தாற் றீருமென்னுந் - தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரு - மந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற்றன்றால்" என்னுந் திருவிருத்தங்களால் அறிக.
இவர் தம்முடைய மகனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்தமையால், அவனிடத்து இரக்கமில்லாதவரென்பது பெறப்படுமன்றோவெனின்; அற்றன்று; பூமியிலே வெளிப்படப் பாவஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அரசனுக்கும் வெளிப்படாமற் பாவஞ் செய்தவர்களையும் வெளிப்படப் பாவஞ் செய்தவர்களுள் அரசனாலே தண்டிக்கப்படாதவர்களையும் மறுமையில் நரகத்திலே தண்டித்தல் இயமனுக்கும், கடனாம் ஆதலாலும்; தாம் செய்த பாவத்தின் பொருட்டு இம்மையில் அரசனாலே தண்டிக்கப்பட்டவர்கள் அப்பாவத்தின் பொருட்டு மறுமையில் நரகத்திலே தண்டிக்கப்படார்கள் ஆதலாலும்; தம்முடைய மகன் பசுக்கொலைக் குற்றத்தின் பொருட்டு மறுமையில் நரகத்துன்பம் அடையா வண்ணம் தாமே இம்மையில் அவனைத் தண்டித்து அப்பாவத்தை ஒழித்தார்; ஆதலால் அவ்வுயிர்த் தண்டத்துக்குக் காரணம் அவனிடத்தில் வைத்த இரக்கமென்றே துணியப்படும். இதற்குப் பிரமாணம், கோயிற் புராணம்; "மண்ணுலகின் முறை புரியா மடவரைநால் வகைத்தண்டம் - பண்ணிநெறி நடத்திடவும் பலரறியா வகைபுரிந்த - வெண்ணில்வினை விதி வழியே நுகர்விக்கு மியல்பிற்கும் - திண்ணியரா மிருதருமருளராகச் செய்துமென." "வானவர்கோ னுரைத்திரவி மைந்தர்களி லொருவனுக்கு - ஞானவிழி நல்கிநம னற்பதியுங் கொடுத்தகற்றி - யீனமிலா வொருவனுக்கங் கிலகுமணி முடியளித்துத் - தேனகுதா ரணிவித்துத் தேவர்கடங் கைக் கொடுத்தான்." எ-ம். சிவதருமோத்தரம்: "பிணக்கந் தன்னையும் பெற்றவர் தம்மிடைக் - கணக்கி லாரையுங் கள்வர் கடம்மையும் - வணக்கு வான்மன்னன் மற்றையர் தங்களை - யிணக்கு வானர கத்து ளியமனே." எ-ம். திருமந்திரம்: "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை - யத்தன் சிவன் சொன்னவாகம நூனெறி - யெத்தண்டமுஞ்செயு மறுமையிலிம்மைக்கே - மெய்த்தண்டஞ் செய்வதவ் 'வேந்தன் கடனே" எ-ம். சிவஞானசித்தியார்: "அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பாவங்க - டரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத் - துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் - நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்." எ-ம். போற்றிப்பஃறொடை; "மண்டெரியிற் - காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய - மீத்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்தநெறி - யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே - நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன் - மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக - நஞ்சனனய சிந்தை நமன்றூதர் - வெஞ் சினத்தத - லல்ல லுறுத்து மருநகரங் கண்டுநிற்க - வல்ல கருணை மறம்போற்றி." எ-ம். வரும். இன்னும், இவர் தம் மகனுக்குச் செய்த இவ்வுயிர்த்தண்டம், இவர் கீழ்வாழும் பிறரெல்லாம் உயிர்களுக்கு இடுக்கண் செய்தற்கு அஞ்சி அஃதொழிந்து உய்தற்கும், அவ்வாறாகவே, உயிர்களெல்லாம் பிறராலிடுக்கணடையாது இனிது வாழ்தற்கும், ஏதுவாமன்றோ! அதனாலும், இவரது சீவகாருண்ணியந் துணியப்படும்.
தம்முடைய மகன் இறந்துவிடில் தமக்குப்பின் உயிர்களைக்காத்தற்கு ஒருவருமில்லாதிருத்தல்கண்டும், அவனைக் கொன்றாராதலின், இவர் அவ்வுயிர்களிடத் திரக்கமில்லாதவரென்பது பெறப்படுமன்றோவெனின்; அற்றன்று; கருணாநிதியாகிய சிவனது விதிப்படி நடுவுநிலைமை சிறிதும் வழுவாது முறைசெலுத்துதல் தமக்குக் கடனாதலால் தாம் அப்படியே முட்டாமல் முறைசெலுத்தில், தமக்குப் பின்னும் தமது பூமியிலுள்ள உயிர்கள் இடுக்கணின்றி இனிது வாழ்தல் வேண்டுமென்னுந் தங்கருத்தை வேண்டுவார் வேண்டியதே யீவாராகிய அச்சிவன் முற்றுவித்தருளுவர் என்னுந்துணிவுடனே அம்மகனைக் கொன்றாரென்பது "ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான் - றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் - மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்த - னருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்" என்னுந் திருவிருத்தத்தாலே தெளியப்படுதலின்; இவர் எவ்வாற்றானும் இரக்கமுடையவரென்றே துணியப்படும். இவர் நடுவுநிலைமையின் வழுவாமை "என்மகன் செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயவிசைந்தே யன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல் வேனானாற் - றொன்மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட தெனுந் வார்த்தை - மன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்" என்பதனால் உணர்க. முட்டாது செங்கோல் செலுத்திய அரசனை அச்செங்கோலே காக்குமென்பது "இறைகாக்கும் வையக மெல்லா மவனை - முறைகாக்கு முட்டாச் செயின்" என்னுந் திருக்குறளால் அறிக.
இதுகாறும் கூறியவற்றால், இரக்கமும் நடுவு நிலைமையும் பெரும்புண்ணியமென்பதும், அவையில்லாமை பெரும்பாவமென்பதும், குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அக்குற்றஞ் செய்தார்க்கும் பிறவுயிர்களுக்கும் நன்மை பயத்தலால் அது இரக்கமாவதன்றி வன்கண்மை யாகாதென்பதும், அத்தண்டஞ் செய்யாதொழிதலே வன்கண்மை யெனப்பட்டுத் தமக்கும் பிறர்க்குந் தீமை பயக்குமென்பதும் பெறப்படும். அன்றியும், பிறர் கொலை களவு முதலிய குற்றங்களைச் செய்யும் போது கண்டவர்கள், நீதி சபையிலே சாட்சிகளாகும்போது, நாம் இங்கே உண்மை சொல்லில் இவர்களுக்கு அரசனாலே துன்பம் நிகழுமே யென்றஞ்சி, தாம் கண்ட உண்மையை மறுத்துச் சொல்லில்; அது அக்குற்றஞ் செய்தார் மறுமையிலே நரகத்தில் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய துன்பம் அனுபவித்தற்கும்; இவர் குற்றஞ்செய்தும் தண்டத்துக்கு விலகிக் கொண்டமைபோல நாமும் விலகிக் கொள்வோமென்னுங் கருத்துடையராகிப் பிறருங் குற்றஞ்செய்து கெடுதற்கும், இப்படிக் குற்றஞ்செய்வார் உளராகவே, பலவுயிர்கள் அவராலே துன்பம் அனுபவித்தற்கும் ஏதுவாம். ஆதலால், யாவராயினுஞ் சாட்சிகளாகும்போது தாங்கண்ட உண்மையைச் சொல்லுதல் புண்ணியமென்பதும், அதனை மறுத்துச் சொல்லுதல் பாவமென்பதும் பெறப்படும். மெய்ச்சான்றுரைத்தலால் பெறப்படும் இன்பமும், பொய்ச் சான்றுரைத்தலால் பெறப்படுந் துன்பமும், "உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும், மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவான்; சத்தியமே மேலான தானமும், தவமும், தருமமுமாம்; தேவர்கள் சத்தியவடிவினர்; மானுடர் அசத்திய வடிவினர். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத்தன்மையை அடைவான். சத்தியத்தின் மேலான தருமமும், அசத்தியத்தின் மேலான பாவமுமில்லை; பாவிகள் நாஞ்செய்யுங் காரியத்தைப் பிறர் அறியாரென்று எண்ணுகின்றார்கள்; தேவர்களும், இந்திரன் முதலான எண்மரும், ஐம்புதங்களும், இரவியும், மதியும், மனமும், அறக்கடவுளும், உலகத்திலுள்ளாரெல்லாரையும் பார்க்கின்றார்கள்; ஆகையால், ஒருவன் செய்த வஞ்சனை வெளிப்படும். பொய்ச்சான்று உரைத்தவன் தன்னுடைய ஏழுமரபினுள்ளாரையும் கீழான நரகத்தில் வீழ்த்துவான்; எழுபிறப்பிலீட்டியவெல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவனாவான்; பிரமவதையும், சிசுவதையும், தந்தைவதையுஞ் செய்தவனாவான்; மிகக் கொடிய ரெளரவ முதலாகிய நரகங்களையும் அடைவான்; பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் இப்பிறப்பிற் பிறந்து, பின்பு மானுடப் பிறப்பிலே பிறவிக்குருடன், செவிடன், குட்டநோயினன், ஊமை இவர்களாகியும், மிக்க பசிதாகமுடையவனாகித் தனது பகைவன் வீட்டிற் றன்மனையாளோடும் பிச்சையிரப்பவனாகியும் பிறப்பான், என்னும் மிருதிவசனத்தினாலும், "பொய்யி னைப்புகன்ற புல்லர் வாயினைப் புடைத்து நாக் - கொய்வர் துக்க பேதமுங் கொடுப்பர் தூதர் கோணனா - வெய்யர் முன்பு சொன்ன பொய்வி னைத்திறம்வி ளங்கவே - நைவ ரென்னை செய்வமென்று தீருமாறு நாடியே" "சலமெனும் வாதியாவன் றகைபெறு சமயந் தன்னை - நிலை குலை செய்தான் கள்ள நீசரை நேசஞ் செய்து - கொலைவிலக்கிடுவான் றானுங் கோணிய வழக்குக் கூறும் - புலையனும் பொருந்தி மன்றிற் புந்தியிற் புன்மையாலே" என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுள்களாலும் அறிக.
கோபம், நோய் முதலிய ஏதுக்களாலே தன்னுயிரை விடுத்தவன் அறுபதினாயிரம் வருஷம் நரகத்தில் வருந்துவன்; குருலிங்க சங்கமங்களுக்கு எய்தும் இடையூறு நீங்குதற் பொருட்டு உயிர் விடுத்தவன் சிவபதம் அடைவன். இதற்கு பிரமாணம், சிவதருமோத்தரம்: "கோவத்தானாகத்திற் கொடுநோயான் மற்றுங் குற்றத்தாற் றான் றன்னைக் கொலைபுரிகை குணமோ - பாவத்தான் மிக்காரே தமைத் தாமே வதைக்கும் பதர்மனித ரந்தணர்க்கும் பாங்கல்ல கும்பி - பாகத்திற்பட்ட ழுங்கிச் சீக்குழிக்கும்படிவர் பகர் வருட மறுபதினா யிரமுறவே பாங்கே - சாகத்தாந் துணிந்தழிகை சங்கரனா லயத்திற் றுவறுறினே யவரமலன் புரியதனைச் சார்வார்." எ-ம். சங்கற்ப நிராகரணம்: "விதிதெருளா னோய்க்குமழிந் தாக்கையைத் தான் வீத்தாற் - புதையிருளி னாழ்வன் புகுந்து." எ-ம். "ஆக்கையினை நோய்க்கு மழிந் தந்தணன்றா னீக்கினாற் - சீக்குழிக்கு மாழ்வன் சிறந்து." எ-ம். "அரும்பெரும் பன்னோ யடர்த்தாலு மாற்றிப் - பிரிந்திடச்செய் யாதுடலைப் பேணு." எ-ம். சிவபுண்ணியத் தெளிவு: "குருவிலிங்கசங் கமத்தினைக் குறித்தவற்றிடையூ - றொருவு தற்பொருட் டாற்றம துயிர்விடு முரவோர் - மருவி டும்பல மெமக்குமே வளம்பட வகுப்பா - னருமையென்றன னனைத்தையு முணர்த்துபே ரறிவோன்." எ-ம். வரும். இங்கே மந்திரி, தனக்குச் சோழர் ஆஞ்ஞாபித்தபடியே தான் அவருடைய மகனைக் கொல்வானாயில், அவருக்குப் பின் அரசியற்றுதற்கு ஒருவரும் இல்லாமையால், குரு லிங்க சங்கமங்களுக்கு இடையூறு நிகழுமெனவும், உயிர்களெல்லாம் இடுக்கணின்றி இன்புற்று வாழ்தல் கூடாதெனவும், நினைந்து, சிவபத்தியானுஞ் சீவகாருண்ணியத் தானுந் தன்னுயிரை விடுத்தானாதலின்; அது பாவமாகாது புண்ணியமாயிற்று. ஒருவனிமித்தம் ஒருவன் தன்னுயிரை விடுக்கப்புகில் அவனைத் தடுக்காதவன் அவனனத் தன்கையாற் கொன்றவனாவன். அது "என்றனை நீ புன்மை மொழியிசைப்பாயே யென்று மெனது தனந்தாராதே யேகுவையோ வென்று - நின்றனக்கோ வுரித்திந்த நிலமெனக்குமென்று நின்முன்னே யென்னுயிரை நீக்குவனே யென்றுந் - தன்றனையே தான்வதைக்கிற் றடுத்துமுறை புரியாச் சலத்தெதிரி யவன்றன்னைத் தன்னதுகை யாலே - கொன்றவனே யாதலினாற் றடுத்திடுக கொலையைக் கொடுத்திடுக கணக்குளது கொலைக்கஞ்சுங் குணத்தார்" என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளால் அறிக.
திருசிற்றம்பலம்.
See Also:
1. பெரிய புராண பாயிரம் (தமிழ் மூலம்)
2. Invocation - (Paayiram) of Periya Puranam in English Poetry