logo

|

Home >

devotees >

thiruneelakanta-kuyavanar-nayanar-puranam

திருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்

 

Thiruneelakanta (Kuyavanar) Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி
    தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று}
சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்
    துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க
    ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை
மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி
    விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே, பொய்சொல்லல் சிறிது மின்றித் தருமநெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்திலே நிற்பவரும், சிவபத்தி அடியார்பத்திகளிலே சிறந்தவருமாகிய தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற்றுச் சீவனஞ் செய்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வந்தார். அவர் "ஆதிகாலத்திலே பரமசிவன் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும்பொருட்டு உண்ட பொழுது, அவருடைய கண்டமானது. அவர் தம்மை அடைந்தவர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்கியருளுவார் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ளும்படி ஓரறிகுறியாய் விளங்கும் பொருட்டு, அதனை உள்ளே புகவொட்டாமல் தடுத்து தானே தரித்துக்கொண்டது" என்று நினைந்து, அக்கடவுளுடைய கண்டத்தைத் திருநீலகண்டம் என்று எப்பொழுதும் சிறப்பித்துச் சொல்லுவார். அதனால் அவருக்குத் திருநீலகண்டநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் அவ்வூரிலே ஒருவேசியிடத்துச் சென்று வீட்டுக்குத் திரும்ப; கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே தோன்றிய கோபத்தை அடக்கிக்கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய மற்றப்பணிகளெல்லாஞ் செய்தும், புணர்ச்சிக்குமாத்திரம் இசையாதவரானார். நாயகர் தம்முடைய மனைவியார் கொண்ட புலவியைத் தீர்க்கும்பொருட்டு அவர் சமீபத்திலே போய், வேண்டிய இரப்புரைகளைச் சொல்லி, அவரைத் தீண்டுபடி சென்றார். அப்பொழுது மனைவியார் "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயகர், பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்றாவண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, இவர் 'எம்மை' என்று பன்மையாகச் சொன்னதனால் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களையும் நான் மனசினால் நினைத்தலுஞ்செய்யேன்" என்று உறுதிகொண்டார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப்பருவத்தையுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.

இப்படியிருக்கும் காலத்திலே, காருண்ணிய ஸ்வரூபியாகிய பரமசிவன் அவ்வடியாருடைய மகிமையை உலகத்தவர்கள் ஐயந்திரிபற அறிந்து அவருடைய தொண்டை அனுசரித்து உய்யும்பொருட்டு, ஒரு சிவயோகிவடிவங் கொண்டு, அவ்வடியார் வீட்டுக்குச் சென்றார். அவ்வடியார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டுபோய், ஆசனத்தில் இருத்தி, அவருக்கு விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது" என்று வினாவ; சிவயோகியார் "இந்த திருவோட்டை வைத்திருந்து, நாம் கேட்கும்போது தா. இந்த் ஓடு தனக்கு வேறொப்பில்லாதது; தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வது; பொன்னிலும் இரத்தினத்திலும் பார்க்கக் காப்பாற்றப்படத்தக்கது. இப்படிப்பட்ட மேன்மையுள்ளதாகிய இந்த ஓட்டை நீ வாங்கி வைத்திரு" என்று அருளிச் செய்தார். அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, "சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்" என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் 'நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா" என்றார். அடியவர் அதைக் கொண்டுவந்து கொடுக்கும்பொருட்டு உள்ளே போய்ப் பார்த்துக் காணாமையாலே திகைத்து, அங்கு நின்றவர்களிடத்திலே கேட்டும் பிறவிடங்களிலே தேடியும் காணாதவராகி, சிவயோகியாருக்கு உத்தரம் சொல்வதற்கு ஒன்றுமின்றி அங்கே நின்றார். சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, "நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்ந்து நிற்கின்றாய்" என்று கேட்க; அடியவர் வந்து சிவயோகியாரை வணங்கி, "சுவாமி! தேவரீர் தந்த் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைப் பார்க்கினும் புதிதாகிய வேறொரு திருவோடு தருவேன். அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவயோகியார் அவரைக் கோபித்துப் பார்த்து "நீ யாது சொன்னாய்! நான் வைத்த மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாயாயினும் நான் வாங்கேன்; நான் முன்னே உன்னிடத்தில் தந்த ஓட்டையே கொண்டுவா" என்று திருவாய்மலர்ந்தருள, அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டைத் தேடியுங் காணேன். வேறே நல்ல ஓடு தருகின்றேன் என்று சொல்ல; அதற்கு உடன்படாமல் என்னோட்டையே கொண்டுவா என்று சொல்லுகிறீர். இந்தச்சொல் என்னறிவுமுழுதையும் ஒழித்துவிட்டது" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல், பல பாவங்கள் செய்கின்றாய். சகலரும் அறியும்படி உன்னைத் தப்பவொட்டாமல் மறித்து என்னோட்டை வாங்கிக் கொண்டேயன்றி நான் போகேன்" என்று சொல்ல; அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை எப்படித் தெரிவிப்பேன்? சொல்லும்" என்றார். சிவயோகியார் "உன் புத்திரனைக் கையிலே பிடித்துக்கொண்டு குளத்திலே முழுகி, நான் கவரவில்லை என்று சத்தியம்பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "அப்படிச் செய்தற்கு எனக்குப் புத்திரன் இல்லையே! யாது செய்வேன் சொல்லும்" என்றார். சிவயோகியார் உன்மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "நானும் என்மனைவியும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது. நான் மாத்திரம் குளத்திலே முழுகிச் சத்தியம்பண்ணித் தருகிறேன். வாரும்" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான்முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் உன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியஞ்செய்து தராமலும், மனம் வலித்திருக்கின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையிலே இவ்விஷயத்தைக் குறித்துப் பேசப் போகின்றேன்" என்று சொல்லி, அந்தச் சபைக்குப்போக; திருநீலகண்டநாயனாரும் அவருக்குப் பின்னே போனார், சிவயோகியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, "இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தருகின்றானில்லை. அதனை இழந்ததனாயின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தருகின்றானுமில்லை" என்றார். உடனே பிராமணர்கள் அடியவரை நோக்கி, திருநீலகண்டரே! நடந்த சமாசாரத்தை நீர் சொல்லும்" என்று கேட்க; அவர், "சுவாமிகாள்! இவர் தந்த திருவோடு நான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது. நான் தேடிப் பார்த்துங் காணேன். இதுவே நடந்த சமாசாரம்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து கொடுத்தலே நீதி" என்றார்கள். அடியவர் அதைக் கேட்டு, தாம் அம்மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக்குறித்துப் பேசமாட்டாதவராகி, "தகுந்தபடி குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து தருகிறேன் வாரும்" என்று சொல்லி, சிவயோகியாரோடு தம்முடைய வீட்டுக்குப் போய், மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திலே போய், ஒரு மூங்கிற்றண்டை ஒருபுறத்திலே மனைவியார் பிடிக்க, மற்றப் புறத்திலே தாம் பிடித்துக்கொண்டு, இறங்கினார். அதைக்கண்ட சிவயோகியார் "உன்மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு" என்று சொல்ல; திருநீலகண்டநாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளீலே தாஞ்செய்த வேசிகமனமும் அதனாலுண்டாகிய சபதமும் அந்தப் பிரகாரம் தவறாமல் நடந்துவருதலும் சொல்லி, முழுகினார். முழுகிக் கரையிலேறிய திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் மூப்புப்பருவம் நீங்கி, இளைமைப்பருவம் உடையவர்களாய்ப் பிரகாசித்தார்கள். "உடனே தேவர்களும் முனிவர்களும் அந்நாயனார்மீது ஆகாயத்தினின்றும் புஷ்பமாரி பொழிந்து, அவரது பெருமையை எடுத்துத் துதித்தார்கள். அவ்வதிசயத்தைக் கண்ட சமஸ்தரும் அங்கு நின்ற சிவயோகியாரைக் காணாதவர்களாய், மயங்கி நின்றார்கள். சிவபெருமான் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார்.

அப்பொழுது திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் பூமியிலே விழுந்து அவரை நமஸ்கரித்து, எழுந்து ஸ்தோத்திரஞ் செய்து கொண்டு நின்றார்கள். சிவபிரான் அவர்களை நோக்கி, "ஐம்புலன்களை வென்றதனாலே மேன்மை அடைந்த அன்பர்களே! எக்காலத்திலும் இவ்விளமை நீங்காமல் நம்மிடத்தில் இருங்கள்" என்று சொல்லி மறைந்தருளினார். பத்திவலிமையையுடைய திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து, சிவலோகத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்

 


திருநீலகண்ட நாயனார் புராண சூசனம்

காமம்

பிறவிப் பிணிதீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும் நீக்குதற்கு அரியது. அது நினைப்பினும், காணினும், கேட்பினும் தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற் போல எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அது கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்திலே தலைப்படினும்; அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும், செல்லத் தகாத இடம் இது எனவும், ஆராய விடாது. அது மேலிடம் பொழுது, குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாவங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. இதற்குப் பிரமாணம், கந்தபுராணம். "கண்டதோர் நறவமே காம மேயென - வெண்டருத் தீம்பொரு ளிருமைத் தென்பரா - லுண்டுழி யழிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் - கொண்டுழி யுயிரையுங் கொல்லு மொன்றரோ" எ-ம். 'உள்ளினுஞ் சுட்டிடு முணர்வு கேள்வியிற் - கொள்ளினுஞ் கட்டிடுங் குறுகி மற்றதைத் - தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற் - கள்ளினுங் கொடியது காமத் தீயதே." எ-ம். "ஈட்டுறும் பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலில் - வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை - வீட்டின ரல்லரோ வீடு சேர்ந்துளார்." எ-ம். "நெஞ்சினு நினைப்பரோ நினைந்து ளார்தமை - யெஞ்சிய துயரிடை யீண்டை யுய்த்துமேல் - விஞ்சிய பவக்கடல் வீழ்த்து மாதலா - னஞ்சினுந் தீயது நலமிலகாமமே." எ-ம். "மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் - பெண்ணாசை நீங்க லெளிதோ பெரியோர் தமக்கும்." எ-ம். திருவிளையாடற் புராணம் - "அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண்டாவி - யுணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா - குணங்குல னொழுக்கங் குன்றல் கொலை பழி பாவம் பாரா - விணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா." எ-ம். "கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வ - வெள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற் - றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே - யுள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண்." எ-ம். "காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத - காமமே களவுங் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சங் - காமமே கள்ளுண் டற்குங் காரண மாதலாலே - காமமே நரகபூமி காணியாக் கொடுப்ப தென்றான்." எ-ம். நாலடியார் - "அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் - வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் - கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம மவற்றினு மஞ்சப்படும்." எ-ம். "ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு - நீருட் குளித்து முயலாகு - நீருட் - குளிப்பீனுங் காமஞ் சுடுமேகுன் றேறி - யொளிப்பினுங் காமஞ் சுடும்." எ-ம். நீதிசாரம் - "ஊரு ரெனும்வனத்தி லொள்வேற்கண் மாதரெனுங் - கூருர் விடமுட் குழாமுண்டு - சீரூர் - விரத்திவை ராக்கிய விவேகத் தொடுதோ - லுரத்தணியா தேகலெவனோ." எ-ம். வரும். ஆதலால், காமம் மனசிலே சிறிதாயினும் எழ ஒட்டாமல் அடக்கல் வேண்டும். சிறிது எழுங்காலத்து, சிவனடியாரோடு கலத்தல் சிவசாத்திரம் பொருள்களைச் சிந்தித்தல், கேட்டல் முதலிய நற்செய்கைகளாலே, அதனிடத்தே கருத்து இறங்காவண்ணம் காலம் போக்கல் வேண்டும். மனைவியைப் புணர்தல் மாத்திரமே வேதாகமாதிகளில் விதிக்கப்பட்டதாம். மனனவியையும், புத்திரநிமித்தமன்றிப் போக நிமித்தம் புணர்தல் பாவமேயாம்.

சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவராய் இல்லறத்தில் வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், தம்முடைய மனைவி இருப்பவும். தம் மனசிலே தலைப்பட்ட காம மிகுதியினாலே, நூல்களில் விலக்கப்பட்டதாகிய பரத்தைப் புணர்ச்சியைச் செய்தார். செய்தாராயினும், தம்முடைய மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைத் தீண்டும்படி சென்றபொழுது, அவர், "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்டவுடனே, அவரைத் தீண்டாமல், நீங்கினமையாலும்; அதுமாத்திரமன்றி, இவர் எம்மை என்று பன்மையாகச் சொன்னதனால் இவரை மாத்திரமன்று மற்றைப் பெண்களையும் மனசினால் நினைத்தலுஞ் செய்யேன் என்று உறுதி கொண்டமையாலும்; இவருடைய மனசிலே காமந்தலைப்பட்ட போதும் சிவபத்தி அதினும் மிகத் தலைப்பட்டிருந்தது என்பதும், அதனால் அச்சிவபத்தியானது பின் ஒருபோதும் இவர் மனசிலே காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தது என்பதும் துணியப்படும்.

இவ்விருவரும், மிக்க இளமைப் பிராயத்தினராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், தங்களுள்ளே நிகழ்ந்த சபதம் சிறிதாயினும் வழுவாவண்ணம், காமத்தை முற்றும் ஒழித்து வாழ்ந்த பெருந்தகைமையை நினைக்குந்தோறும், இவர்களிடத்துள்ள சிவபத்தியின் வலிமை விளங்குகின்றது. விட்டுணு, சலந்தராசுரன் இறந்துவிட, காம மிகுதியினால் அவனது சரீரத்திலே பிரவேசித்து, அவனுடைய மனைவியைப் பலநாட் புணர்ந்து, பின்பு தம்மை விட்டுணு என்று உணர்ந்த அவளாலே சபிக்கப்பட்டு, வருத்தமுற்றார். பிரமா தம்மாலே படைக்கப்பட்ட திலோத்தமையினது அழகைக் கண்டு மயங்கி, அவளைப் புணரின் மகட்புணர்ச்சிக் குற்றமாம் என்பது பாராமல், அவளைத் தொடர்ந்தார். இந்திரன் கெளதம முனிவருடைய மனைவியாகிய அகலிகையைப் புணர்ந்து தன்னுடம்பிலே ஆயிரம் யோனி உண்டாகும்படி அம்முனிவராலே சபிக்கப்பட்டான். சந்திரன் தன் குருவாகிய வியாழனுடைய மனைவியைப் புணர்ந்து, கயரோகம் அடைந்தான். இன்னும் முனிவர்கள் பலர் உண்டி முதலியவற்றை ஒழித்து, மலைகளினும், காடுகளினும் தவஞ்செய்யும் பொழுதும், தேவப் பெண்களையும் அசுரப் பெண்களையும் இராக்ஷசப் பெண்களையும் கண்டு மயங்கி, பாவம் என்பதும் பழியென்பதும் பாராமல், அவர்களைப் புணர்ந்து, தங்கள் தவத்தை இழந்தார்கள். தருமம் வளர்ந்தோங்கும் முன்னை யுகங்களிலே, தேவர்கள், முனிவர்கள் தாமும், காமமிகுதியினாலே பரஸ்திரீ கமனம் புத்திரிகமனம் குருபன்னிகமனம் முதலிய பெருங்கொடும் பாவங்களைச் செய்தார்களே! இக்கலியுகத்திலே இந்நாயனாரோ, தமது மனைவியார் சிவனைச் சுட்டி இட்ட ஆணைகடத்தல் சிவத்துரோகமாம் என்பது பற்றி, மனைவியைத் தானும் புணராதொழிந்தார்! இதனால் இவரது பத்தி மகிமை எவ்வளவு வியக்கத்தக்கது! இவ்வியப்பு நோக்கி அன்றோ, பட்டணத்துப் பிள்ளையாரும் "மாது சொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன்" என்றார்.

கற்புடைய மகளிரும், அழகிற் சிறந்த ஆடவரைக் காணில், அவர் தமக்குத் தந்தையராயினும், சகோதராயினும், புதல்வர்களாயினும், தமது நிலை கலங்கி, அவரையும் நிலைகுலைப்பார்களே! அது "தந்தையாயினும் விழைவிற் றன்னுடனே யொருவயிற்றிற் சார்ந்தாரேனு - மைந்தரா யினு மிகவும் வனப்புடைய ரெனிலவர் மேன் மடநல்லார்தஞ் - சிந்தைநடந் திடுமதனாற் சாம்பன் மலர்க் கணைவேளிற் செவ்வி வாய்ந்தோன் - பைந்தொடியாரினதமரு முவளகத்திற் றனிவருதல் பான்மை யன்றே." என்னுங் காசிகண்டச் செய்யுளால் அறிக. இவ்வாறாகவும், இந்நாயனாரும் மனைவியாரும், மிக்க இளமைப்பருவத்தராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், புணர்ச்சி இன்றிச் சபதத்தைப் பேணினமையால், இவர்களது சிவபத்தியின் பெருமை இவ்வளவு என்று சொல்லத் தக்கதன்று. இந்நாயனார் பரமசிவன் சிவயோகியாராய் வந்து தம்மிடத்துவைத்த ஓட்டைத் தாம் கவராமைக்குத் தமது மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொன்ன வழியும், சபதம் வழுவாமற் காத்தார்.

இவர்கள், தங்களுக்குள்ளே நிகழ்ந்த சபதம் தங்கள் இருவருக்கு மாத்திரமன்றி அயலவருக்கும் வெளிப்படாதிருப்பவும், அதனை வழுவாது காத்தமையாலும்; இவர் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் பண்ணித் தரும்படி சிவயோகியார் நெருக்கியபோதும், தமது செயற்கருஞ்செயலை வெளிப்படுத்தாமையாலும்; இறுதியிலே மிக நெருக்கியபோது, தாம் அதனை வெளிப்படுத்தாதொழியில், அவரது சந்தேகம் தீராதென்பது பற்றியே வெளிப்படுத்தினமையாலும்; இவர்கள் புகழை விரும்பிச் சீவர்களைச் சாட்சியாகக் குறியாமல், உயிர்க்குயிராகிய சிவனுடைய திருவடியையே சாக்ஷியாகக் குறித்து ஒழுகினார்கள் என்பது செவ்விதிற்றுணியப்படும்; இவ்வியப்பு நோக்கியன்றோ, ஆசிரியர் சேக்கிழார் "இளமையின் மிக்குளார்க ளிருவருமறிய நின்ற - வளவில்சீ ராணை போற்றி" என்றும், "அயலறியாத வண்ண மண்ணலாராணை யுய்த்த - மயலில் சீர்த் தொண்டனாரை." என்றும், திருவாய் மலர்ந்தருளினார். சீவர்களைச் சாக்ஷியாகக் குறியாமல் தமது திருவடியே சாக்ஷியாகக் குறித்துப் புண்ணியம் இயற்றும் பெருந்தன்மை உடையோருக்கு, சிவனே வெளிப்பட்டு வந்து, உலகமெங்கும் அவர் புகழை விளக்கி, யாவரும் அவரை வணங்கும்படி இடையறாத பேரின்பத்தைக் கொடுத்தருளுவர், அது, சிவன் இவர்களுக்கு வெளிப்பட்டு, இவர்களது செயற்கருஞ் செய்கையை உலகமெங்கும் அறியும்படி வெளிப்படுத்தி, "வென்றவைம் புலனான்மிக்கீர்" என்று தமது அருமைத் திருவாயினாலே புகழ்ந்து; இவர்களுக்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளினமையால். உணர்க. இக்கருத்து நோக்கியன்றோ, வைராக்கிய சதக நூலாரும் "உன்னுகின்றனை யுனை மணோர் பெரியனென் றுணருமா செயவுன்பான் - மன்னு மீசனே பந்தம்வீ டளிப்பவன் மற்றைய ரறிந்தென்னா - மன்னவன் றிருப் பொன்னடி கரியதா வருந்தவஞ் செய் நெஞ்சே - பின்னை முன்னவ னுலகறிந்திறைஞ்சுமா பெருமைசெய் குவனோரே." என்றார்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. திருநீலகண்ட நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. thirunIlakaNta nAyanAr purANam in English prose 
3. Tirunilakanta Nayanar Puranam in English Poetry 

 


Related Content

63 Nayanmar Drama-வென்ற ஐம்புலனால் மிக்கார் - திருநீலகண்டக்

இளமையை வென்றவர்கள்

The Puranam of Thirunilakanta Nayanar

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Thiruneelakanda Yazhpanar