திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்க்குச் சீடர் திருவியலூர் ஆளுடையதேவ நாயனார். அவருக்குச் சீடர் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார், வடநாட்டிலிருந்து தென்னாட்டுத் தலயாத்திரைக்கு வந்து திருவியலூரில் தங்கிய காலத்தில் அவ்வூர் ஆளுடையதேவ நாயனாருக்காக, திருவுந்தியார் என்னும் ஞானநூலைச் செய்தருளினார் என்பது பழஞ்செய்தி. அவரது இயற்பெயர் முதலியன தெரியவில்லை. 'உய்யவந்த' என்றது பற்றிப் புனைந்ததுமாம்.
திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தாம் அருளிச் செய்த ஞான நூலைத் தில்லைவாழ் அந்தணர்கள் மறாமல் ஏற்கத் தில்லை மன்றத்துத் திருவைந்தெழுத்துப்படியின் கீழவைத்தலும், அதிலிருந்து யானைவடிவம் உயிர்த்துத் தன்கையால் எடுத்து, மன்றாடி மலர்த்தாளின் கீழ் வைத்தது. அதனால் திருக்களிற்றுப் படியார் என்ற சிறப்புற்றது. (காலம் சகம் 1100 - கி. பி. 1177) இது திருவுந்தி யாரின் பொருளை இனிது விளக்கும் வழிநூலாக அமை கின்றது.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திருவுந்தியார் நூலினையும் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் நூலையும் இயற்றியவர் ஒரு குருசிஷ்யப் பரம்பரையினராம். திருவியலூர் உய்ய வந்த சந்தானம் என்பதாக ஒரு சந்தானம் இருந்ததை மேற்கூறப் பெற்ற இரண்டு நூல்களால் அறிய முடிகின்றது.