தாயுமானவர் வரலாறு
வேதாரண்யத்தில், 17-ம் நூற்றாண்டில், கேடிலியப்ப பிள்ளை – கஜவல்லியம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் முதல் மகனான சிவசிதம்பரத்தை, கேடிலியப்ப பிள்ளையின் அண்ணனுக்கு (வேதாரண்ய பிள்ளை) தத்துக் கொடுத்துவிட்டனர். அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பிள்ளைப்பேறு கிட்டவில்லை. கேடிலியப்ப பிள்ளை, தனியாக வாணிபம் செய்துவந்தபோதும், திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த இராணி மங்கம்மாளின் பெயரனான விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரிடம் பெருங்கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். இதனால், கணவனும் மனைவியும் அடிக்கடி திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமியை தரிசித்து வந்தனர். நாயக்க மன்னரின் விருப்பத்தின் பேரில் கேடிலியப்ப பிள்ளை குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளி வந்தார். ஈசன் அருளால், இவர்களுக்கு 1705-ல் தாயுமானவர் பிறந்தார்.
சிறுவயது முதலே இறை உணர்வுடன் வளர்ந்தார் தாயுமானவர். திருச்சிராப்பள்ளியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பல தேசிகரிடம் தமிழ் பயின்றார். சமஸ்கிருதம், கணித சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், தேவாரம், திருவாசகம், அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பல நாட்கள் சிவபெருமான் திருமுன்னர் கண்கள் நீர் மல்க நேரம் போவது தெரியாமல் இருப்பார். அவரது தந்தை கேடிலியப்பர் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார். தினமும் தாயுமான சுவாமியை தரிசித்தபடி இருந்த தாயுமானவர், சிவபெருமான் மீது எளிய பாடல்களைப் பாடத்தொடங்கினார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு சுவாமிகள், அப்பாடல்களைக் கேட்டு வியந்து தாயுமானவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். தாயுமானவரைத் தன்னருகே அமரச் செய்து அருட்கண்ணால் பார்த்தும் (சட்சுதீட்சை), காதில் (வாசக தீட்சை) மந்திர உபதேசமும் அருளினார்.
நாயக்க மன்னரின் பெருங்கணக்கராக இருந்த கேடிலியப்ப பிள்ளை, சிவபதம் அடைந்ததும், தாயுமானவரைப் பெருங்கணக்கராக நியமித்தார் மன்னர். தாயுமானவரின் பணியைப் பாராட்டி, விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைப் போர்த்திப் பாராட்டினார் மன்னர். தாயுமானவர், அரண்மனையிலிருந்து வீடு திரும்பும் வழியில், மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். உடனே தனக்கு மன்னர் போர்த்திய சால்வையை எடுத்து, மூதாட்டிக்குப் போர்த்துகிறார். மறுநாள் காலை, அரசாங்க முத்திரையுடன் கூடிய சால்வையை, மூதாட்டி போர்த்திக்கொண்டிருக்கும் செய்தி மன்னரை எட்டியது. இதுகுறித்து, தாயுமானவரிடம் வினவினார் மன்னர். அதற்கு தாயுமானவர், “என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு அந்த சால்வை தேவைப்பட்டதால் கொடுத்துவிட்டேன்” என்று பதிலளித்தார். துன்பத்திலுள்ளவரை, அம்பிகையாகக் கண்ட தாயுமானவரின் மனப்பக்குவத்தை உணர்ந்து, மன்னர் பாராட்டினார்.
மௌனகுரு சுவாமிகளிடம் இருந்து அனுபவ அறிவைப் பெற்றார் தாயுமானவர். மௌனகுரு சுவாமிகள் செய்கைகளால் செய்த உபதேசங்களை, நன்கு மனதில் பதித்துக்கொண்டார். ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு (பஞ்ச பூதங்கள்) எல்லாம் ‘நீயல்ல’ என்பதும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய அங்கங்கள் எல்லாம் ‘நீயல்ல’ என்பதும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவையும் ‘நீயல்ல’ என்பதும், ‘அறிவுதான் ‘நீ’ என்பதும் மனதில் வந்து சென்றன. மேலும், இவ்வுலகச் செயல்பாடுகளைக் கண்டு, உலகத்தைத் தோற்றுவித்து இயக்கிய ஒருவன் இருக்கிறான் என்பதையும், இல்லறம், துறவறம் இரண்டுமே பெரிதுதான் என்பதையும் உணர்ந்தார். உலக சுகங்கள் உவர்க்கின்றன, எச்சமயத்தில் யாருக்கு வாழ்க்கை நிறைவுபெறும் என்பது தெரியாது, அதனால் அதற்குள் இறைவனைச் சரணடைய வேண்டும் என்பதை மனதில் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, தாயுமானவரிடம் நிறைய சீடர்கள் வந்து சேர்ந்தனர். “முக்திக்கு எது வழி?” என்று சீடர்கள் கேட்டதற்கு, “ஞானம் ஒன்றுதான் முக்திக்கு வாசல். இந்த ஞானம், பல கலைகளைக் கற்பதால் வரக்கூடியது அல்ல. கலைஞானம் என்பது அபரஞானம். இது திருவருளால் கைகூடும். அனுபவ ஞானமே பரஞானம். அதுவே முக்திக்கு வழியைக் காட்டும்” என்று அருளினார் தாயுமானவர்.
நாயக்க மன்னர் இறைவனடி சேர்ந்ததும், ராணி மீனாட்சி பொறுப்பேற்று நிர்வாகம் செய்துவந்தார். அவரது நிர்வாகத்திலும் அரசு கணக்கராகப் பணியாற்றி வந்தார் தாயுமானவர். அரசுப் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இராமநாதபுரத்தில் தன் தமையனோடு இருந்தார். தமையனார் விரும்பியபடி, மௌனகுரு சுவாமிகளின் ஆசிகளுடன், ‘மட்டுவார் குழலி’ என்ற பெண்ணை மணந்தார் தாயுமானவர். சிலகாலம் கழித்து இத்தம்பதிக்கு கனகசபாபதி பிறந்தார். சிலகாலம் கழித்து, தாயுமானவரின் மனைவி சிவபதம் அடைந்தார். தாயுமானவர் குழந்தையுடன் தவித்ததைப் பார்த்த சிவசிதம்பரம், அக்குழந்தையை வளர்த்து வந்தார்.மௌனகுரு சுவாமிகளின் ஆசியோடு, துறவறம் மேற்கொள்ள எண்ணினார் தாயுமானவர். எளிய பாடல்களைப் பாடியபடி பல தலங்களை தரிசித்தார். 1736-ல் துறவறம் பூண்டார்.
தாயுமானவரும் சதாசிவ பிரம்மேந்திரரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர். தாயுமானவர், பல தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, நிறைவாக 1742-ல் (தை மாதம் விசாக நட்சத்திரம்) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் முக்தி அடைந்தார். பின்னாட்களில் அந்த இடத்தில் தாயுமானவருக்குச் சமாதி எழுப்பப்பட்டது.