logo

|

Home >

devotees >

sundaramurthi-nayanar-puranam

சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்

 

Sundaramurthi Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது



	இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரா
	னந்த மில்புக ழாலால சுந்தரன்
	சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
	வந்து பாடிய வண்ண முரைசெய்வோம்.

திருக்கைலாசமலையிலே பிரமவிட்டுணு முதலிய ஆன்மாக்களுக்கு நிக்கிரகாநுக்கிரகங்கள் செய்யும் பொருட்டுத் தமது சத்தியாகிய உமாதேவியாரோடும் எழுந்தருளியிருக்கின்ற அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவபெருமானுடைய அடியார் கூட்டத்துள் ஒருவராகிய ஆலாலசுந்தரர் ஒருநாள் பத்தர்கள் செய்யும் அருச்சனையை அவர்கள் முத்திபெற்று உய்யும்பொருட்டுக் கொண்டருளுகின்ற அக்கடவுளுக்குத் தரிக்கும்பொருட்டு புஷ்பங்களைக் கொய்வதற்குத் திருநந்தனவனத்துக்குப் போனார். போனபோது பார்வதிதேவியாருக்குத் தரிக்கும் பொருட்டு அந்தத் திருநந்தனவனத்திலே புஷ்பங்கொய்து கொண்டு நின்ற அவருடைய சேடியர்களாகிய அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய பெண்களிருவரையுங்கண்டு அவர்கள்மேல் ஆசைவைத்தார். அவர்களும் ஆலாலசுந்தரைக் கண்டு அவர்மேல் ஆசை கொண்டார். பின்பு ஒருபிரகாரம் மனசைத் திருப்பி, புஷ்பங்களைக்கொய்து கொண்டு, ஆலாலசுந்தரர் சிவசந்நிதானத்துக்கும், சேடியார்கள் தேவிசந்நிதானத்துக்கும் திரும்பி விட்டார்கள். அப்பொழுது, சர்வான்மாக்களிடத்திலும் வியாபித்திருந்து அந்த அந்த ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயங்களினாலே செய்கின்ற கர்மங்களை அறிந்து அந்தக் கர்மங்களுக்கு ஏற்ற பலங்களை ஊட்டி அக்கர்மங்களைத் தொலைப்பிக்கின்ற காருண்ணிய ஸ்வரூபியாகிய கடவுளானவர் ஆலாலசுந்தரரை நோக்கி "நீ பெண்கள்மேல் இச்சைக்கொண்டபடியால், தக்ஷிணபூமியிலே மானுடதேகம் எடுத்துப் பிறந்து அந்தப் பெண்களோடு புணர்ந்து இன்பம் அனுவிப்பாய்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக்கேட்ட ஆலாலசுந்தரர் மனங்கலங்கி, சந்நிதானத்திலே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, அஞ்சலியஸ்தராகி, "எம்பெருமானே! தேவரீருடைய அருமைத் திருவடிகளைப் பிரிதற்கு ஏதுவாகிய கொடும் பாவத்தைச் செய்தவனாகிய சிறியேன் மயக்கம் பொருந்திய மனிதப் பிறப்பை எடுத்து, செய்யவேண்டியது இன்னது என்றும் நீக்க வேண்டியது இன்னது என்றும் அறியாது, பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கும் போது, தேவரீர் வெளிப்பட்டு வந்து அடியேனைத் தடுத்து ஆட்கொண்டருளவேண்டும்" என்று பிரார்த்திக்க; வேண்டுவார் வேண்டியவைகளை ஈந்தருளுங் கடவுளும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.

பின்பு ஆலாலசுந்தரர், பூமியிலே புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, தமிழ் வழங்கும் நிலமாகிய தென்னாட்டைச் சேர்ந்த திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரென்னுந் திருப்பதியிலே, ஆதிசைவரென்னுஞ் சிவப்பிராமண குலத்திலே, சடையனாரென்னுஞ் சிவாசாரியாருக்கு அவருடைய மனைவியாராகிய கற்பிலே சிறந்த இசைஞானியார் என்பவரிடத்திலே, ஆன்மாக்கள் சைவசமயமே சற்சமயமென்று உணர்ந்து அதன் வழி ஒழுகி உய்யும்பொருட்டு, திருவவதாரஞ்செய்தருளினார். திருவவதாரஞ்செய்த அப்பிள்ளையாருக்கு நம்பியாரூரர் என்று நாமகரணஞ் செய்தார்கள். அப்பிள்ளையார் ஒரு நாள் வீதியிலே சிறுதேர் உருட்டி விளையாடும்போது, அந்தத் திருமுனைப்பாடி நாட்டுக்கு அரசராகிய நரசிங்கமுனையரென்பவர் அப்பிள்ளையாரைக்கண்டு, அவர்மேல் ஆசைமிகுந்து, அவருடைய தந்தையாராகிய சடையனாரிடத்துப் போய், "இந்தப் பிள்ளையை எனக்குத் தாரும்" என்று கேட்டுப் பெற்றுக் கொண்டு போய், அவரை அபிமானபுத்திரராகப் பாவித்து வளர்த்தார். அந்தப் பிள்ளையார் அரசரால் வளர்க்கப்படினும், தமது பிராமண வருணத்திற்கு உரிய ஒழுக்கத்தியே உடையவராகி வளர்த்து உரிய காலத்திலே உபநயனஞ் செய்யப்பெற்று, வேதங்களை அத்தியயனஞ் செய்து சகல கலைகளிலும் மகா பாண்டித்திய முடையவராய், விவாகஞ் செய்தற்கு உரிய பருவத்தை அடைந்தார்.

அதுகண்டு தந்தையாராகிய சடையனார், ஆதிசைவ குலத்திலே தம்முடைய கொள்கைக்கு ஏற்பப் பந்துவாய்ப்புத்தூரில் இருக்கின்ற சடங்கவி சிவாசாரியரிடத்திலே அவருடைய புத்திரிக்கும் தம்முடைய புத்தரருக்கும் விவாகம் பேசிவரும் பொருட்டு, சில முதியோர்களை அனுப்பினார். அவர்கள் சடங்கவி சிவாசாரியாரிடத்திற் போய்ப் பேசி, அவர் உடன்பட்டது கண்டு, சடையனாரிடத்துக்குத் திரும்பிப்போய்த் தெரிவித்தார்கள். அப்பொழுது சடையனார் மகிழ்ச்சி கொண்டு, விவாகத்துக்குச் சுபதினமுஞ் சுபமுகூர்த்தமும் நிச்சயித்து, தம்முடைய ஞாதிகள், சிநேகர்கள், யாவரையும், விவாகபத்திரம் அனுப்பி அழைப்பித்தார். பின்பு நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திநாயனார் விவாக தினத்துக்கு முதற்றினத்திலே சமாவர்த்தனம் பண்ணி ரக்ஷாபந்தனஞ்செய்து, மற்றநாள் நித்தியகருமங்களை முடித்துக் கொண்டு, திருமணக்கோலங்கொண்டு, குதிரைமேல் ஏறி, மகாலங்காரத்தோடு புத்தூரிலே சடங்கவி சிவாசாரியர் வீட்டிலே திருக்கல்யாணப்பந்தருக்கு முன் சென்று, குதிரையினின்றும் இறங்கி, உள்ளே போய் ஆசனத்தில் இருந்தார்.

அப்பொழுது ஊரும் பேரும் உருவும் இல்லாதவராயினும் ஆன்மாக்களுக்கு வினைவயத்தால் வந்த ஊரையும் பேரையும் உருவையும் இருவினையொப்பாகிய பக்குவகாலத்திலே ஒழிக்கும் பொருட்டு அருள்வயத்தால் ஊரும் பேரும் உருவுங் கொண்டருளுகின்ற சிவபெருமான், தாந்திருக்கைலாசத்திலே சுந்தரமூர்த்திக்கு வாக்குத்தத்தம் பண்ணிய பிரகாரம் அவரைப் பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கவிடாமல் தடுத்து ஆட்கொண்டருளும் பொருட்டு ஒரு வயோதிகப் பிராமண வடிவங்கொண்டு, அவ்விடத்திலே எழுந்தருளிவந்து நின்று, "இவ்விடத்தில் இருக்குன்ற எல்லீர்களும் நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேளுங்கள்" என்று சொல்லியருளினார். அப்படிச் சொல்லிய அந்த ஐயரை விவாகஞ் செய்யத் தொடங்கும் நம்பியாரூரரும் அங்கிருக்கின்ற மற்றப் பிராமணர்களும் பார்த்து, "இவ்விடத்திலே நீர்சொல்ல விரும்பியதைச் சொல்லும்" என்றார்கள். அதைக்கேட்ட ஐயர் நம்பியாரூரரை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு இருக்கின்றது. அதை முடித்துக்கொண்டு உன்னுடைய விவாகத்தை நடத்து" என்று அருளிச்செய்தார். நம்பியாரூரர் உமக்கும் எனக்கும் ஒரு வழக்கு உளதாயின், அதை முடித்தன்றி நான் விவாகஞ்செய்யேன். நீர் அவ்வழக்கு இன்னதெனத் தெரியும்படி சொல்லும்" என்று கேட்க; அந்த ஐயர் பிராமணர்களைப் பார்த்து, "இந்தத் திருநாவலூரனாகிய நம்பியாரூரன் எனக்கு அடியவன் என்று சொல்லியருளினார். அதைக் கேட்ட நம்பியாரூரர் "இந்த ஐயர் சொன்ன வார்த்தை நன்றாயிருக்கின்றது" என்று இகழ்ச்சியாகச் சொல்லிச் சிரிக்க; பிராமண வேடங்கொண்ட கடவுள் அவருக்குச் சமீபத்திலே போய், "அக்காலத்திலே உன்னுடைய பாட்டன் எனக்கு எழுதித்தந்த அடிமையோலை இதுவே. அப்படியிருக்க, இந்தக் காரியத்தைக் குறித்து நீ பரிகாசம் பண்ணியது என்ன" என்றார். உடனே நம்பியாரூரர் ஐயரைப் பார்த்து, "பிராமணருக்கு பிராமணர் அடிமையாதல் இன்றைக்கு நீயே சொல்லக் கேட்டோம். நீ பித்தனோ" என்று சொல்ல; ஐயர் "நான் பித்தனானாலும் ஆகுக. பேயனானாலும் ஆகுக. நீ இப்போது எத்தனை வசைமொழிகளைச் சொன்னாய். அவைகளினால் நான் சிறியதாயினும் வெட்கம் அடையேன். நீ என்னைச் சிறிதும் அறிந்திலை. இப்படி நின்று விளையாட்டுமொழிகள் பேச வேண்டாம். அடிமைத் தொழில் செய்ய வா" என்றார். அப்பொழுது நம்பியாரூரர் "இவர் அடிமையோலை ஒன்று உண்டென்றாரே. அதின் உண்மையை அறியவேண்டும்" என்று நினைந்து, "ஐயரே! உம்முடைய ஓலையைக்காட்டும்" என்று சொல்ல; ஐயர் "நீ இந்த ஓலையைப் பார்த்து நிச்சயிக்கத் தக்கவனோ? நான் இந்தச் சபையாருக்கு ஓலையைக்காட்டி மெய்யென்று அங்கீகாரஞ் செய்வித்தபின், எனக்கு ஊழியஞ்செய்தற்கு மாத்திரம் தக்கவன்" என்றார். அது கேட்ட நம்பியாரூரர் கோபங்கொண்டு, அவர் கையில் இருக்கும் ஓலையைப் பறிக்கும்படி அவருக்கு எதிரே விரைந்து சென்ற போது, அவர் ஓடத் தாமும் ஓடி, அவரைப் பின்றொடர்ந்து பிடித்து, ஓலையைப்பறித்து, "பிராமணர்கள் அடிமையாய் ஊழியஞ்செய்தல் என்னமுறை" என்று சொல்லிக் கிழிக்க; ஐயர் சுந்தரமூர்த்தியைப் பிடித்துக்கொண்டு, ஒருதரம் "இது முறையோ" என்று சத்தமிட, சமீபத்தில் நின்றவர்கள் அவ்விருவரையும் விலக்கி, "உலகத்திலே ஒருகாலமும் நடந்திராத ஏற்பாட்டைக் கொண்டு வழக்காடுகின்ற பிராமணரே! நீர் எங்கே இருக்கின்றவர்? சொல்லும்" என்றார்கள்., அதற்கு ஐயர் "நான் இந்தத் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறவன். அது நிற்க இந்த நம்பியாரூரன் தருமவழிக்கு விரோதமாக வலாற்காரம் பண்ணி என்கையில் ஓலையைப் பறித்துக் கிழித்தலினாலே, தான் எனக்கு அடியவன் என்றதை ஸ்திரப்படுத்தினான்" என்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் "நீர் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறவராகில், இந்த வழக்கை அங்கே தானே பேசித் தீர்ப்புச் செய்ய வாரும்" என்று சொல்ல; ஐயர் அதைக்கேட்டு "திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பிராமணர்களுக்கு முன்னே ஆதியில் எழுதப்பட்ட மூலவோலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதைச் சாதிப்பேன்" என்று சொல்லி, தண்டை ஊன்றிக் கொண்டு முன்னே நடந்தார். சுந்தரமூர்த்தியும் மற்றப் பிராமணர்களும் பின்னாகப்போனார்கள்.

ஐயர் தமக்குப் பின்வந்த சுந்தரமூர்த்தியோடும் மற்றப் பிராமணர்களோடும் திருவெண்ணெய் நல்லூரை அடைந்து, அங்கு இருக்கின்ற பிராமணர்களுடைய சபையிலேபோய், அவர்களை நோக்கி, "அறிவால் அமைந்த பெரியோர்களே! திருநாவலூரில் இருக்கின்ற ஆரூரனானவன் நான் நீ எனக்கு அடிமையென்று காண்பித்த ஓலையைக் கிழித்துவிட்டு உங்களிடத்துக்கு வந்திருக்கின்றான்" என்று சொல்லி முறைப்பாடு செய்தார், அந்த அபியோகத்தைக் கேட்ட பிராமணர்கள் அவரைப் பார்த்து, "பிராமணர்கள் அடிமையாதல் இவ்வுலகத்திலே இதுவரையிலும் இல்லை ஐயரே! நீர் என்ன தப்புவார்த்தை சொன்னீர்" என்று சொல்ல; ஐயர் "நான் பொய்வழக்கு கொண்டுவரவில்லை மெய்வழக்கே கொண்டு வந்தேன். இவன் பறித்துக்கிழித்த ஓலை இவன் பாட்டன் தானும் தன் மரபினரும் எனக்கு அடிமையென்று எழுதித் தந்த அடிமையோலை" என்றார். உடனே பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இவர் உம்முடைய பாட்டன் அடிமைசெய்தற்கு இசைந்து எழுதிக்கொடுத்த ஓலையைக் காட்டினாராகில். நீர் அதைப் பறித்துக் கிழித்ததனால் உம்முடைய பக்ஷம் ஐயம்பெறுமோ! இவர் தம்முடைய வழக்கை யாவரும் அங்கீகரிக்கும்படி சொன்னார். இனி உம்முடைய எண்ணம் யாது" என்றார்கள். அதற்குச் சுந்தரமூர்த்தி "வேதாகமம் முதலாகிய சமஸ்தசாஸ்திரங்களையும் உணர்ந்த மகான்களே! நான் ஆதிசைவன் என்பது உங்கள் எல்லாருக்குந் தெரியும். அப்படியிருக்க, இந்தப் பிராமணர் தமக்கு என்னை அடிமையென்று சாதித்தாராகில் இது மனசினால் அறிதல் கூடாத ஒரு மாயையென்று நினைக்க வேண்டும். இதைக்குறித்து நான் யாது செய்வேன்! இது என்னால் அறியப்படுதல் கூடாது" என்று சொல்ல; பிராமணர்கள் கேட்டு, அந்த ஐயரைப்பார்த்து, "நீர் இவரை உம்முடைய அடிமை என்று சொல்லுகின்ற விவகாரத்தை எங்களுக்கு முன் உறுதிப்படுத்துதல் வேண்டும். ஒருவிவகாரத்தை உண்மையென்று நிச்சயிப்பதற்கு, அனுபவம், லிகிதம், சாக்ஷி யென்கின்ற மூன்றும் வேண்டும். இந்த ஆரூரர் உமக்கு அடிமையென்பதற்கு அம்மூன்றில் ஒன்றாயினும் காட்டும்" என்றார்கள். அப்பொழுது ஐயர் "இவன் கிழித்த ஓலை மூல ஓலையைப் பார்த்து எழுதிய படியோலை. மூலவோலையோ என்னிடத்தில் இருக்கின்றது" என்று சொன்னார். உடனே பிராமணர்கள் "அதை எங்களுக்குக் காட்டும்" என்று சொல்ல; ஐயர் "ஆரூரான் அதையும் பறித்துக் கிழியாதபடி செய்வீர்களாயின், அதைக்காட்டுவேன்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "நாங்கள் கிழிக்க விடோம்" என்று சொல்ல; ஐயர் மூல வோலையை கையில் எடுத்தார். அப்பொழுது சபையாருடைய கட்டளையினால் ஒரு கரணன் அவரைக் கும்பிட்டு அந்த ஓலையை வாங்கி, சுருளாயிருக்கின்ற மடிப்பை நீக்கி, விரித்து, சபையார் கேட்கும்படி, "திருநாவலூரில் இருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித்தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு ஆரூரன்" என்று வாசித்தான். பின்பு அந்த ஓலையிலே சாட்சிகளாகக் கையெழுத்து இட்டவர்கள் தங்கள் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டார்கள். அதைக் கண்ட பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இது உம்முடைய பாட்டனுடைய எழுத்தோ! பாரும்" என்று சொல்ல; ஐயர் அவர்களைப் பார்த்து, "இந்தச் சிறுவன் அடிமையோலையில் எழுதப்பட்டிருக்கின்ற தன் பாட்டன் கையெழுத்தைக் கண்டறியச் சக்தியுள்ளவனோ? இவன் பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்து உண்டாகில், வருவித்து இதனுடன் ஒத்துப் பார்த்து, உங்கள் மனசிலே தோன்றிய தீர்ப்பை சொல்லுங்கள்" என்றார். அதைக் கேட்ட பிராமணர்கள், சந்தேகந்தெளியும்படி, சுந்தரமூர்த்தி சமூகத்திலே அவர் பாட்டனார் எழுதிய கைச்சாத்து ஒன்று அழைப்பித்து, அதில் எழுத்தையும் அடிமையோலையின் எழுத்தையும் ஒத்துப்பார்த்து, "இவ்விரண்டும் ஒத்திருக்கின்றன இனி நீர் தப்ப வழி இல்லை. நீர் இந்தப் பிராமணருக்குத் தோற்றுப்போனீர். ஆதலால், அவர் கருத்தின்படி அவருக்கு ஏவல் செய்வதே கடன்" என்று சொல்ல; சுந்தரமூர்த்தி "விதிமுறை இதுவே யானால், நான் இதற்கு உடன்படாதிருத்தல் கூடுமோ" என்று சொல்லி நின்றார். அப்பொழுது பிராமணர்கள் அந்த ஐயரைப் பார்த்து, "நீர் காட்டிய அடிமையோலையிலே எங்கள் ஊரே உம்முடைய ஊராக எழுதப்பட்டிருக்கின்றது. ஆதலால், உமக்கு இவ்வூரிலே தலைமுறையாக இருக்கின்ற வீடும் ஸ்திதியும் காட்டும்" என்று சொல்ல; பிராமண வடிவங்கொண்ட கடவுள் "இத்தனை விருத்தர்களில் ஒருவரும் என்னுடைய வீடு முதலியவற்றை அறியாதிருப்பீரானால், காட்டுகிறேன். வாருங்கள்" என்று சொல்லி சுந்தரமூர்த்தியும் பிராமணர்களும் பின்னே வர தாம் அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை என்னும் சிவாலயத்தினுள்ளே போனார். பின்பு சபையார் அவரைக்காணாது திகைத்து நின்றார்கள்.

அப்பொழுது சுந்தரமூர்த்திநாயனார் "என்னை அடிமை கொண்ட பிராமணர் நமது கடவுளாகிய சிவபெருமான் வீற்றிருக்குந் திருக்கோயிலினுள்ளே புகுந்தது என்ன ஆச்சரியம்" என்று நினைத்து, அத்தியந்த ஆசையோடும் தனியே அவரைத் தொடர்ந்துபோய் கூப்பிட; சிவபெருமான் தரும வடிவாகிய இடபவாகனத்தின்மேலே பார்வதி சமேதராய் வெளிப்பட்டு, சுந்தரமூர்த்திக்கு, "நீ முன்னே நமக்குத் தொண்டனாய் இருந்தாய். நீ பெண்கள்மேல் இச்சை வைத்ததினால் நம்முடைய ஆஞ்ஞையினாலே பூமியிலே பிறந்தாய், இப்பொழுது துன்பத்தைத் தருகின்ற சமுசாரபந்தமானது உன்னைத் தொடராதபடி, நாமே வலியவந்து உன்னைத்தடுத்து ஆட்கொண்டோம்" என்று திருவாய்மலர்ந்தருளினார். இந்தப் பிரகாரமாக எழுந்த அருமைத் திருவாக்கைக் கேட்டு, சுந்தர மூர்த்தியானவர், தன்னை ஈன்ற பசுவினது குரலைக்கேட்ட கன்றுபோல அலறி, சரீர முழுதும் உரோமப்புளகங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்தவருவி பொழிய, அடியற்ற மரம் போல நிலத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, இரண்டுகைகளையும் சிரசின்மேல் ஏறக் குவித்து, "கனகசபையிலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்தொழிலாகிய திருநடனத்தைச் செய்தருளுகின்ற சுவாமி. தேவரீர் ஒன்றுக்கும் பற்றாத சிறியேனை மார்ச்சார சம்பந்தம் போல வலியவந்து தடுத்தாட்கொண்ட காருண்ணிய மகிமை இருந்தபடி என்னென்று சொல்லுவேன்" என்றார். அப்பொழுது தம்மாற் செய்யப்படும் கிருத்தியங்கள் ஒவ்வொன்றையும் தம்பயன் கருதாது பிறர் பயன் கருதியே செய்கின்ற பரம சிவனானவர், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தாமே மெய்ப் பொருளென்று உணர்ந்து தம்மை வழிபட்டு மும்மலத்தடைகளையும் நீங்கிப் பேரின்பம் பெற்று அனுபவிக்கவேண்டும் என்று தமது திருவுளத்திலே முகிழ்த்த பெருங்கருணையினாலே, சுந்தரமூர்த்தி நாயனாரை நோக்கி "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம். ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு" என்று அருளிச்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் அஞ்சலியஸ்தராகி, "தேவரீர் பிராமண வடவங்கொண்டு தமியேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமையை அறியாத சிறியேனுக்குப் பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையிலே மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் தேவரீருடைய அநந்த குணங்களில் எதையறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்" என்றார். அதற்கு கடவுள் "நீ முன்னே என்னைப் பித்தனென்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தனென்றே பாடு" என்று சொல்லியருள; சுந்தரமூர்த்தியானவர் தம்மை ஆண்டருளிய பரமசிவன் மேல் "பித்தாபிறைசூடீ" என்னுஞ் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடியருளினார். அதன்பின் கடவுளானவர் சுந்தரமூர்த்திநாயனாரை நோக்கி "தொண்டனே! நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பல வகையாகப் பாடு" என்று அருளிச்செய்து, அந்தர்த்தானமாயினார். அது நிற்க. புத்தூரில் இருக்கின்ற சடங்கவி சிவாசாரியாருடைய புத்திரியாரோவெனில், கலியானந் தவிர்ந்ததினாலே சுந்தரமூர்த்திநாயனாரையே தியானஞ் செய்துகொண்டிருந்து சில காலத்தின்பின் சிவலோகப் பிராப்தியானார்.

சுந்தரமூர்த்தி நாயனார், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள திருவருட்டுறை யென்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற கடவுளானவர் தம்மை ஆட்கொண்டபின்பு, திருநாவலூருக்கும் திருத்துறையூருக்கும் போய்த் திருப்பதிகம் பாடி, சிதம்பரத்திலே திருநடனஞ் செய்கின்ற சபாநாயகரைத் தரிசிக்க விரும்பி, பெண்ணைநதியைக் கடந்த, அஸ்தமயன காலத்திலே திருவதிகையென்னுந் தலத்தினெல்லையிலே போய், "திருநாவுக்கரசு நாயனார் உழவாரத்தினாலே நமது சிவபெருமானுக்குக் கைத்தொண்டு செய்த இந்த ஸ்தலத்திலே கான்மிதிக்க அஞ்சுகின்றேன்" என்று சொல்லி, அதற்கு உள்ளே போகாமல் சமீபத்திலிருந்த சித்தவடமடத்திற்குப் போய், திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் கடவுளுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டு நித்திரை செய்தார். நித்திரை செய்யும் பொழுது, வீரட்டானேசுரர் ஒருவிருத்தப் பிராமணராகி அம்மடத்தினுள்ளே புகுந்து, சுந்தரமூர்த்தி நாயனாருடைய சிரசின்மேல் பாதங்களைவைத்து, நித்திரை செய்பவர்போலக் காட்டியருளினார். அப்பொழுது சுந்தரமூர்த்தி விழித்து "ஐயரே! ஏன் உம்முடைய பாதத்தை என்சிரசின் மேல் வைத்தீர்" என்று சொல்ல; ஐயர் "என்னுடைய மூப்பினாலே நீர் தலைவைத்திருக்கும் திசையை அறியாமல் அப்படிச் செய்துப் போட்டேன்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதற்கு ஒத்துக்கொண்டு, தம்முடைய சிரசை வேறொருதிக்கில் வைத்துக்கொண்டு நித்திரைச் செய்தார். எம்பெருமான் அவ்விடத்திலும் சென்று சுந்தரமூர்த்தியுடைய சிரசின்மேலே பின்னும் தம்முடைய பாதத்தை நீட்ட; சுந்தரமூர்த்தி "இங்கே என்னைப் பலமுறை மிதித்த நீர் யாவர்" என்று கேட்டார். உடனே சிவபெருமான் "என்னை நீ அறியாயா" என்று சொல்லி மறைந்தருளினார். அது கண்டு சுந்தரமூர்த்திநாயனார் தம்மை மிதித்தவர் கடவுளென்று அறிந்து, "தமியேன் இறுமாப்படைந்து ஆண்டவரை அறியாமல் என்ன செய்தேன்" என்று சொல்லி, வீரட்டானேசுரர்மேல் "தம்மானை யறியாத சாதியாருளரே" என்னும் திருப்பதிகம் பாடினார்.

பின்பு, அத்திருவதிகைக்குத் தென்புறத்தில் இருக்கும் திருக்கெடில நதியிலே ஸ்நானஞ்செய்து, அந்த நதியின் தென்கரையிற் சென்று, திருமாணிக்குழியை அடைந்து தரிசித்துக் கொண்டு, திருத்தினைநகருக்குப் போய்த் திருப்பதிகம்பாடி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்து, அவ்வெல்லையை வணங்கி, ஊரினுள்ளே போய், ஸ்தூலலிங்கமாகிய கோபுரத்தைக் கண்டு, நிலத்திலே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, எழுந்து இரண்டு திருக்கரங்களையும் சிரமீது குவித்துக் கொண்டு திருக்கோயிலினுள்ளே போய், கனகசபையிலே ஆனந்த தாண்டவஞ் செய்தருளுகின்ற, சபாநாயகரைத் தரிசித்து, அக்கினியிற்பட்ட மெழுகு போலக் கசிந்து உருகி, ஆனந்த பாஷ்பஞ் சொரிய விழுந்து நமஸ்காரஞ் செய்து, எழுந்து நின்று எல்லையில்லாத பேரின்பசாகரத்திலே அமிழ்ந்தி, இரண்டு கைகளையும் சிரசின் மேலே குவித்து, திருப்பதிகம் பாடித் துதித்தார்.

அதன்பின், சபாநாயகருடைய திருவருளினால், "நீ திருவாரூரிலே நம்மிடத்துக்கு வா" என்று ஆகாயத்தில் எழுந்த அசரீரி வாக்கைகேட்டு, அந்தக் கட்டளையைச் சிரசின்மேல் வகித்து, கனகசபையைப் பிரதக்ஷிணஞ் செய்து வணங்கிச் சென்று கோபுரத்தைக் கடந்து, புறத்திலே நின்று அக்கோபுரத்தை நமஸ்கரித்து, திருவீதியைத் தொழுது, தெற்குவாயிலைக் கடந்து, அப்புறஞ்சென்று அந்த ஸ்தலத்தின் எல்லையை வணங்கி, கொள்ளிடம் என்கின்ற திருநதியைத் தாண்டி, சீர்காழிக்குச் சமீபித்தார், அந்தச் சீர்காழி திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருவவதாரஞ் செய்தருளிய ஸ்தலமாதலால் அதனுள்ளே மிதிக்கலாகா தென்று நினைந்து, அதன் புறவெல்லையை வணங்கிப் பிரதக்ஷிணஞ் செய்யும்பொழுது, பரமசிவன் காட்சி கொடுத்தருள அதுகண்டு, "சாதலும் பிறத்தலுந் தவிர்த்து" என்று திருப்பதிகம் எடுத்து திருப்பாட்டினிறுதிதோறும் "கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே" என்று பாடினார். அதன்பின் திருக்கோலக்காவுக்கும், திருப்புன்கூருக்கும் போய்த் திருப்பதிகம்பாடி, காவேரி நதியின் கரையை அடைந்து, அதில் ஸ்நானம் பண்ணி மாயூரத்துக்கும், அம்பர்மாகாளத்துக்கும், திருப்புகலூருக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு, பின் திருவாரூருக்குச் சமீபித்தார்.

உடனே வன்மீகநாதர் திருவாரூரில் வாழ்பவர்க ளெல்லாருக்கும் "நம்முடைய அடியானாகிய நம்பியாரூரன் நாம் அழைக்க வருகின்றான். நீங்கள் அவனை எதிர்கொள்ளக் கடவீர்கள்" என்று பணித்தருள; அவர்களெல்லாரும் ஆச்சரியங் கொண்டு மனமகிழ்ந்து, வீதிகளெல்லாவற்றையும் மிகவலங்கரித்து, நானாவித வாத்தியங்கள் ஒலிக்க, திருமதில் வாயிற் புறத்துவந்து, சுந்தரமூர்த்திநாயனாரை எதிர்கொண்டு வணங்கினார்கள். சுந்தரமூர்த்திநாயனார் அவர்களெதிரே அஞ்சலி கூப்பி வந்து, திருவீதியிற் செல்லும்பொழுது அவர்களை நோக்கிக் "கரையுங் கடலும்" என்றெடுத்து"எந்தையிருப்பது மாரூரவ ரெம்மையு மாள்வரோ கேளீர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு, திருக்கோயிற்றிருவாயிலை அணுகினார். அணுகியவுடனே திருவாயிலை நமஸ்கரித்து எழுந்து சென்று, தேவாசிரயமண்டபத்தை வணங்கி, சிரசின் மீது குவித்தகைகளோடும் திருமூலட்டானத்தைச் சூழ்ந்த திருமாளிகைவாயிலிற் புகுந்து, வன்மீகநாதரை வணங்கிப் பேரானந்தப் பெருங்கடலின் மூழ்கி நின்று, திருப்பதிகம் பாடினார். அப்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் கேட்கும்படி, வன்மீகநாதருடைய திருவருளினாலே, "நாம் உனக்குத் தோழரானோம். முன்னே நாம் உன்னை ஆட்கொண்ட விவாக காலத்திலே நீ கொண்ட மணக்கோலத்தை எப்பொழுதும் கொண்டு பூமியின்மேல் விளையாடுவாய்" என்று ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. அதுகேட்ட சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை வணங்கித் துதித்து, "அடியேனைத் தடுத்தாட்கொண்டருளிய பரம கருணாநிதியே! திருவாரூரமர்ந்த அருமணியே! நாயினேனைப் பொருளாகக் கொண்டு இங்ஙனந் திருவாய்மலர்ந்தருளியது உமது பெரும்கருணை யன்றோ" என்று விண்ணப்பஞ் செய்து, பலமுறை வணங்கி உள்ளக்களிப்பினோடும் நடந்து, தியாகேசர் சந்நிதியை அடைந்து வணங்கி துதித்துத் திருமாளிகையை வலஞ் செய்து கொண்டு வெளியேபோனார். அன்று முதற்கொண்டு அடியார்கள் எல்லாரும், சுந்தரமூர்த்தி நாயனாரைத்தம்பிரான்றோழர் என்று சொல்லிக் கொண்டார்கள். சுந்தரமூர்த்திநாயனார் மகாலங்காரம் பொருந்திய திருக்கோலத்தை யுடையவராய், வன்மீகநாதரைத் தினந்தோறும் போய்த் தரிசித்து வந்தார்.

இதற்கு முன்னே, திருக்கைலாசகிரியில் இருந்த பார்வதி தேவியாருடைய சேடியர்கள் இருவருள் ஒருவராகிய கமலினி என்பவர், அந்தத் திருவாரூரிலே, உருத்திர கணிகையர் குலத்திலே பிறந்து, பரவையார் என்னும் பெயரைப் பெற்று, மங்கைப் பருவம் அடைந்திருந்தார். அவரும் தினந்தோரும் பாங்கிமாரோடு திருக்கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணி வருவார்.

அந்தப் பரவையார் ஒருநாள் சுவாமி தரிசனம் பண்ணப் போகும்போது, அப்படியே சுவாமி தரிசனம் பண்ணும் பொருட்டுப் பரிசனங்களோடுசென்ற சுந்தரமூர்த்திநாயனார், திருவருள் கூட்ட அந்தப் பரவையாரைக் கண்டு ஆசை கொண்டு நின்றார். பரவையாரும் சுந்தரமூர்த்திநாயனாரைக் கண்டு ஆசைக்கொண்டு, பின் சுவாமி தரிசனம் பண்ண வேண்டும் என்னும் விருப்பமானது தம்மை அவ்வாசையினின்றும் நீக்கித் தன்வசமாக்கிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே செலுத்தச் சென்றார். சுந்தரமூர்த்தி நாயனார் அது கண்டு, "என் மனசைக் கவர்ந்துச் சென்ற அதிசௌந்தரியமுள்ள இந்தப் பெண் யார்" என்று வினாவ; அங்கு நின்றவர்கள் "இவர் உருத்திர கணிகையரில் ஒருவர். இவர் பெயர் பரவையார்" என்றார்கள் அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனாரோ திருக்கோயிலினுள்ளே போனார். அதற்குமுன் பரவையார் பிரதக்ஷிணஞ் செய்த சுவாமியை நமஸ்காரம் பண்ணித் துதித்துக் கொண்டு சந்நிதியினின்றும் புறப்பட்டார். சுந்தரமூர்த்திநாயனார் சுவாமி சந்நிதானத்திற் சென்று, பரவையார் மீது வைத்திருந்த பேராசையால் அவரைச் சேரவேண்டிச் சுவாமியினது திருவடிகளை வணங்கிக் கொண்டு, புறப்பட்டு, பரவையாரைத்தேடி தேவாசிரயன் என்னும் பெயரையுடைய ஆயிரக்கான் மண்டபத்தை அடைந்து, "வன்மீகநாதர் பரவையாரை எனக்குத் தந்தருளுவார்" என்று நினைத்துக்கொண்டு, அங்கு இருக்க; சூரியன் அஸ்தமயனமாயிற்று. அது நிற்க.

முன்னே சுவாமிதரிசனஞ்செய்து கொண்டு புறப்பட்ட பரவையார், சுந்தரமூர்த்தியிடத்தில், தனியே சென்ற தமது மனசை ஒருவகையாக வலிந்து தம்வசப்படுத்தி, அதிக மயக்கத்தோடு தமது மாளிகையை அடைந்து, பூவணையில் இருந்து, தம்மருகிருந்த பாங்கியை நோக்கி நாம் சுவாமி தரிசனம் செய்யப் போனபோது வழியில் எதிராக வந்தவர் யாவர் என்று கேட்க; அவள் அவர் பிரமவிஷ்ணுக்களும் தேடியறியாத சமானாதீதராகிய கடவுளே வலியவந்து ஆட்கொள்ளப் பெற்ற ஆதிசைவராகிய சுந்தரமூர்த்திநாயனார் என்றாள். அது கேட்ட பரவையார் "நமது ஆண்டவருக்கு உரிய அடியவரோ" என்று சொல்லி, சுந்தரமூர்த்தி நாயனார் மேல் முன் வைத்த ஆசை மேன்மேலும் வளர, சயனத்தின் மேல் விழுந்து புலம்பினார். அப்பொழுது கடவுளானவர், பரவையாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் விவாகஞ் செய்து கொடுக்கும்படி அடியார்களுக்குக் கட்டளையிட்டு, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் சென்று, "உனக்குப் பரவையை விவாகம் செய்து தரும்படி நம்முடைய அடியார்களுக்கு ஆஞ்ஞாபித்தோம்" என்று அருளிச் செய்து, பரவையாரிடத்திலும் போய், "உனக்கும் சுந்தரனுக்கும் விவாகம் நடக்கும்" என்று சொல்லியருளினார். மற்ற நாள் உதயகாலத்திலே சிவபத்தர்கள் எல்லாரும் கூடி வந்து, சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரவையாரை விதிப்படி விவாகஞ் செய்து கொடுத்தார்கள்.

சுந்தரமூர்த்திநாயனார் பரவையாரோடு கூடி வாழ்ந்திருக்குங் காலத்தில், ஒருநாள் திருக்கோயிலை அடைந்தபோது தேவாசிரய மண்டபத்திலே சிவனடியார்கள் கூடியிருந்ததைக் கண்டு, அவர் கண்மேலே பத்திமிகுந்து, "இவர்களூக்கு நான் அடியனாகும் நாள் எந்நாள்" என்று நினைத்துக்கொண்டு, சுவாமிதரிசணஞ் செய்வதற்குத் திருக்கோயிலினுள்ளே போனார். அப்பொழுது அடியார்க்கு அடியனாக வேண்டுமென்று அவர் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் பொருட்டு, சுவாமி அவருக்குக் காட்சி கொடுத்தருளி, "நீ நம்முடைய அடியார்களை வணங்கி அவர் கண்மேலே பதிகம் பாடு" என்றருளிச்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கி நின்று, "சுவாமி, அடியார்களுடைய வரலாறு இன்னது என்றும் அவர்கள் தன்மை இப்படிப்பட்டது என்றும் அறியாத தமியேன் எப்படிப் பாடுவேன்? அவர்களைக் குறித்துப் பாடுஞ் சத்தியைச் சர்வஞ்ஞத்துவம் உடைய தேவரீரே அடியேனுக்கு அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்தித்தார். சுவாமி அதற்கிசைந்து, அடியார்களுடைய வழித்தொண்டு, அவருக்குத் தெரியும்படிச் செய்து, உலகத்தார் உய்யும் வண்ணம் வேதாகமங்களை அருளிச் செய்த தமது அருமைத் திருவாக்கினாலே "தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று அடியெடுத்துக்கொடுத்து மறைந்தருளினார். அது கண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் புறப்பட்டுத் தேவாசிரய மண்டபத்தை அடைந்து, அடியார் திருக்கூட்டத்தை பலமுறை வணங்கி அந்த அடியார்கள் யாவர்க்கும் வெவ்வேறாக அடியேன் என்று திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகம்பாடி அவர்களை வணங்கினார்.

சுந்தரமூர்த்திநாயனார் திருவாரூரிலே தினந்தோறும் திரிகாலத்திலும் அன்பினோடு சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு பரவையாரோடு வாழ்ந்திருக்கும் காலத்திலே, வேளாளராகிய குண்டையூர்க்கிழார் என்பவர் அவருடைய மகிமையை கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை அடைந்து, அன்பினோடு வழிபடுவாராயினார். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவையாருடைய வீட்டுக்கு நெல்லும் பருப்பும் பிற பதார்த்தங்களும் நெடுங்காலம் தவறாமல் அனுப்பி வந்தார். அப்படி அனுப்பி வருங்காலத்திலே, மழையில்லாமையால் வளம் சுருங்க, ஒரு நாள் குண்டையூர்க்கிழார் நெல்லுப்போதாமைக் கண்டு, வருத்தமுற்று "சுந்தரமூர்த்திநாயனார் திருமாளிகைக்கு அனுப்புவதற்கு இன்று நெல்லு போதாதே! ஐயோ! இதற்கு என்ன செய்வேன்" என்று நினைந்து, பெருங்கவலை கொண்டு; போசனம்பண்ணாமல் அன்றிரவு நித்திரைக் கொண்டார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குச் சொப்பனாவத்தையிலே தோன்றி, "சுந்தரனுக்கு அனுப்பும்படி உனக்கு நெல்லுத் தந்தோம்" என்று சொல்லியருளி, பின் குபேரனுக்கு ஆஞ்ஞாபிக்க, அந்தக் குண்டையூர் முழுதிலும் நென்மலையானது ஆகாயமும் மறையும் வண்ணம் நிறைந்து ஓங்கியது. அன்றிரவு விடியும் போது குண்டையூர்க் கிழார் விழித்தெழுந்து அந்த நெல்மலையைக் கண்டு, அதிசயித்து, பரமசிவனுடைய திருவருளைத் துதித்து "சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அனுப்பும்படி பரமசிவன் தந்தருளிய இந்த நெல்லை யாவரெடுக்க வல்லவர்கள்? இந்தச் சமாசாரத்தை அவருக்கு விண்ணப்பஞ் செய்யும் படி போவேன்" என்று திருவாரூருக்குப் போக; நிகழ்ந்த சமாசாரத்தைப் பரமசிவனால் அறிந்து சுந்தரமூர்த்திநாயனாரும் எதிரே எழுந்தருளி வந்தார். அதுகண்ட குண்டையூர்க்கிழார் அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று "சுவாமி! நெடுங்காலமாக அடியேன் தேவரீருக்குச் செய்து வந்த திருத்தொண்டுக்கு இந்நாளில் முட்டு வந்தது. அதுகண்டு சிவபெருமானே நென்மலையைத் தந்தருளினார். அந்த நென்மலை மனிதரால் எடுக்கப்பட்டும் அளவினையுடையதன்று. இனி இது என்னாற் செய்யப்படக்கூடிய தொண்டன்று" என்று விண்ணப்பஞ் செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு, அவரோடுக் கூடிக் கொண்டு குண்டையூர்க்குப்போய் ஆகாயத்தை அளாவிய நென்மலையைக் கண்டு அதிசயித்து, திருவருளை வியந்து "பரவையார் வீட்டுக்கு இந்நெல்லை எடுக்க ஆளும் சிவபெருமானே தந்தருளினன்றி முடியாது" என்று திருவுளங்கொண்டு, சமீபத்திலுள்ள திருக்கோளிலியென்னும் ஸ்தலத்திலிருக்கின்ற சிவாலயத்தை அடைந்து சிவபெருமானை வணங்கி,


		"நீள நினைந் தடியே னுமைநித்தலுங் கைதொழுவேன்
		வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
		கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றே
		னாளிலை யெம்பெருமா னவை யட்டித் தரப்பணியே"

என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது பரமசிவனுடைய திருவருளினாலே, "இன்று பகற்காலம் நீங்கிய பின் நம்முடைய பூதங்கள் பரவை வீடு மாத்திரமின்றித் திருவாரூர் முழுதும் நிறையும்படி நென்மலையைக் கொண்டு வந்துதரும்" என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்குத் தோன்றியது. சுந்தரமூர்த்தி நாயனார் அதைக் கேட்டுத் திருவருளைத் துதித்து வணங்கி திருவாரூருக்குத் திரும்பிப் போய், திருக்கோயிலை அடைந்து, வன்மீக நாதரைத் தரிசனஞ்செய்து கொண்டு, பரவையார் திருமாளிகையிலே சேர்ந்து, அவர் மகிழும்படி நிகழ்ந்த சமாசாரத்தைச் சொல்லி அங்கிருந்தார். அதன்பின் சிவாஞ்ஞை யினாலே பூதங்கள் குண்டையூரிலே யிருந்த நென்மலையை எடுத்துக் கொண்டுபோய்ப் பரவையார் திருமாளிகையை நிறைவித்து, திருவாரூர் முழுதிலும் நென்மலையாக்கின. அன்றிரவு கழிந்தபின், பரவையார் அவ்வூர்ச் சனங்களெல்லாரும் தங்கள் தங்கள் வீட்டின் எல்லையைச் சேர்ந்த நென்மலையை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிப் பறையறைவித்தார்.

சிலநாட் சென்றபின்பு, திருநாட்டியத்தான் குடியில் வசிக்கின்ற கோட்புலிநாயனார் சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே சென்று, அவரை வணங்கி, தம்முடைய ஊருக்கு எழுந்தருளி வரும்படி அவரைப் பிரார்த்தித்து, அவர் அதற்கு இசைந்தது கண்டு, தமது ஊருக்குத் திரும்பிவிட்டார். அதன்பின், சுந்தரமூர்த்தி நாயனார் வன்மீகநாதரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு, திருநாட்டியத்தான்குடியை அடைந்தபோது, அங்கிருந்த கோட்புலிநாயனார் வீதிகளெல்லாம் அலங்கரித்து, நானாவித வாத்திய முழக்கத்தோடு எதிர்கொண்டு வணங்கி தம்முடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, திருவமுது செய்வித்து, அவரை வணங்கி ஸ்தோத்திரம்பண்ணி, சிங்கடியார், வனப்பகையார் என்கின்ற தமது புத்திரிகள் இருவரையும் கொண்டுவந்து அவரை நமஸ்கரிபித்துத் தாமும் வணங்கி, "சுவாமி! அடியேன் பெற்ற இந்த பெண்கள் இருவரையும் அடிமையாகக் கொண்டருள வேண்டும்" என்று பிரார்த்திக்க, சுந்தரமூர்த்தி நாயனார் "இப்பெண்கள் இருவரும் எனக்குப் புத்திரிகள்" என்று சொல்லி, அவர்களைத் தம்முடைய திருத்தொடையின் மேலிருத்தி, மனக்கசிவுடனே அணைத்து உச்சிமோந்து, அவர்கள் விரும்பியவைகளை கொடுத்தருளி பரமசிவன் வீற்றிருக்கும் ஆலயத்தை அடைந்து, அவரை வணங்கி, "பூணாணாவ தொரரவம்" என்னும் திருப்பதிகம் பாடினார். அந்தப் பதிகத்தின் திருக்கடைக் காப்பிலே கோட்புலி நாயனாரைச் சிறப்பித்து, சிங்கடியாருக்குப் பிதாவாகத் தம்மை நினைத்தபடியினால் தம்மைச் "சிங்கடியப்பன்" என்று வைத்தருளினார். பின், அவ்விடத்தினின்றும் எழுந்தருளி, திருவலிவலத்துக்குப் போய்ச் சிவபெருமானை வணங்கி, "வலிவலந் தன்னில் வந்து கண்டேனே" என்னும் பதிகம் பாடி, மீண்டும், திருவாரூரை அடைந்து வன்மீகநாதரை வணங்கிக் கொண்டு பரவையார் வீட்டிலிருந்தார். இருக்கும்பொழுது, பங்குனி உத்திரத்திருநாள் சமீபித்தலும், பரவையார் திருவிழாச்செலவிற்குக் கொடுப்பதற்குப் பொன்கொண்டு வரும்பொருட்டு, திருப்புகலூரை அடைந்து கோயிலிற் சென்று சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, சமீபத்தில் இருக்கின்ற திருமடத்துக்குப் போகத்திருவுளங் கொண்டு புறப்பட்டு வந்து, கோயிற்றிருமுன்றிலின் ஒரு பக்கத்திலே அடியார்களோடும் இருந்தருளினார். அப்பொழுது சிவபிரானது திருவருளினாலே நித்திரை வந்தது. உடனே அங்கே திருப்பணிக்காக கடப்பட்ட செங்கற்கள் பலவற்றை வருவித்து உயரம் பண்ணி, அதனையே தலையணையாகக் கொண்டு உத்தரீயத்தை விரித்து நித்திரை செய்தார். பின் விழித்தெழுந்த போது அந்தச் செங்கற்கள் எல்லாம் பொற்கல்லாய் இருக்கக் கண்டு, திருவருளைத் துதித்து, திருக்கோயிலினுள்ளே போய்த் "தம்மையே புகழ்ந் திச்சை பேசினும்"என்னுந் திருப்பதிகம்பாடி பொற்குவையையுங்கொண்டு அவ்விடத்தினின்றும் புறப்பட்டுத் திருப்பனையூருக்குப் புறத்தே போனார். அப்பொழுது சிவபெருமான் திருக்கூத்தோடுங் காட்சி கொடுத்தருள சுந்தரமூர்த்தி நாயனார் எதிர்சென்று வணங்கி, "மாடமாளிகை" என்று திருப்பதிகம் எடுத்து"அரங்கிலாட வல்லாரவரே யழகியரே" என்று பாடி திருவாரூரை, அடைந்து, பரவையார் வீட்டில் எழுந்தருளியிருந்தார்.

பின் அவ்விடத்தை விட்டு, திருநன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், திருநறையூர், அரிசிற்கரைப்புத்தூர், திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், சிவபுரம், திருக் கலயநல்லூர், கும்பகோணம், திருவலஞ்சுழி, திருநல்லூர், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி என்னுந் தலங்களுக்கு யாத்திரை செய்து திருவாலம்பொழிலை அடைந்து, சுவாமி தரிசனஞ்செய்து, அன்றிரவு நித்திரை செய்தார். சுவாமி அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "மழபாடிக்கு வருதற்குமறந்தாயோ" என்று சொல்லியருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் விழித்தெழுந்து காவேரி நதியைக் கடந்து, அதன் வட பக்கத்திற்சேர்ந்து திருமழபாடிக்குப் போய் சுவாமி தரிசனஞ் செய்து, "பொன்னார் மேனியனே" என்னுந் திருப்பதிகம் பாடி, சிலநாள் அங்கிருந்து, காவேரி நதியின் இருபக்கத்திலுமுள்ள ஸ்தலங்களை வணங்கி, மேற்குத் திக்குக்கு யாத்திரை செய்து நினைந்து, திருவானைக்காவுக்குப்போய், சிவபெருமானை வணங்கி, "மறைகளாயின நான்கும்" என்னும் திருப்பதிகம் பாடினார். உறையூர்ச் சோழ மகாராஜா பதக்கஞ்சாத்திக் கொண்டு காவேரியிலே ஸ்நானஞ்செய்தலும், அது வழுவிப் போக, அவர் "சிவபெருமானே கொண்டருளும்" என்று பிரார்த்திக்க, அது திருமஞ்சனக்குடத்துள்ளே புக, அபிஷேகஞ் செய்யப்படும் பொழுது அதனைச் சிவபெருமான் அணிந்து அவருக்கு அருள்புரிந்த தன்மையைச் சுந்தரமூர்த்திநாயனார் அத் திருப்பதிகத்திலே சிறப்பித்தருளினார்.

பின்பு திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்து சிவபெருமானை வணங்கி, அவர் தமக்குப் பொன்னருளித் தருளாமையினாலே திருவுளம் புழுங்கி,"வைத்தனன் றனக்கே தலையு மெனாவும்" என்று திருப்பதிகம் எடுத்து, திருப்பாட்டினிறுதிதோறும் "இவரல்லா தில்லையோ பிரானார்" என்று பாடிப் பொற்குவை பெற்று சிலநாள் அங்கிருந்து, பின் புறப்பட்டு, திருப்பைஞ்ஞீலி, திருவீங்கோய்மலையென்னும் ஸ்தலங்களுக்குப்போய், வண்ங்கிக் கொண்டு கொங்கதேசத்தை அடைந்து, அவ்விடத்திலே காவேரிக்குத் தென்கரையிலிருக்கும் திருப்பாண்டிக்கொடு முடிக்குப் போய்"மற்றுப்பற்றெனக்கின்றி" என்னும் நமச்சிவாயப் பதிகம் பாடி, திருப்பேரூரை அடைந்து, அங்கே பரமசிவன் கனகசபையிலே நடனஞ்செய்யும் திருக்கோலத்தைத் தமக்குக் காட்டக் கண்டு, வணங்கிப் பேரானந்தப் பெருங்கடலின் மூழ்கி, சிதம்பரத்துக்கு மீண்டெழுந்தருளுதற்குத் திருவுளங் கொண்டு புறப்பட்டு, திருவெஞ்சமாக்கூடலையும் வணங்கி, சோழ மண்டலத்துக்குத் திரும்பி, திருக்கற்குடிமலை, திருவாறை மேற்றளி, திருவின்னம்பர், திருப்புறம்பயம் என்னும் ஸ்தலங்களுக்கு யாத்திரை பண்ணி, திருக்கூடலையாற்றூருக்குச் சமீபித்தும், அதற்குப் போகாமல் திருமுதுகுன்றை நோக்கிச்சென்றார். செல்லும் வழியிலே, பரமசிவன் ஒரு பிராமணராகி சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன்னின்றார். நின்ற அந்தப் பிராமணரைச் சுந்தரமூர்த்திநாயனார் பார்த்து, "ஐயரே! திருமுதுகுன்றுக்குப் போம் வழி எது? சொல்லும்" என்று கேட்க; ஐயா, "இது கூடலையாற்றுக்குப் போகும் வழி" என்று சொல்லி வழிகாட்டிக் கொண்டு, முன்னே சென்றார். சுந்தரமூர்த்தி நாயனார் அவரைத் தொடந்து சென்று, பின் அவரைக் காணாதவராய், "வடிவுடைமழுவேந்தி" என்றெடுத்து "அடிகளிவ் வழிபோந்த வதிசய மறியேனே" என்னும் திருப்பதிகத்தைப்பாடி, கூடலையாற்றூரை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு திருமுதுகுன்றுக்குப் போனார். அந்த ஸ்தலத்திலே சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடியபோது சுவாமி பன்னீராயிரம் பொன் கொடுத்தருள; சுந்தரமூர்த்திநாயனார் வணங்கி நின்று, "சுவாமி, தேவரீர் தந்தருளிய இந்தப் பொன்னெல்லாம் திருவாரூரிலே உள்ளவர்கள் அதிசயிக்கும் படி அங்கே வரச்செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அப்பொழுது, சுவாமியுடைய திருவருளினாலே, "சுந்தரனே, நீ இந்தப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தநதியே இட்டுத் திருவாரூர்க் குளத்திலே போய் எடுத்துக்கொள்" என்று ஓரசரீரிவாக்கு எழுந்தது. அதைக்கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார் மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு, பொன்முழுதையும் மணிமுத்த நதியிலே புகவிட்டு "அன்று என்னை வலிந்தாட்கொண்ட திருவருளை இதிலே அறிவேன்" என்று சொல்லி, சிதம்பரத்துக்குப் போக நினைந்து, வழிக் கொண்டு, இடையிலே திருக்கடம்பூரை வணங்கி, சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை நமஸ்கரித்து, "மடித்தாடுமடிமைக் களன்றியே" என்னுந் திருப்பதிகம் பாடினார். தாம் சபாநாயகரைத் திருப்போரூரிலே கண்டநிலையைச் சிறப்பித்து, அத்திருப்பதிகத்திலேமீகொங்கிலணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே என்று அருளிச் செய்தார். பின்பு அங்கு நின்றும் புறப்பட்டு, திருக்கருப்பறியலூர், திருமண்ணிப் படிக்கரை, திருவாளொளி புற்றூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி என்னும் ஸ்தலங்களை வணங்கி, திருவாரூரை அடைந்தார்.

அங்கே சுவாமிதரிசனஞ் செய்துக் கொண்டு பரவையாரோடு கூடியிருக்கும்நாளில்; ஒருநாள் பரவையாரை நோக்கி "எனக்குத் திருமுதுகுன்றர் தந்தருளிய பொன்னை மணிமுத்தநதியிலே புகவிட்டு வந்தேன். இப்போது இந்த ஸ்தலத்திலே இருக்கின்ற திருக்கோயிலுக்கு மேற்றிசையிலுள்ள குளத்திலே போய் அவருடைய அருளினாலே எடுத்துக் கொண்டு வருவோம், வா" என்றார். பரவையார் அதைக்கேட்டு, "இது என்ன அதிசயம்" என்று சொல்லி, புன்னகைச் செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் "பெண்ணே! நமது கடவுளுடைய திருவருளினாலே பொன் முழுவதும் குளத்திலே எடுத்து உனக்குத் தருவேன், இது சத்தியம்" என்று சொல்லி, பரவையாரும் கூட வர கோயிலிலே பிரவேசித்து, வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு, கோயிலை வலம் வந்து மேற்றிசையிலிருக்கின்ற திருக்குளத்தை அடைந்து, அதன் வடகீழ்க்கரையிலே போய், பரவையாரை நிறுத்தி, சுவாமியை வணங்கி, குளத்திலே இறங்கி, அங்கே தடவினார். அப்பொழுது, பரமசிவன், சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருப்பதிகம் பாடுவிக்க வேண்டும் என்னும் திருவிளையாட்டினாலே, பொன்னை அக்குளத்திலே வருவியா தொழிந்தருள; பரவையார் "ஆற்றிலே இட்டுக் குளத்திலே தேடுகிறீரா" என்றார். அதுகேட்ட சுந்தரமூர்த்திநாயனார் "சுவாமி! தேவரீர் முன் அருளிச் செய்தபடியே பரவையார் நகையாதபடி பொன்னைத் தாரும்" என்று திருமுதுகுன்றர் மேல் "பொன்செய்த மேனியினீர்" என்னும் திருப்பதிகம் பாடி, பரமசிவனுடைய திருவருளினால் வந்தெழுந்த பொற்றிரளை எடுத்து, கரையிலேற்றி, அந்தப்பொன்னையும் முன்கொண்டுவந்த மச்சத்தையும் உரைப்பித்து, மச்சத்திலும் பார்க்க இது உரை தாழ்ந்தது கண்டு, பின்னும் கடவுளைப் பாடினார். பாடியபோது, கடவுளானவர் உரை தாழாது அருள்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் மன மகிழ்ந்து, பொற்குவைகளை ஆட்களிற் சுமத்தி, பரவையாரோடு வீட்டுக்கு அனுப்பி, தாம் திருக்கோயிலிலே போய்ச் சுவாமியை வணங்கி, வீட்டுக்குப் போய், பரவையாருடன் இன்புற்று வாழ்ந்திருந்தார்.

அப்படி வாழ்ந்திருக்கும் காலத்தில், சிவஸ்தல யாத்திரை செய்ய விரும்பி, திருநள்ளாறு, திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர் மயானம், திருவலம்புரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிப்பள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருநின்றியூர், திருநீடுர், திருப்புன்கூர், திருக்கோலக்கா என்னும் ஸ்தலங்களை வணங்கி, பதிகம் பாடிப்போய் சீர்காழியினெல்லையை வலங்கொண்டு வணங்கி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து, திருக்குருகாவூருக்குப் போகும்படி வழிக்கொண்டார். வழியிலே, சுவாமி அவர் பசியினாலும் தாகத்தினாலும் வருந்துதலை அறிந்து, தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவந்து, வெய்யில் வெப்பத்தைத் தணிக்கும்பொருட்டு ஒருபக்கத்திலே ஒரு பந்தலையுண்டாக்கி, அங்கே பிராமணவேடங் கொண்டு, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர்களுடனே அவ்விடத்திலே வந்து, பந்தரின் கீழே போய், அந்தப்பிராமணர் சமீபத்திலே பஞ்சாக்ஷரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். பிராமணர் அவரைப் பார்த்து, "நீர் மிகப் பசிக்கொண்டிருக்கின்றீர். இந்தப் பொதிசோற்றை உண்டு இந்தத் தண்ணீரைக் குடித்து இளைப்பாறும்" என்று சொல்லியருள; சுந்தரமூர்த்தி நாயனார் அதற்கு இசைந்து, அந்தப் பொதிசோற்றை வாங்கி, திருத்தொண்டருடன் அமுது செய்து, அளவில்லாத பரிசனங்களெல்லாரும் அமுது செய்யப்பண்ணினார். பண்ணிய பின்னும், அந்தப் பொதிசோறு அவ்விடத்திலே பசித்து வந்த பிறரும் உண்ணும்படி குறையாது பொலிந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் போசனம்பண்ணியபின் சலபானம் பண்ணி அந்த ஐயரைப் புகழ்ந்து, அவர் சமீபத்திலே பரிசனங்களோடு நித்திரை செய்ய; ஐயர் பந்தருடனே மறைந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் விழித்து எழுந்து, ஐயரைக் காணாமையால் அதிசயங்கொண்டு, "இத்தனையாமாற்ற மறிந்திலேன்" என்னும் திருப்பதிகம்பாடி, திருக்குருகாவூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, அங்கே இருந்தார். பின் அவ்விடத்தை விட்டுபோய், திருக்கழிப்பாலையை வணங்கி, சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசனஞ்செய்து கொண்டு, திருத்தினைநகரை வணங்கி, திருநாவலூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, சிலநாள் அங்கிருந்தார்.

பின் தொண்டைமண்டலத்தில் இருக்கின்ற ஸ்தலங்களுக்கு யாத்திரைசெய்ய விரும்பி, அவ்விடத்தினின்றும் பிரஸ்தானமாகி, திருக்கழுக்குன்றிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, திருப்பதிகம் பாடி, திருக்கச்சூரிலே போய், ஆலக்கோயிலுள்ளே பிரவேசித்துச் சுவாமியை வணங்கிக் கொண்டு, புறத்திலே வந்து; அமுது செய்யும் பொழுதாகியும், பாகம் பண்ணிக் கொடுக்கும் பரிசனங்கள் வாராமையால் மிகுந்த பசிவருத்தத்தினாலே மதிற்புறத்தில் இருந்தார். அப்பொழுது பரமசிவனானவர் ஒரு பிராமணராகி, ஒரு ஓட்டை ஏந்திக்கொண்டு, அங்கே சென்று அவருடைய முகத்தைப் பார்த்து, "நீர் பசியினால் மிகவருந்தி இளைப்புற்றிருக்கின்றீர். நான் இப்பொழுது உமக்கு அன்னம் யாசித்துக் கொண்டு வருவேன். நீர் அப்புறம் போகாமல் சிறிது பொழுது இங்கே இரும்" என்று சொல்லி, அந்தத் திருக்கச்சூரிலே இருக்கின்ற பிராமணவீடுகள் எங்கும்போய், அன்னமும் கறியும் யாசித்துக்கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரிடத்திற் சென்று, "பசி தீர இதை உண்ணும்" என்று சொல்லிக் கொடுக்க; நாயனார் அவ்வையருடைய அன்பைப் புகழ்ந்து, மிகுந்த மகிழ்ச்சியோடு அஞ்சலி செய்து வாங்கி; தம்மோடு வந்த தொண்டர்களுடனே அமுது செய்தார். உடனே அவ்வையர் மறைந்தருளினார். அது கண்டு, சுந்தரமூர்த்திநாயனார் அவர் பரமசிவனென்று உணர்ந்து, "இந்தப் பெரும்பகலிலே திருவடி வருந்தத் திருமேனிகொண்டு அடியேன் பொருட்டு எழுந்தருளிவந்த பெருங்கருணை இருந்தபடி என்ன" என்று மனங்கசிந்துருகி உரோமாஞ்சங் கொள்ள, கண்ணினின்றும் ஆனந்தவருவிசொரிய, "முதுவாயோரி கதற" என்னும் திருப்பதிகம் பாடி, சுவாமியை வணங்கிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு நீங்கி காஞ்சிபுரத்தைச் சமீபித்து அவ்விடத்தினின்று தமது மகிமையையும் வரவையுங் கேள்வியுற்று வந்து எதிர்கொண்டு வணங்கிய பத்தர்களைத் தாமும் வணங்கி, அவர்களோடு திருநகரத்தினுள்ளே சென்று, திருவேகாம்பரத்தை அடைந்து உலகமாதாவாகிய காமாட்சியம்மையால் அருச்சிக்கப்பட்ட ஏகாம்பரநாத சுவாமியைத் தரிசித்து, பரவசமாய் அடியற்ற மரம்போல விழுந்து, எழுந்து, விம்மி, ஆனந்தபாஷ்பஞ்சொறிய, அஞ்சலியஸ்தராகி, மெய்யன்பினோடு திருப்பதிகம் பாடி, புறத்தே போந்து, திருத்தொண்டர்களோடு அக்காஞ்சிபுரத்திலே சிலநாள் வசித்தார். வசிக்கும் நாட்களிலே, அந்நகரத்தில் இருக்கின்ற காமக்கோட்டத்திற் சென்று, அங்கே எழுந்தருளியிருக்கும் காமாக்ஷியம்மையை வணங்கி, திருமேற்றளியை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, திருவோணகாந்தன்றளியை அடைந்து "நெய்யும் பாலும்" என்னும் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்று, அநேகதங்காவதத்தை அடைந்து திருப்பதிகம் பாடினார். பின் திருப்பனங்காட்டுர், திருமாற்பேறு, திருவல்லம் முதலிய ஸ்தலங்களுக்குப் போய் வணங்கிக்கொண்டு, திருக்காளத்திமலையை அடைந்து, அதனைப் பிரதக்ஷிணஞ்செய்து நமஸ்கரித்து மேலே ஏறி, காளத்தியப்பர் சந்நிதானத்திற்சென்று, அவரை வணங்கி, அவருக்கு வலப்பக்கத்தில் நிற்கின்ற அன்பிலே தமக்கு வேறொப்பில்லாத கண்ணப்பநாயனாருடைய திருவடித்தாமரைகளை வணங்கி, கீழே இறங்கி, திருத் தொண்டர்களுடனே சில நாள் அந்த ஸ்தலத்தில் இருந்தார். இருக்கும் நாட்களிலே, உத்தரபூமியில் இருக்கின்ற ஸ்ரீபருப்பதம் திருக்கேதாரமலை முதலாகிய சிவ ஸ்தலங்களை அங்கிருந்தே வணங்கி, அவைகளின்மேலே திருப்பதிகம் பாடியருளினார். அதன்பின், அவ்விடத்தை விட்டு நீங்கி, சமுத்திரதீரத்தில் இருக்கின்ற திருவொற்றியூரிற் சென்று திருப்பதிகம் பாடி திரிகாலங்களினும் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு அங்கே இருந்தார்.

இதற்கு முன், திருக்கைலாசமலையிலே சுந்தரமூர்த்தி நாயனார்மேல் ஆசை வைத்த சேடியர்கள் இருவருள் அனிந்திதை யார் என்பவர் ஞாயிறு என்னும் ஊரிலே இருக்கும் வேளாளரிற் சிறந்தோங்கிய ஞாயிறுகிழவர் என்பவருக்குப் புத்திரியாராய்த் திருவவதாரஞ்செய்து, சங்கிலியார் என்னும் பெயரைப் பெற்று, உமாதேவியாருடைய திருவடிகளிலே மிகுந்த பத்தியுடையவராய் இருந்தார். அவர் பெதும்பைப் பருவமடைந்தது கண்டு, தந்தையாராகிய ஞாயிறுகிழவர் தம்முடைய மனைவியாரை நோக்கி, "நம்முடைய புத்திரி இப்பூவுலகத்துப் பெண்க ளெல்லாரிலும் பார்க்க அதிக சௌந்தரியமும் நற்குணமும் உடையவளாய் இருக்கின்றாள். அவளுக்கு விவாகஞ்செய்து கொடுக்குங்காலமாயிற்று. இதற்கு யாது செய்வோம்" என்று சொல்ல; மனைவியார் "அவளுடைய சௌந்தரியத்துக்கும் குணத்துக்கும் இசைய ஒரு புருஷனைத் தெரிந்து விவாகஞ் செய்து கொடும்" என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலியார் "இவர்கள் பேசும் வார்த்தை என்க்குப் பொருந்தும் வார்த்தை யன்று; நானோ நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருவருளைப் பெற்ற ஒருவருக்கு மனைவியாதற்கு உரியேன். இப்படியன்றி மற்றெப்படி விளையுமோ தெரியேன்" என்று நினைந்து அச்சங்கொண்டு, அறிவுமயங்கி மிகச்சோகித்து நிலத்திலே விழுந்தார். சமீபத்தில் நின்ற தந்தையாரும் தாயாரும் அதைக்கண்டு, பதைபதைத்து அவரை எடுத்து, ஏங்கிய மனத்தையுடையவர்களாகி, "இவளுக்கு நிகழ்ந்தது யாதோ" என்று பயந்து, தாங்கிப் பனிநீர் தெளித்துத் தடவி, அவருக்குச் சோகம் நீங்கியபின், அவரைப் பார்த்து, "மகளே! உனக்கு நிகழ்ந்தது யாது? "சொல்" என்று கேட்க; சங்கிலியார் "இப்பொழுது என்னைக்குறித்து நீங்கள் பேசியது எனக்கு இசையாது. நானோ பரமசிவனது திருவருளைப்பெற்ற ஒருவருக்கு மனைவியாதற்கு உரியேன். நான் இனிமேல் திருவொற்றியூரை அடைந்து திருவருளிற் செல்லுவேன்" என்றார். அதைக்கேட்ட தந்தை தாயார் இருவரும் சோகமும் அச்சமும் அதிசயமும் உடையவர்களாகி, அந்தச் சங்கிலியார், சொல்லிய வார்த்தையை மறைத்து ஒழுகினார்கள். ஒழுகும் நாட்களிலே அவர்களுடைய குலத்துக்கு ஒப்பாகிய குலத்தில் உள்ள ஒருவன், நிகழ்ந்த அந்தச் சங்கதியை அறியாதவனாகி, சங்கிலியார் மேல் விருப்பங்கொண்டு; அவருடைய தந்தையாரிடத்திலே கலியாணம் பேசும் பொருட்டுச் சிலரை அனுப்பினான். அனுப்பப்பட்ட அவர்கள் அத்தந்தையாரிடத்திற் சென்று பேச; அது கேட்டுத் தந்தையார், நிகழ்ந்த சங்கதியைச் சொல்லுதல் தகுதியன்று என்று நினைத்து, வேறோர் உபாயத்தினால் அனுப்பிவிட்டார். அவர்கள் திரும்பிப் போய்ச் சேர்ந்தவுடனே, அவர்களை அனுப்பினவன் அவர்களோடு இறந்து போயினான். அதைச் சங்கிலியாடுடைய தந்தை தாயார் கேள்வியுற்று மன மயங்கி, உய்யவேண்டும் என்கின்ற நினை வுடையவர்கள், சங்கிலியார் பக்ஷத்திலே பேசத் தகாத வார்த்தையைப் பேசார்கள் என்பதை உலகம் அறியும்படி செய்த திருவருளைக் கண்டு, அதனை யாவருக்கும் உள்ளபடிச் சொல்லி, மிகப் பயந்து "இனி நாங்கள் இவரெண்ணத்தின்படியே இவரைச் சிவபுண்ணியஞ் செய்துகொண்டு இருக்கும் பொருட்டு திருவொற்றியூரிலே கொண்டுபோய் விடவேண்டும்" என்று துணிந்து, தங்கள் ஞாதிகளோடும் சங்கிலியாரைப் பார்த்து, "நீர் திருவொற்றியூரை அடைந்து கன்னிமாடத்தில் இருந்து பரமசிவனுடைய திருவருளை முன்னிட்டுத் தவஞ்செய்யும்" என்று சொல்லி, மிகுந்த செல்வத்தோடும் அவரைத் திருவொற்றியூருக்குக் கொண்டுபோய், கோயிலிலே பிரவேசித்து, சுவாமியை வணங்கிக் கொண்டு, சமீபத்திலே ஒரு கன்னிமாடஞ் செய்வித்து, அதிலே அவரை இருத்தி, அவருக்கு வேண்டும் திரவியங்களையும் அமைத்து, அவரை வணங்கி நின்று, "நீர் இந்தக் கன்னிமாடத்திலே பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்து கொண்டு இரும்" என்று சொல்லி, அவரைப் பிரிதலினாலே இரண்டு கண்ணினின்றும் சோகபாஷ்பஞ்சொரிய, அனுமதி பெற்றுக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். சங்கிலியார் அந்தக் கன்னிமாடத்தில் இருந்து, தினந்தோறும் திரிகாலங்களினும் திருக்கோயிலிலே போய், சுவாமிதரிசனஞ் செய்து, பூக்கட்டு மண்டபத்திலே திரை இட்டிருக்கின்ற ஓரிடத்திற் போயிருந்து, புஷ்பமாலைகட்டி, சுவாமிக்குச் சாத்தும்படி கொடுத்துக்கொண்டு வருவார்.

இப்படி நிகழுங்காலத்திலே, ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் திருக்கோயிலிலே போய்ச் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு புறப்பட்டு, அடியார்கள் செய்கின்ற பலவகைத் திருத்தொண்டைப் பார்ப்பவராகி, புஷ்பமண்டபத்தினுள்ளே போனார். போனபொழுது, முன்போலத் திரையை நீக்கிப் பரமசிவனுக்குச் சாத்தும்படி தாம்கட்டிய பூமாலைகளைக் கொடுத்துவிட்டு முன்போல மறைந்த சங்கிலியாரை விதிகூட்டக் கண்டு, அவர்மேல் ஆசை கொண்டு, புறத்திலே போய், புஷ்பமண்டபத்தினுள்ளே ஒருபக்கத்திலே திரைக்குள்ளே நின்று ஒரு பெண் என்னுடைய மனசைக் கவர்ந்துக் கொண்டாள். அவள் யார் என்றார். சமீபத்திலே நின்றவர்கள் "அவர் பரமசிவனுக்கு மிகுந்த பத்தியோடு திருத்தொண்டு செய்கின்ற கன்னிகையாகிய சங்கிலியார்" என்றார்கள். அதைக்கேட்ட சுந்தரமூர்த்திநாயனார் திருக்கோயிலினுள்ளே போய், சுவாமியை வணங்கி நின்று, சங்கிலியாரை தமக்குத் தந்தருளும்படி பிரார்த்தித்துக்கொண்டு, திருக்கோயிலின் புறத்திலே போய், ஓரிடத்திலேயிருக்க; சூரியன் அஸ்தமயனமாயிற்று. அப்பொழுது பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திலே போய்; "இவ்வுலகத்தில் உள்ளவர்கள் யாவராலுஞ் செய்யப்படுதல் கூடாத பெருந்தவத்தைச் செய்கின்ற உத்தமியாகிய சங்கிலியை உனக்குத் தருவோம். நீ கொண்ட கவலையை ஒழி" என்று திருவாய் மலர்ந்தருளி, அத்தயாமத்திலே கன்னிமாடத்திலே நித்திரை செய்கின்ற சங்கிலியாருக்குச் சொப்பனத்திலே தோன்றினார். தோன்றியபொழுது, சங்கிலியார் பரவசமாய் விழுந்து நமஸ்கரித்து எழுந்துநின்று, "சுவாமி அடியேன்! உய்யும்படி தேவரீர் அடியேனிடத்திலே எழுந்தருளி வரும்பொருட்டுப் பூர்வ ஜென்மத்திலே என்ன தவஞ்செய்தேன்" என்று சொல்ல; பரமசிவன் "சங்கிலியே! நம்மேலே மிகுந்த பக்தியுடையவனும் திருவெண்ணெய்நல்லூரிலே சமஸ்தரும் அறியும்படி நம்மாலே தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் நமக்குத் தோழனும் ஆகிய சுந்தரன் தனக்கு மனைவியாக உன்னைத் தரும்பொருட்டு என்னைப் பிரார்த்தித்தான். நீ மகிழ்ச்சியோடும் அதற்கு உடன்படு" என்று சொல்லியருளினார். அதற்கு சங்கிலியார் "சுவாமி அடியேன் தேவரீருடைய ஆஞ்ஞையைத் தலைமேற் கொண்டேன். தேவரீர் சொல்லியருளிய நாயனாருக்கே மனைவியாதற்கு உரியேன். ஆயின், அவர் திருவாரூரினிடத்தே மிகுந்த சந்தோஷத்தோடு வசிக்கின்றவர் என்பதைத் தேவரீர் திருவுளங்கொண்டருளும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட கடவுள் "பெண்ணே! அந்தச் சுந்தரன் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதஞ் செய்து தருவான்" என்று சொல்லியருளி, சுந்தரமூர்த்திநாயனாரிடத்திற் சென்று, "நாம் சங்கிலியிடத்திலே போய் உன்னெண்ணத்தைத் தெரிவித்தோம். "நான் உன்னைப் பிரிந்து செல்லேன் என்று நீ அவளுக்குச் சபதஞ் செய்து கொடுத்தால், அவள் உடன்படுவாள். இனி உனக்கு நாம் என்ன செய்யவேண்டும்" என்று அருளிச் செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் இக்கடவுளுடைய பிறதலங்களையும் சென்று வணங்க விரும்புகின்ற அடியேனுக்கு இது விலக்காகும்" என்று நினைத்து அவரை வணங்கி, "சுவாமி! சங்கிலிக்கு நான் உன்னை பிரியேன் என்று சபதஞ் செய்து கொடுக்கும் பொருட்டு அடியேன் அவளோடு தேவரீருடைய ஆலயத்துக்கு வந்தால், அப்பொழுது தேவரீர் அவ்வாலயத்தை விட்டுத் திருமகிழின் கீழ் இருந்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அதற்கு கடவுள் இசைந்தருளி, சங்கிலியாரிடத்திலே முன்போலப் போய், "பெண்ணே, சுந்தரன் உனக்குச் சபதஞ்செய்து தருதற்கு உடன்பட்டிருக்கிறான். அவன் நம்முடைய ஆலயத்திலே சபதஞ்செய்துதருதற்கு வந்தால் நீ அதற்கு உடன்படாமல் மகிழின் கீழே சபதஞ் செய்து தரும்படி கேள்" என்று சொல்லி மறைந்தருளினார். சங்கிலியார் விழித்தெழுந்து, அதிசயித்து அவ்விரவிலே பரமசிவனுடைய திருவருளை நினைந்து நினைந்து நித்திரை செய்யாதவராகி, சமீபத்திலே நித்திரை செய்கின்ற தம்முடைய சேடியர்களை எழுப்பி, தமக்குக் கனவிலே பரமசிவன் அருளிச்செய்த எல்லாவற்றையும் அவர்களுக்குத் தெரிவிக்க; அவர்கள் அச்சம் "அதிசயம்" ஆனந்தம் மூன்றும் அடைந்து, சங்கிலியாரை வணங்கினார்கள். திருப்பள்ளியெழுச்சிக்குப் புஷ்பந்தொடுக்கும் பொழுது ஆயினமை கண்டு, சங்கிலியார் சேடியர்களோடு திருக்கோயிலுக்குச் செல்ல; அவருக்குச் சபதஞ் செய்து கொடுக்கும் பொருட்டு, அதற்கு முன் அவ்விடத்தில் வந்து அவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நின்ற சுந்தரமூர்த்தி நாயனார் தமக்கு எதிரேவந்த அவர் சமீபத்திற் சென்று, தமக்குப் பரமசிவன் அருளிச் செய்ததைச் சொன்னார். அதற்கு சங்கிலியார் எதிர்வார்த்தை ஒன்றும் சொல்லாமல் நாணங்கொண்டு, சேடியர்களோடும் திருக்கோயிலினுள்ளே புகுந்தார். சுந்தரமூர்த்திநாயனார் அவர் பின்னேபோய், "பெண்ணே! நான் உம்மைப் பிரியேன் என்று சபதஞ் செய்யும் பொருட்டுச் சுவாமி சந்நிதானத்துக்கு வாரும்" என்று சொல்ல; சங்கிலியார் கண்ட கனவைக் கேட்டறிந்த சேடியர்கள் "சுவாமி! இதன் பொருட்டு தேவரீர் சிவசந்நிதானத்திலே சபதஞ்செய்வது தகாது" என்றார்கள். அப்பொழுது சுந்தரமூர்த்திநாயனார் பரமசிவனுடைய செய்கையை அறியாமல் "பெண்களே! நான் வேறெங்கே சபதஞ்செய்து தரவேண்டும்" என்று கேட்க சேடியர்கள் மகிழின்கீழே சபதஞ்செய்து கொடும்" என்றார்கள். அதைக்கேட்ட நாயனார் மன மருண்டு, இவர்கள் சொல்லி இதை மறுக்கில், விவாகந் தவறினும் தவறும்; ஆதலால், இதற்கு உடன்பட வேண்டும் என்று துணிந்து "அப்படியே செய்யலாம் வாருங்கள்" என்று சொல்லி, அவர்களோடு மகிழின்கீழே போய்ச் சேர்ந்து, சங்கிலியார் காணும்படி அந்த மகிழை மூன்றுதரம் வலஞ்செய்து, "உன்னை நான் பிரியேன்" என்று சபதஞ் செய்து கொடுத்தார். அது கண்டு சங்கிலியார் மனங்கலங்கி, "கடவுளுடைய ஆஞ்ஞையினாலே பாவியேன் இதைக் கண்டேனே" என்று துக்கித்துக் கொண்டு, ஒரு பக்கத்திலே மறைந்துநின்றார். சுந்தரமூர்த்தி நாயனார் சபத முடித்தபின், ஆலயத்தினுள்ளே போய்க் கடவுளை வணங்கி, ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு திரும்பிவிட்டார். அதற்குப் பின், சங்கிலியார் புஷ்பமண்டபத்திலே போய்த் தம்முடைய பணியை முடித்து, பரமசிவன் தமக்கு அருள் செய்ததை நினைந்து, அவரை வணங்கிக் கொண்டு விடியும்பொழுது கன்னிமாடத்துக்குத் திரும்பிவிட்டார். அவ்விரவிற்றானே பரமசிவன் திருவொற்றியூரில் இருக்கின்ற தம்முடைய தொண்டர்களுக்கு சொப்பனத்திலே தோன்றி, "நம்முடைய அடியனாகிய சுந்தரனுக்குச் சங்கிலியென்னும் கன்னிகையை விவாகஞ் செய்து கொடுங்கள்" என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். அவர்கள் அவ்வாஞ்ஞையைத் தலைமேற்கொண்டு மற்றநாளிலே அவ்வூரில் இருக்கின்ற சமஸ்தானங்களோடுங் கூடி மிகுந்த மகிழ்ச்சியோடும் மகாலங்காரத்தோடும் சங்கிலியாரை சுந்தரமூர்த்திநாயனாருக்கு விவாகஞ் செய்து கொடுத்தார்கள்.

விவாகஞ்செய்த சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியாரோடு கூடி அவ்வூரிலே வாழ்ந்திருந்தார். இருக்கும் நாளிலே, ஒரு நாள் திருவாரூரிலிருக்கின்ற வீதிவிடங்கப் பெருமானுடைய வசந்தோற்சவகாலம் சமீபித்ததை அறிந்து, "வன்மீக நாதரை இவ்வளவு காலமும் மறந்திருந்தேன்" என்று துக்கித்து அவர்மேலே "பத்திமையு மடிமையையுங் கைவிடுவான் பாவியேன்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்னொரு நாளிலே அவரை மிக நினைந்து, திருவாரூருக்குப் போகக் கருதி, ஆலயத்திலே புகுந்து சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, திருவொற்றியூரை நீங்கியபொழுது, சுந்தரமூர்த்திநாயனாருக்கு, அவர் சபதந்தவறினமையால், இரண்டு கண்களும் மறைந்தன. அப்பொழுது நாயனார் திகைத்து நெடிதுயிர்த்து, "சபதந்தவறினமையால், எனக்கு இது நிகழ்ந்தது" என்று நினைந்து, "இந்தக் கொடுந்துயரத்தை நீக்கும்பொருட்டு நமது கடவுளைப் பாடுவேன்" என்று துணிந்து "அழுக்கு மெய் கொடுன் றிருவடி யடைந்தேன்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். பாடியும், கடவுள் அத்துயரத்தை நீக்கினாரில்லை. ஆயினும், திருவாரூருக்குச் செல்லவேண்டுமென்கிற பேரவாவினால் சிலர் முன்னே வழிகாட்டிக் கொண்டு செல்ல, திருமுல்லைவாயிலுக்குப்போய் சுவாமியை வணங்கி, "விண்பணிந் தேத்தும் வேதியா" என்னுந் திருப்பதிகத்தைப்பாடி, திருவெண்பாக்கத்தை அடைந்து சிவபெருமானை வணங்கி, "திருக்கோயிலுள்ளீரே" என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் அவருக்கு ஊன்றுகோல் கொடுத்து, "உள்ளோம் போகீர்" என்று சொல்லியருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் "பிழையுளன பொறுத்திடுவர்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, பழையனூரிலே போய், காரைக்காலம்மையார் திருத்தலையாலே பிரதக்ஷிணஞ்செய்த திருவாலங்காட்டுச் சமீபத்திலே நின்று அதனை வணங்கி, "முத்தா முத்திதரவல்ல"என்னுந் திருப்பதிகம் பாடி, திருவூற லிற் சென்று வணங்கி, காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கே முன் காமக் கோட்டத்திற் சென்று, தருமத்தை வளர்க்கின்ற பெருங்கருணையையுடைய உலகமாதாவாகிய காமாக்ஷியம்மையை வணங்கித் துதித்துக்கொண்டு, திருவேகம்பத்தை அடைந்து ஏகாம்பரநாத சுவாமியை வணங்கி, "ஆதிகாலத்திலே திருப்பாற்கடலினின்று எழுந்து தேவர்களை வருத்தத் தொடங்கிய ஆலகாலவிஷத்தைத் திருமிடற்றிலடைத்து அவர்கள் அமுதுண்ண அருள்செய்த கருணாநிதியே! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்துச் சிறியேனுக்குத் தேவரீரைத் தரிசிக்கும் பொருட்டுக் கண்ணைத் தந்தருளும்" என்று பிரார்த்தித்தார். அப்பொழுது கடவுள் இடக்கண்ணை மாத்திரம் கொடுத்து, தமது திருக்கோலத்தைக் காட்ட; சுந்தரமூர்த்தி நாயனார் கண்டு பரவசமாகி அடியற்ற மரம்போல வீழ்ந்து எழுந்து, "ஆலந்தானுகந் தமுதுசெய்தானை"என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, அந்த ஸ்தலத்திலே சில நாள் இருந்து, பின் அந்த ஸ்தலத்தை நீங்கி, வழியிலே "அந்தியுநண் பகலும்" என்றெடுத்து"தென்றிரு வாரூர்புக் கெந்தைபிரானாரை யென்றுகொலெய்துவதே" என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு, தொண்டை மண்டலத்தைக் கடந்து, திருவாமாத்தூரிற் சென்று பதிகம் பாடி, திருவரத்துறையை வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டு, சோழமண்டலத்தை அடைந்தார்.

அந்நாட்டிலே திருவாவடுதுறையிற் சேர்ந்து சுவாமியை வணங்கி ஒரு கண்ணில்லாமையைக் குறித்து மனங்கவன்று, "கங்கைவார்சடையார்"என்னுந் திருப்பதிகம் பாடி, திருத்துருத்திக்குப் போய்ச்சுவாமியை வணங்கி "அடியேனுடைய சரீரத்தின் மேலே பொருந்திய நோயை நீக்கியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அதற்குக் கடவுள் "நீ இக்கோயிலுக்கு வட புறத்தில் இருக்கின்ற குளத்திலே ஸ்நானம் பண்ணுவாயாகில், இந்நோய் நீங்கிவிடும்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அது கேட்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைதொழுது புறப்பட்டு அந்தத்தீர்த்தத்தை அடைந்து, சுவாமியை வணங்கிக் கொண்டு அவருடைய திருவடிகளிலே அன்போடு பதிந்த இருதயத்துடனே அத்தீர்த்தத்திலே ஸ்நானம் பண்ணினார். உடனே அவருடைய திருமேனி நோய் நீங்கிப் பிரகாசம் அடைந்தது. அவர், கண்டவர்கள் அதிசயிக்கும்படி கரையேறி, வஸ்திரந் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே போய், சுவாமியை வணங்கி, "மின்னுமாமேகங்கள்" என்னுந் திருக்கோயிலிலே பிரவேசித்து வணங்கிக் கண் தந்தருளும்படி திருப்பதிகம் பாடி, அத்திருப்பதியை நீங்கி, திருவாரூரிற்சென்று, மாலைக்காலத்திலே முன்னே தூவாயரை வணங்கும்படி அடியார்களோடு "பரவையுண்மண்டளி"என்னுந் திருப்பதிகம் பாடி, வெளியே போய், ஓரிடத்தில் இருந்து, பின் அடியார்களோடு திருமூலட்டானத்திலே திருவத்தயாமத்திலே சுவாமிதரிசனஞ் செய்வதற்கு எழுந்து வழிக்கொண்டு, வழியிலே அடியார்கள் தமக்கெதிரே வர அவர்கள் முகத்தைப்பார்த்து, கைக்கிளையினாலே "குருகுபாய்"என்னுந் திருப்பதிகம் பாடிக் கொண்டுபோய், தேவாசிரயமண்டபத்தை முன்னே நமஸ்கரித்து, கோபுரத்தையும் வணங்கி, உள்ளே புகுந்து, சுவாமி சந்நிதானத்திலே போய் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து நின்று, சுவாமியைத் தரிசனஞ் செய்தற்கு ஒருகண் போதாமையால் அதிக துக்கங்கொண்டு, "சுவாமி! அடியேனுக்கு வலக்கண்ணையுந் தந்து அடியேனை அத்துக்கசாகரத்தினின்றும் கரையேற்றியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து "மீளா வடிமை யுமக்கே யாளாய்" என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது வன்மீகநாதர் திருவுளமிறங்கி, அவருக்கு வலக்கண்ணையுங் கொடுத்தருளினார். உடனே சுந்தரமூர்த்திநாயனார் பரவசமாய்ப் பலமுறை விழுந்தும், எழுந்தும் மிகுந்த களிப்பினால் ஆடியும் பாடியும் ஆனந்தசாகரத்தில் அமிழ்ந்தி, வன்மீகநாதருடைய திருக்கோலத்தை இரண்டு கண்களினாலுந் தரிசனஞ்செய்து வணங்கித் துதித்துக்கொண்டு புறப்பட்டு, தேவாசிரய மண்டபத்திலே போய், அங்கெழுந் தருளியிருந்தார்.

முன் சுந்தரமூர்த்திநாயனார் திருக்கோயிலுக்குப் போம் போது அவருடைய பரிசனங்களிற் சிலர் பரவையார் வீட்டுக்குப் போக நினைந்து, அவர்வாயிலிலே போய், அப்பரவையார் தம்மைப் பிரிந்து சென்ற சுந்தரமூர்த்திநாயனார் திருவொற்றியூரிலே சங்கிலியாரை விவாகஞ்செய்து கொண்டிருந்த சங்கதியைக் கேள்வியுற்று அதிக துக்கமும் கோபமுங் கொண்டிருந்தமையால், உள்ளே போகப் பெறாமல், திரும்பி, தேவாசிரய மண்டபத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து, "சுவாமி! பரவையார் தேவரீர் திருவொற்றியூரிலே சங்கிலியாரை விவாகஞ் செய்த சமாசாரம் முற்றுங் கேள்வியுற்றமையால், இப்பொழுது அவர் வீட்டுப் புறத்தும்செல்லப் பெறாமல் விட்டோம்" என்றார்கள். அதைக்கேட்ட நாயனார் மனங்கலங்கி, "இனி இதற்கு, யாது செய்வோம்" என்று ஆலோசித்து, லௌகிகவிஷயத்திலே வல்ல சில மனிதர்களை, பரவையார் கொண்ட கோபத்தை நீக்கிக்கொண்டு வரும்பொருட்டு, அவரிடத்திற்கு அனுப்பினார். அனுப்பப்பட்ட அவர்கள் பரவையார் முன் சென்று, அவருக்குப் பலநியாயங்களையும் எடுத்துச் சொல்லி, சுந்தரமூர்த்திநாயனாரோடு முன் போலக் கூடியிருக்கவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். அதற்குப் பரவையார் இசையாதவராகி, கோபம் அதிகரித்து, "எனக்குக் குற்றஞ்செய்த அவர் பக்கத்தில் இன்னும் இப்படிப் பேசுவீர்களாகில், நான் பிராணத்தியாகம் பண்ணிப்போடுவேன்" என்றார். அவர்கள் அதைக் கேட்டு மிகப்பயந்து, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் சென்று, நிகழ்ந்த சங்கதியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட நாயனார் மிகுந்த துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, சமீபத்தில் இருந்தவர்கள் எல்லாரும் நித்திரை செய்யும்பொழுது, அத்தயாமத்திலே தனியே வருந்தி, பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்து, "ஆன்மாக்கள் செய்த கன்மங்களைத் தொலைக்கும் பொருட்டு அவைகளின் பலன்களை புசிப்பித்தருளுகின்ற கடவுளே! அடியேன் பூர்வத்திலே செய்த கர்மத்தினாலே அடியேனுக்குத் தேவரீராலே, கூட்டப்பட்ட பரவையினுடைய ஊடலைத் தேவரீரே இந்த அத்தயாமத்தில் எழுந்தருளிவந்து தீர்த்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அப்பொழுது, தனுகரணங்களை யானென்றும் புவனபோகங்களை எனதென்றும் அபிமானிக்கின்ற அகங்கார மமகாரங்களை ஒழித்து, தம்மை உணர்ந்து தமது திருவருள் வழிநிற்கும் மெய்ஞ்ஞானிகளுக்குப் பிராரத்த மாத்திரம் புசிப்பித்து அவர்கள் அது புசிக்கும் போது மனம் வாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாற் செய்யுஞ் செயல்கள் அவர்களுக்கு ஆகாமியமாய் ஏறாது அவைகளைத் தன்செயலாகக் கொண்டருளும் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிரார்த்தமுற்றும் புசிப்பித்துத் தொலைப்பிக்கும் பொருட்டும், தாம் அப்படி செய்தல் அவன் அவள் அது முன்னிலையாயாம். ஆயினும், அம்முன்னிலையாய் அது செய்பவர் தாமே என்பது நம்மனோர்க்கும் தெளிவுறப் புலப்படும் பொருட்டும் விஷ்ணுமூர்த்தியாலும் தேடிக் காணப்படாத அருமைத்திருவடிகள் பூமியிலே தீண்டும்படி அந்நாயனாருக்கு வெளிப்பட எழுந்தருளி வந்தார். அது கண்ட நாயனார் எழுந்து, தாங்கற்கரிய ஆனந்தமேலீட்டினாலே சரீரம் நடுங்க, உரோமஞ்சிலிர்க்க, இரண்டு கைகளும் சிரசின்மேல் ஏறிக்குவிய, கடவுளுடைய திருவடியின் கீழ் விழுந்து, எழுந்து, ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு நின்றார். கடவுள் அவரை நோக்கி, "உனக்கு நிகழ்ந்தது யாது" என்று கேட்டருள; அவர் "தேவரீருடைய திருவருள் கூட்ட அடியேன் திருவொற்றியூரிலே சங்கிலியை விவாகஞ்செய்த சமாசார முழுதும் பரவையானவள் கேள்வியுற்று அறிந்து, தன்னிடத்திலே நான் வரின் தான் பிராணயத்தியாகம் பண்ணுதல் தவறாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாள். சிறியேன் தேவரீருக்கு அடியானும் தேவரீர் சிறியேனுக்குத் தோழனும் ஆண்டவருமாயிருத்தல் மெய்யானால், சிறியேன் படுந்துன்பத்தைப் பார்த்துத் தேவரீரே இவ்விரவில் பரவை வீட்டுக்குச் சென்று அவளுடைய ஊடலைத் தீர்த்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அதைக் கேட்ட கடவுள் "தோழனே! நான் இப்பொழுது உனக்கு ஒரு தூதனாகிப் பரவை வீட்டுக்குப் போகின்றேன். நீ உன் துன்பத்தை ஒழி" என்று திருவாய் மலர்ந்தருளி, தேவர் மனிதர் பூதர்கள் முதலாகிய சமஸ்தரும் ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு புறத்திலே சூழும்படி, பரவையார் வீட்டை நோக்கி நடந்து, அவ்வீட்டுவாயிலை அடைந்து, தம்மோடு வந்த கணங்கள் புறத்திலே நிற்க, தாம் தமக்கு அருச்சனை செய்கின்ற ஒரு ஆதிசைவர் வடிவங்கொண்டு உள்ளே தனியே சென்று, கதவு பூட்டியிருத்தலால் அதற்கு முன்னின்று, "பரவையாரே! கதவைத் திற" என்று அழைத்தார். நித்திரையின்றித் துக்கத்தோடிருந்த பரவையார் அதைக்கேட்டு, தம்மை அழைத்தவர் சுவாமிக்கு அருச்சனை செய்கின்ற ஆதிசைவர் எனத் துணிந்து "சுவாமுக்கு அருச்சனை செய்யும் பெரியவர் இந்த அத்தயாமத்திலே இங்கே வந்தது யாது காரணம் பற்றியோ" என்று பயந்து, பதைபதைத்துப் போய், கதவைத்திறந்து அவரைக் கண்டு, "சுவாமி! தேவரீர் இப்பொழுது இங்கே எழுந்தருளிவந்த காரணம் யாது" என்று கேட்டார். அதற்குக் கடவுள் "நான் சொல்வதை நீ மறாது செய்வாயாகில், சொல்லுவேன்" என்று சொல்ல; பரவையார், "நீர் அதைச் சொல்லும் அது என்னால் இயலுமாகில் செய்வேன்" என்றார். கடவுள் "சுந்தரமூர்த்தி இங்கே வருதற்கு நீ உடன்படல் வேண்டும் என்று சொல்ல; பரவையார் "உம்முடைய பெருமை நன்றாய் இருக்கின்றது; என்னைப் பிரிந்து சென்று திருவொற்றியூரிலே சேர்ந்து அங்கே சங்கிலியினாலே பிணிப்புண்டவருக்கு இங்கே ஒரு சார்பு உண்டாகுமோ" என்றார். சுவாமி அதைக் கேட்டு "நீ உனக்குச் சுந்தரமூர்த்தி செய்த குற்றங்களை மனசிலே கொள்ளாமல் கோபநீங்கி அவரை இங்கே வருவிக்கும் பொருட்டு, உன்னை நான் வேண்டிக் கொண்டேன். நீ மறுப்பது தகுதியன்று" என்று அருளிச்செய்ய; பரவையார் "நீர் இந்தக் காரியத்தின் பொருட்டு இந்த வீட்டுக்கு வருதல் உம்முடைய பெருமைக்குத் தகுதியன்று. அவர் இங்கே வருதற்கு நான் இசையமாட்டேன். நீர் போய்விடும்" என்றார்.

அதைக்கேட்ட கடவுள் உள்ளே நகைத்துக்கொண்டு, தம்முடைய திருவுருவத்தைப் பரவையாருக்குக் காட்டாமல், சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்குத் திரும்பிச் சென்றார். சென்ற கடவுளைச் சுந்தரமூர்த்தி நாயனார் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு நமஸ்கரித்து, அவருடைய திருமுகத்திலே தோன்றிய சிரிப்பைக் கண்டு, அவருடைய திருவுள்ளக் கருத்தை அறியாமல். தாம் நினைத்த கருத்தை முடித்து வந்தனர் என்று துணிந்து, "தேவரீர் அன்றைக்குச் சிறியேனை ஆட்கொண்டதற்கு இசைய இன்றைக்குப் பரவையுடைய கோபம் முழுதையும் தீர்த்து வந்தருளினீர்" என்றார். கடவுள் அதைக்கேட்டு, "உன் வேண்டுகோளின்படி நாம் பரவைவீட்டுக்குப் போய் அவளிடத்திலே பேசினோம் அவள் இசையவில்லை" என்றார். உடனே நாயனார் நடுக்கங்கொண்டு வணங்கி, "தேவரீர் அருளிச்செய்ததை அடியாளாகிய பரவையா மறுப்பாள்? தேவரீர் தமியேனுடைய அடிமைத்தன்மையை வேண்டுவதில்லையாகில், அன்றைக்குத் தமியேனை வலிய ஆட்கொண்டதேது? தமியேன் படுந்துக்கத்தைக் கண்டீர்; இன்றைக்குத் தமியேன் அவளிடத்திலே போவதற்கு அருள்செய்யீராகில், என்னுயிர் நீங்கிவிடும்" என்று சொல்லி விழுந்தார். அது கண்டு கடவுள் "நாம் இன்னும் பரவையிடத்திலே போய், இப்போதே நீ அவளிடத்திற் செல்லும்படி பண்ணுவோம். நீ துக்கிக்கவேண்டாம்" என்று அருளிச்செய்து, கணங்களோடு பரவையார் வீட்டை அடைந்தார். அதற்குமுன், பரவையார் தம்மிடத்தில் வந்த ஆதிசைவர் போனபின்பு அவ்வாதிசைவராய் வந்தவர் பரமசிவன் என்றே பல அதிசயத்தோற்றத்தால் அறிந்து பயங்கொண்டு, "ஐயோ! கெட்டேன், எங்கள் சுவாமி திருவாக்குக்கு எதிர்வாக்குச் சொல்லி மறுத்தேனே" என்று புலம்பி, நித்திரை செய்யாதவராகி, "தம்முடைய தோழருக்காக அருச்சகர் வடிவங்கொண்டு வந்த கடவுளைப் பாவியேன் மதித்தேனில்லை" என்று வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். சிவபெருமான், தாமாந் தன்மையை அறிதற்கு ஏற்ற திருக்கோலத்தோடும், தேவர் முனிவரர் முதலாகிய சமஸ்தகணங்களும் சூழும்படி, பரவையார் வீட்டினுள்ளே பிரவேசித்தார். அது கண்ட பரவையார், அதிசீக்கிரம் எழுந்துபோய்க் கடவுளுடைய திருவடியிலே விழுந்து நமஸ்கரிக்க, கடவுள் அவரை நோக்கி, "பரவையே! நாம் சுந்தரன் அனுப்பத் திரும்பவும் உன்னிடத்தில் வந்தோம். நீ இன்னும் முன் போல மாறாமல் ஊடலினால் வருந்துகின்ற அவன் உன்னிடத்தில் வருதற்கு உடன்படல் வேண்டும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குப் பரவையார் "தேவரீர் பிராமணர் வடிவங்கொண்டு முன் இங்கே எழுந்தருளிவந்தீர். பின் உண்மையாகிய இந்தத் திருக்கோலத்தோடு இப்பொழுது எழுந்தருளிவந்தீர். அடியேன் பூர்வசென்மத்திலே செய்த தவப்பயன் இதுவோ" என்று விண்ணப்பஞ் செய்து வியந்து, பின்பு "பிரம விஷ்ணுக்களாலும் அறியப்படாத தேவரீர் அன்பர் பொருட்டு இரவிலே மாறாமல் அங்கும் இங்கும் திரிந்து எளியவராவீராகில், சிறியேன் இதற்கு உடன்படாமல் யாதுசெய்வேன்" என்றார். கடவுள் அதைக் கேட்டு, "நன்று சொன்னாய்" என்று திருவாய் மலர்ந்தருளி, புறப்பட்டு சுந்தரமூர்த்திநாயனாரிடத்திற் போனார். சுந்தரமூர்த்தி நாயனார் அவரைக் கண்டு எதிர்கொண்டு நமஸ்கரித்து "சுவாமி! யாது சொல்வாரோ" என்று அறியாதவராகி, "சுவாமி! அடியேனுடைய உயிரைக் காவாமல் இடர்செய்கின்ற பரவையிடத்தினின்றும் என்ன உத்தரம் கொண்டு வந்தீர்" என்று கேட்க; கடவுள் "உன்மேலே பரவைக் கொண்ட கோபத்தைத் தணிவித்தோம். நீ இனி அவரிடத்திற் போகலாம்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதுகேட்ட நாயனார் மனசிலே களிப்படைந்து, "சுவாமி! போக மோக்ஷம் இரண்டையும் கொடுத்தருளுகின்றவர் தேவரீரே என்பதை யாவர்க்கும் புலப்படுத்தியருளினீர். இனி அடியேனுக்கு இடர் ஏது" என்றுசொல்லித் திருவடியிலே விழுந்தார். உடனே சிவபெருமான் மறைந்தருளினார். விழுந்த நாயனார் எழுந்து பரவையார் வீட்டுக்குப் போகத்தொடங்கினார். அப்பொழுது அவருடைய பரிசனங்களெல்லாம் விழித்து எழுந்தன. நாயனார் அப்பரிசனங்ள் பக்கத்திலே சூழ, தேவர்கள் பஷ்பமாரி பொழிந்து, துதிக்கச் சென்று பரவையார் வீட்டை அடைந்தார். அதற்குமுன் மிகுந்த விருப்பத்தோடும் தம்முடைய வீடு முழுதையும் அலங்கரிப்பித்துத் தீபதூபங்களும் நிறைகுடமும் நிறைத்துத் தோழியர்களோடு வாயிலிலே வரவு பார்த்து நின்ற பரவையார், அங்கே எழுந்தருளிவந்த நாயனாரைக் கண்டு, மகாசந்தோஷங்கொண்டு அவரை நமஸ்கரிக்க; அவர் கையினாலே பரவையாரைப் பிடித்துக் கொண்டு, உள்ளே போய்ச் சேர்ந்தார். அவ்விருவரும் பரமசிவனுடைய திருவருளின் மகிமையைப் புகழ்ந்துகொண்டு முன்போல ஐக்கியமாகக் கூடியிருந்தார்கள்.

சுந்தரமூர்த்திநாயனார் தாம் தினந்தோறும் சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு திருவாரூரில் வசிக்குங்காலத்திலே; தாம் பரமசிவனைத் தூதனுப்பிய சமாசாரத்தைத் திருப்பெருமங்கலத்திலிருந்த ஏயர்கோன்கலிக்காம நாயனார் கேள்வியுற்று அது தகுதி அன்று என்று தம் மேலே கோபங்கொண்டிருத்தலை அறிந்து, அதைக் குறித்துப் பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் அக்கலிக்காம நாயனாரைச் சூலைநோயினால் வருத்தி, அவரிடத்தில் எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்று அருளிச் செய்து, அவர் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு அந்நோயைத் தீர்ப்பதற்கு உடன்படாமையைக் கண்டு, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் சென்று. "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த்தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு மனமகிழ்ந்து, அவரிடத்திற்குப் போம்படி பிரஸ்தானமாகி, சூலைதீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு ஆளனுப்பினார். அவ்வாளினாலே அவர் வரவை அறிந்த கலிக்காமநாயனார் உடைவாளினாலே தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்து போனார். சுந்தரமூர்த்தி நாயனார் அங்கே சென்ற போது, கலிக்காமநாயனார் இறந்துக் கிடந்ததைக் கண்டு, "நானும் இவர் போலே இறந்து போவேன்" என்று சொல்லி உடைவாளை எடுத்தார். உடனே பரமசிவனுடைய திருவருளினால் கலிக்காமநாயனார் உயிர்த்து எழுந்து, அவர் கையில் வாளைப் பிடித்துக் கொள்ள; அவர் விழுந்து நமஸ்கரித்தார். கலிக்காமநாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரை நமஸ்கரித்தார். பின்பு இருவரும் எழுந்து ஒருவரையொருவர் தழுவி அதிக நண்புள்ளவரானார்கள் பின் சுந்தரமூர்த்திநாயனார் கலிக்காமநாயனாரோடு திருப்புன்கூருக்குப் போய் சுவாமிதரிசனஞ் செய்து "அந்தணாளனுன்னடைக்கலம்" என்னுந் திருப்பதிகம் பாடி, சில நாட்சென்றபின்பு திருவாரூரை அடைந்தார், அவ்விடத்திலே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு கலிக்காமநாயனார் தம்முடைய ஊருக்குத் திரும்பிவிட, சுந்தரமூர்த்திநாயனார் சிலநாள் அங்கிருந்து, பின் திருநாகைக்காரோணத்துக்குப்போய், சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, பொன்னும் நவரத்தினஞ்களும் ஆபரணங்களும் வஸ்திரங்களும் குதிரைகளும் உடைவாளும் பிறவும் பெற்று, பிறஸ்தலங்களையும் வணங்கிக் கொண்டு, மீண்டு அத்திருவாரூரிற் சேர்ந்து எழுந்தருளியிருந்தார்.

அப்பொழுது சேரமண்டலத்திலுள்ள கொடுங்கோளூரிலிருந்து சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய பத்தி மகிமையைப் பரமசிவத்தினால் அறிந்து, அவரைத் தரிசிக்க விரும்பித் திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனார் மகிழ்ச்சியோடு அவரை எதிர்கொள்ள; அவர் சுந்தரமூர்த்தி நாயனாரை நமஸ்கரித்தார். உடனே சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை நமஸ்கரித்து, அவரை எடுத்துத்தழுவ; அவரும் தழுவினார். இப்படி இவர்கள் நண்புகலந்தமையால், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சேரமான்றோழர் என்னும் பெயர் உண்டாயிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான்பெருமாணாயாரைக் கையிலே பிடித்துக் கொண்டு, திருக்கோயிலிலே பிரவேசித்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு, பரவையார் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், அவருக்கும் அவரோடு வந்த சமஸ்தசனங்களுக்கும் விருந்துசெய்து, சில நாள் அவரோடு அங்கிருந்து, பின் பாண்டியநாட்டிலிருக்கின்ற மதுரை முதலாகிய சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரைசெய்ய விரும்பி, வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு திருவாரூரை நீங்கி, கீழ்வேளூரை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, திருநாகைக் காரோணத்துக்குச் சென்று திருப்பதிகம் பாடி, சில நாள் அங்கிருந்து, வேதாரணியத்திற்குப் போய் திருக்கோயிலிலே சென்று, திருநாவுக்கரசு நாயனாராலும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராலும் முறையே திறத்தற்கும் அடைத்தற்கும் திருப்பதிகம் பாடப்பெற்ற திருவாயிலை அடைந்து, ஆனந்தபாஷ்பம் சொரிந்து அந்நாயன்மார்களை நினைந்து வணங்கி, வேதங்களால் அருச்சிக்கப்பட்ட கடவுளை நமஸ்கரித்து, "யாழைப்பழித்து" என்னுந் திருப்பதிகம் பாடிப் புறப்பட்டு, சிலநாள் அங்கிருந்து, அகத்தியான்பள்ளிக்குப்போய்ச் சுவாமிதரிசனஞ்செய்து, குழகர்க் கோடிக்குப்போய்ச் சுவாமிதரிசனஞ் செய்து "கடிதாய் கடற்காற்று" என்னும் திருப்பதிகம்பாடி, சோழநாட்டைக் கடந்து, பாண்டி நாட்டை அடைந்தார்.

அந்நாட்டிலே திருப்புத்தூரை வணங்கி, மதுரைக்குச் சமீபித்து; அம்மதுரையினின்று வந்து தங்களை எதிர்கொண்ட பாண்டியராசாவோடும் பாண்டியராசாவுடைய புத்திரியை விவாகஞ்செய்துகொண்டு அங்கிருந்த சோழராசாவோடும் திருக்கோயிலிலேபோய், சோமசுந்தரக்கடவுளை வணங்கித் திருப்பதிகம் பாடிப் புறப்பட்டார். பாண்டியர் அவர்களை ஓர் இரத்தினமாளிகைக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கேயிருத்தினார். சுந்தரமூர்த்திநாயனாரும் சேரமான்பெருமாணாயனாரும் சிலநாள் அங்கே இருந்துக்கொண்டு தினந்தோரும் சுவாமி தரிசனஞ்செய்து வந்தார்கள். பின் சுந்தரமூர்த்திநாயனார் அவ்வரசர் மூவரோடும் மதுரையை நீங்கி திருப்பூவணத்துக்குச் சமீபித்து, பக்கத்திலே வருந்திருத்தொண்டர்கள் அந்தத்தலத்தைக் காட்ட; அதன்மேல் "திருவுடையார்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு ஸ்தலத்திலே போய், திருக்கோயிலிலே பிரவேசித்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, அந்தத் தலத்தில் இருந்தார். சிலநாளாயினபின், அவ்வரசர் மூவரோடும் திருப்பூவணத்தை நீங்கி, மதுரையிற்சென்று, தினந்தோறும் சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு சிலநாள் அங்கிருந்தார். அந்நாட்களிலே திருவாப்பனூர் திருவேடகம் முதலாகிய சிவத்தலங்களுக்கும் போய்த் தரிசனஞ்செய்து கொண்டு திரும்பி மதுரையில் வந்திருந்தார். அதற்குப் பின், அரசர் மூவரோடும் திருப்பரங்குன்றுக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து, பரமசிவனுடைய திருவடிகளுக்குத் தொண்டுசெய்யும் அருமையை நினைந்தஞ்சுதும் என்று "கோத்திட்டையும் கோவலும்" என்னுந் திருப்பதிகம் பாடினார். அவ்வருமையை அரசர் மூவருங்கேட்டு அஞ்சி, சுந்தரமூர்த்திநாயனாரை வணங்கினார்கள். அதன்பின் சுந்தரமூர்த்திநாயனார், பாண்டியராசாவும் சோழராசாவும் அனுமதிபெற்றுக் கொண்டு மதுரைக்குத் திரும்பிவிட, சேரமான்பெருமாணாயரோடும் அந்தஸ்தலத்தை நீங்கி வழிக்கொண்டு திருக்குற்றாலம், திருக்குறம்பலா, திருநெல்வேலி முதலிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு, இராமேச்சரத்துக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டு சில நாள் அங்கிருந்தார். ஈழமண்டலத்தில் இருக்கின்ற மாதோட்டத்துத் திருக்கேதீச்சரத்தை அவ்விராமேச்சரத்திலிருந்து கொண்டே வணங்கி அதன்மேலே பதிகம் பாடினார். இராமேச்சரத்தை நீங்கித் திருச்சுழியலிலே போய்ச் சுவாமிதரிசனஞ் செய்து பதிகம் பாடிக் கொண்டு, அங்கே இருக்க, சுவாமி அவருக்குச் சொப்பனத்திலே காளை வடிவங்கொண்டு கையிலே பொற்சொண்டும் முடியின்மேல் சுழியமும் உடையவராகித் தோன்ற "நம்முடைய வாசஸ்தானம் கானப்பேர்" என்று சொல்லி மறைந்தருளினார். சுந்தரமூர்த்திநாயனார், விழித்திழுந்து, திருவருளை வியந்து, தாங்கண்ட சொப்பனத்தைச் சேரமான்பெருமாணாயனாருக்குத் தெரிவித்து, திருச்சுழியலை நீங்கி, "தொண்டரடித் தொழலும்" என்று எடுத்து "கண்டு தொழப் பெறுவ தென்றுகொலொ வடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே" என்று திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு திருக்கானப்பேருக்குப் போய் சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி அங்கே சிலநாள் இருந்து அதனை நீங்கி, திருப்புனவாயிலை அடைந்து, பதிகம் பாடி, பாண்டிநாட்டைக் கடந்து சோழ மண்டலத்தை அடைந்து, பாதளீச்சரத்தை வணங்கி திருவாரூரிலே சேர்ந்து வன்மீகநாதரை வணங்கிப் பதிகம் பாடி; அரசரோடும் பரவையார் வீட்டுக்குபோய் எழுந்தருளியிருந்தார்.

பலநாட் சென்றபின், சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாரை வணங்கி, தம்முடைய ஊருக்கு எழுந்தருளி வரும்படி பிரார்த்திக்க; சுந்தரமூர்த்திநாயனார் அதற்கு இசைந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்து போய், வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு, திருவாரூரை நீங்கி, மேற்றிசையை நோக்கிக் காவேரிநதியின் தென்கரைவழியே சென்று, திருக்கண்டியூரை அடைந்து சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு புறப்பட்டார். அப்பொழுது வடகரையிலிருக்கின்ற திருவையாறு எதிரே தோன்ற; சேரமான் பெருமாணாயனார் கண்டு வணங்கி, சுந்தரமூர்த்திநாயனாரைப் பார்த்து, "சுவாமி! அடியேன்மனம் திருவையாற்றை வணங்க விரும்புகின்றது. நாங்கள் இந்நதியைக் கடந்து போய் வணங்குவோம்" என்றார். அதைக்கேட்ட சுந்தரமூர்த்திநாயனார் அக்காவேரிநதி இருகரையையும் அழித்து ஓடங்கள் செல்லாதபடி பெருகுதலைக் கண்டு, "பரவும் பரிசொன் றறியேனான்" என்று திருப்பதிகந் தொடங்கி, திருப்பாட்டி னிறுதிதொறும் "ஐயாறுடைய வடிகளோ" என்று சொல்லி அழைத்துப் பாடினார். அப்பொழுது கடவுள், கன்று அழைத்தலை கேட்டுக் கதறிக் கனைக்கின்ற பசுப்போல, சராசரங்களெல்லாம் கேட்கும்படி "ஓலம்" என்று சொல்லியருளினார். உடனே காவேரிநதி பிரிந்து வழிகாட்டியது மேற்றிசையினீர் பளிங்குமலைபோல நிற்க, கீழ்த்திசையினீர் வடிந்த நடுவழி மணற்பரப்பாய் இருந்தது. அதனைக் கண்ட அடியார்களெல்லாரும், உரோமாஞ்சங் கொள்ள ஆனந்தபாஷ்பஞ்சொரிய, அஞ்சலிசெய்தார்கள். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை நமஸ்கரிக்க, சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை வணங்கி, "கடவுள் உமக்கருளியதன்றோ" என்று சொல்லி கடவுளைத் துதித்துக் கொண்டு, அவரோடும் பரிசனங்களோடும் நதியின் மத்தியிலிருக்கின்ற மணல்வழியே போய், திருவையாற்றை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, திரும்பி காவேரி நதியின்முன் சென்றபடியே நடுவழியே வந்து தென்கரையி லேறினார். உடனே பிரிந்து மலைபோல நின்ற நீர் தொடர்ந்து பாய்ந்தது. அதைக் கண்டு சுந்தரமூர்த்திநாயனாரும், சேரமான்பொருமாணாயனாரும் அதிசயித்து, திருவருளைத் துதித்துக் கொண்டு, மேற்றிசையை நோக்கி வழிக்கொண்டு, கொங்க நாட்டை அடைந்து, அதைக் கடந்து மலைநாட்டிற் சென்று அங்குள்ளார்களெல்லாரும் வந்து எதிர்கொள்ளக் கொடுங்கோளூரிலே போனார்கள். போனபின்பு சேரமான் பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாரைத் திருவஞ்சைக் களத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே சுந்தரமூர்த்திநாயனார் சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, புறப்பட்டார். சேரமான் பெருமாணாயனார் யானையின் மேலே முன்னே அவரை ஏற்றி பின் தாமும் ஏறி, வெண்சாமரம் வீசிக்கொண்டுசென்று, தம்முடைய மாளிகையின் வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி அந்நாயனாரை இறக்கி, மாளிகைனுள்ளே கொண்டு போய் சிங்காசனத்திலிருத்தி, அவருக்கு அருச்சனை பண்ணி, விருந்து செய்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாணாயனாரோடும் அந்தக் கொடுங்கோளூரிலே சிலநாள் இருந்தார். ஒருநாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற வன்மீகநாதருடைய திருவடிகளை நினைந்து; "பொன்னு மெய்ப்பொருளும்" என்று திருப்பதிகம் எடுத்துத் திருப்பாட்டினிருதிதோறும் "ஆரூரானை மறக்கலுமாமே" என்று பாடி, திருவாரூருக்குச் செல்லும் பொருட்டு அடியார்களோடு எழுந்து வழிக்கொண்டு சென்றார். செல்லும் பொழுது, சேரமான் பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்த அவரைப் பின்றொடர்ந்து போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு மந்திரிகளை அழைத்து தம்முடைய நகரத்திலிருக்கின்ற களஞ்சியத்திலுள்ள பொன், இரத்தினம், ஆபரணம், வஸ்திரம் சுகந்த வர்க்கம் முதலிய திரவியங்களெல்லாம் பல ஆட்களின் மேலே சுமத்தி அனுப்பும்படி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அப்படியே செய்தார்கள். சேரமான் பெருமாணாயனார் அந்தச் சுமையாட்களைச் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பரிசனத்துக்கு முன் செல்லும்படி அனுப்பி அவரைவிழுந்து நமஸ்கரிக்க; அவர் அவரை தழுவி விடைக்கொடுத்து, மலைநாட்டை நீக்கிச் சுரங்களையும், கான்யாறுகளையும், வனங்களையும் கடந்து, திருமுருகன்பூண்டி வழியே செல்லுதற்குத் திருவுளங்கொண்டு போனார். அதற்கு அயலிலே போம்பொழுது, பரமசிவன் தம்முடைய பூதகணங்களை நோக்கி, "நீங்கள் வேடவடிவங்கொண்டு சென்று சுந்தரனுடைய பண்டாரங்களைக் கவருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவைகள் சுந்தரமூர்த்தி நாயனாருடைய சுமையாட்கள் வரும் வழியிலே வேடுவர்களாகிப்போய், வில்லை வளைத்து நாண் பூட்டி அம்புகளைத்தொடுத்து "நாங்கள் உங்களைக் கொன்று போடுவோம்; இத்திரவியங்களெல்லாவற்றையும் போட்டுவிட்டு போங்கள்" என்று சொல்லி, கோபத்தினாலே குத்தி, அந்தத் திரவியங்களெல்லாவற்றையுங் கவர்ந்துகொண்டன. அவர்கள் துன்பத்துடனே ஓடிப்போய், சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்திலே சேர்ந்தார்கள். அவ்வேடுவர்களோ சிவாஞ்ஞையினாலே சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்தில் செல்லாமல் நீங்கிவிட; சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியிலே சென்று திருக்கோயிலிலே பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்று திருப்பதிகமெடுத்துத் திருப்பாட்டினிறுதிதோறும் "எத்துக்கிங்கிருந்தீ ரெம்பிரானீரே" என்று பாடியருளினார். உடனே கடவுளுடைய திருவருளினால் அவ்வேடுவர்கள் தாங்கள் பறித்த திரவியங்களெல்லாவற்றையும் அந்தத்திருக்கோயில் வாயிலிலே கொண்டு போய்க் குவித்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் அது கண்டு, சுவாமியை வணங்கி அவைகளை எடுத்துக்கொண்டு முன்னே செல்லும்படி சுமையாட்களை ஏவி, அவ்விடத்தை நீங்கி, கொங்கதேசத்தைக் கடந்து போய், திருவாரூரை அடைந்து, அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.

சிலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாணாயனாரை நினைந்து அவரிடத்திற்குப் போம்படி கருதி, சோழமண்டலத்தைக் கடந்து கொங்கதேசத்தை அடைந்து திருப்புக்கொளியூரிற்சென்று, அங்கே ஒரு வீதியிலே இரண்டு வீடுகளில் ஒன்றிலே மங்கலவொலியும் மற்றதிலே அழுகையொலியும் எழுதலைக்கேட்டு, அங்கே இருந்த பிராமணர்களை நோக்கி, "இவ்விரண்டொலியும் ஒழுங்கு நிகழ்வது என்னை" என்று வினாவினார். அதுகேட்ட பிராமணர்கள் வணங்கி. "ஐந்து வயசுடைய இரண்டு புதல்வர்கள் குளத்திலே குளித்த பொழுது ஓரு புதல்வனை முதலை விழுங்கிற்று; மற்றப் புதல்வன் பிழைத்துக் கொண்டான். இந்த வீட்டில் ஒலி பிழைத்த புதல்வனுக்கு உபநயனஞ்செய்யும் ஒலி இந்த வீட்டில் ஒலி இறந்தப் புதல்வனைக் குறித்து அழும் ஒலி" என்று சொன்னார்கள். அதை கேட்டு திருவுளமிரங்கி நின்ற சுந்தரமூர்த்திநாயனாரை, புதல்வனை இழந்த பிராமணரும் மனைவியுங்கண்டு, ஓடி வந்து முகமலர்ச்சியோடு அவருடைய திருவடிகளை நமஸ்கரித்தார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுடைய முகத்தை நோக்கி; "புதல்வனை இழந்தவர்கள் நீங்களா" என்று சொல்லியருள அவர்கள் பின்னும் வணங்கி. "சுவாமி! அது முன்னே நிகழ்ந்து போயிற்று. அது நிற்க, அடியேம் தேவரீரை வணங்குதற்கு நெடுங்காலமாக அவாவியிருந்தோம். அவ்வன்பு பழுதாகாமல் தேவரீர் இங்கே எழுந்தருளப் பெற்றோம்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். அதைக்கேட்ட நாயனார்; "இந்தப்பிராமணனும் மனைவியும் தங்கள் புதல்வனை இழந்தத் துன்பத்தை மறந்து நாம் வந்ததற்காக மனம் மகிழ்கின்றார்கள். ஆகையால் நாம் இவர்கள் புதல்வனை அம்முதலைவாயினின்றும் அழைத்துக் கொடுத்து, அவிநாசியில் வீற்றிருக்கின்ற நமது கடவுளை வணங்குவோம்" என்று அருளிச்செய்து, "அந்தப்புதல்வனை முதலை விழுங்கிய வாவி எங்கே" என்று வினாவி. அதன் கரையிலே எழுந்தருளி, அம்முதலை தான் விழுங்கிய புதல்வனைக் கொண்டுவரும் பொருட்டு திருப்பதிகம் பாடத் தொடங்கினார்.


		"உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா
		யரைக்கா டரவாவாதியு மந்தமு மாயினாய்
		புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
		கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே"

என்னும் நான்காந்திருப்பாட்டு முடிதற்குமுன், இயமன் அந்தப்புதல்வனுடைய உயிரைக் கொண்டுவந்து, அவ்வாவியில் உள்ள முதலை வயிற்றினுள்ளே முந்தின தேகத்தைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சியையும் உடையதாகத் தோற்றுவித்து, அதனுள்ளே புகுத்துவிட்டான். உடனே முதலை அந்தப் புதல்வனைக் கரையிலே கொண்டுபோய் உமிழ்ந்தது. அப்பொழுது மாதாவானவள் ஓடிப் போய் அப்புதல்வனை எடுத்துக் கொண்டு வந்து நாயகனோடு சுந்தரமூர்த்திநாயனார் உடைய திருவடியிலே விழுந்து நமஸ்கரித்தாள். இவ்வற்புதத்தைக் கண்ட தேவர்கள் ஆகாயத்தினின்று நாயனார் மேல் புஷ்பமாரி பொழிந்தார்கள். பிராமணர்களெல்லாரும் உத்தரீயங்களை ஆகாயத்திலே வீசி ஆரவாரித்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் அந்தப்புதல்வனையும் அழைத்துக்கொண்டு, அவிநாசிக்குப் போய், சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடிக் கொண்டு திரும்பி, அப்புதல்வன் வீட்டிற்சென்று, அவனுக்கு உபநயனஞ் செய்வித்து, கொங்கதேசத்தைக் கடந்து மலை நாட்டை அடைந்தார்.

அதனையறிந்த மலைநாட்டின்கணுள்ள சிவனடியார்கள் விரைந்தோடிப் போய்ச் சேரமான்பெருமாணாயனார் திருமுன்சென்று, "மகாராஜாவே! சுந்தரமூர்த்திநாயனார் திருப்புக்கொளியூரிலே முதலைவாய்ப் பிள்ளையை மீட்டு எழுந்தருளி வருகின்றார்" என்று விஞ்ஞாபித்தார்கள். அது கேட்ட சேரமான்பெருமாணாயனார் பேரானந்தப் பெருங்கடலின் மூழ்கி, அவர்களுக்குப் பொற்கிழிகளையும் இரத்தினாபரணங்களையும் வஸ்திரங்களையும் கொடுத்தார். கொடுத்தபின், "திருவாரூரிற் சைவசிகாமணியார் எழுந்தருளிவருகின்றார்; நம்மையாண்டருளுஞ் சுந்தரமூர்த்திநாயனார் எழுந்தருளி வருகின்றார்; உலகமெல்லாம் உய்யும் பொருட்டு நமக்கு உயிர்த்துணைவராகிய தலைவர் எழுந்தருளி வருகின்றார். திருவவதாரஞ் செய்தருளிய பரமாசாரியார் எழுந்தருளிவருகின்றார்" என்று முரசறைவித்து, தமது திருநகரமெங்கும் மிக அலங்கரிப்பித்து, யானை மேற்கொண்டு மந்திரிமார்களும் சேனைகளும் சூழப் புறப்பட்டுச் சென்று, தூரத்தே சுந்தரமூர்த்திநாயனாரைக் கண்டவுடனே யானையினின்றும் இறங்கி, விரைந்தோடிப் போய் அவருடைய திருவடிகளை நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனாரும் சேரமான் பெருமாணாயனாரை வணங்கித் தழுவினார். அது கண்ட இருபக்கத்தாரும் ஆனந்த சாகரத்தின் மூழ்கி ஆரவாரித்தார்கள். சேரமான் பெருமாணாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை யானை மேலேற்றித் தாம் பின்னே அவருக்கு வெள்ளைக் குடை பிடித்துக்கொண்டு, நானாவித வாத்தியங்கள் ஒலிக்கச் சென்று, தமது திருநகரத்திற் புகுந்து, தமது திருமாளிகை வாயிலை அடைந்து அந்நாயனாரை யானையினின்றும் இறக்கி, உள்ளே அழைத்துக்கொண்டு போய்ச் சிங்காசனத்தில் இருத்திப் பூசித்து வணங்கினார். சுந்தரமூர்த்திநாயனார் அங்கே எழுந்தருளியிருந்தார். இருந்த நாட்களிலே அம்மலை நாட்டிலிருக்கின்ற சிவஸ்தலங்கள் பலவற்றிற்கும் போய்ச் சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு மகோதை நகரத்தை அடைந்தார்.

இப்படிப் பலநாட்சென்றபின், ஒருநாள், சேரமான் பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்ஞைக்களத்துக்கு எழுந்தருளி, அங்கிருக்கின்ற சிவாலயத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து, உள்ளே புகுந்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து நின்று, அக்கினியிற்பட்ட மெழுகுபோல மனங் கசிந்துருக, இரண்டு கண்ணினின்றும் ஆனந்தவருவி சொரிய, சரீரத்திலே உரோமஞ்சங்கொள்ள இரண்டு கைகளும் சிரசின் மேல் ஏறிக்குவிய, அடியேனை இப்பிரபஞ்சவாழ்க்கையினின்றும் நீக்கித் தேவரீருடைய திருவடியிலே சேர்த்தருளல் வேண்டுமென்னுங் குறிப்போடு "தலைக்குத் தலைமாலை" என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது திருக்கைலாசகிரியிலே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாகிய சிவபெருமான் விட்டுணு பிரமன் முதலிய தேவர்களை நோக்கி, "நீங்கள் போய் நம்முடைய தோழனாகிய சுந்தரனை வெள்ளையானையின் மேலேற்றிக்கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தருளினார். அதைக்கேட்ட தேவர்கள் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்று, வெள்ளையானையையுங் கொண்டு, திருவஞ்ஞைக்களத்தை அடைந்து, திருக்கோயிலை வலஞ்செய்து திருவாயிலிலே போய், உள்ளே நின்று எழுந்தருளிவந்த சுந்தரமூர்த்திநாயனாரை எதிர்கொண்டு சிவபெருமானுடைய ஆஞ்ஞையைத் தெரிவித்தார்கள். அப்பொழுது சுந்தரமூர்த்திநாயனார் சுவாமியை நினைத்து நமஸ்கரித்து, எழுந்து, தேவர்களுக்கு எதிரே போனார். தேவர்கள் அவரைப் பிரதக்ஷிணஞ் செய்து வெள்ளையானையின் மேலேற்ற; அவர் பஞ்சவாத்தியங்கள் ஆரவாரிக்கவும், தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து புஷ்பமாரி பொழியவும், தம்முடைய தோழராகிய சேரமான் பெருமாணாயனாரைத் திருவுளத்திலே நினைத்துக் கொண்டு சென்றார்.

சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணமே அருகில் நின்ற ஓர் குதிரையின் மேலேறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய், வெள்ளையானையின் மேலேறிக்கொண்டு ஆகாயத்திற்செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரைக்கண்டு, தாமேறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து, சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து, அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்க் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படு மெல்லைவரைக்கும் ஆகாயத்திலே கண்டு பின் காணாமையால் மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தைச் சேதித்து, வீரயாக்கையைப் பெற்றுப் போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக்கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனார் முன் செல்லப் பின் சென்ற சுந்தரமூர்த்திநாயனார் "தானெனை முன்படைத்தான்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு, திருக்கைலாசமலையின் தெற்கு வாயிலுக்கு முன் போனார். போனவுடனே இருவரும் யானையினின்றும் குதிரையினின்றும் இறங்கி, பல வாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிருவாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு நின்றார். சுவாமி அவரை நோக்கி, "சுந்தரா வந்தாயோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார்; "சுவாமி! அடியேன் செய்த பிழையைப் பொறுத்து அடியேனைப் பந்தத்தினின்றும் நீக்கி அடியேனுக்குத் திருவடி தந்தருளிய பெருங்கருணை அடியேன் தரத்ததோ" என்று சொல்லி, பலமுறை நமஸ்காரஞ்செய்து சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்தி நின்றார். பின்பு, "சுவாமி! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்ய; சிவபிரான் அவரை உள்ளே அழைப்பித்து, "நீயும் ஆலால சுந்தரனும் நம்முடைய கணங்களெல்லாவற்றிற்குந் தலைவராயிருங்கள்" என்று அருளிச்செய்தார். அதைக்கேட்டு திருக்கைலாசபதியை நமஸ்கரித்து எழுந்து, அவருடைய திருவருளைத் தலைமேற்கொண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் ஆலாலசுந்தரராகி முன்னே தாஞ்செய்த திருத்தொண்டைச் செய்பவரும் சேரமான்பெருமாணாயனார் கணநாதராகி அவர் செய்யுந்தொழிலைச் செய்பவருமாயினார்கள்.

முன்னே பூமியில் அவதரித்த பரவையாரும் சங்கிலியாரும் முறையே கமலினியாரும் அநிந்திதையாருமாகி, பார்வதிதேவியாருக்குத் தாங்கள் முன்செய்த திருத்தொண்டைச் செய்து வந்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் தாம் வழியிலே அருளிச் செய்த திருப்பதிகத்தைத் தக்ஷிண பூமியிலே ஏற்றும்பொருட்டுச் சமுத்திரராஜனாகிய வருணனிடத்திலே கொடுத்தருள; அவன் அதைத் திருவஞ்சைக் களத்திலே உய்த்துத் தெரிவித்தான்.

திருச்சிற்றம்பலம்.

 


சுந்தரமூர்த்தி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் புராணத்துக் காப்பியத் தலைவர் என்ற நிலைக்கேற்பவும் அதன் மூலநூலாகிய திருத்தொண்டத் தொகையின் அமைவைப் பொறுத்தும் அவர் வரலாறு புராணத்தின் முதலிலும் இடையிலும் முடிவிலுமாகச் செறிந்து வருதலால் அவர் வரலாற்றுண்மை சார்பான சூசனம் இந்நூலின் முடிவில் தனியாக இடம் பெறுகின்றது.

1. ஓலை காட்டி ஆட்கொளப் பெற்றமை

யதார்த்தத்திற் சீவன் என்றுண்டோ அன்றே சிவனுக்கடிமை என்பதோர் வழக்குண்டாம். அது, 'என்று, நீ அன்று நான் உன்னடிமை யல்லவோ' என வருந் தாயுமான சுவாமிகள் வாக்காற் பெறப்படும். எனினும், உயிரானது மலமாயாகன்ம மறைப்பு மயக்கங்களுக் குட்பட்டிருக்கும் அதன் பெத்தநிலைக் காலமெல்லாம் அத்தொடர்பு பற்றிய பிரக்ஞை சற்றுமில்லாமலே யிருந்து விடுதலும், கால அடைவில் வாய்க்குஞ் சிவபுண்னியப் பேறாக நிகழும் இருவினையொப்பும் மலபரிபாகமு மாகிய பக்குவ மிகுதியால் சிவம் ஞான குருவாக வந்து அம்மறைப்பும் மயக்கமும், நீக்கப்பெற்ற போது மட்டும் அத்தொடர்புநிலையைப் பிரக்ஞாபூர்வமாக அறிந்தொழுகும் வாய்ப்பைப் பெறுவதும் சாஸ்திர ரீதியாக அறியப்படுவனவாகும். அங்ஙனம், உரிய பக்குவத்தில் தானாகவே சீவனை ஆட்கொள்ள வேண்டிய பொறுப்புச் சிவனுக்கு ஏலவே உளதாதல், "ஏழுடை யான்பொழில் எட்டுடையான்புயம் என்னை முன்னாள் ஊழ்உடை யான்புலியூர்" எனவருந் திருக்கோவையார்ச் செய்யுளானும் அறியப்படும். "என்னை ஆளும் ஊழ் முன் உடையான்" என்றமையானே இது சிவனுக்கு மீற முடியாத ஒரு உடன்படிக்கை நியதியாதலும் பெறப்படும்.

இனி, இந்நியதியைப் பிரதிபலிக்கும் பொருத்தசாதனவடிவிலான ஆவணம் ஒன்றும் உள்ளதாகத் திருமூலர் தெரிவிக்கும் புதிருமொன்றுளதாம். சீவசிவ தொடர்பின் மூலத்தை உணர்ந்தவர் என்ற விளக்கத்தின் பேரிலேயே திருமூலர் எனும் பெயர் உளதாயிற்று எனப்படுதலால் அவர் வாக்கு ஆப்தவாக்கியமாகவே கொள்ளப்படும். அது, "என்றாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்-அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்-நன்றா உலகம் படைத்தான் எழுதினான்-நின்றான் கடல்வண்ணன் நேரெழுத்தாயே" எனவரும். இப்புராணத்துத், தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியில் இடம் பெறுஞ் சுந்தரர் வரலாற்றிலும் அது போன்ற ஒரு மூல ஆவணப் படிவங்காட்டப் படுகின்றது. திருமூலர் காட்டும் படிவம் போல அது ஒரு பொதுமைநிலை அமைப்பாக இல்லாமல், "என்றாயோ டென்னப்பன்" என்பதற்கு நேர், "அருமறை நாவலாதி சைவன் ஆரூரன்" என்றும் "சிவனுக்கு" என்பதற்கு நேர், "பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு" என்றும். "ஏழேழ் பிறவியும்" என்றதற்குநேர், "யானும் என்மரபுளோரும்" என்றும் ஆவணம் எதற்கென்பது கூடப் புலப்படுமாறு "வழித்தொண்டு செய்தற்கு" என்றும் ஒரு சிறப்புநிலை அமைப்பாக இருத்தல் கருதத்தகும். அது சேக்கிழார் வாக்கில், "அருமறை நாவலாதி சைவனா ரூரன் செய்கை-பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானு மென்பால்-வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை-இருமையால் எழுதி நேர்ந்தேனிதற்கிவை யென்னெழுத்து" எனவரும்.

இவற்றின் பிரகாரம் அத்தகைய ஆவணம் சாஸ்வதமானது என்பதும் அதன் அடிப்படையில் எவ்வுயிர்க்கும் ஏதோ ஒரு தடவையில் அது நடைமுறைப் பிரயோகம் பெற்றே ஆகும் என்பதும் சுந்தரரும் அவ்வகையிலேயே ஆட்கொள்ளப் பெற்றார் என்பதும் அறியலாகும். ஆனால், சாமானியத்தில் அது ஒரு உள்வீட்டலுவல் என்ற மாதிரியில் விசேட ஏற்பாடாக ஏதும் இருந்ததாக அயலறியாமலே நடந்து விடும் என்பர். எனினும் சிவபெருமானால் ஆட்கொள்ளப் பட்டுள்ளவராக நன்கறியப்படும் திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் விஷயத்தில் சிலர் ஓரளவு பிரசித்தமாக எதிர்நின்றாட் கொள்ளப்பட்டதும் திருநீலகண்ட நாயனார் புராணத்தில் வரும், "யாவருங்காண உன்னை வளைத்து நான் கொண்டேயன்றிப் போவதுஞ் செய்யே னென்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்" என்பது போல்வனவற்றால் அறியப்படும். ஆனால், மூல ஆவணத்தை வெளிப்படுத்தி, அத்தாட்சிபூர்வமாக நிரூபணம் பண்ணி ஆளாந்தன்மையைப் பிரமாணிக்யப்படுத்தி ஆட்கொள்ளப்பட்ட செய்தி சுந்தர மூர்த்தி நாயனார் செய்தியில் வைத்தே அறியப்படுவ தாகின்றது. இவ்வளவுக்கு ஆடம்பரமான வகையில் இந்த ஆட்கொள்ளல் இடம் பெற்றுள்ளதாகும் போது இதற்குப் பிரத்தியேகமான விசேட காரணம் ஒன்று இருந்தேயாக வேண்டுதல் ஒருதலையாம்.

2. உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர்

குறித்த விசேட காரணம் யாதென்பது, சுந்தரரைத் தம் தியான மூர்த்தியாகவே கண்டு கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்துச் சருக்க இறுதிதோறும் அமைக்குந் துதிகளாகிய தியான சுலோகங்களில் ஒன்றில் இடம்பெறுதல் காணலாம். அது, "மலர்மிசை யயனும் மாலுங் காணுதற் கரிய வள்ளல்-பலர்புகழ் வெண்ணெய்நல்லூர் ஆவணப் பழமை காட்டி-உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாத முன்னித்-தலை மிசை வைத்து வாழுந் தலைமைநம் தலைமை யாகும்" என்பதில் அமையும். சிவபெருமான் ஆவணப்பழமை காட்டி ஆண்டுகொண்டதன் சார்பிலுள்ள விசேடம், சுந்தரரால் உலகுய்ய வைத்தலே என்பது இச்செய்யுளால் விளங்கநிற்றல் கருதத்தகும்.

மாயையிலிருந்து, தனு, கரண, புவன, போகங்களை ஆக்கிக் கொடுத்து உயிர்களை உலகில் வாழவிடுஞ் சிவனே, வாழும் உயிர்கள் இதாகிதந் தெரிந்து வாழக்கூடிய மனிதப் பிரப்பெய்தும் வேளையில் மெய்யுணர்ந்து உலகியற் சார்பாகும் பொய்ச்சார்பு விட்டு நீங்கிச் சிவப்பற்றாகிய மெய்ச்சார்பை அடைதற்கு ஆவனவெல்லாம் அறிந்து உகந்த முறையிற் செய்து கொண்டிருப்பவருமாவார். அங்ஙனஞ் சிவன் தமது காரணமற்ற கருணையினாற் புரியுந் திருவருட் கைங்கரியம் இருவகையிலடங்கும். மக்கள் கற்று கேட்டறிந்து அநுசரித்தொழுக வேண்டிய சமயமரபு, வழிபாட்டுமரபு, நாற்பாதமரபு, வேதாந்த மரபு, அவைகடந்த சமரச மோனமரபு என்பவற்றை உற்பவிப்பித்து அவை நூல்வழி நின்று நிலவ வைத்தல் ஒருவகை. அவை பயனின்றிக்கிடந்து வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகப் போய்விடாமல், மக்கள் அவற்றின் யதார்த்தமான நற்பலப் பேறுகளைக் கண்முன்னே கண்டு அவற்றிற் சிரத்தை கொண்டு அவற்றை விரும்பி அநுசரித்து ஈடேறுதற்கு உபகாரமாம் அளவுக்கு, ஆத்மீக உயர்நிலைப் பண்புகள் பிரதிபலிக்க மக்கள் மத்தியிலே வாழ்ந்து தம் சொல்லாலுஞ் செயலாலும் நற்பணி புரிந்துகொண்டு அவர்களுக்கு முன்னிலை விளக்காய் விளங்கக் கூடிய அதி உத்தமர்களைக் காலாகாலத்தில் அவதரிக்கச் செய்து கொண்டிருப்பது ஒருவகை. அறியப்படாத காலத்தில் அவதரித்தவர்கள் போக அறியப்படுங் காலப்பகுதியில் அவ்வகையில் திருமூலர் முதலாகப் பலர் இங்கு அவதரித்துள்ளமை சரித்திர உண்மையாகும். அவ்வகையிலான அவதார புருடர்களாகப் பிற்காலத்திற் பிரசித்தமானவர்கள் சமயாசாரியர் நால்வர். அவர்களிற் சுந்தரமூர்த்தி நாயனார் ஒருவர். எனவே, பூவுலகில் அவர் அவதரிக்கச் செய்யப்பெற்ற திருவருட் கைங்கரியம் குறித்த இரண்டாவது வகையினதாம் என்க. வரலாற்றுண்மைப்படி திருக்கயிலையில் தமக்கு அணுக்கத் தொண்டராயிருந்த ஆலால சுந்தரரையே சிவபெருமான் உலகுய்ய அவதரிப்பித்துப் பிரத்தியேகமான ஒருமுறையில் உலகுய்ய ஆண்டுகொண்டருளினார் எனில், அவரால் உலகுய்ந்தவாறு பெரிதுஞ் சிந்தித்துணரத்தகும். அது பின்வருமாற்றான் அறியப்படும்.

3. திருத்தொண்டத்தொகைப் பேறு

உலகில் வாய்க்கும் ஏனைக் காட்சிகள் போலச் சிவனைக் காணுங் காட்சி பொதுமையில் உள்ளதாக என்றேனும் அறியப்பட்டதாக இல்லை. அதேவேளை அவனருளே கண்ணாகக் காணும் ஞானக் கண்ணுடையார்க்குத் தன்னை அவர் உணர வைக்குமாறுங் கேட்கப்படும். அது, "மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்-ஒப்புடைய னல்லன் ஒருவனல்லன் ஒரூர னல்லன் ஓருவம னில்லி-அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணி னல்லால்-இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே" எனுந் திருத்தாண்டகத்தால் அறியவரும். தோடுடைய செவிமுதலிய அங்க அவயங்களுடன் பொருந்தும் தமது உருவத்திரு மேனியைத் தானும் திருஞானசம்பந்தர் போன்ற உயர்பெரு நிலையினர்க் கன்றி அவர் காட்டியுள்ளதாக அறியப்படுமாறில்லை. அங்ஙனமாதலின் சாமானியரான நம்மனோர், சிவக்காட்சிபெறுதற்குஞ் சிவனைச் சிந்தித்தற்கும் நல்லதோர் ஊடகமாக மற்றொன்று வேண்டுவதன் இன்றியமையாமை தானே பெறப் படுவதாகும். அக்குறை தீருமாறு, சிவன் தன்னையுணர்ந்து தானாந் தன்மை பெறவல்ல மெய்யடி யார்களிடத்தில் தான் பிரகாசமாயிருந்து கொண்டு தன் திருவேடத்தையும் அவர்களுக்கு வழங்கிவைத்தலினாலே நம்முருவுக் கொத்த மனித உருவில் உலாவுபவர்களாகிய அச் சிவனடியார்களைக் காணுதல் மூலம் நம்மனோருஞ் சிவக்காட்சி பெறவும் அவர்கள் திருவுருவைச் சிந்தித்தல், வழிபடுதல் மூலம் சிவசிந்தனைப் பலனும் சிவவழிபாட்டுப் பலனும் பெறவும் வாய்ப்பளித்துள்ளமை உண்மை நூல்களால் உணரப்படும். அத்தகு மெய்யன்பர் சாக்ஷாத் சிவனே என்பது சிவஞான சித்தியாரில், "அறிவரியான் தனைநினைய ஆக்கையாக்கி அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவு கொடுத் தருளாற்-செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவேயாகும் சிவோகம் பாவிக்கு மத்தாற் சிவனு மாவர்-குறி யதனா லிதயத்தே யரனைக் கூடுங் கொள்கையினா லரனாவர் குறியொடுதா மழியும்-நெறியதனாற் சிவமாயே நின் றிடுவ ரென்றால் நேசத்தால் தொழுதெழுநீ பாசத்தால் விடவே" என வருவதனால் உணரப்படும்.

இவ்வகையில் நம்மனோர்க்குப் பரமோபகாரிகளாகிய மெய்யன்பர்களாக இவ்வுலகிற் காலாகாலங்களில் வாழ்ந்து மறைந்தோர்கள் பலராவர். சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொண்டருளிய சிவ பெருமான், திருவாரூரில் அவர்க்குத் தமது திருவடி தரிசனங்காட்டி அதன்மூலம் உலகில் இருக்கக் கூடுஞ் சிவனடியார்கள் இயல்பெல்லாம் விளங்க வைத்தருளி அதன் மேலும் தாமே அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகை பாடுவித்தருளினார். இதன்மூலம் உலகில் திருத்தொண்டர் பிரபாவம் ஆழ அகல விசாரித் தறியப் பட்டதுடன் அவ்விபர விளக்கங்களை மேற்கொண்டு திருத்தொண்டர் திருவந்தாதியும், மேல் அதன் விரிவாகத் திருத்தொண்டர் புராண காவியமும் தோன்றி என்றென்றைக்கும் உலகம் சிவனடியார் மகிமை உணர்ந்து போற்றிப் பலனுறும் நிலை உருவாயிருத்தல் கண்கூடு. இவ்வுண்மைப்பே றொன்றுக் காகவே இந்த நாயனார் போற்றித் தொழற்பாலராகின்றார். அது, "நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்-தீசனடியார் பெருமையினை எல்லா உலகுந் தொழவெடுத்துத்-தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்-வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்" எனுஞ் சேக்கிழார் செய்யுளானும் வலுவுறும்.

4. சிவயோக விளக்கப் பேறு

சைவ நாற்பாதங்களில் தொண்டுநெறியென விசேடமாகப் போற்றப்பெறும் சரியைக்கு விசேட தகைமை பெற்றவர் திருநாவுக்கரசு நாயனாரும் கிரியை நெறிக்கு விசேட தகைமை பெற்றவர் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும் ஞானநெறிக்கு விசேட தகைமை பெற்றவர் மாணிக்க வாசக சுவாமிகளும் ஆதல் போல, தோழமை நெறியென விசேடிக்கப்படும் யோகநெறிக்கு விசேட தகைமை பெற்றுள்ளவர் சுந்தரமூர்த்தி நாயனாராவர். சமயாசாரியர் நால்வரில் ஒவ்வொருவர் நாற்பாதங்களில் ஒவ்வொன்றுக்கு விசேடமுடையர் எனும் பிரசித்த வழக்கே அதற்காதாரமாதல் சாலும். அவரவர் அவரவர்க்காம் நெறியில் விளக்க முறுதற்கு ஆவன வெல்லாங் கூட்டிவைத்து அவரவர் அவரவர் நெறியினின்றே சிவானந்தப் பெரும் போக முறவைக்கும் தமது கருணைச் செயற்கேற்பச் சிவபெருமான் இந்த நாயனார்க்குச் சிவ யோகநெறி விருத்திபெறற் காவனவெல்லாம் கூட்டிவைத்து அதன்மூலம் சிவானந்தப் பெரும் போகம் விளைய வைத்த பாங்கு இவர் வரலாற்றான் அறியப்படும். திருவாரூரில் நாயனார் பெற்ற முதல் தரிசனத்தின் போதே சிவபெருமான் தெரிவித்துள்ள செய்தி கிடைக்கப் பெற்றதிலிருந்தே அத்தன்மை கால்கொள்வதாயிற்று. அங்குத் தோழமை தந்த தென்பது சிவயோக அநுபவத்திற் பிரியாதிருத்தலையும் வேட்கைதீர வாழி மண்மேல் விளையாடுக என்றது சிவானந்தாநுபவ லீலா விநோதனாய்த் திகழ்தலையுமே என்பது பொருந்துமாற்றால் நோக்கிக் கொள்ளப்படும். அதே கையோடு அவர்க்குப் பரவையார் உறவைக் கூட்டிவைத்ததும் அவர்க்குச் சிவயோக விருத்தி நிகழ்தற் பொருட்டே யாதல், "தென்னாவலூர் மன்னன் தேவர்பிரான் திருவருளால்-மின்னாருளங் கொடிமருங்கிற் பரவையெனு மெல்லியல்தன்- பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்பாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" எனவருஞ் சேக்கிழார் திருவாக்காற் பெறப்படும். தாமளித்த தோழமை காரணமாகத் தம்பிரான் தோழரென்றிருந்த இந்நாயனார்க்குச் சிவபிரான் மேலும் அவர் சேரமான் தோழ ரென்றாம் படியாகச் சிவ யோகியான சேரமான் பெருமானின் நட்புறவைச் சேர்த்து வைத்ததும் அதே சிவ யோகவிருத்திப் பொருட்டாதல் சொல்லாமேயமையும். அம்மட்டிலுமமையாது மேலுந் திருவொற்றியூரிற் சங்கிலியா ருறவைக் கூட்டி வைத்ததும் அதன் பொருட்டே யாதல் நாயனார் அருட்ச் செயல் மூலமே பெறப்படுவதாம். அது, "சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளதே" எனவரும். இங்ஙனம் ஒட்டுமொத்தமாகப் பார்க்குங்கால் நாயனார் செய்தியில் அவர் புரிந்ததெல்லாம் சிவயோகம்; அவர் அநுபவித்ததெல்லாஞ் சிவபோகம் என்றே துணியப்படுவதாம்.

அற்றாயின் ஆன்மிக மேனிலையுயர்வுக்குக் குந்தகமாமெனப் பொதுவில் விலக்கப்படும் மகளிர் சேர்க்கை இந்நாயனார்க்கு விதிவிலக்காயவா றென்னையெனின் அது பின் வருமாறு விவரிக்கப்படும்.

இந்த நாயனார், சிவபெருமானே நேர்நின்று பிரத்தியேகமான ஒரு முறையில் தோழமை வழங்கப்பெற்றுக் கொண்டு அதன்மூலம், சிவனோடு ஏகனாய் நிற்றலாகிய தம் தன்மையில் அசாதாரண உறுதிவாய்க்கப் பெற்றிருந்தா ராகலின், "மங்கையோடிருந்தே யோகு செய்வானை" எனவும் "நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை" எனவும் சிவன் பண்பாகத் திருமுறைகள் தரும் பொருண்மைக் கிணங்கத் தானும் மகளிரொடிருந்து கொண்டே யோகு செய்து கொண்டிருக்கவும் மகளிரைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றிருக்கவும் வல்லராதல் சாத்தியமாகலின் அதன்கண் ஆட்சேபனைக் கிடமின்றாம். அது, "செல்வநல் ஒற்றியூரன் செய்யசங் கிலியா லார்த்து-மல்லலம் பரவை தன்னுள் மாழ்குற அமிழ்த்து மேனும்-அல்லுநண் பகலு நீங்கா தவன்மகி ழடியி னெய்தி-நல்ல இன் பார்ந்தி ருப்பன் நம்பியா ரூரன் தானே" எனும் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளானும் வலுவுறும். அன்றியும் குறித்த மகளிர் இருவரும் ஏலவே திருக்கயிலையில் ஏற்பட்டிருந்த தொடர்பின் மூலம் இவரைச் சார்ந்திருத்தற் கென்றே கைலாச பதியால் பூவுலகிற் பிறக்க வைக்கப்பட்டவர்களாதலுடன் இவருக்கு நேரொத்த சிவபக்தைகளாய்ச் சிவன்கழலிற் பிரியா நேயமுடை யோரும் ஆதலினால் அத்தகைய அவர்களின் உயர்பெருந் தகுதியும் அவர்கள் சேர்க்கையில் இவர் தம்நிலை வழுவாதிருத்தற்கு உபகார மாதலுங் கருதத்தகும். இவர் போலவே அவர்களுந் தரமுயர்ந்த சிவபக்தைகள் என்பதற்கு, "பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்" என இவர் இசைத்தருளிய தேவாரமே சான்றாதலுங் காண்க. இன்னும், "பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமான்" என்னும் இத்தொடரே, பரவை பாலும் சங்கிலி பாலும் இவர் கொண்டிருந்த தொடர்பின் விளைவு தனித்தனி அவர் போகமாகிய சிவ போகமே எனவுங் கொள்ள இடந்தந்து அவர்கள் சார்பில் தமக்கு விளைந்தது சிவானுபவமே என்பதை நாயனார் தம் வாக்கினாலேயே உறுதிசெய்துள்ளதாகக் கொள்ளவுங் கிடத்தலின் இந்த விஷயத்தில் எந்தவித ஆசங்கைக்கும் இடமில்லையாதல் தெரிந்துணர்ந்து கொள்ளப்படும். மேலும், மகளிர் சேர்க்கையிலிருந்தும் சுந்தரமூர்த்தி நாயனாரின் ஐம்புல இன்பத் துறவு நிலை மாசுபட்டில தென்பதற்கு, "துறந்த முனிவர் தொழும் பரவைதுணைவா" என நால்வர் நான்மணிமாலை ஆசிரியர் பிறிதோரிடத்துக் குறித்துள்ளமையும் அரணாதல் அறியப்படும். இதற்கு மேலதிக விளக்கம் வேண்டில் திருமந்திரத்தில் பர்யங்க யோகம் என்ற பகுதி பார்க்கத்தகும். அங்ஙனேல், சங்கிலியாரைச் சேர்வதில் இவர் ஆராப் பேராவல் கொண்டிருந்ததாகவும் பரவையார் புலவியுற்றிருந்த போதில் தீராத் துயருற்றிருந்ததாகவும் உள்ள வரலாற்றுண்மைகளின் தாற்பரியம் என்னாம் எனின், மேற்பல்லாற்றானும் விளங்கக் கிடந்தவாறு, அவர்கள் சார்பில் இவர் பெறற்பாலதான சிவாநுபவத் தொடர்ச்சி இடையறவுபடுதல் குறித்தெழுந்த ஆவலும் துயருமே அவையாம் என்க. சங்கிலியார் திருமணத்தை நிறைவேற்றுதலினும் பரவையார் ஊடல் தீர்த்தலினும் சிவபெருமான் முன்வந்தருளிய பெருங்கருணைச் செயலும் அது அங்ஙனமாதல் பற்றியதேயாம். தாம் மகிழ்ந்துதவிய தோழமைப் பயனாகிய சிவானந்தப் பேறு தம் தோழனுக்கு இடையறவு படாமற் காத்தல் சிவபெருமானது, தார்மிகப் பொருப்பாதல் இயல்பே ஆகலின்.

5. ஏகனாகி நிற்றல்

குருவருளால் மலமாசு தீர்ந்து சுத்தநிலை அநுபவத்தைத் தலைப்படுவோர் பஞ்சாக்ஷர உபாசனை புரிந்து அதன் சார்பிற் சிவனோடு ஏகனாய் நிற்கும் நிலை ஒன்று ஆன்ம ஈடேற்றப் பாதையில் உளதாகும். அந்நிலை பெற்றோர் சிவன் திருவடிகளையே சிந்தித்தவாறிருப்பச் சிவன் அவர்க்குப் பெரும் போகமாய் விளைவன் என்பர். அது, "ஏகனாய் நின்றே இணையடிகள் தாமுணரப்-போகமாய்த் தான்விளைந்த பொற்பினான்" எனுஞ் சிவஞான போத உதாரண வெண்பாவினாற் பெறப்படும். அந்நிலையிற் சிவபோகத்தையே ஏகபோகமாக அநுபவிக்கும் நிலையில் அழுத்தம் பெற்றிருக்குஞ் சுத்த ஆன்மாக்களுக்கு அவ்வப் போது உலகபோக மெனப்படுவன வற்றில் ஏதேனும் உணரவருமாயினும் நம்மனோர்க்குப் போலாது அவர்க்கு அதுவும் சிவபோகமாக அமைந்தடங்குவ தன்றி அதற்கு வேறாதல் இல்லையாம். வெகு நுட்பமாக உணரவுள்ள இந்த ஆன்மிக உண்மைக்கு விளக்கங் கொடுத்தலே இந்த நாயனார் பலவிடங்களிற் பொன்னும் திருநாகேச்சரத்தில், கறிவிரவு நெய் சோறு, கஸ்தூரி கமழ்சாந்தம், காம்புடைய நேத்திரங்கள் முதலான பலவும் வேண்டிக் கொண்டதாக வுள்ள இவர் செய்தியின் தாற்பரியமாதலும் இத்தொடர்பில் வைத்தறியப்படும். பரவையார் மாளிகையிலுஞ் சேரமான் மாளிகையிலும் இவர்க்கு நிகழ்ந்தனவாகவுள்ள ராஜோபசாரங்களும் அக்குறிப்பினவேயாகும். இங்ஙனம் இவர் பல்லாற்றானும் சிவபோகம் முதிர்ந்திருந்தவாறு, சேக்கிழார் வாக்கில் வரும், "படியின் நீடும் பத்திமுதல் அன்புநீரிற் பணைத்தோங்கி-வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக்-கடிய வெய்ய இருவினையின் களைகட் டெழுந்து கதிர்பரப்பி-முடிவிலாத சிவபோகம் முறுகி முதிர்ந்து விளைந்ததால்" என்பதனாற் பெறப்படும். சிவனோடு ஏகனாகி நிற்றலின் அறுதிப்பெரும் பேறு சிவபோகமாகிய இப்பேறேயாதல், சிவஞான போதத்தில், ஏகனாகி நிற்றல் குறித்த பத்தாஞ் சூத்திரத்தை அடுத்து வரும் பதினோராஞ் சூத்திரம் ஆன்மலாபமாகிய சிவ போகங் குறித்து அமைந்துள்ளமை யாலும் வலுவுறும்.

இத்தகு மகிமை வாய்ந்த இவ்வேகனாகி நிற்றல் சுந்தர மூர்த்தி நாயனார் விஷயத்தில் சாதாரணத் தன்மை கடந்த பெரும்வீறும் விறலுமுடையதாய் அமைந்து அவர் வரலாற்றுக்கும் அவர் திருப்பாட்டுகளுக்கும் பெருவாழ்வளித்துள்ள அற்புதம் நினையுந்தோறும் நினையுந்தோறும் இறும்பூது பயப்பதாகும். திருவொற்றியூரிற் சங்கிலியார் திருமண விஷயமாகச் சிவபெருமானைத் தொடர்பு கொண்ட போது, சபதம் நிகழ்கையிற் சுவாமி கோயிலிலில்லாது மகிழின் கீழ்ப்போயிருக்க வேண்டுமென இவர் கேட்டுக்கொண்டதிலிருந்து, திரும்ப, திருவாரூரில் மறைந்த வலக்கண்ணும் வெளிப்படும் வரையில் இவர் திருவாக்குகளாக வந்துள்ள அருளிச் செயல்கள் முழுவதும் சிவனோடு ஏகனாய் நிற்றல் சார்பான இவரின் பிரத்தியேகமான வீறும் விறலுந் தோற்றுவனவா யிருத்தல் கண்கூடு. ஏகனாய் நிற்றல் சார்பில் ஏற்படும் நழுவலின் நெளிவு சுழிவுகள் அதுசார்பான உணர்வுக் கதிப்புகள் மிகக் காத்திரமான முறையில் அவற்றில் இடம்பெற்றிருத்தல் காணத்தகும். ஏகனாய் நிற்றல் சார்ந்த உரிமையுணர்வைப் பிரதிபலிக்கும் நியாயித்தல்களாக இப்பகுதியில் இடம் பெறுவனவும் மிக அபாரமானவையாம். அவை, "அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன். அதுவும் நான்பெறற் பால தொன்றானால்-பிழுக்கை வாரியும் பால்கொள்வரடியேன் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்" எனவும், "பிழையுளன பொறுத்திடுவ ரென்றடியேன் பிழைத்தக்கால்-பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்-குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோவென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீ ரென்றானே" எனவும் "எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்-மற்றைக் கண்தான் தாரீ ராகில் வாழ்ந்து போதீரே" எனவும், "மூன்று கண்ணுடையாயடியேன்கண் கொள்வ தேகணக் குவழக் காகில் ஊன்று கோலெனக் காவதொன் றருளாய் ஒற்றியூரெனும் ஊருறை வானே" எனவும் பலவாக வந்திருத்தல் காணலாம். இவை போல்வன வற்றிற் பாடற்சுவை நுகர்ந்த வளவே யன்றிச் சிவன் ஏதும் பதிலறிவித்ததாக இல்லையாதல் கருதத்தகும். இத்தகையது சுந்தர மூர்த்தி நாயனாரின் ஏகனாய் நிற்றல் மாண்பென உணர்க. அசாதாரணமான வகையில் இவ்வாறெல்லாம் நிகழவைத்தது சிவன் இவருக் களித்திருந்த தோழமைப் பிரபாவமே என்பது மறித்தும் ஒருகால் இங்கு நினைக்கத்தகும்.

இவ்வகையில் அவதானிக்கக் கிடக்கும், திருத்தொண்டத் தொகையால் விளைந்த சிவனடியார் ஒழுக்க வணக்க வழிபாட்டுப் பேறும், சிவயோகவிளைவுகளாப் பல அறியப்படும் பேறும் ஏகனாகி நிற்றல் சார்பான சூக்கும உண்மை விளக்கங்களும் இவையொத்த மற்றும் பலவும் சுந்தர மூர்த்தி நாயனார் சிவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டதன் மூலம் உலகுய்ய வந்தவா றெங்ஙன மென உணர நிற்றல் கருதத்தகும்.

மேலும் இந்நாயனாரின் சிவயோகப் பிரபாவமே தாம் மட்டுமன்றித் தம்மையணைந்த சேரமான் பெருமானும் இருந்த தேகம் நீங்காமலே கயிலை யெய்த வைத்தவாறும் இவர் சிவ யோக மாண்புணர்ந்து இவரை உபாசனா மூர்த்தியாகக் கொண்டிருந்த திறமே, பெருமிழலைக் குறும்ப நாயனாரை இவருக்கு முந்தியே கயிலை யடைய வைத்த வாறும் கூட, உலகறிந்துய்தற்காம் நிகழ்வுகளே யாம்.

அன்றியும், இவர் அருளிச் செயல்களில் அதிகரித்திருக்கும் ஏசுதல், இகழ்தல், ஊடுதல், உறழ்தல் சார்பான திருப்பாட்டுகளால் தேவாரத் தமிழாகிய திருநெறிய தமிழிலக்கியத்திற்குப் புதுச் சுவையுஞ் சந்தமும் புத்தொளி விளக்கமும் நிகழக் கண்டநுபவிக்கும் பயன் இவரால் உலகுய்ய வந்த மேம்பலனென்பதையும் யாரே மறுக்க வல்லார்.

இன்னும், இந்த நாயனாரால் விளைந்தனவாகவுள்ள அற்புதங்களால் விளையக்கூடும் வியப்பும் நயப்பும் உலகுய்ய நின்ற திறமும் உன்னுந்தோறும் உவகை யளிப்பதாகும். இவர் வரலாற்றில் இறுதியில் நிகழ்ந்ததாக விளங்கும் முதலை யுண்ட பாலனை அழைத்த அற்புதம் உணர்வுடையோர் உள்ளத்திற் கிளப்புங் கிளர்ச்சியுஞ் சுவையுணர்ச்சியும் எத்தகைய என்பது நால்வர் நான்மணிமாலை உடையார் அதனை வியந்தெடுத்துப் போற்றியுள்ள பாடலொன்றானே அறியவரும். அது, "போத முண்ட பிள்ளை யென்பு பொருகண் மாது செய்ததோ-காதல் கொண்டு சொல்லின் மன்னர் கல்மிதப்பவுய்த்ததோ-வாய்திறந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ-யாது நம்பி யரிய தென்றே னக்கியம்ப வேண்டுமே" எனவரும்.

 


வெள்ளானைச் சருக்கம் சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

திருவருள் கூர்ப்படைந்து அற்புதம் விளையுஞ் சூழ்நிலை இத்தகைத் தெனல்

சிவபெருமானால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சேரமான் தோழருமாய் விளங்கிய நம்பியாரூரர் தம் சிவயோக முதிர்விற் சிவபோகம் விளையும் பக்குவ மெய்துதலும் அத்துறையில் அவ்வகையிற் பரிபாகம் பெற்றிருந்த சேரமானை ஒருநாள் மிகவும் நினைந்து அவர் பதியாகிய கொடுங்கோளூரை நோக்கிப் பயணஞ் செய்கையில் திருஅவிநாசி என்னும் பதியினூடாகச் செல்வாராயினர். அங்கு வீதியில் எதிரெதிரா யிருந்த வீடுகளிரண்டில் ஒன்றில் உபநயனச் சடங்கு மங்கலமும் மற்றதிற் பழஞ்சலிப்பு அழுகை அமங்கலமும் நிகழ்ந்து கொண்டிருக்கக் கண்டு அதிசயித்து விபரம் விசாரித்துக் கொண்டிருக்கையில் அமங்கலம் நிகழ்ந்த வீட்டு வேதியரும் மனைவியாரும், தம்மெதிர் வரவே "மகனை முதலை வாய்க் கொடுத்திழந்தீர் நீவிரோ" என நம்பியாரூரர் வினாவியதும் அது பழையகதை ஐயா அதைப்பற்றி இப்போ பிரஸ்தாபிப்பானேன். உங்கள் மகிமை பற்றிக் கேள்விப் பட்டெழுந்த நேசத்தால் உங்களைக் கண்டு தொழ வேண்டுமென வெகுநாள் ஆவலாயிருந்தோம். அந்த அன்பு பழுதாகா வண்ணம் நீங்களாகவே எம்மிடத்துக்கு எழுந்தருளப் பெற்றோம்" என இருவரும் ஒரே குரலாகக் கூறி ஆனந்தக் கண்ணீர் துளித்தனர். "இவர்கள் தம் உள்ளத்துயரைப் புறந்தள்ளிவிட்டு எம்மைத் தரிசிக்கப் பெற்றதற்கே மகிழ்ச்சிப் பரவசமடையும் மெய்யன்பர்களாயிருக்கிறார்களே" என அப்போது நம்பியாரூரர்க்கு ஏற்பட்ட அதிசய உணர்ச்சி அவர்கள் பேரில் அவர்கருணையுணர்வைக் கூர்ப்பித்து விடுவதாயிற்று. அது சேக்கிழார் வாக்கில், "துன்ப மகல முகமலர்ந்து தொழுவார் தம்மை முகநோக்கி இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி முன்பு புகுந்து போனதது முன்னே வணங்க முயல்கின்றோம். அன்பு பழுதா காமலெழுந் தருளப் பெற்றோம் எனத் தொழுதார்" - "மைந்தன் தன்னை இழந்ததுயர் மறந்து நான் வந்தணைந்ததற்கே சிந்தைமகிழ்ந்தார் மறையோனும் மனைவிதானும் சிறுவனை யான் அந்த முதலை வாய்நின்று மழைத்துக் கொடுத்தே யவிநாசி எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றா ரிடர்களைவார்" என வரும்.

மகன் விஷமேறித் திடீரென்றிறந்ததா லுளதாகக் கூடிய தமது உள்ளத்துயரைப் புறந்தள்ளிவிட்டு அன்றைய அப்போதைய நியமப்படி அப்பர் சுவாமிகளுக்கு அமுதூட்டுதலில் மகிழ்ச்சி பூர்வமாக முனைந்து நின்ற அப்பூதியடிகள் தம்பதிகளின் மெய்யன்புத் திறத்தின் பேரில் சுவாமிகள் கருணை கூர்ந்தெழுந்த நிலை போல்வதே இதுவுமாம். நம்பியாரூரர் அக்கருணை வசத்தினராய் அவிநாசியப்பர் திருவருளை வேண்டி, "புக்கொளியூர் அவிநாசியே கறைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" எனப் பாடுதலுந் திருவருள் கூர்ப்படைந்து அதன் விளைவாக அந்தணச் சிறுவன் அன்றளவிலுந் தான் பெற்றிருக்க வேண்டுவதான பூரண வளர்ச்சிப் பொலிவுடன் அதே முதலை வாயிலிருந்து வெளிவந்த செய்தி பிரசித்தமானது. தெய்வ அருளற்புதத்தினாற் காரியப் பேறாதல் என்ற விஷயம் என்றும் எங்கும் இத்தன்மைத்தேயாம். அதாவது, சம்பந்தப்பட்டோர் தமதின்னலை முற்றாக மறந்து விடுமளவுக்குச் சிவ நினைவி லீடுபட்டொன்றுதலேயாம் என்பது அறிந்து கடைப் பிடிக்கத் தகும்.

2. உயிர்த் தோழமைப் பண்பு விசேடம் இதுவெனல்

ஒருவரோ டொருவர் கூடியிருத்தலும் பலகாற் சந்தித்துக் கலந்து பேசிப் பழகுதலுமாகிய புணர்ச்சி பழகுதல் மாத்திரம் உண்மை நண்பிற்குக் காரணமாதல் அமையாது ஒருவரையொருவர் இன்றியமையாதவராயிருக்கப் பெறும் உணர்ச்சி விசேடமே அதன் சிறந்த காரணமாதல் அமையும். அது திருவள்ளுவர் வாக்கில், "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்" எனவரும். பழந்தமிழ்ச் சான்றோருள் அவ்வித உணர்ச்சிவழி நண்பினுக் குதாரணமாக நிறுவப்படுவோர் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாருமாவர். அவர்தம் உணர்ச்சியும் ஒருவர் உயிர் பிரியக் கேட்ட மாத்திரத்தில் மற்றவரும் உயிர்பிரிதல் அளவினதாகவே அறியப்பட்டுள்ளதாகும். இங்ஙனம் வெறுமனே உயிர் பிரிதலளவுக்கல்லாது உயிர் பிரிதலின்றியே இருவரும் ஒருசேரக் கைலையடையும் வகையிற் பலன் விளைத்த நம்பியாரூரர் சேரமான் நண்பு அவ்வுணர்ச்சி நண்பினும் பலமடங்கு சிறந்ததாதல் சொல்லாமே யமையும். அத்திறத்தால் அது உயிர்நண்பு அல்லது உயிர்த்தோழமை என்றே கொள்ளப்படும். அவ்விருவரில் ஒவ்வொருவருக்குஞ் சிவாநுபவ விளக்கம் மிகுவித்தலாகிய ஆத்மிக உயர்நலனைத் திருவுளங் கொண்டே சிவபெருமான் முன்னின்று அவர்களை நண்புறவு பூணவைத்தார் என்ற அந்தரங்கமும் இதனால் விளங்கற் பாலதாம்.

கொடுங்கோளூர் சென்றடைந்த நம்பியாரூரர் அங்கு, "ஒருவ ரொருவரிற் கலந்து" பூரித்தாற் போன்ற உயர் பெரும் நண்புறவிற் கலந்து சேரமானுடன் தங்கியிருக்கையில் ஒருநாள் ஒரு கணம், தாம் உலகியல் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுதற்கு உரிய தருணம் வந்துவிட்டதாக அவர் முன்னுணர்விற் படுதலும் உடனடியாகவே அங்குள்ள திருவஞ்சைக்களத் திருக்கோயிலிற் சென்று வணங்கி அது குறித்துத் தேவாரத் திருப்பதிக மூலம் விண்ணப்பித்துக் கொண்ட மாத்திரத்தே செய்திப் பரிவர்த்தனைக்காந் தெய்விக விதிமூலம் அது கைலைக் கெட்டுதலும் தாமசமின்றியே தம்மையேற்றிச் செல்ல அங்கிருந்து வெள்ளானையும் வந்துவிடக் கண்டதுமே வேறெதற்கும் அவகாசமின்றி அதன்மேலேறிக் கொண்ட அவ்வவசர சூழ்நிலையிலும் தற்செயலாக அந்நேரம் அவ்வயலிலில்லாது போன சேரமானை நினையத் தவறிற்றிலர். மெய்ஞ்ஞானிகளிடையிற் செய்திப் பரிவர்த்தனை நிகழ்தற்கான அத்யாத்ம யோக விதிப்பிரகாரம் தூர எங்கோ நின்றும் அதனைத் தெரிந்து கொண்ட சேரமானும் அக்கணமே அடுத்து நின்ற குதிரையொன்றேறி, அட்ட கன்ம சாதனைக்குரிய முறையில் அஞ்செழுத்தை அதன் செவியிலோதி அதனோடு மேலெழுந்து விண்வழி விரையும் வெள்ளானையை முந்திக்கொண்டு அன்பும் நண்பும் அமர நம்பியாரூரரைச் சேவித்துச் செல்லத் தவறிற்றிலர். இவ்வகையில் அவ்விருவரும் தம் உடலுருவம் இருக்கத்தக்கதாகவே ஒருங்குறக் கைலை சேர்ந்ததுமன்றி அங்குங் கைலாச பதியருளால் இருவரும் ஒரே பதவியிலேயே நிலைபெறுவாரு மாயினர். கைலையடைதற் கப்பாலுந் தொடர்வதோர் அற்புதமான உயிர்த் தோழமைப் பண்பிருந்தவா றிவ்வாறாம்.

அவ்விருவரும் உற்ற உருவுடனேயே கைலையடைந்தார்கள் என்பது "ஞானவாரூரரைச் சேரனையல்லது நாமறியோம் மானவ யாக்கை யொடும்புக்கவரை வளரொளிப் பூண் வானவ ராலு மருவற்கரிய வடகயிலைக் கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே" என்பதாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறுதலானும் வலுவுறும். அற்றேல் அசுத்தமாயை எனப்படும் பிரகிருதி மாயாபுவனத்திற்கேற்க அமைந்த மானவ சரீரம் சுத்தமாயா புவனத்ததாகிய கைலைக் கேற்புடைத்தாமாறி யாங்ஙன மெனின், அவர்கள் இருவரும் பரமசிவ யோகிகளாதலால் சிவயோக ஆற்றல் காரணமாக அவர் திருவுடல்களின் பிரதிகிருதித்தன்மை மெல்ல மெல்லக் கெட்டு அவர்க்காம் ஆத்மிக விளக்க ஆற்றலாலே மேலும் அவ்வுடல் கைலைக் கேற்புடைத்தான ஒளியுடலாதல் சம்பவிக்கக் கூடிய தொன்றாமாதலிற் பொருந்துமென்க. அது, கைலை செல்லும் வழியில் நம்பியாரூரர் அருளிச் செய்து வருணன் மூலம் அஞ்சையப்பர்க்கு அஞ்சல் செய்யப்பட்டுள்ள (ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே) திருப்பதிகத்தில், "ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே" என வருவதனாலும் வலுவுறும். ஊன் வேறுசெய்தல்-உடலியல்பைப் பிரகிருதித்தன்மை மாற்றி ஒளியுடலாக்கல். உயிர் வேறு செய்தல்-உயிரின் ஏகதேச அறிவுநிலையை வியாபக அறிவுநிலையாக்கலும் வரம்புட்பட்ட அநுபவநிலையை வரம்பிலா அநுபவநிலையாக்கலும் எனக் கொள்க. மேலும், கைலை சேர்கையில் நம்பியாரூரர் திருமேனி பேரொளிமயமாகவே யிருந்ததென்பது, அவ்வேளை கைலைமலைச் சாரலில் இருந்த உபமன்னிய முனிவர் அவ்வொளியின் தாற்பர்யங் கேட்ட தம் சீடர்களுக் குரைத்ததாக முன் திருமலைச் சருக்கத்தில் வந்துள்ள வாற்றானும் வலுவுறுவதாம். அது, அங்கணோரொளி ஆயிரஞாயிறு பொங்கு பேரொளி போலமுன் தோன்றிடத் துங்கமாதவர் சூழ்ந்திருந்தாரெலாம் இங்கிதென்கொ லதிசய மென்றலும்" - "அந்திவான் மதிசூடிய அண்ணல் தாள் சிந்தியா நினைந்தம்முனி தென்றிசை வந்தநாவலர் கோன்புகழ் வன்றொண்டன் எந்தையாரரு ளாவணை வானென" என வரும். இவ்விதம் நூற்பொருள் முதலும் முடிவும் மாறுகோளின்றியிருக்குஞ் சிறப்புங் கூட இதனாற் குறித்துணரப்படும்.

3. சிவபிரான் தொண்டரை விளக்கங் காணுதல் இப்படியுமாமெனல்

திருத்தொண்டர்களை அவரவர் நிலைக்குப் பொருத்தமான ஏதேனுமோர் வகையில் விளக்கங் காணுதல் சிவபிரான் திருவருட் பண்பாதல் திருத்தொண்டர் வரலாறுகள் பலவற்றில் வைத்தறியப்படும். அது, "மன்றுளே திருக்கூத்தாடி யடியவர் மனைகள் தோறுஞ் சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்கள் தேவர்" எனத் திருநீலகண்ட நாயனார் புராணத்திலும் "மாயவண்ணமே கொண்டு தந்தொண்டர் மாறாதவண்ணமுங் காட்டுவான் வந்தார்" என இயற்பகை நாயனார் புராணத்திலும் "தொண்டரன்பெனுந் தூநெறி வெளிப்படுப்பாராய் வந்தமர் நீதியார் திருமடங்குறுக" என அமர்நீதி நாயனார் புராணத்திலும் "தன்னுடைய தொண்டர்தந் தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டன்பர்க் கருள் புரிவான் வந்தணைவான்" எனத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலுஞ் சேக்கிழார் விதந்தெடுத்துக் காட்டியுள்ளவாற்றானும் பெறப்படுவதாம். இங்ஙனந் தொண்டர்கள் பலரைப் பலவிதங்களிற் சிவ பெருமான் விளக்கங் கண்டுள்ளாரேனும் எல்லாவற்றிற்கும் பொதுப்பண்பாக அறியக்கிடப்பது யாதெனில், சம்பந்தப்படுந் தொண்டர் தமது அடிமைத் தொண்டில், திருவருள் நெறி திறம்பாமல் நிற்றலை உறுதி செய்து கொள்ளுந் தன்மையாகும். ஆனால், மேற்குறித்த வகையில் தொண்டர்களை அவரவரிடங்களுக்குச் சென்று விளக்கங் காணுதல் போலாது சேரமான் பெருமாள் நாயனாரைச் சிவபெருமான் மற்றொரு வகையில் விளக்கங் கண்டுள்ள செய்தி வெள்ளானைச் சருக்கத்தில் இடம்பெறும்.

நம்பியாரூரருஞ் சேரமானும் ஒருங்கே கயிலை எய்திய போதும் நம்பியாரூரர் நேரடியாகவே திருவணுக்கன் திருவாயில் தாண்டிக் கைலாசபதியின் சந்நிதியிற் புகச் சேரமான் தடையுண்டு வாயிற் புறத்தே நிற்கும்படி யாயிற்று. மேல், "நின்மலர்க்கழல் காணச்சென்று சேரலன் திருமணிவாயிற் புறத்தினன்" என நம்பியாரூரரால் விண்ணப்பிக்கப் பட்டதைத் தொடர்ந்தே நந்தி தேவர் மூலம் அவர் உட்புகுவிக்கப் பெற்றார். உட்புகுந்த அளவில், "இங்குநா மழையாமை நீ எய்தியதென்?" என்ற விசாரணை கைலாச பதியின் திருவாயிலிருந் தெழுவதாயிற்று. அதற்கு விளக்கமளிக்குஞ் சேரமான், "நம்பியாரூரர் திருக்கைலைக் கெழுந்தருளுகையில் அடியேன் எனது நண்புரிமைப் பணி மேற்கொண்டு அவர் யானைமுன் சேவித்து வந்தேனாக இங்குப் பிரவாகிக்கும் நின் கருணை வெள்ளம் அலைத்தடித் தீர்த்தமையின் திருமுன்பு புகப்பெற்றேன் என் பாசபந்தம் நீங்குமாறு நம்பியாரூரரை நான் நண்பனாகப் பெற வைத்தருளினீர்" என்றனர். இதன்மூலம், "சிவன் எந்த ஒருநோக்கிற் சேரமானுக்கு நம்பியாரூரர் நண்பினைக் கூட்டி வைத்தனரோ அந்த நோக்கமாகிய அடிமைத் தொண்டு நெறியிலேயே அவர் வழுவாது நின்று நம்பியாரூரர் திருக்கைலைக் கெழுந்தருளும் போதிலும் அந்நண்புறவுத் தொண்டினைப் பேணியதன் மூலம் சிவனை அடைந்து உய்வுற்றார் என்ற வகையில் அவருடைய அடிமைத் தொண்டானது திருவருள் நெறியிற் பிசகாமலே நின்றிருத்தலாகிய உண்மை விளக்கஞ் சிவபெருமானாற் கண்டருளப் பெற்றிருத்தல் இனிதிற் பெறப்படும். இது தெரிவிக்குஞ் சேக்கிழார் வாக்கிற் சேரமான் கூற்றாக வருவனவற்றில், "மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய்" என்பதனை "அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப் புரசை யானைமுன் சேவித்து வந்தனன்" என்பதற்கு முன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளல் மூலம் இவ்விளக்கஞ் சித்திப்பதாகும். இங்ஙனஞ் சிவபெருமான் தொண்டரை விளக்கங் காணுந் திருவருள் அவர்கள்பால் அயரா அன்பினை விளைத்துத் திருவடியிற் செறிவிப்பதோர் பேருபகாரமாதல் அவரவர்க்கு நேரும் பின்விளைவுகளாற் காணப்படும்.

4. திருத்தொண்டர் புராண தாற்பரியம்

"அகண்டாகார சிவபோகமென்னும் பெருவெள்ளம்" எனத் தாயுமான சுவாமிகளாலும் "பெயரா ஒழியாப் பிரிவில்லா மறவாநினையா அளவிலா மாளா இன்ப மாகடல்" என மாணிக்க வாசக சுவாமிகளாலும் இவ்வகையிற் சைவஞான மேதைகள் பிறர் பிறராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிறைவானதும் நிலையானதுமான பேரின்பம் ஒன்று வற்றா ஊற்றாக என்றென்றும் இருந்து கொண்டிருப்பதாகும். அறுதிப் பேறாக அவ்வின்பத்தை எய்துதலே அகில உலகிலும் வாழுஞ் சகல உயிர்களினதும் இலக்காயிருக்கும் என்பது, அவற்றுள் எந்த உயிரும் நிலையற்றதாயினும் பற்றாக் குறையானதாயிருப்பினுங்கூட ஐம்புலன் சாரும் ஏதேனுமொரு இன்பத்தை நாடியல்லது வாழக் காணாமையாற் பெறப்படும். "எல்லா உயிர்க்கும் இன்பமென்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்ற தொல்காப்பியச் சூத்திரத்தானும் அது வலுவுறும். இங்ஙனம் எல்லா உயிர்க்கும் ஏக இலட்சியமாயுள்ள அப்பேரின்பம் "இன்ப காரணன்" எனப்படுஞ் சிவனிடத்த தாகலானும் அவனாலல்லது அது எய்தப்படுமாறின்மை உண்மை நூல்களாற் பெறப்படுதலினாலும் அவனை உரிய முறையிற் காதலிக்கும் மெய்யன்பொன்றே அவனை வசீகரிக்குஞ் சாதனம் என வற்புறுத்தப் படுதலினாலும் மெய்யன்பினால் அவனைக் காதலித்து அவன் தொண்டு வழிநிற்றல் ஒன்றல்லது அவ்வின்பம் பெறுதற்கு மார்க்கம் வேறில்லையாகும். "அன்போடுருகி அகங்குழைவார்க் கன்றி என் பொன்மணியினை எய்தவொண்ணாதே" எனுந் திருமூலர் திருமந்திரம் ஒன்றே யிதற்கமையும். அதற்குக் கண்கண்ட சாட்சியங்களாக இந்நிலவுலகில் வாழ்ந்தவர்கள் திருத்தொண்டர் புராணத்துச் சிவனடியார்கள் ஆதலால் அவர்கள் புகழ் இவ்வுலகில் மங்காது நிலைத்து நிற்பதாக எனப் போற்றுதல்மூலம் உலகில் அநேகாநேகம் பேருக்கு அவ்வநுபவப் பேறுபெறும் வாய்ப்பு நிகழ வைத்தலே திருத்தொண்டர் புராணத்தின் தாற்பரியமாம். அது சேக்கிழார் வாக்கில், "என்றுமின்பம் பெருகு மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமுமோங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்" என வரும்.

மேற்கண்ட வாறாக இச்செய்யுளில் "நின்றது" என்ற சொல் "நிற்க" எனும் வியங்கோள் வினைப் பொருளில் நின்றதாகக் கொள்ளாது நிலைத்திருக்கின்றது என நேர்பொருளே கொண்டு, ஒன்றாகிய சிவனைக் காதலித்து எக்காலத்தும் ஆன்ம (உள்ள) நலமோங்கிட அடியார் புகழ் ஒரு வைப்பு முதலாக நின்று கொண்டிருக்கின்றது எனக் கூறிச் சேக்கிழார் பெருமான் நூல்நிறைவில் தாம் நிறைவு பெற்றுக் கொண்டார் எனக் கொள்ளலும் அமையும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. வெள்ளானைச் சருக்கம் (தமிழ் மூலம்) 
2. chundharamUrthi nAyanAr purANam in English prose 
3. Sundararmurthi Nayanar Puranam in English Poetry 

 

 

Related Content

Thoughts - 64 th Nayanar

திரு வி க - சைவத்தின் சமரசம்

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?