logo

|

Home >

devotees >

sri-appayya-dikshitar-divya-charthram

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)


சிவமயம்
ஸ்ரீ மஹாதேவ ஜயம்
 

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர்

திவ்ய சரித்ரம்

(Sri appayya dIkshitar divya charthram)

வக்ஷஸ்தலாசாரியர்

புண்ணியம் செய்து பிறந்து வசிக்கும் உத்தமர்களுடன் பிரகாசிக்கும் துண்டீர (தொண்டை) மண்டலம் என்ற நாட்டுக்கு அமராவதி போலவும், பாரத பூமிக்கு ஒட்டியாணம் போலவும், காஞ்சீபுரம் என்ற பெயருடைய ராஜதானி உள்ளது அதில் கருணாஸமுத்ரமான ஸ்ரீ ஏகாம்ரநாதரும், கல்பதரு-சிந்தாமணியான ஸ்ரீ காமாக்ஷியும் ஸாந்நித்யமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இந்த புண்யபுரியின் ஸமீபத்தில் ஆரணி என்ற நகரம் உள்ளது. அதன் ஸமீபத்தில் அடையப்பலம் என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆசாரம், அனுஷ்டானம், எப்போதும் அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் போன்ற புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்துவரும் வித்வான்கள், கவிதா ஸாமர்த்யம், ஸகலபாஷாஞானம், ஸகலவேதசாஸ்த்ர ஸம்பத்துடன் விளங்கி வந்தார்கள். அங்கு வசித்துவந்த ஜனங்களுடைய பாண்டித்யம் பிருஹஸ்பதி, வஸிஷ்டரிஷி போன்ற மஹரிஷிகளும் போற்றும்படி விளக்கத்துடன் இருந்தது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த அந்த அடையப்பலம் என்ற கிராமத்தில் வக்ஷஸ்தல கணபதியை உபாசனம் செய்து கொண்டு இருக்கும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த ஆசார்யதீக்ஷீதர் என்ற பெயருடன் அத்வைத சாஸ்த்ர உபதேசகர் ஒருவர் இருந்தார். அவர் விஜயநகர ராஜாவான கிருஷ்ணதேவராயரது ஆஸ்தான வித்வானாக அவரால் மிகவும் போற்றப்பட்டு வந்தார்.

ரங்கராஜாத்வரி

வக்ஷஸ்தலாசார்யர் என்ற இந்த மஹானுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களில் முத்தவரான ரங்கராஜார்வரி என்றவர்தான் ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷிதர் அவர்களின் தந்தையாராவர். ரங்கராஜாத்வரி ‘அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்’ முதலான கிரந்தங்களை இயற்றியவர். இவரது மாதாமஹர் (தாயின் தந்தை) வைஷ்ணவகுலத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைகுண்டாசார்யர் என்பவராவர். அந்தக் காலம் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லாமல் ஸ்நேஹமாக இருந்தமையால் வக்ஷஸ்தலாசாரியர் அந்த வைஷ்ணவரின் பெண்ணை மணந்து கொண்டார். அந்த வைஷ்ணவ மனைவிக்குப் பிறந்த பிள்ளை தான் ரங்கராஜாத்வரி. மாமனார் இஷ்டப்படி பெயர் வைத்தபடியால் வைஷ்ணவப் பெயருடன் விளங்கினார். வக்ஷஸ்தலாசாரியார் கலிபிறந்து 4630-ம் ஆண்டு சிவஸாயுஜ்யம் அடைந்தார்.

ஸ்ரீமார்க்கஸஹாயப் பெருமானின் அனுக்கிரஹம்

அந்த ஸமயம் இந்த நாட்டை சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா ஆண்டு வந்தார். சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தனர். நமது ஸ்ரீரங்கராஜாத்வரியையும் இவர்கள் ஆதரித்து வந்தனர். ஸ்ரீரங்கராஜாத்வரியின் வயது இருபத்து நான்கு தான் என்றாலும் உசிதகாலத்தில் விவாஹமாகி இல்லறம் நடத்தி வரும்போது குழந்தை பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்தி, ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாயரான தனது குலதெய்வத்தை வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ மார்க்கஸஹாயர் என்ற பெயருடன் விரிஞ்சீபுரம் என்ற க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் மூர்த்தியாக விளங்குகின்றார். சிவபெருமான் எங்குக் கோயில் கொண்டாலும், அங்கு ஒரு திருநாமம் ஏற்று நாமரூபமில்லாத மூர்த்தியாக ஞானிகளுக்கும், நாம ரூபத்தை ஏற்று ஒன்றும் அறியாத மனித சமூகத்திற்கும் தமது திருவருளைப் பொழிகின்றார். பிள்ளைப் பேறுவேண்டிய ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு பரம கருணையுடன் ஸ்ரீமார்க்கஸஹாயர் அசரீரியாக “குழந்தாய் ரங்கராஜ! சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிகின்றேன். நீ அங்கு வருவாயாக” என்று அருளிச்செய்தார். இந்த அசரீரி வாக்கைக் கேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி ஆனந்தத்தில் மூழ்கினார்.

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் அனுக்கிரஹம்

அசரீரி வாக்குகேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி உடனே மனைவியுடன் சிதம்பரம் சென்றார். அவர்கள் சிதம்பரம் சென்றவுடன் அவர்களது புத்ரலாப ப்ரதிபந்தகம் அவர்களை விட்டு விலகியது. அந்த தம்பதிகள் தினந்தோறும் சிவகங்கையில் ஸ்நானம் செய்து மூன்று வேளைகளிலும் சிவதரிசனம் செய்து ஸ்ரீநடேசப்பெருமானை ஆராதனம் செய்தார்கள். இப்படி ஐந்துவருஷம் சென்றது. நாள்தோறும் நடராஜ மூர்த்தியின் சன்னிதியில் இருந்து இந்த தம்பதிகள், “ஹே ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைக்கப்போகிறீர்கள்” என்று மனமுருக வேண்டினார்கள். ஒருநாள் இம்மாதிரி மனங்கரைந்து திருவருளைவேண்டிய பிரார்த்தித்து நின்ற அந்த தம்பதிகட்கு திடீரென்று ஆகாசத்தில் ஒரு சத்தம் கேட்டது. “ஹே பக்தசிகாமணியே! உன்னுடைய தவத்தினால் நான் மனம் மகிழ்ந்தேன். உனக்குச் சீக்கிரமாகப் புத்திரர்கள் இருவரும், பெண் ஒருத்தியும் பிறக்கப் போகிறார்கள்” என்று அருளிச்செய்தார். இதனைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ஸ்ரீரங்கராஜாத்வரி தனது இல்லம் சேர்ந்து அன்று இரவு இருக்கும்போது ஸ்ரீநடராஜப் பெருமான் பூஜகர் உருவத்தில் வந்து பகவானின் அபிஷேக தீர்த்தம் என்று கூறி பழரசத்தைச் சாப்பிடும்படி ஸ்ரீரங்கராஜாத்வரியின் பத்தினியிடம் கொடுத்து மறைந்தார். அந்தப் பழரசத்தை அந்த அம்மையார் சாப்பிட்டதும் சிவபெருமானின் திருவருளால் கர்ப்பம் ஏற்பட்டது.

தீக்ஷிதேந்திரரின் திருவவதாரம்

ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவருளால் கர்ப்பம் தரித்து, பத்து மாதங்கள் பூரணமாக ஆனதும் ஒரு பிரமாதீச வருஷத்தில், புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்திரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் மஹாபாக்கியமான புண்ணிய ஸமயத்தில் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் திருஅவதாரம் செய்தார்கள். இது கலிவருஷம் 4634 என்றும், ஆங்கில ஆண்டு 1554 என்றும் ஸ்ரீசிவானந்தயோகி என்பவர் தமது தீக்ஷிதேந்திர சரிதத்தில் நிரூபித்துள்ளார். திருவவதாரத்தை விளக்கும் இரண்டு ச்லோகங்கள் பின் வருமாறு:

 

வீணாதத்வக்ஞ ஸங்க்யாலஸித கலிஸமாபாக் ப்ரமாதீசவர்ஷே

கன்யாமாஸே() க்ருஷ்ணப்ரதமதியுதே 

                        (ப்யுத்தர ப்ரோஷ்டபாத்பே |

கன்யாலக்னே(த்ரிகன்யாபதிரமிததயாசேவர்திர் வைதிகேஷு

ஸ்ரீதேவ்யை ப்ராக்ய்தோக்தம் ஸமஜநி ஹி விரிஞ்சீசபுர்யாம் மஹேச:||

 

 

லக்னே ரவீந்துஸுதயோ: மகரே மாந்தெள

     மீனே சசின்யத வ்ரூஷே ரவிஜே ராஹெள |

சாபே குரெள க்ஷிதிஸுதே மிதுனே துலாயாம்

     சுக்ரே சிகின்யலிகதே சுபலக்னஏவம் ||

கன்யா லக்னத்தில், லக்னத்தில் சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாத்தில் சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் அமைந்த இந்த அற்புதமான ஜாதக அமைப்பில் நமது ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் அவதரித்து அருளினார்கள்.

இப்படிப் பிறந்து விசேஷமாய் பிள்ளை பிறந்த சந்தோசஷத்தை ஸ்ரீரங்கராஜாத்வரி கொண்டாடினார். ஸ்னானம் செய்து கோதானம், பூதானம் ஆகியவைகளை விசேஷமாகச் செய்து, ஜாதகர்மா செய்து, பதினொன்றாம் நாளில் குழந்தைக்கு ‘விநாயக சுப்ரமணியன்’ என்று திருநாமம் சூட்டி, நாமகரணத்தை வைதிக முறையில் நன்கு செய்தார். அருமையாகப் பெற்ற குழந்தையை அப்ப என்றழைத்தும், அப்பய்ய, அப்பய, அப்ப என்றெல்லாம் அழைத்தும் பரமானந்த நிலையை அடைந்தார். குழந்தை அப்பய்யன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தாய் தந்தையரின் மனம் மகிழ்ச்சியடையும்படி தாலாட்டுதலையும், பாராட்டுதலையும் பெற்று அவர்களுடைய அரும்பெரும் முத்தங்களையும் பெற்று வளர்ந்து வந்தார். இரண்டு வருஷங்கள் சென்றதும், ஸ்ரீரங்க ராஜாத்வரிக்கு இன்னொரு பிள்ளையும் பிறந்தது. அந்தப் பிள்ளைக்குத் தனது தந்தையார் பெயரான ஆசார்ய தீக்ஷிதர் என்ற பெயரை வைத்தார். இவர் ஆச்சா தீக்ஷிதர் அல்லது ஆச்சான் தீக்ஷிதர் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு ஞானாம்பிகை என்று பெயரிட்டார்.

தீக்ஷிதேந்திரரின் வித்யாப்யாஸமும், உபநயனமும்

ஸ்ரீரங்கராஜாத்வரி அவர்கள் தமது மூத்த குமாரரான அப்பய்யருக்குத் தாமே அக்ஷராப்யாஸம் செய்துவைத்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் முதலானவற்றைக் கற்பிப்பதற்கு குருராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே ஸ்ரீஅப்பய்யர் ஸகலவிதமான எழுத்து ஞானமும், ஸகல பாஷா ஞானமும், அழகான முறையில் ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்று விளங்குவதைக் கண்ட தந்தையாரும், குருராமகவியும் பரமானந்த நிலையை அடைந்தார்கள். ஸ்ரீரங்கராஜாத்வரியும் குருராமகவிக்குச் சிறந்த ஸன்மானங்கள் செய்து சிறப்பித்தார். கர்ப்பாஷ்டம வயதில் (அதாவது பிறந்த ஏழாவது வயதில்) அப்பய்யருக்கு நல்லதொரு நாளில் உபநயனம் செய்து வைத்தார். வேதாத்திய யனமும் செய்துவைத்தார். தனது கன்யாரத்னத்தை வாதூல கோத்திரத்தில் பிறந்த சிறந்ததொரு வரனுக்குக் கன்னிகாதானம் செய்தார். இங்ஙனம் தமது சந்ததிகளால் மிக்க பரமானந்த நிலையை ரங்கராஜாத்வரி அடைந்தார்.

ஸ்ரீரங்கராஜாத்வரி சிவபதமடைதல்

ரங்கராஜ தீக்ஷிதர் இங்ஙனம் எல்லா வகையிலும் தன் நிறைவு பெற்றவராக வேலூர் சின்னபொம்மராஜன் என்னுமரசனால் போற்றப்பட்டு வந்தார். அடையப்பலம் கிராமத்தில் சோமயாகம் முதலான பெரிய யாகங்களைச் செய்து முடித்தார். பிறகு ஒரு நாள் தனது புத்திரர்களான இருவரையும் அழைத்து, ‘குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரக் கடவுளைப் பூஜித்து வாருங்கள். அனவரதமும் நீங்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்” என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார். அந்த சமயம் ஸ்ரீஅப்பய்யருக்கு வயது பதினாறே ஆகியிருந்தது. தனது தந்தையின் பிரிவைப் பொறுக்கமாட்டாதவராய்த் துக்கப்பட்டாரேனும், ஒருவாறு தைரியத்தையடைந்து பித்ருகாரியங்களை நன்றாகச் செய்து முடித்தார். தந்தையாரின் கட்டளைப்படி நடந்து கொண்டு அடையப்பலத்தில் வசித்து வந்தார்.

சின்னபொம்ம அரசனின் ஆதரவு

இம்மாதிரி ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் அடையப்பலம் கிராமத்தில் வசித்து வந்த சமயம், கோடி கன்னிகாதானம் என்ற பிருதத்துடன் கூறிய பாஞ்சராத்ர மதத்தைப் பின்பற்றியவரான ஸ்ரீநிவாஸ குருதாதாசாரியார் என்ற வைஷ்ணவர் சின்னபொம்ம ராஜனை அடைந்து தன்னுடைய மதத்தை அவன் மனத்தில் ஊற வைத்துத் தன்னை அனுசரிக்கும்படிச் செய்தார். அங்ஙனமிருந்தாலும், அரசன் சின்ன பொம்மன் ஸ்ரீ ரங்கராஜாத்வரி இல்லாது தனது சபையின் சோபை குறைந்து விட்டதாக எண்ணி அடையப்பலத்தில் இருக்கும் அவரது இரண்டு குமாரர்களையும் தனது நகரத்துக்கு அழைத்து அவர்களுக்கு இடங்கொடுத்து தனது சபை வித்வான்களாகச் செய்தான். காலக்ரமத்தில் தாதாசாரியர் அரசனால் கெளரவிக்கப்பட்டு மந்திரி பதவியையும் அடைந்தார். சிவபக்தர்களை அவமதிப்பதில் பெரிதும் ஆர்வமுடையவராய், சிவாபராதம் செய்கின்றவராய் இருந்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தாதாசாரியர் செய்யும் காரியங்களைச் சகிக்கமாட்டாதவராய் சிவபெருமானின் முழுமுதல் தன்மையைப் பெரிதும் போற்றியும் சிவபக்தர்களைக் கொண்டாடியும் சாஸ்திர வாயிலாகச் சபையில் பிரகடனம் செய்தார். இவ்விஷயத்தை அறிந்த சிவபக்தர்கள் எல்லோரும் பதினாறே வயதான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமையை உணர்ந்து புகழ்ந்தார்கள். தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி, கார்வேட்டி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசர்களும் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் சிவபக்திப் பெருமையைக் கேட்டுத் தத்தம் நகர்களுக்கு அழைத்து அவரைப் பெருமைப்படுத்தித் தக்க சன்மானங்கள், பிருதுக்கள் போன்றவைகளால் கெளரவித்தனர். இங்ஙனம் நமது தீக்ஷிதேந்திரர் பல இடங்களிலும் சிவபக்தர்களாலும் மஹாராஜாக்களாலும் போற்றப்படுவதையறிந்து பாரதமாதா சந்தோஷித்தாள் என்றால் மிகையாகாது.

ரத்னகேட தீக்ஷிதரும் தீக்ஷிதேந்திரரின் திருமணமும்

இங்ஙனம் இளமையிலேயே பெயரும் பெருமையும் பெற்று விளங்கிய நமது ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களுக்குப் பால்யப்பருவம் போய் யெளவனப்பருவம் வந்து நல்லதொரு கிருஹஸ்ததர்மத்தைப் பின்பற்ற வேண்டிய சமயம் வந்தது. அக்காலத்தில் ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திவ்ய கிருபாபலத்தினால் அம்ருத மயமான வாக்விபூதியுடன் மஹாவித்வானாக உலகத்தில் பிரகாசித்துக் கொண்டு சூரப்பநாயகன் என்ற அரசனால் கெளரவிக்கப்பட்டு அவனது ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்று இருந்த போதிலும் ரத்னகேட தீக்ஷிதர் என்ற பெயரையும் சேர்த்து ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்றே கூறி வந்தார்கள்.

இவ்வாறு ரத்னகேடதீக்ஷிதர் கீர்த்தியுடன் விளங்கி வரும் சமயம், ஒரு சமயம் அவர் காஞ்சி மாநகரில் தனது கிருகத்தில் இருக்கும் பொழுது அவரை வாதத்தில் ஜயிக்க வேண்டுமென்று ஆசைகொண்டு காசியிலிருந்து பண்டிதர்கள் சிலர் ஒரு கூட்டமாக ரத்னகேட தீக்ஷிதர் வீட்டிற்கு விடியற்காலையில் வந்தார்கள். அச்சமயம் வாசலில் ஜலம் தெளித்துக் கொண்டிருந்த தீக்ஷிதரது தர்மபத்தினியைப் பார்த்து “ரத்னகேட தீக்ஷிதர் உள்ளே இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர்களது கருத்தினைத் தனது கூர்த்த மதியினால் உணர்ந்த அந்த அம்மையார் தாமும் ஸாஹித்யத்தில் வல்லவராதலால் அப்போது கோமய ஜலத்தினால் வாசல் தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து தாளபத்தமாய் ‘பஞ்சசாமர விருத்தம்’ என்ற விருத்தத்தில் ஜலம் தெளித்துக் கொண்டே அந்த பண்டிதர்களுக்கு சுலோகரூமாய் பதில் கூறினார்.

இந்த சுலோகத்தைக் கேட்ட காசி பண்டிதர்கள் ரத்னகேட தீக்ஷிதரின் மனைவியே இத்தகைய ஸாஹித்ய திறமையுடன் இருக்கும் போது, அவர் எத்தகைய திறமையுடன் இருப்பார். அவரைப்பார்த்தால் நாம் அவமானப்பட்டு விடுவோம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்விட்டார்கள். இதனால் ரத்னகேட தீக்ஷிதருக்கு நிகரான பண்டிதரே இப்புவியில் இல்லை என்று சொல்லும் நிலைமை உண்டாயிற்று.

ஒருசமயம் சந்திரசேகர பூபாலன் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்தியத்தைக் கேட்டறிந்து தனது ஆஸ்தான வித்வானான ரத்னகேட தீக்ஷிதரைப் பார்த்து, “நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா’ என்று கேட்டான். இதைக் கேட்ட ரத்னகேடதீக்ஷிதர் கொஞ்சம் கலவரமடைந்த முகத்துடன் “அரசே! நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆடையுடன் அந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றேன்’ என்று பதில் கூறினார். மஹாராஜாவும் “நல்லது. அவருடன் வாதம் செய்து வாருங்கள்” என்று கூறி காஞ்சிபுரத்துக்கு அனுப்பினான். ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சீபுரத்தில் இருக்கும்போது நவராத்திரி வந்தது. காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமாகி “குழந்தாய், ரத்னகேடா! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று அருளிச்செய்தாள். கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரமகருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக தோத்திரங்கள் பல செய்து, “அன்னையே! அடைந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பய்ய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவர் என்று கேள்விபடுகிறேன். எல்லா வித்யைகளும் அவரிடமே குடிகொண்டு அவரையே வணங்கி நிற்கின்றன என்றும் கேட்டறிகிறேன் தாயே! எனது கீர்த்தியும் உனதருளால் உலகம் அறியுமாதலால் அவரை நான் ஜயிக்கவேண்டும், எனக்கு நீ ஜயத்தை அளிக்க வேண்டும்” என்று வேண்டினார். இதைக் கேட்ட ஜகன் மாதா சிரித்தாள். சிரித்துக் கொண்டே ரத்னகேட தீக்ஷிதரை நோக்கி அருளிச்செய்தாள். “ரத்னகேடா! நீயும் அப்பய்ய தீக்ஷிதரும் வாதம் செய்வது முறையல்ல. நான் ஒரு வழி கூறுகிறேன். உனது பெண்ணான மங்களாம்பிகையை அந்த அப்பய்ய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்துவிடு. இம்முறையில் உனது மனோரதம் நிறைவேறும். உன்னுடைய பாண்டித்யத்தாலும், வயதாலும், எனது அனுக்கிரஹத்தாலும் அப்பய்ய தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் ஆவாய்” என்றருள் பாலித்து மறைந்தனள்.

இங்ஙனம் ஸ்ரீ ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சியில் இருக்கையில், கருணாமூர்த்தியான ஸ்ரீ ஏகாம்பரநாதர் அப்பய்ய தீக்ஷிதரின் கனவில் தோன்றினார். தோன்றி, “குழந்தாய் அப்பய்யா! ஸ்ரீகாஞ்சீபுரம் வந்து சேர்வாய். அங்கு காமாக்ஷீயுபாஸகரான ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் தனது பெண்ணை உனக்குக் கன்னிகாதானம் செய்து தருவார்” என்று அருளிச் செய்தார். இம்மாதிரி கனவில் அருள் பெற்ற ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் மிக்க மகிழச்சியுற்றவராய் உடனே புறப்பட்டுக் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். ஏகாம்பரநாதருடைய சந்நிதியில் தகுதியான ஒரிடத்தில் வசித்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் காஞ்சீபுரம் வந்து சேர்ந்த விவரத்தை அறிந்த ரத்னகேட தீக்ஷிதர் தனது பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் இருக்குமிடம் வந்தார். அவரைக் கண்டதும் அப்பய்ய தீக்ஷிதர் எழுந்து அவரை உபசரித்தார். நல்வரவு கூறி அவர் முன்னிலையில் வந்து நின்றார். அவரைப் பார்த்து மகிழ்ந்த ரத்னகேட தீக்ஷிதர். “ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தியே! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.

 

வித்வன் முகாதனுபமாம் தவ கீர்த்திமாராத்

ச்ருத்வா ப்ரஸாத பரிதஸ்ஸமுபாகதோ ( )ஸ்மி |

விக்ஞானதச்ச வயஸா தபஸா ( )பிவ்ருத்தோஸ்மி

அவ்யாஹதோத்ததவசா: ப்ரதிதப்ரபாவ: ||

 

யத்ராஸ்தே சாம்பவீ வித்யா தத்யாத்தஸ்மை சிரோ ( )ம்புபி: |

இதி ஜாநாஸி கிம் தன்மே வாணீமேகாம் ச்ருணுஸ்வயம் ||

 

கச்சித்விபச்சிதம்ருதாயிதமஸ்மதுக்தம் 

நோல்லங்கயேத்குசலவானதுநா ( )ஸ்மி வித்வான் |

தன்னஸ்ஸுதாம் ஜடிதி மங்கலநாயகீம் த்வம்

உத்வாஹ்ய பூரி லபஸேஸுககீர்த்திசோபாம் ||

குழந்தாய்! அப்பயா! பண்டிதர்களின் வாயிலாக உனது பாண்டித்தியத்தையும், கீர்த்தியையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியோடு உன்னைப் பார்க்கவே ஒடிவந்தேன். நான் விக்ஞானத்திலும், தவத்திலும், வயஸ்ஸிலும் கிழவனானதால் உன்னிலும் பெரியவனல்லவா? நான் அறிந்த உண்மையை உன்னிடம் கூறுகின்றேன். எந்த இடத்தில் சிவசம்பந்தமான வித்தையும், சிவபக்தியும் இருக்கின்றதோ அங்கே அவர்களைத் தலையாலே போற்ற வேண்டும் என்று நீயும் அறிவாய். அதனால், என் வார்த்தையைக் கவனமாகக் கேள். எனது வார்த்தை அம்ருதத்திற்குச் சமமானது. இதை யாரும் தட்டவும் கூடாது. எனது குமாரியான மங்களநாயகி என்ற அற்புதமான கன்னியாரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்” என்று கூறினார்.

இதைக்கேட்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர், “ஓ பண்டித ரத்தினமே! தாங்கள் யோஜிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன்.

 

ஸம்பந்த: கலு ஸாதூநாமுபயோரேவ ஸம்மத: |

சந்த்ரசூடநிதேசேன ஸஜ்ஜா மே பந்துதா ( )துநா ||

“நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேச்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்று கூறினார்.

ரத்னகேட தீக்ஷிதர் பெருமகிழ்ச்சி அடைந்தார். திருமணச் செய்தியை பந்துக்கள் அனைவருக்கும் அனுப்பி அனைவரையும் வரவழைத்தார். கல்யாணமண்டபத்தை நிர்மாணம் செய்து வாழைமரங்கள் கட்டி, தோரணங்களால் அலங்கரித்தார். நல்லதொரு முஹூர்த்தத்தில் கன்னிகையும் கனக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸர்வாலங்கார பூஷிதையாகவும் ஸர்வ மங்கள சோபிதையாயும் திகழும் மங்களநாயகியை மணவறையில் வைத்து, ஸாக்ஷாத் பரமேச்வரனாகவே வரனை பாவித்து, வரவேற்று, வரபூஜை செய்து மங்களநாயகியை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் தீக்ஷிதரும், மங்களநாயகியை பாணிக்கிரஹணம் செய்து கொண்டு, மாங்கல்யதாரணம் செய்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் செய்து, விதிப்படி அழகாக விவாஹத்தை நடத்தினார். பின்னர் சிறந்த உணவளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் தீக்ஷிதேந்திரர் பெரு மகிழ்ச்சியுடன் வழங்கினார். இந்த சமயம் ஒரு மஹாகவி ஒரு ச்லோகம் கூறினார்.

 

அப்பய்யயஜ்வன்யவநீஸுராணாம் அன்னம் ஸுவர்ணம் 

                                  ஸரஸம் ததானே |

அபர்ணமாஸீத்கதலீதரூணாம் கேவலம் ப்ருந்தமபி த்விஜானம் ||

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரரின் திருமணத்தில் பிராமணோத்தமர்கட்கு அன்னமும் தங்கமும் கொடுக்கும் பொழுது இப்புவியிலுள்ள வாழைமரங்கள் எல்லாம் இலை இல்லாமல் ஆயின. (அதை வடமொழியில் அபர்ணம் என்ற பதத்தால் கூறி), வாழை மரங்கள் மட்டுமா இலை இல்லாமல் போயின? ஏழை பிராமணர்களுடைய ஸமுதாயத்திற்கும் அபர்ணமாயிற்று. இங்கு அபர்ணம் என்ற பதத்திற்குக் “கடன் ஒழிந்தது” என்ற பொருள்பட கவி கூறினார். இத்தகைய பெருமையுடன் திருமணம் நடந்தேறியது.

ரத்னகேட தீக்ஷிதரும் காமாக்ஷியின் க்ருபையால் மனம் சந்தோஷம் அடைந்தார். அப்பய்ய தீக்ஷிதரிடம் வாதம் செய்வதற்காகத் தன்னை வாதத்திற்கு அனுப்பின சந்திரசேகர பூபாலனிடம் நடந்த விருத்தாந்தத்தைக் கூறி அவர் மனமும் சந்தோஷமடையத் செய்தார்.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமை

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரும் திருமணமானதும், தன் மனைவியுடன் பிரம்மவாஸ்து என்ற இடத்தில் வசித்து ச்ரெளத, ஸ்மார்த்த கர்மாக்களை அனுஷ்டானம் செய்து கொண்டு பல தேசங்களிலிருந்து வரும் சிஷ்யர்களுக்குப் பாடங்களைப் போதித்துக்கொண்டும், சிவபெருமானைக் கொண்டாடும் சிவபாரம்யமான கிரந்தங்களைச் செய்து கொண்டும், அளவுகடந்த சிவபக்தி செய்து கொண்டும், சிவார்ச்சனை செய்து கொண்டும் திக்கெட்டிலும் அவரது கீர்த்தி பரவும்படி தகழ்ந்தார். பிறகு காஞ்சீபுரம் சென்று அங்கே சிலகாலம் வசிக்கும்போது பல தேசங்களிலிருந்தும் சாஸ்த்ராப்யாசம் செய்ய சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாஸ்த்ர ப்ரவசனங்கள் செய்து கொண்டும் பரமசிவ பாரம்யத்தை உலகத்தில் நிலைநாட்ட வேண்டி சிவார்ச்சனம் செய்ய வேண்டிய வழிகளையும் கிருஹஸ்தர்களுக்கு உபதேசித்து சிவபக்தியை உலகத்தில் பரப்பியும் சிறந்து விளங்கினார்.

தீக்ஷிதேந்திரருக்கு வயது இருபது ஆயிற்று. இவருடைய கீர்த்தி நன்கு பரவி உலகம் இவரை நன்றாக அறிந்து பாராட்டியது. ஒரு சமயம் இவர் அடையப்பலம் கிராமத்தில் தங்கியிருந்தபொழுது காசியிலிருந்து க்ஷேத்திர யாத்திரையாக வந்த மஹாபண்டிதர்கள் சிலர் அங்கு வந்தார்கள். தீக்ஷிதருடைய பெருமையைக் கேட்டு அவரைச் சென்று பார்த்தார்கள். பார்த்து “தீக்ஷிதர் அவர்களே! உமக்கு எந்த சாஸ்திரத்தில் பரிச்சயம்?” என்று கேட்டார்கள்.

 

நாஹமதீதி வேதே படிதீ யத்ர குத்ரசிச்சாஸ்த்ரே |

கிந்து தரேந்துவதம்ஸினி புரஹம்ஸினி பும்ஸி பூயஸீ பக்தி: ||

நான் வேதம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை. ஓரிடத்திலும் சாஸ்திரம் படிக்கவில்லை. அர்த்தசந்திரனைத் தலையில் வைத்திருக்கும் திரிபுரஸம்ஹார மூர்த்தியான பரமசிவனிடத்தில் பக்தியானது எனக்கு நிரம்ப உள்ளது என்ற கருத்து உடைய இந்த ஸ்லோகத்தில் வ்யாகரணமானது மிகவும் சாமர்த்தியமாய்ப் பிரயோகம் பண்ணப்பட்டிருந்ததால் அந்த பண்டிதர்கள் மிக்க சந்தோஷமடைந்தார்கள். பிறகு அவர்கள் இராமேசுவர யாத்திரையை முடித்துக் கொண்டு காசிக்குச் சென்று தாங்கள் செல்லுமிடமெல்லாம் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் பெருமையைப் பிரகடனப்படுத்தினார்கள். இவ்வாறு தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை உலகெங்கும் பரவத் தொடங்கியது.
 

ஜ்யோதிஷ்டோம, வாஜபேயாதி யாகங்கள் செய்தல்

இவ்விதம் சிலகாலம் சென்ற பிறகு ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அடையப்பலத்தில் தங்கியிருந்து ஸோமயாகம் செய்தார். ஸகல மனிதர்களும் மனம் பரமானந்த நிலையை அடைந்தவர்களாய் தரிசனம் செய்து கடைத்தேறினார்கள். தீக்ஷிதேந்திரரும் வஸிஷ்ட மஹரிஷியைப் போன்று யாகத்தைச் செய்து தக்ஷணையைக் கொடுத்து, கொடையாளியாகப் பிரகாசித்தார். இவ்வளவு அழகாகப் பூர்த்தி அடைந்த யாகத்தை வேலூர் சின்னபொம்ம ராஜனுடைய ஆஸ்தான வித்வானாக இருந்த தாதாசாரியார் என்பவர் மாத்திரம் நிந்தித்தார். இதை அறிந்து அப்பய்யதீக்ஷிதர் கவலை இல்லாதவராய்ப் பரமேச்வரனை ஆராதித்து வந்தார்.

பிறகு ஒரு சமயம் காஞ்சீபுரம் அடைந்து வாஜபேயம் என்ற மஹாயாகத்தைச் செய்து வரும்பொழுது அந்த யாகத்தில் பதினேழு ஆடுகள் ஈச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டிய நிலையில் அவை உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்டு மிகவும் துக்கமடைந்து வேதங்களிலே ஆடுகள் உயிரிழக்கவில்லை என்று கூறுவதை நம்பி அவைகள் நல்லகதி அடைகின்றன என்பதை எண்ணி பிரார்த்திக்கலானார்.

 

யாப்ரஹ்மணோ நிச்வஸிதம் யதுக்தி: ஸத்யாநிசம் யஜ்ஜபதோ 

                                             விமுக்தி: |

ஸைவ ப்ரமாணம் நநு மாத்ருசாநாம் ச்ருதே நமஸ்தே பவதீ கதிர்ந: ||

 

விஹிதம் விபரீதமேகத: ஸ்யாத் ததபி ஸ்யாத்குஹசிச்ச ஸாதுகர்ம |

கஹநாம் கதிமஸ்ய கர்மணோ ( )பி ச் ருதிபாவம் வித்மஹே 

                                             மஹேச ||

வேதமானது பரப்ரம்மத்தின் மூச்சுக்காற்றாகத் தோன்றியது என்றும், அதை ஜபிப்பதால் முக்தியே கிடைக்கும் என்றும், அதுவே பிரமாணமாகச் சொல்லுவதால் என் போன்றவர்களுக்கு வேதம் தான் கதி. “ஏ பரமேச்வரா! மஹேசா! வேதத்தாலே கூறப்பட்ட கர்மாவானது நல்லது. அதன் உண்மையை அறிவது மிகவும் கடினமானது, அதன் உண்மையை அறிந்து அக்கர்மாவைச் செய்பவர்கள் நற்கதி அடைகின்றார்கள் என்பதை நம்பி நான் இந்த புண்ணிய கர்மாவைச் செய்தேன். சம்போ! நீதான் என்னை ரக்ஷிக்க வேண்டும். இந்த ஆடுகளை நான் ஹிம்ஸை செய்தாலும், ஹிம்ஸை செய்யவில்லை என்று வேதம் கூறுவதை நம்பி இப்புண்ணிய கர்மாவைச் செய்வதால் இவை சாகவில்லை என்பதை இவ்வுலகம் அறியட்டும்” என்று வேண்டினார். அந்த சமயம் இந்த யாகத்தை தூஷிக்க வந்த ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த யாகத்தின் அத்தனை ஆடுகளின் ஜீவன்களும் அற்புதமான தேவசரீரம் எடுத்து திவ்ய விமானமேறி பீதாம்பரதாரிகளாய் ஆகாயத்தில் எல்லா தேவர்க்ளும் பார்க்க தீக்ஷிதேந்திரரை வாயார வாழ்த்திக்கொண்டே பரலோகமடைந்தன. திவ்ய சரீரத்துடன் மறைந்த ஆடுகளைப் பார்த்த ஜனங்கள் அப்பய்ய தீக்ஷிதரை நிந்தித்தது கொடும்பாவம் என்பதை உணர்ந்து அவரை வணங்கினார்கள்.

அப்பய்ய தீக்ஷிதர் வாஜபேய யாகத்தை சாஸ்திரம் கூறியபடி செய்து ஸ்வர்க்காரோஹணம் என்ற கர்மா உள்பட செய்து அவப்ருத ஸ்னானம் செய்தார். அவப்ருத ஸ்னானம் செய்தபிறகு வாஜபேய யாகம் செய்தவரை கெளரவிக்கும் முறையில் நாடாளும் மன்னர் ஒருவர் வெண்குடை பிடிப்பது சம்பிரதாயமாக இருந்த்து. தாதாசாரியாரால் கலைக்கப்பட்ட வேலூர் சின்னபொம்மராஜனைத் தவிர மற்ற அரசர்கள் பலர் யாகத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் ஸ்ரீதீக்ஷிதேந்திரரின் அனுமதியின் பேரில் தஞ்சாவூர் மன்னன் நரசிம்மபூபாலவர்மன் என்றவன் தீக்ஷிதர் அவப்ருத ஸ்னானம் செய்த பின்னர் வெண்குடை பிடித்து கெளரவித்தான்.

பல கவிகள் அப்பய்ய தீக்ஷிதரை ஸ்துதிகளால் கொண்டாடினார்கள். உலகமெல்லாம் போற்றும் முறையில் நமது தீக்ஷிதேந்திரர் மிகப் பெரியதான இந்த வாஜபேய யாகத்தை முடித்துவிட்டு தமது சொந்த ஊரான அடையப்பலத்திற்கு வந்து சேர்ந்தார்.
 

சின்னபொம்மராஜன் ஆதரவில் வேலூர்நகர வாஸம்

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் இவ்வளவு அழகாக வாஜபேய யாகத்தை நடத்தி அடையப்பலம் திரும்பிய செய்தியையும், யாகத்தின் சிறப்பையும் பல வித்வான்கள் மூலமாக அறிந்த சின்னபொம்மராஜா, தாதாசாரியனின் துர்போதனையினால் தான் அந்த யாகத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்தினான். ஆகையால் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பி, அவருக்குத் தங்கப் பல்லக்கு அனுப்பி தனது சபைக்கு எழுந்தருளுமாறு வேண்டினான். தனது ஸபை தீக்ஷிதரின் தந்தையான ரங்கராஜ தீக்ஷிதராலும், பாட்டனாரான ஆசாரிய தீக்ஷிதராலும் அலங்கரிக்கப்பட்டிருந்த்து. எனவே தற்பொழுது அப்பய்ய தீக்ஷிதராலும் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். இம்மாதிரி இரண்டு மூன்று தடவை அரசன் அழைத்த பிறகு பல்லக்கில் ஏறி வேலூர் நோக்கி வந்தார். அங்ஙனம் வரும் போது சின்னபொம்ம ராஜா தீக்ஷிதேந்திரரை ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் அருகில் வந்து உபசரித்து, வரவேற்று, தன் சபைக்கு அழைத்து வந்தான். அந்த நாள் முதல் அரசனின் வேண்டுகோளை ஏற்று, அவனது ஆஸ்தான வித்துவானாக வேலூர் நகரில் வசித்து வந்தார். அங்கு ஆஸ்தான வித்வானாக இருந்து கொண்டே அக்னிஹோத்ராதி கர்மானுஷ்டானங்களை முறைப்படி செய்து கொண்டும் சிவபூஜை செய்து கொண்டும் அரசனுக்கு சிவபக்தியை உபதேசித்துக் கொண்டும் ஸபையை அலங்கரித்துக் கொண்டு வந்தார். வேலூர் நகர மக்கள் தீக்ஷிதேந்திரரின் உபதேசத்தினாலும், சின்னபொம்மனின் நீதியோடு கூடின ஆட்சியினாலும் சமய நெறியில் ஈடுபட்டு சிவபக்தியில் திளைத்து வந்தார்கள்.

சின்னபொம்மனுடைய சபையில்தான், ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தமது வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கழித்தார். இங்கிருக்கையில் தான், பல பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றினார். இங்குதான் சிவார்க்கமணிதீபிகை என்ற மிகச் சிறந்த நூலுக்காக கனகாபிஷேகமும் செய்யப்பட்டார். இவற்றை விவரமாய் பின்னால் கூறுவோம்.
 

தாதாசாரியார் செய்த கொடுமைகள்

1) ஆபிசாரப் பிரயோகம்:-

இங்ஙனம் தீக்ஷிதேந்திரரின் கீர்த்தி மேலும் மேலும் பெருகுவதை தாதாசாரியாரால் பொறுக்க முடியவில்லை. அப்பய்ய தீக்ஷிதருக்கும், அவர் பொருட்டு மன்னனுக்கும் இடையூறுகள் செய்ய முற்பட்டார். ஒரு ஆபிசாரக் கிரியையின் மூலம் அரசனின் அந்த்ப்புரத்து ஸ்த்ரீகள் அனைவருக்கும் மற்றும் நகர மக்களுக்கும் ஒரு நோயை உண்டு பண்ணினார். இது ஜூர்த்திரோஹம் என்று சொல்லப்படும் ஒரு வகையான விஷஜுரம் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த அரசன் மிக்க மனம் வருந்தினான். மணி, மந்திரம், ஒளஷதம் என்ற மூவகை சிகிச்சை முறைகளாலும் முயற்சித்தும் இந்த ஜுரம் நீங்கவில்லை. அரசனின் மனக்கலக்கம் அதிகமாகியது. சிறந்த புத்திமானாகையால் இது தாதாசாரியாரின் துஷ்கிருத்தியமாகவே இருக்கும் என யூகத்தால் அறிந்தான். அறிந்து கொண்டு தீக்ஷிதேந்திரரைச் சரணடைந்து இந்த விஷஜுரத்தினின்றும் அந்தப்புரத்து ஸ்த்ரீகளையும் நகர மக்களையும் காத்தருளுமாறு வேண்டினான். சிறந்த சிவபக்த சிகாமணியான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் கருணையே உருவானவர் அன்றோ? அரசனின் நிலைக்கு மிகவும் இரங்கிய வராய், நமோவ : கிரிகேப்ய:” என்ற வேதமந்திரத்தால் அபரிமிதமான ஒரு ஹோமத்தைச் செய்து சிவபிரானருளால் அந்த நோயினைப் போக்கினார். இது தாதாசாரியாரின் செயலே என்றறிந்த தீக்ஷிதர் மன்னனைப் சமாதானப் படுத்தினார். இந்த நிகழ்ச்சியினால் அரசனுக்குச் சிவபக்தி மேலும் அதிகரித்தது. தீக்ஷிதர் மீதும் பக்தி அதிகமாகியது.

2) க்ஷுத்ரதேவதையால் தீக்ஷிதரின் பூஜையறையை அசுத்தம் செய்தல்:-

தான் செய்த செயல் தீக்ஷிதரின் கீர்த்திக்கே காரணமானதால் மிகுந்த கோபமடைந்த தாதாசாரியார் மேலும் இன்னல்களைச் செய்யலுற்றார். ஒரு நாள் இரவு க்ஷுத்ரதேவதை உபாஸகன் ஒருவனுடைய உதவியால் தீக்ஷிதேந்திரர் இல்லத்தின் பூஜையறை அருகில் ரத்தம், மாமிசம் இவைகளைப் போட்டு அசுத்தம் செய்தார். மறுநாள் விடியற்காலையில் தீக்ஷிதேந்திரர் ஸ்நானம் செய்ய புறப்பட்ட பொழுது பூஜையறையின் அருகில் துர்கந்தம் வீசுவதையறிந்தார். ஒரு தீபத்தின் உதவியால் அங்கிருந்த மாம்ஸாதிகளைக் கண்டார். கண்டு மனம் வருந்தினார். வருந்தி சிவபெருமானை நோக்கி ‘அத்யவோசததி வக்தா’ என்ற தொடங்கும் ஸ்ரீருத்ர மந்திரத்தின் பகுதியை ஜபித்தார். ஜபித்தவுடன் ஒரு சிவபூதம் அங்கே தோன்றி அந்த அசுத்தம் அனைத்தையும் போக்கி சுத்தம் செய்தது. தாதாசாரியரின் ஏவலினால் தீக்ஷிதருக்கு இந்தத் தீங்கினைச் செய்த அந்த க்ஷுத்ரதேவதா உபாஸகனும் நோயினால் பீடிக்கப் பட்டான். இவையறிந்த நகர மக்களும், அரசனும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரைப் போற்றினார்கள்.

3) விஷதீர்த்தபானம்:-

தாதாசாரியார் மனம் குமுறியது. தீக்ஷிதேந்திரரை எப்படியும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற துரெண்ணம் கொண்டார். விஷ்ணு கோவில் அர்ச்சகருக்கு நூறு பொன் நாணயங்கள் ‘லஞ்சம்’ கொடுத்து தீக்ஷிதேந்திரர் விஷ்ணு தரிசனத்திற்கு வரும் போது தீர்த்தப் பிரஸாதம் அளிக்கையில் அதில் விஷத்தைக் கலந்து கொடுக்கும்படி ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி மஹாவ்யதீபாத தினத்தில் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தமது பரிவாரத்துடன் சிவாலய தரிசனம் செய்து விபூதிப் பிரஸாதம் பெற்றுக் கொண்டு, விஷ்ணு ஆலய தரிசனத்திறுகும் வந்தார். பக்தர்கள் பலர் திரளாகக் கூடினர். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரருக்குத் தீர்த்தப் பிரஸாதம் கொடுக்கும்போது தாதாசரியாரின் ஏற்பாட்டின்படி அர்ச்சகர் விஷம்கலந்த தீர்த்தத்தை தீக்ஷிதருக்குப் பிரஸாதமாகக் கொடுத்தார். குற்றமுள்ள நெஞ்சு உடையராகையால் விஷதீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. தீக்ஷிதேந்திரர் இதனைக் கவனித்தார். நடந்ததை உணர்ந்து கொண்டார். ஆயினும், அந்த விஷதீர்த்தத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். காலகூட விஷத்தினை உண்டருளிய பரமேச்வரனைத் தியானித்துக் கொண்டு அந்த விஷதீர்த்தத்தினை எவ்வித சலனமுமின்றி உட்கொண்டார்.

இம்மாதிரிகூறி தீக்ஷிதேந்திரர் அந்த விஷங்கலந்த தீர்த்தத்தை உட்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தார். தாதாசாரியாரின் சிஷ்யர்கள் தீக்ஷிதர் மடிந்து விடுவார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆயினும் தீக்ஷிதேந்திரரின் சீடர்கள் அவர் மரிக்கமாட்டார் என்றே நம்பினார்கள். தீக்ஷிதேந்திரர் வீடு திரும்பியதும் இந்த விஷயத்தைக் கேட்ட மன்னவன் பல வைத்தியர்களை அழைத்து வந்தான். தீக்ஷிதேந்திரர் எத்தகைய துன்பமும் இல்லாது அவர் நலமாக இருப்பதைக் கண்டு வணங்கி தனது மாளிகையைச் சென்றடைந்தான். இந்த சம்பவத்தினால் மன்னவனுக்கு தீக்ஷிதரிடம் பக்தியும் தாதாசாரியரிடம் வெறுப்பும் அதிகமாகியது.

4) சிவநிர்மால்ய விசாரம்:

விஷ தீர்த்தத்தினாலும் தீக்ஷிதரை ஒன்றும் செய்ய முடியவொல்லையே என்று கலங்கிய தாதாசாரியர் சின்னபொம்ம ராஜனிடத்தில் சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்றும், சிவநிர்மால்யம் சாப்பிடுபவர்கள் அசுத்தர்கள் என்றூம் அரசனின் மனதைக் கலைத்தார். அரசன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரை அழைத்து சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரம் இருக்கிறதா? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்,

 

சிவஸ்ய நிர்மால்யமசாம்பவானாமபோஜ்யமர்ஹம் விமலாந்தராணாம் |

ஸத்ப்ராஹ்மணோச்சிஷ்டமபோஜ்யமங்க்ரிஜாதைர்ஹி போதாயன தர்மஸூத்ரம் ||

 

ஸர்வெளஷதீனாம் பதிரஸ்ய புஷ்பம் கங்காதிதீர்த்தம் து கபர்த்த ஜாதம் |

கிம் வஸ்து நிர்மால்யவிஹீனமாஸ்தே விசார்யமாணே சிவ ஏவ ஸர்வம் ||

சிவபெருமானுடைய நிர்மால்யம் சிவபக்தர்களைத் தவிர வேறு யாரும் சாப்பிடக் கூடாது. பரிசுத்தமான மனம் படைத்த சாதுக்களான சிவபக்தர்களால் தான் சாப்பிடத் தகுதி உடையது. ஸத்ப்ராம்மணர்கள் சாப்பிட்ட மிச்சமானது பலரும் சாப்பிடக் கூடாது என்று போதாயன தர்மஸூத்திரத்தில் கூறியிருக்கிறபடியால் சிவநிர்மால்யத்தைப் பரிசுத்தமான சிவபக்தர்கள் சாப்பிடுவதில் எவ்விதக் குற்றமும் இல்லை. கங்காஜலமே சிவநிர்மால்யம் தான். எல்லா ஒளஷதிகளும் சிவபெருமானைச் சார்ந்ததே. வ்ருக்ஷாணாம் பதயே என்று வேதம் சொல்லியிருப்பதால் எல்லாமே சிவத்தைச் சார்ந்தது தான். எனவே எல்லோரும் சிவபக்தி செய்து எல்லோதும் சிவநிர்மால்யத்தை சாப்பிடலாம் எனக் கூறியருளினார். இதைக்கேட்ட அரசன் தனது ஸந்தேஹகத்தைப் போக்கிக் கொண்டான்.

5) விஷபானம்:

மேலும் மேலும் தோல்வியே அடைந்த தாதாசாரியார் தீக்ஷிதருக்குத் துன்பம் விளைவிக்கத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார். ஒரு சமயம் அறிஞர்கள் நிறைந்த சபையிலே நீலகண்டன் என்ற சொல்லின் பொருள் பற்றிய விசாரம் ஏற்பட்டது. காலகூட விஷத்திற்குப் பயந்த தேவர்கள் ஸதாசிவனான பரமசிவனைச் சரணடைந்த அவரது பெருமையை பாகவத ச்லோகத்தின் மூலம் தீக்ஷிதர் நிரூபித்தார். மற்றும் மும்மூர்த்திகளுக்கும் மேலாய் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட சிவம் என்ற பெயருடைய பரப்ரம்ம ஸ்வரூபமான கைலாசவாசியான ஸ்ரீகண்டருத்ரனின் பெருமையை ப்ரஜாபதி செய்த ஸ்தோத்திரத்தில் காலகூட ஸம்ஹரணம் பிரம்மாதி தேவர்களுக்கு அசாத்தியமானது. தங்களையே சரணாக நாங்கள் வந்துள்ளோம் என்று கூறியிருப்பதையும் ஞாபகப்படுத்தினார். அப்பொழுது தாதாசாரியார் பரிஹாஸமாக ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரைப் பார்த்து ஓ! நீலகண்ட உபாஸகரான அப்பய்ய தீக்ஷிதரே! காலகூட பக்ஷணத்தினால் சிவன் ஸகல தேவதைகளுக்கும் தலைவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நீங்களும் விஷபானம் பண்ணமுடியுமா? எனக் கேட்டார். முன்னர் ரகசியமாக தீர்த்தப் பிரஸாதத்தில் கலந்த விஷம் செயல்படவில்லை என்று அறிந்திருந்தும், பயங்கரமான விஷத்தை அரச சபையில் காட்டி இதைச் சாப்பிடமுடியுமா என்று பரிஹஸித்தார். அந்தப் பரிஹாஸ வார்த்தையினையும் மதித்து ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் இதில் என்ன சந்தேஹம்? என்று உடனே பதிலளித்து அந்த க்ஷணமே சிறிதும் தயக்கமின்றி நமோ நீலக்ரீவாயச சிதிகண்டாய  என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை, அரசன் எவ்வளவோ தடுத்தும், ஒரு சிறு பாலகன் கற்கண்டுக் கட்டியை விழங்குவது போல அநாயாஸமாக உட்கொண்டு எவ்விதமான குறையுமில்லாமல் பரம ஆரோக்யத்துடன் இருந்தார்.

 

குலிசம் குஸுமதி தஹனஸ்துஹிநதி வாராம் நிதி: ஸ்தலதி |

சத்ருர்மித்ரதி விஷமப்யமருததி சிவ சிவேதி ப்ரலபதோ பக்த்யா ||

சிவ சிவ என்று பக்தியுடன் கதறும் பொழுது இந்திரனின் வஜ்ராயுதமும் மலராகிறது, நெருப்பு பனிக்கட்டியாகின்றது, கடலும் நிலமாகின்றது, பகைவனும் நண்பனாகின்றான், கொடிய விஷமும் அம்ருதமாகின்றது என்ற கருத்துடைய இந்த ச்லோகம் இங்கே கவனத்திற்குரியது.

சைவசமயாசாரியரில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு சமணர்கள் நஞ்சினை பாலில் கலந்து கொடுத்தனர். திருநாவுக்கரசர் இந்த நஞ்சினை உண்ட வரலாற்றை சேக்கிழார் என்ற தெய்வப்புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்கள் இங்கு ஒப்புநோக்குதற்குரியது.

 

நஞ்சுமமுதாம் எங்கள் நாதரடி யார்க்கென்று

வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே

செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால்

வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்.

எங்கள் நாதனான பரமேச்வரனின் அடியார்க்கு விஷமும் அம்ருதமாகும் என்ற உறுதியுடன் வஞ்சனை மிகுந்த சமணர்களின் தீச்செயலை நன்கறிந்தே அவர்களிட்ட இந்த விஷங்கலந்த பாற்சோற்றை உண்டு ஊனமின்றி இருந்தார் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

 

பொடியார்க்குந் திருமேனிப் புனிதற்குப் புவனங்கள்

முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால்

படியார்க்கு மறிவரிய பசுபதியார் தம்முடைய

அடியார்க்கு நஞ்சமுத மாவதுதான் அற்புதமோ?

திருநீறு விளங்கும் திருமேனியினையுடைய புனிதராகிய இறைவருக்கு, உலகங்களையெல்லாம் அழிக்கவல்ல துன்பம் நீங்கும்படி முன்னைவிஷமானது அமுதமாகுமாகில், யாவர்க்கும் அறிவரிய தன்மையராகிய பசுபதியாருடைய அடியார்க்கு நஞ்சு அமுதமாவதும் ஒரு அற்புதமோ?

மேற்கூறியவைகளால் தீக்ஷிதேந்திரர் சிவனருளால் விஷபானம் செய்தது வியப்பன்று என்று புலனாகின்றது.

6) தனது வலது கையில் தீக்ஷிதர் அக்னியைக் காண்பித்தல்:

சின்னபொம்மராஜன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரிடம் அதிக பக்தியுடன் இருந்தது தாதாசாரியருக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. எப்படியும் அரசனுக்கு அவர் மீது உள்ள மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்ட தாதாசாரியார் தீக்ஷிதர் மீது ஒரு குற்றம் சாட்டினார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அரசனை ஆசீர்வதிக்கும் போது எப்பொழுதும் இடது கையில் ஆசிர்வதிப்பார். இதையே அரசனிடம் குற்றமாகக் கூறி அப்பய்ய தீக்ஷிதர் உங்களை இடது கையினால் ஆசீர்வதிப்பது அவரது செருக்கினைக் காட்டுகிறது என்று கூறி அவனது மனதைக் கலைக்க முயன்றார். அரசனும் இதை தீக்ஷிதரிடமே கேட்டு விட்டான். மறுநாள் சபையில் இதைப் பற்றிய விசாரம் வரும் போது மற்றைய பண்டிதர்கள் அனைவரும் மெளனமாக இருந்தார்கள். தீக்ஷிதேந்திரர் உடனே எழுந்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் உண்மையான ஒரு பிராமணனின் வலதுகையில் அக்னி இருப்பதால் அந்த பிராமணன் தனது இடதுகையினால் தான் ஆசீர்வதிக்க வேண்டும். எந்த வஸ்துவை நோக்கி அந்த பிராமணனின் கை தூக்கப்படுகிறதோ அது அவனது கையின் அக்னியால் எரிந்து விடும் என்று கூறினார். இந்த விளக்கத்தை ஏற்க மற்றையோர் தயக்கம் காட்டினர். அத்தகைய அக்னி தீக்ஷிதரின் வலது கரத்தில் இருக்கிறதா என்று அறிய விரும்பினர். ஸ்ரீதீக்ஷிதர் உடனே அரசனைப் போன்று ஒரு படம் ஒன்றை ஒரு வஸ்திரத்தில் எழுதி வரச் சொன்னார். அங்ஙனமே ஒரு வஸ்திரத்தில் அரசனின் படம் எழுதி சபைக்குக் கொண்டு வரப்பட்டது. தீக்ஷிதர் அந்த உருவத்தினை நோக்கித தனது வலது கரத்தினைக் காட்டினார். உடனே அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலாயிற்று. நெருப்பின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. உடனே அரசன் தீக்ஷிதரை வணங்கி அக்னியை அடக்கிக் கொள்ளும்படிச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அரசனுக்கு தீக்ஷிதரிடம் பக்தி மிகவும் அதிகமாகியது.

இங்ஙனம் தீக்ஷிதருக்குத் தாம் இழைக்கும் ஒவ்வொரு இன்னலும் அவருக்குப் பெருமையையே உண்டாக்குவதை அறிந்த தாதாசாரியார் மனம் புழுங்கினார். பாவம், தாதாசாரியர்! இவரது லீலைகளைப் பின்னரும் கூறுவோம்.
 

புத்திரப்பிராப்தி

இத்தகைய மஹா மஹிமை பொருந்திய ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் அவர்கள் பித்ருக்களுடைய கடனைத் தீர்க்க மிகவும் ஆசைகொண்டு புத்திரப்பேற்றை விரும்பினார். சூரியபகவானைச் சிவபெருமானாகத் தியானம் செய்து வணங்கி புத்திரப்பேற்றை வேண்டினார். இறைவனுடைய அனுக்கிரஹத்தினால் ஸ்ரீமத் தீக்ஷிதருக்கு நீலகண்டன், உமாமஹேச்வரன், சந்திராவதம்சன் என்ற மூன்று குமாரர்களும் மரகதவல்லி, மங்களாம்பா என்ற இரண்டு பெண்களும் பிறந்தார்கள்.
 

சிவார்ச்சன சந்த்ரிகா

அரசன் சின்னபொம்மன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரிடத்தில் மேலும் மேலும் அபிமானம் கொண்டான். தானே சிவ பூஜை செய்ய விரும்பினான். அவனுக்காக சிவபூஜாக்ரமங்களை விரிவாகக் கூறும் சிவார்ச்சன சந்த்ரிகா என்ற நூலை இயற்றினார். அதன்படி அரசன் தன்னுடைய ஜீவகாலம் வரையில் சிவபூஜை செய்து மிக்க மேன்மையடைந்தான். நான்கு வேதங்களின் ஸாரமான சிவஸஹஸ்ர நாமத்திற்கு வியாக்யானமும் எழுதிப் புகழுடன் விளங்கினான்.
 

சிவோத்கர்ஷ ப்ரவசன காரணம்

சிவார்ச்சன சந்த்ரிகை போன்ற அரும்பெரும் கிரந்தங்களைச் செய்து ஒவ்வொரு ஜீவனும் சிவபூஜை செய்ய வேண்டும் எனப் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அத்வைத ஆசார்ய வம்சத்தில் பிறந்தவர். ஹரிஹர பேதமற்றவர். இத்தகைய தீக்ஷிதர் பெருமான் ஒரு சமயம் காஞ்சீபுரத்தில் வைஷ்ணவ பண்டிதர்கள் நடத்திய ஸங்கல்ப சூர்யோதயம் என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ரீகிருஷ்ணானந்தர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் என்ற அத்வைத பரமான நாடகத்திற்கு எதிராக வேதாந்த தேசிகரால் எழுதப்பட்டது இந்த ஸங்கல்ப சூர்யோதயம் என்ற நாடகம். விசிஷ்டாத்வைத வேதாந்தத்தைத் தழுவிய இந்த நாடகத்தை அந்த வைஷ்ணவர்கள் நடிக்கும் போது அதனுடைய இரண்டாவது அங்கத்தில் பின்வரும் ச்லோகம் வருகின்றது,

 

யதீச்வரஸரஸ்வதீ ஸுரபிதாசயானாம் ஸதாம்

வஹாமி சரணாம்புஜம் ப்ரணதிசாலினா மெளலினோ |

ததந்யமததுர்மதஜ்வலிததேஜஸாம் வாதினாம்

சிரஸ்ஸு நிஹிதம் மயா பதமதக்ஷிணம் லக்ஷ்யதாம் ||

இராமானுஜருடைய மதத்தைப் பின்பற்றும் பெரியோர்களுடைய பாதங்களை எனது தலையால் வணங்குகின்றேன். மற்றைய மதங்களைப்பின்பற்றும் துர்மதஸ்தர்களின் தலையில் இடது காலை வைப்பேன் என்பது இந்த ச்லோகத்தின் கருத்தாகும். இந்த ச்லோகத்தைக் கூறி நடிக்கும்போது நடிகர்கள் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் அமர்ந்திருக்கும் இடம்வரை வந்து இந்த ச்லோகத்தின் நான்காவது பாதத்தினை நடிப்பவர்கள் போல தங்களது இடது கால்களைத் தூக்கி அவரது தலைக்கு நேர் வைப்ப்வர் போல் நடித்தார்கள். சிறிது கூட விஷ்ணுத்வேஷம் இல்லாத தீக்ஷிதர் அந்த வைஷ்ணவர்களின் சிவத்வேஷத்தைப் பொறுக்கலாற்றாதவராய் அத்வைதத்தையும் சிவபக்தியையும் பின் பற்றுபவர்களிடம் எவ்வளவு த்வேஷம் காட்டப்படுகிறது என்பதனை நினைத்து வருந்தினார். பூர்வமீமாம்ஸை, உத்தரமீமாம்ஸை என்கிற இரண்டு மீமாம்ஸா சாஸ்திரங்களினாலும் பரமசிவத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவோம் என்பதை உறுதியாகக் கொண்டார்.
 

சிவார்க்கமணி தீபிகை

அக்காலத்தில் நாயகவம்சத்தைச் சேர்ந்த சில சிற்றரசர்கள், வாக்வன்மையுடையவர்களாயும், சிவநிந்தை செய்வதில் மிக்க உற்சாக முடையவர்களாயுமிருந்த வைஷ்ணவ ஆகமங்களைப் பின்பற்றுபவர்களால் ஆச் ரயிக்கப்பட்டுச் சிவபக்தர்களைப் போற்றி மதிக்காது இருந்து வந்தார்கள். அத்தகைய சிற்றசர்களின் ஆதரவுடன், சைவத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்த வைஷ்ணவர்களின் வார்த்தைகளால் உலகமானது குழப்பமடைந்து சிவநிந்தையானது மிகவும் கடுமையாக இருந்தது. இதனால் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் மிகவும் மனவருத்தமடைந்தார்கள். உலகத்தின் க்ஷேமத்துக்காகவே அவதரித்தருளிய பெருந்தகையானபடியால் அதே கவலையுடன் “இத்தகைய கலியின் கொடுமையிலிருந்து இவ்வுலகம் எப்படி அனுக்கிரஹிக்கப்படப் போகிறது” என்ற சிந்தனையுடன் ஓரிரவு நித்திரைக்குச் சென்றார். அந்த இரவு நான்காம் யாமத்தில் தீக்ஷிதேந்திரரது கனவில் பரமேச்வரன் சின்னபொம்ம அரசனின் உருவத்தில் காட்சியளித்தார். அங்ஙனம் காட்சியளித்து, “குழந்தாய்! ஸ்ரீகண்டபாஷ்யத்துக்கு (இது வேதவியாஸரின் பிரம்மசூத்திரத்துக்கு ஸ்ரீகண்டாசாரியார் என்ற சைவ ஆசாரியர் அருளிச் செய்த சைவபரமான விரிவுசையாகும்) பல வேத நிரூபணங்களுடன் ஒரு வியாக்யானம் செய்வாயாக. அதன் மூலம் உனது விருப்பம் நிறைவேறும்” என அருளிச்செய்து மறைந்தருளினார். தீக்ஷிதேந்திரர் விழித்தெழுந்தார், என்னே! ஈசனின் கருணை என வியந்து தான் தன்யன் என்று கொண்டு சிவபெருமானே ஏவிய வண்ணம் ஸ்ரீகண்ட பாஷ்யத்திற்கு விரிவுரை இயற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மறுநாள் அரசவைக்கு வந்தார். தீக்ஷிதேந்திரர் சபைக்குள் நுழைந்ததும் ஸர்வாந்தர்யாமியான பரமேச்வரனின் தூண்டுதலால் சின்னபொம்மன் என்ற அந்த அரசன், தீக்ஷிதர் பெருமானைக் கைகூப்பி வணக்கஞ் செய்து வரவேற்று “பகவன்! ஸ்ரீகண்ட பாஷ்யத்திற்கு அதன் ஆழ்ந்த கருத்துக்களையெல்லாம் தெளிவாகப் புலப்படுத்தத் தக்கதான ஒரு விரிவுரையினைத் தாங்கள் இயற்றியருளி அறிஞருலகுக்குப் பரமோபகாரம் செய்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். இதனைச் செவிமடுத்தார் தீக்ஷிதேந்திரர். கனவிலே அருள் செய்த பரமேச்வரன் நனவிலும் அதே சின்னபொம்மன் மூலமாகத் தன்னை இப்பணியில் ஈடுபடுத்துவதைக் கண்டு பேரானந்தங் கொண்டார். விரைவிலேயே பல வேதப்பிரமாணங்களுடனும், மீமாம்ஸா நியாயங்களை அனுஸரித்தும் ஸ்ரீகண்டபாஷ்யத்தின் நியாயங்களை அனுஸரித்தும் ஸ்ரீகண்டபாஷ்யத்தின் அதி ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக்கும் வியாக்கியானத்தை “சிவார்க்கமணி தீபிகா” என்ற பெயரில் எழுதி முடித்தார். பண்டிதர்கள் நிரம்பிய அரசசபையில் அவர்கள் எழுப்பிய அத்தனை ஆக்ஷேபங்களுக்கும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பதிலளித்து அந்த நூலை தீக்ஷிதேந்திரர் அரங்கேற்றம் செய்து சூரியன் போல தேஜஸ்ஸுடன் பிரகாசித்தார். இந்த நிலையில் சின்னபொம்மராஜன் புளகாங்கிதம் அடைந்து சொல்லொணா மகிழ்ச்சியுடன் அத்தனை பண்டிதர்களின் முன்பாக தீக்ஷிதர் பெருமானைப் பொன் மேடையில் அமர்த்தி தங்கநாணயங்களால் ஸ்நானம் செய்வித்தான். இதுவே கனகாபிஷேகம் என்று சொல்லப்படும்.

“சிவார்க்கமணி தீபிகா” என்ற இந்த அரிய நூலின் ஆரம்பத்திலேயே ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்கள், சிறந்ததான இந்த ஸ்ரீகண்டபாஷ்யத்துக்கு விரிவுரை எழுதும்படி கனவு, நனவு, என்ற இருநிலைகளிலும் ஒரேவிதமாக சின்ன பொம்மராஜனின் உருவத்தைத் தரித்துத் தன்னை அருள் செய்வத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

சின்னபொம்மராஜன் தீக்ஷிதர் பெருமானுக்குச் செய்த கனகாபிஷேக வைபவத்தைக் கொண்டாடும் வகையில் அவரதுமருமானும், சிறந்த வித்வானுமான சமரபுங்கவ தீக்ஷிதர் என்பவர் எழுதிய சுலோகமொன்றில், சின்னபொம்மராஜன் இந்த கனகாபிஷேகம் செய்த சமயத்தில் அவரைச் சுற்றிலும் வந்து விழுந்த தங்க நாணயங்களைப் பார்க்கும் பொழுது, ஸகல வித்தைகளையும் விரும்பினவர்கட்கு அளிக்கும் சக்தியுள்ள அப்பய்ய தீக்ஷிதமணியாகிற கற்பக விருக்ஷத்துக்குச் சுற்றிலும் தங்கத்தால் பாத்தி கட்டியது போன்றிருந்தது எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அந்த கனகாபிஷேகத்தின் பெருமையை அறியலாம்.

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அரசன் தனக்குச் செய்த கனகாபிஷேகத் திரவியத்தைக் கொண்டு தமது சொந்த ஊராகிய அடையப்பலத்தில் காலகண்டேசுவரர் ஆலயத்தை நிர்மாணித்து, அதில் விநாயகர், சுப்பிரமணியர், உமாதேவியார் முதலிய பரிவாரங்களோடு கூடிய சிவபெருமானை எழுந்தருளச் செய்து முறைப்படி ஆராதித்து வந்தார்.

சிவார்க்கமணி தீபிகை என்ற தீக்ஷிதேந்திரரின் அதியற்புதமான கிரந்தத்தை நாடெங்கிலும் பிரசாரம் செய்ய சின்னபொம்ம அரசன் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தான். தீக்ஷிதேந்திரர் ஐநூறு வித்துவான்களுக்குத் தாமே இந்த ஊரில் அரிய நூலைப் போதித்து அவர்கள் மூலம் நாடெங்கிலும் சைவ விசிஷ்டாத்வைதத்தை பரப்பினார். அறிஞருலகம் இந்த அரிய நூலைப்போற்றிப் புகழ்ந்தது. அப்போது சைவத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வைஷ்ணவத்திற்கு இரு ஒரு பலமான எதிர்பிரசாரமாக ஏற்பட்டது. சைவமும், ஸ்மார்த்தமும் இதனாலேயே காப்பாற்றப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. தாதாசாரியாரும் அவரைப் பின்பற்றுபார்களும் இதனால் மிகவும் கோபம் அடைந்தார்கள் என்று கூறவும் வேண்டுமோ?
 

அடையப்பலம் கல்வெட்டு எண் 395

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் நிர்மாணம் செய்த அடையப்பலம் காலகண்டேசுவரர் ஆலயத்தின் கல்வெட்டுகளில் கிரந்தாக்ஷரங்களும், தமிழ் எழுத்துக்களும் கலந்து பொறிக்கப்பட்டுள்ளவற்றின் கருத்தைக் கீழே காணலாம்.

மஹாவித்துவானும், வாஜபேயம், ஸர்வதோமுகம் முதலிய உத்தம ஹோமங்களைச் செய்தவரும், ஸ்ரீ ரங்கராஜாத்வரியின் உத்தம புத்திரனுமான அப்பய்ய தீக்ஷிதர் பிரகாசிக்கின்றார். மேலும் சின்னபொம்ம நாயக்கரின் காலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து மகிழ்வித்து மிக்கசிறப்பு வாய்ந்த ஸ்ரீகண்ட பாஷ்யம் முதலான நூல்களை இயற்றிய ஸ்ரீ ரங்கராஜாத்வரியின் உத்தமபுத்திரரான அப்பய்யர் என்ற விநாயகசுப்பிரமணிய தீக்ஷிதர் தமது வாசஸ்தலமாகிய அடையப்பலத்தில் ஸ்ரீகாலகண்டேசுவரரை கைலாஸத்தில் பரமசிவன் விளங்குவதுபோலப் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1504க்கு மேல் செல்லா நின்ற சித்ரபாநு வருஷம் ஸ்வாமி காலமண்டேச்வர ருட கோவிலிலே ஸ்ரீகண்ட பாஷ்யம் ஐஞ்ஞூறு வித்வாம்ஸ ருக்கு படிப்பிக்க அதுக்கு சிவார்க்கமணிதீபிகைவ்யாக்யானமும் பண்ணி வேலூர் சின்னபொம்ம நாயக்கர் கய்யிலே கனகாபிஷேகமும் பண்ணி விச்சுக் கொண்டு அதுக்குப்பின் வேலூரிலே சிவார்க்கமணிதீபிகையும் ஐஞ்ஞூறு வித்வாம்ஸருக்கு படிப்பிக்க சின்னபொம்ம நாயக்கர் கய்யிலே ஸ்வர்ணங்களும் அக்ரஹாரங்களும் படைப்பிச்சு ப்ருதிவீராஜ்யம் பண்ணிவிச்சு ந்யாயரக்ஷாமணி கல்பதருபரிமள முதலான னூறுப்ரபந்தம் பண்ணின அப்பய்ய தீக்ஷித ருட க்ருதி இந்த சிவாலயம் சுபமஸ்து.

 

      அப்பதீக்ஷிதர் ஸதா சேவை

      அருணகிரி தீக்ஷிதர் ஸதா சேவை

      விச்வஜிதப்பை தீக்ஷிதர் ஸதா சேவை

      உமாமஹேச்வர தீக்ஷிதர் ஸதா சேவை

      யக்ஞேச்வர தீக்ஷிதர் ஸதா சேவை

      மருதாலம் லக்ஷன் ஸதா சேவை

(கல்வெட்டில் கிரந்தாக்ஷரங்களில் உள்ள பகுதிகள் இங்கு தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளன).

இந்த சிலாசாஸனத்தில் முதலில் கையெழுத்திட்டுள்ளவர் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்களேயாவர். அதையடுத்துக் கையெழுத்திட்டுள்ளவர்கள் அவரது குமாரர்களாக இருக்கக் கூடும், கடைசியில் கையொப்பமிட்டுள்ள மருதாலம் லக்ஷண் என்பவர் இந்த கல்வெட்டைப் பொறித்தவராக இருக்கக் கூடும்.

மேலும், சிவாத்வைதப் பொருளைப் பிரகாசப்படுத்தியவரும், கருணைக்கடலுமான ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் அனேக கிரந்தங்களைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கொண்டு தமது ஜன்மஸ்தலமாகிய அடையப்பலத்தில் வசித்து வந்தார் என்ற கருத்துடைய சுலோகத்தையும் அடையப்பலம் ஸ்ரீ காலகண்டேசுவரர் ஆலயத்தில் காணலாம்.

இங்ஙனம் சிவார்க்கமணி தீபிகை என்ற ஸ்ரீகண்ட பாஷ்ய விரிவுரையின் மூலம் சிவபரத்துவத்தை நிலைநாட்டியதால் தீக்ஷிதேந்திரது பெருமை நாடெங்கிலும் பரவியது அது மட்டுமா, தீக்ஷிதருடைய சைவ ஸ்தாபனத்துக்கு உதவிகள் அனைத்தும் செய்த சின்ன பொம்மராஜனின் புகழும் ஒங்கியது.

பலதேசத்து அரசர்கள் ஸ்ரீமத் தீக்ஷிதருடைய பாதாரவிந்தங்களைச் சேவித்து தங்களைப் புனிதர்களாக்கிக் கொள்ள ஒரு சமயத்தினை எதிர் நோக்கியிருக்கும் போது தினந்தோறும் அந்த பிரபுவான தீக்ஷிதரின் வாய் முகமாகவே சிவபெருமானின் முழு முதல் தன்மைகளடங்கிய சூக்திகளைக் கேட்கும் பாக்கியம் பெற்ற சின்ன பொம்மனின் பெருமையை நாம் கணக்கிட்டுக் கூற இயலுமோ? என்ற கருத்தமைந்த தீக்ஷிதரது ஸமகாலத்து வித்துவான் ஒருவரது கூற்றிலிருந்து சின்னபொம்மனின் பெருமையை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.
 

தீக்ஷிதேந்திரரின் முக்கிய கருத்து

வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், மற்றும் மஹாபாரதாதி கிரந்தங்களில் எல்லாம் அத்வைதம் தான் இருக்கிறது என்று பிரம்மஸூத்ர வியாக்யானம் செய்யும் பொழுது ஆசார்ய ரத்தினமான ஸ்ரீசங்கர பகவத் பாதர்கள் உபதேசித்திருந்த போதிலும், சிவபெருமானுடைய அனுக்கிரஹத்தினால் தான் அத்வைத வாஸனையானது மக்களுக்கு உண்டாகும் என்று ஆதிசங்கரர் கூறியதையே அதிகமாக உலகுக்கு எடுத்துக் காட்டினார். பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய பரமசிவனருளில்லாமல் அத்வைதத் தன்மை மக்களுக்குச் சிறிதேனும் ஏற்படாது என்பது உறுதி. அத்தகைய திருவருள் சச்சிதானந்த ஸ்வரூபியான சக்தியுடன் கூடிய சிவபெருமானை அநவரதமும் ஹ்ருதய கமலத்தில் தியானிப்பவர்களுக்குத் தானே வந்து விடும்.இத்தகைய கருத்துக்களையெல்லாம் சிவபெருமானின் மஹிமையை எடுத்துக் காட்டும் சிவார்க்கமணி தீபிகையின் மூலம் உலகிற்கு உபதேசித்தருளினார்.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் பரம சாம்பவராக இருந்தும், விஷ்ணுவின் பேரிலோ, வைஷ்ணவ மதத்திலோ எவ்விதமான த்வேஷமும் கொண்டவரல்ல என்பது அவருடைய வரதராஜஸ்தவம் என்னும் நூலைப் படித்தாலே நன்கு தெரியும். வேதாகம நூல்களில் கூறப்படும் உத்தம பரம் பொருளாய் விளங்குவது சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அதில் நமக்கு வாதமில்லை. ஆனால் பரமசிவனை ஏசிப்பேசும் சில துர்மதியாளர்களின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே நான் பிரயாசைப் படுகின்றேனே தவிர விஷ்ணுவிடம் ஒரு போதும் த்வேஷம் இல்லை என்ற கருத்து உடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள தீக்ஷிதருடைய ச்லோகம் அவரது நிர்மலமான ஹ்ருதயத்திற்குச் சான்று பகருகிறது.

 

 

விஷ்ணுர்வா சங்கரோ வா ச்ருதிசிகரகிராமஸ்து தாத்பர்ய பூமி:

நாஸ்மாகம் தத்ர வாத: ப்ரஸரதி கிமபி ஸ்பஷ்டமத்வைத பாஜாம் |

கிம் த்வீசத்வேஷகாடநல கலிதஹ்ருதாம் துர்மதீநாம் துருக்தீ:

பங்க்தும் யத்னோ மமாயம் ஹிபவது விஷ்ணு வித்வேஷ சங்கா ||

நரசிம்மாச்ரம ஸ்வாமிகள்

நர்மதா தீரத்தில் நரசிம்மாச்ரம் ஸ்வாமிகள் என்ற ஒரு பெரியவர் வஸித்து வந்தார். அவர் பேத திக்கார அத்வைத தீபிகா, தத்வ விவேகம் முதலான க்ரந்தங்களைச் செய்தவர். இவர் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் ஸகுணப்ரம்மோ பாஸனத்திற்காக எழுதிய சிவார்க்கமணி தீபிகை என்ற கிரந்தத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தீக்ஷிதேந்திரரைக் காண நர்மதா தீரத்தைவிட்டு சிதம்பரம் நோக்கி வரும் வழியில் ஒரு கிராமத்தில் தங்கினார். அந்த கிராமத்தில் பிக்ஷை முதலியன அளித்து அவரை யாரும் பூஜிக்காமல் இருப்பதைக் கண்டு அந்த கிராமத்தை பஸ்மமாகச் செய்து விட்டுச் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அதே சமயம் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் சிதம்பரம் நடராஜ தரிசனத்திற்காக வந்திருந்தார். நரஸிம்மாச்ரம ஸ்வாமிகளின் வருகையை அறிந்து ஸ்ரீ தீக்ஷிதர் அவரை எதிர்கொண்டழைத்து அவருக்கு விசேஷமான பூஜைகளைச் செய்து அவர் முன் கை கூப்பி நின்றார். பிறகு நரசிம்மாச்ரம ஸ்வாமிகளுக்கும், ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களுக்கும் சாஸ்திர சம்பந்தமான தத்வ விசாரம் நடந்தது. தீக்ஷிதேந்திரரின் அபாரமான வித்வத்தைக் கண்டு ஸ்வாமிகள் மிக்க வியப்படைந்தார்.

பின்னர் தீக்ஷிதேந்திரர் நரசிம்மாச்ரம ஸ்வாமிகளின் விருப்பப்படி கல்பதரு என்ற அத்வைத பாஷ்யத்திற்குப் பரிமளம் என்ற ஒரு வ்யாக்யானத்தைச் செய்தருளினார்கள். மேலும் நியாயரக்ஷாமணி போன்ற அத்வைத வேதாந்த நூல்களையும் செய்தார்கள். இந்தச் செய்திகளையும் மேலே கொடுத்துள்ள அடையப்பலம் ஆலயக் கல்வெட்டில் காணலாம்.
 

தீக்ஷிதேந்திரரின் தீர்த்தயாத்திரை

தீக்ஷிதேந்திரர் ஒரு சமயம் தீர்த்தயாத்திரை செய்ய மனங்கொண்டவராய் க்ஷீரதரங்கிணி எனப் பெயர் பெற்ற பாலாறு என்ற நதியின் கரையிலுள்ள வேலூர் நகரத்தினின்றும் தனது தீர்த்தயாத்திரையை ஆரம்பித்தார். க்ஷீர நதியில் ஸ்நானம் செய்து நந்திசைலம் முதலான மலைகளையடைந்தும் பின்னர் பிநாகினி எனப் பெயர்பெற்ற தென்பெண்ணையாற்றில் ஸ்நானம் செய்து ஆங்காங்கு புண்ய தலங்களையும் தரிசித்துக் கொண்டுபுண்டரீகபுரம், தில்லை என்பன போன்ற பெயர்களால் வழங்கப்படும் சிதம்பரம் என்ற திவ்ய க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். சிவபெருமான் ஆனந்ததாண்டவம் செய்யும் அற்புதத் தலம் அன்றோ இது?

சிவகங்கை என்ற புண்ணிய தீர்த்தத்தில் ஸங்கல்பம் செய்து விதிப்படி ஸ்நானம் செய்தார். பஞ்சாக்ஷராதி ஜபங்களையெல்லாம் செய்து முடித்துக்கொண்டு நடராஜப் பெருமானின் தரிசனத்துக்கு வந்தார். அங்கே சித்ஸபையில் இடது காலைத் தூக்கியும், வலது காலைக் கீழே நிறுத்தியும், இடது கையினால் இடது காலில் தாளம் போட்டுக் கொண்டும், டமருகாதி வாத்யங்கள் கோஷிக்க அதற்கு அநுகூலமாய் தூக்கிய திருவடியுடன் நர்த்தனம் புரியும் நடராஜ மூர்த்தியைக் கண்டு உள்ளமுருகி ஸ்தோத்திரங்கள் செய்தார்.

சிதம்பரதரிசனம் செய்து முடித்துக்கொண்டு சோழ தேசத்தில் காவேரீ தீரத்திலுள்ள ஸ்தலங்களையெல்லாம் தரிசிக்க எண்ணங் கொண்டார். காவேரி நதியினால் வளம் செய்யப்படுவதும் எண்ணற்ற சிவாலயங்களால் நிறைந்திருப்பதும் புண்யசாலிகளான சிவபக்தர்களால் பிரகாசிப்பதுமான அந்த சோழநாட்டில் காசிக்குச் சமமாகக் கருதப்படுகின்ற திருச்சாய்க்காடு, திருவிடைமருதூர், பஞ்சநதம் என்கிற திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், சுவேதாரண்யம் என்கிற திருவெண்காடு முதலிய க்ஷேத்திரங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தரிசித்துக்கொண்டு, மற்றும் திருமறைக்காடு என்கிற வேதாரண்ய க்ஷேத்திரத்தையும் தரிசித்துக்கொண்டு இராமேசுவரம் அடைந்தார். அங்கு விதிப்படிஸமுத்ரஸ்நானம் செய்துகொண்டு பர்வதவர்த்தனி சமேத ஸ்ரீராமநாதேச்வரப் பெருமானைத் தரிசித்துப் பேரானந்தம் கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வழியில் பல திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டே பாண்டியதேசம் சென்றடைந்தார். அங்கு மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேசுவரைத் தரிசித்து இவ்வுலகை மறந்து பலவிதமான ஸ்தோத்ரங்கள் செய்து மகிழ்ந்தார். அங்கு திருமலை நாயக்கர் ராஜபரி பாலனம் செய்யும் பொழுது வைஷ்ணவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட அந்த மன்னனின் மனத்தை சிவபக்தியில் ஈடுபடச் செய்தார். அங்கு ஒரு புண்ணிய தீர்த்தத்தில் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு விக்ரஹத்தை வைஷ்ணவர்கள் விஷ்வக்ஸேனர் என்றும் சைவர்கள் விக்நேச்வரர் என்றும் அந்த விக்ரஹத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இந்த விவாதத்தைத் தீர்த்துவைக்க அரசனால் வேண்டப்பட்ட ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் பலவிதமான பிரமாணங்களுடன் அந்த விக்ரஹத்தை மஹாகணபதி என்றே உறுதிசெய்து கால்மாறியாடிய வெள்ளியம்பலவாணரையும் பூஜித்து மோதகப்பிரியரான அந்த மஹாகணபதியைத் தெற்கு முகமாகப் பிரதிஷ்டை செய்தார்.

பிறகு முறையாகப் பல புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்துகொண்டும், பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டும், சுகந்தகுந்தலாம்பா சமேத ஸ்ரீமாத்ருபூதேச்வர ஸ்வாமி எழுந்தருளியுள்ள உத்துங்காசலம் என்ற திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தார். அங்கு இறைவனையும், இறைவியையும் ஸேவித்து, உச்சிப்பிள்ளையாரையும் வணங்கி திருவானைக்கா வந்து சேர்ந்தார். அங்கு காவேரி நதியின் கரையில் எழுந்தருளியுள்ள அப்புலிங்கமான, சிலந்தியும் யானையும் பூசித்த, ஜம்புநாதேச்வரரை அகிலாண்டேச்வரியுடன் வணங்கி ஆனந்த பரவசரானார்.

அங்கிருந்து மிக அருகிலுள்ள ஸ்ரீரங்கம் சென்று அங்கு சந்திரபுஷ்கரணியில் ஸ்நானம் செய்தார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் தீக்ஷிதரின் வருகையை விரும்பாததால் வெளியிலே நின்றுகொண்டே நமது தீக்ஷிதேந்திரர் ஸ்ரீரங்கநாதரை சிவபெருமானாகத் தியானித்தார். உடனே கோயில் உள்ளிருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் சிவபெருமானாகமாறச் சில குறிகளைக் காண்பித்ததால் கோயில் பூசாரிகள் தமது செய்கைக்கு வருந்தி தீக்ஷிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள். அங்கு சங்கு சக்கரமேந்தி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரைக் கண்குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார்.

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் தீர்த்த யாத்திரை இத்துடன் முடிந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆயினும் ஒரு வரலாற்று நூலில் அவர் திருப்பதிக்குச் சென்றதாகவும், அங்கு சைவஸ்தாபனாசாரியாரான அவரை உள்ளேவிட வைணவப் பூஜாரிகள் மறுத்ததாகவும், மறுநாள் காலையில் திருவேங்கடமுடையான் சிவபெருமானின் வடிவத்தில் தோன்றியதாகவும், கோவில் அதிகாரிகள் தமது நடத்தைக்கு வருந்தி ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் சென்னையை அடுத்த திருவான்மியூர் வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது வேதச்ரேணி என்று சொல்லப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம் இருந்ததாகவும், அங்கிருந்த கோவிலில் ஸ்ரீமத் தீக்ஷிதர் ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்பய்ய தீக்ஷிதருடையது என்ற சொல்லப்படுகிற ஒரு விக்ரஹமும் அங்கு காணப்படுகிறது. மற்றும் அந்தக் கோவிலில் உள்ள சண்டேசவ்ர சந்நிதியில் உள்ள இரண்டு சிலைகளில் ஒன்று ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரருடையது என்றும் கருதப்படுகிறது. அந்த வேதச்ரேணி என்ற இடம் தான் தற்பொழுது சென்னையை அடுத்த வேளச்சேரி என்று வழங்கப்படுகிறது.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர், காசி க்ஷேத்திரத்தில் வசித்துவந்த சில பண்டிதோத்தமர்களின் அழைப்புக்கு இணங்க, காசி க்ஷேத்திரம் சென்று அங்கும் தனது வித்தையின் திறமையைக் காண்பித்து மிகவும் பாராட்டப்பட்டார். ஆயினும், அவர் காசிக்ஷேத்ரம் செல்லவில்லை என்றும் சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

தேவரஹசியத்தின் விளக்கம்

ஒரு சமயம் தீக்ஷிதேந்திரர் தஞ்சை ஸ்ரீ ப்ருஹதீச்வரர் ஆலயத்தின் பிரம்மோத்சவ சமயத்தில் தஞ்சாவூர் மஹாராஜா நரசிம்ம வர்மா என்பவரால் அழைக்கப்பட்டுத் தஞ்சை சென்றார். அப்பொழுது தாதாசாரியார் உள்பட பல வித்துவான்கள் அங்கு வந்திருந்தனர். உத்சவம் முடிந்தவுடன் எல்லாப் புலவர்களுக்கும் தக்க சன்மானங்களை அளித்துத் தங்கள் இருப்பிடம் செல்லுமாறு அனுப்பிவைத்தான். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களையும், தாதாசாரியார் அவர்களையும் சில நாட்கள் தன்னிடம் இருக்கும்படி வேண்டிக் கொண்டான். இந்த இரண்டு வித்துவான்களுடன் அரசன் பல க்ஷேத்திரங்களைத் தரிசித்து வரும்போது ஓரிடத்தில் ஒரு கோவிலில் தரிசிக்கும் போது, ஹரிஹரபுத்திரரான சாஸ்தா அங்கு முகவாய்க்கட்டையின் மீது தனது வலதுகை ஆள் காட்டிவிரலை வைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டான். இந்தக் கோலத்தில் அந்த சாஸ்தா ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் காண்பித்தது. இதனைக்கண்டு பக்திபரவச மடைந்த அரசன் அங்குள்ள கிராமத்து மக்களைப் பார்த்து இவ்வாறு இந்த விக்ரஹம் முகவாய்க்கட்டையில் கையை வைத்துக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என்று கேட்டான். அந்த கிராமவாஸிகளில் வயது முதிர்ந்த ஒருவர், “அரசே! பரம்பரையாக எங்கள் மூதாதையர் கூறுகின்ற ஒரு விஷயத்தைக் கூறுகின்றேன். அஃது என்னவென்றால் யாரோ ஒரு மஹாபுருஷன் இங்கு வருவார். அவர் இந்த சாஸ்தாவானவர் இம்மாதிரி இருப்பதின் கருத்தை விளக்குவார். அக்கருத்தைக் கேட்டு மகிழ்ந்து சாஸ்தாவானவர் முகவாய்க்கட்டையினின்றும் தனது விரலை எடுப்பார். இந்த சாஸ்தா எங்கள் குலதெய்வம். எந்த மஹாபுருஷன் வரப்போகின்றாரோ? என்று காத்துக் கொண்டிருக்கின்றோம்” என்று பதிலளித்தார். இதனைக்கேட்ட அரசன் உடனே அருகில் இருந்த தாதாசாரியாரை நோக்கி இந்த பகவானின் அபிப்பிராயத்தை நீங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். உடனே தாதாசாரியார்

 

விஷ்ணோ: ஸுதோ ( )ஹம் விதிநா ஸமோ ( )ஹம் 

           தன்யஸ்ததோஹம் ஸுரஸேவிதோ ( )ஹம் |

ததாபி பூதேசஸுதோ ( )ஹமேதை

                          பூதைர்வ்ருதச்சிந்தயதீஹ சாஸ்தா ||

(இதன் பொருள்): நான் விஷ்ணுவுக்கு மோஹினி ரூபமாய் இருந்த பொழுது பிறந்தவன்; விஷ்ணுவின் புதல்வன். பிரம்மாவுக்குச் சமமானவன். எனவே நான் மிகச் சிறந்தவன். தேவர்கள் என்னைப் போற்றி வாழ்த்துகின்றார்கள். ஆனாலும் சுடுகாட்டில் வாழும் பூத கணங்கள் சூழ்ந்த பரமசிவனின் பிள்ளை என்றும் பூத கணங்களால் சூழப்பட்டவன் என்றும் சொல்லுகிறார்கள் என்ற இந்த வருத்ததுடன் சாஸ்தா இருக்கிறார். இவ்வாறு தாதாசாரியார் விளக்கம் கூறினார். இது சாஸ்தாவின் அபிப்ராயம் அல்லவாதலாலும், சிவபெருமானை இகழ்ச்சியாய் எண்ணிய தவறுதலாலும், சாஸ்தாவின் கைவிரல் மாறவில்லை. இங்ஙனம் தாதாசாரியாரின் விளக்கம் பயனற்றுப் போனதால், அரசன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களை நோக்கி, தாங்கள் தயவு செய்து இந்த ஹரிஹரபுத்திரரின் உண்மையான் அப்பிராயத்தை விளக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்கள் கூறியதாவது:

 

அம்பேதி கெளரீம் அஹமாஹ்வயாமி பத்ந்ய: பிதுர்மாதர 

                                      ஏவ ஸர்வா: |

கதந்து லக்ஷ்மீமிதி சிந்தயந்தம்சாஸ்தாரமீடே ஸகலார்த்த ஸித்யை ||

“நான் மோஹினி அவதாரம் செய்த விஷ்ணுவுக்கு பரமசிவனுடைய குமாரனாவேன். ஆகையால் கைலாஸம் சென்று தந்தையை தரிசிக்கும் பொழுது பார்வதி தேவியைக் கண்டு அம்மா என்று அழைப்பேன். தந்தையாரின் மனைவிகள் அனைவரும் குழந்தைக்குத் தாய் முறை அல்லவா? ஆனால் நான் வைகுண்டம் சென்றால் அங்கு என் தாயான மஹாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியை (தாயாரின் மனைவியை) என்ன முறை சொல்லி அழைப்பது? என்று புரியவில்லை. ஆகையால் தன் யோசனையைக் குறிக்கும் பாவனையில் முகவாய்க் கட்டையில் விரல் வைத்து நிற்கும் சாஸ்தாவை எனது ஸகல எண்ணங்களும் ஸித்திக்கும்படியாக வணங்குகின்றேன்” என்பது மேல் கண்ட சுலோகத்தினால் பெறும் பொருளாகும் இம்மாதிரி தீக்ஷிதேந்திரர் கூறியதும், சாஸ்தா தனது வலக்கரத்தின் விரலை முகவாய்க்கட்டையினின்றூம் விலக்கினார். ஏனென்றால் தீக்ஷிதர் அவர்களின் வினயமும், தெய்வ நம்பிக்கையும் ஸ்ரீ சாஸ்தாவினிடம் உள்ள பக்தியும் பிம்பத்தின் உண்மையான கருத்தை செய்தது. தாதாசாரியார் சிவபெருமானை இகழ்ச்சியாகக் கூறியது போல, தீக்ஷிதேந்திரர் இங்கு விஷ்ணுவை இகழ்ச்சியாகக் கூறாமல் ஸ்ரீசாஸ்தாவின் கருத்தை கூறியதோடு, அந்த சாஸ்தாவை வணங்குகின்றேன் என்று கூறியது அவர்களது பக்தியையும் காண்பிக்கின்றது. சாஸ்தாவிக்ரஹம் கைவிரல் எடுத்த ஆச்சரியத்தையும், ஸ்ரீமத் தீக்ஷிதர் அவரகளது ஸத்தியவாக்கினையும் அரசனும், மற்றையோரும் கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அரசன் தீக்ஷிதேந்திரருக்கு அளவற்ற ஸன்மானங்களைச் செய்தான். தாதாசாரியாரையும் தக்க மரியாதையுடன் வேலூருக்கு அனுப்பி விட்டான். தீக்ஷிதேந்திரரும் சில தினங்கள் தஞ்சையில் இருந்து விட்டு, பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு வேலூர் நகரம் வந்து சேர்ந்தார். அந்த மஹானை சின்னபொம்ம அரசன் முறைப்படி வரவேற்று உபசரித்தான்.
 

உண்மை உருவத்துடன் சிஷ்யோபதேசம் செய்தல்.

காலைக்கதிரவன்போல் பிரகாசத்துடன் விளங்கிய ஸ்ரீமத் தீக்ஷிதர் அவர்கள் பிரதிதினமும் பதஞ்சலி முனிவரின் கொள்கைப்படி சித்த விருத்தியை அடக்கி, மனதை ஒரு நிலைக்குக்கொண்டுவருதலாகிய யோகமார்க்கத்தில் ஈடுபட்டுத் தியானம் செய்ய மக்கள் சஞ்சாரமற்றதான ஒரு தனி இடத்தில் யோகமண்டபம் ஒன்று அமைத்துக்கொண்டு உலக விஷயங்களை அறவே மறந்து சிவபெருமானைத் தியானம் செய்துகொண்டு காலங்கழித்துக்கொண்டு வந்தார். இவ்வாறு யோகநிலையில் இருந்துவரும் தீக்ஷிதர் அவர்களின் ஸ்வரூபத்தைத் தரிசிக்க ஆவலுற்றவர்களாய் மனைவி, மக்கள், சிஷ்யர்கள் யாவரும் ஒரு சமயம் வேண்ட இவர்களுடைய பிரார்த்தனைக்கு இணங்காமல் மெளனம் சாதித்தார். அவர்கள் பின்னரும் மிகவும் பிரார்த்திக்க, அவர்களுக்குத் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிக்கின்றார். அவரது கால்களையும் கைகளையும் சுற்றிக் கொண்டு ஏராளமான ஸ்ர்ப்பங்கள். இந்த ஒப்பற்ற தேஜஸ்ஸைக் கண்டு சிலர் பிரமித்து அசைவற்று நின்றனர். சிலர் அஞ்சினர். இந்த ஒளிப்பிழம்பைக் காணச் சக்தியில்லோம், தேவரீரது ஸஹஜமான உருவமுடன் தரிசனமளிக்க வேண்டும் என வேண்டினர். யோகநிஷ்டரான ஸ்ரீமான் தீக்ஷிதர்,அவர்களுக்கு அபயமளித்து தனது யோக சரீரத்தைச் சுருக்கிக்கொண்டு முகமலர்ச்சியுடன்,அங்கிருந்த ஜனங்களுக்கும் சீடர்களுக்கும் அருமையான உபதேசங்களைச் செய்தருளினார்.

இந்த செய்தி நகரத்தில் பரவியபோது மக்கள் அனைவரும் வியந்தார்கள். ஆயினும் தாதாசாரியர், தீக்ஷிதர் ஒரு மந்திரவாதி என்றும் இம்மாதிரி அவர் காட்டுவது ஒரு மந்திர வேலை என்றும் கூறி அரசரது மனத்தைக் கலைக்க முற்பட்டார். அரசன் தாதாசாரியாரின் இந்த துர்போதனையைத் தள்ளிவிட்டு தீக்ஷிதரின் சமாதி நிலையைத் தானும் தரிசித்துப் பேறடைந்தான்.
 

பிராரப்த அனுபவம்

இவ்வாறு தீக்ஷிதரின் மஹிமை மேலும் மேலும் பெருகுவதால் பொறாமை அடைந்த தாதாசாரியார் எவ்விதத்திலாவது தீக்ஷிதரிடம் அரசனுக்குள்ள நன்மதிப்பையும், சிநேகத்தையும் அகற்றிவிட வேண்டுமென்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களை வியாதி ஒன்று துன்புறுத்தியது. அந்த ரோகம் குல்மம் என்று கூறப்படுகிறது. பிராரப்த கர்மத்தை அனுபவித்தே தீரவேண்டும் ஆதலால் தீக்ஷிதேந்திரர் அந்த ரோகத்தைத் தமது தபோபலத்தால் இஷ்டபப்டி அனுபவித்தும் வேண்டாத சமயத்தில் அதனை அகற்றியும் அரச சபைக்குப் போய்க்கொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்த தாதாசாரியார் அரசே, “மஹா ரோகங்களுக்கு இலக்கானவர்கள் அரசர்களைத் தரிசிக்கவே கூடாது என்று நீதிசாஸ்திரம் கூறுகிறது. தீக்ஷிதர் அதை மறைத்துக்கொண்டு தங்களை தரிசிக்கிறார். இந்த விஷயத்தை நான் தங்களுக்கு எடுத்துக்கூறிவிட்டேன். பிறகு தங்கள் விருப்பம் போல் செய்யலாம்” என்று ரகசியமாகக் கூறினார். இந்த ஸந்தேஹத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு அரசன் முன்னறிவிப்பு இல்லாமல் தீக்ஷிதருடைய இல்லத்திற்கு தாதாசாரியாரையும் அழைத்துக்கொண்டு சென்றான். அப்பொழுது தீக்ஷிதர் தமக்குப் பிராரப்த வசத்தால் ஏற்பட்டதும் தாம் பதினோரு மாதங்கள் அனுபவித்தித் தீரவேண்டியதுமான அந்த ரோகத்தைச் சிஷ்யர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை அது தம்மைத் தொந்தரவு செய்யாமலிருக்கும்பொருட்டு தான் அமர்ந்திருந்த மாந்தோலில் அதை விட்டிருந்தார். அந்த சமயம் தனது இல்லத்திற்கு வந்த அரசனை வரவேற்று ஸஹஜமான முறையில் அவனுடன் பேசி மகிழ்ந்தார். துடித்துக் கொண்டிருக்கும் மாந்தோலைப் பார்த்துக் கொண்டிருந்த அரசன் தீக்ஷிதரிடம் அதன் காரணத்தை வினவி, பரமாத்மாக்களின் ஸந்நிதியில் ஜடவஸ்துக்களும் சேஷ்டை செய்வது ஆச்சரியமாக இருக்கின்றது என்று கூறினான்.

“அரசே! உம் மனதில் இருக்கும் ஸந்தேஹம் தெளிய இப்போதே சொல்லுகின்றேன். சரீரம் படைத்தவர்களுக்கெல்லாம் பிராரப்தத்தால் வருகின்ற அங்கப் பிரதிபந்தகங்கள் தடுக்க முடியாதவைகள். ஆகையால் பிராரப்த வசத்தால் நான் அனுபவிக்க வேண்டிய இந்த ஜூர்த்தி ரோஹம் என்னை வாட்டுகிறது. ஆனால் அதனால் எனக்குச் சிரமம் இல்லை. அவசியம் நேரும்போது அதனை இம்மாதிரி என்னுடைய ஆசனத்தில் மாற்றிவிட்டு, வேலை முடிந்ததும், அதனை என் மீது மாற்றிக் கொள்வேன். ஆகவே அது எனக்குள் அடங்கியே இருக்கின்றது” இவ்வாறு தீக்ஷிதர் அரசனுடைய ஐயத்தை தெளிவித்தார். அதன் கருத்தை அறிந்து அரசன் பிராமணச்ரேஷ்டரான தீக்ஷிதேந்திரர்களைப் பலதடவை வணங்கி வைத்தியம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். தீக்ஷிதேந்திரர் அது கூடாது என்றும், பிராரப்தத்தை அவசியம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்றும் கூறி தடுத்தார். தீக்ஷிதேந்திரரின் அபாரமானதவ வலிமையைக் கண்ட மன்னனுக்கு அவர் மீதிருந்த கெளரவம் பல மடங்கு அதிகரித்தது. தீக்ஷிதரிடம் விடை பெற்றுக் கொண்டு, தாதாசாரியாருடனும், மற்ற மந்திரிகளுடனும் அரண்மனையை அடைந்தான்.
 

தாதாசாரியார் மேலும் தீக்ஷிதரைப்பற்றிக் கோள் சொல்லுதல்

ஸ்ரீமத் அப்பய்ய மகீந்திரர் சின்னபொம்ம அரசனால் மேலும் மேலும் நன்கு மதிக்கப்பட்டு வேலூரில் வசித்து வரும் பொழுது ஒரு சமயம் தஞ்சாவூர் அரசனான நரசிம்ம பூபாலன் வேண்டுகோளுக்கு இணங்கி தஞ்சாவூர் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தாதாசாரியார் அரசனுக்குத் தீக்ஷிதரிடமுள்ள நன்மதிப்பைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசனிடம் தீக்ஷிதரைப் பற்றிக் குறைவாகப் பேசி கோள் சொல்ல ஆரம்பித்தார். “அரசே! எனக்கு நீர் வஸ்திரமோ, யானை, குதிரை, தங்கம் போன்றவைகள் கொடுக்க வேண்டாம். எனக்கு பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையுமில்லை. இவைகளுக்காக நாம் உம்மிடம் இருக்கவில்லை. என்னுடைய நண்பரும் க்ஷேமத்தையடைய வேண்டியவருமான உம்மைப் பிரிய மனமில்லாது உம்முடன் இருந்து உமது நன்மையையே ஸதா காலமும் விரும்பி வருகிறேன். எனவே நான் தற்போது கூறும் வார்த்தைகளைக் கவனமாகக் கேளும். உலகத்தில் ஒருவன் புத்திமானாகவும் சாமர்த்தியவானாகவும் இருக்கட்டும். அதனால் நீர் உமது பரம்பரை ஆசாரத்தையும் குருவையும் விட்டு விடலாமா? ஆதலால் நீர் அப்பய்ய தீக்ஷிதரிடம் வைத்துள்ள பற்று உமக்கு நன்மையை விளைவிக்காது என்றே நான் கருதுகின்றேன். நீர் தீக்ஷிதருக்குப் பொன்னோ, மணியோ, வீடு வாசலோ கொடுப்பதில் (அவரது சைவ பிரசாரத்தை மன்னன் ஆதரிப்பது தான் தனக்குப் பிடிக்கவில்லை என்று தாதாசாரி கூறுவதாகக் கருத்து). அது ஒரு புறம் இருக்க, தஞ்சை மன்னன் ஸ்ரீ தீக்ஷிதருக்கு ஏராளமான செல்வத்தை அளித்திருந்தும் அவர் ஏன் இங்கு ஒன்றுமில்லாதவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்ள வேண்டும். அவரது இந்த ஏழ்மை அவரது பூர்வ பாவத்தினால் விளைந்ததோ அல்லது பேராசையினால் தம்மை ஏழை போலக் காட்டிக் கொள்கிறாரோ நாம் அறியோம்” என்று கூறினார்.

இவ்விதம் தாதாசாரியார் கூறியதெல்லாம் அரசன் கேட்டான். தனக்குள்ளேயே ஆழ்ந்து யோசிக்கலானான். இந்த தாதாசாரியர் அவதூறு கூறுவது போல இவர் அவருக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தும் ஸ்ரீ தீக்ஷிதர் ஒரு பொழுதும் இவரைப் பற்றியோ மற்ற எவரைப் பற்றியும் ஒரு வார்த்தையும் குறை கூறுவதில்லை. ஏன் எனில் ஸ்ரீ தீக்ஷிதர் இத்தகைய அற்பமான விஷயங்களில் ஈடுபட்டுக் காலத்தை அவமே கழிக்காமல் ஸதாகாலமும் சிவத்தியானத்தில் ஈடுபடும் சிவயோகியன்றோ? இவ்வாறு எல்லாம் சிந்தித்துக் கொண்டே, “தாதாசாரியரே! தஞ்சாவூர் நரசிம்மவர்மா ஸமீபத்தில் காளஹஸ்தி தரிசனம் செய்ய தீக்ஷிதரவர்களுடன் வரப்போகின்றார். அப்போது எல்லா விஷயங்களும் நன்கு புலனாகும்” என்று பதில் கூறி தாதாசாரியாரை அனுப்பி வைத்தான். சாம்பசிவனுடைய பக்தர்களின் விசேஷ மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்டவே விதி இவரை இப்படித் தூண்டுகின்றது போலும் என்ற எண்ணத்துடன் அரசன் அமைதியாக இருந்தான்.
 

தீக்ஷிதரின் பற்றற்ற தன்மை நிரூபணமாதல்

சின்னபொம்ம ராஜன் கூறியது போல் சில தினங்களில் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரும், தஞ்சை மன்னரும் காளஹஸ்தி வந்து சேர்ந்தனர். சின்ன பொம்மராஜன் தாதாசாரியாரை அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். மறுநாள் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் ஒரு பெரிய வேள்வி செய்தார். யாக சமயத்தில் தாதாசாரியாரால் கோள்சொல்லப்பட்டிருந்த அரசனின் சந்தேஹத்தை அறிந்த தீக்ஷிதேந்திரர் யக்ஞேச்வரரைப் பின்வருமாறு பிரார்த்தித்தார். “அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றான அக்னியின் வடிவில் உள்ள சிவபெருமானுக்கு எனது செல்வத்தையெல்லாம் அர்ப்பணம் செய்கின்றேன் என்பதை இறைவனே இங்குள்ளவர்களுக்கு நிரூபிக்கவேண்டும்” என்று இவ்வாறு பூசுரசிகாமணியான ஸ்ரீமத் அப்பய்ய மதீந்திரர் துதித்து நிற்கவும், அப்பொழுது யாவரும் பார்த்துக் கொண்டிருக்க மஹாதேவர் அக்னியாகப் பிரகாசித்தார். காருஹபத்யம், ஆகவனீயம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்று அக்னிகளும் வலஞ்சுழித்து மேலும் மேலும் பிரகாசித்தன. தீக்ஷிதேந்திரர் யாகத்தில் அர்ப்பணம் செய்த பால், நெய், தேன், வஸ்திரங்கள், பீதாம்பரங்கள், மாலைகள், ஸ்வர்ண ஆபரணங்கள் அனைத்தும் அக்னியிலிருந்து வெளிவந்தன. மன்னர்களும், மக்களும், தாதாசாரியாரும் கூட இப்பேரதிசயத்தைக் கண்டனர். இரண்டு அரசர்களும் அந்த ஆடையாபரணங்கள் தாங்கள் கொடுத்தவைகள் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர். எனவே அவர்கள் இருவரும் தீக்ஷிதர் தமக்குக் கிடைத்த செல்வத்தை தமக்கே வைத்துக் கொள்ளாமல், இறைவனின் சேவையில் ஈடுபடுத்தினார் என்பதை உணர்ந்து, அதன் மூலம் அவரது பற்றற்ற தன்மையை அறிந்து தீக்ஷிதேந்திரரை மிகவும் கொண்டாடினார்கள். அதேபோல காஞ்சீபுரம் சென்று, அங்கு வரதராஜப்பெருமான் சந்நிதியில் வாஜபேய யாகம் செய்து ஸ்வர்ணம், பீதாம்பரம் போன்றவற்றை எல்லாம் அக்னியில் அர்ப்பணம் செய்ததை மன்னர்கள் பார்த்து மனம் உருகினார்கள்.
 

அரசனின் வீரர்களை ஸ்தம்பிக்கச் செய்தல்

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை இங்ஙனம் மேலும் மேலும் விருத்தி அடைவதைக் கண்டு பொறுக்காதவராகி, தாதாசாரியார் மிகவும் பண்டிதராயிருந்தும் பொறாமையினால் மதி மயக்கங்கொண்டு ஸ்ரீதீக்ஷிதேந்திரரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று எண்ணினார். அரசனது முத்திரை மோதிரத்தை எப்படியோ திருடி அரசசாஸனம் போன்ற உத்திரவைத் தயாரித்து தீக்ஷிதர் அன்று இரவு இரண்டாம் யாமத்தில் அங்கு வரும் போது அவரைக் கொன்று விட வேண்டும் என்று அரசனின் முத்திரையைச் சேனாதிபதியிடம் காண்பித்தார். இந்தக் காரியத்தைச் செய்ய சேனாபதி மனம் புழுங்கினாலும், அரசனின் முத்திரையைக் காண்பித்து தாதாசாரியார் மிகவும் கடுமையாகத் தூண்டியதால் ஒருவாறு துணிந்தான். அரண்மனை வாயிலுக்கும் தீக்ஷிதர் இல்லத்திற்கும் இடையே உருவின வாட்களுடன் சேனா வீரர்களை நிற்க வைத்து தீக்ஷிதர் வருகையை எதிர்நோக்கியிருந்தான். இரவு நேரத்தில் இம்மாதிரி ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு தாதாசாரியார் ஒரு கட்டியங்காரனை அனுப்பி, அரசன் உங்களை அழைக்கின்றார் என்று இரண்டாவது யாமத்தில் தீக்ஷிதரிடம் கூறினான். பரமசிவாவதாரமான நமது தீக்ஷிதமணியானவர் அரசனுக்கு ஏதோ இந்த நள்ளிரவில் ஆபத்து வந்து விட்டது என்று எண்ணி மார்க்கஸஹாய ஈச்வரரை வழக்கம் போல் தியானம் செய்து கொண்டு அரண்மனைக்குக் கிளம்பினார்.

“ஒரு மலையை ஒத்ததும், கண கண என்று சப்திக்கும் மணியை கழுத்தில் கொண்டதுமான நந்தியின் மீது ஆரோஹணித்து ஸகல லோகபாலகர்களாலும் துதிக்கப்படுபவரும், ஆனந்த ஸாகரமும், பர்வதராஜன் புத்திரியான பார்வதி தேவியைப் பக்கத்திலே கொண்டுள்ள ஆனந்தமாகிற அம்ருதக் கடலும், ஸகல தேவர்களுக்கும் அரசருமான பரமேச்வரன் என் முன்னால் தோன்றட்டும். நம் குல தெய்வமான மார்க்கஸஹாயேச்வரரே நமது தாபத்தைப் பரிகரிக்கின்றவர். எவ்விடத்திலும் சம்புவின் பெயர் ஒன்றே எனக்குத்துணை” என்று இவ்வாறெல்லாம் தியானித்துக் கொண்டு, மார்க்கஸஹாயேச்வரர் தமக்குப் பாதுகாவாலாகத் துணைவருகின்றார் என்ற உறுதியுடன் சிஷ்யர்களோ வாஹனமோ ஒன்றுமில்லாமல் அரசன் அரண்மனையை நோக்கி பரமசிவ பக்தமணியாகிற ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்கள் நடந்து சென்றார். வழியிலே உருவின கத்திகளுடன் நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கொண்டே சென்றார். அங்ஙனம் தனியாக வரும் பொழுது தீக்ஷிதேந்திரர் அறியாது அவரைச் சுற்றி மஹா வீரர்கள் வருவதைக்கண்ட அரசனின் சேனா வீரர்களும் சேனாபதியும் நடுங்கினவண்ணம் தூண் போல் நின்று செயலற்றவர்களாய் நின்று விட்டார்கள். தீக்ஷிதேந்திரர்கள் அரசனது அந்தப்புரத்தை வந்தடைந்தார்கள். தீக்ஷிதருடைய வருகையை அந்த அரசன் எதிர்பார்க்கவேயில்லை. எனவே, தீக்ஷிதர் தனியாக வந்துள்ளதை அறிந்து, அவரது கால்களில் விழுந்து வணங்கி, “இது என்னே பாவம்! யான் என்ன குற்றம் புரிந்தேன். இந்த நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளக் காரணம் யாதோ” என வேண்டி நின்றான். இவ்விதம் அரசன் கேட்டதும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் நடந்தது அனைத்தும் தாதாசாரியாரின் சூழ்ச்சியாலேயே என்று உணர்ந்து கொண்டார். அரசனை நோக்கி, அரசே தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதவர். நடந்ததனைத்தும் ஒரு துஷ்டனால் செய்யப்பட்ட காரியம், காலகாலனான பரமேச்வரன் உமக்கு ஒரு குறையும் இன்றிக் காப்பாற்றுவார். எல்லா விஷயமும் நாளை காலை உமக்குத் தெளிவாகத் தெரியும் என்று கூறி, அவனை ஆசீர்வதித்து விட்டு தமது இல்லம் வந்து சேர்ந்தார்.

மறுநாள் காலையில் அரசன் கோட்டை வாசலில் வந்து உருவின கத்திகளுடன் அசையாது நிறுகும் தனது சைனியத்தையும், சேனாபதியையும் பார்த்து இது என்ன விபரீதம்? என்று நினைத்தவனாய், பயத்துடன் மெள்ள மெள்ள காலால் நடந்துகொண்டே தீக்ஷிதரின் இல்லத்தை வந்தடைந்தான். கருணாமூர்த்தியான தீக்ஷிதர் அரசனை வரவேற்று அவனின் மனோநிலையைப் புரிந்துகொண்டு, அரசனுடன் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். அங்கு சேனையையும், சேனாபதியையும் பார்த்து சிவபெருமானைத் தியானித்துக் கொண்டே கருணை கடாக்ஷத்தைச் செலுத்தினார். அதுவரை அசைவற்று தூண்போல நின்ற சேனாபதியும், மற்றைய வீரர்களும் தீக்ஷிதரை நோக்கி, “கருணைக்கடலான ஐயனே! பரமாத்மாவே! அரசன் ஆணை என்று கபடமாகக்கூறி எங்களை இந்த பெரும் அபராதத்துக்கு தாதாசாரியார் ஆளாக்கிவிட்டார். நாங்கள் நிரபராதிகள்” என்று கூறி தாதாசாரியாரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினான். அரசன் கடுங்கோபம் கொண்டு தாதாசாரியரைத் தண்டிக்க முற்பட்டான். தீக்ஷிதேந்திரர் அவனைத் தடுத்து, விஷவ்ருக்ஷமானாலும் நாம் வளர்த்தால் அதைவெட்டுவது முறையல்ல என்று நீதிசாஸ்திரம் கூறுகிறது. சிசுபாலனிடம் கிருஷ்ணன் நூறு குற்றங்கள் பொறுத்தது போல நாமும் இவரிடம் பொறுப்போம். காலம்வரும் வரை பொறுப்பதே முறை என்று அரசனைச் சமாதானப்படுத்தினார். மஹானுடைய அறிவுரையை சிரமேற்கொண்டு அரசன் மிக்க சந்தோஷத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் ஏற்றி அவரைப் பட்டணப்பிரவேசம் செய்வித்து பெருமளவில் கெளரவித்தான். அன்று முதல் அரச காரியங்களை அரசன் தானே நேரில் கவனிக்க ஆரம்பித்தான்.
 

ஸ்ரீகுருராமகவி

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரருக்கு காவியங்கள் சாஸ்திரங்கள் முதலானவற்றைக் கற்பித்தவர் முள்ளண்டிரம் குரு ராமகவி என்பதை முன்னரே கண்டோம். இந்த குருராமகவி என்பவர் விஷ்ணுபக்தியில் சிறந்தவர். இருந்தும், அவர் காஞ்சியில் வரதராஜரை ஸ்தோத்திரம் செய்யும் போதும், சைவாசாரியரான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களின் குருவாகையால் அங்குள்ள வைஷ்ணவர்கள் அவருக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ஒரு சமயம் குரு ராமகவி தமது சிஷ்யர் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் மேலும் கீர்த்தியுடன் வாழவேண்டும் என்று தனது இஷ்டதெய்வமான வாஸுதேவனைப்பிரார்த்தித்து முள்ளண்டிரம் கிராமத்தில் வசித்து வரும்பொழுது சைவமணியாகிற ஸ்ரீமத் தீக்ஷிதர் குருவை தரிசனம் செய்யப் பல்லக்கில் ஏறிவந்தார். அதே போல குருராமகவியும் அப்பய்ய தீக்ஷிதரைக் காண வந்து கொண்டிருந்தார். நடுவழியில் தமது குருநாதரைக் கண்டதும், உடனே பல்லக்கிலிருந்து இறங்கி, குருநாதரது திவ்ய சரண கமலங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கூப்பிய கரங்களுடன் அவர் அருகில் நின்றார்.

“உமாகாந்தனான சிவபெருமானின் பாதத்தாமரைகளைச் சேவிக்கும் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களே! நீர் க்ஷேமமா?” என்று ஸ்ரீகுருராமகவி கேட்டார்.

“அறிவிற் சிறந்த என்குருநாதரே! தங்களுடைய சிஷ்யனான நான், லக்ஷ்மீ கடாக்ஷம் போன்ற அம்ருதமயமான தங்களுடைய கடாக்ஷத்தினால் க்ஷேமமாக இருக்கிறேன்” என்று உத்தம மாணவமணியாகிற தீக்ஷிதேந்திரர் பதிலளித்தார்.

ஸ்ரீகுருராமகவி மேலும் கேட்டார்: “இங்கு உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிராமணோத்தமர்கள் யாவர்?

அதற்கு ஸ்ரீமத் தீக்ஷிதர், “ஸ்ரீ பகவத்பாதர்களின் பாஷ்யத்தி உலகத்தில் உபதேசம் செய்யும் தங்களுடைய சிஷ்யனுடைய சிஷ்யர்கள் இவர்கள்” என்று பதிலளித்தார். தமது மாணவரின் வித்தையையும், விநயத்தினையும் கண்டு குரு வியந்தார். பரிகராலங்காரம் என்ற அலங்காரத்தினால் ஒருவருக்கொடுவர் பேசிக்கொண்டதில் பரமானந்த மடைந்து தமது சீடரை வாயாரவாழ்த்தி ஆசீர்வதித்தார்.
 

தீக்ஷிதேந்திர விஜயம்

இங்ஙனம் தீக்ஷிதேந்திரர் கீர்த்தியினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் காஞ்சீபுரத்தில் ஸர்வதீர்த்த புஷ்கரணி என்ற புண்யதீர்த்தக் கரையில் விஜயஸ்தம்பத்தைப் பிரதிஷ்டை செய்தார். அச்சமயம் தாதாசாரியார் மிக்கபிரயாசையுடன் வைஷ்ணவ மதத்தில் ஸமர்த்தர்கள் என்று பிரஸித்தி பெற்றவர்களை அழைத்துக் கொண்டு வந்து தீக்ஷிதேந்திரரிடம் வாதம் செய்ய வந்தார். வியாஸபட்டர், பராசர பட்டர் என்ற மஹான்காளை மத்யஸ்தர்களாக இருக்கச் செய்து வாதம் செய்ய ஆரம்பித்தார்கள், தாதாசாரியார் பரமேச்வரனை ஸ்மசானவாஸி என்று சொல்லி பரிஹாஸம் செய்தார். அதற்கு தீக்ஷிதேந்திரர், பரமேச்வரன் தனது நெற்றிக்கண்ணால் இவ்வுலகத்தை எரித்து விட்டு அவர் ஒருவர் மட்டும் எஞ்சியிருந்ததால் அங்ஙனம் எரித்த புவனம் முழுமையுமே ஸ்மசானம் ஆனதால் பரமேச்வரனை ஸ்மசானவாஸி என்று கூறுவது பொருந்தும் என பதில் அளித்தார். பின்னர் பரமேச்வரனுக்கே உரிய பல லீலா அனுக்கிரஹங்களை குறைகள் போன்று கற்பித்து தாதாசாரியார் மேலும் மேலும் கேட்டுவர, ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் ச்ருதி, ஸ்ம்ருதி ஆகிய பிரமாணங்களுடன் வைணவரகளுடைய வாதங்களையெல்லாம் தோற்கடித்துத் தன்னுடைய சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். மத்ஸ்யதர்கள் இருவரும் “ஸரஸ்வதியே புருஷாகாரமாய் வந்துள்ளாள்” என்று தீக்ஷிதேந்திரரின் பேரறிவைக் கொண்டாடினார்கள். மத்வ மதம், வைஷ்ணவ மதம், பெளத்த மதம் போன்ற மதங்களையெல்லாம் கண்டித்து சிவாத்வைதத்தை ஸதாபித்த தீக்ஷிதேந்திரரின் ஆற்றலைப் பராசரபட்டர் போற்றிப் புகழ்ந்ததை பின்வரும் சுலோகத்தினால் அறியலாம்.

 

மத்வத்வாந்தாதி வித்வம்ஸநதிநமணி: பெளத்த ஸித்தாந்தவன்யா:

வஹ்நி: பாஷண்டஷண்டோரகபணபடலோத்தண்ட துண்டாண்டஜேந்த்ர: |

த்ருப்யத்ராமாநுஜோத்யத்தரணிதர மஹாதம்பதம் போலிகேலி:

சைவாசாராப்திசந்த்ர: ஜயதி கவிராடப்பயாக்யாத்வரீந்த்ர: ||

மத்வமதம் என்ற இருட்டைச் சூரியன் போக்குவது போலவும், பெளத்த சித்தாந்தம் என்ற காட்டை நெருப்பு அழிப்பது போலவும், பாஷண்டர்களின் கூட்டம் என்ற பாம்பை கருடன் கொத்துவது போலவும், ராமாநுஜ சித்தாந்தம் என்ற மலையை இந்திரனுடைய வஜ்ராயுதம் பொடியாக்குவது போலவும், சைவாசாரம் என்ற பாற்கடலில் சந்திரன் தோன்றியது போல் தோன்றிய கவிச்சக்கரவர்த்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் சிவாத்வைதத்தை ஸ்தாபித்து வெற்றியுடன் விளங்குகிறார் என்பது இந்த சுலோகத்தின் தாத்பர்யமாகும்.

தீக்ஷிதேந்திரரின் அபார பாண்டித்யத்தினால் மகிழ்ச்சி அடைந்த பண்டிதோத்தமர்கள் அவரை அபரசங்கரா சாரியார் என்றும், கவிசார்வபெளமன் என்றும் பிருதங்களால் அலங்கரித்துக் கொண்டாடினார்கள்.
 

நிக்ரஹாஷ்டகம்

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் இங்ஙனம் ஸர்வக்ஞராய்த் திகழ்ந்து திக்கெட்டிலும் பரவிய கீர்த்தியுடன் சூரியன் போல் பிரகாசித்து வருவதைக் காணச் சகிக்காத தாதாசாரியரும் அவரைச் சேர்ந்த சில பண்டிதர்களும், தீக்ஷிதருக்கு மேலும் என்ன இன்னல்கள் செய்யலாம் என்று சமயத்தை எதிர்பார்த்திருந்தார்கள். ஒரு சமயம் தீக்ஷிதேந்திரர் கார்த்திகை மாதம் பானுவாரம் தமது குலதெய்வமான விரிஞ்சிபுரம் ஸ்ரீமரகததல்லி ஸமேத ஸ்ரீமார்க்கஸஹாயேச்வரப் பெருமான் திருவிழாத் தரிசிக்க அங்கு சென்றார். திருவிழாப் பொலிவினைக் கண் குளிரக் கண்டு அங்கு சில காலம் தங்கியிருந்து ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீ மார்க்க பந்துப் பெருமானை நல்ல முறையில் பூஜித்து அந்த நகரத்தில் மேற்கு வீதியில் வாய் மூலையில் சிவாலயத்தில் பிரதிஷ்டையாயுள்ள மஹாலிங்கத்துக்கு ருத்ராக்ஷ மாலைகளால் அலங்காரம் செய்து வைதிக பூஜை நடைபெறச் செய்து சிலகாலம் அங்கு வசித்தார். அதன் பின்னர் ஒரு இரவு புறப்பட்டு பல்லக்கில் ஏறி வேலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே தீக்ஷிதர் வந்து கொண்டிருக்கும்போது, தாதாச்சாரியாரால் ஏவப்பட்ட சில கொலைகாரர்கள் நடுவழியில் பல்லக்கை நிறுத்தி வதம் செய்ய வந்தனர். அந்த சமயம் பொறுமையே வடிவான ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரும் மகத்தான கோபங் கொண்டார். ஸ்ரீமார்க்கஸஹாயப் பெருமானை வேண்டி எட்டு சுலோகங்களால் துதித்தார். இந்த எட்டு சுலோகங்களும் நிக்ரஹாஷ்டகம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன.

எட்டாவது சுலோகமாயமைந்த சுலோகத்தைச் சொல்லி முடித்தவுடன் திடீரென்று ஆகாயத்தில் ஒரு மின்னல் போன்று ஒரு பேரொளி தோன்றி, நெருப்புப் பொறிகளுடன் பெரிய துவனியுடன் பேரிடி உண்டாகி அக்கொலையாளிகளை அடித்துக் கீழே தள்ளி மூர்ச்சையடையச் செய்தது. அனைவரும் பிரக்ஞையற்றவர்களானார்கள். பரம கருணாமூர்த்தியான தீக்ஷிதேந்திரர் உடனே கருணை கொண்டு அடிபட்டுக் கிடப்பவர்கள் விழித்தெழுமாறு அருள் செய்ய பரமேச்வரனை வேண்டினார். அவர்கள் அனைவரும் உயிருடன் எழுந்தனர். அக்கொலையாளர்களின் நடுவில் தாதாசாரியாரும் இருந்தார். அவரும் எழுந்து தீக்ஷிதேந்திரரை வணங்கி, “சிவாபராதம், சிவபக்தருக்குச் செய்த அபராதம் ஆகியவற்றினின்றும் இப்பொழுதே விழித்தெழுந்தேன். எனது குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்” என வேண்டி நின்றார். இங்ஙனம் உள்ளம் மாறிய அந்த தாதாசாரியாரிடம் அவரது அபராதங்கள் அனைத்தையும் மறந்து விசேஷமான ஸ்னேஹத்துடன் அவரையும் அழைத்துக் கொண்டு வேலூர் வந்து சேர்ந்தார். அரசசபையில் இருவருமாய் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்து வந்தார்கள். இந்த விருத்தாந்தத்தைக் கேட்ட அரசனும் மிக்க மகிழ்ச்சியடைந்தான் என்று கூறவும் வேண்டுமோ?

“SRI APPAYYA DIKSHITA” என்ற ஆங்கில நூலில் அதன் ஆசிரியர் Dr.N. ராமேசன், M.A., Ph.D., I.A.S., அவர்கள் இந்த நிக்ரஹாஷ்டகத்தைப் பற்றிக்குறிப்பிட்டுள்ளவற்றைச் சுருக்கமாகக் கீழே கொடுக்கின்றோம்.

சைவர்களையும் சைவவழிபாட்டையும் அந்தக் காலத்தில் விஜய நகர அரசரின் பிரதிநிதியான ராமராயர் என்பவரின் ஆதரவுடன் வைஷ்ணவப் பிரசாரகர்கள் மிகவும் கொடுமைகளுக்குள்ளாக்கினார்கள் என்பது இந்த நிக்ரஹாஷ்டகத்தின் மூலம் தெரிய வருகிறது. சைவர்களுக்கும் குறிப்பாக ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரருக்கும் பெரும் தீங்கு விளைவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நிக்ரஹாஷ்டகத்தின் கருத்திலிருந்து ஸ்ரீ தீக்ஷிதேந்திரர் இதனை மிகவும் கோபத்துடன் இயற்றியிருக்க வேண்டும் என்பதையும் சைவர்களுக்கு வைஷ்ணவர்கள் இழைத்த கொடுமைகள் அளவு மீறிப் போயிருக்க வேண்டும் என்பதையும் ஒருவாறு ஊகிக்க முடிகிறது.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்ற சமயத்தில் ஸ்ரீ தீக்ஷிதர் இந்த நூலின் மூலம் தன்னைக் காத்தருளும்படி இறைவனை வேண்டியுள்ளார். இனிமேலும் பகைவர்களை விட்டு வைக்க கூடாது என்று இறைவனிடம் முறையிடுகின்றார். கருணைக்கடலான ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் இம்மாதிரி இறைவனிடம் முறையிட வேண்டுமென்றால் வைணவர்கள் அவருக்கு எவ்வளவு கொடுமைகள் இழைத்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது. நிக்ரஹாஷ்டகத்தின் சுருக்கமாக Dr. N. ராமேசன் அவர்கள் கொடுத்துள்ளபடி ஆங்கிலத்திலேயே கீழே கொடுத்து உள்ளோம்.

“Though I fully know the danger that my enemy has reserved for me, still I have made up my mind to go on my travels with the help of Lord Margasahayeswara (to propagate Saivism). I propose to go through forests and uninhabitated places. May the Lord destroy my enemy who proposes to kill me on account of his animosity towrds me. Let there be thousands of enemies in my way intent on harming me. Even if Lord Brahma has ordained it so, I am not afraid. I am very clear that my Lord will stand before me armed with bow and arrows and protect me.

The enemy is making pious people shed tears by his atrocities to completely root out all signs of Saivism all because he is unable to control his hatred towards the Rudraksha and Vibhuthi worn by the devotees of Lord Siva. But his plans will not be fulfilled. He will become a prey to the great anger of Nandi. God Nandi will ensure by his protection that the Saivite religion is propagated throughout the world.

If the enenmy wants to do Mudrangana to the Saivites and convert them to Vaishnavism, he is trying to dig his own grave. Oh Lord Paramasiva, let there not be any delay in the matter. Please Come forward immediately in order to punish these enemies who do harm and evil to your followers”.

 

   நிக்ரஹாஷ்டகத்தின் எட்டாவது சுலோகம் பின் வருமாறு:

 

ஸகலபுவன கர்த்தா ஸாம்பமூர்த்தி: சிவச்சேத்

     ஸகலமபி புராணம் ஸாகமம் சேத் ப்ரமாணம் |

யதிபவதி மஹத்வம் பஸ்மருத்ராக்ஷபாஜாம்

     கிமதி ம்ருதிரஸ்மத் த்ரோஹிண: ஸ்யாதகாண்டே ||

“ஸகல உலகங்களுக்கும் கர்த்தா அம்பிகையுடன் கூடிய பரமேச்வரனேயானால், ஸகலமான புராணங்களும் ஆகமங்களும், வேதங்களும் பிரமாணமானால், விபூதிருத்ராக்ஷம் தரிப்பவர்களிடம் மஹத்வம் என்பது உளதானால், எனது துரோகியாக இருப்பவன் இன்னும் மரணமடையாமல் இருப்பது எப்படி” என்பது இந்த சுலோகத்தின் பொருள் ஆகும். இம்மாதிரி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமானால் ஸ்ரீமான் தீக்ஷிதர் அவர்களை வைஷ்ணவர்கள் எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதை மீண்டும் எடுத்துக்காட்ட விரும்புகின்றோம்.

எப்படியோ தாதாசாரியரும் மனம் மாறி ஸ்ரீமத் தீக்ஷிதரிடம் தாம் கொண்ட விரோதம் நீங்கி ஸ்னேஹத்துடன் இருக்க ஆரம்பித்தார் என்பதை முன்னர்க் கூறினோம். அதன் பிறகு தீக்ஷிதர் அவர்கள் சிவ பக்தியை உலகுக்கு உபதேசித்துக் கொண்டும், அக்னிஹோத்ராதி கர்மானுஷ்டானங்களைத் தவறாது செய்து கொண்டும் வேலூர் நகரத்தில் வசித்து வந்தார். ஒரு சமயம் தனுர்மாதத்தில் இறைவனைப் பூஜிக்க விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூசை செய்ய ஆரம்பித்த போது ஒரு சங்குத்வனி கேட்டு அவன் பாடுவது போன்ற அதே ராகத்தில் சம்போ மஹா தேவ தேவ, சிவ சம்போ மஹாதேவ தேவேச சம்போ எனத் தொடங்கும் ஸ்ரீமார்க்கபந்து ஸ்தோத்ரத்தைச் செய்தார்.
 

பக்திபரிபாக பரிசோதனம்

ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும். முதலாவது சுலோகம்.

 

<="" strong="">

“தேவர்களுக்கும் தேவனே! ப்ரத்யக்ஷமாகக் காணப்படும் இந்த பலதரப்பட்ட பிரபஞ்சத்தின் உற்பத்தியானது எவரிடமிருந்து உண்டாயிற்றோ அந்த உம்முடைய மேலான மஹிமையை இவ்வளவு தான் என்று அறிய யாரால் முடியும்? அங்ஙனமிருந்தும் நீர் பக்தியினால் அறியத் தகுந்தவராக இருக்கின்றீர் என்றதால் நான் உம்மை பக்தியால் மட்டும் துதிக்க விரும்புகின்றேன். என்னுடைய இந்த துணிச்சலான காரியத்தைப் பொறுத்தருள்வீராக” என்பது இந்த சுலோகத்தின் பொருளாகும்.

இந்த நூலுக்கு ஆத்மார்ப்பண ஸ்துதி என்ற பெயர் வரக் காரணமான சுலோகம்

 

ஆத்யைவ த்வத்பதநலினயோ: அர்ப்பயாமி அந்தராத்மன்

     ஆத்மானம்மே ஸஹபரிகரை: அத்ரிகன்யாதிநாத |

நாஹம் போத்தும் தவசிவ பதம் நக்ரியா யோகசர்யா:

     கர்த்தும் சக்நோம்யனிதரகதி: கேவலம் த்வாம்ப்ரபத்யே ||

“ஹ்ருதயகமலத்தில் வசிக்கும் பரமேச்வரனே! அந்தர்யாமியான புருஷனே! இப்பொழுதே உன் இரு சரண கமலங்களில் பரிவாரங்களோடு கூட ஜீவரூபமான என்னை அர்ப்பணம் செய்து விடுகிறேன். ஹே சிவ! உன் இருப்பிடத்தை (சரணத்தை) நான் அறிய சக்தியுடையவனில்லை. (அவசியம் செய்ய வேண்டுமென்று விதிக்கப்பட்ட) கர்மாக்களையாவது யோக சாஸ்த்ரரீதியில் அப்யாஸ்ங்களையாவது செய்வதற்கு என்னால் முடியாது. வேறு வழியில்லாதவனாக உன்னை சரணம் அடைதலை மட்டும் செய்கிறேன்.”

 

ஆத்மார்ப்பணஸ்துதிரியம் பகவந்நிபத்தா

     யத்யப்யநன்யமநஸா மயா ததாபி |

வாசாபி கேவலமயம் சரணம் வ்ருணீதே

     தீனோ வராக இதி ரக்ஷ க்ருபாநிதே மாம் ||

“ஈச்வர! இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியானது என்னால் வேறு விஷயங்களில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட மனதுடன் இயற்றப்பட வில்லை.அப்படியிருப்பினும் தயாநிதியே! இவன் எளியவன், அற்பன், வெறும் வார்த்தையினால் மட்டுமாவது சரணத்தை வேண்டுகின்றான் என்ற காரணத்தைக் கொண்டு என்னை ரக்ஷிக்க வேண்டும்” என்பது இந்த சுலோகத்தின் பொருள்.

நவவிதபக்தி நிலையில் ஒன்பதாவதான ஆத்மநிவேதனம் என்ற கடைசி நிலையை அடைந்துவிட்டார் என்பதை இந்த நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

சீதஜ்வர நிவாரணம்

ஒரு சமயம் கார்த்திகை தீபதரிசனத்திற்காக ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் திருவண்ணாமலை சென்றார். அங்கு தேயுலிங்கமான அருணாசலேச்வரரைத் தரிசித்துச் சில நாட்கள் தங்கியிருந்த போது அவருக்குச் சீத (குளிர்) ஜ்வரம் வந்துவிட்டது. அந்த நிலையில் அபீதகுசாம்பா என்ற திருநாமத்துடன் அங்கு எழுந்தருளியுள்ள அம்பிகையை எட்டு சுலோகங்களால் துதித்தார். உடனே அந்த ஜ்வரம் அவரைவிட்டு அகன்றது. இந்த எட்டு சுலோகங்களும் ‘அபீதகுசாம்பா ஸ்தவம்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இக்காலத்திலும் கைகண்ட பலனை அளிக்கும் இந்தத் துதியைச் சொல்பவருக்கு வியாதிகள் நீங்கும். ஜ்வரத்தில் இருப்பவர் பக்கத்தில் இதை ஜபித்தால் ஜ்வரம் நீங்கிவிடும். வேண்டியது நம்பிக்கை ஒன்று மட்டுமே.
 

பஞ்சாக்ஷரமஹிமானுவர்ணனம்

ஒரு சமயம் தீக்ஷிதேந்திரர் ஸ்ரீசைலம் முதலான சிவ ஸ்தலங்களைத் தரிசிக்கத் தெலுங்கு தேசத்திற்குச் சென்றார். அங்குக் குழந்தைகளுக்கு வித்தியாப்யாஸ ஆரம்பத்திலேயே நம: சிவாய சித்தம் என்று முதன் முதலில் கற்றுக் கொடுப்பதை அறிந்து உள்ளம் உருகிப் பின வரும் சுலோகத்தைக் கூறினார்.

 

ஆந்த்ரத்வமாந்த்ர பாஷா ப்ராபாகரபரிச்ரம: | 

தத்ராபி யாஜுஷீ சாகா நா ( ) ல்பஸ்ய தபஸ: பலம் ||

ஆந்திர தேசத்தில் பிறந்து தெலுங்கு பாஷையைத் தாய்பாஷையாக அடைவதும், பிரபாகரரின் மீமாம்ஸா சாஸ்திரத்தைப் பயிலுவதும் அல்லது யஜுர்வேத சாகையில் பிறப்பதுமான இவைகள் சிறு புண்ணியத்தின் பலனாகக் கிடைக்காது. அதாவது பெரும் புண்ணியத்தைச் செய்தவனுக்கே இவைகள் கிடைக்கும் என்பது கருத்து. ஆந்திர தேசம் மூன்று லிங்கங்களால் (சிவ க்ஷேத்திரங்கள்) சூழப்பட்டிருத்தலால் அந்த தேசம் திரிலிங்க தேசம் என்றும், அந்த மக்கள் த்ரைலிங்கர்கள் என்றும் வழங்கப்பட்டார்கள். அந்த தேசத்து மக்கள் சிவபெருமானை த்ரியம்பகனாக வழிபட்டார்கள். அனைவரும் சிவசின்னங்கள் தரித்து சிவோபாசகர்களாக விளங்கினார்கள். பிரபாகர மீமாம்ஸை என்பது பயிலுபவரின் அறிவுக்கு விருந்தாக அமைந்ததால் அதையும் குறிப்பிட்டார்கள். அதுபோல யஜுர்வேதம் யாகங்கள் செய்வதற்காகப் பயன்படுவதால் அதனையும் முக்கியமாகக் கூறியருளினார்கள். மேலும் யஜுர்வேதத்தில் தான் பிரஸித்தமான ருத்ராத்யாயம் அமைந்துள்ளது. இந்த ருத்ராத்யாயத்தில் தான் பஞ்சாக்ஷரமந்த்ரம், எட்டாவது அனுவாகத்தில் அமைந்துள்ளது. அதனாலும் யஜுர் வேதத்துக்குச் சிறப்பு உண்டு.

வேத புருடனுக்கு ஸ்ரீருத்திரம் கண்ணும் அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம். வேதம்நான்கும், வேதாங்கம் ஆறும், நியாயம், மீமாம்ஸை, ஸ்மிருதி, புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது. வேதத்துள்ளும் ஸ்ரீருத்திரமே மேலானது. அதனுள்ளும் பஞ்சாக்ஷரமே மேலானது. அதனுள்ளும் “சிவ” என்ற இரண்டெழுத்தே மேலானது. இம்மாதிரி பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையையும், அதனுள் ஜீவரத்தினம் போல் பிரகாசிக்கும் “சிவ” என்னும் இரண்டு எழுத்துக்களின் பெருமையையும் நாடெங்கிலும் பரப்பினார்.
 

தாதாசாரியார் சிவத்தொண்டு செய்தல்

தாதாசாரியார் தாம் செய்த சிவாபராதத்துக்காகப் பெரிதும் வருந்தி, பரிதாபப்பட்டு, பிராயச்சித்தம் வேண்டினார். அவரை பக்ஷிதீர்த்தம் என்று பிரஸித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய க்ஷேத்திரத்தில் ஒரு மண்டலம் தங்கி சிவார்ச்சனம் செய்யும்படி விதித்தார். தாதாசாரியரும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் உபதேசித்த சிவபூஜாவிதியின்படி அங்கு சென்று சிவபூஜை செய்தார். அத்தகைய சிவபூஜையினால் பாவமெல்லாம் நீங்கி, உயர்ந்த ஸத்வ குணங்களால் நிரம்பப்பெற்ற தாதாசாரியார் மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த க்ஷேத்திரத்துத் திருக்கோயிலைத் தன் செலவில் புதுப்பித்தார். இம்மாதிரி ஆலயங்களை ஜீரணோத்தாரணம் செய்வதும் சிவபக்தி செய்தலேயாகும் என்ற விஷயம் ஸூதஸம்ஹிதை போன்ற நூல்களில் விளக்கமாகக் காணப்படுகிறது. அதன் பிறகு தாதாசாரியார் மிக்க சந்தோஷமடைந்த மனத்துடையவராய் தன்னுடைய பெயரில் “தாதாசாரியார் கோபுரம்” என்று விளங்கும்படியாக ஒரு கோபுரம் நிர்மாணித்து, அங்குச் சிவபெருமானின் கைங்கர்யத்திற்காகத் தன்னைச் சேர்ந்த வைஷ்ணவர்களை நியமித்து, அதற்காக நிலங்களும் எழுதி வைத்தார். இம்மாதிரியான சிவத்தொண்டுகளால் தாதாசாரியார் மிக்க பவித்திரராகி அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
 

பட்டோஜி தீக்ஷிதர்

பட்டோஜி தீக்ஷிதர் என்பவர் சிறந்த வியாகரண பண்டிதர். அவர் ‘ஸித்தாந்த கெளமுதி’ என்ற நூலை இயற்றியவர். அவர் தீக்ஷிதேந்திரரின் பெருமையைக் கேள்விபட்டு, அவரைத் தரிசிக்கவும், அவரிடம் மீமாம்ஸையும் வேதாந்தமும் படிப்பதற்காகவும் காசியிலிருந்து தென்திசை வந்தார். அந்த சமயம் தீக்ஷிதேந்திரர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். தீக்ஷிதரை தரிசித்து; தன்னால் செய்யப்பட்ட ஸித்தாந்த கெளமுதியை அவரிடம் ஸமர்ப்பித்தார். தீக்ஷிதரும் அந்த நூலை நன்கு மதித்து அவரை அனுக்கிரஹம் செய்தார்.

பட்டோஜி தீக்ஷிதர் தென்திசை யாத்திரையை முடித்துக் கொண்டு, காசிக்ஷேத்திரத்தை அடைந்த பின்னர் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் பெருமையையும் அவரது நூல்களையும் மிக்க பெருமையுடன் வடநாட்டில் பிரசாரம் செய்தார். பட்டோஜி தீக்ஷிதர் ஸ்ரீமத் தீக்ஷிதரைப் பின்வருமாறு புகழ்ந்து வணங்கியுள்ளார்.

 

அப்பய்ய தீக்ஷிதேந்த்ரான் அசேஷ வித்யாகுரூன் அஹம் வந்தே |

யத்க்ருதி போதாபோதெள வித்வதவித்வத்விபாஜகோபாதீ ||

இந்த சுலோகத்தில் பட்டோஜி தீக்ஷிதர் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் ஸகல வித்தைகளுக்கும் குரு என்று கூறி அவரை வணங்குகின்றார். அந்த தீக்ஷிதரின் பெருமையைப் பட்டோஜி தீக்ஷிதர் என்று நிர்ணயிக்க வேண்டுமானால் அவர் தீக்ஷிதேந்திரரின் கிரந்தங்களைக் கற்றறிந்தவரா அல்லது அறியாதவரா என்பதின் மூலம் நிர்ணயிக்கலாம் என்று கூறினார். இதன் கருத்து என்னவென்றால் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் நூல்களை கற்றறிந்தவர்களே வித்துவான்கள், மற்றவர்கள் அல்லர் என்பதாம்.

இங்ஙனம் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தமது ஸமகாலத்து வித்துவான்களால் கொண்டாடப்பட்டார். அவருக்குப்பின் வந்த பண்டிதோத்தமர்களும் தாமியற்றிய கிரந்தங்களில் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் பெருமையைக் கொண்டாடி வாழ்த்தியுள்ளார்கள். இந்தப் பண்டிதர்களின் புகழ்களையெல்லாம் இங்கு கொடுக்கப் புகுந்தால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடுமாகையால் விரிவஞ்சி விடுத்தோம்.
 

ஸ்ரீமத் தீக்ஷிதரின் சிதம்பர வாஸம்

ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் தம்முடைய கடைசி காலத்தில் சிதம்பர க்ஷேத்திரத்தில் வசிக்க விரும்பினார். சின்னபொம்ம ராஜனிடமும் மற்றும் தாதாசாரியார் போன்ற வித்துவான்களிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு வேலூர் நகரத்திலிருந்து தனது அடையப்பலம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அடையப்பலத்தில் ஸதா காலமும் சிவநாமத்தை ஜபித்துக் கொண்டும், சிவபஜனை செய்து கொண்டும் தம்மை நாடிவரும் பண்டித மணிகளுக்கு சாஸ்திர சம்பந்தமாக ஏற்பட்ட ஸந்தேஹங்களை போக்கியும், சிஷ்யர்களுக்கு தமது நூல்களைப் போதித்துக் கொண்டும் காலம் கழித்தார். பின்னர் சிதம்பர தரிசனத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் பெருகியவராய் கால கண்டேச்வரரையும், வரதராஜப் பெருமானையும் தரிசித்து விட்டு பந்து மித்திரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிதம்பரம் வந்து சேர்ந்தார்.

சிதம்பரத்தில் ஞானப்பிரகாசம் என்ற ஒரு ஆச்ரமத்தில் இருந்து கொண்டு தினசரி சிவகங்கையில் ஸ்நானம் செய்து கொண்டும் நித்திய கர்மாக்களை அனுஷ்டித்துக் கொண்டும் நடராஜப் பெருமானையும், கோவிந்தராஜப் பெருமானையும் தரிசித்துக் கொண்டும் தெய்வ வழிபாடு செய்துவந்தார். இங்ஙனம் அங்குத்தங்கியிருந்த சமயம் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்குச் சந்தனாபிஷேகம் செய்யும்பொழுது ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் கண்ணாரக் கண்டு களித்து, பக்திபரவசம் அடைந்து ஒரு அருமையான சுலோகத்தினால் நடராஜப் பெருமானை ஸ்தோத்திரம் செய்யலானார்.

ஹே கனகசபாபதியே! உம்முடைய தலையில் குளிர் மிகுந்த கங்கையும், சந்திரனும் உள்ளன. கைகால்களிலோ குளிர்ச்சி மிக்க பாம்புகள். இடது பாகத்தில் பனிமலையான இமயத்திலிருந்து தோன்றியவளான கருணை நிரம்பிய உமாதேவி. உம்முடைய உடம்பெல்லாம் சந்தனப்பூச்சு. இத்தகைய குளிர்ச்சியை நீர் சகித்திருப்பதற்குக் காரணம் அனல் போன்ற தாபத்ரயத்தால் கொதித்துக்கொண்டு இருக்கும் எனது உள்ளத்தில் நீர் நித்தியவாஸமாக இருப்பது தான் என்ற கருத்துடைய சுலோகத்தினால் துதித்தார்.
 

ஸ்ரீமத் தீக்ஷிதர் சிவ ஸாயுஜ்யம் அடைதல்

ஸ்ரீமான் தீக்ஷிதேந்திரர் அனவரதமும் ஸ்ரீநடராஜப் பெருமான் தரிசனத்தால் புளகாங்கிதம் அடைந்து அதோடு நில்லாமல் மோக்ஷசாம்ராஜ்யத்திற்குச் சாதனமான யோகாப்யாசங்களிலும் ஈடுபட்டுவந்தார். அவர் தமது கடைசி நாள் வரையிலும் தம்முடைய சிவபூஜையையும் கர்மானுஷ்டானங்களையும் தவறாது செய்துவந்தார். அவருடைய 72-வது வயது முடிந்து 73-வது வயதில் தமது மோக்ஷகாலம் வருவதை உணர்ந்து, அதனை வரவேற்று தர்ப்பாசனம் மீது அமர்ந்திருந்தார். தமது தம்பி பெயரரான நீலகணடர் என்ற பன்னிரண்டு வயது பாலகனை நன்கு ஆசீர்வதித்தார். அந்த சமயத்தில் அவரது புத்திரர்களும், நீலகண்டரும் தீக்ஷிரது மனதில் அப்பொழுது என்ன பிரகாசிக்கிறது என்பதைத் தமக்குச் சொல்லவேண்டும் என்பதை விக்ஞாபித்துக் கொண்டார்கள். அப்போது தீக்ஷிதர் கூறிய பதில்:-

 

சிதம்பரமிதம்புரம் ப்ரதிதமேவ புண்யஸ்தலம் 

     ஸுதாச்சு விநயோஜ்வலா: ஸுக்ருதயச்ச காச்சித்க்ருதா: |

வயாம்ஸி மம ஸப்ததேருபரி நைவ போகே ஸ்ப்ருஹா

     கிஞ்சிதஹமர்த்தயே சிவபதம் தித்ருக்ஷே பரம் ||

“இந்த சிதம்பரஸ்தலமானது மிகவும் புண்யக்ஷேத்திரம் எனப் பிரஸித்தமானது. பிள்ளைகளான நீங்களோ மிக்க விநயசாலிகளாகப் பிரகாசிக்கிறீர்கள். ஏதோ சில நல்ல நூல்களையும் எழுதியுள்ளேன். எனது வயதும் எழுபதிற்கு மேலாகிவிட்டது.இனிமேல் எந்த விதமான ஸுகத்திலும் கொஞ்சமும் விருப்பமில்லையாகையால் நான் எதையும் அடைய விரும்பவில்லை. ஆனால் அந்தப் பரமசிவனுடைய மேலான பதம் ஒன்றை மட்டும் பார்க்க விரும்புகின்றேன்.” என்பது இந்த சுலோகத்தினால் நாமறியும் பொருளாகும். நூற்றிநான்கு கிரந்தங்கள் இயற்றிய அபரசங்கராசாரியரான ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் “ஏதோ சில நூல்கள் இயற்றினேன்” என்று கூறிய விநயத்தினை நேயர்கள் கவனிக்க வேண்டும்.

இம்மாதிரி கூறி முடித்த தீக்ஷிதேந்திரர் கண்ணுக்கு ஒரு அற்புதமான பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் மத்தியில் சித்சபேசனின் தூக்கியத்திருவடியைக் கண்டார். ஆனந்த பரவசத்தில் பின் வரும் சுலோகம் அவர் திருவாக்கினின்றும் வெளிவந்தது.

 

ஆபாதி ஹாடகஸபாநடபாதபத்ம-

     ஜ்யோதிர்மயோ மனஸிமே தருணாருணோ ( )யம் |

கனக ஸபையில் நடனம் செய்யும் நடராஜப் பெருமானின் திருவடித் தாமரையின் பேரொளியனது உதயசூரியன் போல என்மனதில் பிரகாசிக்கின்றது என்பது இந்த சுலோகத்தின் பொருளாகும். இந்த அரை சுலோகம் தீக்ஷிதரின் வாக்கினின்று வந்ததும், ஸ்ரீதீக்ஷிதேந்திரர் இந்தப் பிறவிக்கட்டினின்றும் விடுதலை அடைந்துவிட்டார். இதனை உணர்ந்த ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அந்தப் பாதி சுலோகத்தைப் பின் வருமாறு பூர்த்தி செய்தார்.

 

நூநம் ஜராமரண கோரபிசாசகீர்ணா

     ஸம்ஸாரமோஹரஜநீ விரதிம் ப்ரயாதா ||

 

ஸூரியோதயம் ஆகிவிட்டபடியால் பிறப்பு, இறப்பு, துன்பம், ஆகிய பிசாசுகளால் சூழப்பட்ட ஸம்ஸாரமாகிற இந்த இரவு நிச்சயமாக விடிந்துவிட்டது என்பது இந்த சுலோகத்தின் கருத்தாகும். இதையே கர்ணமந்திரமாகக் கொண்டு ஜபித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இம்மாதிரி இல்லத்தில் நிகழ்ந்த அதே சமயத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் சந்நிதியில் அன்று சைத்ரபூர்ணிமை காலை முதல் முஹூர்த்தத்தில் சித்ஸபேஸருடைய கற்பூரநீராஜன சமயத்தில் அங்கே ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரவர்கள் சந்நிதிக்குள் நுழைவதைப் பூஜை செய்யும் தீக்ஷிரர்கள் கண்டு அவருக்குத் தரிசனம் செய்து வைக்க கற்பூரம் முதலிய பொருள்களைச் சேகரித்துக்கொண்டிருக்கையில் தீக்ஷிதேந்திரர் பஞ்சாக்ஷரப் படிகளில் ஏறி சந்நிதியுள் சென்று போதநிலை முடிந்த வழி புக்கொன்றி உடனானார் என்றபடி ஸ்ரீநடராஜப் பெருமானுடன் இரண்டறக்கலந்தார். ஸர்வமங்கள ரூபியும், தாம் ஆராதித்து வந்ததுமான சித்ஸபேசருடைய அம்சாவதாரமுமான இந்த மஹான்  புநராவர்த்ததே புநராவர்த்ததே என்று உபநிடதங்களில் கூறியபடி மற்றீண்டு வாராநெறியாகிய சிவஸாயுஜ்யும் அடைந்த இப்பேரதிசயம் நகரெங்கும் பரவியது.
 

முடிவுரை

இங்ஙனம் ஸ்ரீநடராஜப் பெருமானின் குஞ்சிதசரணார விந்தத்தையடைந்த மஹாத்மாவான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரரின் பெருமை ஏட்டில் அடங்காதது. இந்த மஹான் பிறக்கவில்லையானால் சிவத்தின் பெருமையை உள்ளவாறு அறியாது இந்த உலகம் துன்பப்பட்டிருக்கும். சிவகிருபையால் தான் வாழ முடியும். சிவப்பிரஸாதம் மனிதனாய்ப் பிறந்தான். சிவபக்தி என்ற தனது கடமையைச் செய்யாவிடில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவான். பேரானந்தத்தை அடையும் அழிவற்ற பதத்தை உலகுக்குக் காட்ட அவதரித்தருளிய ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தமது கடைசிக்காலத்தில் பந்து மித்திரர்களுக்கு உபதேசித்ததாகக் கூறப்படுவது யாதெனில் இக்காலத்தில் யாகாதிகள் செய்து பரமசிவனைத் திருப்தி செய்வது இயலாத காரியம். அதற்கு வேண்டிய திரவியமும் வசதிகளும் கிடைப்பதரிது. அதற்காக நாம் சும்மா இருந்து விடவும் கூடாது. மிகச் சுலபமான காரியங்களாலேயே சிவபெருமானின் கிருபையைப் பெற்று விடலாம். மனம், வாக்கும் காயம் என்ற மூன்றையும் சுத்தமாக வைத்துக் கொண்டு மனதினால் தியானித்தும், வாக்கினால் ஸ்தோத்ரங்கள் செய்தும், சரீரத்தினால் வந்தனம், அர்ச்சனம், ஆலயதரிசனம் முதலியன செய்து கொண்டும் வருவோமேயானால் நமக்கு நல்லகதி கிடைப்பது நிச்சயம். எனவே அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்த இந்த மனிதப் பிறவியை வீணாக்காது ஈச்வரனைப் பூஜித்து இறைவன் அருளைப் பெறவேண்டும்.

இத்தகைய அரிய உபதேசங்களை மனதில் கொண்டு சிவபக்தி செய்து வாழ்வோம். தீக்ஷிதேந்திரர் சரிதம் இம்மட்டோ என்று எண்ணலாகாது. சிவநேசச் செல்வர்களுக்கு ஓரளவு விருந்தாக இது தரப்பட்டது என்று எண்ணி இச்சரிதத்தைப் படித்து, சிவபக்தியைப் பெற்று எல்லோரும் இன்புற்றிருக்க சிவபெருமான் அருள் பாலிக்கட்டும்.
 

ஸர்வதந்தர ஸ்வதந்த்ரர், அபரசங்கராசாரியர், ஸ்ரீகண்ட மதப் பிரதிஷ்டாபனாசாரியார், அத்வைத ஸ்தாபனாசாரியார்,, சதுரதிகசத பிரபந்த கர்த்தா, ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் திவ்ய சரித ஸங்க்ரஹம் ஸம்பூர்ணம்.

- சிவம் -


ஸ்ரீமத் தீக்ஷிதர் அருளிச் செய்த 104 கிரந்தங்கள்

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் வேதாந்த பரமாக 25 கிரந்தங்களும், சிவாத்வைத விஷயமாக 26 நூலகளும், மீமாம்ஸா சாஸ்திரம் பற்றி ஏழு நூல்களும், காவ்ய வியாக்யானம் ஒன்றும், வியாகரண வியாக்யானம் ஒன்றும், அலங்கார சாஸ்திரம் பற்றி மூன்று நூல்களும், ஸ்தோத்ர நூல்கள் 26-ம், மற்றும் பலவகைப்பட்ட நூல்கள் 15-ம் ஆக மொத்தம் 104 நூல்களை இயற்றியருளியுள்ளார். அதனாலேயே அவர் சதுரதிகசதப்ரபந்தகர்த்தா என்று வழங்கப்படுகிறார்.

- சிவம் -


(ப்ரம்மஸ்ரீ மஞ்சக்குடி K. ராஜகோபால சாஸ்திரிகள் எழுதியதைத் தழுவியது.)

 

 

Related Content