logo

|

Home >

devotees >

sivagnana-swamikal-history

சிவஞான சுவாமிகள் வரலாறு (Sivagnana swamigal history)

பாண்டிவள நாட்டிலே, பொதியமலைச் சாரலிலே, பாவநாசம் என்னும் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரத்திலே, அகத்திய மாமுனிவரிடத்தே எழுதலைமுறை அளவும் அருட்புலமை நிரம்பும் வண்ணம் வரம் பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளில் சிறந்தவரும் கல்வி செல்வம் என்னும் இரண்டும் ஒருங்குடையவரும் ஆகிய ஆனந்தக் கூத்தர் என்பவர் ஒருவர் இருந்தார்.Sivagyana Swamikal

அவர் மனைவியார் கற்பிலே தமக்கு உயர்வு ஒப்பில்லாத மயிலம்மையார் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர்.

அவரது திருவயிற்றிலே, ஏழாவது தலைமுறையாகத் தமிழ்நாடு செய்த தவத்தானே, ஒரு சற்புத்திரர் திருவவதாரம் செய்து முக்களாலிங்கர் என்னும் பிள்ளைத் திருநாமம் சாத்தப் பெற்று ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவார் ஆயினார்.

பின்பு முக்களாலிங்கர் ஐந்து பிராயத்திலே, பிதாவினாலே வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுப் பள்ளிக் கூடத்தில் அமர்ந்து கற்பாராயினார்.

அங்ஙனம் கற்கும் காலத்திலே, திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து சிவஸ்தலயாத்திரையாகப் புறப்பட்ட சில முனிவர்கள் விக்கிரமசிங்கபுரத்து வீதியிலே சென்றார்கள்.

பள்ளிக்கூடத்தினின்றும் வந்த முக்களாலிங்கர் அம்முனிவர்களைச் சந்தித்துத் தரிசித்து வணங்கி,"சுவாமிகாள்! அடியேன் வீட்டிற்கு எழுந்தருளித் திருவமுது செய்து, பின்பு சென்றருளல் வேண்டும்' என்று பிரார்த்திக்க, அம்முனிவர்கள் ஆண்டின் இளையரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் பிரார்த்தனைக்கு இரங்கி, விருப்பத்தோடு உடன்பட்டு அவருடன் அவரது வீட்டுக்குப் போயினர்.

அங்கே தமது புத்திரர் அருமைக் கருத்தை உணர்ந்து, அருந்ததியினும் சிறந்த மயிலம்மையார் அன்போது உபசரிக்கத் திருவமுது செய்து, அவரது கற்பின் திறத்தையும், சிவனடியார்க்குச் செய்யும் திருத்தொண்டின் திறத்தையும்
,
தெய்வம்தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை 

என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக நாயகனையே தெய்வம் எனக் கொண்டு ஒழுகும் நலத்தினையும் சிறப்பித்து,

அருந்ததிஎன் அம்மை அடியவர்கட்கு என்றும்
திருந்த அமுதளிக்கும் செல்வி -பொருந்தவே
ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செயும்
மானம் தவாத மயில் 

என்னும் செய்யுளை இயற்றிச் சென்றருளினார்கள்.

அதன்பின்பு புறத்தே போயிருந்த ஆனந்தக் கூத்தர் வீட்டிற்கு வந்த போது நிகழ்ந்த அரிய செயல்களைக் கேள்வியுற்றுப் பேரின்பக் கடலிலே முழுகினார்.

பின்னர் ஆனந்தக் கூத்தர் புத்திரராகிய முக்களா லிங்கரோடு ஆதீன முனிவர்களிடத்தே போய் வணங்கியவழிச் சத்திநிபாதம் உடைய புத்திரர் பிறவிப் பெருந்துன்பக் கடலினின்றும் கரையேறக் கருதி, அம்முனிவர்களோடு தாம் செல்ல வேண்டும் என்னும் குறிப்பினைத் தந்தையாருக்கு உணர்த்த, அவர் புத்திரரைப் பிரியச் சிறிதும் மனமில்லாது இருந்தும் ஒருவாறு இசைந்து அவரை அவர்களோடு விடுத்து வீட்டுக்குத் திரும்பினார்.

தந்தையார் நீங்கிய பின்பு, முக்களாலிங்கர் ஆதீனத்து முனிவர்களோடு வழிக்கொண்டு மார்க்கங்களில் உள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு, சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையை அடைந்து, மடாலயத்தின் உள்ளே புகுந்து, ஆதீன பரம முதற்குரவராகிய நமச்சிவாய மூர்த்திகளைத் தரிசித்துத் திருவருள் நோக்கம் பெற்றுக் கொண்டு, அப்பொழுது சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகிய பின்வேலப்ப தேசிகரை ஒடுக்கத்திலே போய்த் தரிசித்துப் பேரன்போடு வணங்கினார்.

வணங்கிய முக்களா லிங்கர் ஞானதேசிகரிடத்தே சைவ சந்நியாசமும் சிவதீட்சையும் சிவஞானயோகிகள் என்னும் தீட்சாநாமமும் பெற்று மெய்கண்ட சாத்திரம் பண்டாரசாத்திரங்களைக் கேட்டருளினார்.

சிவஞானயோகிகள் அகத்திய மகா முனிவர் வரத்தால் அவதரித்தருளியவர் ஆகலின், எளிதிலே வடமொழிக் கடலும், தென்மொழிக் கடலும் முற்று ஒருங்கு உணர்ந்து மெய்யுணர்வின் முற்றுப் பேறு உடையராய் அமர்ந்தருளினார்.

வேலப்ப தேசிகர் சிவஞானயோகிகளுக்கு மெய் உபதேசம் செய்தருளிய ஞானாசாரியர் என்பது,

எவ்வெவ  கோட்படு பொருளும் அஞ்செழுத்தின்
          அடக்கி அவற்றியல்பு காட்டி
மெய்வகை அஞ்சவத்தையினும் நிற்குமுறை
          ஓதுமுறை விளங்கத் தேற்றி
அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச்
          சிவபோகத்து அழுத்தி நாயேன்
செய்வினையும் கைக் கொண்ட வேலப்ப
          தேசிகன்தாள் சென்னி சேர்ப்பாம்

எனக் காஞ்சிபுராணத்துள் கூறியவாற்றால் இனிது விளங்கும்.

சிவஞானயோகிகள் ஜமதக்கினி முனிவருடைய புத்திரரும், அகத்திய மகா முனிவருடைய முதன்மாணாக்கரும், இடைச் சங்கப் புலவர் ஐம்பத்தொன்பதின்மருள் ஒருவருமாகிய திருணதூமாக்கினி என்னும் தொல்காப்பிய முனிவர் அருளிச் செய்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு உரையாசிரியராகிய இளம்பூரணர் செய்த உரையாகிய இளம்பூரணமும், சேனாவரையர் செய்த உரையாகிய சேனாவரையமும், நச்சினார்க்கினியர் செய்த உரையாகிய நச்சினார்க்கினியமும் எனப்படும் மூன்று உரைகளினும் உள்ள ஆசங்கைகளை நீக்கித் தெளிவிக்கும் பொருட்டு அத்தொல்காப்பியத்தின் பாயிரத்திற்கும், முதற்சூத்திரத்திற்கும் சூத்திரவிருத்தி எனப் பெயரிய பாடியமும், வடமொழித் தருக்க சங்கிரக அன்னம்பட்டீயங்களின் மொழிபெயர்ப்பும், நன்னூலுக்குச் சங்கரநமச்சிவாயப் புலவர் செய்த புத்துரையாகிய விருத்தியுரைத் திருத்தமும் செய்தருளினார்.

இவை மூன்றும் திராவிட மாபாடியத்திற்கு அங்கங்கள் எனப்படும்.

பின்பு சர்வாத்ம சம்பு சிவாசாரியர் அருளிச் செய்த கத்திய ரூப சித்தாந்தப் பிரகாசிகையின் மொழிபெயர்ப்பும், மெய்கண்ட தேவர் மொழிபெயர்த்து அருளிய சிவஞானபோதத்திற்கு ஆசிரியர் அமைத்தருளிய மெய்ப்பொருள் விளங்கும் வண்ணம் திராவிட மகாபாடியம் எனப் பெயரிய விருத்தி உரையும், இலகு வியாக்கியானமாகிய சிற்றுரையும், அருணந்தி சிவாசாரியர் அருளிச் செய்த சிவஞான சித்தியார் சுபக்கத்திற்குப் பொழிப்புரையும், காஞ்சிப் புராணத்தின் முதற்காண்ட மொழிபெயர்ப்பும், சிவாக்கிய சோழமகாராஜா காலத்திலே கஞ்சனூரிலே அவதரித்து அருளிய ஆசாரியசரணராகிய அரதத்த சிவாசாரியர் வைணவ மதத்தை நிராகரித்துச் சைவ மத ஸ்தாபனம் செய்யும் பொருட்டு நெருப்பிலே பழுக்கக் காய்ச்சிய இருப்பு முக்காலியிலே எழுந்தருளியிருந்து சிவபெருமானே பரம்பொருள் என இருபத்திரண்டு ஏதுக்களாலே நாட்டியருளிய சுலோக பஞ்சகத்தின் மொழிபெயர்ப்பும், அப்பய தீட்சிதர் அருளிச் செய்த சிவதத்துவ விவேக மூல சுலோகங்களின் மொழிபெயர்ப்பும் செய்தருளினார்.

பின்பு பெரும்பாலும் உண்மை நாயன்மார் சரிதம் முதலியவற்றைத் தழுவி பூருவார்த்தமும் அதற்கு எடுத்துக் காட்டாகத் திருவள்ளுவ நாயனார் திருக்குறள் உத்தர அர்த்தமும் ஆகக் கொண்டு சோமேசர் மீது முதுமொழி வெண்பா, யமக ரூபமான திருவேகம்பர் அந்தாதி, திருக்குரூபமான திருமுல்லைவாயில் அந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப் பத்து அந்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்து அந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்து அந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செப்பறைப் பதி அகிலாண்டேசுவரி பதிகம், மார்கழித் திருவாதிரை உற்சவத்திலே தேவாரம் முதலிய அருட்பாக்கள் ஐந்தும் திருக்காப்பிடப்பட்டுத் திருவெம்பாவை என்னும் திருவாசகத் திருப்பதிகம் ஒன்றுமே ஆன்மார்த்த பரார்த்த சிவபூஜா காலங்களில் ஓதப் பெற்று வரும் சம்பிரதாயத்தால் நித்த நியம மந்திரமாகத் திருத்தொண்டர் திருநாமத்தை ஓதி உய்ய வேண்டுவோர் கருத்துத் தடையுறா வண்ணம் திருத்தொண்டர் திருநாமக் கோவை, ஆதி பரமாசாரியராகிய நமச்சிவாய மூர்த்திகள் மீது மாலை முதலிய பிரபந்தங்களைச் செய்தருளினார்.

 

பின்பு மரபு அட்டவணை எனப் பெயர் பெற்ற திருவாவடுதுறை ஆதீன சம்பிரதாயக் கட்டளையைத் தருமபுர ஆதீனத்தார் மறுத்து எழுதியதற்கு "மறுப்பின் மறுப்பு' என ஓர் கண்டனமும், காஞ்சீபுரத்தில் யாத்திரையாக வந்தருளிய திருவண்ணாமலை ஆதீனத்துப் பண்டார சந்நிதிகள் சிவஞான சித்தியாரில் "என்னை இப்பவத்தில் சேரா வகை எடுத்து' என்னும் செய்யுளில் "எடுத்து' என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை? என்று தம்மாதீனத்து ஞானப் பிரகாச முனிவர் இயற்றிய சிவசமவாத உரையின் உயர்வு தொனிக்கும் வண்ணம், சிவஞானயோகிகளிடத்தே வினாவுவித்த பொழுது," எடுத்து" என்னும் சொல்லுக்கு "சிவசமவாத உரை மறுப்பு' என ஓர் கண்டனமும், அதன்மேற் பிரதி கண்டனம் உண்டாய வழி மேன்மறுத்த மறுப்பு, குதர்க்க உரையாளரால் போழப்படாதவாறு, "எடுத்து என்னும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம்' என ஓர் கண்டனமும், சிவஞான சித்தியாருக்கு ஞானப் பிரகாச முனிவர் இயற்றிய உரை முற்றும் போலியுரை என விளக்கச் "சிவசமவாத உரை மறுப்பு' என ஓர் கண்டனமும் செய்தருளினார்.

பின்பு கம்பராமாயண காவியம் ஒன்றுமே தமிழில் சிறந்திருப்பது எனச் செருக்கோடு கூறிய காஞ்சீபுரத்து வைணவர்கள் வாயை அடைக்கக் கருதி அக்கம்ப ராமாயணத்து நாந்திச் செய்யுளாகிய "நாடிய பொருள் கைகூடும்' என்னும் பாட்டு முற்றும் குற்றமே எனச் சங்கை செய்தவழி, அவ்வைணவர்கள் அச்சங்கைக்கு உத்தரம் சொல்ல இயலாமல் வருந்தித் தெரியாது பிதற்றினோம் எனச் சொல்லி வணங்கித் துதித்தவழி, சிவஞானயோகிகள் மகிழ்ந்து உத்தரம் கூறி, அவ்வைணவர்களை உவப்பித்து அருளினார்.

அச்சங்கை உத்தரங்களை வரைந்த நூலுக்கு "கம்ப ராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி' என்று பெயர் வழங்கி வருகின்றது.

பின்பு திருவாரூர் வைத்தியநாத நாவலர் இயற்றிய இலக்கண விளக்கத்தில், எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் முதலியவற்றில் உள்ள வழுக்களை வெளியிடக் கருதி இலக்கண விளக்கச் சூறாவளி என ஒன்று செய்தருளினார்.

பின்பு சிவஞான சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனார் கடலினின்றும் கரையேறிய திருப்பாதிரிப்புலியூரில் யாத்திரையாக எழுந்தருளியிருக்கும் காலத்திலே சிவாலயத்தின் கண்ணே, சில வித்துவான்களும் பிரபுக்களும் கூடிய சபையில் ஒரு பிரபு, நூறு பொன்னைக் கிழியாகக் கட்டி வைத்து, "கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியும் ஓர் கதி உண்டாமோ' என்று ஈற்றடி எடுத்துக் கொடுத்துச் "செய்யுளைப் பூர்த்தி செய்பவர் இப்பொற்கிழியை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொன்னார்.

அந்நிகழ்ச்சியைச் சுவாமி தரிசனத்தின் பொருட்டுச் சிவாலயத்துக்கு எழுந்தருளிய சுவாமிகள் அறிந்து, ஒரு ஏழைப் பிராமணனை நோக்கி அப்பொற்கிழியை எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிட்டு,

வரையேற விட்டமுதம் சேந்தனிட அருந்தினைவல் லினம் என்றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ எனைச் சித்தென்று உரைக்கில் என்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுநறும் புலிசை மேவும்
கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண் டாமோ

என்று செய்யுளைப் பூர்த்தி செய்தருளினார்.

இங்ஙனம் உலகோபகாரமாகப் பலவுரைகளையும் பல நூல்களையும் பல கண்டனங்களையும் செய்து பல நன் மாணாக்கர்களுக்குப் போதித்து, வடமொழியினும் தென்மொழி சிறந்தது என்னும்படி அபிவிருத்தி செய்து, தவமே திருவுருக் கொண்டாற்போல விளங்கிச் சிவப் பேற்றிற்குக் காரணமாகிய நிட்டையில் வீற்றிருந்தருளிய திராவிட மகாபாடிய கர்த்தராகிய சிவஞானயோகிகள் திருவாவடுதுறையிலே சித்திரை மாசத்து ஆயிலிய நட்சத்திரத்திலே சிவபரிபூரணதசையை அடைந்தனர்.

சிவஞான சுவாமிகள் திருநட்சத்திரம்:
மன்னும் விசுவா வசுவருடம் மேடமதி
உன்னிரவி நாட்பகல்ஓது ஆயிலியம் - பன்னும்
திருவாளன் எங்கோன் சிவஞான தேவன்
திருமேனி நீங்கு தினம். 

இவ்வரலாறு சுவாமிநாத பண்டிதர் இயற்றியது 

Related Content

சிவஞானசுவாமிகள் தோத்திரத்திரட்டு பண்ணிசை

Sivagnanamapadiyam 7th Suthiram - Anandarasan