சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச் சாக்கியரோ டியைந்தவர்தந் தவறுஞ் சைவத் துங்கமலி பொருளுமுணர்ந்து அந்த வேடம் துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோர் அங்கல் மலர் திருமேனி அழுந்தச் சாத்தி அமருநாள் மறந்தொருநாள் அருந்தா தோடிச் செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன் திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.
திருச்சங்கமங்கையிலே, வேளாளர் குலத்திலே உதித்த ஒருவர் சனனமரணத் துன்பங்களை நினைந்து நினைந்து கவலை கொண்டு அவைகளினின்று நீங்கு நெறி யாது என்று ஆராய்வாராயினார். அந்நாளிலே காஞ்சீபுரத்தை அடைந்து, பெளத்தர்களை அணுகி, அவர்கள் அநுட்டிக்கும் பெளத்த சமயத்திலே பிரவேசித்து, அச்சமய நூல்களை ஓதி, அவற்றின் பொருள்களை ஆராய்ந்தார். ஆராய்ந்தபொழுது, அச்சமயம் சற்சமயன்றென்பது அவருக்குத் தெள்ளிதிற் புலப்பட்டது அதுபோல மற்றைச் சமயநூல்களையும் ஆராய்ந்து அவைகளும் மெய்யல்லவெனத் தெளிந்து, பரமசிவனது திருவருள்கூடுதலால், அறிவிக்க அறியும்சித்தாகிய ஆன்மாக்களும் அவ்வான்மாக்களினாலே செய்யப்படுஞ்சடமாகிய புண்ணியம் பாவம் என்னும் கர்மங்களும் அக்கர்மங்களாலே பெறப்படுஞ் சுகம் துக்கம் என்னும் பலங்களும் அப்பலங்களைக் கொடுக்கின்ற தானே அறியுஞ் சித்தாகிய பதியும் எனப் பொருள்கள் நான்கு என்றும், அவைகளைப் பூர்வோத்தர விரோதமின்றி யதார்த்தமாக உணர்ந்தும் நூல் சைவ சமய நூலே என்றும், அந்நூல் உணர்த்தும் பதி பரமசிவனே என்றும் அறிந்துகொண்டார். எந்த நிலையிலே நின்றாலும் எந்த வேஷத்தை எடுத்தாலும் பரமசிவனுடைய திருவடிகளை மறவாமையே பொருள் என்று கருதி, தாம் எடுத்த பெளத்த வேஷத்தை துறவாமல், பரமசிவனை மிகுந்த அன்பினோடு இடைவிடாது தியானஞ்செய்வாராயினார்.
சிவசாதாக்கியம், அமுர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கர்மசாதாக்கியம், என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து, தினந்தோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து கொண்டே போசனம்பண்ணல் வேண்டும் என்று விரும்பி, சமீபத்தில் ஓர் வெள்ளிடையிலிருக்கின்ற சிவலிங்கத்தைத் தரிசித்து, பேரானந்தம் உள்ளவராகி, தாஞ்செய்யுஞ் செயல் இதுவென அறியாது, அருகிலே கிடந்த ஒரு செங்கல்லைக் கண்டு, அதைப் பதைப்பினுடனே எடுத்து, அச்சிவலிங்கத்தின்மேல் எறிந்தார். சிறுபிள்ளைகள் செய்யும் இகழ்வாகிய செய்கைகளும் தந்தையர்களுக்குப் பிரீதியாமாறுபோல, அந்தச்சாக்ய நாயனாருடைய செய்கையும் பரமசிவனுக்குப் பிரீதியாயிற்று. அந்நாயனார் அன்று போய் மற்றை நாள் அந்நியமத்தை, முடித்தற்கு அணைந்த பொழுது, முதனாளிலே தாஞ்சிவலிங்கத்தின்மேற் கல்லெறிந்த குறிப்பை நின்று ஆலோசித்து, "நேற்று எனக்கு இவ்வெண்ணம் வந்தது பரமசிவனது திருவருளே" என்று துணிந்து, அதனையே திருத்தொண்டாக நினைத்து, எப்பொழுதும் அப்படியே செய்யக்கருதினார். எல்லாச் செயல்களும் சிவன் செயல் என்றே தெளிந்தமையால் அந்நியதியைத் தினந்தோறும் வழுவாமல் அன்பினுடன் செய்ய; அது ஆன்மாக்கடோறும் வியாபித்திருந்து எல்லாவற்றையும் உணருஞ் சிவபெருமானுக்கு மிகச் சிறந்த திருத்தொண்டாகி முடிந்தது. ஒருநாள் அந்நாயனார் திருவருளினாலே மறந்து போசனஞ்செய்யப் புகும்பொழுது, இன்றைக்கு எம்பெருமானை அறியாமல் மறந்துவிட்டேன்" என்று எழுந்து, அத்தியந்த ஆசையுடன் மிகவிரைந்து புறப்பட்டு, சிவலிங்கத்தை அணைந்து, ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிய; பத்திவலையிற்படுவாராகிய பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றி, அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.
ஒவ்வோர் மனிதனுந் தான் உலக நன்மைக்காகவே வாழ்வதாகச் சொல்லிக்கொள்வதிற் புதுமையேதுமில்லை. அவன் அதற்காகத் தான் வாழ்கிறதற்கு உத்தரவாதம் அளிக்கும் மனிதநேயப் பண்பு அவனிடத்தில் உரிய அளவுக்கு இருக்கக் காண்டலில் மட்டும் புதுமையுண்டு. அதுபோல் சமயம் ஒவ்வொன்றும் தான் ஆன்ம விமோசனத்திற்காகவே நிற்பதாகச் சொல்லிக் கொள்வதில் அல்ல அதற்கு உத்தரவாதமளிக்கும் தரவுகள் அதில் இருக்கக் காண்டலில் மட்டும் புதுமையுலதாம். ஒரு சமயம் உலகமேயுண்டு கடவுள் இல்லை என்னும், மற்றொன்று கடவுளே உண்டு உலகம் இல்லை என்னும். இன்னொன்று வினையுண்டு அதைச் செய்வோனுமில்லை செய்விப்போனுமில்லை என்னும். பிறிதொன்று வினையுண்டு செய்வோனுமுண்டு செய்விப்போன் இல்லை என்னும். இப்படிச் சமயங்கள் பலவற்றில் உலகு, உயிர், கடவுள், வினை ஆகியவற்றின் பேரில் முரண்பாடானவையும் நிரம் பாதவையுமான கருத்துக்கள் இருத்தலால் ஆன்ம விமோசனத்துக்கு யதார்த்தமான உத்தரவாதம் அணிக்குந் தரவுகளைப் பூரணமாகக் கொண்ட சமயம் யாதாயிருக்கும் எனக் காண்பது கஷ்ட சாத்தியமாயினும் அது, பின்வருமாற்றால் ஓரளவில் இலகுவிற் கைகூடும் உபாயமுமொன்றிருத்தல் குறிப்பிடத்தகும். விமோசனம் எனவே எதற்கு விமோசனம்? எதிலிருந்து விமோசனம்? எதற்காக விமோசனம்? என்ற விசாரம் இயல்பாகவே எழற்பாலதாம். மற்றும் விஷயங்கள் போல எதிர்நிறுத்திக் காணப்படாதாயினும் ஒவ்வொரு கணமும், "நான் உளேன்" என்பதோர் பிரக்ஞை நிகழச்செய்து கொண்டு நம்மிடத்தில் உள்ள தொன்றுண்டு; அது சதா இன்பதுன்ப மயக்கங்களாற் கட்டுண்டிருக்கிறது; இவற்றிலிருந்து நீங்க வேண்டும் என்ற எண்ணம் இன்புறும் வேளையில் இல்லாவிடினும் துன்புறும் வேளையிலும் மயக்கமுறும் வேளையிலும் தற்காலிகமாக அதற்கு இருந்தே தீர்கிறது. என்றிங்ஙனம் நாளாந்த அநுபவத்தை மறித்துணர்வதன் மூலமும், இதைத் தொடர்ந்து மேலெழக் கூடும், இன்பதுன்ப மயக்கம் என்பது என்ன? அது வந்ததெங்ஙனம்? அதிற் கட்டுண்ணவேண்டி யேற்பட்டதேன்? இவற்றிலிருந்து அறுதியாக விடுபடும் மார்க்கமுண்டா? அது எவ்வகையிற் கைகூடும்? என்ற விசாரங்களை யிட்டுச் சுருதி யுக்தி அநுபவங்களுக்கிணங்க ஆராய்தல் மூலமும் உயிர், வினை, கடவுள், பந்தம், மோக்ஷம் என்றிங்ஙனம் யதார்த்த ரீதியில் ஆன்ம விமோசனத்துக்கு உத்தரவாதமளிக்குந் தரவுகளைப் பெற்று அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுஞ் சமயம் எதுவெனக் கண்டறிதலே மேற்குறித்த உபாயமாகும்.
ஒருகாலத்திற் சமயவாதப் பிரதிவாதங்களுக்குப் பிரசித்த நிலையமாயிருந்த காஞ்சீபுரத்தைச் சென்றடைந்து ஞான விசாரணை மேற்கொண்டிருந்த சாக்கியநாயனார் அன்று அங்கு மேல்நிலையதாகக் கருதப்பட்ட பௌத்தத்திற் சேர்ந்திருந்து கொண்டு அதுவும் அதன் சம்பந்தியாகிய சமணமும் மற்றுமுள்ள பிரமவாத தத்துவங்களும் ஆன்ம விமோசனம் பற்றிக் கூறுந் தரவுகளிலும் அவற்றின் பொருந்துமாற்றிலும் திருப்தி காணாது, தாமே தம்மளவில் மேற்கண்ட வகையில் நெடுநாளாகச் சிந்தித்துப் பெற்ற தெளிவின் அடிப்படையில், வினை, வினைப்பயன், வினைசெய்வோன், வினைப்பலனைச் சேர்ப்போன் என்ற நால்வேறு தரவுகளும் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்படாவிடத்து ஞான விசாரணை கடை போக மாட்டாது எனக் கண்டுகொண்டார். அதன்மேல், சகல சமயங்களுள்ளும் எதன்பால் இந்நான்கும் ஐய விபரீதங்களுக்கிடமில்லாமற் செம்பாகமாக இடம் பெற்றுள்ளன எனக்காணும் ஆய்வில் இறங்கி அதன் பேறாக, அது சைவ சமயத்திலேயே எனும் முடிவுக்கு வந்தார். அது அவர் புராணத்தில், "செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவ நெறியல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே உணர்ந்திருந்தார்" என வரும்.
திருவருள் கைகூட்டுதலால் உண்மைச் சமயமாகிய சைவம் பிரதிபாதிக்கும் சிவனே மெய்ப்பொருளெனத் தெரிந்து கொண்ட நாயனார் பூர்வத்தில் தமக்கு விட்ட குறையாயிருந்து தற்போது முழுமையாக வாய்க்கும் தியான ஒருக்கத்தினாலே, தம்மில் விளங்குஞ் சிவனோடு "ஏகனாய் நின்றே இணையடிகள் தாமுணரும்" உயர்பெருஞ் சைவாநுபவநிலை எய்தப்பெற்றுவிட்டபோதும். அந்நிலையிற் சிவத்தின் அகண்டவியாகபத் திறந்தமக்கு விளங்கும் விசேடத்தினாலே எந்தச் சமயத்தினிருப்பும் எந்த வேடத்தினமைப்பும் சிவனருள் வியாகபத்திற்கப்பாலில்லை எனுந் துணிவினராய், வேடமன்று; சிவன் தாளிற் பொருந்தும் அயரா அன்பே பொருள் எனக் கொண்டு பௌத்த வேடமே பின்னுந் தம் வேடமாக உலாவுவாராயினர். அது, சேச்சிழார் வாக்கில், "எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன்றாள் மறவாமை பொருளென்றே துன்னிய வேடந்தன்னைத் துறவாதே தூயசிவந் தன்னை மிகுமன்பினால் மறவாமை தலைநிற்பார்." எனவரும்.
"விரிந்தனை குவிந்தனை விளங்குயி ருமிழ்ந்தனை" எனத் திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரத்தில் வருவதற்கொப்ப, சிவவியாபகம் விபுவாய்ப் பொருந்தி எங்கும் பரந்து குவிந்திருக்கும் நிலையை, சிவன் தானே, உள்ளத்தைக் கோயிலாக்கிக் கொண்டிருக்கும் உத்தமர்களிடத்திற் பதித்துவைக்கும் ஒருவித அருட்குறியே சிவலிங்கமாம். அது, "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானுக்குவாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளாமணி விளக்கே" எனத் திருமந்திரத்திலும் "சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி" என விநாயகரகவலிலும் வருவன கொண்டறியப்படும். நிலத்திற் காணும் முளையொன்று, கட்புலப்படாது நிலத்துள் மறைந்திருக்கும் அதன் முன் நிலையாகிய விதையையும், கட்புலப்பட உருத்துவரும் அதன்பின் நிலையாகிய செடியையும் உணரக் காரணமாயிருத்தல் போன்று அருட்குறியாகிய இச்சிவலிங்கமானது, சிவத்தின் மற்றிரு நிலைகளாக, கட்புலப்படா அருவும், கட்புலப்படும் உருவும் எனவுள்ள அவ்விரு நிலைகளையும் உணரக் காரணமாய் நிற்றலின் அருவுருவம் எனவும் பெயர்பெறும். இங்ஙனம் சிவத்துக்குத் திருமேனி மூன்றுளதாதல், "அருவும் உருவும் அறிஞர்க்கறிவாம் உருவும் உடையானுளன்" எனும் திருவருட் பயன் கொண்டும் "உருமேனி தரித்துக்கொண்ட தென்றலும் உருவிறந்த அருமேனியதுவுங் கண்டோம் அருவுருவான போது திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவுகாணே" எனும் சிவஞானசித்தியார் கொண்டும் அறியப்படும். இம்மூன்றனுள் நடுநிலையதாகிய சிவலிங்கத் திருமேனியைப் பூசித்தல் மூலம் அதுவே யிடமாகச் சிவபரம் பொருள் தனது உருவத் திருமேனி காட்டி அன்பர்களை ஆட் கொண்டருளிய வரலாறுகள், மார்க்கண்டேயர் வரலாறு போல்வனவாகப் பலவுண்மையானும் ஞான விளக்கங் கைவந்து அந்தரங்கத்தில் அருவத்திருமேனி தரிசனம் பெறுதற்கும் அருவுருவாகிய இச்சிவலிங்கத் திருமேனி வழிபாடே சாதனமாதலாலும் மூவகைத் திருமேனிகளுள்ளும் இத்திருமேனியே வழிபாட்டுக்கும் உபாசனைக்குஞ் சிறந்ததாயிற்றென்பர். ஆதியிற் சிதம்பரத்தில் வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் நடராஜத் திருமேனி தரிசிக்கப்பெற்றது அங்குள்ள மூலட்டானேஸ்வரரான சிவலிங்கத் திருமேனியைப் பூசித்ததன் பெறுபேறாதல் அறியப்படும். இந்தச் சாக்கியநாயனார்க்கும் சிவன் உருவத் திருமேனி காட்டி யாட்கொண்டது அவர் கல்லிட்டுப் பூசித்த சிவலிங்கத்தி னிடமாகவேயாம். அது அவர் புராணத்தில், கொண்டதொரு கல்லெடுத்துக் குறிகூடும் வகைஎறிய உண்டிவினை ஒழித்தஞ்சி ஓடிவரும் வேட்கையொடும் கண்டருளுங் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் தொண்டரெதிர் நெடுவிசும்பில் துணைவியொடும் தோன்றினார்" என வரும். அன்றியும், பிரமவிஷ்ணுக்கள் சிவனது அடியும் முடியுந் தேடியலுத்த நிலையில் சிவன் அவர்களுக்கு உண்மையுணர்த்துமாறு இலிங்கத் திருமேனியை முதலில் தோற்றி அவர்கள் அதைப்பூசிக்கவைத்துப் பின் அஃதிடமாகத் தமது உருவத்திருமேனியைத் தரிசிப்பித்தவாறும் அறியத்தகும். அது கந்தபுராணத்தில், "இருவருமச் சிவனுருவை இயன்முறையால் தாபித்து விரைமலர் மஞ்சனஞ் சாந்தம் விளக்கழல் ஆதிய அமைத்துப் பொருவரு பூசனை புரிந்து போற்றி செய்து வணங்குதலும் எரிகெழு சோதிக்கணித்தாய் எந்தைய வண் வந்தனனே" - "மைக்களமும் மான்மழுவும் வரத முடனபயமுறும் மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ் செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய் முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள் புரிந்தான்" எனவும் தேவாரத்தில், "செங்கண்மாலும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற்றேனென் றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே" எனவும் வருவனவற்றாற் காண்க.
சிவமே மெய்ப்பொருளெனெ அருளால் உணர்ந்து சிவ உபாசனையிலேயே லயித்திருந்த சாக்கிய நாயனார்க்குச் சிவம் தன் அருட்குறியாகிய இலிங்கத்திருமேனியை அவரகத்திற் பதித்தமையால் அதன்சார்பில் மேற்கண்டவாறான சிவலிங்க உண்மை மகிமைகளைத் தம்மிற் றாமே உணரலானார். உணருந்தோறும் தம்மகமெல்லாம் பூரித்தினிமை செய்யும் அதனைத் தம் புறக்கண்ணாற் கண்டும் மகிழவேண்டும் ஆர்வம் மேலிடவே தினமும் உண்பதன்முன் சிவலிங்க தரிசனஞ் செய்யும் நியமந் தலைக்கொள்ளலானார். அது, அவர் புராணத்தில், "காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாஞ் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச் சேணாருந் தழற்பிழம்பாய் நின்றநிலை தெளிந்தாராய்" - "நாடோறுஞ் சிவலிங்கங்கண்டுண்ணு மதுநயந்து மாடோர் வெள்ளிடை மன்னுஞ் சிவலிங்கங் கண்டுமனம் நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கற் கண்டதனைப் பதைப்போடு மெடுத்தெறிந்தார்" எனவரும்.
புறத்தில் நிகழும் சிவலிங்க தரிசனமும் பூசை வழிபாடும் இனிது நிறைவுற்று உரிய பலன் விளைத்தற்கு அகத்தில் நிகழுஞ் சிவலிங்கக் காட்சியும் அகப்பூசையும் முன்னோடி நியமமாதல், "தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாகப் பூஅழியா மற்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே உடல்" என்னுந் திருக்களிற்றுப்படியார்ச் செய்யுள் தருங் குறிப்பினாலும் "நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லாற் கனைகழல் ஈசனைக் காண வரிதாங் கனைகழல் ஈசனைக்காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல்லாரே" - "வெள்ளக்கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்குவார் சுமைபூக்கொண்டு கள்ளக்கடல் விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே" எனுந் திருமந்திர விளக்கத்தினாலும் "ஐந்து சுத்திசெய் தகம்புற மிறைஞ்சி அங்கியின் கடன்கழித் தருள்வழி நின்றிந்த நற்பெருங்கிரியை இயற்ற வல்லவரெம்மருங்கிருப்பார்" எனும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுட் கருத்தானும் புலனாம்.
தாம் மேற்கொண்ட நியமப்படியே ஓர் வெளியிற் சிவலிங்க மொன்றிருக்கக் கண்டு கொண்டதுமே நாயனார் உள்ளத்துவகை கொள்ளுமளவின்றிப் பெருகுதலும் அம்மகிழ்ச்சிப் பரவசநிலையில் செய்வதின்னதென் றறியாமலே அயலிற்கண்ட ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அதுவே அன்றைய சிவலிங்க தர்சனமும் அப்போதைய அவர் பரவசநிலைக்கியலும் அர்ச்சனையு மாயிற்று. குழந்தையை அன்புசெய்து இரசிப்பார் அதன் சார்பில் நிகழ்த்தும் மெதுவாக அடித்தல், கிள்ளுதல், மெத்தெனவாக நெருடுதல் முதலான வன் செயல்களும் குழந்தைக்கு மகிழ்ச்சியை மிகுவிப்பது போல இந்த நாயனார் எறிந்த கல்லெறியுஞ் சிவனுக்கு மகிழ்ச்சி விளைக்குஞ் சாதனமாயிற்றெனல் சேக்கிழார் நாயனார் செய்யுளால் தெரியவரும். தம்மறிவிற் படாமல் அகஸ்மாத்தாக அச்செயல் நிகழ்ந்ததெங்ஙனம் என்ற விசாரம் மறுநாள் எழுந்தபோது, "அது சிவனருளே" என நாயனார் ஞான உணர்விற்பட்டதால் தொடர்ந்தும் அதுவே அவர்க்கு வழிபாட்டு விதியுமாயிற்று. சில நாளில் நாயனாருடைய அச்செயலேயிடமாகக் கொண்டு அதேசிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் துணைவியோடுந் தோன்றி அவர் சிவலோகத்திற் பழவடியார் குழுவில் இருந்தின்புறும் பேரின்ப நிலையையும் அவர்க்கருளியுள்ளார். எனில், இது சமயாசார நெறிவழக்கிலும் வாராது; ஞானாசாரநெறி வழக்கிலும் வாராது. தம் செருப்புக்காலைச் சிவன் முடியிலூன்றிய கண்ணப்பர் தவிர இவரொருவரல்லது கல்லெறிதல் போன்ற வன் செயலாற் சிவனை மகிழ்வித்து அதுவே நெறியாக ஆன்ம விமோசனம் பெற்ற மற்றொருவரைச் சைவ பாரம்பரியம் அறிந்ததில்லை. ஆகவே இது மற்றெல்லா நெறிவழக்குகளுக்கும் அதீதமான அன்பு நெறிவழக்கென்பதல்லது வேறு கூறுதற் கில்லையாகும். அது சேக்கிழார் திருவாக்கில், "இந்நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய முன்னு திருத்தொண்டாகி முடிந்தநிலைதான் மொழியில் துன்னிய மெய்யன்புடனே தொடர்ந்தவினை தூயவர்க்கு மன்னுமிகு பூசனையாம் அன்பு நெறிவழக்கினால்" என வந்திருக்கக் காணலாம்.
மெய்யன்பின் தனித்துவ விலாசம் இத்தகைத்தாதல் அறிந்து கடைப்பிடிக்கத்தகும்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. சாக்கிய நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. chAkkiya nAyanAr purANam in English prose
3. Saakkiya Nayanar Puranam in English Poetry