திருஞானசம்பந்தர் தேவாரம்
மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே. 3.39.01
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 3.120.1
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 3.120.3
செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.5
முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.7
மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 3.120.9
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே. 3.120.11
சுந்தரர் தேவாரம்
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 7.39.11
பதினோறாம் திருமுறை
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. 11.79-நம்பி
See Also: 1. Life history of mangaiyarkkaraciyAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais