காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.6
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 2.23.05
நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. 2.63.7
மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. 2.120.03
வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. 2.120.06
மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே. 3. 018.2
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 3.018.4
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 3.018.6
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே. 3.019.1
மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 3.019.2
சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே. 3.019.5
வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 3.019.9
கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. 3.050.9
திருநாவுக்கரசர் தேவாரம்
புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே. 4.70.2
சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.4
நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. 4.62.9
அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே. 4.65.3
உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.20.5
சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 6.23.3
ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. 6.65.6
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.8
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 6.75.8
புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்
பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.6
சுந்தரர் தேவாரம்
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 7.39.11
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 7.55.4
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. 7.65.1
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 7.66.2
கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே. 7.98.10
கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு வார்பர லோகத்துள்ளே. 7.98.11
அலந்து போயினேன் அம்பலக்
கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
காலனை உயிர்செக வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
மேலொற்ற வந்தருள் செய்யாயே. 9.23.3
பதினோறாம் திருமுறை
சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும் 11. கோபப்பிரசாதம்
திருத்தொண்டர் திருவந்தாதி
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற்கு ஒளிவிளக்கு ஏற்றற்கு உடல் இலனாய்க்
கும்பத் தயிலம் விற்றும் செக்குழன்றும் கொள் கூலியினால்
நம்பற்கு எரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே 11.54
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. 11.34-நம்பி
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. 11.81-நம்பி
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. 11.82-நம்பி
Other references
இருக்கிலங்கு திருமொழிவார் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறை யூர்மணி மாடம் சேர்மின்களே. 6-6-8
See also: History of kOchenggat chOzha nAyanAr Along with the list of temples built by Sengannar.
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais