சுந்தரர் தேவாரம்
திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. 7.38.9
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.4
பதினோறாம் திருமுறை
‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. 11.28-நம்பி
See Also: 1. Life history of kAraikkAl ammaiyAr