திருஞானசம்பந்தர் தேவாரம்
செடிநுகருஞ் சமணர்களுஞ்
சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே. 01.061.10
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
விளையாடும் பெருமானே 03.063.1
பொன்னம்பூங் கழிக்கானற்
புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள்
அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன்
கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ்
எனதல்லல் உரையீரே. 03.063.2
குட்டத்துங் குழிக்கரையுங்
குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும்
இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென்
வருத்தஞ்சென் றுரையாயே. 03.063.3
கானருகும் வயலருகுங்
கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலில்
இரைதேர்வெண் மடநாராய்
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென்
வருத்தஞ்சென் றுரையாயே. 03.063.4
ஆரலாஞ் சுறவமேய்ந்
தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே
பயில்தூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென்
நிலைமைசென் றுரையீரே. 03.063.5
குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்
கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே
துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னி
கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர்
அருளொருநாள் பெறலாமே. 03.063.6
கருவடிய பசுங்கால்வெண்
குருகேயொண் கழிநாராய்
ஒருவடியாள் இரந்தாளென்
றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே
பெறலாமோ திறத்தவர்க்கே. 03.063.7
கூராரல் இரைதேர்ந்து
குளமுலவி வயல்வாழுந்
தாராவே மடநாராய்
தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன்
அருளொருநாள் பெறலாமே. 03.063.8
நறப்பொலிபூங் கழிக்கானல்
நவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென்
அலர்கோடல் அழகியதே
சிறப்புலவன் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்
றிழக்கோவெம் பெருநலமே. 03.063.9
செந்தண்பூம் புனல்பரந்த
செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன்
சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி
அடிகளையே அடிபரவுஞ்
சந்தங்கொள் சம்பந்தன்
தமிழுரைப்போர் தக்கோரே. 03.063.11
சுந்தரர் தேவாரம்
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.6
பதினோறாம் திருமுறை
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி 11.27.40
…….
நிலவு முருகர்க்கும்
நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண்
டற்கும் - குலவிய
தோழமையாய்த் …….. 11.038.71
புலியின் அதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே. 11.56-நம்பி
பிள்ளையார் எழுந்து அருளப்
பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு
அங்கு உடன்உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று
அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல
நக்கர் தாமும் எழுந்து அருளினார். 12.27.242
ஆங்கு அணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார்
திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார்
பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின்
நிலை உணர்ந்து நிகழ்கின்றார். 12.27.243
திருப் பதிகச் செழுந்தமிழின்
திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்
பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர்
பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன்
உறைவின் பயன் பெற்றார். 12.27.244
அந் நாளில் தமக்கு ஏற்ற
திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும்
பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி
முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம்
புகலூர் தொழுது அகன்றார். 12.27.245
திரு நீல நக்க
அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும்
விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து
உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார்
திரு அம்பர் வணங்கினார். 12.27.246
அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும்
சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு
உருகு மனம் களி சிறப்ப எதிர்
கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார். 12.34.468
சிறுத் தொண்டருடன் கூடச் செங்காட்டங்
குடியில் எழுந்தருளிச் சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்
அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச்
சரத்தின் கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர்
மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர். 12.34.469
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டருளி
அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு
பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர்
தொழ இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து
அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார். 12.34.470
போந்து மா மாத்தியர் தம் போர்
ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம்
மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச்
சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று
அங்கு அன்பருடன் இருந்த நாளில். 12.34.471
மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும்
நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம்
செற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று
பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர்
மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார். 12.34.484
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார். 12.34.485
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு
செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு
உடைக் கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர்
முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார்வுறப் பாடலுற்றார்
அங்கமும் வேதமும் என்று எடுத்து. 12.34.486
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரம் காதலித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதியில் சில நாள்கள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்
புண்டரிகத் தடம் சூழ் பழனப்
பூம் புகலூர் தொழப் போதுகின்றார். 12.34.487
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்
தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும்
விடை அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்
புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார். 12.34.488
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும்
உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும்
செய்கை நேர் நின்று வாய்மைச்
சால்பின் மிக்கு உயர் திருத் தொண்டின்
உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து
அருளினார் காழி நாடர். 12.34.523
புள்ளலம்பு தண்புனல் புகலூர்
உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும்
பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல
நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார். 12.34.525
See Also: 1. Life history of Chiruthonda nAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais