logo

|

Home >

devotees >

references-to-chandeshar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் சண்டேசுர நாயனார் பற்றிய குறிப்புகள்


திருஞான சம்பந்தர் தேவாரம்

 

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை

வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்

தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே

சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.                 1.48.7 

 

வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்

சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்

தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்

கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.         1.62.4 

 

எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு

சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்

கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை

உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.            1.106.5 

 

கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் 

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் 

தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் 

பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.               2.65.2

 

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு

முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.    3.54.7

 

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியஆன் நிரையிற்பால்

பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி

ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த

தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.          3.66.3

 

அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ

டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாங்

குண்டமண வண்டரவர் மண்டைகையில் உண்டுளறி மிண்டுசமயங்

கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.  3.68.10 

 

சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே

வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே

நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்

அன்றுநின்னுரு வாகத் தடவியே ஆலவாயர னாகத் தடவியே.     3.115.5 

 

திருநாவுக்கரசர் தேவாரம்

 

 

அண்டமார் அமரர் கோமான் 

        ஆதியெம் அண்ணல் பாதங்

கொண்டவன் குறிப்பி னாலே 

        கூப்பினான் தாப ரத்தைக்

கண்டவன் தாதை பாய்வான் 

        காலற எறியக் கண்டு

தண்டியார்க் கருள்கள் செய்த 

        தலைவர்ஆப் பாடி யாரே.                       4.48.4 

 

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 

        தாபர மணலாற் கூப்பி

அழைத்தங்கே ஆவின் பாலைக் 

        கறந்துகொண் டாட்டக் கண்டு

பிழைத்ததன் றாதை தாளைப் 

        பெருங்கொடு மழுவால் வீசக்

குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 

        குறுக்கைவீ ரட்ட னாரே.                               4.49.3 

 

ஆமலி பாலும் நெய்யும் 

        ஆட்டிஅர்ச் சனைகள் செய்து

பூமலி கொன்றை சூட்டப் 

        பொறாததன் தாதை தாளைக்

கூர்மழு வொன்றால் ஓச்சக் 

        குளிர்சடைக் கொன்றை மாலைத்

தாமநற் சண்டிக் கீந்தார் 

        சாய்க்காடு மேவி னாரே.                               4.65.6 

 

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்

கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை

எறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச்

சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.   4.73.5

 

கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால்

இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள்நிற்க

அரும்பவிழ் தண்பொழில் சூழணி ஆரூர் அமர்ந்தபெம்மான்

விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே.      4.103.5

 

மாணி பால்கறந் தாட்டி வழிபட

நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்

ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற

தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.                         5.2.4 

 

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் 

மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே 

சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தஅக் 

கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.                     5.70.1 

 

வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி 

விண்ட தாதையைத் தாளற வீசிய 

சண்ட நாயக னுக்கருள் செய்தவன் 

துண்ட மாமதி சூடிய சோதியே.                                 5.73.8 

 

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று 

        தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும் 

பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று 

        பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றும் 

கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங் 

        குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும் 

பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும் 

        பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.    6.18.10 

 

ஈசனா யுலகேழும் மலையு மாகி 

        இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ 

வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ 

        மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ 

தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ 

        சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ 

தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ 

        திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.          6.34.10 

 

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்

        சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்

தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்

        சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்

        மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்

        கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.                 6.73.6 

 

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற் 

        பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ் 

சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச் 

        சதுரநட மாட்டுகந்த சைவர் போலும் 

அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை 

        அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே 

கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங் 

        குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.              6.75.9

 

 சுந்தரர் தேவாரம்

 

 

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி

        இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்

துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்

        தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்

மண்டபமும் கோபுரமும் மாளிகசூ ளிகையும்

        மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்

கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்

        காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.  7.16.3

 

அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்

        சேவினை ஆட்சிகொண்டார்

தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்

        தாமென வைத்துகந்தார்

நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்

        வைத்தெனை ஆளுங்கொண்டு

நஞ்சங்கொண் டார்க்கிட மாவது

        நந்திரு நாவலூரே.                             7.17.4

 

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்

        முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

        திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

        வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.            7.39.3

 

ஏத நன்னிலம் ஈரறு வேலி

        ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்

கோத னங்களின் பால்கறந் தாட்டக்

        கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற

தாதை தாளற எறிந்த சண்டிக்குன்

        சடைமி சைமலர் அருள்செயக் கண்டு

பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்

        பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே.              7.55.3

 

 

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை

        அமுது செய்தமு தம்பெறு சண்டி

இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் 

        ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்

கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற 

        காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்

திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் 

        செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.                     7.65.2

 

எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் 

        ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்

செறிந்த பூம்பொழில் 

        தேன்துளிவீசுந் திருமிழலை

நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் 

        நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்

அறிந்து வீழிகொண்டீர் 

        அடியேற்கும் அருளுதிரே.                       7.88.6

 

 மாணிக்கவாசகர் திருவாசகம்

 

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் 

சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ் 

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் 

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.               8

 

 திருப்பல்லாண்டு

 

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.     9

 

 திருமந்திரம்

 

உறுவ தறிசண்டி ஒண்மணல் கூட்டி

அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை

செறுவகை செய்து சிதைப்ப முனிந்து

மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.                       10

 

 பதினோறாம் திருமுறை

 

 

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்

கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து

வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்

பாலுகுத்த மாணிக்குப் பண்டு.                          11.கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி.31 

 

 நக்கீரர் - கோபப்பிரசாதம்

 

................ பூதலத் திசைந்த

மானுட னாகிய சண்டியை  

 வானவன் ஆக்கியும்.............                             11

 

 நக்கீரர் - போற்றித் திருக்கலிவெண்பா

 

.............. - மட்டித்து

வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல் 

பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங் 

கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை 

வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்

பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் 

நற்கோலம் ஈந்த நலம்போற்றி - .......                11

 

 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை

 

மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற 

        ஞான்றுமெல் லோதிநல்லாள்

மடற்றா மரைக்கைகள் காத்தில

        வேமழு வாளதனால்

அடற்றா தையை அன்று தாளெறிந்

        தாற்கருள் செய்தகொள்கைக்

கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்

        காட்டெங் கரும்பினையே.                              11

 

 பரண தேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி

 

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்

தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் - கடைந்துன்பால்

அவ்வமுதம் ஊட்டி அணிமருஞ் சூழ்ந்தன்று

வவமுத மாக்கினாய் காண்.                     11

 

 பட்டினத்தடிகள் - கோயில் நான்மணிமாலை

 

.........

தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்

பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி

...........                                          11

 

 பட்டினத்தடிகள் - திருவேகம்பமுடையார் திருவந்தாதி

 

இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்

தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த

முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக்

கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே.                11

 

 நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி

 

குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்

தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்

வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்

நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.         11

 

 பெரியபுராணம்  

 

 

Other stotras

 

shiva bhujangam - shankara bhagavatpAda

 

“Na shaknomi kartum paradrohalesham

Katham priyase tvam na jane girisha

Tatha hi prasannosi kasyapi kanta

Sutadrohino vaa pitrdrohino vaa.”

[O Lord of mountains! I canst not cause the least harm to others. I know not why Thou dost not like me. It is widely known that Thou didst bestow grace on him that harmed his wife, on him that wronged his son and on him that harried his father

See also:

History of Chandesha Nayanar

Chandesha Anugrahamurti

Saha-Uma Skandamurti

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The History of Chandesha Nayanar

Chandesha Anugrahar