ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது அடியவர்களில் பூந்துருத்தி நம்பி காடநம்பியும் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் நான்காவது தொகுப்பாக அமைகின்றன. அவர் திருவையாறுக்கு அருகிலுள்ள பூந்துருத்தியில் பிறந்தார். இந்த ஒழுக்கமான பக்தர், ஆத்ரேய பரம்பரையில் (கோத்திரம்) அந்தணர் மரபில் பிறந்தவர். நம்பி என்னும் பெயர், அந்தணர் குலத்தில் தோன்றியவர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக்கொள்ளும் சிறப்புப் பெயர்.
இவர் சிவபெருமானின் சிறந்த பக்தர். எங்கும் நிறைந்த சிவபெருமானின் திருக்கோயில்களுக்கு அவர் சென்று வணங்கினார். காடநம்பியார் தான் செல்லும் திருக்கோயில்களில் தேவாரங்களைப் பாடுவார். இந்த பக்தர், சைவ சமய ஆச்சார்யார்கள் மற்றும் நாயன்மார்களால் ஈர்க்கப்பட்டு, தான் பாடிய பாடல்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கண்ணப்பர், கணம்புல்லர், சேரமான் போன்றோரைப் போற்றியுள்ளார். காடநம்பி கோயில் (தில்லை), திருவாரூர் இரண்டிலும் திருவிசைப்பா பாடியுள்ளார். தேவாரங்களில் காணப்படாத சாளரபாணி என்ற சிறப்புப் பண் தமது திருவிசைப்பாவில் பயன்படுத்தியுள்ளார்.
முதல் இராஜாதிராஜனுடைய (கி.பி.1018 - 1054) 32 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவையாற்றுக் கல்வெட்டில் `ஒலோகமாதேவீச்சரத்து ஸ்தானமுடைய க்ஷேத்திர சிவபண்டிதர்க்காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி` என்று காணப்படுவதால் பூந்துருத்தி நம்பிகாட நம்பியின் காலம் கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனலாம்.
See Also:
1. Thiruvisaippa