அருந்தமிழால் வடகலையா லருளா லொன்றா லறிவுநெறி மருவுமருங் கவிகள் யாவுந் திருந்தியவா னவர்பணிய மன்று ளாடுந் தேவர்பிரான் கழலிணையே சேர வோதி விருந்திடுநா வுடையபயன் மேவி னோர்தா மேலானோ மெனமகிழ்ந்து விழிநீர் சோரப் பரிந்தருளாற் பரமனையே பாட வல்ல பான்மையா ரெமையாளு மேன்மை யாரே.
சமஸ்கிருதம் தமிழ் என்னும் பாடைகளைக் கற்று வல்லர்களாகி, சனன மரணப்பட்டு உழல்கின்ற பசுக்களாகிய பிரம விட்டுணு முதலிய தேவர்களையும் மனிதர்களையும் மதித்து அவர்களுக்குக் கர்மாநுகுணமாகக்கிடைத்த அநித்தியமுந் துக்கமுமாகிய வாழ்வை மெய்யெனக் கருதி அவர்களைப் பாடி வாணாளை வீணாளாகப் போக்காது, பதியாகிய சிவபெருமானது மகிமையை வேதசிவாகம புராணவழியால் உள்ளபடி அறிந்து அவருடைய திருவடிகளை அடைந்து, மனங்கசிந்துருக உரோமஞ்சிலிர்ப்ப ஆனந்த வருவி சொரிய அவரையே மெய்யன்போடு பாடி, "நாம் சுவதந்திரராகிய பரமசிவனுக்கே ஆளாயினோம், பரதந்தரராகிய மற்றுள்ளோர்களில் ஒருவருக்கும் குடியல்லோம். அவர்களெல்லாருக்கும் மேலானோம்" என்று இறுமாப்பு அடைந்து திரிகின்றவர்களே பரமனையே பாடுவார் என்று சொல்லப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
உலகநூற் பொருளுணர்ச்சியும் அறிவன் நூற் பொருளுணர்ச்சியுமெனக் கல்வியாற் பெறத் தகுவன இரண்டென்பதும் அவ்விரண்டில், உயர்பெரும்பேறாம் நிலைக்குரிய ஆன்மிக நலனுக்கு நேரடியாகவும் நிச்சயமாகவும் உதவுவது அறிவன் நூற்பொருளுணர்ச்சியே என்பதும் தொல்லாசிரியர் எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த ஒன்றாம். அறிவன் எனும் பெயர்க்குத் தனித்துவ உரிமையாளனாகிய சிவனால் அருளப்பட்டன சிலவும் அவனருள் வழிப்பட்ட மெய்ஞ்ஞான மேதைகளால் ஆக்கப்பட்டன பலவுமான அறிவன் நூல்களாகச் செந்தமிழிலும் ஆரியத்திலுஞ் சிறப்பாகவும் மற்றுந் தேசிய மொழிகளிற் பொதுவாகவும் அறியப்படும் நூல்கள் பலவாம். கல்வியாளராயுள்ளோர் அந்நூல்களை விசேட தரமாக விரும்பி யேற்றுக் கற்றும் கற்பித்தும் வரும் வழக்கம் நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நம்மவர் கல்விப் பாரம்பரியத்தில் உளதாகும். சிவபெருமான் மகிமையையே முக்கியப் பொருளாகக் கொண்டு படிக்கப் படிக்கத் தெவிட்டாத திவ்வியப் பாடல்கள் வடிவிலமையும் அவ்வறிவன் நூல்களைக் கற்றுக் கேட்டுச் சிந்தித் துணர்ந்து தெளியும் மொழிவல்லுநர் எவரும் தாமுஞ் சிவனைப் பாடும் உந்துதல் பெறாதொழியார்; பிறரையும் பாடச்செய்து கேட்டு மகிழும் பரிவும் அறப்பெறார். "யாமோதிய கல்வியு மெம்மறிவுந் தாமேபெற வேலவர் தந்ததனாற் பூமேல் மயல்போயறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீரினியே" - "நாடும் நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெருமானென்று பாடுமின்" எனவரும் பாடல்கள் அவ்வியல்பைத் துடியாக எடுத்துணர்த்தும் பாங்கும் பாடிப்பெறும் இன்பந் தெவிட்டாமையால் மேலும் மேலும் பாடுதற்கு அருளநுமதி வேண்டி "ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய்" - "மாட்டூ ரறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே" - "பாடவேண்டும் நான்போற்றி" என எழுந்துள்ள வேண்டுதற் பரிவும் "பாட்டான நல்ல தொடையாய் போற்றி" என்பதாதி விதப்பும் "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை" என்பதாதி நயப்பும் "பண்ணிய செந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்" என்பதாதி குறைநயப்பும் "வேட்டவி யுண்ணும் விரிசடைநந்திக்குப் பாட்டவி காட்டுதும் பாலவியாமே" என்பதாதி அர்ப்பணிப்பும் "பாடுவாய் நம்மை" - "என்பெயர் பித்தனென்றே பாடுவாய்" - "எமைப் பாட மறந்த னையோ" என்பனவாதியான திருவருளுந்தல்களும் "மன்றினிடை நங்கூத்தாடல் வந்து வணங்கி வன்றொண்டன் ஒன்று முணர்வால் நமைப் போற்றி உரைசெய் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்" என்பதாதியாக வுள்ளனவற்றால் உணரநிற்கும் சிவபெருமானின் பாட்டுப்பிரியமும் ஆக, கந்தரநுபூதி, திருமந்திரம், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம் ஆதிய அருள் நூல்கள் தோறுஞ் செறிந்து கிடக்கும் இவ்வகையின அனைத்தும் சிவனைப் பாடுதலின் நோன்மை, மேன்மை, இன்றியமையாமை, ஆவசியகம் என்பன புலப்பட நிற்குமாறு அறியத்தகும்.
இவ்வகையிற் சர்வமுக்கியத்துவமும் மேன்மையும் வாய்ந்த அருட் பாடற்பணியே தம் இலட்சியப் பணியாகக் கொண்டு பிறரையும் பிறவற்றையும் பாடும் பராக்கை அறவே விட்டொழித்து மெய்யுணர்வு மகிமையாற் சிவனோ டொற்றித்து நின்று இயல்பாக எழும் உள்ளுருக்கத்துடனே சிவனையே பாடும் நியமத்தில் நிலைநின்றவர்களே பரமனையே பாடுவார் ஆவர்.
குறித்த விபரமெல்லாம் விரித்து விசாரித் துணர உதவும் வகையில் அவர் புராணத்தில் வரும் பாடல், "தெந்தமிழும்வடகலையுந் தேசிகமும் பேசுவன மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக ஒன்றிய மெய்யுணர்வினொடு முள்ளுருகிப் பாடுவார் பன்றியுடன்புட் காணாப் பரமனையே பாடுவார்" என்பதாகும்.
"காதபதிம் மேதபதிம்" (பாட்டுத் தலைவனும் யாகத் தலைவனும்) என இருக்குவேதம் விதந் தோதுஞ் சிவபெருமாணையே பாடும் இத்திருக்கூட்டத்தார் பணி நம் கல்வியாளர் மரபில் நீடு நின்று நிலாவப் பிரார்த்திப்போமாக.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. பரமனையே பாடுவார் புராணம் (தமிழ் மூலம்)
2. paramanaiyE pAduvAr purANam in English prose
3. Paramanaiye Paatuvaar Nayanar Puranam in English Poetry