கற்பமநு கற்பமுப கற்ப மென்றிக் கடனணைந்த திருநீறுங் கனற்க ணீறும் பொற்புடைய வரனாசா னங்கி யாறு பொல்லாத பூமியெதிர் புனைத லாகா வற்புதமாந் திரிபுண்ட மதியின் பாதி யகிலாங்கத் தீபமிகு மழகார் வட்ட முற்பொலிய வுடலணியு முறையா ரன்றோ முழுநீறு பூசவல்ல முனிவர் தாமே.
உற்பத்தியினாலே கற்பம் அநுகற்பம் உபகற்பம் என மூவகைப்படும். விபூதியையாயினும், நித்தியாக்கினியில் எடுத்த விபூதியையாயினும் சிவபெருமான் முன்னும் அக்கினிமுன்னும் குருமுன்னும் அசுத்தநிலத்தும் வழி நடக்கும்போதும் பூசாது, உத்தூளனம் திரிபுண்டரம் பிறைவடிவம் முக்கோணம் வட்டமாகச் சிவாகமவிதிப்படி அன்போடு பூசுகின்றவர்கள் முழுநீறுபூசிய முனிவரென்று சொல்லப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
சங்கார காரணனாகிய சிவனையே முதலாகவுடையது இவ்வுலகம் என்ற சைவசித்தாந்த விசார ஆரம்ப உண்மையே உலக அழிவின் முடிவில், மேலழிவுக் கிடமின்றி எஞ்சிக் கிடக்கக் கூடியதாகிய சாம்பலைச் சமய சின்னமாக ஏற்றுப் போற்றுதல் மூலம் ஆராதித்து வருவது சைவம். சாம்பலாகிய அந்நீறு அதனைப்போல் அழிவுக்கிடமின்றி எஞ்சி நிற்குஞ் சிவன் திருமேனிக் கணிகலமாகக் கண்ட காட்சி சைவ ஞானக்காட்சி. அச்சிவனையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் உலகர் அவன் அணியும் நீற்றையே தாமும் பக்தி பூர்வமாக அணிந்து உடலுளப்பிணிகள் தீர்ந்து இன்புறக் கண்டது சைவ அநுபவ மாட்சி. அதனைச் செய்யுளில் வைத்து ஏற்றிப் போற்றியது ஆதிப் பழந்தமிழ் நூலாகிய திருமந்திரம். அத்திருமந்திரச் செய்யுள், "கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே" என வரும். இவ்வுண்மை மீளவும் ஒருகால் நடைமுறையநுபவத்திற்பட்டொளிருமாறு, பாண்டியனுக்கு வெப்பு நோய் தீர்த்த நிகழ்வில் வைத்துச் சொல்லாலுஞ் செயலாலுந் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் விளக்கி வைத்துள்ளார். இதன்மூலம் வேதத்திலுள்ளதும் மந்திரமாவதும் தந்திரமாவதும் பராசக்தி வண்ணமாவதும் முதலாகிய இந்நீற்றின் அருமை பெருமைகள் யாவும் நாயனாராற் சைவ அரங்கிற் பிரஸ்தாபிக்கப்பெற் றாய்விட்டனவாகும்.
நீறு என்னுமளவில் பொதுவில் அக்கினி சுட்டெஞ்சியன எல்லாம் நீறே யாயினும் பிருகஜ்ஜா பால உபநிடதமும் பஸ்ம ஜாபால உபநிடதமும் சிவாகமங்களூம் விதித்தவாறு தெய்விகத் தூய்மை விளங்கத் தயாரித்து எடுத்துக்கொள்ளப்படுவதே திருநீறு என்ற சிறப்பு நிலை வழக்கிற்குரியதாகும். இப்புராணம் அது பற்றிக் கூறுவது வருமாறு:
பசுக்கள் அனைத்தும், திருக்கயிலையில் வீற்றிருக்கும் இடபதேவர்க்குச் சுற்றமாயிருந்து இறைவனாகிய சிவனாணையினாற் பாற்கடல் மூலமாகப் பூமியை யடைந்து சிவனபிஷேகத்துக்குப் பஞ்சகவ்வியம் வழங்கும் நற்பணி மேற்கொண்டிருக்கும் சுரபி, நந்தை, பத்திரை, சுசீலை, சுமனை என்ற தெய்வப் பசுக்களின்வழி மரபினவாகும். அவற்றின் சாணத்தைச் சிவாக்கினியில் தகித்து நீறாக்கி முறைப்படி மந்திர சகிதமாகச் சுத்திகரித் தெடுத்துக்கொள்ளப்படுவதே உத்தமமான திருநீறாகும். அது கற்பம் அநுகற்பம் என இருவகைப்படும். அவற்றுள் நோய் நொடி எதுவுமின்றி ஆரோக்கிய நிலையில் இருக்கும் பசுக்கள் ஈன்று வாலாமை கழிந்திருக்கும் காலத்தில் அவற்றிலிருந்து மந்திர சகிதம் ஏந்திப் பெறுஞ் சாணத்தைச் சிவாக்கினியிலிட்டு எரித்தெடுத்துச் சிவசிந்தனையுடன் தயாரித்துக் கொள்ளுந் திருநீறு கற்பம் என்று பெயர் பெறும். காடுசார்ந்த மேய்ச்சற்றரைகளிலே விழுந்துலர்ந்து கிடக்கக் கூடும் மாட்டெருமுட்டைகளைத் தொகுத்து நுண்பொடியாக்கிக் கோசலத்திற் குழைத்து அஸ்திர மந்திர சகிதம் உருண்டையாகப் பிடித்து ஓமாக்கினியிலே வேகவைத்து எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அநுகற்பமாகும். சாணத்தினாலமையும் விபூதிவகைகள் இவ்வாறாக, இவை சாத்தியப்படாவிடத்து, காடெரிந்தழிவதனாற் கிடைக்கும் நீறு, பசுத்தொழுவங்கள் தீப்பற்றுவதனால் கிடைக்கும்நீறு, செங்கட்டிச் சூளைகளிலிருந்து கிடைக்கும் நீறு என்பவற்றைத் தனித் தனியே எடுத்துக் கோசலத்திற் குழைத்து மந்திர சகிதம் உருண்டையாக்கிச் சிவாக்கினியிற் பொசுக்கித் தயாரிக்கப்படும் நீற்றுவகையு மொன்றுளதாம். அது உபகற்பம் எனப்படும். இம்மூவகைதவிர மற்றெவ்வகையாற் கிடைக்க கூடும் நீறும் அகற்பம் என்ற பெயரில் விலக்கப்பட்டதாகும்.
விலக்கப்பட்ட அகற்பத்தை விடுத்து விதிக்கப்பட்டனவாகிய கற்பங்கள் மூன்றில் ஒன்றைச் சிவசந்நிதி, தீபம், ஆறு, குருமுன்னிலை என்பவற்றை எதிர்நோக்காது உத்தூளனம் திரிபுண்டரம், பிறைவடிவம், தீபச் சுடர் வடிவம், வட்டவடிவம் என்பவற்றில் உகந்த ஒருவடிவிற் சிவசிந்தனையோடு விதிப்படி அணிதல் வேண்டும். வழிநடையிலும் மயானத்திலும் அணிதலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். திருநீறு தயாரித்தலும் அணிந்து கொள்ளுதலும் பற்றி இப்புராணந் தரும் விளக்கம் இதுவாகும்.
குறித்த இவ்வகையிலான திருநீற்றைக் குறித்த இம்முறைப்படியே தயாரித்துப் புதிய மட்குடத்திலிட்டுச் சேமித்து வைத்து நியமந்தவறாது அணிந்து அதுவே சிவாராதனையாகப் பேணியொழுகும் நற்குல வான்களும் தத்துவஞான விளக்கமுள்ளவர்களும் மும்மல பந்தமறுத்தவர்களும் தமது திருநீற்றன்புறுதிக் கொள்கையிலிருந்து நழுவாதவர்களுமாயிருந்த ஒரு தொகுதி யடியார்களே முழுநீறு பூசிய முனிவர்களாவர். அவர்கள் திருநீற்றினை இயலுமளவுக்கு உடல் முழுவதுஞ் செறிய அணிந்து பக்திப் பரிமளிப்புறுந் தன்மையால் அப்பெயர் பெற்றிருத்தல் கருதத்தகும். அவரியல்பு கூறும் புராணச் செய்யுள், "சாதியினிற் றலையான தருமசீலர் தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தமது கொள்கை நீதியினிற் பிழையாத நெறியினிற்போர் நித்தநியமத்து நிகழங்கி தன்னிற் பூதியினைப் புதிய பாசனத்துக் கொண்டு புலியதளினுடையானைப் போற்றி நீற்றை ஆதிவரு மும்மலமு மறுத்த வாய்மை யருமுனிவர் முழுவது மெய்யணிவ ரன்றே" என வரும். இத்தொகையடியார்கள் முனிவர் எனும் பெயர் பெற்றதற்குக் காரணம் மும்மலபந்த மறுத்தவர்களாயினமையே என்பது இச்செய்யுளானறியக் கிடத்தலும் ஓர்க.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. முழுநீறு பூசிய முனிவர் புராணம் (தமிழ் மூலம்)
2. muzunIRu pUchiya munivar purANam in English prose
3. Muzhuneeru Poosiya Munivar Puranam in English Poetry