logo

|

Home >

devotees >

moorthy-nayanar-puranam

மூர்த்தி நாயனார் புராணம்

 

Moorthy Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்
    வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்
தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்
    தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன
னிழந்தவுயி ரினனாக ஞால நல்க
    வெழில்வேணி முடியாக விலங்கு வேட
முழங்குபுக ழணியாக விரைநீ றாக
    மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, வைசியர் குலத்திலே சிவபத்தியே ஒருவடிவெடுத்தாற்போலும் மூர்த்திநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஸ்தலத்திலே வீற்றிருக்கின்ற சோமசுந்தரக்கடவுளுக்குத் தரிக்கும் பொருட்டுத் தினந்தோறும் சந்தனக்காப்புக் கொடுத்து வருங்காலத்திலே; கருணாடதேசத்தரசன் சதுரங்க சேனைகளோடும் அம்மதுரைக்கு வந்து, பாண்டியனோடு யுத்தஞ் செய்து அவனைவென்று, அந்நகருக்கு அரசனாயினான். அவன் புறச்சமயிகளாகிய சமணர்களுடைய போதனார்த்தியினாலே ஆருகதமதத்திற் பிரவேசித்து, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்வானாயினான் ஆயினும், மூர்த்திநாயனார் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாது செய்து வந்தார்.

அது கண்டு, அரசன் அவரை ஆருகதமதத்திலே பிரவேசிப்பித்திற்கு உத்தேசித்து, அவருக்குப் பல கொடுஞ்செய்கைகளைச் செய்தான். செய்தும், அவர் தம்முடைய திருப்பணியினின்றும் சிறிதும் வழுவாதவராயினார். அது பற்றி அவ்வரசன் அவர் சந்தனக்கட்டை வாங்குமிடங்களிளெல்லாம் அவருக்குக் கொடுக்க வொட்டாமற். றடுத்தான். அதனால் அவர் மனநொந்து, "இப்பாண்டி நாடு, துர்ச்சமயமாகிய ஆருகதசமயத்திலே பிரவேசித்துச் சிவபுண்ணியத்துக்கு இடையூறுசெய்கின்ற அதிபாதனாகிய இவ்வரசன் இறக்க, சற்சமயமாகிய சைவசமயத்தை வளர்க்கின்ற அரசரைச் சாருங்காலம் எக்காலம்" என்று நினைந்து துக்கித்து, பகற்காலமுழுதும் சந்தனக்கட்டை தேடித் திரிந்து, எங்கும் பெறாமையால் ஆலயத்துக்குவந்து, "சுவாமிக்குத்தரிப்பதற்குத் தேய்த்துக் கொடுக்கும்பொருட்டுச் சந்தனக்கட்டைக்கு இன்றைக்கு முட்டு வந்தாலும், அக்கட்டையைப் போலத் தேய்க்கத்தக்க கைக்கு ஒரு முட்டும் இல்லை" என்று ஒரு சந்தனக் கல்லிலே தம்முடைய முழங்கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பு தேய்ந்து குறையும்படி தேய்த்தார். தேய்த்தலும், உதிரம் ஒழுகி நாற்புறத்திலும் பெருகி எலும்பினுள்ளே இருக்கும் துவாரந்திறந்து மூளை வெளியிலே வந்தது. அப்பொழுது, "அன்பனே! நீ பத்தியினது உறுதிப்பாட்டினால் இப்படிப்பட்ட செய்கையைச் செய்யாதே. உனக்கு இடுக்கண்செய்த, கொடுங்கோலரசன் பெற்ற இந்நாடு முழுவதையும் நீயே கைக்கொண்டு இதற்கு முன் இவ்விடத்திலே அவனாலுண்டாகிய கொடுமைகள் யாவற்றையும் நீக்கி, பரிபாலனஞ்செய்து, உன்னுடைய பணியை நடப்பித்து, பின்பு நம்முடைய சிவலோகத்தை அடைதி" என்று ஒரு அசரீரிவாக்கு எழுந்தது. மூர்த்திநாயனார் அதைக் கேட்டு, அஞ்சி, கையைத் தேய்த்தலை ஒழிந்து எழுந்தார். உடனே அவர் கையானது தேய்த்தனாலாகிய ஊறு நீங்கி முன்போலாயிற்று.

அவ்விரவிலே அந்தக்கருணாடராஜன் இறந்து, சிவனடியார்களுக்கு வருத்தஞ்செய்த அதிபாதகத்தினாலே கொடுமையாகிய நரகத்திலே விழுந்தான். மற்ற நாள் பிராதக் காலத்திலே மந்திரிமார்கள் கூடி, தகனசமஸ்காரஞ் செய்து, பின்னர்த் தங்கள் அரசனுக்குப் புத்திரர் இல்லாமையால் வேறொருவரை அரசராக நியோகித்தற்கு உபாயத்தை ஆலோசித்து, "யானையைக் கண்கட்டிவிடுவோம், அந்த யானை எவரை எடுத்துக்கொண்டுவருமோ அவரே இந்நாட்டுக்கு அரசராவார்" என்று நிச்சயித்துக்கொண்டு, யானையை விதிப்படி அருச்சித்து, "நீ இந்த நாட்டை ஆளுதற்குவல்ல ஒருவரையெடுத்துக் கொண்டு வா" என்று சொல்லி, அதை வஸ்திரங்கொண்டு கண்ணைக் கட்டி விட்டார்கள். அந்த யானை அந்தப்பட்டணத்து வீதிகளிலே திரிந்து சென்று, சொக்கநாத சுவாமியுடைய ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போயிற்று. மூர்த்தி நாயனார் இரவிலே தமக்குச் செவிப்புலப்பட்ட அசரீரிவாக்கினால் மனத்துயரம் நீங்கி "நமது கடவுளாகிய பரமசிவனுக்குத் திருவுளமாகில் அடியேன் இந்த நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்" என்று நினைத்துக்கொண்டு, திருக்கோயிற்புறத்திலே நின்றார். யானையானது அவர் திருமுன்னே சென்று தாழ்ந்து, அவரை எடுத்து, முதுகின்மேல் வைத்துக்கொண்டது. அது கண்ட மந்திரிமார்கள் அவரை நமஸ்கரித்து, யானையின் முதுகினின்றும் இறக்கி, முடிசூட்டு மண்டபத்திலே கொண்டு போய், ஒரு சிங்காசனத்தின்மேல் இருத்தி, மூடி சூட்டுக்கு வேண்டும் மங்கலகிருத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். மூர்த்திநாயனார் அவர்களை நோக்கி, "ஆருகதமதம் நீங்கிச் சைவசமயம் விருத்தியாபின் நான் இந்நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்" என்றார். அதைக்கேட்ட மந்திரிமார்களும் சாஸ்திரபரிசயமுள்ள பிறரும் அவரை வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீருடைய ஆஞ்ஞையின்படியேயன்றி அதற்கு மாறாக யாவர் செய்வார்கள்" என்று சொன்னார்கள். பின்பு மூர்த்திநாயனார் "நான் அரசாள்வேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகத்திரவியமும், உருத்திராட்சமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக" என்றார். அவர்கள் "தேவரீர் அருளிச்செய்தபடியே ஆகுக" என்று சொல்லி, மகுடாபிஷேகத்துக்கு வேண்டும் செய்கைகளைச் செய்து நிறைவேற்றினார்கள்.

மூர்த்திநாயனார் சடைமுடி தரித்து ஆலயத்திற்சென்று சோமசுந்தரக்கடவுளை வணங்கிக்கொண்டு யானையின்மேல் ஏறி. இராசமாளிகையைச் சேர்ந்தார். அங்கே அத்தாணி மண்டபத்திலே இரத்தின சிங்காசனத்தின் மேலே தவளச் சந்திரநிழலிலே வீற்றிருந்துகொண்டு, பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் விபூதி உருத்திராக்ஷம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் சிவபதப் பிராப்தியானார்.

திருச்சிற்றம்பலம்

 


மூர்த்தி நாயனார் புராண சூசனம்

1. சிவனுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல்.

சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரோசனை கஸ்தூரி பச்சைக்கர்ப்பூரம் என்பன கலந்து சாத்தல் உத்தமோத்தமம். சிவனுக்குச் செயற்பாலனவாகிய உபசாரங்கள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்று சிவாகமம் - செப்பும். "சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் - சேர்த்தியுளத் தாதரவு செய்து." எ-ம். "கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் - தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து." எ-ம் சோமவார விரத கற்பத்தினும், "சுகந்த கந்தஞ் சுலவிய லேபன - முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ - ரிகந்து பாவ மிமையவர் கோடியாண் - டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்." எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காண்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார் என்பது. இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டைக்கு முட்டுவந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் உலகாளும் அரசராய வழியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு இனியர் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணர்க.

2. சிவனடியாருக்குத் தீங்கு செய்தலால் பெறப்படும் பயன்

சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர். அது "காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் - கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன் - மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி - மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்" "மனத்தினால் வடிவு தன்னால் வழுக்கிய சழக்கர் தாமு - மினத்தொடு மிணங்கி வேவ ரெரிநிர யத்தை யெய்தி - யெனைத்துள காலந் தானு மென்றுளத் தேங்கி யெய்ப்பர் - தனக்கய லுறவி லானைத் தவறுவ ரென்னோ தாமே." "மற்றைய நரக பேத மனைத்தினு மயங்கி மூவேழ் - சுற்றமுஞ் சுழலத் தாமுங் கூடியே துயங்கி வீழ்வ - ரெற்றுவ ரியம தூத ரெமக்குற வாருமில்லை - யுற்றவித் துயரந் தன்னை யொழிக்கவென்றழிவருள்ளம்" எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணர்க. சிவனடியாருக்கு இடுக்கண் செய்த இக்கருணாடராசனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிக. ஆதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையற்க.

3. சைவம் தழைக்க அரசியற்றல்

அரசன் வேதாகமங்களால் உணர்த்தப்படும் சற்சமயமாகிய சைவத்தின் வழி வழுவாது ஒழுகுவானாயின்; அவன் கீழ்வாழும் குடிகளும் இவ்வரசன் தான் ஒழுகியவாறே ஒழுகாதாரைத் தண்டிப்பன் என்னும் அச்சத்தாலும், பத்தியாலும், இயல்பாலும் சைவ சமயத்தின் வழி தவறாது ஒழுகி, போகம் மோக்ஷம் என்னும் இருபயனையும் பெறுவர்கள். இதுபற்றியன்றோ; அரசனைச் சைவ மார்க்கத்தில் நிறுத்திய ஆசாரியர் உலகத்துக்கெல்லாம் ஆசாரியர் என்று சிவாகமம் கூறியதூஉம் என்க. "ஐயமற விபரீத மதுவு மீச னருண்மொழியை யாராய்ந்த வநக னாசான் - வையகமு முய்யவுனிச் சைவ தன்ம மன்னவனுக் களிக்கவவன் மருவு நீதி - யெய்தியிடு முலகச்ச மெய்தலானு மெல்லோரு மிருபயனு மெய்த லாலே - சைவநெறி தனையரசற் களித்த வாசான் சகத்தினுக்குந் தேசிகனே சாற்றுங்காலே" என்று சிவதருகோத்தரத்தில் கூறுமாற்றானும் உணர்க. அரசன் ஆருகத சமயி ஆகி, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்தால்; அவன்கீழ் வாழும் குடிகள் அப்பரமதப் படுகுழியில் வீழ்ந்து எரிவாய் நரகத்துக்கு இரையாதலையும், சைவத்து நிற்பாரும் அரசனால் வரும் இடுக்கண் மிகுதி பற்றி அச்சத்தினாலே சிவபுண்ணியங்கள் செய்யாது வாளா கெடுதலையும், கண்டு இரங்கி யன்றோ; அதிபாதகனாகிய இவ்வரசன் இறப்ப, இப்பாண்டிநாடு சைவ மன்னரைச் சார்வது எக்காலம் என்று இம்மூர்த்தி நாயனார் வருந்துவாராயினார். இதனால், இவரது இரக்கமுடைமை தெளிக. மெய்யுணர்வு உடையார்க்குத் தாம் பெற்ற பேறு உலகம் பெறுதல் வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை என்க. "நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்றார் திருமூலநாயனாரும்.

இம்மூர்த்தி நாயனார் தாம் அரசர் வாழ்வைச் சிறிதாயினும் நன்கு மதித்து விரும்பினவர் அல்லர். பிறர் பயன் நோக்கினாராயினும், தாமே அரசாள நினைந்தவரும் அல்லர். உயிர்கள்மாட்டு எழுந்த பெருங்கருணையினாலே பாண்டி நாடு சைவமன்னரைச் சார்தல் வேண்டும் என்னும் கருத்தொன்றே உடையராயினார். "அடியவர் குறைவு தீர்த்தாண்டருள்வதே விரதம்பூண்ட" கருணாநிதியாகிய சிவன் தம்மாட்டு உள்ளவாறு எழுந்த பேரன்பினாலாகிய இக்கருத்தை முடித்தருளத் திருவுளங்கொண்டு, பரசமயங்கள் பாறச் சைவசமயம் தழைக்க அரசியற்றவல்லார் இவர் அன்றிப் பிறர் இலர் ஆதலால், இவரையே அந்நாட்டிற்கு அரசராக்கினார். இதனால், சிவன் தமது அடியார் கருத்தை முற்றுவித்தருளும் பெருங்கருணையினர் என்று துணிந்து, யாவருக்கும் அஞ்சாது அவரையே நம்பி வழிபடுக. "தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய் - காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் - வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா - மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே" என்றார் திருநாவுக்கரசு நாயனார். "இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்றோற்றி - யிறைவனே யீண்டிறக்கஞ் - செய்வா - னிறைவனே - யெந்தா யெனவிரங்கு மெங்கண் மேல் வெந்துயரம் - வந்தா லதுமாற்றுவான்" என்றார் காரைக்காலம்மையார்.

இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவனது ஆஞ்ஞை உண்மையானும், அவரது திருவருள் வழிப்பட்டு நிற்கும் தமது ஆளுமையால் உலகம் உய்யும் என்னும் கருத்தானுமே, அதற்கு இசைந் தருளினார். அது, இவர் மந்திரிகளை நோக்கி, சமண சமயம் நீங்கச் சைவ சமயம் ஓங்குமாயின் அரசாள்வேன் என்றமையானும் விபூதியே அபிஷேகத் திரவியமும் உருத்திராக்ஷமே ஆபரணமும் சடா முடியே கிரீடமும் ஆகக்கொண்டே அரசாண்டமையானும், பெண்ணாசை சிறிதும் இன்றி ஐம்புலன்களை அடக்கி நின்ற பெருந் துறவுடைமையானும் துணியப்படும். இதனால், மெய்யுணர்வு உடையோர் அண்டமனைத்தும் ஒருங்கு ஆளப் பெறினும், அதனை ஒரு பொருளெனக் கருதாது, சிவனது திருவருள்வழி நின்றே அவருக்குத் திருத்தொண்டு செய்தலில் தவறார் என்பது துணிக. "கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே - லண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர் - விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் - கண்ணாளா வீதென் கருத்து" என்றார் காரைக்காலம்மையார். "அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் - பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ் - சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா - மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே" என்றார் நம்பியாண்டார் நம்பி. மெய்யுணர்வு உடையார்க்கு விபூதியே சாந்தமும், உருத்திராக்ஷமே ஆபரணமுமாம் என்பது "ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த - பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை - சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி - நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே" என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணர்க. சடைமுடி தரித்தல் புண்ணியம் என்பது, "பத்தர் நூன்முறை வேணி பரித்திடி - லொத்த வற்றுறு வேணியொவ் வொன்றிற்கு - மெத்து மச்சுவ மேத பலத்தினைச் - சத்தி யம்மவர் நாடொறுஞ் சார்தலே" என்னும் சிவபுண்ணியத் தெளிவினால் காண்க. கூடாவொழுக்கம் உள்வழி இவ்வேடம் தமக்கும் பிறர்க்கும் தீமை பயக்கும் என்பது ஏனாதிநாதநாயனார் புராணத்துச் சூசனத்திற் கூறினம்.

திருச்சிற்றம்பலம்

See Also: 
1. மூர்த்தி நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. mUrthi nAyanAr purANam in English prose 
3. Moorti Nayanar Puranam in English Poetry 

 


Related Content

63-nayanmar-drama-விறன்மிண்ட நாயனார் - நாயன்மார் நாடகம்

63 Nayanmar Drama-Tamil Drama ஆண்ட நம்பி (சுந்தரர்)

History of Thirumurai Composers - Aanda Nambi (Sundharar)

அருட்பேரரசு ஆளப் பெற்றவர்

The Puranam of Moorti Nayanar