logo

|

Home >

devotees >

moorkka-nayanar-purana

மூர்க்க நாயனார் புராணம்

 

Moorkka Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
    தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
    கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
    வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

தொண்டைநாட்டிலே, திருவேற்காட்டிலே, வேளாளர் குலத்திலே தலைமைபெற்ற ஒருவர், தினந்தோறும் சிவனடியார்களை, சிவனென வணங்கித் துதித்துத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்பவரும், அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுப்பவருமாய் இருந்தார். இப்படியிருக்கு நாளிலே, அடியார்கள் அநேகர் எழுந்தருளி வருகின்றமையால் அவர் தம்மிடத்துள்ள திரவியங்களெல்லாஞ் செலவாகிவிட; அடிமை நிலம் முதலியனவற்றை விற்றும், மாகேசுரபூசையை வழுவாது மனமகிழ்ச்சியோடு செய்து வந்தார். அதன்பின், மாகேசுரபூசைச் செலவுக்குப் பொருள் இன்மையாற் கலவைகொண்டு, தம் முன்னே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க நினைந்து, அவ்வூரிலே சூதாடுவோர் இல்லாமை பற்றி அவ்வூரை அகன்று, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, சூதாடலால், வரும் பொருளினாலே தம்முடைய நியதியை முடித்து, சிலநாளிலே கும்பகோணத்தை அடைந்தார். அங்கே சூதாடிப் பொருள்தேடி மாகேசுரபூசை செய்தார். சூதிலே முதலாட்டத்திலே தாந்தோற்று, பின்னாட்டங்களிலே பல முறையும் வென்று, அதனாலே பொருள் ஆக்கி சூதிலே மறுத்தவர்களை உடைவாளை உருவிக்குத்தி, நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினாலே வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கள் கொள்ள; தாந்தீண்டார் அடியார்கள் திருவமுது செய்தபின் தாங்கடைப்பந்தியிலே அமுது செய்வாராயினார். இவர் இப்படிச் சிலகாலம் மாகேசுரபூசை செய்து கொண்டிருந்து, அந்த மகத்தாகிய சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


மூர்க்க நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. செய்யாமை செய்தல்

செய்யுஞ் செயலெதுவுஞ் சிவனாலன்றி விதிக்கப்பட் டாவதில்லை; சிவனாலன்றிச் செய்விக்கப் படுதலில்லை; சிவனாலன்றிப் பலன் கொடுக்கப்படுதலில்லை என்பது சைவஞானத்தில் எப்பவோ முடிந்த உண்மையாகும். அது சிவஞான சித்தியாரில், "உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே" எனவும் தாயுமான சுவாமிகள் பாடலில், "எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே" - "அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை" - "சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்" எனவும் பட்டினத்தடிகள் பாடலில், "என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்" எனவும் வருவன கொண்டறியப்படும். அங்ஙனமிருந்தும் தம் செயற்குத் தாமே சுவதந்திரமான கர்த்தாக்கள் என்றும் செயற்பலன்கள் தம்மறிவாற்றல் செயலாற்றல்களால் தாம் பெற்ற பேறுகளென்றும் தம்மைப் பீடித்த மலமறைப்பால் விளையும் அஹங்கார மமகாரங்களில் நின்றுழல்வார் நிலை என்னே பரிதாபம்! இங்ஙனம் அறியப்படும் இருதிறத்தாருள் முன்னையோர் விஷயத்தில், தான் வெளிப்பட்டுநின்று அவர் செயலால் விளையும் வினை அவரைச்சாராமல் தானே ஏற்கும் முதல்வன் இவர்கள் விஷயத்தில் தான் வெளிப்படாது நின்று வினைப்பலன்களைச் செய்தவரே அநுபவிக்குமாறு ஊட்டி மேலும் வினை செய்வித்துக் கொண்டிருப்பன். அது, "யான் செய்தே னெனுமவர்க்குத் தானங்கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்" எனச் சிவஞான சித்தியார் கூறுவது கொண்டறியப்படும். ஆகவே இப்பிறப்பிலோ முற்பிறப்பிலோ குருவருளால் மலந்தீர்ந்து அஹங்கார மமகாரங் கெட்டு நிற்கும் பரிபக்குவமுள்ள ஞானிகள், தாம் தம்மில் விளங்குஞ் சிவத்துடன் ஒற்றித்து நிற்குந் தன்மையால் தம்மால் நிகழவரும் எச்செயலையும் தம்மோடியைபு படுத்திக்கொள்ளாது சிவன் செயலாம் படிவைத்தியறறி தாம் அதனால் விளையும் வினைத்தாக்கத்திற்காளா காதிருப்பதுடன் சிவத்தின் வீடே கருணைக்காளாகி அச்செயல் மூலமாகவே பிறப்பறும் பெரும்பேறும் பெறுதற்குரியோராவர். கற்றிருந்தும் கற்றது பற்றிய ஓருணர்வும் பற்றாதிருக்கும் நிலை கற்றுங் கல்லாமை எனப்படுவது போலவும் உண்டிருந்தும் உண்டதற்கான திருப்தி ஏற்படாதிருக்கும் நிலை உண்டும் உண்ணாமை எனப்படுவது போலவும் தாம் செயல் செய்தும் அது பற்றிய வினைத்தாக்கம் ஒரு சிறிதும் இன்றியிருக்கும் இவர் நிலை செய்துஞ் செய்யாமை எனப்படும். அது, தன் பணியை நீத்தல் எனச் சிவப்பிரகாசத்திலும் இறை பணிநிற்றல் எனச் சிவஞான போதத்திலும் பெயர்பெற்று நிற்றல் போலச் செய்யாமை செய்தல் எனவும் பெயர் பெறுவதாம். அவ்வாறாதல் திருக்களிற்றுப்படியாரில், செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோநாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு" என வருவதனாற் காண்க.

2. செய்யாமை செய்தலில் அதீதநிலை

சீவனோடு ஒற்றித்துநின்று தஞ்செயல் சிவன்செய லாம்படி சிவப்பணி புரிவோருள்ளும் அங்ஙனம் ஒற்றித்து நிற்குமாற்றில் வாய்க்கும் அழுத்த விசேடத்துக் கேற்ப, பிறர் யாரும் நினைக்கவுமாகாத் தன்மையினவும் சமயசார ஞானாசார வரம்புகட்கு அப்பாலாயினவுமான செயல்களில் நின்று அதன்மூலம் பிறப்பறுக்கப் பெற்றோர் செய்யாமை செய்தலில் அதீதநிலை யுற்றோராகப் போற்றப்படுவர். சைவ நாயன்மாருள், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், அரிவாட்டாய நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், மூர்த்தி நாயனார், மூர்க்க நாயனார் என்போர் அவ்வகையினராவர். அது திருக்களிற்றுப்படியாரில், "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் வல்லுப்பலகையினில் வாதனையைக் கொல்லும் அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா சகமார்க்கத் தாலன்றேதான்" என வரும் இச்செய்யுள் குறிக்கும் பொருளுண்மையாவது குறித்த இந்நாயன்மார் சமயாசார ஞானசார வரம்புகட் கப்பாற்பட்ட நிலையில், துணிதுவைக்குங் கல்லில் தம்தலையை மோதுதல் தமதரிவாளால் தம்மிடற்றை யறுத்தல், தம் உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்தல், சந்தனக் கல்லில் முழங்கை தேய அரைத்தல், சூதாட்டத்தில் வல்வழக்குரைப்பாரை வாளாற் குற்றுதல் ஆகியவற்றைத் தத்தஞ் சிவப்பணியின் சார்பிற் செய்திருந்தும் அவ்வச்செயலில் தான் வெளிப்பட்டுநின்ற சிவனருளாற் பெறற்கரும் பேறுபெற் றுய்ந்ததெல்லாம் அவ்வவர் அவ்வச் செயலிற் சிவனோடொற்றித்து நின்ற உறைப்பு விசேடமான அகமார்க்கத்தினாலேதான் என்பதாகும்.

3. மூர்க்கநாயனாரின் அதீதநிலை மாண்பு

குறித்த ஐவருள் முன்னைய நால்வரும் முறையே, சிவனடியார் குறிப்பறிந்து நிறைவேற்றுந் தம் தொழும்புறுதிக்கும், சுவாமி நைவேத்தியப் பொருள் வழங்கும் நியதிக்கும், சிவமகிமை பேணும் தம் உணர்வு நோன்மைக்கும், சுவாமிக்குச் சந்தனக்காப்பு வழங்குஞ் சிவத்தொண்டுக்கும் நேர்ந்த இடையூறுகட்குத் தாம்தாம் இடையூறாம்படி நின்று தம்மைத் தாமே துன்புறுத்தித் தங்கருமம் முடித்தவர்களாக, ஐந்தாமவராகிய மூர்க்கநாயனார், தம்மகேசுர பூசை நியதிக்குக் குந்தகமாக நேர்ந்திருந்த பொருள் முட்டுப்பாடாகிய இடையூற்றுக்கிடையூறு விளைப்பவராய்த் தாம் முயன்ற சூதுத் தொழில் பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கருத்தின் சாயலோ வலிந்து வாளாற் குற்றுதல் அடாப்பழி என்ற நினைவின் சாயலோ தம்மிற் படாத அளவுக்கு மகேசுரபூசை தொடர வைத்தலாகிய ஒரே கருத்தே தம் கருத்தாம்படி நின்றுள்ளார். அவர்கள் தம்மைத்தாம் துன்புறுத்துமளவில் தொண்டுறுதி காத்தார்களாக, இவர் அயலவரைக் கூசாது குற்றியும் தம் தொண்டுறுதி காத்தவராகின்றார். இங்ஙனம் ஒப்புமைமேல் வேற்றுமை கண்டு இவர் அதீதநிலை மாண்பறியப்படும். ஆயின், "ஈன்றாள் பசிகாண்பானாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை" என்பது வள்ளுவர் மறைநீதியாக, இந்நாயனார் சூதுமேற் சென்றமை பொருந்துமா றெங்ஙனமெனின், அது, செய்தொழிற்பயன் தமக்கே எனக்கொள்ளும் பற்று நிலையினராகிய சாமானியர்க்கே விதியும் அது தமக்கல்ல சிவனுக்கே என விட்டுக்கொடுப்பாராகிய ஜீவன் முத்தருக்கு விதிவிலக்குமாகலிற் பொருந்துமென்க. இம்மூர்க்கநாயனார், "உழவுந் தனுசும் ஒருமுகமேயானால் இழவுண்டோ சொல்லாயினி" என்ற திருக்களிற்றுப் படியார் கூற்றுக்கிணங்க, செயற்பொறுப்பைப் போலப் பயனேற்கும் பொறுப்பையுஞ் சிவனுக்கே விட்டுக் கொடுத்திருந்தமையால் அவர்க்கது பொருந்துதற்கையமில்லையாம். செயற்பலனை அவர் சிவனுக்கெனவே விட்டிருந்தமை, "சூதினில் வென்றெய்து பொருள் துரிசற்ற நல்லுணர்வில் தீதகல அமுதாக்குவார் கொள்ளத்தாந்தீண்டார் காதலுடனடியார்கள் அமுது செயக்கடைப்பந்தி ஏதமிலாவகை தாமுமமுது செய்து மேவுநாள்" என வருஞ் சேக்கிழார் செய்யுளாற் பெறப்படும். ஆயின், சிவனடியார்க்கமுதூட்டியமை கொண்டு அவர் செயற்பலனைச் சிவனுக்கே விட்டிருந்ததாகத் துணியலாகுமோ எனின் சிவனடியார் சர்வ பாவங்களினாலுஞ் சிவனின் வேறன்றி நிற்போராதலின் அது அவ்வாறாதற் கிழுக்கில்லை என்க. அது பற்றியன்றே, "நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே" எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதும் என்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. மூர்க்க நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. mUrgga nAyanAr purANam in English prose 
3. Moorkka Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The History of Murgga Nayanar

திருமுறைகளில் மூர்க்க நாயனார் பற்றிய குறிப்புகள்