logo

|

Home >

devotees >

mangkaiyarkkarasiyar-puranam

மங்கையர்க்கரசியார் புராணம்

 

Mangkaiyarkkarasiyar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து
    மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண்
சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல
    சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த
பொங்குதிரு வருளுடைய போத வல்லி
    பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட னருளா லின்பஞ்
    சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.

மதுரையில் இருந்த நெடுமாறநாயனாருக்கு மனைவியார் சோழராஜாவுடைய புத்திரியாராகிய மங்கையர்க்கரசியார். அவர் சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டவர். அந்தப் பரமாசாரியருடைய திருவருளினாலே நெடுங்காலம் தம்முடைய நாயகருக்குச் சைவவழித் துணையாகி, பாண்டி நாடெங்கும் சைவத்திருநெறியைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருந்து, அந்நாயகரோடு சிவபதத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


மங்கையர்க்கரசியார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

கணவனின் ஆத்மலாபப்பேறே கண்ணாக அவனுக்கு வழித்துணையாதல் உத்தம மங்கையர் இயல்பெனல்

சைவாசாரப் படியான தாம்பத்திய வாழ்வு, இம்மையின்பம் மட்டிலன்றி அம்மையின்பமான சிவப்பேறுங் குறித்தமைவதாகும். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் சிவசத்தி பாவனையின் வழுவாது அதற்கருகமாம் தூய வாழ்வு வாழ்ந்து சிவப்பேறடைய வைக்குந் தீர்ந்த நோக்கில், மணவறையில் அவர்களை உமாமகேஸ்வரர்களாகப் பாவித்துத் திருமணக்கிரியை நடத்தும் வழக்கம் இதற்கு நிதர்சனமாகும். ஆதி நூலாகிய தொல்காப்பியமே வாழ்வின் அத்யந்த இலட்சியம் இது என்பதனைக் "காமஞ் சான்ற கடைக்கோட்காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பண்பே" என வகுத்தோதி யிருப்பதுங் கருதத்தகும். எனவே, தாம்பத்திய வாழ்வில் ஈடுபடும் இருவரும் பரஸ்பரம் ஒருவரது ஆன்மிகப் பேற்றில் மற்றவர் கண்ணாயிருக்க வேண்டுங் கடப்பாடு முடையவராவர். இவ்வகையில் மனைவி, கணவருடைய ஆன்மிகப் பேற்றிற் கண்ணாயிருந்து மாபெருஞ் சாதனையொன்றைச் சாதித்த செய்தி மங்கையர்க்கரசியார் புராணத்தில் வருதல் காணலாம்.

புராதன சைவத்தமிழ்ப் பேரிராஜதானியாகிய மதுரையிலிருந் தரசாண்ட நின்ற சீர் நெடுமாறன் ஒருகால் சமணர் மந்திர தந்திர வஞ்சனைகளால் மதிமோசம் போய்ச் சைவநெறி கைநழுவிப் போகத் தானுந் தன் நாடும் சமண ஆதிக்கத்துட்படவிட்டிருக்குங் கட்டத்தில் அவன் பட்டத்துத் தேவியாகிய மங்கையர்க்கரசியார் தன்போல் சைவப் பிடிப்பினின்று நழுவாதிருந்த மந்திரியார் குலச்சிறையார் அநுசரணையுடன் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குத் தூதனுப்பி மதுரைக் கழைத்து அதன் விளைவாகப் பாண்டி நாட்டிற் சைவ மறுமலர்ச்சி பெற வைத்தவிபரம் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராண வரலாற்றால் நன்கறியப்படும். அவருடைய இப்பிரயத்தனத்துக்கு முக்கிய காரணம் தன் கணவன் அங்ஙனம் அவநெறிப் பட்டிருத்தல் மூலம் அவன் பெற்றாகிவிட வேண்டியதாகிய சிவப்பேற்றுக்குப் பெரும் பின்னிடைவு நேரப் போகிறதென்ற அவர் உள்ளத் துடிப்பேயாம். அது அங்ஙனமாதல், திருவாலவாய்த் திருக்கோயில் வாய்தலில் முதன்முறையாக நாயனாரை வரவேற்றுப் பணிகையில் அவர்நிலை இருந்தவாற்றை, "பானலங் கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி யானும் என்பதியுஞ் செய்த தவமென்கொல் என்றார்" எனச் சேக்கிழார் எழுதிக் காட்டுமாற்றாற் பெறப்படும். மேலும், அங்குப் பிள்ளையாரிருந்த மடத்துக்குச் சமணரிட்ட தீவெப்பு அரசனுக்கு வெப்புநோயாய்ச் சென்று வருத்தியதன் சார்பில் பிள்ளையார் முன்னிலையிற் குலச்சிறையாருடன் கூட்டாக அவர் புரிந்து கொண்டதாக வரும் விண்ணப்பம், "வெய்யதொழில் அமண்குண்டர் விளைக்கவரும் வெப்பவர்தாம் செய்யுமதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் மையலுறு மன்னவன்முன் மற்றவரை வென்றருளில் உய்யுமெமதுயிரும் அவன் உயிருமென உரைத்தார்கள்" எனச் சேக்கிழார் வாக்கில் வந்திருத்தலினாலும் அது பெறப்படும்.

அரசியார் கணவனது சிவப்பேற்று நலம்பற்றிக் கொண்ட இம்முயற்சியானது அன்றைய நிலையிற் சைவத்துக்குப் பெருநலம் விளைப்பதாயும் நாட்டின் தன்னியல்பான சமய சுதந்திரத்தை மீட்டுறுதிப் படுத்துவதாயும் நெடுமாறன் மட்டிலன்றி அவன் குலத்தையே மலினப் படுத்தவிருந்த கொடும் பழியைத் தவிர்ப்பதாயும் அமைந்தவாறுணரத்தகும். தூய்மையான பதிபக்தியுள்ள கற்பரசி யொருத்திக்குத் தெய்விக ஆற்றல் தானே விளையும் என்பதும் அதன்மூலம் சூழ்நிலை நன்மைகள் அளப்பில விளையும் என்பதும் இதனாற் பெறப்படும். திருவள்ளுவர், "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்றதனாலும் அது வலுவுறும். அரசியாரின் இத்தகு தெய்விக மேன்மை கண்டன்றே மாநுடம் பாடாவியல்புள்ள திருஞான சம்பந்தப் பிள்ளையார் ஒருகால், "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை" என்றெடுத்தும் மற்றொருகால் "மானினேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள்" என விளித்தும் இரு திருப்பதிகங்கள் இசைத்தருளியதும் என்க.

இம்மங்கையர்க்கர்சியார் புராணத்தில் அவர் மங்கலப் புகழ் நலன்களைத் தொகுத்துரைக்குஞ் சேக்கிழார் சுவாமிகள் அவரை, "எங்கள் தெய்வம்" எனவும் "தென்னர் குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை" எனவும் போற்றியதோடு, அவர்தம் பதிபக்தி நலம் விளங்கத்தக்கதாக, "நெடுமாறன் தனக்குச் சைவவழித் துணையாய் நெடுங்காலம் மருவிப் பின்னை ஆசில் நெறியவரோடுங் கூட ஈசர் அடிநிழற் கீழமர்ந்திருக்க அருளும் பெற்றார்" எனவும் போற்றி, மேலும் "பூசரர் சூளாமணியாம் புகலி வேந்தர் போன ஞானம் பொழிந்த புனிதவாக்கால் தேசுடைய பாடல் பெறுந் தவத்தி னாரைச் செப்புவதியா மென்னறிந்து" என்றுரைத் தடங்குந்திறம் உற்றுணர்ந்து நயத்தற்பாலதாம். பெண்மையின் தெய்விக ஆற்றல் நோன்மைக்கும் அதன் லோகோபகாரத் தன்மைக்கும் இவ்வரசியார் வரலாறு அசையாத அத்தாட்சியாகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. மங்கையர்க்கரசியார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. Mangaiyarkkarasiyar Nayanar Puranam in English prose 
3. Mangkaiyarkkarasiyar Nayanar Puranam in English Poetry

4.  மங்கையர்க்கரசி அல்லது பாண்டிமாதேவி

 

 


Related Content

The Puranam of Mangkaiyarkkarasiyar Nayanar