logo

|

Home >

devotees >

kannappa-nayanar-puranam

கண்ணப்ப நாயனார் புராணம்

 

Kannappa Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.

    வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
        விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
    காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
        காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
    தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
        சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
    ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
        வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே.

பொத்தப்பிநாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனாகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவிபெயர் தத்தை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணியசுவாமியுடைய சந்நிதானத்திலே சேவற்கோழிகளையும், மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டு வந்தார்கள்

சுப்பிரமணியசுவாமியுடைய திருவருளினாலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றாள். அப்பிள்ளையை நாகன் தன் கையிலே எடுத்தபொழுது திண்ணெனவாயிருந்தபடியால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான். அத்திண்ணனார் வளர்ந்து உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகாசமர்த்தராயினார், நாகன் வயோதிகனானபடியால், வேட்டைமுயற்சியிலே இளைத்தவனாகி, தன்னதிகாரத்தைத் தன்புத்திரராகிய திண்ணனாருக்குக் கொடுத்தான்.

அந்தத்திண்ணனார் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினார், வேட்டையாடும்பொழுது, ஒருபன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஓடியது. அதைக் கண்ட திண்ணனார் அதைக்கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்றார். நாணன் காடன் என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினார்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஓடிப்போய், இளைப்பினாலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனார் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடைவாளை யுருவி அதனை இருதுண்டாகும்படி குத்தினார். நாணனும் காடனும் இறந்துகிடந்த அந்தப் பன்றியைக் கண்டு திண்ணனாரை வியந்து வணங்கி, "நெடுந்தூரம் நடந்து வந்த படியால் பசி நம்மை மிகவருத்துகின்றது. நாம் இந்தப்பன்றியை நெருப்பிலே காய்ச்சித் தின்று, த்ண்ணீர் குடித்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு மெல்லப்போவாம்" என்றார்கள். திண்ணனார் அவர்களை நோக்கி, "இவ்வனத்திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது" என்று கேட்க; நாணன் "அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனால், மலைப்பக்கத்திலே பொன்முகலி யாறு ஓடுகின்றது" என்றன். அதைக்கேட்ட திண்ணனார் "இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நாம் அங்கே தானே போவோம்" என்று சொல்லி, அதை நோக்கி; நடந்து, அரைக்காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக் கண்டு, நாணனை நோக்கி, "நமக்குமுன்னாகத் தோன்றுகின்ற மலைக்குப் போவோம்" என்று சொல்ல; நாணன் "இந்தமலையிலே, குடுமித்தேவர் இருக்கிறார். நாம் போனாற் கும்பிடலாம்" என்றான்.

திண்ணனார் "இந்தமலையைக் கண்டு இதை அணுக அணுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்" என்று சொல்லி அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரைந்து சென்று, பொன்முதலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரநிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனைநோக்கி "தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு; நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வந்து சேருவோம்" என்று சொல்லி, நாணனோடும் அந்தப் பொன்முகலிநதியைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச் சென்று சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருத்தலைக் கண்டார், கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசனவேதியினாலே உருவம் மாறிப் பொன்மயமானாற்போல முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானார். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் ஞெமுங்கும்படி அக்கடவுளைத் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சுவிட்டுக்கொண்டு நின்று, சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள. இரண்டு கண்ணினின்றும் கண்ணீர் சொரிய வெயிலிடைப்பட்ட மெழுகு போல மனங்கசிந்துருக. "இந்தச்சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்" என்று சொல்லி ஆனந்தங் கொண்டார். "ஐயையோ! சிங்கம் யானை புலி கரடி துட்ட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது" என்று சொல்லித் துக்கித்து, தம்முடையகையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறிந்தவரகிப் பரவசமடைந்தார். பின் ஒருவாறு தெளிந்து "இவருடைய முடியிலே நீரை வார்த்துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ" என்றார். அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் "நான் முற்காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ஒரு பிராமணன் இவர்முடியிலே நீரைவார்த்து, இலையையும் பூவையும் சூட்டி உணவை ஊட்டி, சிலவார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன், இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான் போலும்" என்றான். அதைக்கேட்ட திண்ணனார் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு, "ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சிகொடுப்பார் ஒருவரும் இல்லை. இவர் அங்கே தனியே இருக்கின்றார். இறைச்சி கொண்டு வரும் பொருட்டு இவரைப் பிரியவோ மனமில்லை. இதற்கு யாதுசெய்வேன்? எப்படியும் இறைச்சிகொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு, சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் போவார். கன்றைவிட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல அவரிடத்திற்குத் திரும்பி வருவார் கட்டி அணைத்துக் கொள்வார்; மீளப்போவார்; சிறிதுதூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். "சுவாமீ! நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டு வருவேன்" என்பார். "நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக்குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவுமாட்டேன். ஐயையோ! நான் யாது செய்வேன்" என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பார். பின்பு ஒரு பிரகாரம் போய் வரத்துணிந்து, விலை எடுத்துக்கொண்டு, கையினாலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி நாணன்பின்னே வர, பிறவிஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்புமயமாகி, பொன் முதலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புகுந்தார்.

அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு, "நெருப்புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவயவங்களெல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்று போயிற்று. நீர் இவ்வளவு நேரமும் தாழ்த்தது என்னை" என்றான். நாணன் அதைக் கேட்டு "இவர் மலையிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப்பொந்தைப் பற்றிவிடாத உடும்பைப்போல அவரை நீங்கமாட்டாதவராய் நின்றார். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோம்பொருட்டு வந்திருக்கிறார். எங்கள் குலத்தலைமையை விட்டுவிட்டார். அந்தச் சுவாமி வசமாய்விட்டார்' என்றான். உடனே காடன் "திண்ணரே! நீர் என்ன செய்தீர்? என்ன பைத்தியங்கொண்டீர்" என்று சொல்ல; திண்ணனார் அவன் முகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி; அதினுடைய இனிய தசைகளை அம்பினாலே வெவ்வேறாகக் கிழித்து அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பதமாக வெந்தவுடனே, சுவைபார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினாலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச்சிகளெல்லாவற்றையும் தேக்கிலையினாலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல்லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், "இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றார். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி வீணாக உமிழுகின்றார். மற்றையிறைச்சியைப் புறத்திலே எறிந்து விடுகின்றார். தாம் மிகப் பசியுடையராயிருந்தும், தனை உண்கின்றாரில்லை. எங்களுக்குத் தருகின்றாருமில்லை. இவர் தெய்வப் பைத்தியங்கொண்டுக்கின்றார். இதனைத் தீர்க்கத்தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்கவேண்டும். வேட்டைக்காட்டிலே நிற்கின்ற ஏவலாளரையும் கொண்டு நாங்கள் போவோம்" என்று நினைத்துக்கொண்டு போனார்கள்.

திண்ணனார் அவ்விருவரும் போனதை அறியாதவராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துகொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயினால்முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒருகையிலே வில்லையும் அம்பையும் மற்றக்கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக்கல்லையையும் எடுத்துக்கொண்டு, "ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினால் இளைத்தாரோ" என்று நினைந்து இரங்கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருந்துதற்குத் தாழாதோடுகின்ற பறவைபோல மனோகதியும் பின்னிட ஓடிப்போய்க் கடவுளை அடைந்தார். அடைந்து, அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய காற்செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனநீரைத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தம்முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேல் சாத்தி, தேக்கிலையிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்து, "சுவாமீ! கொழுமையாகிய இறைச்சிக ளெலாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினால் அதுக்கி, நாவினாலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்றாயிருக்கின்றது. எம்பெருமானே! இதை அமுதுசெய்தருளும்" என்று சொல்லி, உண்பித்தார். பின்பு சூரியன் அஸ்தமயமாயிற்று, திண்ணனார் அவ்விரவிலே துஷ்டமிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ்செய்தல் கூடுமென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டும், மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக்குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றார். அப்படி நின்ற திண்ணனார் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும் பொருட்டு, வேட்டையாடுதற்கு மலைச்சாரலுக்குப் போனார். அது நிற்க.

அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைகளெல்லாம் திரண்டொருவடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் கோகிப்பிக்க வல்லமகா செளந்திரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் தழுவினும் பரமாணுப்பரிமாணமாயினும் சிந்தந்திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக்காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகமவிதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர், பிரமமுகூர்த்தத்திலே எழுந்து போய், பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு, சுவாமி சந்நிதனத்திலே போனார். போம் பொழுது அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக் கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினார். ஓடி நின்று, "தேவாதிதேவரே! தேவரீருடைய சந்நிதானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டுவப்புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், அவர்கள் இப்படிச் செய்து போதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ" என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார். பின்பு 'சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது' என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லையையும் திருவலகினால் மாற்றி, சம்புரோக்ஷணஞ்செய்து, மீளப் பொன் முதலியாற்றிலே ஸ்நானஞ் செய்து, திரும்பிவந்து, வேத மந்திரத்தினாலே சுத்திசெய்து, உருத்திரசமா நமகத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி பத்திரபுஷபங்களால், அருச்சனை செய்தார் செய்து, திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின்மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய திருமேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட மெழுகுபோல மனம் மிக உருகி இளசு, நாத்தழும்ப, கீத நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினார். பாடியபின் பலமுறை பிரதக்ஷிணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அருமையாக நீங்கிப் போய், தபோவனத்தை அடைந்தார். அது நிற்க.

முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணனார் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக்கொன்று, அவைகளினிறைச்சியை முன்போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற்றேனைப் பிழிந்து, அதனோடு கலந்து, முன்போலத் திருமஞ்சனமும் புஷ்பமுங்கொண்டு, மலையிலே ஏறி, சுவாமிசந்நிதானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து, "இந்த இறைச்சி முன்கொண்டுவந்தது போலன்று, இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின் இறைச்சி, இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த்திருக்கின்றேன். தேனும் கலந்திருகிறது. தித்திக்கும்" என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றார். அப்பொழுது முதனாட்போன நாணனும் காடனும் ஆகிய இருவராலும் தன்புத்திரராகிய திண்ணனாருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனாரைப் பற்பல திறத்தினாலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிந்தை நொந்து, "இனியாதுசெய்வோம்" என்று சொல்லிக்கொண்டு; அவரை விட்டுத் திரும்பிப்போய்விட்டார்ன்.

சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைப்பணியின் வழுவாது நிற்குந் திண்ணனார் பகற்காலத்திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக்காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். சிவகோசரியாரும் தினந்தோறும் வந்து, சந்நிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்திசெய்து, சைவாகமவீதிப்படி அருச்சித்துக்கொண்டு, "இந்த அநுசிதம் நிகழாமல் அருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து வந்தார். திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "அன்பனே! அவனை வேடுவன் என்று நீ நினையாதே. அவனுடைய செய்கைகளைச் சொல்வோம்.; கேள். அவனுடைய உருவமுழுவதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவமே. அவனுடைய அறிவுமுழுதும் நம்மை அறியும் அறிவே, அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகிய செய்கைகளே. நம்முடைய முடியின்மேல் உன்னாலே சாத்தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செருப்படி நம்முடைய குமாரனாகிய சுப்பிரமணியனுடைய காலினும் பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகின்றது. அவன் தன் வாயினால் நம்மேல் உமிழுகின்ற ஜலமானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்ற படியால்; கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரிசுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலைமயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழுதல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர்கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற்றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன்பினால் உருகி இளகிய மனசினோடும் மென்று, சுவைபார்த்துப் படைக்கப் பட்டபடியால், வேதவிதிப்படி யாகம் செய்கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமாயிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதனத்தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினோடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவாயிருக்கின்றன. அவனுடைய அன்பினால் ஆகிய செய்கைகளை உனக்குக் காட்டுவோம். நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளிந்திருந்து பார்" என்று சொல்லி மறைந்தருளினார். சிவகோசரியார் சொப்பனாவத்தையை நீங்கிச் சாக்கிராவத்தையை யடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தகளை நினைந்து நினைந்து, "அறியாமையே நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாகமாதி சாஸ்திரங்களிலே மகாபாண்டித்தியமுடைய மகாமுனிவர்கள் தேவர்களிடத்திலும் காணப்படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்பு வந்தது, ஐயையோ! எவ்வளவு அருமை அருமை" என்று ஆச்சரியமும், "இப்படிப்பட்ட பேரன்பர் செய்த அன்பின் செய்கைகளைப் புழுத்தநாயினும் கடையனாகிய பாவியேன் அநுசிதம் என்று நினைந்தேனே! ஐயையோ? இது என்ன கொடுமை" என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி மலையில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக்குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.

சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடுதற்குச் சென்ற திண்ணனார் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக்கொண்டு அதிசீக்கிரந் திரும்பினார். திரும்பி வரும்பொழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, "இந்தச்சகுனங்களெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என்கண்மணிபோன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித்ததோ! அறியேனே" என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார். அடியார்களுடைய பத்தி வலையில் அகப்படுகின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணனாருடைய அன்பு முழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினார். திண்ணனார் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார் வந்தவுடனே, இரத்தஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ்சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ்கின்ற நாடகப் பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார். விழுந்தவர் எழுந்து போய், இரத்தத்தைப் பலமுறை கையினாலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப்போய் விழுந்தார். நெடும்பொழுது உள்ளுயிர்த்தமின்றி இறந்தவர்கள் போலக்கிடந்தார், பின் ஒருவாறு தெளிந்து, "இப்படிச் செய்தவர்கள் யாவர்" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். எங்கும் பார்த்தார், வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு "என்னுடைய சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ இந்தவனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ! யாதென்று தெரியவில்லையே" என்று சொல்லி, மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார். வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணாதவராகி, திரும்பிவந்து, குறைவில்லாத துன்பத்தினாலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணீர்சொரிய அழுதார். "என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினாலே ப்ரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ! இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே! ஐயையோ! இதற்கு என்ன செய்வேன்" என்றார். இந்த உதிரம் என்னசெய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினாலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலைமருந்துகளை மலையடிவாரத்திலே பிடுங்கிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிக்கொண்டு போனார். தன்னினத்தைப் பிரிந்துவந்த இடபம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினால் வெருட் கொண்டு வனங்களெங்குந் திரிந்து, பல்வகையாகிய பச்சிலைகளைப் பிடுங்கிக் கொண்டு, சுவாமிமேல் வைத்த மனசிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார். அதினால், அக்கண்ணிவிரத்தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவிசோர்ந்து, "இனி நானிதற்கு என்ன செய்வேன்" என்று ஆலோசித்துக் கொண்டு நின்றார். நிற்க. "ஊனுக்கு ஊனிடம் வேண்டும்" என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வந்தது. உடனே, "இனி என்னுடைய கண்ணை அம்பினாலே இடந்து அப்பினால் சுவாமியுடைய கண்ணினின்றும் பாயும் இரத்தம் தடைப்படும்" என்று நிச்சயித்துக்கொண்டு, மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பையெடுத்துத் தம்முடைய கண்ணணத்தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார். அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந்தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினாலே கொட்டி ஆரவாரித்தார் கூத்தாடினார். "நான் செய்த செய்கை நன்று நன்று" என்று சொல்லி வியந்து, அத்தியந்த ஆனந்தத்தினாலே உன்மத்தர் போலாயினார். இப்படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும் பொழுது, திருக்காளத்தியீசுரர் அந்தத் திண்ணனாருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, தம்முடைய மற்றையிடக்கண்ணிலும் இரத்தஞ்சொரியப்பண்ணினார். அது திண்ணனாருடைய அளவில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றோனொருவன் பின்னும் அந்நிரயத்திலே வீழ்ந்தாற் போல, திண்ணவார் உவகைமாறி, கரையில்லாத துன்பக் கடலிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து, "இதற்கு நான் அஞ்சேன், மருந்து கைகண்டு கொண்டேன் இன்னும் ஒருகண்ணிருக்கின்றதே! அதைத்தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்" என்று துணிந்து. தம்முடைய கண்ணைத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்திலிருக்கின்றது என்று தெரியும் பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக் கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தியாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணைத்தோண்டும்படி அம்பைவைத்தார். தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்றாதவராகி, வேதாகமங்கள் தோன்றிய தம்முடைய அருமைத் திருவாய் மலரைத் திறந்து, "நில்லு கண்ணப்ப நில்லு! கண்ணப்ப! என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று அருளிச் செய்து, அவருடைய கண்ணைத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத்திற்றோன்றிய திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரும் வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமாரி பெய்தார்கள். மகாஞானியாகிய சிவகோசரியார் இந்தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரியமடைந்து, சுவாமியை வணங்கினார். அற்றைநாள் முதலாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லிய படியே அவருக்குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிறார்கள். நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன் வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருந்தவஞ் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள் ஆறுநாளுக்குள்ளே பெருகிய அன்பு மேலீட்டினாலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணை இடந்து அத்திருநயனத்தில் அப்புந் திண்ணனாருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டு, "நிஷ்களங்க பத்தியையுடைய கண்ணப்பா, நீ நமக்கு வலப்பக்கத்திலே நில்" என்று திருவருள் புரிந்தார். இதைப் பார்க்கிலும் பெற வேண்டிய பெரும்பேறு யாது?

திருச்சிற்றம்பலம்

 


கண்ணப்ப நாயனார் புராண சூசனம்

அன்புடைமை

எமக்கு இனியரென்று எம்மாலே தெளியப்பட்டவர் யாவரோ அவரிடத்தே எமக்கு விருப்பம் நிகழும். எமக்கு யாவரிடத்து விருப்பம் நிகழுமோ அவரிடத்தே எமக்கு அன்பு நிகழும். அன்பாவது தன்னால் விரும்பப்படவரிடத்தே தோன்றும் உள்ள நிகழ்ச்சி. ஆதலால், நாம் நமக்கு இனியவர் யாவரென்று ஆராய்ந்து, நிச்சயிப்பேம். தந்தை தாய் மனைவி மைந்தர் முதலிய உறவினரே எமக்கு இனியரெனக் கொள்வமெனின், இவருக்கும் எமக்கும் உளதாகிய தொடர்ச்சி நீர்க்குமிழிபோல நிலைமில்லாததாகிய இவ்வுடம்பினால் ஆயதாதலானும்; இவ்வுடம்பு ஒழியவே இதனாலாகிய தொடர்ச்சியும் ஒழிதவானும்; உடம்பினாலே தொடர்ச்சி உள்ளபோதும், நாம் தீவினைப் பயனை அனுபவிக்கும்வழி இவ்வுறவினரே பகைவராகவும், நல்வினைப் பயனை அனுபவிக்கும் வழி இவரல்லாத பகைவரும் உறவராகவும், காண்டலானும்; இவர் உறவராய் நின்றவழியும், எமக்கு இதம் செய்தல் தம் பயன் கருதியன்றி எம் பயன் கருதியன்மையானும், இவர் எமக்கு இனியரென்று கொள்ளுதல் ஒருவாற்றானும் கூடாது. நாமோ நம்மை ஒருகாலும் பகைத்தலின்மையானும், எந்நாளும் துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை அனுபவித்தல் வேண்டுமென்னும் கருத்தே நமக்கு உண்மையானும், நமக்கு நாமே இனியமெனக் கொள்வமெனின், கேவலாவத்தையிலே ஆணவமல மறைப்பினாலே அறிவும் தொழிலும் சிறிதும் விளங்காமையானும், சகலாவத்தையிலே அறிவும் தொழிலும் உள்வழியும், அவை சிற்றறிவும் சிறுதொழிலுமன்றி முற்றறிவும் முற்றுத்தொழிலும் அன்மையானும், அதனால் எமக்கு இது துன்பம் இது துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் பெறும் நெறி இது என உள்ளபடி அறிந்து துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுதல் கூடாமையானும், எமக்கு நாமே இனியமெனக் கொள்ளுதலும் கூடாது. முற்றறிவு முற்றுத் தொழில் உடையராகி, தம் பயன் குறியாது மலபெத்தராகிய ஆன்மாக்கள் மேல் வைத்த பெருங்கருணையினாலே, அவர்களுக்குத் தனுகரணங்களைக் கொடுத்து, ஆணவமல சத்தியைச் சிறிது நீக்கி, அறிவை விளக்கிப் போகங்களைப் புசிப்பித்து, மலபரிபாகமும் இருவினையொப்பும் சத்திநிபாதமும் வருவித்து, பாச நீக்கமும் சிவத்துவவிளக்கமும் செய்யும் பரமபதி ஒருவர் உண்மையானும், அவர் சிவனே ஆதலானும், அவரே எமக்கு இனியரெனக் கொள்ளல் வேண்டும். இக்கருத்தனைத்தும் நோக்கி அன்றோ, "என்னில் பிரரு மெனக்கினி யாரிலை - யென்னி லும்மினி யானொரு வன்னுள - னென்னுளே யுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் - கென்னு ளெநிற்கு மின்னம்ப ரீசனே" என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநாவுக்கரசுநாயனார் என்க. ஆதலால், அச்சிவனையே நாமெல்லாம் விரும்பி, அவரிடத்து இடையறாத மெய்யன்பு செய்தல் வேண்டும். அன்பு பத்தி என்பன ஒரு பொருட் சொற்கள்.

அன்பானது, குடத்துள் விளக்கும் உறையுள் வாளும் போல, ஒருவர் காட்டக் காணற்பாலதன்று; அவ்வன்புடைமையால் வெளிப்படும். செயல்களைக் கண்டவழி, இவை உண்மையால், இங்கே அன்பு உண்டென்று அநுமிதித்துக் கொள்ளற்பாலதாம். அது "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் - புன்கணீர் பூச றரும்" என்னும் திருக்குறளானும், "சுரந்த திருமுலைக்கே துய்யதிருஞானஞ் - சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த - மனமுடையா ளன்பிருந்த வாறு" என்னும் திருக்களிற்றுப்படியாரானும் உணர்க. சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அச்சிவனுடைய உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகம் கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடலும், பாடலும், அவர் உவப்பன செய்தலும், வெறுப்பன ஒழிதலும் பிறவுமாம்.

இவ்வன்பு இல்வழிச் சிவனை அடைதல் ஒருவாற்றானும் கூடாது. அது "உள்ள முள்கலந் தேத்தவல்லார்க்கலாற் - கள்ள முள்ளவ ருக்கருள் வானலன் - வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை - வள்ள லாகிய வான்மியூ ரீசனே." "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே - புக்கு நிற்கும் பொன் னார் சடைப் புண்ணியன் - பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என வரும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "தேவ தேவன்மெய்ச் சேவகன் றென்பே ருந்துறை நாயகன் - மூவ ராலு மறியொ ணாமுதலாய வானந்த மூர்த்தியான் - யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான் - றூய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே" என்னும் திருவாசகத்தானும், "என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப் - பொன்போ லெரியிற் பொரிய வறுப்பினு - மன்போ டுருகி யகங்குழைந் தார்க்கன்றி - யென்போன் மணியினை யெய்தவொண் ணாதே" என்னும் திருமந்திரத்தானும், "அன்பேயென் னன்பேயென் றன்பாவழைத் தழைத்திட் - டன்பேயன் பாக வறிவழியு - மன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமது - சாத்தும் பழமன்றே தான்" என்னும் திருக்களிற்றுப்படியாரானும், "கருமமா தவஞ்செ பஞ்சொல் காசறு சமாதி ஞானம் - புரிபவர் வசம தாகிப் பொருந்திடேம் புரை யொன்றின்றித் - திரிவறு மன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போ - முரைசெய்வோ மலர்மு னெய்தி யவருளத் துறைவோ மென்றும்." என்னும் வாயுசங்கிதையானும் அறிக. இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவன் அருளிச் செய்ய வரும். சிவன் அருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. அது "ஆங்கவ னருளாற் பத்திநன் குண்டாம் பத்தியா லவனரு ளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கருமமியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தியாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "அற்றுமன் றறியச் சுருங்கயா னுரைப்ப னாயிழை பாகன்வார் கழலிற் - றெற்றன வறிவாற் பத்திமை யெய்தல் வேண்டுமாற் சிறந்தபத் திமையான் - மற்றிணையில்லா முத்தியெய் திடுமான் மாசிலா தாயபத் திமையு - முற்றிழைபாக னருளினா லெய்தல் வேண்டுமான் மொழிந்திடுங்காலே" எ-ம். வாயுசங்கிதையிற் கூறுமாற்றால் உணர்க.

இடையறாது முறுகி வளரும் அன்பின் முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால் அன்பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். அன்பு முதிர்ச்சியிலே சிவம் விளங்கும் என்பதற்குப் பிரமாணம், திருவாசகம்; "பத்தி வலையிற் படுவோன் காண்க." எ-ம். "அம்மையே யப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவா ரமுதே - பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் - செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே - யிம்மையே முன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" எ-ம்; திருக்களிற்றுப்படியார். "ஆரேனு மன்பு செயி னங்கே த்லைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்." எ-ம். வரும். அன்பும் சிவமும் அபேதமாம் என்பதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "அன்பு சிவமிரண் டென்பரறிவிலா - ரன்பே சிவமாவ தாரு மறிகில - ரன்பே சிவமாவ தாரு மறிந்தபி - னன்பே சிவமா யமர்ந்திருப்பாரே." எ-ம். திருவாசகம்; "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே - யூறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் - தருளாய் - தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே - யீறிலாப் பதங்களி யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே." எ-ம் வரும்.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய இவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பின்றி விளங்கிய பெருந்தகைமையினர் இக்கண்ணப்ப நாயனார், இவர் வேதாகமங்களைக் கற்றல் கேட்டல் சிறிதும் இல்லா வேட்டுவச் சாதியிற் பிறந்தும், சிவனிடத்து மெய்யன்புடையராயினதற்குக் காரணம் என்னை எனின், முற்பிறப்பிலே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவனைத் தமது மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் உபாசித்தமையேயாம். இவர் முற்பிறப்பிற் செய்த தவமே இப்பிறப்பில் எல்லையின்றி முறுகி வளர்ந்த இவ்வன்புக்குக் காரணமாயிற்றென்பது இங்கே "முன்பு செய் தவத்தினீட்ட முடிவிலா வின்பமான - வன்பினை யெடுத்துக்காட்ட" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் முற்பிறப்பிலே பஞ்சபாண்டவருள் ஒருவராகிய அருச்சுனர் என்றுணர்க. பாசுபதாஸ்திரம் பெறவேண்டிப் பெருந்தவஞ் செய்த அருச்சுனரோடு கருணாநிதியாகிய பரமசிவன் வேட்டுவ வடிவங்கொண்டு வந்து, விற்போர் செய்து, அவரது வில்லினால் அடிபட்டு, பின்பு அவரைத் தீண்டி மற்போர் செய்து, பின்னர்த் தமது வடிவத்தைக் காட்ட, அது கண்ட அருச்சுனர் சிவனை வணங்கி, தமக்கு முத்தி தந்தருளும் பொருட்டு விண்ணப்பம் பண்ணினார். அதுகேட்ட பரமசிவன், 'நீ பகைவரைக் கொல்லுதற்பொருட்டுப் பாசுபதாஸ்திரம் பெற நினைந்து, தவம் செய்தாய்; ஆதலால், இப்பொழுது பாசுபதாஸ்திரமே தருவோம்" என்று கொடுத்தருளி, "நீ என்னை வேடன் என்று இகழ்ந்தமையால் வேட்டுவராசனாய்ப் பிறந்து, தக்ஷிணகைலாசமாகிய காளத்தி மலையை அடைந்து அன்புருக்கொண்டு, நம்மைப் பூசித்து, பன்றி முதலிய விலங்குகளைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை எமக்கு நிவேதிப்பாய்; அந்நாளிலே உனக்கு மோக்ஷம் தந்தருளுவோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இச்சரித்திரம் திருக்காளத்திப் புராணத்திற் கூறப்பட்டது.

நாயகி நாயகனது பெயர் கேட்டவுடனே வசமழிதல் தலையன்பும், அவனைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே பக்குவமான்மா சிவனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழியும் தலையன்பையுடைய நாயகிக்கு, அக்கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின் பெருக்கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றோ! அது போலவே! "இந்தச் - சேணுயர் திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவ ரிருப்பர்கும் பிடலாம்" என்று நாணன் கூறினமை கேட்டவுடன் வசமழிந்த தலையன்பையுடைய இந்நாயனாருக்கு, அக்கேட்டலோடு சிவலிங்கப்பெருமானைக் காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளர்ந்த அதிதீவிரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது.

இவர் சிவனது சட்சுதீக்ஷையினாலே பசுத்துவம் நீங்கி, சிவத்துவம் பெற்றார். அது இங்கே "திங்கள்சேர்சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே - யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் - தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் - பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவமானார்." என்பதனாலும் "முன்புதிருக் காளத்தி முதல்வனா ரருணோக்கி - னின்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத் - தன்பரிகம் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற - வன்புபிழம் பாய்த்திரிவா ரவர்கருத்தினளவினரோ" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.

பத்தியானது மந்தகரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின் முன் இருந்து வெதும்புதல் போல்வது மந்ததரபத்தி. மெழுகானது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது மந்தபத்தி. நெய்யானது சூட்டுக்கு இளகுதல் போல்வது தீவிரபத்தி. தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல் போல்வது தீவிரதரபத்தி. இந்நாயனாரது பத்தி தீவிரதரமேயாம் என்பது சிவலிங்கப்பெருமானைக் கண்டவுடனே நிகழ்ந்த இவர் செயல்களாலே தெளியப்படும். அச்செயல்கள் "மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள - வேகநா யகரைக் கண்டா ரெழுந்தபேருவகை யன்பின் - வேகமா னது மேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு - மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்" "நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கா றோறும் - வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கணீ ரருவி பாய - வடியனேற் கிவர்தா மிங்கே யகப் பட்டா ரச்சோ வென்று - படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற" என்னும் திருவிருத்தங்களால் உணர்க.

இந்நாயனார் சுவாமியைக் கண்டவழி வணங்குதல் பயின்றறியாதவராதலானும், தாய் தந்தையர் தங்களுக்கு இனிய பிள்ளையைக் கண்டவுடன் பேராசையினால் மிக விரைந்து ஓடிப் போய், தழுவி மோத்தல் உலகியற்கை ஆதலானும், தமக்கு இனியராகிய சுவாமியைக் கண்டவுடனே அதிமோகமாய் விரைந்து ஓடிச் சென்று தழுவி மோந்தார் என்க. இவர் தம்மினும் சிவனே தமக்கு இனியராக அது பற்றியெழுந்து முறுகி வளர்ந்த அன்பே வடிவமாயினார். அது, இவர் திருக்காளத்தி மலையை அணுகுமுன் பெரும்பசியால் வருத்தமுற்றும், சிவலிங்கப்பெருமானைக் கண்டபின் இவருக்கு அவ்வருத்தமென்பது சிறிதாயினும் தோன்றாமையானும், சிவபெருமான் துட்ட மிருகங்கள் திரியும் காட்டிலே தனித்திருத்தலால் அவரைத் தாம் பிரியமாட்டாமையையும், அவருக்கு அமுது செய்ய இறைச்சி இன்மையால் அதன் பொருட்டுத் தாம் பிரிதல் வேண்டினமையையும், குறித்து இவருக்கு எழுந்த பதைப்பு மிகுதியினாலும் தெளிக. அப்பதைப்பும் அதனால் நிகழ்ந்த செயல்களும் இங்கே "வெம்மறக் குலத்து வந்த" என்பது முதல் "முன்புநின் றரிதினீங்கி" என்பது இறுதியாய் உள்ள எட்டுத் திருவித்தங்களாலும் உணர்த்தப்பட்டன. இன்னும், இவர் சிவபெருமானைக் கண்ட நாள் முதல் ஆறு நாளும் பசி நித்திரை யென்பன இவருக்குச் சிறிதும் தோன்றாமையானும், காடன் தம்மோடு பேசினமையும், அவனும் நாணனும் தம்மை விட்டு போயினமையும், தந்தையாகிய நாகன் முதலியோர் வந்து தம்மோடு பேசினமையும், தம்மைப் பிரிந்தமையும் பிறவும் இவருக்குச் சிறிதும் விளங்காமையானும், இவர் இடையறாது ஒழுகும் தைலதாரைபோல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும் அன்புருவமே ஆயினார் என்பது ஐயம் திரிபு அற உணரப்படும்.

சிவன் உவப்பன செய்தலும் வெறுப்பன ஒழிதலும் அவரிடத்து அன்புடைமைக்கு அடையாளம் என்றீர். சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் நிவேதித்தலும், வாயிற் கொண்டு வரும் நீரால் அபிஷேகம் செய்தலும், காற்செருப்பினாலே திருமுடியில் நிருமாலியம் கழித்தலும், தலையிற் சூட்டிய பூக்களைச் சாத்தலும் ஆகிய இவைகள் நினைப்பினும் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய நரகத் துன்பம் பயக்குமன்றோ? அங்ஙனமாக, இவர் இவற்றைச் செய்தமை என்னையெனின், இவர் இப்பிறப்பில் ஓர் ஆசாரியரை அடைந்து, இது புண்ணியம் இது பாவம் இது செயற்பாலது இது ஒழிதற்பாலது என்று ஒருகாலும் கேட்டும் அறிந்தவர் அல்லர். முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியினாலே தாம் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்த பொழுது திருமுடியிலே நீர் வார்த்து மலர் இட்டு இருத்தல் கண்டமையானும், ஒரு பார்ப்பான் யாதையோ கொண்டு வந்து ஊட்டினான் என்று கேட்டமையானும், அவர் மாட்டு முறுகி வளர்ந்த அன்பினாலே இவையே சுவாமிக்கு உவப்பாவன என்று துணிந்து, அவ்வாறு செய்ய நினைந்து, தமக்கு முன் இனியதாய் உள்ளது மாமிசமே ஆதலால் அதுவே சவாமிக்கும் இனியதாம் என்று மாமிசத்தை வாயில் அதுக்கிச் சுவை பார்த்து இனியனவற்றைப் படைத்தலும், பாத்திரம் இன்மையால் அபிஷேகத்திற்கு ஜலம் வாயில் எடுத்துக் கொள்ளுதலும், ஒரு கையில் தேனொடு கலந்த மாமிசம் பொருந்திய கல்லையும் மற்றக் கையில் அம்புவில்லும் இருத்தலால் புஷ்பங்களைத் தலையில் வைத்தலும், திருமுடியில் நிருமாலியத்தைக் காற்செருப்பினால் கழித்தலும் செய்தனர். இன்னும், தாம் மாமிசம் உண்டல் போலச் சுவாமியும் உண்பரென்று நினைத்து "கொழுவிய தசைகளெல்லாங் கோலினிற் றெரிந்து கோத்தங் - கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய வினிமை பார்த்துப் படைத்தலில் விறைச்சி சால - வழகிது நாய னீரே யமுதுசெய் தருளும்" என்று வேண்டிக்கோடலும், சிவன் முடிவில்லாத ஆற்றலுடையவரென்பது நோக்காமல், 'நீர் துணையின்றித் தனித்து இருக்கின்றீரே' என்று நித்திரை இன்றி இரா முழுதும் எதிர் நின்று காத்தலும் செய்தனர். இவையெல்லாம் முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியால் சிவன்மாட்டு எழுந்து இடையறாது மேன்மேலும் முறுகி வளர்ந்த அன்பின் பெருக்கத்தினாலே செய்யப்பட்டமையால், அவருக்கு மிக உவப்பாயின. இது சிவகோசரியாருக்குச் சிவன் திருவாய்மலர்ந்தருளிய பொருளையுடைய, "அவனுடைய வடிவெல்லாம்" என்பது முதல் "உனக்கவன்றன் செயல்காட்ட" என்பது இறுதியாய் உள்ள ஏழு திருவிருத்தங்களாலும் உணர்க. "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் - செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் - விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தல் - கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ" என்னும் திருவாசகத்தானும் காண்க. பேய்பிடியுண்டாரது செயலெல்லாம் பேயின் செயலாதல்போல, பசுபோதம் அற்றுச் சிவபோதம் உற்ற இந்நாயனாரது செயலெல்லாம் சிவன் செயலேயாம் என்பது தெளிக.

சிவலிங்கப்பெருமானது திருக்கண்ணில் உதிரநீர் பாயக் கண்டபொழுது இந்நாயனாருக்கு உண்டாகிய பதைப்பு மிகுதியும், தமது கண்ணைத் தாமே இடக்கும்போதும் இவருக்குச் சிறிதாயினும் வருத்தம் தோன்றாமையும், அக்கண்ணைச் சிவனுடைய கண்ணில் அப்பினவுடனே உதிரநீர் நிற்கக் கண்டமையால் எழுந்த ஆனந்த மிகுதியும், சிவனது மற்றக் கண்ணிலும் உதிரநீர் பாயக் கண்டு தமது மற்றக் கண்ணை இடக்கும் போதும் சுவாமி கண்ணில் உதிரநீர் நிற்கும் என்னும் துணிவினாற் பிறந்த விருப்பமும், இவருக்குச் சிவன்மாட்டுள்ள அன்பே இன்பமாம் என்பதைத் தெளிவுற விளக்குகின்றன. அன்பே இன்பம் என்பது "அன்பினா லடியே னாவியோ டாக்கை, யானந்த மாய்க்கசிந் துருக" என்று திருவாசகத்திலும், "முடிவிலா வின்பமான வன்பினை யெடுத்துக் காட்ட" என்று இப்புராணத்தினும், "இறவாத வின்ப வன்பு வேண்டி" என்று காரைக்காலம்மையார் புராணத்திலும், கூறுமாற்றானும் அனுபவத்தானும் உணர்க.

இந்நாயனாரது உயர்வொப்பில்லாத பேரன்பை, எம்போலிகளும் உணர்ந்து தம்மாட்டன்பு செய்து உய்தற் பொருட்டு, சிவகோசரியாருக்கு வெளிப்படுத்தப் புகுந்த பரம கருணாநிதியாகிய சிவன், இவர் தமது மற்றக் கண்ணையும் இடக்கும் பொருட்டு அம்பை ஊன்றும்போது, தரிக்க லாற்றாதவராகிய, தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத் திற்றோன்றிய திருக்கையினாலே இவர் கையை அம்போடும் பிடித்துக்கொண்டு, "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப வென் னன்புடைத்தோன்ற னில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனால் இந்நாயனாரது அன்பிற்கும், சிவனது திருவருட்கும் உயர்வொப்பின்மை தெளிக. இவ்வாறு மும்முறை அருளிச்செய்தார் என்பது நக்கிரதேவர் அருளிச்செய்த கண்ணப்பதேவர் திருமறத்தில் "மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தது - நில்லு கண்ணப்ப நில்லுகண் ணப்பவென் - னன்புடைத் தோன்ற னில்லுகண் ணப்பவென் - றின்னுரையதனொடு மெழிற் சிவலிங்கந் - தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையா - லன்னவன் றன்கை யம்பொடு மகப்படப் பிடித் - தருளினன்" என்பதனாலும், இங்கே "மூன்றடுக்கு - நாக கங்கண ரமுதவாக்குக் கண்ணப்ப நிற்க வென்ற" எனக் கூறியவாற்றாலும், உணர்க.

இதுகாறுங் கூறியவாற்றால், சிவன்மாட்டுள்ள அன்பே பேரின்பம் என்பதும், அவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பில்லாதவர் இக்கண்ணப்பநாயனாரே யென்பதும், செவ்விதிற்றுணியப்படும். அது "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபி - னென்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி - வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் - சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்று திருவாசகத்தும், "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் - கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர் - தாமறிதல் காளத்தியாரறித லல்லதுமற் - றாரறிவு மன்பன் றது" என்று திருக்களிற்றுப்படியாரினும், கூறுமாற்றானும் தெளிக.

திருச்சிற்றம்பலம்

See Also: 
1. கண்ணப்ப நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. kaNNappa nAyanAr purANam in English prose 
3. Kannappa Nayanar Puranam in English Poetry 

Related Content

Thoughts - Importance of rituals

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்

The Puranam of Kannappa Nayanar

The History of Kannappa Nayanar