logo

|

Home >

devotees >

kandaradhitha-chozha-thevar-varalaru

கண்டராதித்தர் வரலாறு

ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது ஆசிரியர்களில் கண்டராதித்த சோழ  தேவரும் ஒருவர். அவரது பனுவல்கள் திருவிசைப்பாவில் நான்காவது தொகுப்பாக அமைகிறது. கண்டர் ஆதித்தர் சோழப் பேரரசின் அரசராக இருந்தார். அவர் தனது தந்தை  திருச்சிற்றம்பலத்தின் (தில்லை) கூரையைப் பொன்னால் வேய்ந்த முதல் பராந்தகனுக்குப் பின் இராஜகேசரி எனும் பட்டத்துடன் அரியணை அமர்ந்தார்.

கண்டராதித்தர் சோழப் பேரரசு தார்மீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியிலும் உயர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டினார். அரசராக இருந்த அதே நேரத்தில் தமிழ்கே கவி பாடும் வல்லவராகவும் இருந்தார். இந்தப் பேரரசர் தனது உள்ளத்தை முழு பிரபஞ்சத்தையும் இயக்கும் கூத்த பிரானிடம் ஒப்படைத்தார். கண்டராதித்தர், சோழப பேரரசில் சைவ நன்னெறியை நன்கு வளர்த்து, சிவாலயங்கள் அமைத்து, திருப்பணி செய்து, இறைவனுக்குப் பணிவிடை செய்து வந்தார். இவர் தம் சொற்கள் முவர் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடிய தேவாரத்தில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது என்பத தெளிவாகிறது. ஒரு கல்வெட்டு இந்த மன்னரை சிவ ஞான கண்டராதித்தர் என்று அழைக்கிறது.

இந்த மன்னன் சைவத்தை கடைபிடித்த போதும், ​​வைணவம் மற்றும் பிற மதங்களையும் நன்கு நடத்தினார். அவர் விஷ்ணுவுக்குக் கண்டராதித்த விண்ணகரம் என்ற கோயிலைக் கட்டியுள்ளார். கண்டராதித்தப் பெரும்பள்ளி எனும் சமண ஆலயத்தை , பள்ளிச்சந்தம் எனும் ஊரிலும் தோற்றுவித்தார். 

தில்லை மற்றும் திருவாரூரின் இறைவனை வழிபடுவதில் அவர் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது மனைவி, செம்பியன் மாதேவியார் தன் கணவர் போல் மிகப் பெரிய சிவபக்தராக இருந்தார். அவர் சிவபெருமானின் திருக்கோயில்களுக்கு ஏராளமான நன்கொடைகள் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார். பல சிவாலயங்களைக் கற்றளியாக எடுத்த பெருமைக்குரியவர். கோனேரிராஜபுரம் (திருநல்லம்), திருவக்கரை முதலிய சிவாலயங்களுக்குத் திருப்பணி புரிந்தவர். சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் இவ்வம்மையார் `மாதேவடிகள்` என்ற சிறப்புப்பெயர் பெற்றார். இந்தியப் பெருங்கடல் முழுவதும் சைவத்தின் நறுமணத்தைப் பரப்பிய மன்னன் ராஜராஜனை சைவ நன்னெறியில் வளர்த்து வந்தார்.

இந்தப் பெரியோர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில், தன் தம்பி அரிஞ்சய சோழனிடம்அரசுப் பொறுப்பை விடுத்துத்  தம்மை முழுவதுமாக, சைவப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டார். கல்வெட்டுகளில் ஒன்று கண்டராதித்தரை மேற்கெழுந்தருளிய தேவர் எனக் குறிக்கிறது. அரச சிம்மாசனத்தைத் துறந்து பாரதத்தின் மேற்குப் பகுதிகளுக்குத் தல யாத்திரை சென்றார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

அவரது பாடல்களில் ஒரே ஒரு பதிகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. இது தில்லைக் கூத்தப்பிரானைப் பாடப்பட்டதாகும். அப்பதிகத்தின் எட்டாம் திருப் பாடலில் தம் முன்னோர் சிறப்பியல்புகளையும், திருக்கடைக்காப்புச் செய்யுளில் தம்மைக் கோழிவேந்தன் (கோழி - உறையூர்) தஞ்சையர்கோன் என்றும் கூறிக்கொள்கின்றார்.

திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அதுபோன்றே தென் ஆர்க்காடு மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்தப் பேரேரி எனும் ஏரி ஒன்றினையும் தோற்றுவித்தார். கண்டராதித்தர் 950 - 957 A.C.E க்கு இடையில் சோழப் பேரரசை ஆண்டார். 


See Also: 
1. திருவிசைப்பா  
2. Chembiyan Madeviyar 
3. Thirumurai Kanda Chozan - Rajarajan

Related Content

புகழ்ச் சோழ நாயனார் புராணம்

கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்

திருமுறைகளில் கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் பற்றிய குறிப்ப

திருமுறைகளில் புகழ்ச்சோழ நாயனார் பற்றிய குறிப்புகள்

திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் (ராஜராஜ சோழன்)