logo

|

Home >

devotees >

isai-gnaani-ammaiyaar-puranam

இசைஞானி அம்மையார் புராணம்

 

Isai Gnaani Ammaiyaar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


நாவற் றிருப்பதிக்கோர் செல்வச் சைவ
    நாயகமாஞ் சடையனார் நயந்த வின்பப்
பூவைக் குலமடந்தை பொற்பார் கொம்பு
    புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே
யாவிற் றிகழ்தலைவன் வலிய வாண்ட
    வாரூர ரவதரிக்க வருந்தவங்கள் புரிந்தார்
யவர்க்கு மெட்டாத விசைந்த வின்ப
    விசைஞானி யெனஞான மெளிதா மன்றே.

சடையநாயனாருடைய மனைவியார் இசைஞானியாரென்பவர் எம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்திநாயனாரைப் பெற்றருளிய அவருடைய பெரும்புகழைச் சிறியேனுடைய புன்மொழியினாலே புகலமுடியுமோ? முடியாது.

திருச்சிற்றம்பலம்.

 


இசைஞானி அம்மையார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

அம்மையார் மகிமை புகழ்ச்சி வரம்புள் அமையாதெனல்

"கமலாபுரத்தில் (திருவாரூர்) சிவ கௌதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் மரபில் அவதரித்தவர்" எனக் கூறுஞ் சிலாசாசனத்தாலும் ஆரூர்ப் புனித அரன் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள் என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதி உண்மையாலும் திருவாரூர்ப் பிறந்து திருவாரூர்ச் சிவபெருமானிடத்து வெகு ஈடுபாடு கொண்டிருந்தவராக அறியப்படும் இசைஞானியார் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை என்பதிலிருந்து, "ஆரூர்த் திருமூலத்தானத்தே அடிப்பேரன் ஆரூரன்" என அவரே பாடியதற்கிணங்கவுள்ள, அவர் இயற்பெயராகிய நம்பியாரூரர்ப் பெயர் வழக்குக்கும் திருத்தொண்டர்புராணங் கூறுதற்கிணங்க, அவரின் அதிசயான்விதமான வாழ்விய லற்புதச் சிறப்புகளுக்குத் திருவாரூரே கேந்திர நிலையமா யிருந்துள்ளமைக்கும் ஒருகால், கொடுங்கோளூரில் சேரமானோடு நண்புறவு கலந்து களித்திருக்கையில் அவர் அன்பநுசரணைத் தடையையும் மீறி, "ஆரூரானை மறக்கலுமாமே" என அவரை ஆவலித் தெழுவிக்கு மளவினதும் மற்றொரு கால் திருவொற்றியூரில் திருவாரூர்த் தொடர்புக்குப் பாதகமாம்படி, சிவன் சந்நிதியில் தாம் செய்து வைத்த சபதத்தையும் மீறி, "எத்தனை நாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" என அவரை உத்வேகங்கொளவைக்கு மளவினது மான அவரது திருவாரூர்த் தலப்பற்று முதிர்வுக்கும் நேரடிக் காரணம் இவர் அந்த அம்மையாரின் கர்ப்பவாசம் பெற்றுப் பிறந்தமையே எனல் நன்கு துணியப்படு மாகலின் அத்தகைய அவர் பெருமகிமை புகழ்ச்சி வரம்புள் அடங்க வாரா தென்பதே அதற்காஞ் சரியான மதிப்பீடாதல் அமையும். அது அவர் புராணத்தில், ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்களெய் தழித்தா ராண்ட நம்பிதனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால் என வரும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. இசை ஞானி நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. isaignAni nAyanAr purANam in English prose 
3. Isai Gnaani Ammaiyaar Puranam in English Poetry 

 


Related Content