logo

|

Home >

devotees >

gurunamachivayar-history

குருநமசிவாயர் வரலாறு


நினைக்க வீடுபேறளிக்குஞ் சிவப்பதியாகிய திருவண்ணாமலையிலே நமசிவாய மூர்த்தி என்னும் பெயருடைய சித்தர் ஒருவர் எழுந்தருளியிருந்தார். அவர் மலையின் மேல் குகையில் நிட்டை புரிந்து கொண்டிருந்தபடியால் அவருடைய பெயர் குகைநமசிவாயர் என்று வழங்கியது. அவர் குகையின் அண்மையில் வளர்ந்தோங்கி நின்ற ஓர் ஆல மரத்தின் மீது தூங்கும் ஊஞ்சலிட்டு அதில் அறிதுயில் கொள்வது வழக்கம். 

குகைநமசிவாயருக்கு நமசிவாயமூர்த்தி என்னும் பெயருடைய மாணவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குருவுக்கு அண்மையில் இருந்து மிகுந்த அன்புடன் பணிவிடை செய்தலைத் தம்முடைய கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறிருக்கும்-போது ஒருநாள் திடீரென்று நகைத்தார். சீடர் நகைத்ததைக்கண்ட குருவானவர், "அப்பா! நமசிவாயம்! என்ன புதுமையைக் கண்டு நகைத்தாய்?” என்று கேட்டார். 

நமசிவாயர் தம்முடைய ஆசிரியரைப் பார்த்து, 'என்னை அடிமை கொண்ட ஐயனே! திருவாரூரிலே தியாகராசர் திருவுலாக் கொண்டருளினார். தெருவில் கூத்திகள் பலர் கூத்தியற்றிக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருத்தி கால் தடுக்கி மல்லாந்து கீழே விழுந்தாள். அங்கு நின்றவர்கள் அனைவரும் நகைத்தனர். நானும் நகைத்தேன் அதைத் தவிர வேறொன்றும் இல்லை' என்றார். 

மற்றொரு நாள் நமசிவாயர் தம்முடைய ஆடையைப் பிடித்துத் தேய்த்தார். குருவானவர் தம்முடைய மாணவரைப் பார்த்து, "எதற்காக இப்படித் தேய்த்தாய்?" என்று உசாவினார். அதற்கு மாணவராகிய நமசிவாயர், ''திருத்தில்லையிலே பொன்னம்பலத்திற்குக் கறுப்புத் திரை போட்டிருந்தார்கள். அதற்கு அண்மையில் குத்து விளக்கிலே நெய்விட்டுத் திரிபோட்டு எரியவிட்டிருந்தார்கள். அத்திரியை ஓர் எலி இழுத்துக்கொண்டு சென்றது. அப்பொழுது திரை பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் திரையைத் தேய்த்துத் தீயை அணைத்தார்கள். அடியேனும் தேய்த்து மேலும் எரியா வண்ணஞ் செய்தேன்'' என்று கூறினார். 

"பிறகு ஒருநாள் குகைநமசிவாயர் தம்முடைய மாணவரை ஆராய்ந்து பார்த்தற் பொருட்டு வாந்தி செய்து அதைத் திருவோட்டிற் பிடித்துத் தம்முடைய மாணவரிடங் கொடுத்து, ''இதனை மனிதர் காலடிபடாத இடத்தில் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வா'' என்று கூறினார். நமசிவாயர் மனிதர் காலடிபடாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்து அதனைத் தாமே சாப்பிட்டுவிட்டார். 

குருவானவர் இப்புதுமைகளையெல்லாம் பார்த்து மாணவரை நோக்கி, ''அப்பா! நமசிவாயம் அடிபடாத இடத்தில் வைத்தாயா?" என்று கேட்டார். மாணவர் "வைக்கவேண்டிய இடத்தில் வைத்தேன்'' என்று கூறினார். ஆசிரியர் நமக்கு மேல் மாணவனுக்கு வரவ மெய்யறிவு மிகுதிப் பட்டுக்கொண்டிருக்கிறது. இனிமேல் இவ்விடத்தில் வைத்திருக்கக்கூடாது. இன்னும் ஒரு புதுமை பார்த்து மாணவனைத் தக்க இடத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். 

ஒருநாள் நமசிவாயர் தம்முடைய மாணவரைப் பார்த்து ; 

 

''ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென 
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென – 

என்று ஒரு வெண்பாவில் பாதியைப் பாடினார். இதனைக் கேட்ட மாணவர் "ஏன் சுவாமி எஞ்சியதையுங் கூறலாமே'' என்று கேட்டார். குகைநமசிவாயர், ''எஞ்சியதை நீ முடி பார்ப்போம்" என்று கூறினார். அதற்கு மாணவர் "நான் குருவாக்கிற்கு எதிர்வாக்குச் சொல்லக் கூடாது" என்றார். "நீ ஞானப் பிள்ளையாகையாற் சொல்லலாம்” என்றார் ஆசிரியர். உடனே மாணவர் ; 

- சாலவனச் 
செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ 
ஐயா நமச்சிவா யா'' 

என்று பாடலை முடித்தார். 

இதனைக் கேட்டதும் குகைநமசிவாயர் தாம் அறிதுயில் கொள்ளும் படுக்கை விட்டு இறங்கி, ''அப்பா! என்னிரு கண்மணியே! இன்றல்லோ நீ மெய்யறிவை அடைந்தாய். புதுமை ! புதுமை ! உன்னைப்போல் மாணவன் யாருக்குக் கிடைப்பான்? உன் பெயர் இன்று முதல் குருநமசிவாயர் என்று வழங்குக என்று சொல்லித் தழுவிக்கொண்டார். பிறகு மாணவரைப் பார்த்து, ''ஒரு தூணிலே இரண்டு யானைகளைக் கட்டுதல் கூடாது. இதுவோ போகத்தையளிக்குஞ் சிவப்பதி. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தரும் அம்பலவாணர் எழுந்தருளியிருக்கும் மேலான சிவப்பதியாகிய திருத்தில்லை என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. அப்பதியில் உன்னால் திருப்பணி முதலியவை நடைபெற வேண்டியதாக இருக்கிறது. ஆகவே நீ அங்கே போய்த் தங்கியிருக்குதல் வேண்டும்' என்று கூறினார். 

மாணவர் ஆசிரியரைப் பார்த்து, ''நான் குருவைப் போற்றி வழிபட்டுக்கொண்டு அவரைத் தரிசித்திருப்பேனே யல்லாமல் குருவின் தரிசனம் இல்லாமல் இருக்க மாட்டேன்'' என்றார். ஆசிரியர் தம் மாணவரைப் பார்த்து "நீ திருத்தில்லை போய் அங்கு தங்கியிரு, கூத்தப்பிரான் என்னைப்போல் காட்சியளிக்க வில்லையானால் இவ்விடத்திற்கு வந்துவிடு'' என்று கூறினார். குருநமசிவாயர் ’நல்லது' என்று ஒப்புக்கொண்டு ; 

''வாக்காலே தியானத்தாலே மனமகிழ் கிருபையாலே 
நோக்காலே பரிசத்தாலே நுண்ணிய பிறவி தீர்க்கும் 
தாக்கான நமசிவாயம் சலக்கமெய் யாடுகின்ற 
நாற்காலி காலதானால் நான் முத்தி பெறலுமாமே'' 

என்று பத்துப்பாடல்களாற் புகழ்ந்து வணங்கினார். ''நடக்கலாம்'' என்று ஆசிரியர் கட்டளை பிறந்தது. உடனே நமசிவாயர் தாம் மட்டுந் தனித்தவராய்ப் புறப்பட்டுக் கிழக்கு நோக்கிக் காதவழி வந்தார். இருள் மிகுந்து இராப்போதாயிற்று. ஓரிடம் பார்த்து ஒரு மரத்தின்கீழே நிட்டை கூடியிருந்தார், நேரமாகியதும் பசிநோய் வருத்தத் தொடங்கியது. உண்ணாமுலை அம்மையை எண்ணி ; 

''அண்ணா மலையார் அகத்துக் கினியாளே 
உண்ணா முலையே உமையாளே- நணணா 
நினைதோறும் போற்றிசெய நின்னடியார் உண்ண 
மனைதோறுஞ் சோறு கொண்டு வா'' 

என்னும் வெண்பாவைப் பாடினார். அண்ணாமலையில் அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொற்றாம்பாளத்தில் வைத்துப் படைத்தனர். பூசகர் முதலியோர் அப்பொற்றாம்பாளத்தை எடுப்பதற்கு மறந்து கோவிலைப் பூட்டிக்கொண்டு அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். உண்ணாமுலை அம்மையார் அத்தாம்பாளத்தை உணவோடு எடுத்துக் கொண்டுவந்து குருநமசிவாயருக்குக் கொடுத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தார். 

மறுநாள் பொழுது விடிந்தது. பூசகர் முதலானோர் கோயிலுக்குள் வந்து கோவிலைத் திறந்து பொற்றாம்பாளத்தைப் பார்த்தார்கள். அஃது எங்கும் காணப்படவில்லை. யாரோ கள்வர்கள் கோவிலுக்குள் நுழைந்து பொற்றாம் பாளத்தைக் களவு செய்து கொண்டு போய்விட்டார்கள் என்று கோவில் குருக்களும் ஊர்வாழ் மக்களும் எண்ணினார்கள். தாம்பாளத்தைத் தேடி எல்லோரும் மனங் கவன்று சுழன்றதில் இருபது நாழிகை வரையில் கோவிலிற் பூசை நடைபெறவில்லை. அப்போது ஓர் அந்தணச் சிறுவன் மீது ஆவேசம் வந்தது. அவன் கூடியிருந்த மக்களைப் பார்த்து, ''குருநமசிவாய மூர்த்தி திருத்தில்லைக்குப் போகிற வழியிலே ஓர் ஆல மரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். அவருக்கு அமுது கொண்டுபோய் உண்ணா முலையம்மையார் கொடுத்தார். தாம்பாளம் அங்கே கிடக்கிறது எடுத்துக்கொண்டு வாருங்கள்'' என்று இயம்பினான். அதனைக் கேட்டு எல்லோரும் வியப்படைந்தார்கள். குருக்கள் முதலியோர் குறிப்பிடப்பட்ட இடத்திற்குப் போய்த் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். 

குருநமசிவாயர் மறுநாட் காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு குருவைப் போற்றி வழிபட்டுக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டார். வழியில் இருடிவந்தனம் என்னும் பெயருடைய சிறந்த பதியைக் கண்டார். அப்பதியில் அம்மனும் சுவாமியும் பாகம் பிரியாமலிருப்பர். முனிவர்கட்கரசராகிய அகத்திய முனிவராற் பூசிக்கப்பட்டது. அங்கு ஐயாயிரங்கொண்டான் என்னும் பெயருடைய தீர்த்தநீரும் உண்டு. குருநமசிவாயர் அதில் நீராடி நாட்கடன்களை முடித்துக்கொண்டு நிட்டையில் இருந்தார். பசிநோய் வந்தணுகியது. அவ்வளவில் ; 

''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில் 
நீயிருக்க நான்தளரல் நீதியோ-வேயிருக்கும் 
தோளியே விண்ணோர் துதிக்குந் திருமுத்து 
வாளியே சோறு கொண்டு வா.'' 

என்று பாடினார். இதனைப் பாடியதும் அம்பிகை தோன்றி; என்னப்பா ''நான் பாகம்பிரியாமல் இருக்கவும் நீ பிரித்துப் பாடினது சரியா? உன்னுடைய வாக்கினாலே பிரித்துப் பாடக் கூடாது. சேர்த்துத்தான் பாடவேண்டும்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். குருநமசிவாயர்; 

''மின்னும் படிவந்த மேவுகல தீசருடன் 
மன்னுந் திருமுத்து வாளியே-பொன்னின் 
கலையாளே தாயேயென் கன்மனத்தே நின்ற 
மலையாளே சோறு கொண்டு வா'' 

என்று பாடினார். அம்மையார் அமுது கொண்டுவந்து வழங்கினார். குரு நமசிவாயர் அதனை உண்டுவிட்டு அங்கு நின்று புறப்பட்டார். விருத்தாசலம் என இந்நாளில் வழங்கும் பழமலைக்கு வந்து சேர்ந்தார். மணிமுத்தா நதியில் நீராடினார்; பழமலை நாதரையும் பெரியநாயகியம்மை யாரையும் போற்றி வழிபட்டார். ஒரு குளக்கரையிலே நிட்டையில் அமர்ந்தார். பசிநோய் உண்டாகியது. 

''நன்றிபுனை யும்பெரிய நாயகியெ னுங்கிழத்தி 
என்றுஞ் சிவன்பால் இடக்கிழத்தி - நின்ற 
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி 
மலைக்கிழத்தி சோறு கொண்டு வா” 

என்று பாடினார். அவ்வளவில் அம்மன் தண்டூன்றிக் கொண்டு விருத்தாம்பிகையாக வந்து குரு நமசிவாயரைப் பார்த்து, "என்னப்பா உன்னுடைய வாக்கினாலே என்னைக் கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க முடியுமா? தண்ணீர் எடுக்க முடியுமா? அமுது கொண்டு வர முடியுமா?'' என்று உசாவினார், 

குரு நமசிவாயர் அம்பிகையைப் பார்த்து ''அம்மா! பாலகாசியிற் பாலாம்பிகை. இது விருத்த காசி. நீரும் பெரிய நாயகி உம்முடைய சுவாமியும் பழமலை நாதர் ஆகையால் நான் இவ்வாறு பாடினேன்'' என்று கூறினார். "உன்னுடைய வாக்கால் இளமையாகப் பாடவேண்டும் என்று அம்பிகையார் கேட்டுக்கொண்டார். குரு நமசிவாயர், "அப்படிப் பாடினால் இரண்டு அம்மன்களாக முடிகிறதே'' என்று சொன்னார். ''முடிந்தால் முடியட்டும்" இளமையாகவே பாடவேண்டும் என்று அம்பிகையார் கட் டளையிட்டார். உடனே குரு நமசிவாயர்; 

''முத்த நதிசூழும் ழதுகுன் றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தர் 
இடத்தாளே மூவா முலைமேல் ஏரார 
வடத்தாளே சோறு கொண்டு வா' 

என்று பாடினார். அம்பிகையார் வாலாம்பிகையாய் உணவு கொண்டுவந்து கொடுத்தார். அதனை உண்டுவிட்டுப் புறப்பட்டுப் புவனகிரிக்கு வந்து சேர்ந்தார். நான்கு கோபுரங்களும் காணப்பட்டன. அவைகளைப் போற்றிப் பணிந்தார். 

''கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டிற் குற்றமெலாம் 
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள் 
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம் 
பார்க்கின்றார்க் கென்னோ பலன்'' 

என்று பாடிக்கொண்டே திருத்தில்லைக்கு வந்து சேர்ந்தார். கோவிலுக்குப் போய்ச் சிவகங்கையில் நீராடினார். 

''கண்டமட்டில் கண்டவினை காதம்போம் கையிலள்ளிக் 
கொண்டமட்டில் கொண்டவினை கொள்ளைபோம் --- வண்டமிழ் சேர் 
வாயார வேபுகழும் வண்ணச் சிவகாமித் 
தாயார் திருமஞ்சனம்"

என்று பாடினார். பொன்னம்பலத்திற்குப் போய்க் கூத்தப்பிரானைப் போற்றி வழிபட்டார். கூத்தப்பிரான் திருவருணையில் இருக்கும் குருவாகிய குகை நமசிவாயரைப் போலக் காட்சி கொடுத்தார். அப்போது இவர்; 

''திருவணா மலையிற் குகைநம சிவாய 
      தேசிக வடிவமா யிருந்து 
கரவனா மடியேன் சென்னிமேல் உனது 
      கழலினை வைத்தவா றுணரேன் 
விரகநா ரியரைப் புதல்வரைப் பொருளை 
      வேண்டிய வேண்டிய தனைத்தும் 
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம் 
      பலவனே! பரமரா சியனே!'' 

என்று நூறு பாடல்களை ஒரு நாழிகை நேரத்தில் நின்ற படியே பாடினார். (இந்நூல் பரமராசிய மாலை என்னும் பெயரோடு வழங்குகின்றது). பிறகு ஓர் அறைக்குட் சென்று நிட்டை செய்துகொண்டிருந்தார். தில்லைவாழ்ந்தணர்களில் மிகச் சிறந்தவர்களாக மூவர் இருந்தனர். அவர்களுடைய பெயர் சிவமுத்தர், சடாமுத்தர், மகாமுத்தர் என வழங்கும். தில்லையம்பலவாணர் அம்மூவரிடமும் போய்த் "திருவண்ணாமலையில் இருந்து ஒரு துறவி இங்கு வந்துள்ளார். அவர் மிகப் பெரியவர். யோகநிட்டையில் அதிகமாக இருப்பவர். அவருக்குத் தனியே இடங்கொடுக்கவேண்டும். அவராலே நமக்குப் பல திருப்பணிகள் நடைபெறக் காத்திருக்கின்றன. அதற்கு எங்கே இடமென்றால் நம்முடைய கோவிலுக்கு வடபுறத்தின் எல்லைக்கப்புறம் இடமிருக்கின்றது; அங்கே நாம் போய் இரண்டு தரம் அடிவைத்திருக்கின்றோம். அஃது எதற்காகவெனின் மாணிக்க வாசகருடைய திருவாசகத்தை எழுதுவதற்காகவும் உபமன்யருக்குத் திருப்பாற்கடலை அழைத்துக் கொடுப்பதற்காகவுமாம். அவ்விடத்திற்கு . இவரை அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்" என்று கூறி மறைந்தருளினார். அவ்வாறே தில்லைவாழந்தணர் மூவரும் குரு நமசிவாயரை அவ்விடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டுக் கோவிலுக்கு வந்துவிட் டார்கள். அவ்விடத்திலே இவர் நிட்டை புரிந்துகொண்டிருந்தார். அப்போது பசிநோய் உண்டாகியது. உடனே; 

''ஊன்பயிலுங் காயம் உலராமல் உன்றனது 
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் --தேன்பயிலும் 
சொல்லிய நல்லார் துதிக்கும் சிவகாம 
வல்லியே சோறு கொண்டு வா" 

என்று பாடினார். அப்போது சிவகாமியம்மையார் அமுது கொண்டு வந்து இவருக்களித்து; 

''கொண்டுவந்தேன் சோறு குகைநமச்சி வாயரது 
தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த 
பேய்ச்சிமுலை யுண்ட பெருமாள் உடன்பிறந்த 
நாய்ச்சி சிவகாமி நான்'' 

என்று திருவாய் மலர்ந்தருளியதுடன் நாள்தோறும் உணவு வழங்கிக்கொண்டிருந்தார். இவர் நிட்டையிலே பொருந்தி யிருந்தார். 

குரு நமசிவாயர் மெய்ஞ்ஞானி என்பதை உணர்ந்த பலர் இவரிடம் வந்து போற்றி வழிபட்டுச் செல்லத் தொடங்கினார்கள். அவர்கள் பணங் காசு முதலிய பொருள்களை எதிரிலே வைத்துவிட்டுச் சென்றார்கள். அவைகள் மலைபோற் குவிந்து கிடந்தன. குரு நமசிவாயர் யோகநிட்டையில் இருந்து புற நோக்காகும்போது அப்பொருள்களைப் பார்த்து இஃது ஆட்கொல்லி ; இஃதிவ்விடம் இருத்தல் தகாது என்று எண்ணமிட்டுக் கொண்டே அப்பொழுது யார் எதிரே இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்து அப்பொருளை எடுத்துக்கொண்டு போகுமாறு கட் டளையிடுவார். அவர்கள் அவ்வாறே எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். இவ்வாறு ஏராளமான பொருட்கள் போயின.

இவ்வாறு பெரும் பொருள் வீணாதலைத் தில்லை மூவாயிரர் பார்த்து இவ்வாறு பெரும் பொருள் வீணாகப் போகிறதே என்று எண்ணமிட்டார்கள். குரு நமசிவாயர் இடத்திற்கு வந்து, 'தேவர் இவ்விடத்தில் இருக்கிறபடியால் கண்ட பேர் பொருளை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கோவிலுக்குள் வந்தால் பல் திருப்பணிகள் நடைபெறும். பல கட்டளைகளை ஏற்படுத்தலாம் ஆகையால் உள்ளே வரவேண்டும்" என்று கூறினார்கள். 

குரு நமசிவாயர் "நாம் அம்பலவாணர் கட்டளைப்படி இங்கு வந்திருக்கிறோம் நமக்கு அவ்விடத்திலே என்ன வேலையிருக்கிறது?'' என்று சொல்லி ஊருக்குள்ளே செல்வதற்கு மறுத்தார். 

தில்லைவாழந்தணர்கள் இவர் நாமழைத்தால் வரமாட்டார் நம்முடைய சுவாமியைக் கொண்டு அழைக்க வேண்டுமென்று எண்ணியவர்களாய்க் கூத்தப்பிரான் திருமுன்பு சென்று தங்கள் நோக்கத்தை முறையிட்டார்கள். கூத்தப் பிரான், 'நல்லது உங்களுக்கு வரமாட்டார். நாமே போய் அழைத்து வருகிறோம்'' என்று கூறினார். முதிர்ந்த துறவி யாய்த் தண்டு கமண்டலம் பிடித்துக்கொண்டு திருப்பாற் கடலுக்கு வந்து குரு நமசிவாயருக்கு எதிரே நின்றார். நிட்டை தெளிந்ததும், 'வணக்கம்' என்று கூத்தப்பிரானைப் பார்த்துச் சொன்னார். குரு நமசிவாயர் மாறு கோலத்துடன் வந்திருப்பவரைப் பார்த்து, ''நீர் எந்த ஊர்?'' என்று உசாவினார். வந்தவர், தில்லைவனம்' என்றார். ''உம்முடைய பெயர் யாது?'' என்றார் நமசி வாயர். '' அம்பலத்தாடுவார்'' என்று சொன்னார் கடவுள் 'இவ்விடத்திற்கு வந்த காரியம் என்ன?'' என்றார் குரு நமசிவாயர். வந்தவர், ''உணவு தேவையாக இருக்கிறது. இவ்வூர் முழுவதுஞ் சென்றேன். அகப்படவில்லை, சிலர் இவ்விடத்திற்கு வந்தால் அகப்படும் என்று சொன்னார்கள். ஆகையால், இவ்விடம் வந்தேன்' என்றார். அதற்குக் குருநமசிவாயர் நமக்குத்தேவி உணவு கொண்டு வந்து கொடுக்கிறது. நம்மிடத்தில் ஏனங்கூட இல்லை" என்று கூறினார். கடவுள், 'ஏனம் இதோ இருக்கிறது என்று கூறித் திங்களையே ஏனமாக வைத்தார். 

குரு நமசிவாயர் அம்மனை எண்ணினார். உணவு வந்தது.'' இதனைக் கொள்ளும்" என்றார். அம்பலத்தாடுவார், ''நாம் கொள்ளமாட்டோம்" என்று சொன்னார். குரு நமசிவாயர் ''என்ன காரணம்?'' என்று உசாவினார். ''இவ்வாறு நாள்தோறும் உணவு கொடுத்தால்தான் கொள்ளுவோம் இல்லாவிட்டால் வேண்டியதில்லை” என்றார் வந்தவர். குரு நமசிவாயர் வந்தவரைப் பார்த்து "நீரோ மிக முதியராக இருக்கிறீர். நானோ காசியோ இராமேசுவாமோ என்று இருக்கிறேன். அவ்வாறாக நாள்தோறும் உணவு கொடுக்கிறேன் என்று எவ்வாறு சொல்லுகிறது?" என்றார். 

அம்பலத்தாடுவார், ''உமக்கு முன்னே நடந்தால் உணவு கொடும். பின்னால் இருந்தால் உணவு வேண்டாம்'' என்றார். குரு நமசிவாயர் 'நீர் எப்பொழுதும் எமக்கு முன்னே இருந்தால் உணவு கொடுக்கிறேன் இல்லாவிடில் இல்லை” என்றார். அம்பலத்தாடுவார், ''நாம் எப்பொழுதும் முன்னால் இருக்கிறோம்" என்றார். பிறகு நமசிவாயர் ''இப்பொழுது உணவு கொள்ளும்" என்றார். வந்தவர், "திருநீற்றையும் சிவ கண்மணியையும் தொட்டுக்கொடுத்தால் கொள்ளுவோம்'' என்றார். குரு நமசிவாயர், 'நீர் முன்னால் நின்றால் தொட்டுத் தருகிறோம்” என்றார். அவ்வாறே அம்பலத்தாடுவார் முன்னிற்கக் குரு நமசிவாயர் திருநீறு சிவ கண்மணி ஆகியவைகளைத் தொட்டுக்கொடுத்தார். அம்பலத்தாடுவார் உணவு கொண்டார். தாகத்திற்கு நீர் வேண்டும் என்றார். ''அதோ திருப்பாற்கடல் இருக்கிறது, தண்ணீர் குடித்துக்கொள்ளும்'' என்றார் குரு நமசிவாயர். அம்பலத்தாடுவார் தண்ணீர் குடிக்கப்போய் அப்படியே மறைந்துவிட்டார்: 

பிறகு அம்பலத்தாடுவார் தில்லைவாழ் அந்தணரை அழைத்து, "நாம் போய்த் திட்டஞ் செய்துவிட்டு வந்திருக்கிறோம். நீங்களனைவருங்கூடி நமக்குண்டாகியுள்ள விருதுகளையும் நாம் ஏறுகிற சிவிகையையும் எடுத்துக்கொண்டு போய் அவரைச் சிவிகையிலேற்றி விருதுகளுடன் ஊர்வலமாக நம்மிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் . என்று கட்டளையிட்டார். 

தில்லைவாழந்தணர் அவ்வாறே சென்று ''இனிமேலாவது எழுந்தருளலாமே இந்தப் பல்லக்கில் ஏறவேண்டும்'' என்று சொன்னார்கள். குரு நமசிவாயர் "நமக்கேன் பல்லக்கு? தேவையில்லை" என்று சொன்னார். "இது பல்லக்கு அன்று சூரிய சிம்மாசனம்'' என்றார்கள் தில்லைவாழந்தணர்கள். 'எதுவாக இருந்தாலுஞ் சரி வேண்டாம் என்றார் குரு நமசிவாயர். பிறகு தில்லைவாழந்தணர்கள், குரு நமசிவாயரைப் பார்த்து, 'நேற்று நண்பகலில் எங்களுடைய கடவுள் தங்களிடத்திற்கு வந்தாரே நீங்கள் என்ன சொன்னீர்கள்?'' என்று கேட்டார்கள். குரு நமசிவாயர் நிட்டையிலே பார்த்தார். கூத்தப்பிரான் காட்சி கொடுத்தார். இவ்விடத்திற்கு வந்துவிட்டு அங்கும் போய்ச் சொன்னாரா என்று எண்ணிக்கொண்டு; 

''சங்கமராய் அம்பலவர் தாமே எருந்தருளி 
இங்கெமக்குப் பிச்சை இடுவென்ன - அங்கமுது 
திட்டமுடன் நமக்குத் தினமுமே நீசர்வ 
கட்டளையுண் டாக்கு கென்றார் காண்'' 

என்று கூறிக்கொண்டே பல்லக்கிலேறித் திருவீதி வலமாகச் சென்றார். அப்போது : 

''அல்லல் ஆகிய இருவினை தனைஅறுத் தடியனை தருவாரோ 
மல்லல்நீடிய புவியின் மேல் இன்னமும் வருபிறப் பறுப்பாரோ 
நல்லமாமுலை மாதுமை நாயகர் நான்மிதம் நவின் றேத்தும் 
தில்லைநாயகர் அம்பலத் தாடுவார் திருவுளர் தெரியாதே."

என்று பாடிக்கொண்டே கோவிலுக்குப் போய்க் கொடி மரத்தருகே பல்லக்கைவிட்டு இறங்கினார். பஞ்சாட்சர மதில் வரைக்கும் பாதக்குறடு போட்டுக்கொண்டு சென்றார். பிறகு பொன்னம்பலத்திற்குப் போய்க் கூத்தப்பிரானைப் போற்றி வழிபட்டார். தில்லை மூவாயிரவரைப் பார்த்து நாம் இப்பொழுது என்ன கட்டளையை ஏற்படுத்தலாம் என்று எண்ணமிட்டார். கூத்தப்பிரான் உருவிலி வாக்காய்ச் 'சர்வசனத்துக்கும் சர்வகட்டளை' என்று மொழி பிறந்தது. இப்பொழுது இவ்வளவு பேரும் பார்த்திருக்கும் போதே அம்பலவாணர் பிச்சை கொடுத்தால் எப்போதும் நடக்குமென்று பொற்றாம்பாளத்தை ஏந்திக்கொண்டு, 

''காதலுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய 
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது 
குருவாய் எனையாண்டு கொண்டவனே பிச்சை 
தருவாய் சிதம்பரநா தா'' 

என்று பாடினார். எல்லா மக்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அம்பலவாணர் முன் விண்ணில் இருந்து தங்கக்காசு ஒன்று விழுந்தது. கடவுளே பிச்சை கொடுத்தார் என்று மக்களனைவரும் வாகன், ரூபாய், பயம், காசு ஆகியவைகளை ஏராளமாகப் போட்டார்கள். குரு நமசிவாயர் சேர்ந்த பொருளைத் தில்லை மூவாயிரவர் கையால் கொடுத்துவிட்டுச் சிறிது தொலை நடந்தார். சற்றுத் தடையுண்டாயிற்று. 'ஏன் தடையுண்டாகிறதென்று தில்லை மூவாரவரைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் 'எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்கள். குரு நமசிவாயர் நிட்டையிலே பார்த்தார். பிறகு ”சுவாமிக்கு அணிகலன்கள் இருந்ததுண்டா?'' என்று கேட்டார். தில்லை வாழந்தணர்கள் சிறிது எண்ணிப் பார்த்துவிட்டு, ''பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாத முனிவருக்கும் திருக்கூத்தியற் றியபொழுது பாதச் சிலம்பும் கிண்கிணியும் இருந்ததுண்டென்பர். அதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை'' என்று சொன்னார்கள். 

பிறகு குரு நமசிவாயர் சிற்பாச்சாரியை அழைப்பித்துப் பாதச் சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யவேண்டும் அதற்கு என்ன சொல்லுமென்று கேட்டார். அவன் 'ஐம்பதாயிரம் பொன்'' செல்லுமென்று கூறினான். வந்திருக்கிற பொருளை யெடுத்துக்கொடுத்து அவைகளைச் செய்யுமாறு கூறியனுப்பிவைத்தார். பிறகு தாம் தம்முடைய அறைக்கு எழுந்தருளினார். 

தில்லை மூவாயிரவர் ஒன்று கூடி, "பொருளைக் கொடுத்துச் சிலம்பும் கிண்கிணியுஞ் செய்யச் சொன்னாரே. அதை யணிந்துகொண்டால் கூத்தியற் றுதல் வேண்டுமே. இவருக்குச் சுவாமி கூத்தியற்றிக் காட்டப் போகிறாரா?'' என்று ஏளனமாக உரையாடத் தொடங்கினார்கள். அச்சொல் இவருடைய காதுகட்கு எட்டியது. நாற்பதாம் நாளில் சிலம்புங் கிண்கிணியும் செய்யப்பெற்று வந்தன. 

குருநமசிவாயர் தில்லை மூவாயிரவரையும் மற்றவர்களையும் அழைப்பித்து, 'இப்பொழுது அம்பலவாணர் கூத்தியற்றினால் நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்களா?' 
என்று உசாவினார். ''அவ்வாறு திருக்கூத்துக்கான நாங்கள் எவ்வளவு நல்வினை செய்தோமோ எங்களுடைய மூவேழ் தலைமுறையும் ஈடேறிப்போகுமே; திருக்கூத்தைக் காண்டற்கு அருள்புரிய வேண்டும்" என்று சொல்லி வேண்டிக் கொண்டார்கள். 

’ஒருவேளை காற்று வந்து அசைந்தார்' என்று சொன்னாலும் சொல்வீர்கள் பலகணி வாயில்களையெல்லாம் அடைத்துவிடுங்கள்'' என்று குருநமசிவாயர் கட்டளை யிட்டார். சிலம்பையுங் கிண்கிணியையும் கூத்தப்பிரா னுடைய அடிமலர்களிலே அணியச் செய்தார். பிறகு அம்பலவாணர் திருக்கூத்தியற்றுதலை விரும்பினவராய், 

''அம்பல வாஒருக்கால் ஆடினால் தாழ்வாமோ 
உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ -- சம்புவே 
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென 
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ'' 

என்று பாடினார். அவ்வளவில் கூத்தப்பிரான் கூத்தி யற்றத் தொடங்கினார். 

''மிதித்தபொற் பதமும் எடுத்தபா தார விந்தமும் சந்தவெம் புலித்தோல் 
      விளங்கிய விடையும் உந்தியுஞ் சுழியம் மேனிவெண் ணீற்றின தொளியும் 
கதித்தநற் கனக மேருநான் கனைய கனசதுர்ப் புயங்களுங் காள 
      கண்டமும் முகமும் சென்னியுஞ் சரியே கண்டுகண் களிக்குநாள் உளதோ 
துதித்த தங்கள் பலர்புகழ்ந் தேத்தத் தும்புரு நாரதர் பாடத் 
      துங்கமா மாயன் மத்தள ரிடைமேல் சுமந்து தொந் தோமென முழக்கத் 
திதித்திதிதி தகுவென் றம்பிகை கெளரி திகழ்திருத் தாளமொத் திசைப்பத் 
      தில்லையம் பலத்தே திருநடம் புரியும் தேவனே சிதம்பரே சுரனே'' 

என்று இவர் பாடினார். எல்லோருங் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். தில்லைவாழந்தணர்களிற் சிறந்தவர்களாகிய மூவர் வெகுநேரமாகக் கூத்து நடை பெறுகிறதே என்று எண்ணினார்கள். திருக்கூத்தை நிறுத்த வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். 'ஆடச் சொல்வதும் நிறுத்தச் சொல்வதும் நம்முடைய அதிகாரமா?' என்று குருநமசிவாயர் பேசாமல் இருந்தார். தாளம் போடுகிறவர்கள் நிற்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். அப்போது குருநமசிவாயர்; 

''தூக்கியகால் நோகாதோ துட்டன் முயலகன்மேல் 
தாக்கியகால் தானுஞ் சலியாதோ-வாக்கா 
தினவரதா தில்லைத் திருத்தாண்ட வாநீ 
அனவரதங் கூத்தாடி னால்" 

என்று பாடினார். கூத்தப்பிரானைக் குருநமசிவாயர் பாடுகிறாரே. நாம் குரு நமசிவாயரைப் பாடுவோமென்று தில்லை மூவாயிரவர் 

''வேடனெச்சில் மிக விரும்பும் வேளவன்றன் மேனிபொன்ற 
ஆடனித்தங் காளியொடா டம்பலவர் சந்நிதிக்குக் 
கோடி.லட்சம் கவிபாடும் குருநமசி வாயரருள் 
பாடல்மெச்சி யம்பலவர் பாதகச்சை யாடியதே" 

என்று பாடினார்கள். குரு நமசிவாயர் திருக்கூத்தை நிறுத்த வெண்ணி ; 

"நகுதத்தா தாதகியெந் நாடகத்திற் கேற்ற 
தகுதித்தா ளுஞ்சிலம்பும் தானாம் - அகுதப்பா 
பாரே இனியமையும் பொன்னம் பலத்தாடு 
வாரே திருத்தாண்ட வம்” 

என்று பாடினார். அவ்வளவில் திருக்கூத்து நின்றது. தில்லை மூவாயிரவர் குருநமசிவாயரைப் பார்த்துத் 'தேவரீர் வீடு பேற்றையடைந்தால் நாங்கள் பூசித்து வழிபாடு செய்கிறோம்'' என்று சொன்னார்கள். குருநமசிவாயர் "அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறிக் கூத்தப்பிரானுக்குப் பல திருப்பணிகளை நடத்திக்கொண்டிருந்தார். சிதம்பர வெண்பா முதலிய நூல்களைப் பாடினார். மேலுங் கட்டளைகளை விரிவாக நடத்த எண்ணி எம்பேர் தம்பிரான்கட்குப் பல்லக்கு விருது மற்றும் வேண்டியவை களையுங் கொடுத்து நாடெங்கும் அனுப்பினார். இதனாலுங் கட்டளைகள் விரிவாகவுஞ் சிறப்பாகவும் நடைபெற்றன. குருநமசிவாயர் நெடுங்காலமிருந்து திருப்பெருந்துறை-யிலே வீடு பேற்றையடைந்தார், 

கல்வெட்டுப் பாடல் 

''தென்னருணை மருவுகுகை நமச்சி வாய 
தேவர் சிஷ்யன் குருநமச்சி வாயன் செய்யும் 
மன்னுபணி விடையாகப் புலியூர்ச் செம்பொன் 
மன்றுடையான் பூசை கொண்டு மகிழ்ந்து வாழ்க 
இந்நிலமெ லாந்தழைக்க அரசூர்ப் பத்து 
இலிங்கபுரச் சாதாக்கல் எழுதி நாட்டி
நன்னெறிசேர் காலாட்கள் தோழன் சின்ன 
நல்லநய னான் கொடுத்து நடத்தி னானே.''


 

Related Content