ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத் தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந் தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று வாழத் திருநீறு சாத்தக் கண்டு மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர் வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.
சோழமண்டலத்திலே, எயினனூரிலே, சான்றார்குலத்திலே விபூதியில் மகாபத்தியுடையவராகிய ஏனாதிநாதர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசர்களுக்கு வாள் வித்தையைப் பயிற்றி, அதனால் வந்த வளங்கள் எல்லாவற்றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்தில், வாள்வித்தை பயிற்றலிலே அவரோடு தாயபாகம் பெற்ற அதிசூரன் வாள்வித்தை பயிற்றுதலினால்வரும் ஊதியம் நாடோறும் தனக்குக் குறை தலையும் ஏனாதி நாதநாயனாருக்கு வளர்தலையுங் கண்டு, பொறாமையுற்று, அவரோடு போர்செய்யக் கருதி, வீரர் கூட்டத்தோடும் போய். அவர் வீட்டுத் தலைக்கடையில் நின்று, போர்செய்தற்கு வரும்படி அழைக்க, ஏனாதிநாத நாயனார் யுத்தசந்நத்தராகிப் புறப்பட்டார். அப்பொழுது அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் யுத்தத்திலே சமர்த்தர்களாகிய அவர்பந்துக்களும் அதைக் கேள்வியுற்று, விரைந்து வந்து, அவருக்கு இரண்டு பக்கத்திலும் சூழ்ந்தார்கள். போருக்கு அறைகூவிய அதிசூரன் ஏனாதிநாதநாயனாரை நோக்கி, "நாம் இருவரும் இதற்குச் சமீபமாகிய வெளியிலே சேனைகளை அணிவகுத்து யுத்தஞ் செய்வோம். யுத்தத்திலே வெற்றிகொள்பவர் எவரோ அவரே வாள்வித்தை பயிற்றும் உரிமையைப் பெறல் வேண்டும்" என்று சொல்ல; ஏனாதிநாதநாயனாரும் அதற்கு உடன்பட்டார். இருவரும் தங்கள் தங்கள் சேனைகளோடு அவ்வெளியிலே போய், கலந்து யுத்தஞ்செய்தார்கள். யுத்தத்திலே அதிசூரன் ஏனாதிநாதநாயனாருக்குத் தோற்று, எஞ்சிய சில சேனைகளோடும் புறங்காட்டியோடினான்.
அன்றிரவு முழுதும் அவன் தன்னுடைய தெளர்பலியத்தை நினைந்து, நித்திரையின்றித் துக்கித்துக்கொண்டிருந்து, ஏனாதிநாதநாயனாரை வெல்லுதற்கேற்ற உபாயத்தை ஆலோசித்து, வஞ்சனையினாலே ஐயிக்கும்படி துணிந்து, விடியற்காலத்திலே "நமக்கு உதவியாக நம்முடையவூரவர்களை அழைத்துக் கொள்ளாமல் நாம் இருவரும் வேறோரிடத்திலே போர் செய்வோம், வாரும்" என்று ஏனாதிநாதநாயனாருக்குத் தெரிவிக்கும்படி ஒருவனை அனுப்பினான். ஏனாதிநாதநாயனார் அதைக் கேட்டு, அதற்கு உடன்பட்டுத் தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக் கொண்டு, தனியே புறப்பட்டு; அவ்வதிசூரன், குறித்த யுத்த களத்திலே சென்று, அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். முன்னொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாதநாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யார் என்பதை அறிந்து, நெற்றியிலே விபூதியைப்பூசி, வாளையும் பரிசையையும், எடுத்துக்கொண்டு, தான் குறித்த யுத்தகளத்திற்சென்று, அங்கு நின்ற ஏனாதிநாதநாயனாரைக் கண்டு, அவர் சமீபத்திலே போம்வரைக்கும் நெற்றியைப் பரிசையினால் மறைத்துக்கொண்டு; அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதநாயனார் அவ்வதி சூரனைக் கொல்லுதற்குச் சமயந்தெரிந்துகொண்டு அடிபெயர்த்தார். அப்பொழுது அதிசூரன் தன்முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையைப் புறத்திலே எடுக்க; ஏனாதிநாதநாயனார் அவனுடைய நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார். கண்டபொழுதே "ஆ கெட்டேன்! முன் ஒருபொழுதும் இவர் நெற்றியிலே காணாத விபூதியை இன்றைக்குக் கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை! இவர் பரமசிவனுக்கு அடியவராய் விட்டார். ஆதலால் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்" என்று திருவுள்ளத்திலே நினைந்து, வாளையும் பரிசையையும் விடக் கருதி, பின்பு "நிராயுதரைக் கொன்ற தோஷம் இவரை அடையாதிருக்க வேண்டும்" என்று எண்ணி, அவைகளை விடாமல் எதிர்ப்பவர் போல நேராக நிற்க; பாதகனாகிய அதிசூரன் அவரைக் கொன்றான். அப்பொழுது பரமசிவன் அவருக்குத் தோன்றி அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.
திருச்சிற்றம்பலம்
சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை - மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகிற் - றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி - சிங்காரமான சிவனடி சேர்விரே" என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர். அது "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி - யுவராதே யுவரரைக் கண்ட போது வுகந்தடிமைத் திறநினைந்திங் குவந்து நோக்கி - யிவர்தேவரிவர் தேவ ரென்று சொல்லி - யிரண் டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் - கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறிக.
இவ்விபூதியில் எல்லையின்றி மிகுத்த பத்தியாற் சிறந்தவர் இவ்வேனாதிநாத நாயனார் என்பது, இவர் வாள் வித்தை பயிற்றலினாலே தமக்கு வரும் வளங்கள் எல்லாம் விபூதி இட்ட அடியார்களுக்கே ஆக்கினமையாலும், தமது பகைவன் நீதி இன்றி ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்லப் புகுந்தபோது, தாம் அதனைத் தடுத்து அவனைக் கொல்லுதற்கு வல்லராய் இருந்தும், அவனது நெற்றியில் விபூதியை நோக்கி, அவன் கருத்தே முற்றும்படி நின்று பெருந்தகைமையாலும் தெளியப்படும்.
சிவதருமோத்திரத்திலே "படைபிடித்துத் தங்கையிற் பற்றாரைச் சமரிற் பாழ்படுக்கப் போர் புரியும் பார்ப்பாரைப் பற்றா - ருடலிறுத்தா ரேலவர்க்குப் பிரமகத்திபாவமொன்றுவதன் றெனவுணர்க." எனக் கூறுதலானும், அதிசூரன் விபூதி யிட்டவனாயினும் ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்ல வந்தமையானும், அவனைக் கொல்லுதல் பாவமாகாதே எனின், சத்தியம் நீ சொல்லியது ஆயின், இவர் தமக்கு அவன் தீது செய்யினும் தாம் அவனைக் கொல்லில் தமக்கு மறுமைக்கண் நரகத்துன்பம் வருமென்னும் அச்சத்தால் ஒழித்தவரல்லர்; சிவனடியார் யாதுசெய்யினும் அதுவே தமக்கு இனிமையாம் என்னும் ஆர்வமிகுதியால் ஒழித்தவர் என்க. தன் உயிரை விடுத்தல் பாவம் என்றும் தன்னுயிரைக் காத்தலினும் வேறாகிய புண்ணியம் ஒன்றும் இல்லை என்றும், சிவசாத்திரங்கள் கூறவும், இவர் தமது பகைவன் தம்மைக் கொல்லப் புகுந்த போது அக்கொலையைத் தடுத்துத் தம்முயிரைக் காக்கவல்லராய் இருந்தும், அது செய்யாமை பாவமன்றோ எனின், கருணாநிதியாகிய சிவன் பெறுதற்கரிய இம்மானுட சரீரத்தை எமக்குத் தந்தது தம்மேலே பத்தி செய்து முத்தி பெறுதற் பொருட்டாதலானும், இச்சரீரம் இல்வழி அது கூடாமையானும், அவருக்குத் திருத்தொண்டு செய்தற் பொருட்டு இச்சரீரத்தைக் காத்தல் புண்ணியமும், அதனைச் சிறிதும் நோக்காது கோபம் நோய் முதலிய ஏதுக்களாலே இதனைப் போக்குதல் பாவமும் ஆயின, இந்நாயனார் தமது சரீரத்தை இங்கே பேணாது நின்றமைக்கு ஏது, சிவன்பாலுள்ள பத்தியேயாதலால், அது இத்துணைத்தென்று கூறலாகாத பெரும் புண்ணியமாதல் காண்க; இக்கருத்து நோக்கி அன்றோ, குருலிங்க சங்கமங்களுக்கு இடையூறு வரும் வழிப் பத்தி மிகுதியாலே தன்னுயிர் விடுத்தல் புண்ணியமாம் என்று சிவாகமங்கள் கூறியதூஉமென்க.
முத்திநாதனும் அதிசூரனும் யாண்டுப் புக்கார்கள் எனின், மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்ற பெரும் பாதகத்தால் நரகத்தில் வீழ்ந்தார்கள் என்றே கொள்ளப்படும், அவர்கள் சிவவேடம் தரித்தமையால் பயன் இல்லையோ எனின், அரசனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவனுக்கு உரிய அடையாளங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அவ்வடையாளம் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப்பெருந்தண்டத்தை அவ்வரசனாலே பெற்று வருந்துவர் அன்றோ. அது போலவே, சிவனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவருக்கு உரிய சின்னங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அச்சின்னங்கள் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப் பெருந்தண்டத்தை அச்சிவனாலே பெற்று வருந்துவர் என்பது தெள்ளிதிற்றுணியப்படும். ஆதலால், பெரும் பாதகர்களாகிய அவ்விருவரும் சிவவேடத்தாற் சிறிதும் பயன் பெறாது மிகக் கொடிய நரகத்தில் வீழ்ந்தார்கள் என்பது சத்தியம். சிவன் விதித்தவழி ஒழுகாதவர்க்கு வேடத்தாற் பயன் இல்லை என்பது, "வேடநெறிநில்லார் வேடம்பூண்டென் பயன் - வேட நெறி நிற் போர் வேட மெய் வேடமே - வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் - வேட நெறி செய்தால் வீடதுவாகுமே" எ-ம். "தவமிக்கவரே தலையான வேட - ரவமிக் கவரே யதிகொலை வேட - ரவமிக் கவர்வேடத் தகாதவர்வேடந் - தவமிக் கவர்க்கன்றித் தாங்க வொண்ணாதே" எ-ம். திருமந்திரத்திற் கூறுமாற்றாற் காண்க. எங்ஙனமாயினும், அவர்கள் சிவவேடம் தரித்தவர்கள் அன்றோ; அது நோக்காது நீர் அவர்களைப் பாதகர்கள் என்று இகழ்ந்தது என்னை எனின், "மாதவ வேடங் கொண்ட வன்கணான்" என்றும் "முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்" என்றும் ஆசிரியர் சேக்கிழார் நாயனார் இகழ்ந்தமையின், யாமும் இகழ்ந்தோம் என்க. அவர் இகழ்ந்தமை குற்றமாகாதோ எனின், ஆகாது. மெய்ப்பொருணாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் பிறிதொன்றும் நோக்காது இவர் சிவனடியார் என்பது நோக்கி அவர்கள் கருத்தின் வழி நின்றமைக்குச் சிவபத்தியே ஏதுவாயினமை போல, சேக்கிழார் நாயனார் அப்பாதகர்கள் இம்மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்பது நோக்கி இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே ஏதுவாயினமையால் என்க.
திருச்சிற்றம்பலம்
See Also:
1. ஏனாதிநாதர் நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. EnAthinAtha nAyanAr purANam in English prose
3. Eanati Nathar Nayanar Puranam in English Poetry