logo

|

Home >

devotees >

chandesura-nayanar-puranam

சண்டேசுர நாயனார் புராணம்

 

Chandesura Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


வேதமலி சேய்ஞ்ஞலூ ரெச்ச தத்தன்
    விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர்
கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே
    கொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்
றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்
    தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்
காதிமலர்த் தாமமுயர் நாமமுண்ட
    கலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன், இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் வேதாங்கங்களையும் சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயர்கள் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.

பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் பொருட்டுச் சிருட்டிதிதி சம்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒருபதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்; பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எட்டுக்குணங்களும் இன்றியமையாதன என்பதும், அக்குணங்களெல்லாம் உடைய பதி சிவபெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோடொற்றுமையுடைய சிவசத்தியாலாகும் என்பதும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரமபிதா மாதாக்கள் என்பதும், அதனால் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும் அவ்வன்பை மற்றோர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந்துள்ள இம்மானுடப்பிறவி பெறுதற்கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றானே இன்னுஞ்சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப்பிறவி நீங்குமவதி அறிதற்கரியது என்பதும், அங்ஙனமாகையால் அவ்வன்பு செய்தற்கேயன்றி மற்றொன்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஓர்சாமர்த்தியமுளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்ய வேண்டும் என்பதுமே வேதாகம முதலிய நூல்களெல்லாவற்றானும் துணியப்படும் மெய்ப்பொருள் என்று சந்தேகவிபரீதமறத் துணிந்து கொண்டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

ஒருநாள் அவர் தம்மொடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசுநிரைகளுடன் கூடிச்சென்றபொழுது, ஓரீற்றுப்பசு ஒன்று மேய்ப்பானாகிய இடையனைக் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான் மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதை பதைப்போடும் அவன் சமீபத்திற்சென்று, மகாகோபங்கொண்டு, பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரானுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ்விடையனை நோக்கி, "இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.

விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும், தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.

இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஓமாகுதியின் பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக்காண்கையால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை யுபசரிப்பினாலும் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட்டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தாலும் சிறிதும் வருத்தமுறாதவைகளாகிய, மிகுந்த அன்போடு தங்களைமேய்க்கின்ற விசாரசருமர் சற்றாயினும் பிரிவாராகில் அப்பிரிவாற்றாமல் தாய்போல உருகி, அவர் சமீபத்திலே சென்று கனைத்து, மடிசுரந்து ஒருவர் கறக்காமல் தாமே பால்பொழியும். அது கண்ட விசாரசருமர் அப்பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாந் தகுதியுடைமை நினைந்தார். நினையவே அவருக்குச் சிவார்ச்சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலிருக்கின்ற ஒரு மணற்றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினாலே ஒரு சிவலிங்கங்குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்திரமும் பறித்துத் திருப்பூங்கூடையிலிட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிய குடங்களைத் தேடி வாங்கிக் கொண்டு வந்து, கறவைப் பசுக்கள் ஒவ்வொன்றினிடத்திலும் சென்று, முலையைத் தீண்டினார். அவைகள் கனைத்துப் பாலைப்பொழிந்தன. பாலினாலே நிறைவுற்ற அக்குடங்களைக் கொண்டுபோய் ஆலயத்திலே வைத்துப் பத்திரபுஷ்பங்களால் சுவாமியை அருச்சித்து, பாலினால் அபிஷேகஞ்செய்தார். பரமசிவன் அவ்விலிங்கத்தினின்று அவ்விசாரசருமர் அன்போடு செய்யும் அருச்சனையைக் கொண்டருளினார்; விசாரசருமர் சிவபூசைக்கு அங்கமாகிய திருமஞ்சனம் முதலிய பொருள்களுள், கிடையாதவைகளை மானசமாகக் கிடைத்தனவாகக் கொண்டு நிறைவு செய்து, விதிப்படி அருச்சித்து வணங்கி வந்தார். பசுக்கள் அபிஷேகத்தின்பொருட்டு இவ்விசாரசருமர் கொண்டு வரும் குடங்கள் நிறையப் பாலைச் சொரிந்தும், பிராமணர்க்கும் முன்போலக் குறைவுதீரப் பாலைக் கொடுத்துவந்தன.

இப்படி நெடுநாளாகப் பார்ப்பவர்களுக்கு விளையாட்டுப் போலத் தோன்றி சிவார்ச்சனையைச் செய்து வரும்பொழுது, அதைக்கண்ட ஒருவன் அதின் உண்மையை அறியாதவனாகி, அதை அவ்வூர்ப்பிராமணர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதைச் சபையாருக்குத் தெரிவிக்க; சபையார் எச்சத்தனை அழைத்து, "பிராமணர்கள் ஓமாகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உம்முடைய புத்திரனாகிய விசாரசருமன் அன்புடனே மேய்ப்பவன் போலக் கொண்டு போய்ப் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிந்து விளையாடுகின்றான்" என்றார்கள். எச்சதத்தன் அதைக் கேட்டுப் பயந்து, "சிறுபிள்ளையாகிய விசாரசருமன் செய்கின்ற இந்தச் செய்கையை இதற்குமுன் நான் சிறிதாயினும் அறிந்திலேன். அக்குற்றத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்" என்று குறையிரந்து வணங்கி, "இனி அவன் அப்படிச் செய்வானாயின், அக்குற்றம் என்மேலதாகும்" என்று சொல்லி அச்சபையாரிடத்திலே அநுமதி பெற்றுக்கொண்டு, வீட்டுக்குப் போய் விட்டான்.

மற்றநாட்காலையில் அந்தச் சமாசாரத்தைச் சோதித்தறிய விரும்பி, விசாரசருமர் பசு மேய்க்கப்போனபின்பு, அவர் அறியாதபடி அவர்பின்னே சென்றான். விசாரசருமர் பசுக்களை ஓட்டி மண்ணியாற்றின் மணற்றிட்டையிலே கொண்டுபோனதைக்கண்டு, எச்சதத்தன் அருகில் இருந்த ஒருகுராமரத்தில் ஏறி அங்கே நிகழ்வதை அறியும்படி ஒளிந்திருந்தான். விசாரசருமர் ஸ்நானம் பண்ணி, முன் போல மணலினாலே திருக்கோயிலுஞ் சிவலிங்கமுஞ்செய்து, பத்திரபுஷ்பங்கள் பறித்துக்கொண்டுவந்து வைத்து, பின்பு பாற்குடங்களைக் கொண்டுவந்து தாபித்து, அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்து, மிகுந்த அன்பினோடு பூசைக்கு ஆரம்பித்து, சிவலிங்கத்துக்குப் பத்திரபுஷ்பங்களைச் சாத்தி, பாற்குடங்களை எடுத்து அபிஷேகம் பண்ணினார். குராமரத்தில் ஏறியிருந்த எச்சதத்தன் அதைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டு சீக்கிரம் இறங்கிப்போய்த் தன் கையிலிருந்த தண்டினால் அவ்விசாரசருமருடைய திருமுதுகிலே அடித்துக் கொடுஞ் சொற்களைச் சொல்ல; அவருடைய மனம் பூசையிலே முழுவதும் பதிந்து கிடந்தபடியால் அது அவருக்குப் புலப்படவில்லை பின்னும் எச்சதத்தன் கோபங்கொண்டு பலமுறையடிக்க; விசாரசருமர் அவ்வடியாலாகிய வருத்தந் தோன்றிப் பெறாதவராகி, அபிஷேகத்திருத் தொண்டினின்றுந் தவறாதிருந்தார். அவருடைய உள்ளன்பை அறியாத எச்சதத்தன் மிகக் கோபித்துத் திரு மஞ்சனப் பாற்குடத்தைக் காலினால் இடறிச் சிந்தினான். உடனே விசாரசருமர் அதைக்கண்டு, அது செய்தவன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய எச்சதத்தனென்ன்பதை அறிந்தும், அவன் செய்தது அதிபாதகமாகிய சிவாபராத மாதலால், அவன் காலைத் துணிக்கக்கருதித் தமக்குமுன் கிடந்த ஒரு கோலை எடுக்க. அது மழுவாயிற்று. அதினாலே அவன் கால்களை வெட்டினார். சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர் முன்போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றியருளினார் விசாரசருமர் அது கண்டு மனம்களிந்து விழுந்து நமஸ்கரித்தார். பரமசிவன் அவரை தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, "நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச்செய்து; அவரை அணைத்து, அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபிரானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. பரமசிவன் அவரை நோக்கி, நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்" என்று திருவாய்மலர்ந்து, தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார். அவ்விசாரசருமர், சமஸ்தரும் ஆரவாரிக்கவும், எவ்விடத்தும் புஷ்பமழைபொழியவும், சிவகணங்கள் பாடியாடிக் களிகூரவும், வேதங்கள் கோஷிக்கவும், நானாபேதவாத்தியங்கள் முழங்கவும், சைவசமயம் நிலை பெறும்படி பரமசிவனைக் கும்பிட்டு. அவராலே தரப்பட்ட சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தர் சிவத்துரோகஞ்செய்தும், சண்டேசுரநாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 


சண்டேசுர நாயனார் புராண சூசனம்

1. பசு ஓம்பல்

சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை பத்திரை சுரபி சுசீலை சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும் கருநிறமும் வெண்ணிறமும் புகைநிறமும் செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகருமங்களின் பொருட்டும், பூமியில் உற்பவித்தன.

இப்பசுவின் உறுப்புகளிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும், பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி உங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத்தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவமாதர்கள் மேற்குரத்திலும், உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப் பலகையிலும், சத்தமாதர்கள் பகத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும், இருப்பர்; சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும்; முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புகளிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடையமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக் கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத் தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டினும் பயனைத்தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக. தீபங்கள் ஏற்றுக. சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்லமெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க. நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமிதோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க. பசுக்களை இடர்நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும், நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும் பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டு இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. பாலை இரண்டு மாசம் செல்லும் வரையும் கன்று பருகும்படி விட்டு, பின் கறந்து சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் குழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால் விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க: அதனைத்தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலையிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்கள். அவர்களுக்குப் பரிகாரம் இல்லை. மலட்டுப் பசுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும், நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்ந்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற்கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.

இப்பசு மேய்த்தலாகிய உத்தம புண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இச்சண்டேசுர நாயனார். அது, இவர் தாம் ஒருநாள் இடையன் பசு நிரையினுள்ளே ஒரு பசுவைக் கோலினால் அடிக்கக் கண்ட போது, இரக்க முகுதியினாலே கோபித்து விலக்கி, பசுக்களின் பெருமையை உள்ளபடி சிந்தித்து உணர்ந்து, அவைகளை அவைகளின் கருத்துக்கு இசைய மேய்த்தலிற் சிறந்த புண்ணியம் இல்லை எனவும் சிவனை வழிபடும் நெறியும் அதுவே எனவும் துணிந்து, அவ்விடையனை அகற்றி, அன்று தொடங்கித் தாமே அந்நிரையை மெய்யன்போடு விதிப்படி மேய்த்தமையாலே தெளியப்படும்.

2. சிவபூசை

ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவற்றுள், அண்டசம் முட்டையிற் றோன்றுவன. சுவேதசம் வேர்வையிற் றோன்றுவன. உற்பிச்சம் வித்துக்களை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. இவைகளின் விரி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், மற்றை யோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயச்சித்தம் முதலியவற்றினாலும் நீக்கி, மனிதப் பிறப்பிலே வருதல், மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரை ஏறுதல்போலாம். இத்தன்மைத்தாகிய மனிதப்பிறப்பை எடுப்பினும், சாத்திரமணமும் வீசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர்களாய்ப் பிறவாமல், சாத்திரம் வழங்கும் தேசங்களிலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும். வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் ஆரிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், ஈனசாதிகளாய்ப் பிறவாமல் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாராய்ப் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், பரசமயங்களில் செல்லாமல் சிவனே பரமபதி என்று தெளிந்து வழிபடும் சைவசமயத்தைச் சார்தல் இத்துணைத்தென்று கூறலாற்றாத பெரும் புண்ணியமாம். இதற்குப் பிரமாணம் சிவஞான சித்தியார். "அண்டசஞ் சிவேத சங்க ளுற்பிச்சஞ்சராயு சத்தோ-டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தா-லுண்டுபல் யோனி யெல்லாமொழித்து மானுடத்து தித்தல்-கண்டிடிற் கடலைக் கையா னீந்தினன் காரி யங்காண். நரர் பயிறேயந்தன்னி னான்மறை பயிலா நாட்டில்-விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண்ணியந்தா னாகுந்-தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து-பரசம யங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே. வாழ்வெனு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித்-தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு-மூழ்பெற லரிது சால வுயர்சிவ ஞானத் தாலே-போழிள மதியினானைப் போற்றுவா ரருள்பெற் றாரே." எனவரும்.

இவ்வருமையாகிய மனிதப்பிறப்பை உண்டாக்கியது, பசுபதியாகிய சிவனை மனசினாலே நினைத்தற்கும், வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும், கால்களினாலே வலம் வருதற்கும், தலையினாலே வணங்குதற்கும், செவிகளினாலே அவரது புகழைக் கேட்டற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்துள்ள பிரமா விட்டுணு இந்திரன் முதலியோரும் இப்பூமியின் கண்ணே வந்து சிவனைப் பூசிப்பர்கள். ஆதலால், இம்மனித சரீரம் கிடைத்தற்கு அரியது. இச்சரீரம் உள்ள பொழுதே சிவபூசையைப் பண்ணி, மோக்ஷத்தைப் பெறாதொழியில், பின்பு மோக்ஷம் கிடைத்தல் அரிது அரிது! ஆன்மாக்கள் தாம் நல்ல சரீரம் எடுத்தும், இவையெல்லாம் சிறிதும் ஆராயாமல், ஐயையோ! வீணாகத் திரிந்து காலங்கழிக்கும் அறியாமை இருந்தபடி என்னை! "மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காய-மானிடத் தைந்து மாடு மரன்பணிக் காக வன்றோ-வானிடத் தவரு மண்மேல் வந்த ரன்றனையர்ச் சிப்ப-ரூனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ." எனச் சிவஞான சித்தியாரினும், "கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்-பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்-பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப் பரன்சரிதையேகேட்கப் படுஞ்செவியே செவிக-ளண்ணல் பொலங்கழனினைக்கு நெஞ்சமே நெஞ்ச மவனடிக்கீழடிமைபுகு மடிமையே யடிமை." எனப் பிரமோத்தர காண்டத்தினும், கூறுமாற்றானும் உணர்க.

சிவபூசையாவது, புட்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாகி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபரும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வவியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாதசாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்த வித்தியாதேகத்தில் ஆவாகித்து, "சுவாமி, சருவ சகத்துக்கும் நாதரே, பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இரும்." என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம். லிங்க என்னும் தாது சித்திரித்தல் என்னும் பொருட்டாதலால், படைத்தல் காத்தல் முதலியவற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவமே லிங்கம் எனப்படும். அவ்விலிங்கத்தின் வியத்திஸ்தானமாகிய சைலம் ஸ்பாடிகம் க்ஷணிகம் லோஹஜம் என்பனவும் உபசாரத்தாலே இலிங்கம் எனப்படும். வித்தியாதேகமாவது பஞ்சகிருத்தியங்களை அதிட்டிக்கும் சத்தியேயாம். மூலமலம் முதலியன இன்மையால், சிவனுக்கு வைந்தவம் முதலிய சரீரம் இன்றிச் சத்திசரீரம் உண்டாம். அச்சரீரம் பஞ்சகிருத்திய உபயோகிகளாகிய ஈசானம் முதலிய பஞ்சமந்திரங்களாலே சிரம் முதலாகக் கற்பிக்கப்படும். சிவன் நிராகாரவஸ்துவாகிய தம்மை ஆன்மாக்கள் தியானித்தல் பூசித்தல் கூடாமையால், பத்தர் அனுக்கிரகத்தின்பொருட்டே இச்சத்திகாரியமாகிய கற்பனாசரீரம் கொண்டார் என்க.

இவ்வாறு அன்போடு பூசை செய்யப்படில், கருணாநிதியாகிய சிவன் இலிங்கத்தில் நின்று அப்பூசையை ஏற்று, அது செய்தார்க்கு அருள் செய்வர். அது "தாபர சங்க மங்க ளென்றிரண் டுருவினின்று-மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்ப-னீபரன் றன்னை நெஞ்சி னினைவை யேனிறைந்த பூசை-யாய் பரம்பொருளை நாளு மர்ச்சிநீ யன்பு செய்தே." என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணர்க. அன்பின்றிச் செய்யப்படும் பூசை பயன்படாமை "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே-புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்-பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு-நக்கு நிற்ப னவர்தமை நாணியே." என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்-பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழு-மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்-செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே." என்னும் பட்டணத்துப்பிள்ளையார் வாக்கானும் உணர்க.

இச்சண்டேசுரநாயனார் முற்பிறப்பில் வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவபூசையை விதிவழுவாது செய்தமையாலன்றோ, இப்பிறப்பில் மிகுத்த இளைமைப் பிராயத்திற்றானே சகல சாத்திரப் பொருள்களையும் எளிதின் உணர்ந்து, சிவனே எம்மை உடையவர் என்னும் மெய்யுணர்வினாலே, சிவன்மாட்டு இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் அத்தியற்புதமாகிய மெய்யன்பே வடிவமாயினார். இவருக்கு வேதாகமங்கள் எல்லாம் முற்பிறப்பின் அறிவுத் தொடர்ச்சியினால் எளிதின் விளங்கின என்பது இங்கே "ஐந்து வருட மவர்க்கணைய வங்க மாறு முடனிறைந்த-சந்த மறைகளுட்படமுன் தலைவர் மொழிந்த வாக மங்கண்-முந்தை யறிவின் றொடர்ச்சியினான் முகைக்கு மலரின் வாசம்போற்-சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு சிறந்ததால்." என்பதனாலும், "குலவு மறையும் பலகலையுங் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த-நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்." என்பதனாலும், உணர்த்தப்பட்டது. ஒருபிறப்பிற் கற்றகல்வி மறுபிறப்புக்களினும் பயன்படும் என்பது, "ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்-கெழுமையுமேமாப் புடைத்து." என்னும் திருக்குறளானும், உணர்க. இவர் முற்பிறப்பிலே சிவபூசை செய்தவர் என்பது, இங்கே "அங்கண் முன்னை யர்ச்சனையி னளவின்றொடர்ச்சி விளையாட் டாப்-பொங்கு மன்பால்" என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. இவரது அன்பின் முதிர்ச்சி "நடமே புரியுஞ் சேவடியார் நம்மை யுடையா ரெனு மெய்ம்மை-யுடனே தோன்று முணர்வின்க ணொழியா தூறும் வழியன்பின்-கடனே யியல்பாய் முடற்றிவருங் காதன் மேன்மே லெழுங் கருத்தின்-றிடனேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளிலாங்கொரு நாள்." என்பதனால் உணர்த்தப்பட்டது. ஆன்மா சிவன் உடைமை என்பது "அநாதி சிவனுடைமை யாலெவையு மாங்கே-யநாதியெனப் பெற்ற வணுவை-யநாதியே-யார்த்த துயரகல வம்பிகையோ டெவ்விடத்துங் காத்த லவன்க டனே காண்." என்னும் திருக்களிற்றுப் படியாரானும், உணர்க, இவர் முற்பிறப்பில் விதிவழுவாது செய்த பூசையின் றொடர்ச்சியினாற்றானே, இப்பிறப்பில் நினைந்தவுடனே சிவபூசையில் மிக்க ஆசையுடையராய், அதனைச் செய்வாராயினார். அப்பூசை பிறருக்கு விளையாட்டாகத் தோன்றியதாயினும், இடையறாத மெய்யன்பினாலே செய்யப்பட்டமை யானன்றோ, உயிருக்குயிராகிய சிவனுக்கு மிக உவப்பாயிற்று.

இந்நாயனார் சிவனது உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்தபொழுதே கரையழிந்து அன்பினாலே ஒரு பயனும் கருதாது அவ்வன்புதானே தமக்கு இன்பமாகத் தம்மை மறந்து நின்றார் என்பது, இவர் சிவபூசை செய்யும்பொழுது தந்தையாகிய எச்சதத்தன் முதுகிலே பலமுறை அடித்துக் கொடுமொழிகளைக் கூறவும், தாம் அவற்றைச் சிறிதும் அறிந்திலாமையானும், அவன் பாற்குடத்தைக் காலால் இடறிச் சிந்தக் கண்டபோது அவன் தமது தந்தை என்று கண்டும், தமது பரமபிதாவாகிய சிவனுக்கு அபராதம் செய்தமைபற்றி அவன் கால்களைத் துணிந்து, முன்போலவே பூசிக்கப் புகுந்தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இப்பத்தியோகத்தால் அன்றோ, உடனே கருணாநிதியாகிய சிவன் இடபாரூடராய் வெளிப்பட்டு, தமது அருமைத் திருக்கரங்களால் இவரை எடுத்து, நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா என்று அருளிச் செய்து இவரை அணைத்து, இவருடைய சரீரத்தைத் தடவி உச்சி மோந்து, இவருக்கு அந்தச் சரீரத்திலேதானே தமது சாரூப்பியத்தைக் கொடுத்து, தொண்டர்களுக்கெல்லாம் தலைமையாகிய சண்டே சுரபதத்தில் இருத்தியருளினார். இவர் அச்சரீரத்திற்றானே சிவசாரூப்பியம் பெற்றமை இங்கே "செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனா-ரங்கண்மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்-பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே லயன் முதலாந்-துங்கவமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற் றோன்றினார்." என்பதனாலும், "வந்து மிகைசெய் தாதைதான் மழுவாற் றுணித்த மறைச்சிறுவ-ரந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்." என்பதனாலும் உணர்த்தப்பட்டது. சிவஞானசித்தியாருரையிலே "அந்தத் தேகத்திலே தானே சிவசாரூப்பியத்தப் பெற்றார்." என்றார் சிவாக்கிரயோகிகளும்.

இந்நாயனார், பிராமணனும் தமக்குப் பிதாவும் குருவுமாகிய எச்சதத்தனை மழுவினால் வெட்டியும், பிரமகத்தி பிதிர்கத்தி குருகத்தி என்னும் தோஷங்கள் பொருந்தாது, சிவசாரூப்பியம் பெற்றமையாது காரணத்தாலெனின்; சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இன்மையானும், இவர் செய்யும் சிவ பூசைக்கு எச்சதத்தன் இடையூறு செய்தமை சிவாபராதமாதலானும், இவர் பரமபிதாவும் பரமகுருவுமாகிய சிவனிடத்து உள்ள அன்பு மிகுதியினால் அவர் நிமித்தமே அவ்வெச்சதத்தனை வெட்டினமையானும், தஞ்செயலற்றுச் சிவாதீனமாய் நிற்போர் செய்தது பாதகமாயினும் அதனைச் சிவன் தமது பணியாகவே பண்ணிவிடுவராதலானும், என்க. "அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மரமதாகும்-பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவமாகும்-வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி-நரரினிற் பாலன் செய்த பாதக நன்மையாய்த்தே." எ-ம். "இவனுலகி லிதமகிதஞ் செய்தவெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார்பா லிசையு-மவனிவனாய் நின்றமுறையேகனாகி யரன் பணியி னின்றிடவு மகலுங் குற்றஞ்-சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தியென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்-பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே." எ-ம். சிவஞானசித்தியாரில் கூறுமாற்றானும், உணர்க. இன்னும், இந்நாயனாரால் இம்மையிலே தண்டிக்கப்பட்டமையால் அன்றோ, எச்சதத்தன் சிவத்துரோகத்தால் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்தாது, தன் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தான். அகத்திய முனிவருக்கும் இராமருக்கும், தமக்கும் பிறர்க்கும் பெருந்தீங்கு செய்த வில்வலன் வாதாவியையும் இராவணனையும் கொன்றமையாலாகிய பிரமகத்தியைச் சிவபூசையே ஒழித்தமையானும், இச்சண்டேசுரநாயனார் தமது சிவபூசைக்கு இடையூறு செய்தலாகிய சிவாபராதம் கண்ட வழிச்செய்த பிரமகத்தி முதலியன சிவசாரூப்பியம் பயந்தமையானும், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெளிக.

இச்சண்டேசுரநாயனாரது பெருந்தன்மை " பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை-வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் றனக்குத்-தாரடைந்தமாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே-சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே." எ-ம். "கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல-படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு-முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி-யடிசேர்ந்த வண்ண மறிவார் சொலக்கேட்டு மன்றே." எ-ம். திருஞானசம்பந்தமூர்த்திநாயனாராலும், "தழைத்ததோ ராத்தியின்கீழ்த் தாவர மணலாற் கூப்பி-யழைத்தங்கேயாவின் பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு-மிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்-குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே." எனத் திருநாவுக்கரசு நாயனாராலும், " ஏத நன்னில மீரறு வேலியேயர் கோனுற்ற விரும்பிணிதவிர்த்துக்-கோதனங்களின் பால்கறந்தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன் மேற் சென்ற-தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமிசைமல ரருள் செயக் கண்டு-பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன்பூம்பொ ழிற்றிருப் புன்கூருளானே." எனச் சுந்தரமூர்த்திநாயனாராலும், "தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்-சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ்-சேதிப்ப வீசன்றிருவருளாற் றேவர்தொழப்-பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்." என மாணிக்கவாசகசுவாமிகளாலும், "தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத் தொடுமுடனே-பூதலத் தோர்கள் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் மருளிச்-சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும்-பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே." எனச் சேந்தனாராலும், "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே-தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ்-சேதிப்பக்-கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே-சண்டீசர் தஞ்செய லாற்றான்." என உய்யவந்த தேவநாயனாராலும், புகழப்பட்டமை காண்க. திருஞான சம்பந்த மூர்த்திநாயனார் புராணத்திலே திருமுகப்பாசுரத்தின் றாற்பரியம் கூறுமிடத்து "கருதுங் கடிசேர்ந்தவெனுந்திருப் பாட்டி லீசர்-மருவும் பெரும்பூசை மறுத்தவர்க்கோறன் முத்தி-தருதன் மையதாதல் சண்டீசர்தஞ் செய்கை தக்கோர்-பெரிதுஞ் சொலக்கேட்டன மென்றனர் பிள்ளையார்தாம்" என்றார் சேக்கிழார்நாயனார்.

சண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று, சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர். இச்சண்டேசுரபூசை செய்யாவழிச் சிவ பூசையாற் பயன் இல்லை. அது "சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலம்-கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்" என்னும் சைவசமயநெறித் திருக்குறளான் உணர்க. சிலர் ஆன்மார்த்த பூசையிலே சண்டேசுர பூசையை வேண்டாது விலக்குகின்றனர். சைவசித்தாந்தத்திலே சண்டேசுரரை எவ்விடத்தும் எப்போதும் பூசிக்க என்னும் நியமம் உளது; சண்டேசுரபூசை விலக்கு வாமதந்திரத்தும் தக்ஷிணதந்திரத்துமாம். இது காலோத்தராகமத்திற் கூறப்பட்டது. சிருட்டி காலத்திற் றோன்றிய சிவாகமங்களிலே சண்டேசுரபூசை விதிக்கப்பட்டதாயின், இந்நாயனாருக்கு முன்னும் சண்டேசுரர் உளர் என்பது பெறப்படுமன்றோவெனின்; சத்தியம்நீ சொல்லியது. அட்டவித்தியேசுரர் முதலியோருள் ஒருவர் பரமுத்தியை யேனும் தமது பதத்தின் மேலாகிய பதத்தையேனும் அடைய மற்றொருவர் அப்பதத்தை அடைதல் போலவே, இவ்விசாரசருமர் முன்னுள்ள சண்டேசுரரது பதத்தை அடைந்தார் எனக் கொள்க.

இதுகாறும் கூறியவாற்றால், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது. ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசாரியரை அடைந்து, சிவதீக்ஷை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக. சிவலிங்கார்ச்சனைக்கு உரியரல்லாதவர் ஆசாரியரையடைந்து, தங்கள் தங்கள் அதிகாரானுகுணமாகிய தீக்ஷையைப் பெற்றுக் கொண்டு, தூல லிங்கமாகிய கோபுரத்தையும் தூபியையும் பத்திர புஷ்பங்களாலே பூசித்து, துதித்து, வலஞ்செய்து வணங்குக. அது "உயர்ந்தகுலத்தோருட் பழுதுறுப்பி னோரு-முயர்ந்தாரை யல்லாதாரும். குறித்து மறுமை குரவன் பதத்தைக்-குறித்த வன்செய் தீக்கை தகக் கொண்டு. குறித்துச் சிவனெனக் கோபுரத்தைப் பூவும்-பறித்தருச்சித்தேத்துகபாங் கால்." எனச் சைவசமயநெறியினும், "தூபியினைக் கோபுரத்தை யீசனெனக் கண்டு தொழு-பாபமறும் வாய்த்துறுமின் பம்." என வருத்தமறவுய்யும் வழியினும், கூறுமாற்றானும் உணர்க. தங்கள் தங்கள் வருணத்திற்கு அருகமாகிய ஓருருவினிடத்தே உயிர்க் குறவாகிய சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை. அது "தமக்கருக மோருருவிற் பூசை சமையார்-தமக்குத் துணையாதோ தான்." என்னும் சைவசமய நெறித் திருக்குறளால் அறிக. சிவ பூசை பண்ணாதார் இழிவு "திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவிலூரும்-பருக்கோடிப்பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்-விருப்போடு வெண்சங்க மூதாவூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரு-மருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே." "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகிற்றீவண்ணர் திறமொருகாற் பேசா ராகி-லொருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகி-லரு நோய்கள் கெடவெண்ணீ றணியாராகி லளியற்றார் பிறந்தவா றேதோவென்னிற்-பெருநோய்கண் மிக நலியப் பேர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே" என்னும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரங்களால் உணர்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. சண்டேசுர நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. chaNdEsha nAyanAr purANam in English prose 
3. Chandeeswara Nayanar Puranam in English Poetry 

 

Related Content