கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. இப்போது ஆய்க்குடி என்று சொல்லப்படும் ஊர் இவரது தலைநகரம். அம்மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினார். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன் படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தார். அவருடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை. ஆயிடம் அடிக்கடிப் பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு பொன்னும் மணியும் அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவார். யானைப் பரிசில் தருபவன் என்று ஆய் அண்டிரனை புறநானுற்றுப் பாடல்களில் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்
ஒரு சமயம் ஒரு முனிவர் ஆயினிடம் வந்தார். அவர் ஒரு நீல ஆடையை ஆயினிடம் கொடுத்து, "காட்டில் தவம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு நாகங்கள் அங்கே சேர்ந்திருந்தன. அவற்றின்மேல் இந்த நீல ஆடை இருந்தது. இது மிகவும் புனிதமானது; கடவுள் தன்மையை உடையது. இதை வைத்திருப்பவர்களுக்கு எல்லா வளங்களும் நிறைய உண்டாகும்" என்று சொன்னார். அத்தனை மகிமை பொருந்திய அந்த ஆடையைத் தான் அணிவதைவிடத் தன்னுடைய தலைவனாகிய சிவபிரானுக்கு வழங்குவதே சிறந்தது என்று முடிவு செய்தார். மலைமேல் உள்ள கோயிலில் எழுந்தருளியிருந்த சிவபெருமானுக்கே அளித்துக் கடையேழு வள்ளல்களிலும், சங்க இலக்கியப் பனுவல்களிலும், அடியார் உள்ளங்களிலும் சிவபெருமான் திருவடி நிழலிலும் இடம் கொண்டார் ஆய் வள்ளல்.
நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
- சிறுபாணாற்றுப்படை
See Also:
1. சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு