தாராரு மூவேந்தர் பயிலுந் தொல்லைத் தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த சீராருந் தொண்டர்களு மண்ட ரேத்துந் திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங் காலத் தேராருந் தொடையிலுறா திப்பா லப்பா லெந்தைபிரா னடியடைந்த வியல்பி னோரு மாராத காதலுடை யவர்க ளன்றோ வப்பாலு மடிச்சார்ந்த வடியார் தாமே.
சேரசோழபாண்டியர் என்னும் மூவேந்தருக்கும் உரிய தமிழ்நாட்டுக்கு அப்புறத்திலே சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்திநாயனாருடைய திருத்தொண்டர்த் தொகையிலே சொல்லப்பட்ட திருத்தொண்டர்களுடைய காலத்துக்கு முன்னும் பின்னும் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், அப்பாலுமடிச்சார்ந்தாரென்று சொல்லப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
சைவம் என்பதன் முக்கியார்த்தம் சிவனைச் சார்தல் என்றாகும். அது, "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்னுந் திருமந்திரத்தால் வலுவுறும். ஆன்மா, உலகச் சார்பினின்று முற்றாக நீங்கிச் சிவனைச் சாரும் வாய்ப்பைப் பெறுதற்கு உத்தரவாதமுள்ள அநுசரணை விதி விளக்கங்களைக் கொண்டுள்ளது என்ற பொருளிலேயே சிவனை ஆதரிக்கும் நமது சமயம் சைவ சமயம் எனப் பெயர்பெற்றதுமாம். அது பற்றியே, "சைவ சமயமே சமயம்" எனத் தாயுமான சுவாமிகளும் "சைவத்தின் மேற் சமயம் வேறில்லை" என எல்லப்ப நாவலரும் எடுத்தோதுவாராயினர். எனினும், ஒரோவழி விதிவசத்தாற் சைவமல்லாத பிற சமய மொன்றில் இருக்கையிலும் ஆன்மாவுக்கு அதன் பூர்வ ஜன்மத்துச் சைவப் பயிற்சி வாசனை விட்டகுறை தொட்டகுறையாக வந்து தட்டுதலால் சிவச்சார்பு பெறும் உளவிருத்தியும் உளதாம். பிரசித்தி பெற்ற சாக்கிய நாயனார் வரலாற்றுண்மையால் அது நிறுவப்படும். எனில், "புறச் சமய நெறி நின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலு மாச்சிரம அறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்தும் சிறப்புடைய புராணங்களுணர்ந்தும் வேத சிரப் பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றாற் சைவத்திறத்தடைவர் இதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" என்ற சிவஞான சித்தியார்ச் செய்யுளில், சைவத் திறத்தடைந்து சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின்பே ஞானத்தாற் சிவனடி சேரலாம் என வற்புறுத்தப்பட்ட உண்மையின் நிலை யாதாகுமோ வெனில், அச்செய்யுளிற் சைவத்திறத்தடைவர் என்பதற்குச் சிவச்சார்பு பெறுந் தகுதியடைதலே தாற்பரிய மாதலினாலும் ஓரான்மா பூர்வஜன்மத்துச் சைவப் பயிற்சியாற் பெறவிருந்த அத்தகுதி ஒரோவழி விதிவசத்தால் தடையுண்டு கிடந்தது மீளத்தலைகாட்டும் என அநுபவத்தாற் கொள்ள இடமிருத்தலினாலும் அதன்கண் ஆசங்கைக் கிடமில்லையாம். இதே போல, மூவேந்தர் தமிழ் வழங்கும் நாடாகிய சைவநாடல்லாத மற்றும் நாடுகளிலும் ஒரோவழி ஆன்மாக்கள் தத்தம் சூழ்நிலையிலிருந்தவாறே பூர்வ ஜன்மத்துச் சைவப் பயிற்சி வாசனை வசத்தாற் சிவச்சார்பு பெறுதல் தவிர்க்க முடியாதாகும். சைவ நாட்டிலிருப்பினுஞ் சரி அயல்நாட்டிலிருப்பினுஞ்சரி யார்க்கு எந்நிலையிற் சிவச்சார்பு பெறுதற்காம் மலபரிபாகத்தகுதி ஏற்படுமோ அவர் அந்நிலையிலிருந்தவாறே வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சரியை கிரியை யோகாதிகளை மேற்கொண்டு ஞானம் பெற்றுச் சிவனடி சேர்வர் என்பது இவ்வகையால் உறுதி பெறும். மேலும், இவ்வுண்மையின் அடிப்படையில் திருத்தொண்டத் தொகையடியார் காலத்துக்கு முன்னும் பின்னுங் கூடச் சிவச் சார்படையும் உளப்பண்பு பெற்றோர் சிவனடி சேர்ந்திருத்தலில் ஆட்சேபத்துக் கிடமில்லையாகும்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. அப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. appAlum adichchArndhAr nAyanAr purANam in English prose
3. Appaalum Ati-ch-Chaarnthaar Nayanar Puranam in English Poetry