வித்துவான் ச. இரத்னவேலன், சங்கரன்கோவில்
சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
‘செங்கமல நிரையிதழின் அகவயினிற் றிகழ வருந்திருவனைய திலகவதியார்’ சரித்திரம் பெரிய புராணத்தில் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் வருவதைச் சைவ மக்கள் யாவரும் அறிவர். இவரது அரிய வாழ்க்கை ஒழுக்கம் சைவ மக்கள் உளங்கொளப் பயில வேண்டிய பயின்று பின்பற்ற வேண்டிய ஒன்றாம்.
திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் மிக்க மனையறம் புரிந்து விருந்தளிக்கு மேன்மையினார் புகழனார் என்னும் வேளாளர். அவர்க்கு மனைவியாராம் மாதினியார் மணி வயிற்றில் திலகவதியார் பிறந்தார். சிலமுறை ஆண்டு அகன்றபின் மருணீக்கியார் திருஅவதாரம் செய்தார். திலகவதியார்க்கு ஆண்டு பன்னிரண்டு ஆயிற்று. அப்பொழுது வேளாண்குடித் தலைவராம் கலிப்பகையார், புகழனார் குலம் பேசிக் குணம் பேசித் திலகவதியாரை மணம் நேர்ந்தார்.
திலகவதியார் வயதினைத் தெளிவாகக் குறிப்பிட்ட புராணம் கலிப்பகையார் பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் வேளாண் குடித்தலைவர், மின்னார் செஞ்சடை அண்ணல் (ஶ்ரீ சிவபிரான்) மெய்யடிமை விருப்புடையார், புரவனல் பால் அருளுடையார், அடல் அரி ஏறு என உள்ளார், பெருவனப்பினர் கலிப்பகையார் என்பவனற்றைக் கூறுகிறது. அவருக்கு 16 வயது வைத்துக் கொள்ளலாம் எனின் அவர் அரசருக்கு சேனாதிபதியாம் தகுதி அத்துணை இளைய வயதில் பெற்றிருக்க நியாயமில்லை. ஆதலால் உலகியலுக்கு ஆண்வயது ஏறக்குறையவிருக்கலாம் என்று தெரிகிறது. பெண்ணிற்குக் கலியாண வயது பன்னிரண்டுக்கு மேலிருத்தல் கூடாதென்பதுத் தெரிகிறது. ருதுவுக்கு முன் நடப்பது வேளாளரின் மணமுறை என்பது விகசிதம்.
கலிப்பகையாரின் சிறப்பினை நான்கு வகையாகப் புராணம் பேசியது மேலே காட்டப்பட்டது. அதாவது கலிப்பகையார் சிவப்பணியில் விருப்புடையார், உத்தியோகத்தில் திறமையுடையார், அதனால் அரசரின் அபிமானம் பெற்றவர், பெருவீரர், அழகர்.
பழைய கல்யாண முறையில் பிள்ளை வீட்டாரே பெண் பேச ஆளனுப்புதல் மரபு, சைவமரபும் அது தான் என்பதனைச் சிவபிரானே பார்வதி தேவியாரை மணம் பேச சப்தரிஷிகளைச் செல்ல விட்டமையைக் கந்தபுராணத்தில் கண்டு தெளியலாம்.
புகழனார் மணமிசைவு தெரிவித்த பின் வதுவை வினை முடிக்கும் முன் கலிப்படகியார்க்குச் செய்ய வேண்டிய பிறிதொரு பெருங்கடன் குறுக்கிட்டது. படைத் தலைவராம் கலிப்பகையார் அரசியலிற் பெரும் பொறுப்புடையவர். ஆதலின் அரசர் ஏகவ, மாறு ஏற்ற வடபுலத்தாருடன் போர் செய்யச் சென்றார். மணத்திலும் உத்தியோகக் கடனே முதன்மை எனக் கொண்டார் கலிப்பகையார்.
கலிப்பகையார் நெடுநாள்கள் நிறை வெம்போர்த்துறை விளைத்தார். அதற்கிடையில் நிலையாமையால் புகழனார் இவ்வுலக வாழ்வை நீத்தார். மாதினியார் சககமனம் செய்தார். கற்பு நெறி வழுவாத மாதினியார் நற்சுற்றம் வாய்க்கப் பெற்றவர், நன்மக்கள் பேறுடையார். ஆயினும் அவ்விரண்டனையும் துகளாகக் கருதிக் கணவனாருடன் சென்றது அவரது கற்பின் திண்மையைப் புலப்படுத்துகிறது. இல்லற வாழ்வின் பயன் நன்மக்கள் பேறு, அவரையும் துகளாகக் கருதிச் செல்லும் மனத்திண்மை அம்மம்ம! சொல்லுதற்கரிது.
கணவனாருடன் செல்லுதல் என்பது தம் உடலையும் உயிரையும் அவருடன் உயிர்களோடு இயைவித்தலாம்.
திலகவதியாரும் அரிய தம்பியாரும் ஒருவாறு பெருங் கிளைருர் தேற்ற, இரு முதுகுரவர் கடன் செய்து இருந்த பின், கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். செம்மலர் மேல் திருவனைய திலகவதியார் இது கேட்டார்.
மாதினியார் மகளார் அல்லவோ திலகவதியார்? ‘என் தந்தையும் அன்னையும் அவர்க்கு (கலிப்பகையார்) என்னைக் கொடுக்க இசைந்தார்கள். அந்த முறையால் அவர்க்கே உரியவள் நான் ஆதலினால் இந்தவுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன்’ எனக்கூறித் துணிந்து எழுந்தார்.
திலகவதியார் கலிப்பகையார் உயிரோடு தம் உயிரை இயைவிக்கக் கருதிய காரணம் என்ன? உடலோடு உடலையும் இயைவிக்கக் கருதாதது ஏன்? என எழும் ஐயங்களைத் தெளிவிக்க வேண்டும். கலிப்பகையார் யுத்த களத்தில் இறந்தார். திலகவதியார் வீட்டில் இருந்தார். அன்றியும் இருவரும் ஒருங்கிருந்தாராயினும் திருமணத்துக்கு முன் இருவருடல்களும் இயைதல் தருமமன்று. மரபுமன்று. திருமருகலில் வணிகன் ஒருவன் கன்னி ஒருத்தியை உடன் கொண்டு அணைந்தான். ஒரு மடத்தில் தங்கியிருந்த பொழுது வணிகன் அரவு தீண்டி இறந்தான். உடன் வந்த கன்னி அவ்வணிகனையே அடைவாகக் கொண்டு வந்தவளாயினும் இறந்து போன அவன் உடலையும் தீண்டினாளில்லை. அவன் அருகில் வீழ்ந்தே அரற்றினான் எனத் திருஞான சம்பந்தர் புராணம் கூறுவதையும் இவ்விடத்தில் இணைத்து நோக்குக. ஏனெனில் அக்கன்னி, தனக்கு உரிமையாளன் எனினும் திருமணத்துக்கு முன் அவன் உடலைத்தீண்ட ஒருப்படவில்லை. அவ்வுயரிய, திண்ணிய மனப்பாங்கே திருஞான சம்பந்த பிள்ளையாரின் திருவுள்ளத்தில் கருணை சுரக்கச் செய்து என்பதனை அச்சரித்திரம் படித்து அறிந்து கொள்க.
காதல் மணம் எனத் தமிழ் இலக்கியங்களின் பேசப் பெறுவது உலகியலன்று. ‘இல்லது, இனியது, நல்லது (Ideal not practical) எனப் புலவரால் நாட்டுவிக்கப்பட்ட தொன்றாகலின்’ எனக் களவியலுரைகாரரும் கூறினார். தொல்காப்பியரும் ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்’ என்ற சூத்திரத்தால் இவ்வுண்மையை வலியுறுத்தினார். காதல் மணத்துக்குச் சரித்திரச் சான்றில்லை. உளவாயின சான்றுகளும் அதாவது சான்றுகள் போல்வனவும் இனக் கவர்ச்சி அடிப்படையில் நிகழ்ந்தனவே.
அன்றியும் உடலுக்கிறைவன் கணவன்; உயிருக்கிறைவன் சிவனே. இதனைக் காஞ்சிப்புராணம் இரேணுகீசப்படலத்து
‘கொழுநன் யாரினும் இனியவன் என்றுகூ றுவர்அக்
கொழுநன் இவ்வுடற் குரியவன் குறிக்கில்ஆ குயிர்க்குக்
கொழுநன் தந்தைதாய் செல்வமும் எனவுங் கொன்றைக்
கொழுந னைத்தொடைக் குளிர்சடைச் சிவபிரான் என்றும்’.
என்ற பாடலால் தெளியலாம். அப்படியாயின் திலகவதியார் உயிரைச் சிவனோடன்றோ இயைவிக்க வேண்டும் என்று கேட்பின் அஃது ஒக்கும். கலிப்பகையார் மின்னார் செஞ்சடையண்ணல் மெய்யடிமை விருப்புடையார் ஆதலினால் அவருயிரோடியைலிப்பது சிவனோடியைவிப்பதேயாகும்.
பெற்றோர் செய்த நிச்சய்த்தால் திலகவதியாரின் உள்ளந்தான் கலிப்பகையாரிடம் சென்றதே தவிர உடல் மணத்திற்குப் பிறகே செல்ல வேண்டும் ஆகையால் உயிரோடு உயிரை இயைவிக்க ஒருப்பட்டார் திலகவதியார்.
காதலித்துப் பின் மணந்து கொள்வதா? மணந்து பின்னர் காதலிப்பதா? (Marriage after love or love after Marriage) என வினவின் மணந்தபின் காதலிப்பதே முறை. அதற்கு முன் காதலிக்கப் பெண்ணுக்குரிமையில்லை. தமிழகத்து நேரிய கற்பொழுக்கமுடைய எப்பெண்ணும் மணந்த பின் காதலித்தவளே.
திலகவதியார், மணம் நேர்ந்த பின் தம்மைக் கலிப்பகையாரின் உரிமைப் பொருளாக முடிவெடுத்தார். ஆதலால் கற்பின் மிக்க அவர் கலிப்பகையார் உயிரோடு தம்முயிரை இயைவிக்கும் காதல் மேற்கொண்டார்.
கண்ணகி முதலியோர்க்கு மணந்த பிறகே கற்பு மாண்பைக் காட்ட இடமேற்பட்டது. திலகவதியார்க்கு கற்பு மாண்பௌ மணம் நிகழும் முன்னரே காட்டும் வாய்பு ஏற்பட்டது.
திலகவதியாரின் பிறிதொரு சிறப்பு மாதா பிதா வாக்கிய பரிபாலனம் ஆம். ‘எத்தையும் எம் அனையும் அவர்க்க்கு எனைக் கொடுக்க இசைந்தார்கள், அந்த முறையால் அவர்க்கு உரியது நான்’ என மேற்கொண்டு ‘இந்த உயிர் அவருயிரோடிசைவிப்பேன்’ என ஒருப்பட்டமையால் மாதாபிதா வாக்கியத்தை அவர் பரிபாலித்தமை தெள்ளிதின் புலனாகும்.
இராமன் தந்தை சொல்லைப் பேண அரசை விட்டான். அதுவும் பதினான்கு ஆண்டுகளே. பரசுராமன் தந்தை சொற் கேட்டு தாயைக் கொன்றான். அதுவும் தந்தையின் ஆற்றலை அறிந்து அவனைக் கொண்டே தாயை எழுப்பிக் கொள்ளலாம் என்று நன்கு அறிந்து கொண்டுதான், பின்னர் தந்தையைக் கொண்டு தாயை உயிரோடு எழுப்பிக் கொள்ளவும் செய்தான். ஆனால் திலகவதியார் மாதாபிதா வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டு வாழ்க்கையையே தியாகம் செய்தார். திலகவதியார் செயலே மேலிருவர் செயலினும் சிறப்புடைத்தன்றோ?
திலகவதியார் தம்முயிரைக் கலிப்பகையார் உயிரோடு இசைவிக்க முற்பட்டபொழுது அவர்தம் அருமைத் தம்பியார் மருணீக்கியார் மிகப் புலம்பினார். ‘அன்னையும் தந்தையும் அகன்ற பின் உம்மை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன். என்னைத் தனியே விட்டுச் செல்வீராயின் யானும் உமக்கு முன் உயிர் நீப்பேன்’ என்று திலகவதியார் அடியணையில் விழுந்து மருணீக்கியார் கூறினார். திலகவதியார் உள்ளம் சகோதர வாத்ஸல்யத்தால் நிரம்பியது. தம்பியார் உளராக வேண்டும் என்னும் தயையினை உள்ளத்தில் வைத்தார் திலகவதியார்.
சகோதர வாஞ்சைக்குப் பரதனையும் இராமனையும் கூறுவர். பரதன் தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்தீவினை என நீத்தான். ஒரு வகையால் பரதன் பழிக்கும் அலர்தூற்றதலுக்கும் அஞ்சியே அவ்வாறு நீத்தான் என்னலாம். ‘தொல்குலம் பரதன் என்றொரு பழி படைத்தென்னுமால்’ என்ற கம்பர் வாக்கும் இதனை மெய்ப்பிக்கும். ஆகையால் உண்மையான சகோதர வாஞ்சை பரதன் காட்டினான் என்பதிலும் அலருக்கும் பழிக்கும் அஞ்சினான் என்னலாம். ஆனால் திலகவதியார் – மருணீக்கியாருக்குள் அப்படிப்பட்ட ஒரு நிலை எழ வாய்ப்பே இல்லை என்னலாம். தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா திலகவதியாரை உம்பர் உலகணைய மேற்கொண்ட முடிவை மாற்றச் செய்து. எனவே அவர் உடலை விட்டுச் செல்ல இருந்த உயிரைத் தாங்கினார். அம்பொன்மணி நூல் தாங்கினாரில்லை, மனிதர்க்கு மட்டுமேயல்லாமல் அனைத்துயிர்க்கும் அருளைத் தாங்கினார். இவ்வுலகில் மனையில் இருந்து தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
ஆனால் என்னே திருவருளின் திருவிளையாடல்! நம்பர் அருளாமையால் மருணீக்கியார் சமண் சமயம் புக்கார். உடனே கவலை கொண்ட திலகவதியார் சுற்றங்களை விட்டார். திலகவதியார் வீட்டிலிருந்து தவம் புரிந்ததற்குக் காரணம் தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவே. தம்பி சமண் சமயம் புகவே தமக்கையாரும் வீட்டை விடத் துணிந்தார். மற்றைச் சுற்றத்தாரைப் பொருட்படுத்தவில்லை.
திலகவதியார் திருவதிகை திருவீரட்டானஞ் சேர்ந்தார். திருவீரட்டானஞ் சேர்ந்து அங்கிருந்த செம்பவளக்குன்றை அடிபணிந்தார். குற்றமற்ற சிவசின்னங்கள் தாங்கிக் கைத் தொண்டு காதலித்து திருப்பணிகள் பல செய்தார். புலர்வதன் முன் எழுந்து திருக்கோயில் உள்புகுந்து திருஅலகிட்டார்; திருமெழுக்கிட்டார்; மலர் கொய்து கொண்டு வந்து மாலைகளுந் தொடுத்தமைத்து எம்பிராற்குச் சூட்டக் கொடுத்துப் பணிகள் பல செய்தார்.
திருவீரட்டானஞ் சேர்ந்த பின்னர் தான் திலகவதியார் சிவசின்னந் தாங்கினாரோ” இல்லில் அவ்வுயரிய சின்னங்களை தாங்கினாரில்லையோ? எனச் சிலர் அறியாது வினவலாம். இல்லில் அச்சின்னந்தாங்கினார். ஆனால் திருவதிகையில் தபோதனியானார். ஆகையால் இங்குச் சிவசின்னம் என்பது சடைமுடியும் காஷாய வஸ்திரதாரனமுமென்பதைக் குறித்தனவாம். இதனைத் திருவீரட்டானத்தில் ‘கோதில் சிவ சின்னம் அன்று முதற்றாங்கி’ எனப் பெரியபுராணம் கூறுவதால் அறியலாம். இல்லில் விபூதி ருத்திராக்ஷமாகிய சிவ சின்னங்கள் தாங்கி வாழ்ந்தார்.
திலகவதியார் ‘கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார்’ ஆயினும் தம்பியார் சமண் சமயம் புகுந்தபின் ‘தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியக்’ காரணம் என்னையோன்வெனின் அனைத்துயிர்க்கும் அருள் தாங்கியதேயாம். கேளில் (தொடர்புடைய சுற்றத்தார்) பால் நிகழ்வது அன்பு. அனைத்துயிர்கள் பாலும் நிகழ்வது அருள். அன்பு அருளில் அடக்கம்.
திலகவதியார்க்கு அடுத்தடுத்து நிகழ்ந்த துயரங்கள் சகிக்குந்தகையன அல்ல. பெற்றோர்க மரணமும், அதற்கு அடுத்துத் தம்மை மணக்க இருந்த கலிப்பகையார் பிரிவும், தம்பியார் பரசமயம் புகுந்ததும் அவர்க்கு அடுத்தடுத்து வந்த பெருந்துயரங்கள்.
இவ்வுலகை நீத்தவர்களை உயிர்ப்பிக்க அவர் விரும்பினாரில்லை. ஆனால் தம்பியாரைப் பரசமயத்திலிருந்து மீட்டல் ஒன்றையே பெரிதும் விரும்பினார். அஃது ஏன்? உரியார்கள் சாவதிலும் பரசமயம் புகுவது மிகவும் இழிவு. அதனைப் பார்த்துக் கொண்டிருத்தல் சிவாபராதமாகும். தம்பியார் உளராக வேண்டும் என்பது திலகவதியார் கொண்ட இலட்சியம். அதற்கடையாளம் அவர் சமண் புகுந்ததும் திலகவதியார் தம் வீட்டை விட்டார். இப்போது தம்பியார் மீள வேண்டும். எப்படி மீள்வது? பரசமயியாயிருந்து கொண்டே மீளலாம். ‘தம்மை உள்ளவாறு உணர்ந்தார் சங்கரர்க் கடிமை செய்யும் சால்பு மேற்கொள்வார்’. தம்மை உள்ளவாறு உணர்ந்த திலகவதியார் தம்பியார் சமண் சமயத்திலிருந்து சங்கரர்க்கடிமை செய்யும் சால்பினை உடையராதல் இயலாது என்பதையும் உணர்ந்தார். எனவே தம்பி சைவராகியே மீள முடியும் என உறுதி கூடினார். தம்பியார் சமண மன்னனின் பாதுகாவலில் இருக்கிறார். பிறர்யாருந் திருப்ப முடியாது தம்பியாரை. தம்பியாரைத் திருப்பவல்லார் சிவபெருமான் ஒருவரே. எனவே தூண்டு தவவிளக்கனைய திலகவதியார் திருவீர்ட்டானச் சுடரொளியைத் தொழுது ;என்னை அடிமைகொண்டு, அவ்வடிமைத் திறத்தைத் தேவரீர் அங்கீகரித்தீராயின் என் பின்வந்தவனைப் பரசமயக் குழியினின்றூம் எடுத்தாள வேண்டும்’ எனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தார்.
இக்காலத்தில் பணத்திற்கும், பதவிக்கும், பாவையர்க்கு மெனப் பரசமயம் புகும் சைவசமயப் பிறப்புடையாரைப் போகாமலிருக்கும்படி தடுத்து வைப்பதே கஷ்டமாயிருக்கிறது. அம்மூன்று உலக சுகங்களைப் பெரும்பேறாகக் கருதி வாழும் அப்பேதை நீரரைச் சைவத்திற் கொண்டு வருதல் சாமானியமா?
சிவனார் திருச்செவியில் அடியார் விண்ணப்பம் ஏறாது போமா? ‘புத்தரும் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்ற’ சிவபிரான் திலகவதியார் கனவில் போந்து அநுக்கிரகம் செய்து அருளினார். திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழத் திருவருள் பாவித்த பெருமான், கடுங்கனல் போல் அடுங்கொடிய மண்டு சூலை நோயை மருணீக்கியார்க்குத் தந்து ஆண்டான்.
மருணீக்கியார் நம்பர் அருளாமையினாலும் சமண் புகுந்தமையினாலும் தமக்கு நன்றி செய்த திலகவதியாரை அறவே மறந்திருந்தார். எப்பொழுது ‘வடவனலும், கொடுவிடமும், வச்சிரமும் பிறவுமாங்கொடியவெலாம் ஒன்றாகிக் குடரில்’ துன்புறுத்தினாற்போல கொடுஞ்சூலை துன்புறுத்திய பொழுது அதனைத் தீர்க்க முடியாது சமண் குண்டர்கள் கை விட்டாகளோ அப்பொழுதுதான் பண்டையுறவு உணர்ந்தார்க்குத் திலகவதியாருளாராக் கொண்டார்.
திலகவதியார்க்குத் தூது அனுப்பினார் மருணீக்கியார். மருணீக்கியாரின் பரிசாரகன் அவர் ஏவல் வழி திலகவதியாரைக் கண்டிறைஞ்சினான். அப்பொழுது திலகவதியார் அருந்தவத்தராய் பூங்கமழ் நந்தனவனத்தின் புறத்தணைந்திருந்தார். பரிசாரகன் ‘ஈங்கு யான் உமக்கிளையார் ஏவலினால் வந்தேன்’ என்றபொழுது ‘தீங்குளவோ?’ என வினவினார். அவ்வினா முன்னர்க்கனவில் சிவபிரான் ‘அன்னவனைச் சூலை மடுத்தாள்வன்’ என அருளியதைக் கருதியிருக்கலாம். பிறர் யாவரும் கைவிட்டபின் பண்டையுறவு உணர்வு, தீங்கு உளவாயினபின் தானே தோன்றும் என்பதையும் உணர்த்தலாம்.
மருணீக்கியார்க்குச் சூலைநோய் குடர்முடக்கித் தீராமையையும் எல்லாரும் கைவிட்ட செய்தியையும் பரிசாரகன் கூறினான். எந்த லட்சியத்திற்குத் திலகவதியார் உயிர் தாங்கி வாழ்ந்தாரோ அவ்விலட்சியம் சிதையும் நிலை (மருணீக்கியார் உயிர் ஆபத்தான நோய் நிலை) வந்துற்ற பொழுதும் ‘நான் அங்கு உன்னுடன் போந்து நன்றறியா அமண்பாழி நண்ணுகிலேன்’ என்று கூறிய திட்பம் சைவ மக்கள் யாவருடைய உள்ளத்திலும் கொள்ளத்தக்கது. அம்மையார் உலகில் வாழ்ந்ததற்குரிய லட்சியத்திலும், சமய லட்சியத்தை எவ்வளவு உயர்வாகக் கொண்டிருந்தார் என்பது புலப்படுகிறது. பரிசாரகன் இவ்வார்த்தை கேட்டு அவ்வாறே மருணீக்கியார்க்கு அறிவித்தான். பின்னரே ஈசர் அருள் கூடியது. ஒவ்வாத புன்சமயத்தொழியா, சூலைத்துயர் ஒழிய செவ்விய சிவ நெறிபற்றி ஒழுகும் திலகவதியார் தான் சேர மருணீக்கியார் முனைந்தார். மருணீக்கியார் திருவதிகையடைந்து திலகவதியார் திருவடி வீழ்ந்தார். ‘நம் குலம் செய்த தவத்தின் பயன் போன்றவரே, கொடுஞ்சூலைக் கிடைந்து அடைந்தேன். இனி மயக்கமடையாது உய்ந்து கரையேறும் நெறி உரைத்தருளும்’ என விண்ணப்பம் செய்தார் மருணீக்கியார். நோய் நீங்க வேண்டினாரில்லை தம்பியார். தமக்கையாரும் ‘கொள்கையற்ற பரசமயக் குழியில் விழுந்து அறியாது மூண்ட அரிய துன்பத்திற்காளானவரே எழுந்திரும்’ எனப் பேசி உய்யு நெறியாக ‘கற்றை வேணியார், கழலடைந்தார் பற்றறுப்பார், அவர் தமைப் பணிந்து பணி செய்வீர்’ எனக்கூறித் திருக்கயிஅலிக் குன்றுடையார் திருநீற்றை அஞ்செழுத்தோதிக் கொடுத்தார்.
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெற்ற தம்பியார் பெருவாழ்வு தாம் மட்டுமோ பெற்றார்? தம்மையும் பெறச்செய்தார். இத்துணைக்கும் காரணம் ஈசனாரருள் எனினும் அது திலகவதியார் வழியாலே தான் நம்மை வந்து அடைந்தது.
இதுகாறும் திலகவதியார் கற்பின் தின்மையையும், மாதா பிதா வாக்கிய பரிபாலனத்தையும், சகோதர வாஞ்சையையும், சமய லட்சியத்தில் பிறழாதிருந்தமையையும் ஒருவாறு கண்டோம்.