logo

|

Home >

articles >

vedangalin-cirappugal

வேதங்களின் சிறப்புகள்

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

பாரத நாட்டினர் அனைவரும் தம்முடைய சமயம், ஒழுக்கம், சடங்குகள் மற்றும் கலாசாரங்களி&ன் தோற்றுவாயை வேதத்திலிருந்தே தொடங்குவது மரபு; இது தொன்றுதொட்டு வரும் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. வேதத்தின் கொள்கையோ அல்லது வாக்கியமோ முழுதும் அப்படியே கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது அசைக்கமுடியாத கருத்தாகக் கொள்ளப்பட்டுவருகிறது. அவ்வேதங்கள் கடவுளாகிய பரம்பொருளால் தவசீலர்களான முனிவர்களுக்கு அவர்களுடைய மிக உயர்ந்த தியான நிலையில் அருளப்பட்டவை; அவை அம்முனிவர்களால் காவியங்களைப் போன்றோ அல்லது மற்ற நூல்களைப் போன்றோ எழுதப்பட்டவை அன்று. இக்காரணம் பற்றியே அம்முனிவர்கள் ரிஷிகள்--மந்திரங்களைத் தங்களுடைய தியான நிலையில் கண்டவர்கள்--என்றழைக்கப்பட்டனர்.

வேதம் என்னும் சொல்லுக்கு உயர்ந்த அறிவு, ஞானம் என்பது பொருள்; பரம்பொருளால் முனிவர்களுக்கு அருளப்பட்டதால் அந்த உயர்ந்த கருத்துக்கள் அடங்கிய நூலுக்கும் வேதம் எனப் பெயர் வழங்கப்பட்டது. ஐம்புலன்களாலோ, மற்றும் மனத்தினாலோ அறியப்படமுடியாத தத்துவங்களை விளக்குவதாலும், எல்லாவற்றிற்கும் மேலான நிலையையும் பேரின்பத்தையும் அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி விளக்குவதாலும் வேதங்கள் பரம்பொருளால் மட்டுமே முனிவர்களுக்குத் தியான நிலையில் அருளப்படத் தக்கவை.

வேதங்களின் பிரிவுகள்

வேதங்கள் ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என நால்வகைப்படும்.

பொதுவாக வேதங்கள் ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம் என மூன்று நூற்பிரிவுகளைக் கொண்டவை. வேதங்களின் சில முக்கிய சொற்களுக்கு உரை எழுதிய யாஸ்கர் என்னும் முனிவர் தம்முடைய நிருக்தம் என்னும் நூலில் ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் என்னும் இருபிரிவுகளையே குறிப்பிடுகிறார். பரம்பொருளான ப்ரஹ்மம், ஜீவாத்மா, மோக்ஷம் ஆகியவற்றை மிக விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராய்ந்து முதன் முதலில் உலகுக்கு அறிவித்த உபநிஷத்துக்கள் பெரும்பான்மை ஆரண்யகம் என்னும் பகுதியில் அடங்கும். ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் ஆகிய இரு பகுதிகளும்*1 முக்கியமாகப் பலவித வேள்விகளைப் பற்றி விளக்குவதால் அவை கர்மகாண்டம் என்றும், சூரியமண்டலத்தில் ப்ரஹ்மத்தைத் தியானித்தல், பஞ்சாக்னி வித்தை முதலிய தியானவகைகளை விளக்குவதால் ஆரண்யகங்கள் உபாஸனாகாண்டம் என்றும், ஞானநிலையைப் பற்றி விரித்துக் கூறுவதால் உபநிஷத்துக்கள் ஞானகாண்டம் எனவும் குறிக்கப் பெறுகின்றன. இதில் ரிக்வேதம் பலவித யாப்புகளைக் கொண்ட செய்யுள் (ரிக்) வடிவிலும், யஜுர்வேதம் செய்யுளும் உரைநடையும் கலந்தவடிவிலும் அமைந்துள்ளது. ஸாமவேதம் பெரும்பான்மை ரிக்வேதத்தின் ரிக்குகளைக் கொண்டு இசைவடிவில் அமைந்துள்ளது.

&lrm

*1 मन्त्रब्राह्मणयोर्वेदनामधेयम्. “மந்திரங்களும் பிராஹ்மணங்களும் அடங்கிய நூல் வேதம் எனப்படும்” என்பது யாஸ்கர் என்னும் மஹர்ஷியின் வாக்கு.

வேதம் ஐந்து பெரும் நூல்களைக்கொண்டது: அவை ரிக்வேதம், கிருஷ்ணயஜுர்வேதம், சுக்லயஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் என்பன. ஆயினும், மிகப் பழமையான காலத்தில் ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூவகை நூல்களே வேதம் என அழைக்கபட்டு வந்துள்ளன என்பது பாணினி முனிவரின் வியாகரண நூல் முதலியவற்றிலிருந்து நாம் அறிகிறோம். அதர்வணவேதம் சற்றுப் பின்னரே வேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

வேதங்களின் அமைப்பு

ரிக்குகள் மந்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன; அவை இந்திரன், அக்னி, வருணன், ஸோமன், மித்ரன், மருத்துக்கள், விச்வேதேவர்கள், ருத்திரன், விஷ்ணு ஆகிய தேவர்களைக் குறித்து அவர்களுடைய புகழ்பாடும் தோத்திரங்களாக அமைந்துள்ளன.

நால்வேதங்களுக்கும் 14 ம் நூற்றாண்டில் விரிவான உரை வகுத்த ஸாயணாசாரியர் கூறுவதாவது: பிராஹ்மணங்கள் எண்வகைத் தலைப்புகளில் விரிந்த பல செய்திகளைக் கொண்டவை. அவை வரலாறு (இதிஹாஸம்), தொன்மையான கதைகள் (புராணம்), தியானம் பற்றிய விளக்கங்கள் (வித்தியை), பரம்பொருளைப் பற்றிய ஞானம் (உபநிஷத்), பல்வகைச் செய்யுட்கள் (சுலோகம்), சூத்திரங்கள் (ஸ¥த்திரம்), விளக்கங்கள் (வியாக்கியானம்), விரிவான விளக்க உரைகள் (அனுவியாக்கியானம்) ஆகியன. ஒவ்வொரு வேதமும் பிராஹ்மணங்களை உடையது: கௌஷீதகீ, ஐதரேயம், பைங்கிரஹஸ்யம் சாட்யாயனம் ஆகிய நான்கும் ரிக்வேதத்திற்குரிய பிராஹ்மணங்களாகும். ஸாமவிதானம், மந்திரம், ஆர்ஷேயம், வம்சம், தைவதாத்யாயம், தலவகாரம், தாண்ட்யம், ஸம்ஹிதோபநிஷத் ஆகிய எட்டும் ஸாமவேதத்திற்குரிய பிராஹ்மணங்கள். கிருஷ்ணயஜுர்வேதம் தைத்திரீயம், வல்லபீ, ஸத்யாயனீ, மைத்ராயணீ ஆகிய நான்கு பிராஹ்மணங்களைக் கொண்டது. சதபதபிராஹ்மணம் என்னும் ஒரு பிராஹ்மணத்தை உடையது சுக்லயஜுர்வேதம். இப்பிராஹ்மணம் காண்வம், மாத்தியந்தினம் என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது. கோபதம் என்பது அதர்வணவேதத்திற்குரிய பிராஹ்மணமாகும்.

ஆரண்யகம் என்பது பிராஹ்மணங்களின் ஒரு பகுதி; அவை பெரும்பான்மை பிராஹ்மணங்களின் இறுதியில் அமைந்துள்ளன. அவற்றுள் நமக்குச் சில ஆரண்யகங்களே கிடைத்துள்ளன. இந்த ஆரண்யகங்கள் ஆன்மா, ஜீவன், பரபிரஹ்மம் ஆகிய ஞானபாதச் செய்திகளைப் பற்றி ஆராயும் நூல்கள்; அவற்றிற்குத் தனியே உபநிஷத்துக்கள் என்று பெயர். இவையே வேதங்களின் இறுதிப் பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பிருஹதாரண்யகம், முண்டகம், பிரச்னம், மாண்டூக்கியம், கேனோபநிஷத், சாந்தோக்கியம், சுவேதாச்வதரம் ஆகியன முக்கியமான உபநிஷத்துக்களாகக் கருதப்படுகின்றன. ஆசாரியர் வாய்மொழியாகக் கூறவும் அதைக் கேட்டுச் சீடர்கள் மீண்டும் கூறுவதால் வேதங்கள் சுருதி என அழைக்கப்படுகின்றன. தோத்திர வடிவிலமைந்த ரிக் வேதமந்திரங்களும் யஜுர்வேத-மந்திரங்களும் ஸோமயாகம், ராஜஸ¥யம், அச்வமேதம் முதலிய பலவகையான யாகங்களில் ஓதப்படுகின்றன. ஸாமவேதமும் அவ்வாறே இசைக்கப்படுகின்றது. ரிக் வேதத்தை ஓதுபவர் ஹோதா என்றும், யஜுர்வேதத்தை ஓதுபவர் அத்வர்யு என்றும் ஸாமவேதத்தை இசைப்பவர் உத்காதா எனவும் அழைக்கப்படுவர். அதன் மூலம் இந்திரன் முதலான தேவர்கள் மனமகிழ்ச்சியடைந்து யாகங்களில் தாங்களே நேரே தோன்றி தங்களுக்குரிய அவிர்பாகங்களைப் பெற்றுக் கொண்டு, வேள்வி செய்யும் யஜமானர்களுக்கும் மற்றோருக்கும் அவர்கள் வேண்டியதை அளிப்பர்.

வேதங்களில் கூறப்படும் முக்கிய கருத்துக்கள்

பல தெய்வங்களைப் பலவாறாகத் தோத்திரம் செய்யும் நூல்களாயினும் வேதங்களின் மந்திரங்கள் மிகப் பல தத்துவங்களை உள்ளடக்கியவை. பல் வகைப்பட்டு விரிந்து பரந்த உலகத்தின் என்றும் மாறாத அடித்தளமாக விளங்கும் ஒரே பரம் பொருளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்த பெருமை நம் வேதரிஷிகளைச் சேரும். அவர்கள், மாறிவரும் உலகப்பொருள்களின் பின்னணியாக விளங்கும் என்றும் மாறாத தத்துவங்களைக் கண்டவர்கள். அவ்வாறே, அக்னி, மித்ர,ன் இந்திரன் முதலான பல தெய்வங்களைப் போற்றி வழிபட்டாலும் அத்தெய்வங்களெல்லாம் ஒரே பரம் பொருளின் பலவித நிலைகளே என்று உறுதியாகக் கண்டு அக்கருத்தை ஆணித்தரமாக உலகுக்கு உணர்த்தியவர்கள்:

एकं सद्विप्रा बहुधा वदन्ति . (ரிக்வேதம், 10: 114: 5)

“பரம் பொருள் ஒன்றே; பேரறிவாற்றல் பொருந்தியவர்களும், ஆன்மீகத்தில் மிக உச்சநிலையை அடைந்தவர்களுமாகிய முனிவர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்” என்னும் அந்த உயர்ந்த கருத்தை மிக மிகப் பழங்காலத்திலேயே உலகுக்கு வழங்கியவர்கள் ரிக்வேதரிஷிகள்.

மித்ரன் பகல் பொழுது மற்றும் ஒளிக்குக் கடவுளாகவும், வருணன் விரிந்து பரந்த நீல நிற ஆகாயத்திற்குக் கடவுளாகவும் பல மந்திரங்களில் போற்றப்படுகின்றனர். மேலும் வருணனை தர்மம், நியாயம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஒரு ஒப்பற்ற கடவுளாக அம்முனிவர்கள் போற்றினர். அதர்வணவேதத்தின் ஒரு மந்திரம் கூறும் ஒரு உயர்ந்த கருத்து பின்வருமாறு:

“இம்மூவுலகங்களையும் ஒருசேர ஆளும் பேராற்றல் பொருந்திய வருணனானவன் ‘நான் தனியே யாரும் அறியாமல் ஒரு திருட்டுச் செயலைச் செய்கிறேன்’ என்று நினைக்கும் மனிதனை மிக அருகாமையிலிருந்து அவன் அறியாவண்ணம் காண்கிறான். மனிதன் தனியாக யாரும் அறியாவண்ணம் நின்றாலும் நடந்தாலும் உறங்கினாலும், தனியே இருமனிதர்கள் அமர்ந்து ரகசியமாகப் பேசினாலும் அரசனான வருணன் அதை நன்கு அறிவான். அங்கு அவன் மூன்றாமவனாக யாருமறியாவண்ணம் இருக்கின்றான். இந்தப் பூமியும், மேலுலகும் வருணனுடைய ஆட்சிக்கு உட்பட்டவை. உலகின் அனைத்துக் கடல்களும் அவனுடைய வயிற்றில் அடங்கும். மனிதன் இவ்வுலகின் எல்லையைத் தாண்டி ஓடினாலும் அவன் வருணனின் பிடியிலிருந்து தப்பமுடியாது.” பரம்பொருள் எங்கும் வியாபித்திருக்கிறது என்னும் கருத்தை ஆணித்தரமாக உணர்த்துவதை இதைவிட வேறெங்கும் காணமுடியாது.

சூரியனின் அளவிறந்த ஆற்றலையும், உலகத்திலுள்ள அனைத்துத் தாவரங்களும் உயிரினங்களும் சூரியனின் சக்தியால் இயங்குவதையும் கண்ட அம்முனிவர்கள் ஆதித்தியனாகிய சூரியனே அனைத்துக் கடவுளரின் வடிவம் கொண்டவன் என்று போற்றி வணங்கினர். மித்ரன், இந்திரன், விஷ்ணு, ஸவிதா என எல்லாக் கடவுள்களின் வடிவமாக அவனே திகழ்கிறான் என்றும் அவனைப் போற்றினர். “சூரியனின் ஒப்பற்ற ஒளியானது நம்முடைய புத்தியை மிக உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்வதாக” என்று பிரார்த்திப்பதே காயத்ரீ என்னும் ரிக்வேதத்தின் ஒப்பற்ற மந்திரத்தின் பொருளாகும்.

யஜுர்வேதத்தின் ஒருபகுதியான சதருத்ரீயத்திலும் “நம் கண்முன்னே தோன்றும் இந்தச் செம்பழுப்பு நிறமான ஆதித்தியனே ருத்திரனாவான்; அவனை, மாடு மேய்ப்பவர்களும், நீர்முகந்து செல்லும் பெண்களும் தம்முடைய இருகண்களாலும் காண்கின்றனர்” என்றும் சூரியனை ருத்திரபகவானாகப் போற்றுவதை நாம் காண முடிகிறது.*2 இந்த சதருத்ரீயம் ருத்திரனான சிவபெருமான் எல்லா ஜீவராசிகளிடத்தும் நீக்கமற நிறைந்திருப்பதை மிக நன்றாக விளக்குகிறது.

*2 असौ यस्ताम्रो अरुण उत बभ्रुः सुमङ्गलः. असौ योऽवसर्पति नीलग्रीवो विलोहितः . उतैनं गोपा अदृशन् अदृशन् उदहार्यः .

மிக அதிகமான மந்திரங்கள் இந்திரனைப் போற்றுபவை; அவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். விருத்திரன் என்னும் அரக்கனைக் கொன்று மேலுலகத்திலிருந்து மேகக்கூட்டங்களை அவிழ்த்துவிடுவதன் வாயிலாக பூவுலகில் இந்திரன் மழைபொழியச் செய்கிறான். அதனால் பயிர்கள் எல்லாம் செழித்து வளர்கின்றன என்று பல ரிக்வேதமந்திரங்கள் அவனுடைய புகழைப் பாடுகின்றன. எனவே, இந்திரன் மழைக்கும் பயிர்களுக்கும் கடவுளாகத் திகழ்வதை வேதங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

இந்திரனுக்கு அடுத்தபடியாகப் புகழப்படுவது நெருப்பாகிய அக்னிக் கடவுள். அக்னியின் வாயிலாகவே மற்ற கடவுள்களும் வழிபடப்படுவதை நாம் காண்கிறோம். அக்னியே வேள்விக்கும் மக்களின் இல்லத்திற்கும் தலைவன்; அவனே ஏனைய கடவுளர்க்கு அவிர்ப் பாகத்தைச் சேர்ப்பிக்கிறான். அவனை வழிபடுவதன் மூலம் மக்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் பெறுகின்றனர். ருத்திரன் அக்னி வடிவாக வணங்கப்படுவதைப் பல மந்திரங்களில் நாம் காண்கிறோம்.

புருஷஸ¥க்தம் என்னும் மந்திரம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் அதைக் கடந்து என்றும் மாறாமல் விளங்கும் கடவுளாகிய பரம் பொருள் விளங்குவதை மிகச் சுவைபட எடுத்துரைக்கிறது.

தியாக உணர்வு, எந்நிலையிலும் இந்த உலகம் இயங்குவதற்கு ஆதாரமான தர்மத்தைக் கடைப்பிடித்தல், ஆன்மீக அடிப்படையிலும், அன்பின் அடிப்படையிலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஆகியன வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள்.

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

 

Related Articles