logo

|

Home >

articles >

thiruvarur-naanmanimalai-jayalakshmi

திருவாரூர் நான்மணிமாலை - கட்டுரை

எஸ். ஜயலக்ஷ்மி

     வெவ்வேறு வகையான நான்கு மணிகளைத் தொடுத்தமைத்த மாலைபோல வெண்பா, கட்டளைக் கலித்துறை. ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, என்பவை முறையாக அமைய நாற்பது செய்யுள்கள் பாடு வது நான்மணி மாலை எனப்படும். திருவாரூர் நான்மணி மாலையில் திருவாரூரின் சிறப்புகள் பேசப்படுகிறன. இம் மாலையில் அகத்துறைச் செய்யுட்கள் பல நிறைந்திருக் கின்றன. தலைவி சொல்வதாகவும் தோழி சொல்வதாகவும் சில செய்யுட்கள் உள்ளன.


திருவாரூர் சிறப்பு

     திருவாரூருக்குக் கமலாலயம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கமலையில் பிறந் தாலே முக்தி கிட்டும் என்றும் சொல்வார்கள்.திருவாரூரின் சிறப்பை சேக்கிழார் இப்படி வருணிக்கிறார்.

 

            வேத ஓசையும் வீணையின் ஓசையும்
            சோதி வானவர் தோத்திர ஓசையும்
            மாதர் ஆடல் மணி முழவோசையும்
            கீத ஓசையுமாய்க் கிளர்வுற்றதே


     அந்த நகரமே இனிய ஓசைகளால் நிரம்பப் பெற்றிருந்தது என்கிறார். ஒரு பசுவின் துயரத்திற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இடத் துணிந்த நீதி தவறாத மநுநீதிச் சோழன் ஆண்ட நகரம் இது.

 

     சிதம்பரம் திருக்கோயிலில் புதைக்கப் பட்டிருந்த தேவார திருப்பதிகங்களைக் கண்டெ டுத்து இந்த நகரத்தில் கோயில் கொண்டிருக்கும் தியாகேசருடைய சந்நிதியில் ஏற்றுவித்தார் அபயகுலசேகரச் சோழன். அவற்றை 11 திருமுறைகளாக வகுத்தார். அதன்பின் சேக்கிழாரின் பெரிய புராணத்தையும் 12வது திருமுறை என வகுத்து அதையும் தியாகேசருடைய சந்நிதியிலேயே ஏற்று வித்தார்.

 

     இது மட்டுமல்ல சுந்தர மூர்த்தி நாயனார் திருத் தொண்டத்தொகையை அருளிச் செய்த தேவாசிரிய மண்டபமும் இங்கே உள்ளது. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மணிமுத்தா நதியில் இட்ட பொன்னைப் பரவை நாச்சியாருக்கு எடுத்து அளித்த கமலாலயம் என்னும் திருக் குளமும் இங்குதான் விளங்குகிறது.

 

     இவ்வளவு சிறப்புக்கள் பொருந் திய திருவாரூரைப் பற்றி குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஊருக்குள் நுழையும் முன்பே அகழி, கோட்டை, மதில், கொடி, சோலைகள் இவற்றை யெல்லாம் பார்த்து விட்டுப் பின் கோயிலுக்குள் செல்வோம்.

 

அகழி

     திருவாரூருக்குள் நுழையு முன் அங்குள்ள அகழியைத் கடக்க வேண்டுமே! அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களை யு டைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர் கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்ட மாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு. பாடலைப் பார்ப்போம்.

 

        நவமணி குயின்ற நாஞ்சில் சூழ் கிடக்கும்
        உவளகம் கண்ணுற்று உவாக்கடல் இது எனப்
        பருகுவான் அமைந்த கருவி மாமழையும்
        செங்கண் மால் களிறும் சென்று படிய
        வெங்கண் வாள் உழவர் வேற்றுமை தெரியார்
        வல்விலங்கிடுதலின், வல்விலங்கு இதுவெனச்
        செல்விலங்கிட எதிர் சென்றனர் பற்றக் 
        காகபந்தரின் கைந்நிமிர்த்து எழுந்து
        பாகொடும் உலாவிப் படர்தரு தோற்றம்
        நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக்
        கொடு போதந்த கொண்டலை நிகர்க்கும்

என்று ஒரு புராண நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார்.

 

கொடிகள் காட்டும் அறிவுரை

     திருவாரூர் மதில்களில் மணிகள் பதிக்கப் பெற்றிருக்கின்றன. உயர்ந்த மணி மாடங்களில் கொடிகள் பறக்கின்றன. அந்த மணி மாடங்கள் எவ்வளவு உயரம் என்றால் அந்த மாடங்களில் பறக்கின்ற கொடிகள் சந்திர மண்டலம் வரை சென்று துளைக்கின்றன. ஆனால் சந்திரன் இதற்காக அந்தக் கொடிகள் மேல் கோபம் கொள்ளா மல் அக்கொடிகளுக்கு அமுதம் பொழிந்து, அக்கொடிகளின் வெப்பத்தை ஆற்றி உதவி செய்கிறதாம்.

 

     கொடியவர்கள் தங்களுக்கு எவ்வ ளவு கொடுமை செய்தாலும், அறிவுடையோர்கள் அவர்களின் கொடுமையை மன்னித்து அருள் செய்வார்கள் அல்லவா? இதைத்தான் அந்தக் கொடிகள் உணர்த்துகின்றனவாம்


        விண்தொட நிவந்த வியன் துகில் கொடிகள்
        மண்டலம் போழ்ந்து மதி அகடு உடைப்ப
        வான் நிலா அமுதம் வழங்கி அக்கொடிகள் 
        வேனிலிற் பயின்ற வெப்பம் அது ஆற்றுபு
        கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும்
        மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும் 
        பன்மணி மாடப் பொன் மதிற் கமலைக் கடிநகர் 
                                  வைப்பினிற் கண்டேம்

என்று அந்த மாடங்களையும் கொடிகளையும் நமக்குக் காட்டுகிறார்.

 

சோலைகள்

     திருவாரூரிலுள்ள சோலைகள் வழியாகச் செல்கிறோம். சோலைக் காட்சிகள் நம் கண்ணை யும் கருத்தையும் கவர்கின்றன. இந்தச் சோலையில் பாக்கு மரங்களில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆடிக் கொண்டிருக்கி றார்கள். கமுக மரங்களில் முத்துக்கள் உண்டாகும். இந்தப் பெண்கள் ஊஞ்சலை வீசி வீசி ஆடும் ஆட்டத்தில் அம் மரங் களிலிருந்து முத்துக்கள் விழுகின்றன. பாக்குக் காய்களும் விழுகின்றன. ஊஞ்சலாடும் இப்பெண்களின் கழுத்தழகை இக்கமுகு கவர்ந்து கொண்டு விட்டதே என்று அப்பெண்கள் வருந்துகிறார்கள். கமுகிலிருந்து விழும் அம்முத்துக்கள் அப்பெண்களின் கண்ணீர் முத்துக்கள் போலிருக்கிறதாம்.

 

    நெட்டிலைக் கமுகின் நெடுங் கயிறார்த்துக் 
    கட்டு பொன்னூசல் கன்னியராட அப்
    பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த
    வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம்
    கந்தரத்தழகு கவர்ந்தன இவையென
    அந்திலாங்கு அவர் ஆர்த்தனர் அலைப்ப 
    ஒண்மிடறு உடைந்து ஆங்கு உதிரம் சிந்தக்
    கண்முத்து உகுத்துக் கலுழ்வது கடுக்கும்.

 

கழைக்கூத்தாடி

    இன்னும் கொஞ்ச தூரம் செல் கிறோம். மற்றுமொரு அழகான சோலை! இந்தச் சோலை யிலும் கமுக மரங்கள். இம்மரங்களில் முல்லைக் கொடிகள் படர்ந்து மேலே சென்று தலை விரித்தாற்போல் கிளைகள் தோறும் சென்று மடங்கித் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அருகிலிருக்கும் வாழை மரங்களிலும் படருகின்றன. அக்கமுக மரங்களின் மேல் நீண்ட தோகையையுடைய மயில் ஆடிக் கொண்டிருக்கிறது.

 

    பெண் குரங்குகள் தமது கைகளில் பலாப்பழங்களைத் தூக்கிக் கொண்டு வருகின்றன. அப்போது சுழன்று வரும் ஒரு ஆண்குரங்கு நன்கு பழுத்த ஒரு பலாப் பழத்தைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு வருகிறது. அதைப் பெண் குரங்குகள் பின் தொடர்கின்றன. இதைக் கண்ட அந்தக் குரங்கு கமுக மரத்திலிருந்து தாழ்ந்து வாழை மரத்தின் மேல் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியில் போய் உட்காருகிறது. இதைப் பார்க்கிறார் குமரகுருபரர்.

 

    அவருக்குக் கழைக்கூத்தாடி நினைவு வருகிறது. கமுக மரத்தைப் பார்த்தால் கழைக்கூத்தாடி நட்டு வைக்கும் நீண்ட கம்பமும், வாழை மரங்கள் சுற்றிலும் அடிக்கப்பட்ட முளைகளாகவும் முல்லைக் கொடிகள் கயிறுகளாகவும், கமுக மரத்தின் மேல் ஆடும் மயில் கம்பத்தின் மேல் ஆடும் பெண்ணாகவும் தோன்றுகிறது. பலாப்பழங்களைக் கையில் எடுத்துத் தாக்கும் பெண்குரங்குகள் பறையடிப்பவராகவும், தலையில் பலாப்பழத்தைக் கொண்டு செல்லும் ஆண்குரங்கு கயிற்றின் மேல் குடத்தோடு செல்லும் கழைக்கூத்தாடியாகவும் தோன்றுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பாடியிருப்பதைப் பார்ப்போம்.

 

         பழுக்காய் தூக்குப் பச்சிலைக் கமுகில்
         செடிபடு முல்லைக் கொடி படர்ந்தேறித் 
         தலைவிரித்தன்ன கிளை தொறும் பணைத்து
         மறிந்து கீழ் விழுந்து அந்நறுந்துணர்க் கொடிகள்
         நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து
        தாற்றிளங் கதலித் தண்டினில் பரவ அப்
         பைங்குலைக் கமுகில் படர்சிறை விரித்தொரு
         கண் செய் கூந்தல் களிமயில் நடிப்ப
         நெடுந்தாள் மந்திகள் குடங்கையில் தாக்கி
         முட்புறக் கனிகள் தாக்கக் கொட்டிலும்
         வானரமொன்று வருக்கைத் தீங்கனி
         தானெடுத்து ஏந்துபு தலைமேற் கொண்டு
         மந்திகள் தொடர மருண்டு மற்று அந்தப்
         பைந்துணர்க் கொடியில் படர்தரு தோற்றம்
         வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும் பெருங்கம்பத்து
         அணங்கனாள் ஒருத்தி ஆடினள் நிற்பப்
         பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக்
         குடம் தலை கொண்டு ஒரு கூன்கழைக் கூத்தன்
         வடம்தனில் நடக்கும் வண்ணமது ஏய்க்கும்.

 

மாடங்களில் திரிவேணி

     திருவாரூரிலுள்ள மாடங்களின் சிறப்பைச் சொல்ல வந்த குமரகுருபரர் அங்கே திரிவேணி சங்கமம் நிகழ்வதைக் காட்டுகிறார். அந்த நகரிலுள்ள அழ கிய பெண்கள் வாழும் மாடங்களில் வைரங்கள், நீலமணிகள், சிவந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றனவாம். அம்மணிகளிலிருந்து வெளிப்படும் ஒளி இருளை விரட்டியடிக்கின்றன. அது மட்டுமல்லாமல் அவை அங்கே பிரயாகையில் நிகழும் திரிவேணி சங்கமத்தைத் திருவாரூரிலும் நிகழ்த்துகின்றன. கங்கை, யமுனை,ஸரஸ்வதி இம் மூன்று நதிகளும் கூடுவதையே திரிவேணி சங்கமம் என்று சொல்லுகிறோம். திரிவேணி சங்கமக் காட்சி குமரகுரு பரரை மிகவும் ஈர்த்திருக்க வேண்டும். தனது பாடல்களில் இக்காட்சியை மிகவும் அழகாக வருணித்திருக்கிறார். வெண்மை நிறமுடைய வைரமணிகள் கங்கையையும். நீல நிறமுடைய மணிகள் கறுப்பு நிறமுடைய யமுனையையும் செம்மணிகள் சிவந்த நிறமுடைய ஸரஸ்வதியையும் ஒத்து ஒரு திரிவேணி சங்கமம், அம்மாடங்களில் நிகழ்வதைக் காட்டுகிறார் குமரகுருபரர்.

 

        புரிகுழல் மடந்தையர் பொன்னெடு மாடத்து
        ஒண்கதிர் வயிரமும் தண்கதிர் நீலமும்
        சேயொளி பரப்பும் செம்மணிக்குழாமும்
        மாயிருள் துரந்து மழ கதிர் எறிப்பச்
        சுரநதி முதல் வரநதி மூன்றும்
        திருவ நீண் மறுகில் செல்வது கடுப்ப

என்று திருவாரூர் தெரு வீதிகளில் திரிவேணி சங்கமத்தைக் காட்டுகிறார்.

 

சோலையில் நரசிங்கஅவதாரம்

     திருவாரூரில் பலாமரச் சோலைகள் நிறைய இருந்திருக்க வேண்டும். இந்தச் சோலைக்குள் நுழைவோம். இந்தச் சோலை சூரியன் கூட நுழைய முடியாதபடி அவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. காவலர்களுக்குப் பயந்து மரத்தில் ஒதுங்கிய பெண் குரங்கு அங்கிருந்த வருக்கைப் பலாப் பழத்தைக் கண்டதும் கூறிய பற்களால் அப்பழத்தைப் பிளந்து மடியில் வைத்துக் கொண்டு அப்பழத்தை வகிர்ந்து தன் நகங்களால் பொன்னிறச் சுளை களைச் சாப்பிடுகிறது. இதைப் பார்த குமரகுருபரருக்கு நர சிம்ம அவதாரம் நினைவுக்கு வருகிறது. 

 

     பலாப்பழம் இரணியனையும் அதன் உள்ளிருக்கும் சக்கை, இரணியனின் குடலையும், சுளைகள் அவனுடைய நிணத்தையும் குரங்கு நரசிங்க மூர்த்தியையும் நினைவூட்டுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

 

          ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்
          வெயில் கண்டறியா வீங்கிருட் பிழம்பில்
          புயல் கண் படுக்கும் பூந்தண் பொதும்பில்
          காவலர்ப் பயந்து பாதபத்து ஒதுங்கிய
          இருவேறு உருவில் கருவிரன் மந்தி
          பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
          முன்னுறக் காண்டலும் முளை எயிறு இலங்க
          மடித்தலத்து இருத்தி வகிர்ந்து வள்ளுகிரால்
          தொடுத்த பொற்சுளை பல எடுத்து வாய்மடுப்பது
          மானிட மடங்கல் தூணிடைத் தோன்றி
          ஆடகப் பெயரினன் அவுணன் மார்பிடந்து
          நீடு பைங்குடரின் நிணம் கவர்ந்து உண்டென
          இறும்பூது பயக்கும் நறும்பணை மருதத்து
          அந்தணார்  ஊர் எந்தை பெரும

என்று தியாகேசரைப் போற்றுகிறார். 

 

கொடிஞ்சித் தேர், கோயில்

     கோயிலுக்குள் நுழையு முன்பாக அந்தத் தேர் நம் கண்ணில் தென்படுகிறது. தேர் எனறாலே நம் நினைவிற்கு வருவது திருவாரூர் தான். குமரகுருபரர் காலத்திலேயே இந்தத் தேர் பிரசித்தி பெற்றிருந்தது என்று தெரிகிறது. இத்திருவாரூர் நான்மணியின் முதல் பாடலிலேயே தேரின் அழகைச் சொல்கிறார். அதை நீள் கொடிஞ்சித் தேர் என்று சிறப்பிக்கிறார். தியாகேசர் இந்தத் திருத் தேரில் எழுந்தருளும் போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்படுமாம். அதனால் அவரை ’தேரூர்ந்த செல்வத் தியாகனே’ என்கிறார்.

 

     இப்பெருமை பொருந்திய தேரில் எழுந்தருளி வரும் அழகைப் பார்த்து மயங்கிய ஒரு பெண் பேசுவதாக முதல் பாடலில் சொல்கிறார். தலைவி சொல்கிறாள்.

 

        நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்
        தேரூர்ந்த செல்வத் தியாகனே—ஆரூர
        வீதி விடங்கா அடங்கா வேலை விடம் போலும்
        மதிப்பாதி விடங்கா கடைக்கண் பார்த்து.

 

     தியாகேசனிடம் காதல் கொண்ட பெண், ”தியாகேசா! கடலிலிருந்து எழுந்த சந்திரன் எனக்கு நஞ்சாக இருக்கிறான் அவனிடமிருந்து என்னைக் காப்பாய்”
என்று கெஞ்சுவதாகக் குமரகுருபரர் அமைத்திருக்கிறார்.

 

சோமாஸ்கந்தர்

     பூங்கோயில் என்று அழைக்கப் படும் கோயிலுக்குள் செல்வோம். அங்கு சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். இறைவன், அம்பிகை யோடும் முருகனோடும் சேர்ந்திருக்கும் கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்கிறோம்.

 

     தியாகேசருக்கும் உமாதேவிக்கும் நடுவில் முருகன் காட்சியளிக்கிறான். தியாகேசரையும் அம்மையையும் பார்த்தால் பகலும் இரவும் கலந்தது போல் தோன்றுகிறது. இவர்களுக்கு நடுவில் இருக்கும் குழந்தை முருகனை இருவரும் உள்ளம் நெகிழ மாற்றி மாற்றித் தழுவிக் கொள்கிறார்கள். இறைவன் தன் மூன்று கண்களாலும் குளிர நோக்குகிறான். உச்சிமுகர்கிறான். அம்மையும் தன் குமரனைக் குளிர நோக்கி உச்சி முகர்ந்து மகிழ்கிறாள்.

 

     குழந்தை முருகன் தன் மழலை மாறாத மொழியால் ஏதேதோ பேசுகிறான். அது வேதத்தைப் போல ஏழிசை பழுத்த தீஞ்சொற்களாக அமுதம் போன்று இருவர் செவிகளுக்கும் கேட்கிறது. இவ்வளவு அழகான அமுதம் போன்ற சொற்களைக் கேட்ட திருச்செவியில் என்னுடைய அற்பமான சொற்களையும் கேட்டது மிகவும் அற்புதமானது! என்று நெகிழ்ந்து போகிறார்.

 

          சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில்
          கங்குலும் பகலும் கலந்து இனிது இருந்தாங்கு
          இடம் வலம் பொலிந்த இறைவியும் நீயும்
          நடுவண் வைகு நாகிளங் குழவியை
          ஒருவிரின் ஒருவர் உள்ள நெக்குருக
          இருவிருந் தனித்தனி ஏந்தினிர் தழீஇ
          முச்சுடர் குளிர்ப்ப முறை முறை நோக்கி
          உச்சி மோந்தும், அப்பச்சிளங் குழவி
          நாறு செங்குமுதத் தேறலோடொழுகும்
          எழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த
          இழுமென் குரல மழலைத் தீஞ்சொற்
          சுவையமுதுண்ணும் செவிகளுக்கு ஐய என்
          பொருளில் புன்மொழி போக்கி
          அருள் பெற அமைந்ததோர் அற்புதம் உடைத்தே

என்று இறைவனின் கருணையை எண்ணி வியக்கிறார்.

 

இருந்தாடழகர்

     தியாகேசருக்கு இருந்தாடழகர் என்று ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதற்குக் குமரகுருபரர் ஒரு காரணம் கற்பிக்கிறார். என்ன காரணம்?பெருமான் நின்று ஆடினால் அவருடைய பாதங்கள் வெளியே தெரியுமே. திருமால் வராக அவதாரம் எடுத்து சிவனுடைய அடியைத் தேடிச் சென்று காண முடியாமல் திகைத்துத் திரும்பினார் அல்லவா? இப் பொழுது தியாகேசர் நின்று ஆடினால் அவர் திருவடியைக் கண்டு விட்டேன் என்று சொல்வார் அல்லவா? அதற்காகத்தான் திருவடியை மறைத்துக் கொண்டு இருந்த படியே ஆடுகிறார் என்று ஒரு காரணம் கற்பிக்கிறார்.

 

     இன்னொரு காரணமும் இருக்க லாமோ என்றும் தோன்றுகிறது. முன்பு மார்க்கண்டேயனுக்கு அருள் செய்வதற்காகப் பெருமான் யமனைத் திருவடியால் உதைத்தாரல்லவா? இப்போது திருவடியைத் தூக்கி ஆடி னால் மறுபடியும் பெருமான் உதைத்து விடுவாரோ என்று யமன் அஞ்சுவானே என்று எண்ணியே இருந்தாடுகிறார் என்று ஒரு காரணமும் தோன்றுகிறது குமரகுருபரருக்கு.
             
        கண்ணனார் பொய்சூள் கடைப் பிடித்தோ?
                                   தென்புலத்தார்
         அண்ணலார் அஞ்சுவார் என்றஞ்சியோ? 
                                      விண்ணோர்
         விருந்தாடும் ஆரூரா மென்மலர்த்தாள் 
         தூக்காது இருந்தாடுகின்றவா என்?

என்று கேட்கிறார்.

 

அர்த்தநாரீச்வரர்

     இறைவன் அர்த்தநாரீச்வரராக விளங்குவதை பார்க்கிறார். அவருக்கு ஒரு ஆச்சர்யம் ஏற்படுகிறது. ஒரு பாகம் அம்மையும் ஒரு பாகம் அப்பராகவும் திருக்கோலத்தில் தெரியும் முரண்பாட்டைக் கண்டு வியக்கிறார். அம்மைக்கு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தனி) என்று ஒரு திரு நாமம் உண்டு. இரு நாழி நெல் கொண்டு அவள் 32 அறங்களையும் செய்கிறாள் ஈசன் கையில் கபால மேந்தி பிக்ஷை எடுக்கிறார். அவருக்கு பிக்ஷாடனர் என்று பெயர்.


     அந்நாளில் புரவலர்கள், மன்னர் கள் புலவர்களுக்கு யானை, குதிரை. தனம், பொன் முதலிய வற்றை பரிசுகளாக்க் கொடுப்பார்கள் வறுமையில் வாடிய புலவர்கள் இவர்களை நாடிச் சென்று பாடல்கள் புனைந்து பாடிப் பரிசில் பெறுவது வழக்கம்.

 

     ஆனால் இங்கு ஒரே உருவம் (இடப்பக்கம்) தான தருமங்கள் செய்கிறது அதேசமயம் ஒரு பக்கம் வலப்பக்கம் பிக்ஷையும் எடுக்கிறதே என்று வியக்கிறார். இந்த அதிசயத்தைப் பார்ப்போம்.

 

          தானமால் களிறு மாநிதிக் குவையும்
          ஏனைய பிறவும் ஈகுநர் ஈக
          நலம் பாடின்றி நாண் துறந்து ஒரீஇ
          இலம்பாடலைப்ப ஏற்குநர் ஏற்க
          புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்
          இருவேறு இயற்கையும் இவ்வுலகுடைத்தே அதாஅன்று
          ஒரு காலத்தில் உருவம் மற்றொன்றே
          இடப்பால் முப்பதிரண்டு அறம் வளர்ப்ப
          வலப்பால் இரத்தல் மாநிலத்தில் இன்றே
என்று அதிசயத்தைக் காட்டுகிறார்.

 

ஆரூர்வந்த தியாகேசர்

     திருமால் அன்பாகிய மந்தரமலையில் ஆசையாகிய கயிற்றைக் கட்டி அருளாகிய பெருங்கடலைக் கடைந்தார். அதிலிருந்து அமுதம் போலத் தோன்றினார் தியாகேசர். இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கி தெய்வலோகம் சென்றார். அங்கு இந்திரனுக்கு செல்வமும் அரசும் அளித்தார். ஏக சக்ராதிபதியாக விளங்கிய முசுகுந்த சக்ரவர்த்திக்கு இந்திரன் இந்தத் தியாகேசரை அளிக்க முசுகுந்தனுக்கு அருள் செய்வதற்காக தேவேந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு எழுந்தருளுகிறார். இதை

 

          அன்பெனும் மந்தரத்தாசை நாண் பிணித்து 
          வண்துழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த
          அருள் பெருங்கடலில் தோன்றி விருப்பொடும்
          இந்திரன் வேண்ட உம்பர் நாட்டெய்தி
          அந்தமில் திருவொடும் அரசு அவற்குதவி
          ஒரு கோலோச்சியிரு நிலம் புரப்பான்
          திசை திசை உருட்டும் திகிரியன் சென்ற
          முசுகுந்தனுக்கு முன் நின்றாங்குப்
          பொன்னுலகிழிந்து புடவியில் தோன்றி
          மன்னுயிர்க்கு இன்னருள் வழங்குதும் யாமென

ஈசன் அருள் புரிந்ததை அறிவிக்கிறார்.

 

ஈசன் திருவிளையாடல்கள்

     ஈசனின் திருவிளையாடல்களைச் சொல்லித் துதிக்கிறார் குமரகுருபரர். ஈசனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் சொன்னபடி மன்மதன் பாணங்களை ஏவுகிறான். அதனால் அவர் தவம் கலைகிறது. இதனால் கோபமடைந்த ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து சாம்பலாகிறான்.

 

     அடுத்தபடி யமனைக் காலால் உதைத்ததைச் சொல்கிறார். மிருகண்டு முனிவரின் புதல்வனான மார்க்கண்டேயனைப் பாசக்கயிற்றால் கட்டி உயிரைப் பறிக்க யமன் வருகிறான். மார்க்கண்டேயன் சிவனைச் சரணமடைய அவரையும் சேர்த்து பாசக் கயிற்றால் இழுக்கிறான் யமன். அந்தக் காலனை காலால் உதைத்துத் தன் பக்தனைக் காப்பாற்றியதைப் போற்றுகிறார்.

 

     கருங்கடல் வண்ணனான திருமால் வெள்ளை ரிஷபமாக வாகனமாகி ஈசனைத் தாங்கினான். அதற்காகப் பெருமான் பிரளய காலத்தில் திருமாலின் எலும்புக்கூடாகிய கங்காளத்தைச் சுமந்தான். இதை

 

          கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடி

என்று மணிவாசகர் போற்றுகிறார்.

 

     திருவாரூரிலுள்ள தேவாசிரயன் என்ற ஆயிரங்கால் மண்டபத்தில் தேவர் குழாங்கள், உருத்திர கணங்கள் எல்லோரும் வணங்கி அர்க்கியம் முதலான உபசாரங்கள் செய்கிறார்களாம். கமலை என்றழைக்கப்படும் திருவாரூரில் பிறந்தவர்கள் இனிப் பிறவியடையமாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் குமரகுருபரர். அவர்கள் சிவகணங்களாகவே ஆகிவிடுவார்களாம்.

 

          இத்தலத்து உற்றவர் இனித்தலத்து உறார் எனக்
          கைத்தலத்தேந்திய கனல் மழு உறழும்
          மழுவுடைக் கையராகி விழுமிதின்
          மாந்தர் யாவரும் காந்தியிற் பொலியும் 
          வரமிகு கமலைத் திரு நகர்ப் பொலிந்தோய்!

என்று இறைவனைப் போற்றுகிறார். கமலையின் பெருமையையும் பேசுகிறார்.
 

மயில் துணை

     பொதுவாக முருகனடியார்கள் வேலும் மயிலும் துணை என்று சொல்வார்கள். குமரகுருபரர் புற்றிடங்கொண்ட இறைவனுக்கு மயில் துணை என்கிறார். எப்படி? தியாகேசருக்குப் புற்றிடங்கொண்டார் வன்மீகநாதர் என்றும் நாமங்கள் உண்டு. இவர் பாம்புப் புற்றில் போய் குடியிருக்கிறார். போதாக்குறைக்கு பாம்புகளை விரும்பி ஆபரணமாக வேறு அணிந்திருக்கிறார். அது மட்டுமா கொடிய ஆலகால விஷத்தையும் உண்டாரே! இவருக்குப் பயமே இல்லையா? அவருக்கு ஏன் பயமில்லை? என்று ஆச்சரியப்பட்டவர் அதன் காரணத்தையும் கண்டு பிடித்துவிடுகிறார். அவருக்குப் பக்கத்திலேயே பாம்புக்குப் பகையான மயில் இருப்பதால தான் என்று தீர்மானம் செய்கிறார் இடப் பக்கத்திலேயே உமாதேவியாகிய மயில் இருப்பதால் தான் ஈசன் பாம்புகளைப் பற்றிய அச்சமே இல்லாமல் இருக்கிறாராம்.

 

          கரும்புற்ற செந்நெல் வயற் கமலேசர் கண்டார்க்கும் அச்சம் 
          தரும் புற்றினில் குடிகொண்டிருந்தார் அதுதானுமன்றி
          விரும்புற்று மாசுணப் பூணணிந்தார் வெவ்விடமுண்டார்
          சுரும்புற்ற கார்வரைத் தோகை பங்கான துணிவு கொண்டே!

 

எளிவந்த தன்மை

     இவ்வளவு பெருமைகள் உடையவரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர் என்று நமக்குக் காட்டுகிறார். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசி பார்த்துக் கொடுத்த ஊனை மிகச் சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக் காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார். இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக் கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படிபட்டபோது அதையும் உவந்து ஏற்றுக் கொண்டார். தனது அன்பரான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்காக பரவைநாச்சியாரிடம் கால் நோவ தூது போனார். இப்படியெல்லாம் தன் அடியார்களுக்காகப் பல இன்னல்களையும் தாங்கிக் கொண்ட அன்பருக்கு எளியன் இப்பெருமான்!

 

          எளியரின் எளியராயினர் அளியர் போலும் அன்பர்கள் தமக்கு

என்கிறார்; அப்பெருமானை நாமும் வழிபடுவோம்.
 

Related Articles