logo

|

Home >

articles >

thelivukkaak

தெளிவுக்காக

திருச்சிற்றம்பலம்

முன்னுரை :

தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி. ஏத்தல் - துதித்தல், வணங்குதல். ஏத்துதல் - துதித்தல், வணங்குதல். (வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)

இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.

கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.

சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" - (திருவா. போற்றி.164, 165)

என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.

தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?

காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.

'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.

"........................ - வீழ்த்த புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி நெறிநின்று ஒழுகுதிர் மன்ற துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே" என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றேறும்.

வேதம் என்றால் வடமொழி வேதத்தையே குறிக்கும் என்பது ஏன்?

இனச்சுட்டு - இனம் காட்டும் சுட்டு; இரண்டும் பலவும் இருந்தால் ஒன்றை அடையாளப்படுத்தும் சுட்டு.

ஞாயிறு என உதிப்பது ஒன்றுதான். அது தரும் வெயிலை, ஞாயிற்று வெயில் என்றாலே போதும். திங்கள் என உதிப்பது ஒன்றுதான். அது தரும் நிலவை, திங்கள் நிலவு என்றாலே போதும். ஒன்றே ஒன்றாக இருப்பவற்றிற்கு இனம் காட்டும் சுட்டு, பேச்சு வழக்கில் தேவையில்லை. செய்யுள் வழக்கில் ஒன்றே ஒன்றானவற்றிற்கும் பண்புச் சொல்லை இனம் சுட்டும் வகையில் சொல்லலாம் என்று,

'இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே'

என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணம் 'செஞ்ஞாயிற்று வெயில் வேண்டினும், வெண் திங்களின் நிலவு வேண்டினும்' என்ற செய்யுள் தொடர். இதில், கரு ஞாயிறு என வேறொரு ஞாயிறோ, கருந்திங்கள் என வேறொரு திங்களோ இல்லையென்றாலும், 'செஞ்ஞாயிறு' என்றும், 'வெண்திங்கள்' என்றும் இனங்காட்டும் பண்படை வருகிறது.

மொழியால் இனஞ்சுட்டுதலும் உண்டு, மொழி, பண்பன்றெனினும் இனம் சுட்டத் தேவைப்படும். தண்டியார் என வடமொழிப் புலவர் ஒருவர்; தண்டியார் எனத் தமிழ்ப் புலவர் ஒருவர். இருவரும் ஒருவரே என்ற ஆய்வும் உண்டு. வடமொழியில் தண்டியார் செய்த நூல் 'காவ்யாதர்கம்' தமிழில் தண்டியார் செய்த நூல், ஆக்கியோன் பெயரால் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டும் அணி இலக்கண நூல்கள். தமிழில் உள்ள தண்டியலங்காரப் பாடலை, மேற்கோள் சொல்லும்போது, 'என்றார் தமிழ்த் தண்டியார்' என மொழிப் பெயரை இனம் சுட்டும் சொல்லாகச் சேர்த்துச் சொல்கிறோம்.

தமிழில் நான்மறை, வடமொழியில் நான்மறை என இரண்டு இருக்குமானால், மொழிப் பெயரைச் சேர்த்து இனம் சுட்டாவிட்டால், எந்த மொழியின் நான்மறை எனக் குழப்பம் ஏற்படும். தமிழில் எக்காலத்தும் நான்மறை - வேதம் இன்மையால், வடமொழியில் மட்டுமே நான்மறை - வேதம் உள்ளமையால் நம் முன்னோர் நான்மறை - வேதம் எனப் பொதுவாகவே குறிப்பிட்டனர்.

'அந்தணர் மறை' என்பதில் உள்ள அந்தணர் என்பது அடையாளப்படுத்துகின்ற இனச்சுட்டு ஆகாதா? என ஒரு வினா வரலாம். 'இந்தப் பெரியபுராணம் என்னுடையது' என்று ஒரு நூல் பிரதியைச் சுட்டிக்காட்டும்போது, பயன்பாட்டினால் உள்ள உரிமையை அடையாளப்படுத்துகிறோம். பயணங்களின்போது முன் பதிவு செய்த இடத்தை 'இது என் இடம்' என்கிறோமே அதைப்போல, குலத் தொழில்கள் ஆறனுள் ஒன்றாக வேதம் ஓதுதல், அத்யயனம் செய்தல் உரிமை பற்றிய சிறப்பு அடையே 'அந்தணர் மறை' என்பது. அந்த அடையில் அந்தணர்க்கு மட்டுமே உரிமையுடையது என்ற குறிப்பும் இல்லை. எனவே இது பயன்பாடு தொடர்பான அடைவே அன்றி இனச்சுட்டு ஆகாது.

எனவே, நான்மறை என்பதற்கும் வேதம் என்பதற்கும் மொழி குறித்த இனச்சுட்டு யாண்டும் இன்மையால் தமிழில் நான்மறை இருந்ததில்லை என உணர்க.

வேத காலம் - சைவத்தின் கொள்கை என்ன?

வேத காலம், தொல்காப்பியர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லுவதுகூட, நம் சமய மரபுக்குப் புறகாகும். அநாதி காலத்தில் பெருமான் வேதம் அருளினார். ஒவ்வொரு யுகத் தொடக்கத்திலும் மீண்டும் மீண்டும் அவ்வவ்யுகங்களுக்கும் தருகிறார் என்பதே அனைத்துப் புராணங்களிலும் சூதர் அருளிய செய்தியாகும். திருவிளையாடற் புராணத்தில், வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலத்தில், பெருமான், ஓரூழியை ஒடுக்கிப் பிறிதோரூழியை மலர்த்திய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. புது ஊழியில் மீண்டும் பெருமான் திருவாக்கிலிருந்து ‘பிரணவம் உதித்து, அதனிடை வேதம் பிறந்தன’ (செ.4) என வருகிறது. இதுவே நம் சமயம் சொல்லும் வேதகாலமாகும். வேதாகமங்கள் என்றும் உள்ளவை. அவற்றின் பூசனைகள், சடங்குகள், கிரியைகள் மூலமான மையக் கோட்பாட்டினின்றும் பிறழ்வதில்லை.

இறைவன் வேதத்திற்குத் துணையாக ஆறு அங்கங்களையும் தோற்றுவித்தார். அனைத்தின் மூலங்களும் பெருமானின் அருளிப்பாடுகளே. வியாசர் நெறிப்படுத்துதலாகிய தொகுப்பு முறை செய்தார். வியாசரைப் பெருமைப்படுத்த - அப்பணி செய்ய - பெருமான் அவருக்கு அருள்பாலித்தார். பெருமான் அருளிய அதி நுட்ப மந்திரங்கள் முதலியவற்றுடன், அவர்தம் அருளாரமுதத்தில் ஊறித் திளைத்த இருடிகள் முதலாயினோரின் படையல்களையும் இணைத்து வகுத்ததில் வேத நுட்பங்கள் சற்றே இளகின. வேதங்களின் உண்மைப் பொருள் இறைவனால் மட்டுமே தரக்கூடியவை என்பதற்கான சான்றுகளை காசிமட நூல்களில் தந்துள்ளார்கள்.

நமக்குக் கற்பிக்கப்பெற்றவை

சைவத்தின் தலைமைச் சான்றுகள் இவையிவை என காசிமடம் ‘மெய்யும் பொய்யும்’ நூலுள் அறிவித்துள்ளது. சமய ஊற்றத்துடன் வேதம், திருமுறைகள் படித்தவர்கள் சொல்வதைத்தான் நாம் பரிசீலிக்க முடியும். பரம நாத்திகர்களுள் சிலர், வேதம் படித்தவர்கள். ‘முல்லர், வேதம் படித்தார். வேதம் அவரைப் பிழை செய்ய விடாது’ என்பது வேத சக்தியின்மேல் உள்ள நம்பிக்கையைக் காட்ட உதவுமே தவிர, பக்தியும், சமய ஊற்றமும், நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு வேதசக்தி நலம் செய்யாது. அந்தத் துரைமார்கள் அதையும் இதையும் சொல்லி, சாதிகளால், மொழியால் இவையொத்த உணர்ச்சி வசப்பட வைக்கும் பொருண்மைகளால் பிரித்த பிரிப்புகள் மாபெரும் வெற்றியடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளன. சமயம் என்று வரும்போது கடைசிவரை அவர்கள், அவர்களாகத்தான் இருந்தார்கள். அது ஏன் என்று நாம் சிந்திப்பதே இல்லை. விவிலியத்தின் பழையஏற்பாட்டை, நம்பிக்கையின்றிப் பக்தியின்றிச் சீண்டினால் விளைவு என்னவாகும்? பிரிவுகளுக்காகவும் பிணக்குகளுக்காகவும் மேற்கொள்ளப்படுவன நம்பிக்கைகளிலிருந்து நம்மை நகர்த்திவிடும்.

மொழி பற்றித் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்; சமயம் பற்றி, வழிபாடுகள் பற்றி, சடங்குகள் பற்றி, நெறிமுறைகள் பற்றித் திருமுறைகள், சாத்திரங்கள் - அருளாளர்களின் இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு மேலாக நமக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

எங்களுக்கு எந்த மொழியின் பேரிலும் என்றைக்கும் வெறுப்பில்லை. வடமொழி இனிப்பா? தமிழ்மொழி இனிப்பா? திருமுறை இனிப்பா? வேதம் இனிப்பா? என்ற ஆராய்ச்சிகளும் எங்களுக்கு இல்லை. எதுவொன்றையும் கசப்பு என்று சொல்வது மில்லை. இறைவன் அருளிய மொழிகள், இறைவன் அருளிய வேதாகமங்கள், இறைவன் உள்நின்று உணர்த்த வெளிப்பட்ட தேவார - திருமுறைகள், திருவருட் சம்மதத்துடன் அமைந்த, சாத்திரங்கள், சமய இலக்கியங்கள் இவற்றில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

தேவகாரியங்களுக்காக வகுக்கப்பட்டதால் வடமொழி தேவபாஷை - என்றால் அதனால் தமிழின் சமத்துவ ஏற்றம் குறைவுபடாது. தெய்வபாஷை - தெய்வத்தினால் அருளப்பட்டது எனக் கொண்டால் தமிழும் தெய்வபாஷையே ஆகும்.

“ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகை யார்க்கும் கருணை செய்தானே” - திருமந்திரம் - 65.

ஆசாரியன் யார்?

நம் தமிழ் நூல்களில் தற்போது கிடைக்கும் முதன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். அதன் பாயிரம், அதங்கோட்டாசான் என்ற தமிழறிஞரை, ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் திருக்குறள், வேதங்களை, ‘அந்தணர் நூல்’ என்றும், ‘ஓத்து’ என்றும், ‘அறு தொழிலோர் நூல்’ என்றும் சுட்டுகிறது. நம் பன்னிரு திருமுறைகள் சற்றொப்ப 1600 இடங்களில் வேதங்களை, ஆகமங்களைச் சிறப்பித்து உரைத்து, வேதங்களை அருளியவர் நம்பெருமான் என்றும், அவர் வேதம் பாடுபவர் என்றும், வேத வடிவினர் என்றும் பலவாறாக விதப்பித்துப் புகழ்கின்றன. அவற்றுள் ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்றும், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றும் திருமந்திரம் முத்தாய்ப்பாக அறிவிக்கும் செய்திகள் பெரிதும் உளங்கொள்ளத் தக்கனவாகும். நால்வர் நெறியும், நால்வர் நெறியை உள்ளிட்ட திருமுறைகளின் நெறியும், சந்தானாசாரியர் நெறியும், தொகுமொத்தச் சைவத் தமிழ் நூல்கள் அனைத்தின் நெறியும் வேத நெறியே ஆகும். இவ்வனைத்திற்கும் முரண்பட்டு, முரண்டு பிடித்து, நாம் பின்பற்றுவதற்காகத் திருமுறைகள் சுட்டிக்காட்டும் வேதாகம நெறிக்கு விரோதமாக, அத்திருமுறைகளையே வைத்துப் புதுநெறி என்பதாகப் புறநெறி செய்கிறார்களே, அது நிச்சயமாக வேறொரு சமயமே ஆகும். அது சிவநெறிக்கு விரோதச் சமயமே ஆகும்.

நால்வர் காட்டிய வேதாகம நெறிக்கு நால்வர் பெருமக்களே ஆசாரியர்கள். அதற்கு முரணான நெறிக்கு நால்வர் பெருமக்கள் ஆசாரியர் ஆகார்.

ஆசாரியன் இல்லாமல் ஒரு நெறி உருவாக முடியாது; கூடாது. வேதாகம நெறிக்குப் புறம்பான இந்த முரண் சமயத்திற்கு ஆசாரியன் யார்? ஆசாரியன் இல்லையென்றால் அது தான்தோன்றியா? ஆசாரியன் இல்லாத அநாதையா?

வேதம் கற்க வேண்டுமா?

வேதம் கற்க வேண்டுமென்று நாம் சைவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. வேதநிந்தனை கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவித்ததையும், வேத நிந்தனையே சைவ நிந்தனை, சிவ நிந்தனை என்ற சைவக் கோட்பாட்டையுமே தெரிவிக்கிறோம். வேத பாராயணத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

சதுர்வேதமும் கனாந்தரம் அத்யயனம் செய்தவர்களே தமக்கு வேதம் தெரியும் என்பதைக் கூசித்தான் பேசுவர். வேதம் என்ற சொல் சதுர்வேதத்தையும் உள்ளடக்கியது. வேதம் தெரியும் என்றால் சதுர்வேதமும் அத்யயனம் செய்வதாக அர்த்தப்படும். இந்தியத்தில் நூற்றுக்கும் குறைவானவர்களே சதுர்வேத பண்டிதர்களாக உள்ளனர்.

நாம் வற்புறுத்துவதெல்லாம் நமது சமயாசாரியர்கள் அருளியுள்ளபடி, திருமுறைகளை ஓதுங்கள், படியுங்கள் என்பதையே ஆகும். கோயிலில் வழிபாடுகள், இல்லச் சடங்குகள் வேதாகம முறைப்படியே நடைபெற வேண்டும் என்பதே ஆசாரியப் பெருமக்களின் அருளிப்பாடு. அதுவே சைவத்தின் தொன்றுதொட்ட மரபு. திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு பெருமளவுக்குத் திருமுறைகளைப் பண்ணொன்ற ஓதுவித்தும் கேட்டும் பயன்பெறுக! பிழையின்றிப் படிக்கத் தெரிந்தவர்கள் நாளும் திருமுறைப் பாராயணம் செய்து இகபர சௌபாக்யம் அடைவிராகுக!

 

- திருச்சிற்றம்பலம் -


 

  • தொகுக்கப்பட்டது (Edited version); 
    நன்றி - ஸ்ரீ குமரகுருபரர் (18-10-2011 இதழ்), காசிமடம், திருப்பனந்தாள்.

Related Articles