logo

|

Home >

articles >

siva-poojanam

சிவ பூஜனம்

சது: சாஸ்த்ர சிரோமணி, பண்டிதராஜ,
ஸோம. ஸேது தீக்ஷிதர்; சிதம்பரம்

[சிவஞான பூஜா மலர் - குரோதன ஆண்டு - (1985)]
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை - 600 033


சிவபிரானுடைய உயர்வைத் தெளிவுற உலகமக்களுக்கு வெளியிட அமைந்துள்ள ஹிந்து மத சங்கர மடங்களும் தமது ஶ்ரீமுகத்தில் ஶ்ரீ நாராயண ஸ்ம்ருதி என்றே குறிப்பிடுகின்றன. இதைக் கருதி 1881-ல் திருநெல்வேலி அக்ரஹாரத்தில் ஶ்ரீ முத்தய்யரால் க்ரந்தலிபியில் “யதி தர்ம ப்ரபோதம்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. அதில் “சிவஸ்ம்ருதி” என்றும், சந்நியாசிகளின் தர்மங்களை எடுத்துக் கூறும் இடங்கள் யாவற்றிலும் சிவ நாமாக்களையே பயன்படுத்தியுமுள்ளது போற்றத் தக்கதாகும். அப்புத்தகம் கிடைப்பது அரிதாக விட்டதைக் கருதி 30-6-71-ல் சந்நியாச ஆச்ரமம் ஏற்கும் சீரீய நோக்குடன் எமது பூர்வாச்ரம் பிதாவும், ஆசாரியர்களுமான சாஸ்த்ராசாரிய பண்டிதராஜ, ராஜா ஸோமசேகர தீக்ஷிதர் அவர்கள் தன் சுய செலவிலேயே மீண்டும் இப்புத்தகத்தை தேவநாகரி லிபியில் வெளியிட்டார்கள். 1974-ல் சந்நியாச ஆச்ரமம் ஏற்று ஸோமசேகரேந்த்ர ஸரஸவதி சுவாமிகள் என்னும் பெயருடன் விளங்கினார்கள். அவ்வாண்டு ஆவணி மாதம் சுக்ல திருதியையில் சித்தி அடைந்தார்கள். அதற்கு எங்கள் தீக்ஷித குலத்திலேயே இந்தத் தலைமுறையில் சந்நியாசம் ஏற்றவர்கள் இவர்கள் தான் என்று கருதி ஶ்ரீ நடராஜர் கோயில் நிர்வாகிகளால் கோயில் செலவிலேயே மிகச் சிறந்த முறையில் ஊர்வலத்துடன் மேள தாளத்துடன் ஶ்ரீ நடராஜர் கோயில் இடமான பொதுவார் தோட்டத்தில் யதி சம்ஸ்காரம் மைந்தர்களான எங்களால் இந்தப் புத்தகத்தைக் கொண்டே எல்லாம் சிவபரமாகவே கர்மாக்கள் செய்து முடிக்கப்பட்டன. பிரதி வருஷ ஆராதனமும் இம்முறைப்படியே செய்யப்பட்டு வருகிறது. இது போல் நமது ஶ்ரீமான் சிவபக்த துரந்தர ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா “சிவஞான பூஜா மலர்” என்று 1981 முதல் சிவபக்தி விசேஷத்தை ஸ்மார்த்தர்களும் சைவர்களும் அறிந்துகொள்ள ஆண்டுதோறும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரிய விஷயமாகும். அம்மலரின் பெயரை ஆராய்வதே இக்கட்டுரையின் கருத்தாக அமையும். முதலில் “சிவபூஜனம்” என்னும் சொல்லை ஆராய்வோம். வடமொழியில் விளிவேற்றுமையைச் சேர்த்து எட்டு உள. எட்டு வேற்றுமைகளையும் இந்தச் சொல்லில் பொருள் கூறலாம்.

1. மங்களகரமான வழிபாடு.

2. ஏ சிவனே! உனக்கு வழிபாடு செய்ய அருள்புரிய வேண்டும். “அவன்தாள் வழிபட அவன் அருள் வேண்டும்” என்னும் மூதுரையின்படி அவனருள் மிகத் தேவை.

3. சிவனை மனதில் எண்ணி வழிபாடு செய்தல்.

4. மங்களகரமான மலர்களாலும், பத்திரங்களாலும், பொருள்களாலும், துதிகளாலும் பூஜனை செய்வது.

5. சிவன் பார்வதி இருவர்களையும் சேர்ந்திருப்பதாகக் கருதி பூஜை செய்வது.

6. சிவ-பார்வதிகளிடமிருந்து வரம் பெற பூஜை செய்வது.

7. மங்களகரமான சிவனுடைய பதத்தை அடைய பூஜை செய்வது.

8. சிவனுடைய திருவடிகளில் பூஜை செய்வது.

சிதம்பர மாகாத்மியத்தில் 24-44-ல் சிவமந்திரத்தைவிட நடராஜர் உயர்வு. அவரைவிட அவருடைய திருவடி மிக மிகச்சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் 108 க்ரந்தங்களுக்கு கர்த்தாவான ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் அவர்கள் சிதம்பர நடராஜராஜரிடம் “77 வயதுக்கு மேல் வேறொன்றும் எனக்குத் தேவையில்லை. உனது திருவடியையே அடைய விரும்புகிறேன்” என்று கூறிய அடுத்த க்ஷணத்திலேயே மறைந்துவிட்டார். சிவபத ஸாயுஜ்யம் கிடைத்துவிட்டது என்பது வரலாறு என்பதை ஈண்டு ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இச்சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். அக்னிஹோத்ராதி கர்மாக்களை செய்வது சிரம சாத்தியம். அர்ச்சனை என்பது மிகச்சுலபம். அந்த அர்ச்சனம் சிவனுக்கே செய்ய வேண்டும். வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சிவனே உயர்ந்தவர் என்று பாராட்டுகின்றன. இதனுடைய விரிவை “சிவதத்துவ விவேகம்” என்னும் ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூலிலும் “சிவோத்கர்ஷமஞ்சரி” என்னும் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதரின் நூலிலும் பாக்கக் காணலாம். வைஷ்ணவ மரபிலேயே தோன்றி, சிவனையே வழிபடு தெய்வமாகக் கொண்டு வைஷ்ணவர்களோடு போராரி நெருப்புப் பாய்ச்சிய முக்காலியில் வைஷ்ணவர்கள் கோரியபடி பெருமாள் சந்நிதியிலேயே அமர்ந்து ஹரதத்தாசாரியார் அவர்கள், சிவனுடைய உயர்வைக்கொண்ட “ச்ருதி ஸூக்தி மாலா” என்னும் நூலைப் பிரகாசப்படுத்தினார்கள். சிவனருளால் தீயும் மலராக ஆகிவிட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நூலிலும் தெள்ளெனக் காணலாம். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றது. மற்றும் ஏனைய பர்த்ருஹரி, புஷ்பதந்தன், மகாகவி காளிதாஸன் முதலியவர்களும் சிவனுடைய பூஜையையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றனர். ஆதிசங்கராச்சாரியார் அவர்களும் சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல. அவரவருடைய இயல்புக்குத் தக்கவாறு பூஜா சாமன்களை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அதில் பஞ்சாயதன பூஜை என்பது மிகச்சிறந்தது.

1. சூரியன், விநாயகர், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்பது. அதில் நடுவில் சிவனையும் [வெள்ளை பாணலிங்கம் அல்லது சாதா பாணலிங்கம்]

2. அக்னி மூலையில் ஸ்படிகக் கல்லான உருவமற்ற சூரியன்.

3. நிருருதி மூலையில் சோணபத்ரம் என்னும் சிவப்புக் கல்லால் ஆன உருவமற்ற பொருளில் விநாயகர்.

4. வாயு மூலையில் சுவர்ணமுகரி என்னும் உலோகத்தினாலான உருவமற்ற ஒரு பொருள் அதில் அம்பிகை.

5. துவார்த்தோடு கூடிய சாளக்கிராமம் என்னும் கருப்புக்கல்லில் ஈசான மூலையில் விஷ்ணு என்பது அமைப்பு. பூஜை செய்யுங்கால் இதர எண்ணங்களைவிட்டு சிவனிடத்திலேயே மனதைச் செலுத்தி இருப்பது தான் முக்கியம். சிந்தை வேறிடத்தில் வைத்து பூஜை செய்வது பயனற்றது.

இத்தகைய சிவபூஜையிலும் ஶ்ரீ நடராஜர் வழிபாடே மிகச்சிறந்தது. அதை இங்கு சிறிது காண்போம். இவ்வுலகையே தெய்வ புருஷனாக உள்ளத்தில் எண்ணி அப்புருஷனுடைய தலையாக ஶ்ரீபர்வதத்தையும், நெற்றியாக கேதாரத்தையும், இரு புருவங்களின் நடுபாகமாக வாராணசி (காசி)யையும், குருக்ஷேத்திரத்தை குசஸ்தானமாகவும் [ஸ்தன ப்ரதேசம்], பிரயாகையை இருதயமாகவும், சிதம்பரத்தை உயிர் ஸ்தானமான ஹிருதய மத்யமாகவும் கருதி வழிபட வேண்டும் என்று ஜாபாலதரிசனோபனிஷத்தில் (4.47) கூறப்பட்டுள்ளது. மனிதன் கை, கால், கண், மூக்கு, செவி இல்லாமல் வாழ முடியும். ஆனால் உயிர் பிரிந்து விட்டால் சடலமாகி விடுகிறது. செயலற்று விடுகிறது என்பது உலகப் பிரசித்தம். தூங்குங்கால் மனிதனுடைய உள்ளத்தில் எல்லா புலன்களும் ஒடுங்குகின்றன. அதுபோல் ஶ்ரீ நடராஜருடைய அர்த்தஜாம காலத்தில் எல்லா க்ஷேத்ரங்களிலுமுள்ள தேவதைகளும் ஒடுங்குகின்றன. விழிக்குங்கால் எவ்வாறு அந்தப் புலன்களும் ஆங்காங்கு சென்று செயல்படுகின்றனவோ அவ்வாறே காலை விச்வரூப தரிசன பூஜையில் அந்தந்த தேவதைகள் தத்தமது இருப்பிடம் சென்று செயல்படுகின்றன. எனவே, சிதம்பரம் ஶ்ரீ நடராஜராஜ தரிசனம் ஒன்றே எல்லா ஸ்தலங்களில் உள்ள தேவதைகளின் தரிசனத்தால் ஏற்படும் பயன்கள் யாவற்றையும் அளிக்கவல்லது. இதைக் கருதியே “தஹரஸ்த்த:” என்னும் நடராஜ ஸகஸ்ரநாம நாமம் தெளிவுபடுத்துகிறது. அதன் சுருக்கத்தையும் சிறிது காண்போம். தஹரோபாஸனம் என்பது மூவகையானது. ஆதி பெளதிகம், ஆத்யாத்மகம், ஆதிதைவிகம் என்று. விராட்புருஷனுடைய ஹ்ருதய மத்ய வர்த்தியாக த்யானம் செய்வது ஆதி பெளதிகமாகும். நமது உள்ளத்தில் நடராஜரை இருத்தி வேறு கவனம் இன்றி தியானம் செய்வது ஆத்யாத்மிகமாகும். ஶ்ரீ நடராஜர் ஸந்நிதியில் எதிரில் உள்ள கமலத்தில் நடுவில் வடக்கு நோக்கி அமர்ந்து உள்ளத்தில் திருமாலை இருத்தி அவர் உள்ளத்தில் ஶ்ரீ பகவான் நடராஜர் வீற்றிருப்பதாக த்யானம் செய்வது ஆதிதைவிக தஹரோபாஸனம் ஆகும். த்யான நிலை கலைந்து நடராஜரை வலது கண்ணாலும், கோவிந்தராஜரை இடது கண்ணாலும் கண்டு களிப்பதே சிவசக்தி தரிசனமாகும். இவ்வாறே ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் அவர்கள் 10 ச்லோகங்களால் மிக அழகாகத் துதித்துள்ளார். மற்றொரு ச்லோகத்தாலும் மிக அழகாக வருணித்துள்ளார். எந்தப் பரமசிவனுடைய இடது பாகம் விஷ்ணுவோ அவரே பார்வதி. அந்தப் பரமசிவனே பரமவித்யை. சிரஸில் ஞான வடிவமான சந்திரனைச் சூடி, உலக மக்களின் தாபத்தைப் போக்கிய இன்பமாக வாழும்படி செய்து கொண்டு விளங்குகின்றார். எல்லா வேதங்களாலும் எல்லா கலைகளுக்கும் நாயகர் ஶ்ரீ நடராஜரே! எல்லா உலகிற்கும் இவரே நாயகர் என்றும் புகழ்ந்துள்ளார். இது முற்றிலும் உண்மையே, சங்கரநாராயணராக சங்கரன்கோவிலில் விளங்குவது பிரசித்தம். நாராயணர் அம்பிகையாக இல்லாதிருப்பின் எவ்வாறு மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் ஐயப்பன் பிறந்திருக்கக்கூடும் எனவேதான் நடராஜரை ஆண் விகுதியுடன் பெருமான் என்றும், விஷ்ணுவைப் பெண் விகுதியுடன் பெருமாள் என்றும் வழங்குகின்றோம். எனவே, எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவர் ஶ்ரீ நடராஜர் மூர்த்தியே. ஆனது பற்றியே கைலாசத்தில் பார்வதிதேவி வினவச் சிவன். “பாற்கடலில் லக்ஷமியுடன் நீண்ட நாளாக என்னையே உள்ளத்தில் இருத்தி அம்பிகையுடன் கூட விஷ்ணு வழிபாடு செய்ததின் பேரில் மகிழ்ச்சி அடைந்த நாள் யாது வேண்டும் என்று வினவ, மந்த்ரோபதேசம் செய்யும்படி திருமால் வேண்ட, அவருக்கு நானே ஶ்ரீ ருத்ர நாமாக்களும், உபநிஷத் நாமாக்களும் அடங்கிய ஶ்ரீ நடராஜர் ஸஹஸ்ர நாமத்தை உபதேசித்து அருளினேன்” என்று கூறுகின்றார். அந்நாமாக்களுள் ஒரு நாமாவான “ஶ்ரீபதி பூஜித:” என்னும் நாமா இதன் உட்கருத்தைத் தெளிவு படுத்துகிறது. அந்த நாமாவின் பொருளையும் சிறிது பார்ப்போம்.

லக்ஷ்மீபதியான மஹாவிஷ்ணுவினால் பூஜிக்கப்பட்டவர் நடராஜமூர்த்தி. வேதம் இதன் விளக்கத்தைத் தருகிறது. “அக்ஞானத்தைப் போக்கி, ஞானத்தை அளிக்கும் சிவனே! பிரம்மனுக்கு வேதத்தை உபதேசித்த சிவனே! அழகிய ரத்தினங்களாலும் கற்களாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பவழத்தினாலும் ஆகிய உனது லிங்கத்தை தேவர்கள் சிறந்த சம்பத்திற்காக அபிஷேகம் செய்து, ஆராதனம் செய்தனர். இச்சிவலிங்கத்தை பூஜை செய்ததின் பயனாகத்தான் விஷ்ணுவிற்கு வைகுண்டலோக நாயகராகும் தன்மை கிடைத்தது. அத்தகைய சிவலிங்க ஆராதனத்தினால் எங்களைக் காத்து அருள்கின்றாய்”. இவ்விஷயம் பராசர புராணத்திலும் கூர்ம புராணத்திலும், ஶ்ரீ இராமாயணத்திலும் அத்யாத்ம ராமாயணத்திலும், இராமாயண தாத்பர்ய ஸங்க்ரஹத்திலும், ஹரி வம்சத்திலும், மஹாபாரதத்திலும் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. லிங்க புராணத்திலும் சிவனை விஷ்ணு பலவாறாகத் துதி செய்து ஸாஷ்டாங்மாக வணங்கி ஜலத்தின் நடுவில் நின்று கொண்டு கோடி சிவநாமம் ஜபித்து சிவனருள் பெற்றார் என்று கூறப்பட்டுள்ளது. தேஜினிவன [திருவீழிமிழலை] மாகாத்மியத்தில் விஷ்ணு ஐம்புலன்களையும் அடக்கி, ஆகாரமின்றி லக்ஷ்மியுடன் கூட இருந்து கொண்டு ஆயிரம் தாமரை மலர்களால் ஒவ்வொரு நாளும் பூஜை செய்தார். அப்பொழுது ஒரு நாள் சிவன் விஷ்ணுவை சோதனை செய்ய ஒரு தாமரை மலர் குறையும்படிச் செய்துவிட்டார். எந்த ஓடைகளிலும் ஒரு மலர் கிடைக்காததால் இன்று 999 மலர்கள் தான் கிடைத்துள்ளன, ஒன்று கிடைக்கவில்லையே என்று மிக வருந்தி வைராக்கியத்துடன் எப்படியாவது ஆயிரம் தாமரை மலர்களால் பூஜையை செய்துவிட வேண்டியதுதான் என்று பூஜையைத் துவக்கினார். 999 மலர்கள் பூஜித்தபின் தனது வலது கண்ணைப் பிடுங்கி தாமரை ஸ்தானத்தில் அர்ச்சனை செய்தார். இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், முன் கண்ணைக் காட்டிலும் மிக அழகான, பிரகாசமான கண்ணை அளித்துப் புண்டரீகாஷர் என்னும் பெயரையும் சூட்டினார். “உனது பூஜையினாலும், துணிவினாலும் மகிழ்ச்சியுற்றேன். எனவே தேவை யானதைக்கேள்” என்று வேண்ட சிவனும் அவ்வாறே பார்ப்பதற்கு அழகான “சுதர்சனம்” என்னும் சக்கரத்தை அளித்து உலகைக் காத்து அருள் ஆணையிட்டார். தேவீ பாகவதத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

சிவலிங்கம் அமைந்திருக்கும் ஸ்தானம் விஷ்ணுபீடம் என்று கூறப்படுகிறது. இதைத்தான் சக்தி உபாசகர்கள் ஶ்ரீ சக்கர உபாசனத்தில் நடுவில் விந்து ஸ்தானத்தில் சிவனைச் சேர்த்து ஒன்று படுத்தி வழிபடுகின்றனர். செவ்வலரி மலராலும், தாமரை மலராலும், துளதியாலும் நடராஜரை வழிபடக் கூடாது என்று வசனம் இருக்க விஷ்ணு எவ்வாறு தாமரை மலரால் வழிபட்டார்? என்று சந்தேகம் வரின், விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் தாமரை மலரைக் கொண்டு நடராஜரை வழிபடக் கூடாது என்பது கருத்து. உலகிலும் மிகப்பெருந் தலைவர்கள் கையாளும் பொருட்கள் அவர்களே கையாள வேண்டும். மற்றேனையர் கையாளக் கூடாது, என்பது அனுபவசித்தம். அவ்வாறே இங்கும் காண்க.

சிவனுடைய வழிபாட்டால் மோக்ஷம் கிடைக்கும். போகத்தை விரும்புகிறவர்களுக்கு பெரும் சுகமும் கிடைக்கும். சிவபூஜையினுடைய விசேஷத்தால் அவனுக்கு பெரிய அரண்மனையும், பெரும் யானைகளும், வாயுவேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளும், சந்திரன் போன்ற முகம் அமைந்த சுந்திரகளும் பெரும் செல்வமும் அவனுக்குக் கிடைக்கும் என்பது புராண வசனம், மேலும் சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.

1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன, விரிவஞ்சி இத்துடன் விடுத்தனம்.

மேலும் சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்.

சிவவழிபாடு முறைகள் பலவாறாயிருப்பினும் மாதந்தோறும் பெளர்ணமியில் சிவனுக்குச் செய்ய வேண்டிய ஆராதன முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

சித்திரை - மருக்கொழுந்து,
வைகாசி - சந்தனம்,
ஆனி - முக்கனி (வாழை, மா, பலா),
ஆடி - பால்,
ஆவணி - நாட்டுச்சக்கரை,
புரட்டாசி - அப்பம்,
ஐப்பசி - அன்னம்,
கார்த்திகை - தீபம்,
மார்கழி - நெய்,
தை - கருப்பஞ்சாறு,
மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
பங்குனி - கெட்டித்தயிர்,

இவைகளால் வழிபாடு செய்தால் சிவனுக்கு விசேஷ ப்ரீதி ஏற்படும்.

மங்களம் நடராஜாய மஹநீய குணாத்மனே |
சக்ரவர்த்தி நுதாயஶ்ரீ சித்ஸபேசாய மங்களம் ||

|| சுபம்பூயாத் ||

Related Articles