logo

|

Home >

articles >

shivamahimai-9shakshikal

சிவமஹிமை - 9-சாக்ஷிகள்

தர்மக்ஞ, வித்யாவாசஸ்பதி,

மாயூரம் ராமநாத தீக்ஷிதர் எழுதியது


சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]


      ஒரு சமயம் நைமிசாரண்யவாசிகளான மஹரிஷிகளுக்கு மிகசிறந்தவரும் விரும்பிய பலனை அளிக்கத் திறமையுள்ள வருமான கடவுள் யார் என்ற விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்டது. ஒரு சில ரிஷிகள் திருமாலே சிறந்தவர் என்று கூறி அதற்கு சாக்ஷிகளாக அறுவரைக் குறிப்பிட்டனர்.

1.     மஹாவிஷ்ணுவானவர் தன் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் உடையவர். அவர்கள் மனதில் உள்ள எண்ணங்களை நிறைவேற்றுபவர். இதற்குப் பிரஹலாதன் சாக்ஷி.

2.     தன்னை அண்டினவனின் பயத்தைப் போக்கிய என்றும் சிறந்தவனாகவே இருக்கச் செய்பவர் திருமால். இதற்கு விபீஷணன் சாக்ஷி.

3.     பயங்கர ஆபத்து வந்தால் உடனே போக்கடித்துக் காப்பாற்றுபவர் என்பதற்கு கஜேந்திரன் சாக்ஷி.

4.     கொடையில் அளவற்றதைக் கொடுப்பவர். வஸ்திரத்தை முடிவில்லாது கொடுத்தார் என்பதற்கு திரெளபதி சாக்ஷி.

5.     எந்த பாபத்தைச் செய்தாலும் போக்கடிக்கும் திறமை உள்ளவர். இதற்கு அஹல்யை சாக்ஷி.

6.     பக்தனுக்குப் பதவியைக் கொடுத்தால் அதற்கு மேலே பதவி இராது. அத்தகைய பதவிக்கு துருவன் சாக்ஷி.

      இந்த ஆறு சாக்ஷிகளைக் கொண்டு நாராயணே சிறந்த தெய்வம். அவரையே தியானம் செய்ய வேண்டும் என்று அந்த ரிஷிகள் கூறினர். இதைக்குறிப்பிடும் ச்லோகம் கீழே காண்க.

               

 

 

வாத்ஸல்யாதபயப்ரதாகரணாத்

              ஆர்தார்த்தி ஸம்ரக்ஷணாத

       ஒளதார்யாதகசோஷணாதகணித

              ச்ரேய: பதப்ராபஜாத் |

       த்யேய: ஶ்ரீபதிரேகரவ ஜகதாம்

              ஏதே ஷட்ஸாக்ஷிண:

       ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச

              கிரிராட் பாஞ்சால்யஹல்யாத்ருவ: ||

 

      இதனைக்கேட்ட சிவபக்தர்களான சில மஹரிஷிகள் பரமசிவனின் ப்ரபாவத்தை 9 சாக்ஷிகளைக் கொண்டு மகிழ்ச்சியுடன் நிலைநாட்டினர்.

1.     ஒரு தெய்வத்தினிடம் விரும்பிய வரத்தை அடைந்தால் அது அழிவற்றதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த வரத்தை அளிக்கும் தெய்வமே அக்ஷிவுள்ளதானால் அதனால் நமக்குப் பிரியோசனம் இல்லை. ஆதலால் அழிவற்ற தெய்வம் யார் என்றால் பரமசிவன் ஒருவரேயாம். இதற்கு யார் சாக்ஷி? ஒரு சமயம் ஜோதிர்மயமாய்த் தோன்றிய சிவபிரானின் மேல்பாகத்தை அறிய பிரமதேவனும், அடி பாகத்தை அறியத் திருமாலும் சென்றனர். ஆதி வராஹ உருவத்துடன் திருமால் கீழ் எழுலோகமும் சென்றும் திருவடிவயைக் காண முடியவில்லை என்று திரும்பி வந்துவிட்டார். அதனால் அந்தம் (முடிவி) இல்லாதவர் சிவபிரான் என்பதற்கு மஹாவிஷ்ணுவே சாக்ஷியாவர்.

2.     கொடையில் சிவபிரானே சிறந்தவர் என்பதற்கு உபமன்யு மஹரிஷியே சாக்ஷியாவார். பால் வேண்டுமென்று யாசித்தபொழுது பாற்கடலையே அவரது வீட்டின் முன்பு அலை மோதச் செய்தார் சிவபெருமான்.

3.     ஒரு நாயகனிடம் வேலை செய்தால் நல்லமுறையில் ஸத்தியம் தவறாது எஜமானன் என்ன செய்வானோ என்ற பயம் வேண்டும். முன் சொல்லியபடி ஜோதியாய்த் தோன்றிய சிவபிரானின் முடியைக்காண பிரமதேவன் மேலே அன்னப்பக்ஷி வடிவமெடுத்து பறந்து சென்றார். காண இயலாது திரும்பி வந்தார். தலையைப் பார்த்ததாகப் பொய் கூறினார். சிவபிரான் உடனே பொய் சொன்ன தலையைக் கிள்ளி எறிந்தார். நமது ராஜ்யத்தில் யாருமே பொய் சொல்லக் கூடாது என்பது போல இந்த செயல் அமைந்தது. அதனால் ஸத்தியத்தை ஆதரித்த சிவனே சிறந்தவர் என்பது தெளிவாகிறது. இதற்குப் பிரமதேவன் சாக்ஷி.

4.     உலகில் பிறந்த அனைவரையும் ஒரு வியாதி பிடிக்கிறது. அந்த வியாதி தான் மரணம் என்பது. இதற்கு மருந்து யாரிடமும் இல்லை. அதற்கு மருந்து கொடுத்து மரணத்தைப் போக்க வல்லவர் பரமேச்வரன் ஒருவரேயாவர். இதனால் வேதம் அவரை “பாதமோ தைவ்யோ பிஷக்” என்ற போற்றுகிறது. இதற்கு சாக்ஷி மார்க்கண்டேயர்.

5.     சிறிதளவு ஸேவை செய்தாலே மிக்க சந்தோஷம் அடைந்து அளவு கடந்த ஐச்வர்யத்தை வாரிவழங்குபவர் சிவபிரான். அதனாலேயே அவர் ஆசுதோஷி என்று போற்றப்படுகிறார். ஒரு தளம் பில்வத்தைப் பக்தியுடன் அர்ப்பணம் செய்து உலகிலேயே பெரும் பணக்காரன் ஆனான் குபேரன். வடதிசைக்கு அதிபதியும் ஆனான். எனவே சிவபிரான் ஆசுதோஷி என்பதற்கு குபேரன் சாக்ஷி.

6.     அமுதம் பெறவேண்டி பாற்கடலைக் கடையும் பொழுது காளகூட விஷம் உண்டாயிற்று. தேவர்கள் அனைவரும் மூர்ச்சையாய் விழுந்தனர். பிறகு சிவபிரானிடம் சென்று அடிபணிந்து வேண்டினர். அந்த பயங்கரமான விஷத்தை உண்டு அனைத்து உலகங்களையும் சிவபிரான் காப்பாற்றினார். விஷம் கழுத்தில் நின்று அதனால் நீலகண்டன் என்ற பெயருடன் விளங்குகிறார். இவ்விதம் யாராலும் செய்ய முடியாத கார்யத்தைச் செய்து துன்பத்தைப் போக்கினார். இதற்கு தேவர்கள் சாக்ஷி.

7.     உலக நாயகனான சிவபெருமானை அல்க்ஷ்யம் செய்த தக்ஷன் (பிரமாவின் புத்திரன், சிருஷ்டிகர்த்தாக்களில் இவனும் ஒருவன்) தலையை இழந்தான். எனவே அல்க்ஷ்யம் செய்பவன் யாராக இருந்தாலும் தண்டனை கொடுப்பவர் சிவன் என்பதற்கு தக்ஷன் சாக்ஷியானான்.

8.     இராவண ஜயத்திற்கு உபாயத்தை உபதேசித்து ஶ்ரீராமனை வெற்றியடையச் செய்தவர் சிவபெருமான் என்பதை “அத்ரபூர்வம் மஹாதேவ; ப்ரஸாதம் அகரோத் ப்ரபு,” என்று ஶ்ரீராமனே கூறுகிறார். எனவே நண்பனைத் தானாக நினைத்து ஆபத்தில் உதவி செய்பவர் சிவபிரான் என்பதற்கு ஶ்ரீராமனே சாக்ஷியாகிறார்.

9.     “ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்தே” என்பது முதலிய வேத வாக்கியங்கள் சிவபெருமானே சிறந்தவர். அவருக்குச் சமமாக யாருமில்லை என்ற கூறுகின்றன, ஆதலால் உத்தமன் சிவபெருமான் என்பதற்கு வேதங்களே சாக்ஷி.

      இவ்விதம் ஒன்பது சாக்ஷிகளைக்காட்டி சிவமஹிமையை நிரூபணம் செய்து சிவபெருமானே ஸேவிக்கத் தகுந்த தெய்வம் என்பதை சிவபக்தர்களான மஹரிஷிகள் நிலை நாட்டினார்கள்.

      முன்பு நாராயணனின் பெருமையைக் கூறியவர்களும் சாக்ஷிகளுடன் தான் சென்னார்கள். ஆனால் அவர்கள் காட்டியது ஆறு சாக்ஷிகள். சிவமஹினையை நாட்டியவர்கள் கூறியது ஒன்பது சாக்ஷிகள். சந்தேகம் உள்ள இடத்தில் அதிக ஸங்க்யையைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்பது மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் அபிப்பிராயம். தற்காலம் ராஜ்ய பரிபாலனமும் “மெஜாரிட்டி” யால் தான் நடக்கிறது. அதனால் சாஸ்திரங்களிலும் உலக வியவஹாரங்களிலும் “மெஜாரிடி” தான் வெற்றிக்குக் காரணம் என்பது விளங்குகிறது. ஆதலால் ஒன்பது சாக்ஷிகளால் தீர்மானிக்கப்பட்ட பரமசிவனே ஸர்வோத்க்ருஷ்டர். அவரே உபாசிக்கத் தகுந்தவர் என்பது நிலைத்தது.

      மேலும் விஷ்ணு பக்தர்கள் கூறிய ஆறு சாக்ஷிகளும் சாக்ஷிக்குரிய தகுதி இல்லாதவர்கள். சாக்ஷிகளின் தகுதியைக் கொண்டுதான் அவர்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை இக்கால நடவடிக்கைகளாலும் அறியலாம். சிசு, பசு, அரக்கன், அசுரன், பெண் ஆகியவர்கள் சாக்ஷி கூறத் தகுதியற்றவர்கள் என்பது நீதி சாஸ்திரத்தின் அபிப்ராயம். பிரஹலாதன் அசுரவம்சம், விபீஷணன் ராக்ஷஸன் (அரக்கன்), கஜேந்திரன் யானை (பசு – மிருகம்), துருவன் சிசு, திரெளபதியும் அகல்யையும் பெண்கள். எனவே இவர்கள் சாக்ஷிக்குத் தகுதியற்றவர்கள் என்பது விளங்குகிறது. சிவமஹிமைக்கு எடுத்துக் காட்டிய சாக்ஷிகளில் யாரும் சிசு, பசு, பெண்ம் அரக்கர், அசுரர் இல்லையென்பது கவனத்திற்குரியது.

      உத்தமமான சாக்ஷியங்களைக் கொண்டு சிவபெருமானே சிறந்தவர் என நிரூபித்த சுலோகம் பின் வருமாறு.

                ஆனந்த்யெளதார்ய ஸத்யாத்ருதி

              ம்ருதிஹ்ருதிபி: ஸ்வல்பஸேவாதிதோஷாத்

       ஸங்கஷ்டோச்சித்யுபேக்ஷா பயஹித

              வசனைருத்தமாத்வாச்ச சம்பு: |

       த்யேயோ விஷ்ணூபமன்யு த்ருஹிண

              முனிஸுத ஶ்ரீதமந்தேச்சு தேவை:

       தக்ஷஶ்ரீராம வேதை: அசிசுபசு

              வதூ ராக்ஷஸைஸ் ஸாக்ஷிபிர் : ||

 

      ஆகவே ஸர்வோத்க்ருஷ்ட தெய்வமான சிவபெருமானையே உபாசித்து அனைவரும் உய்தி பெறுவார்களாக.

      [பதிப்பாசிரியர் குறிப்பு:- ஆறுசாக்ஷிகளைக் கொண்டு எடுத்துக் காட்டப்பட்ட மஹாவிஷ்ணுவும், அவரது அவதாரங்களில் ஒன்றான ஶ்ரீராமரும் சிவோத்கர்ஷத்துக்குச் சாக்ஷிகளாக அமைந்தது குறிப்பிடத் தக்கது மட்டும் அல்லாது சிவபகதர்கள் அறிந்து மகிழ்ச்சியடையத் தக்கதுமாகும்.]

சிவம்.

Related Articles