logo

|

Home >

articles >

saivaagamangal-koorum-tirukoil-utsavangal

சைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்கள்

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

உத்ஸவங்கள் என்பன விழாக்கள்; அவை மக்களின் மனமகிழ்ச்சிக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் கொண்டாடப்படுவன; ஏனெனில் மனிதனுடைய அடிப்படைத் தத்துவமான ஆன்மா ஆனந்தமயமானது என்றும், எல்லாச் சக்திகளும் பொருந்தியது என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு விழாக்களைத் தம்முள் கொண்டாடி மகிழ்ச்சியடைவதைக் காட்டிலும் தான் வணங்கிப் போற்றும் கடவுளைப் பலவிதமான கொண்டாட்டங்களுடன் மகிழ்விக்க ஆசைப்பட்டது மனிதனுடைய ஆன்மீக வளர்ச்சியே; அடுத்து, அதற்கும் மேலாக அவற்றை வீடுகளில் நிகழ்த்துவதைக் காட்டிலும் இறைவனின் உறைவிடமான ஆலயங்களில் நடாத்தி, மக்களை ஒன்றுகூட்டித் தானும் மனம் மகிழ்ந்து இறைவனையும் மகிழ்விக்கத் தொடங்கியது மனிதனின் இறைத்தன்மை வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

அவ்வாறு நடத்தப்படும் உற்சவங்களும் பலவகையானவை; அவற்றை முறைப்படுத்திச் சடங்குகளை மேற்கொள்ளும் வழிகளை வகுத்துக் கொடுப்பன சைவாகமங்களாகும். இந்த வகை நூல்கள் எல்லாம்வல்ல சிவபெருமானால் இவ்வுலகத்தைத் தோற்றுவிக்கும் போது தேவர்களாகிய நந்தி, இந்திரன் முதலானோர்க்கும், ஸநகர், ஸநத்குமாரர் முதலான முனிவர்களுக்கும் அருளப்பட்டவை. பின்னர் அவர்கள் தங்களுடைய சீடர்களுக்கு அவற்றை உபதேசித்து அருளினர்.

இக்கட்டுரையில் சைவாகமங்கள் சிலவற்றுள் விளக்கிக் கூறப்படும் சில உற்சவங்களைப் பற்றி நாம் சிறிது ஆராய்வோம். ஆகமங்கள் பொதுவாகச் சிவபெருமானுக்குக் கோயில்களில் நடத்தப்படும் உற்சவங்களைப் பலவகையாகப் பிரிக்கின்றன. அவை தினசரி நடத்தப்படும் நித்யோத்ஸவம், பதினைந்து தினங்களுக்கொருமுறை நிகழ்த்தப்படும் ப§க்ஷ¡த்ஸவம், ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் மாஸோத்ஸவம், ஆண்டுக்கொருமுறை கொண்டாடப்படும் மஹோத்ஸவம் (பிரம்மோற்சவம்) முதலியன. பொதுவாகக் காமிகம், காரணம் முதலான மூலாகமங்களில் பலவிதமான உற்சவங்கள் விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆயினும், ஒவ்வொரு ஆகமும் சில புதிய உற்சவங்களை நமக்குக் கூறுகின்றது; நமது கட்டுரையில் இதுவரை பதிப்பிக்கப்படாத சில சைவாகமங்களிலிருந்து உற்சவங்களைப் பற்றிய சில முக்கிய செய்திகளை நோக்குவோம்.

அம்சுமதாகமம்

மார்கசீர்ஷ மாதத்துக் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று சிவபெருமானுக்குச் சிறப்புப் பூசைகள் செய்வது மிக்க நலம் பயக்கும் என அம்சுமதாகமம் கூறுகிறது. அவ்வாறே, நடராசப்பெருமானுக்குகந்ததான மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவத்தையும், நாட்டை ஆளும் அரசரின் நலனுக்காகவோ அல்லது ஒரு தனிமனிதரின் நலன் கருதியோ பத்ரபூஜை (pனSக்mனயுeனன) என்னும் விசேஷ பூசையையும், பலவிதமான நறுமணம் மிக்க மலர்களையும், மற்றும் பழவகைகளையும் கொண்டு பெருமானுக்கு திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளிலோ, அல்லது நவமி திதியிலோ செய்யப்படும் சின்னபூஜையையும் (சுNள்ஐனmனயுeனன) அம்சுமதாகமத்தில் நாம் காண்கிறோம்.

யோகஜாகமம்

இந்த ஆகமத்தில் சிவபெருமானுக்கு மஹோத்ஸவம் 16 தினங்களுக்குச் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பொதுவாக நடைமுறையில் தற்சமயம் 9 தினங்களுக்கு மஹோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. துவஜாரோஹணத்திற்கு அங்கமான விருஷயாகம் செய்வதற்கு ஸ்தண்டிலம் அமைக்கும் போது பல வேதமந்திரங்களை ஓதவேண்டுமென இவ்வாகமம் விதிக்கிறது. உற்சவம் நடைபெறும் நாட்களில் தினமும் ஆலயத்தைச் சுற்றி ஒவ்வொரு திசையிலும் ஆவாஹனம் செய்யப்பட்டுள்ள தேவதைகளுக்குப் பலியிடுதல், அதற்குத் தினமும் பலவிதமான உணவுவகைகள், அதற்கான மந்திரங்கள் ஆகியனவும் இங்குக் கூறப்படுகின்றன .

மேலும் உற்சவத்தின் பொழுது பெருமானுக்கு முன்னர் ருத்ரகணிகையர்களின் நாட்டியம், புஷ்பாஞ்ஜலி, அவ்வமயம் இசைக்கவேண்டிய ராகங்கள் முதலியனவும் இந்தப்படலத்தில் விரித்துக் கூறப்படுகின்றன. ருத்ரகணிகையர்களுக்குச் சிவதீ¨க்ஷ செய்விக்கும் முறையும் இங்குக் கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் நடத்தப்படவேண்டிய கிருத்திகாதீபத் திருவிழாவும் அடுத்துக் கூறப்படுகிறது. நடராசப்பெருமானுக்காக நிகழ்த்தப்படும் நடேசோத்ஸவத்தையும் யோகஜாகமத்தில் நாம் காணலாம்.

சிந்த்யாகமம்

சிந்தியாகமமென்னும் மூலாகமம் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய மாஸோத்ஸவத்தை விளக்கிக் கூறுகிறது. பூர்வ காரணாகமம், உத்தரகாரணாகமம், ஸ்வாயம்புவாகமம் ஆகிய வற்றிலும் இந்த உற்சவம் சிறப்பாக விரித்துரைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு ஒவ்வொரு மாதமும் சிவ பெருமானுக்கு ஒவ்வொருவிதமான சிறப்பு வழிபாடும், உற்சவமும் நடத்தப்படுவதை திருஞானசம்பந்தப் பெருமானின் திருமயிலைப் பதிகத்தினின்றும் நாம் நன்கு அறியலாம் . ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகத்தில் ஐப்பசித் திருவோண உற்சவத்திலிருந்து தொடங்குகிறார்; மேற்கூறிய ஆகமங்க ளெல்லாம் மார்கழி மாதத்துத் திருவாதிரை உற்சவத்திலிருந்து தொடங்குகின்றன. மேலும், ஒவ்வொருமாதமும் சிவபெருமானுக்கு உற்சவசமயத்தில் சமர்ப்பிக்கவேண்டிய திரவியங்கள் குறித்து ஆகமங்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சித்திரை முதல் நாள் (மேஷவிஷ¤), ஐப்பசி முதல் நாள் (துலாவிஷ¤), தைமாதம் முதல் நாள் (உத்தராயணம்) மற்றும் ஆடிமாதம் முதல் நாள் (தக்ஷ¢ணாயனம்) ஆகிய நான்கு முக்கிய புண்ணிய தினங்களிலும் விஷ¤வாயன பூஜை என்னும் சிறப்பு உற்சவத்தை சிந்த்யாகமம் கூறுகிறது. பூஜை முடிவில் சிவபெருமான் திருவுருமுன்னர் விண்ணப்பிக்கவேண்டிய சிறிய ஸ்தோத்திரத்தையும் இவ்வாகமத்தில் நாம் காணலாம். இது ஒரு அரிய செய்தி.

சிவபெருமானைத் தேவியுடன் அலங்கரித்து திருக்குளத்திற்கோ, கடலுக்கோ எழுந்தருளச் செய்து, அங்கு மீன்களைப் பிடிக்கும் உற்சவத்தைக் (மத்ஸ்யலீலா) கொண்டாடும்படி இவ்வாகமம் கூறக் காண்கிறோம். அப்பொழுது பல இன்னிசைக் கருவிகளுடன் நாட்டியம் முதலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவேண்டும். அவ்வாறே, மௌக்திக க்ரஹணம் -- முத்துக் குளித்தல்-- என்னும் உற்சவம் கடலில் நடத்தப்படவேண்டுமென்னும் விதியையும் இவ்வாகமத்தில் காண்கிறோம். அடுத்து, அச்சில் வராத மற்றொரு ஆகமமான ஸ்வாயம்புவாகமத்தைச் சிறிது நோக்குவோம்.

ஸ்வாயம்புவாகமம்

மாஸபூஜை அல்லது ஒவ்வொரு மாதமும் செய்யவேண்டிய சிறப்பு வழிபாட்டினையும் ஒரு படலம் வீதமாகப் பன்னிரண்டு படலங்களில் விரித்துரைக்கிறது. கம்பளத்தில் நெய்யைத் தோய்த்துப் பூசைகள் செய்து சிவலிங்கத்திருமேனியில் சார்த்துவது கிருதகம்பலபூஜை எனப்படுவது; இது மாகமாதத்திய சிறப்பு வழிபாடாகும். பால்குன மாதத்தில் பெரிய மண்பாண்டத்தில் தயிரை நிரப்பி, வழிபட்டு அதைப் பெருமானுக்கு நிவேதனம் செய்தல்; வைசாக மாதத்துக் கந்தபூஜையில் நறுமணமூட்டிய நீர் மற்றும் மணம் நிறைந்த மகிழம்பூ முதலிய மலர்களைப் பெருமானுக்கு அர்ப்பணித்தல், ஐப்பசியில் அன்னபூஜை; இப் பூஜையில் நிறைய அளவு சமைத்த சோற்றையும், காய்கனி களையும் சிவலிங்கத்திருமேனியில் சாற்றி அலங்கரிப்பது. இது தற்சமயம் அன்னாபிஷேகம் எனப்படுகின்றது. மேலும் அந்தந்த மாதத்து உற்சவத்தை நடத்தும் போது இசைக்கவேண்டிய ராகம், தாளம், நடனம், மற்றும் ஆலயத்தில் வரையவேண்டிய மண்டலங்கள் முதலியவற்றையும் சிறப்பாக ஸ்வாயம்புவாகமத்தில் நாம் காணலாம்.

விநாயகப்பெருமானுக்கு நிகழ்த்தப்படும் உற்சவத்தை ஒரு படலம் முழுதும் விரிவாக எடுத்துரைக்கிறது இவ்வாகமம்; கொடியேற்றம் (துவஜாரோஹணம்), பேரீதாடனம் முதலிய எல்லாக் கிரியைகளும் இங்குக் கூறப்படுகின்றன. மஹோற்சவத்தின் போது சிவ பெருமானை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாஹனத்தில் எழுந்தருளிவித்து ஊர்வலம் செல்வதுபோல் விநாயகப் பெரு மானையும் ஒவ்வொரு விதமான வாஹனத்தில் அலங்கரித்து எழுந்தருளுவிப்பதை இவ்வாகமம் கூறுகிறது .

ப்ரஸன்னயஜனம் என்னும் சிறப்புப் பூஜையை ஸ்வாயம்புவாகமம் சற்று விரித்துக் கூறுகிறது; பெரியம்மை முதலிய கொடுமையான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், அரசன் முதலா னோர்க்கு நன்மை பயக்கவும், பொதுவாக கிராமமக்களின் நலனுக்காகவும் இந்தச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. முந்தைய தினம் விநாயகப் பெருமானுக்கு இசை, நாட்டியம், பற்பல இசைக்கருவிகளுடன் கூடிய இன்னிசை ஆகியன அடங்கிய சிறப்பு வழிபாட்டுடன் இந்த வழிபாடு தொடங்குகிறது; பின்னர் ஆகமங்களில் கூறியவாறு ஐந்து ஆவரணங்களுடன் கூடிய சிவபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகளை (பஞ்சாவரண பூஜை) நடத்தி அதன் பின்னர் மிக அதிக அளவில் நறுமணம் மிக்க மலர்களும், வாசனைத் திரவியங்களும், பலவகையான உணவு களும் சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஐந்து ஆவர ணத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் அந்தந்த மந்திரங்களுடன் தனித்தனியாகப் பூஜித்து நிவேதனங்களை அளித்துப் பூஜை செய்யப்படுகிறது. முன்னர் ஸ்தண்டிலத்தில் அலங்கரித்துப் பூஜை செய்யப்பட்ட சிவகும்பம், வர்த்தனீ ஆகியவற்றைப் பரிசாரகர் தலையிலமர்த்திப் பிரதக்ஷ¢ணம் செய்து சுவாமிக்குச் சிவகும்பத் தினின்றும் அம்பாளுக்கு வர்த்தனியினின்றும் நீரால் அபிஷேகம் செய்து பின்பு அலங்கரித்து தூபம், தீபம், சிறப்பு நிவேதனங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவேண்டும். மஹோத்ஸவபடலம் சுமார் 400 சுலோகங்களுடையது; உத்ஸவங்களின் செய்முறை மிக விரிவாக இங்குக் கூறப்படுகிறது.

விஜயாகமம்

விஜயாகமமென்னும் மூலாகமம் துர்கையம்மனுக்கு நடத்தப்படும் மஹோத்ஸவத்தை மிக விரிவாகக் கூறுகிறது ; மேலும், தற்சமயம் நமக்குக் கிடைத்துள்ள இந்த ஆகமச்சுவடியிலும், கையெழுத்துப் பிரதியிலும் துர்கை வழிபாட்டைப் பற்றிய செய்திகள் மட்டுமே உள்ளன; ஒரு படலம் மட்டும் விநாயக உற்சவத்தையும், மற்றொன்று ஆருத்ரா உற்சவத்தையும் கூறுகின்றன. துர்கா உற்சவத்தின் ஒவ்வொரு சடங்கும் மிக நுணுக்கமாகவும் பிழை யின்றியும் விளக்கிக் கூறப்படுவது இங்கு நோக்கத்தக்கது. இவ் வாகமம் உற்சவத்தை (துர்கா உற்சவத்தை) உத்தமம், மத்தியமம், அதமம் என மூவகையாகப் பிரிக்கிறது :

அடுத்து, துவஜாரோஹணத்திற்காக நல்ல மரங்களைப் பரி சோதித்து அவற்றைக் கொண்டு துவஜஸ்தம்பம் செய்து அதன் மேல் துவஜத்தை ஏற்ற வேண்டும்; இதற்கு தாருஸங்கிரஹணம் என்று பெயர். இதற்குத் தகுந்த மரங்கள் எவையெனில் அவை பின்வருமாறு: துவஜாரோஹணத்திற்கு முன் அந்தக் கிராமமும், தேவியின் ஆலயமும் நன்கு சுத்தம் செய்யப்படவேண்டும் என்னும் விதியையும் நாம் இங்குக் காண்கிறோம். துவஜத்துணியில் துர்கையின் வாஹனமான ஸிம்ஹம் அழகாக வரையப்பட வேண்டும்; முன்னர்க் கூறிய வ்ருஷ யாகத்திற்குப் பதிலாக ஸிம்ஹயாகம் என்னும் சிறப்பு வழிபாடு செய்து, துவஜத்தை ஏற்றவேண்டும். பின்னர் பேரீ தாடனம் என்னும் பேரியை ஒலித்தல் சடங்கு நிறைவேற்றப்படவேண்டும். அதே சமயம் படஹத்வஜம், மத்தளம், சங்கம், வீணை, காஹளம், கொம்பு வாத்தியங்கள், தோல்வாத்தியங்கள் முதலிய மற்ற இசைக் கருவிகளும் ஒலிக்கப்படவேண்டும்.

அடுத்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தைச் சுற்றிப் பல தேவதை களுக்குச் சிறப்புப் பலி (பலி என்னும் வடமொழிச்சொல்லுக்குப் பூஜை என்பது பொருள்) செய்யவேண்டும். ஒன்பது சக்திகள், எட்டு துவஜதேவதைகள், ஒவ்வொரு திசைக்கும் எட்டுச் சக்திதேவதைகள் அடங்கிய குழுவீதம் பத்துத் திசைக்கும் பத்துக் குழுக்கள் ஆகியவற்றிற்குத் தினமும் பலியிடுதல் நடைபெற வேண்டும். ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாஹனத்தில் சிவபெருமானுடன் கூடிய துர்காதேவியை அலங்கரித்து வீதிவலம் எழுந்தருளுவித்தல் கூறப்படுகிறது. ஒன்பதாம் நாள் ரதயாத்திரை; இதிலும் சிவபெருமானுடன் கூடிய துர்காதேவியின் திருவுருவத்தை அலங்கரித்து, எழுந்தருளச்செய்து, ரதத்தினுடைய நான்கு சக்கரங்களிலும் பல தேவதைகளை ஆவாஹனம் செய்துப் பூஜித்துப் பின்னர் வீதிவலம் வருதல் கூறப்படுகிறது.

ஆருத்ரா உற்சவத்தில் சிவபெருமானையும், துர்காதேவியையும் அலங்கரித்து ஊஞ்சலில் எழுந்தருளுவித்து, மணம் மிக்க மலர்களையும், பலவகை நிவேதனங்களையும் சமர்ப்பிப்பது இங்கு கூறப்படுகிறது. ஊஞ்சலில் ரதடோலா, சக்ரடோலா, வாஜீடோலா, ஸ்தம்படோலா, யுக்மடோலா எனப் பலவகையை இவ்வாகமம் கூறுகிறது. விஜயாகமத்தில் மேலும் நாம் ஜலக்ரீடை (க்ரீடா என்னும் வடசொல் விளையாட்டு எனப் பொருள்படும்) என்னும் உத்ஸ வத்தையும் காண்கிறோம்; தேவியுடன் கூடிய சிவபெருமான் திருவுருவத்தை அலங்கரித்துத் திருக்குளத்திற்கோ அல்லது கடலுக்கோ பக்தகணங்கள் புடைசூழ இன்னிசையுடன் எழுந்த ருளுவித்து தெய்வத்திருமேனிகளையும் நீரில் மூழ்கச்செய்து விளையாடுவது இவ்வுற்சவத்தின் நோக்கம். வ்ருஷபம், விருச்சிகம், கும்பம், ஸிம்ஹம் ஆகிய நான்கு மாதங்களுள் ஒன்றில் சிவபெரு மானுக்கும் தேவிக்கும் நடத்தப்படும் தெப்போற்சவத்தையும் (உடுபோத்ஸவம்) இவ்வாகமம் விரித்துக் கூறுகிறது.

விஜயோத்தராகமம்

உத்ஸவம் என்னும் சொல்லுக்கு விஜயோத்தராகமம் ஓர் அரிய விளக்கத்தைத் தருகிறது:

"அஞ்ஞானமென்னும் மலத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் உயிர்களுக்கு ஞானத்தை உண்டாக்குவதே உத்ஸவம் எனப்படும்". மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் இவ்வாகமத்தில் காணலாம்: மஹோத்ஸவத்தின் பொழுது சிவபெருமான்வீதியுலா வருகையில் வைதிகம், மஹாவிரதம், காபாலம், பாசுபதம், பைரவம், கௌலம் முதலிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் கொள்கைக் கேற்றவாறு பல துதிகளைத் துதித்து வணங்கலாம் என்பது. இதே கருத்தை அப்பர் பெருமானின் திருவாரூர்ப்பதிகத்தில் நாம் காணலாம்:

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையில் தொழுவார், உருத்திரபல்கணத்தார், விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.  (நான்காம் திருமுறை, 20 ம் பதிகம், மூன்றாம் பாட்டு)*10.

*10திருவாரூர் அம்மானின் திருவாதிரை நாள் உற்சவத்தைக் கண்ணாரக்கண்டு ரசித்த அப்பர்பிரான் அடுத்த பதிகத்தின் (21 ம் பதிகத்தின்) முதற் பாட்டில்,

முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம் .

எனச் சிவராஜதானி--சைவர்களின் தலைநகரம்--எனத் திகழ்ந்த திருவாரூரில் சைவத்தின் பலதுறைகளைச் சார்ந்தவர்களும் எம்பெருமானை எந்தவிதப் பிணக்குமின்றி வழிபட்டு வந்த செய்தியை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். இதிலிருந்து சைவவரலாற்றின் மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் அறிகிறோம். அப்பர் பிரான் காலத்தில் திருக்கோயில் வழிபாடு வைதிக முறையிலோ (ஞானசம்பந்தப்பெருமானின் ஒவ்வொரு பதிகமும் இதற்குச் சான்று) அல்லது சைவத்தின் ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தோ நிகழ்ந்து வந்தாலும் காபாலிகர்கள், பாசுபதர்கள், மாவிரதியர் முதலான சைவத்தின் மற்ற துறையைச் சார்ந்தவர்களும் மக்களுடன் ஒன்றுகூடிப் பெருமானைத் தத்தம் முறைக்கேற்ப வழிபட்டு வந்துள்ளனர் என்றும், அவர்களுக்குள் உட்பூசல்களோ, ஒருவர் வழிபடும் மூர்தியை மற்றவர் தீண்டினால் அதற்குப் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்னும் விதியோ காணப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சைவத்தின் பலதுறைகளைச் சார்ந்தவர்களுக்குள் பிணக்குகள் பெரும்பாலும் இல்லாமலிருந்தன என்று கல்வெட்டுக்களின் வாயிலாகவும் நாம் அறிகிறோம்: பத்தாம் நூற்றாண்டில் கலசூரி என்னும் வம்சத்து மன்னர்கள் ஆண்ட தற்சமயம் மத்தியப்பிரதேசமென அழைக்கப்படும் தேசத்தில் அவர்களுக்கு ராஜகுரு வாகத்திகழ்ந்தவரும், சிவபக்தி, கடும்தவம் ஆகியவற்றில் சிறந்தவருமான பிரசாந்த சிவாசாரியாரென்னும் சைவ ஆசாரியர் தம்முடைய மடத்தில் பாசுபதக் கொள்கைகளில் தேர்ச்சி பெற்ற பல அறிஞர்களைத் தம்முடன் வாழச்செய்து அவர்களுடன் சமயக் கொள்கைகளைப் பற்றிப் பேசிவந்தார் என்பது. (இந்தக் காலத்திய கல்வெட்டுக்கள் புத்தகவடிவில் பதிப்பிக்கப்பட்டுள்ளன)

உற்சவகாலத்தில் வீதியுலாவிற்கு எழுந்தருளும் உமையம்மையுடன் கூடிய சிவபெருமான் (உமாஸஹிதமூர்த்தி) திருமேனி அழகை கவிதை ரசனயுடனும் சைவசித்தாந்தக் கருத்து வெளிப்படும் வகையிலும் இவ்வாகமம் வழங்குவதை நாம் சற்று ரசிப்போம்:

"கௌரி என அழைக்கப்படும் உமையம்மையுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் பெருமானின் வலக் கடைக்கண் பார்வையால் தெருவினில் கூடியுள்ள மக்களின் மனவிருப்பங்களை நிறைவேற்றுகிறார்; அதே சமயம் பெருமான் தன்னுடைய இடப்பக்கக் கடைக்கண்ணால் அழகு பொருந்திய கௌரியின் முகத்தையே நோக்குகிறார். இவ்வாறு அவர் வீதிவலம் வருகையில் கதிரவன் தன்னுடைய பொற்கிரணங்களால் தாமரை மொட்டுக்களை மலரச்செய்வது போல மலம், மற்றும் மோஹம் என்னும் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள உயிர்களுக்கு ஞானத்தைப் போதிக்கிறார்" என்பது. மஹோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வீதியுலாவுக்காக திரிபுராரி, சந்திரசேகரர், ஸோமாஸ்கந்தர், விருஷேச்வரர் முதலிய மஹேச்வரவடிவங்களுள் ஒன்றை எழுந்தருளச் செய்யலாமென்பதையும் இங்கு நாம் காண்கிறோம்.

ஸஹஸ்ராகமம்

ஸஹஸ்ராகமமென்னும் மூலாகமம் நடராஜப் பெருமானுக்காக நடத்தப்படும் உற்சவத்தைக் கூறுகிறது; இது ந்ருத்தபங்கோத்ஸவம் எனவும் வழங்கப்படுகிறது. அவ்வாறே, ஸோமாஸ்கந்தப் பெருமானுக்காக நடத்தப்படும் தனி உற்சவத்தை ஆதிபங்கோத்ஸவமென்றழைக்கிறது.

ஸித்தாகமம் என்னும் மூலாகமம் உத்தராயணம், தக்ஷ¢ணாயனம் ஆகிய புண்ணியதினங்களில் செய்யவேண்டிய சிறப்பு வழிபாட்டை அயனோத்ஸவமென்றழைக்கிறது.

இவ்வாறாகச் சைவாகமங்கள் சிவாலயங்களில் நடத்தப்பட வேண்டிய பலவிதமான உற்சவங்களை மிக விரித்துக் கூறுகின்றன. நாம் மேலே கண்டவை பெரும்பான்மை அச்சில் வராத ஆகமங்களுள் கூறப்பட்ட சில உற்சவங்களே; இன்னும் பல உள்ளன. அவற்றை எம்பெருமான் திருவருள் துணையுடன் பின்னர் நோக்குவோம். அவற்றுள் பல தற்காலத்தில் பலகாரணங் களினால் வழக்கொழிந்துவிட்டன. காலப் போக்கில் பல புதிய உற்சவங்கள் இப்போது கொண்டாடப்படுகின்றன.

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

 

Related Articles