logo

|

Home >

articles >

saiva-varalaatril-sivagnapotham

சைவ வரலாற்றில் சிவஞானபோதம்

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

ஆகமங்கள் ஸ்ரீபரமேசுவரனால் பிரணவர், ஸ்ரீகண்டருத்ரர் முதலான தேவர்களுக்கும் பின்பு அவர்கள் வாயிலாக முனிவர்களுக்கும் உபதேசிக்கப்பட்டு மானிடர்களாகிய நமக்குக் கிட்டியுள்ளன. அவை பரமேசுவரனான சிவபெருமானைப் பலவழிகளில் போற்றி வணங்கும் உபாஸனை முறையை விளக்கி அதன் மூலம் மனிதர்களாகிய நாம் இந்த உலகில் பல நன்மைகளைப் பெற்று முடிவில் என்றுமழியாத நமக்கே உரிய சிவத்துவத்தை அடைதலாகிய மோக்ஷத்தைப் பெறுவதற்கு உதவுகின்றன. சைவத்தின் ஒரு பிரிவாகிய சைவசித்தாந்தம் வேதம், ஆகமம் என்னும் இரு பெரும் ஜீவ நதிகளின் மூலம் செழுமையாக்கப்பட்ட ஒரு பரந்த நிலப்பரப்பு எனக் கொண்டால் அதில் தோன்றிய நூல்களாகிய மரங்கள் பல; அதில் சிவஞானபோதம் என்னும் நூலானது ஒரு தனிப்பட்ட சம்பிரதாயத்தையே தோற்றுவித்த நூல் என்பதை நாம் பின்னர்க் காண்போம்; அதற்கு முன் சைவசித்தாந்த வரலாற்றை மிகச் சுருக்கமாக நோக்குவோம். சைவசித்தாந்தத்திற்கு ஆதாரமான ஆகமங்கள் இறைவனாகிய பரமேசுவரனால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அருளப்பட்டவை; அவை 28 மூலாகமங்கள் என்றும் அதன் அடிப்படையில் எழுந்த 200 க்கும் மேற்பட்ட உபாகமங்களென்றும் வழங்கப்படுவது மரபு.

நாற்பாதங்கள்

இந்த ஆகமங்கள் சைவத்தின் ஸித்தாந்தம்-முடிவான கொள்கைகளை-விளக்குவதால் சைவஸித்தாந்தம்-சைவத்தின் முடிவான கொள்கை-என வழங்கப்படுகின்றன. இவற்றில் பரம்பொருளான சிவபெருமானின் உபாஸனைக்கு அங்கமாகச் சில தத்துவக் கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. அவை பின் வருவன: பதி எனப்படும் கடவுளின் உண்மை, அதன் பேராற்றல், பசு என்றழைக்கப்படும் ஜீவராசிகளான நமது உண்மை இயல்பு, பதியுடனான தொடர்பு, நம்முடைய உண்மைச் சொரூபம் உலகியல் வாழ்வில் விளங்காதிருப்பதற்கான மூலகாரணம், (அது ஆணவமலமறைப்பு என்று சைவஸித்தாந்தம் வழங்குகிறது) முதலிய செய்திகள், ஜடப்பொருளான இந்த உலகத்தின் உண்மைநிலை, அதைப் பதியாகிய சிவபெருமான் தோற்று விக்கும் முறை, பசுக்களுக்கும் ஜடமாகிய உலகத்திற்கும் உள்ள தொடர்பு என்பன. இப்பகுதி வித்யாபாதம் அல்லது ஜ்ஞானபாதம் எனப்படும்.

ஆகமங்கள் தத்துவங்களை மட்டும் விளக்கமாகக் கூறி அமைந்துவிடுவன அல்ல; மாறாக உபாஸனைக்கு அடிப்படைத் தேவையான பல ஒழுக்கங்களையும், தினசரி செய்யவேண்டிய கடமைகளையும் வழிபாட்டு விதிமுறைகளையும் விளக்குகின்றன. இப்பகுதி சரியாபாதம் எனக் கொள்ளப்படும். பின்பு மனதை ஒருமுகப்படுத்தி சிவபெருமான் மீது தியானம் செய்யத் தேவையான சில அடிப்படைக் கொள்கைகளையும், மனித உடற்கூறு, சூக்கும உடல், அங்கு அமைந்துள்ள நாடிகள் ஆகியவற்றை விளக்கும் யோகபாதம் என்னும் பகுதி அமைந்துள்ளது. முடிவாக, சிவவழிபாட்டிற்கு மிக இன்றியமையாததான முத்திரைகள், மண்டலங்கள் ஆகியவற்றின் விளக்கம், விரிவான வழிபாட்டுமுறை, ஆலயங்களை அமைத்துச் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்து உலக ந‎ன்மைக்காக வழிபடுதல், இந்த சைவஸித்தாந்தக் கொள்கைகளைப் பின்பற்றி உலகவாழ்வில் பலசுகங்களை அடைந்து பின்பு மோட்சத்தை அடைய விரும்புவோர் மேற்கொள்ளவேண்டிய பல விசேஷக் கிரியைகள் அடங்கிய தீக்ஷையென்னும் சடங்கை விளக்கும் கிரியாபாதம் காணப்படுகிறது.

ஆகமங்களின் நாற்பாதங்களிலும் அடிப்படைக் கொள்கைகள் வேறுபடாவிடினும் அவற்றைச் செயல்படுத்தும் முறையிலும், விளக்கங்களிலும் ஆகமங்களுக்குள் வேறுபாடு காணப்படுகின்றது; எனவே அக்கொள்கைகளை ஐயந்திரிபற நன்கு விளக்கு முகமாக ஆகமங்களுக்கு விரிவான உரைகளையும், அவற்றை முறைப்படுத்துவதற்காக பல நூல்களையும் ஆசாரியர்கள் பலர் இயற்றியுள்ளனர். இன்று நமக்குக் கிடைத்துள்ள அந்நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு பார்த்தால் கி.பி. 7-8 நூற்றாண்டு களிலேயே வட இந்தியாவில் காச்மீரம் முதலிய தேசங்களில் இவ்வாகமங்கள் பரவலாகப் பயிலப்பட்டு வந்துள்ளமையும், சைவசித்தாந்தத்தைப் பின்பற்றி ஒழுகி வந்த ஆசாரியர்களுள் அவற்றின் கொள்கைகளைப் பற்றிய சீரிய வாதங்களும், அதற்காக நூல்கள் இயற்றப்படவேண்டிய சூழ்நிலை நிலவியிருந்தமையும் நன்கு புலனாகின்றது.

பிருஹஸ்பதி, உக்ரஜ்யோதி, ஸத்யோ ஜ்யோதி, நாராயணகண்டர், இராமகண்டர் முதலியோர் காச்மீரத்திலும், போஜதேவர் மாளவதேசத்திலும், இப்பரம்பரையில் 12 ம் நூற்றாண்டில் தோன்றிய அகோரசிவர் முதலானோர் சோழ நாட்டிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாசிரியர்கள் மதங்கபார மேசுவரம், திரிசதிகாலோத்தரம், ரௌரவம், ஸ்வாயம்புவம் முதலிய ஆகமங்களுக்கு விரிவான உரைகளையும், ஆகமங்களின் ஞானபாதக் கருத்துக்களை ஒன்றோடொன்று முரண்படாவண்ணம் விளக்கி தத்துவஸங்கிரஹம், தத்துவத்திரய நிர்ணயம், போககாரிகை, மோக்ஷகாரிகை முதலிய நூல்களையும் யாத்துள்ளனர். நரேசுவரபரீ¨க்ஷ என்னும் நூல் சிவபெருமான் மற்றும் ஆன்மாக்களின் இயல்புகளைப் பற்றி ஆராய்வது; பரமோக்ஷநிராஸகாரிகை என்னும் நூல் பௌத்தம், ஸாங்கியம், நியாயம், பாசுபதம், வேதாந்தம் முதலிய மதங்களின் மோக்ஷக் கொள்கைகளை விர்¢வாக ஆராய்ந்து அவற்றின் குறைபாடுகளை வெளிக்கொணர்ந்து முடிவில் சைவஸித்தாந்தத்தின் மோக்ஷக் கோட்பாட்டை விளக்கி நிறுவுவது. இவையே நமக்குக் கிடைத்துள்ள சைவசித்தாந்த நூல்களுள் மிகப் பழமையானவை. இவற்றைப் பிரகரண நூல்கள்-யாதேனும் ஒரு முக்கிய கருத்தைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டவை- என்பர்.

அடுத்து, ஆகமங்களின் கிரியாபாத சரியாபாதக் கருத்துக் களையும் அவ்வாறே நன்கு ஒப்பு நோக்கி ஆராய்ந்து எல்லோரும் அறிந்து பின்பற்றும் வண்ணம் முறைப்படுத்துவதற்காக எழுந்தவை பத்ததிக்ள்; இவை நித்திய நைமித்திகக் கிரியைகளை முறையாக விளக்குபவை. பிரஹ்மசம்பு, ஸோமசம்பு, ஈசானசிவர், வருணசிவர், விமலசிவர், உத்துங்கசிவர், அகோரசிவர், விசுவநாதர் ஆகியோர் இப்படிப் பட்ட பத்ததிகளை இயற்றியுள்ளனர்; இவற்றுள் சில நமக்குக் கிடைத்தில. எனவே, சைவசித்தாந்த வரலாற்றில் ஆகமங்களின் காலம் முதல் கட்டம் எனக் கொண்டால் மேற்கூறிய ஆசாரியர்களும் அவர்களின் நூல்களும் தோன்றிய கிட்டத்தட்ட 7 ம் நூற்றாண்டு தொடங்கி 12 ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை நாம் இரண்டாம் கட்டமாகக் கொள்ளலாம். இதில் நமக்குக் கிடைத் துள்ள நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு ஸத்யோஜ்யோதி தொடங்கி அகோரசிவசாரியர் ஈறாகப் பல முக்கிய ஆசாரியர்கள் விளங்குகின்றனர்; அகோரசிவர் தன்னுடைய மூதாதையர்கள் வங்கதேசத்திலிருந்து அம்பலவாணரை வழிபடுவதற்காகத் தில்லையில் வந்து குடியேறியதையும், விக்கிரமசோழன் முதலானோர்க்கு இராஜகுருவாக அவர்கள் விளங்கியிருந்ததையும் குறிப்பிடுகிறார்.

மேலே குறிப்பிடப்பட்ட நூல்களின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தின் முக்கிய கொள்கைகளைச் சற்று விளக்குவோம்:

சைவாகமங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுபவை பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்களே*1; அதில் பதி எனப்படும் பரம் பொருள் சிவபெருமான் ஒருவனே; அவன் முக்காலத்தும் உள்ள பொருள்; மலம் முதலிய மாசுகளற்று என்றும் விளங்குபவன்; அறிவு, செயல் என்னும் இரண்டு பேராற்றல்களை எப்போதும் தன்னகத்தே கொண்டவன் (ஞானகிரியாஸ்வபாவம்)*2. எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் அவன் ஒருவனே; இவ்வுலகத்தைப் படைத்தல், அதைக் காத்தல், பின்பு அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் எப்போதும் ஆற்றுபவன்*3; இவ்வுலகில் பிறந்த ஜீவன்களாகிய பசுக்களிடம் மறைத்தல், அருள்புரிதல் என்னும் இரு தொழில்களையும் செய்பவன்; இவ்வாறாகச் சிவபெருமான் ஐந்தொழில்களை எப்போதும் செய்பவன். அவனுக்கென்று தனியே பௌதிகங்களால் ஆன உடல் இல்லையாயினும் மந்திரங்களையே தனது உடலாகக் கொண்டவன்; அவற்றுள் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், ஸத்யோஜாதம் என்னும் ஐந்தும் அவனுக்கு ஐந்து முகங் களாகவும் உடலாகவும் கொள்ளப்படுகின்றன. பொதுவாக ஆகமங் களில் சிவபெருமான் இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்று நிலைகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவையே பின்னும் சக்தன், உத்யுக்தன், பிரவிருத்தன் என்றும் கூறப்படுகின்றன.

*1 शैवागमेषु मुख्यं पतिपशुपाशा इति क्रमात् त्रितयम् । तत्र पतिः शिव उक्तः पशवो ह्यणवोऽर्थपञ्चकं पाशः । (தத்துவப்பிரகாசம், 5) *2नित्यः स्वभावविमलः सर्वज्ञः सर्वकृच्चेशः । (தத்துவஸங்கிரஹம், 48) *3चिद्घन एको व्यापी नित्यः सततोदितः प्रभुः शान्तः । (தத்துவப்பிரகாசம், 1)

பசு என்றழைக்கப்படும் ஆன்மாவானது பதியைப் போலவே என்றும் உள்ள பொருள்; சுத்த அவத்தை எனப்படும் முத்தி நிலையில் சிவபெருமானுக்குச் சமமாக அறிவு, செயல் ஆகிய பேராற்றலைக் கொண்டது. ஆயினும், சகல அவத்தையாகிய இப்பூவுலகில் ஆணவம், கருமம், மாயை என்னும் மும்மலங்களினால் அதன் பேராற்றல் மறைப்புண்டு சிற்றறிவும், செயல் திறனில் குறைபாடும் உடையதாகி இப்பூதவுடலே தனது இருப்பிடமாகக் கொண்டு இவ்வுலகில் பிறந்து சிவபெருமானது கருணையினால் தனது கருமங்களுக்கேற்ப இன்பதுன்ப நுகர்ச்சியடைகிறது. ஆணவமலம் பக்குவமடையும் போது சிவபெருமானின் அருட்பேராற்றல் அவ்வான்மாவின் மீது விழ, குருவின் அருட்துணையினால் தீக்ஷை என்னும் சடங்கை மேற் கொண்டு ஆகமங்களில் கூறிய வண்ணம் ஒழுகி முடிவில் மலமறைப்பு முழுதும் நீங்கப்பெற்று சிவபெருமானுக்குச் சமமான தனது உண்மை நிலையை அடைகிறது; அந்நிலையில் சிவபெருமானின் ஆணைக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டிய கட்டாயமும் அவ்வான்மாவுக்கில்லை என மிருகேந்திராகமம் தெளிவாகக் கூறுகிறது*4.

*4  शैवे सिद्धो भाति मूर्ध्नीतरेषां मुक्तः सृष्टौ पुनरभ्येति नाधः । विश्वानर्थान् स्वेन विष्टभ्य धाम्ना सर्वेशानानीरितः सर्वदास्ते । (மிருகேந்திராகமம், ஞானபாதம், 2.29)

எனைய சமயங்களில் கொள்ளப்படும் முத்திநிலையினும் மிக உயர்ந்ததென இதையே அவ்வாகமமும் மற்ற நூல்களும் கூறுகின்றன. தீக்ஷைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வாயிலாகவே மோட்சத்தைப் பெற இயலும் என்று கருதுவதால் சைவசித்தாந்தத்தின் இப்பிரிவைக் கருமாவரண சித்தாந்தம் அல்லது கருமாந்தவாதம் என்று 17 ம் நூற்றாண்டில் தோன்றிய வெள்ளியம்பலவாணத்தம்பிரான் வழங்குகிறார். மதங்கபாரமேசுவரம், மிருகேந்திரம், ஸ்வாயம்புவம் ஆகிய ஆகமங்களையும் அவற்றிற்கு 7-8 நூற்றாண்டிலேயே காச்மீரத்தில் இயற்றப்பட்ட உரைகளையும் நோக்கும் பொழுது இவ்வாகமங்கள் சக்திநிபாதம் உடையவர்கள் தக்க ஆசாரியர்களை அணுகி தீக்ஷை பெற்றுக் கொண்டு அவரவர்களுடைய முத்திப் பேறுக்காக கிரியைகளையும் சரியைகளையும் மேற்கொள்வதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன எனத் தெரிகிறது. தற்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவுவது போல் ஆகமங்கள் பரார்த்தபூஜையான ஆலய வழிபாட்டிற்கு மட்டும் தான் என்ற கொள்கை அக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

அடுத்து, தமிழ்நாட்டுச் சைவவரலாற்றை நான்கு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்:

1. தேவாரகாலம்: சிவபக்தி ஒன்றே அடிப்படை; சிவபக்திக்கு எல்லோரும் உரியர்.

2. பாசுபத-காலாமுக காலம்: இப்பிரிவைச் சேர்ந்த மடங்களும் ஆசாரியர்களும் தமிழ்நாட்டில் பரவி பாண்டிய மன்னர்கள் மற்றும் இராசேந்திரன் ஈறான சோழமன்னர்களுடைய ஆதரவிலும் வளர்ந்து சிவாலயங்களைப் பராமரித்தும் நூல்களியற்றியும் தம் நெறியைப் பரப்பினர்.

3. மத்திய மற்றும் வடஇந்தியாவில் தோன்றிய கோளகி, ஆமர்தகம் முதலிய சைவ மடங்கள் ஆந்திரம் வழியாகத் தமிழ்நாட்டில் பரவிப் பிற்காலச் சோழர்களின் ஆதரவில் வளர்ந்து பல சிவாலயங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டும் பல நூல்களியற்றியும் தம் நெறியைப் பரப்பின.

4. மெய்கண்டார் முதலான சந்தானாசாரியார்களும் அந்த பரம்பரையைச் சேர்ந்த மற்றும் பல ஆசாரியார்களும் தோன்றித் தற்சமயம் திகழ்ந்து வரும் சைவசித்தாந்த நெறியைப் பரப்பி வளர்த்து வருதல்.

மெய்கண்டாரின் சிவஞானபோதம் தோன்றுவதற்கு முன்பே தமிழகத்தில் சைவத்தின் உயர்ந்த அனுபவநிலையை யோக நெறியில் விளக்கும் நூல்களான திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகியனவும், ஆகமக்கருத்துக்களைத் தமிழில் விளக்கும் ஞானாமிர்தம் முதலானவையும் இருந்து வந்துள்ளன. ஆனால் ஞானாமிர்தம் கூறும் தத்துவக்கோட்பாடுகளும், யோகநெறி முறைகளும் தற்சமயம் வழக்கிலுள்ள சித்தாந்த ஆகமநெறி யினின்றும் சிற்¢து வேறுபட்டுக் காணப்படுகின்றன. (அதைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும்) ஆனால் ச்¢வஞானபோதம் ம்¢கச் சிறிய நூல்; தன்னுள் ஆழ்ந்த கருத்துக் களைத் தெளிவாகவும், ஆனால் மிகச் சுருக்கமாகவும், தேவையான வாதத்திறனுடனும் விளக்கியிருப்பது அதன் தனித்தன்மை. பன்னிரண்டு நூற்பாவினுள் பதி, பசு, மலம், ஆகியவற்றின் அடிப் படைக் கருத்துக்களைக் கொண்ட தத்துவவிளக்கமும், மனிதன் தன் சுயநிலையை மீண்டும் அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய சமய நெறிகளும் அடங்கிய ஒரு பெருநூல் என்றால் மிகை யாகாது.

சிவஞானபோதத்திலடங்கிய அடிப்படைக் கருத்துக்கள் இங்கு பெரும்பாலோர் அறிந்ததே; மேலே சுருக்கமாக விளக்கிய ஆகமக் கருத்துக்களினின்றும் சற்று வேறுபட்டு இந்நூல் எவ்வாறு தனித்து வளங்குகிறதென்று (originality) இங்கு நாம் காண்போம். இந்தச் சிறிய ஆய்வு ஆய்விற்குத் முழுதும் சிவஞானபோத நூலை மட்டுமே சார்ந்திருக்கும்.

தொடக்கத்திலேயே தருக்கரீதியில் அநுமானப் பிரமாணத்தின் துணைகொண்டு இவ்வுலகம் ஒரு காரியப் பொருள் என்றும் அதைத் தோற்றுவிக்க முற்றும் அறிந்த கருத்தா ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்றும் சிவஞானபோதம் நிறுவுகிறது. பொதுவாக, பௌஷ்கரம், ஸ்வாயம்புவம் முதலான ஆகமங்களில் இவ்வாறான தருக்கம் காணப்படினும் உலகைத் தோற்றுவிக்க ஈசுவரன் ஒருவன் வேண்டும் என்று அநுமானத்திற்கு அந்நூல்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மேலும், இந்திய தத்துவ வரலாற்றில் நையாயிகர்களே அநுமானப் பிரமாணம் வாயிலாக பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களின் கடவுள் மறுப்புக் கொள் கையை மறுத்து முற்றும் அறிந்த ஈசுவரன் ஒருவன் உளன் என்று நிலை நாட்டினர். பெரும்பாலும் அவர்கள் பாசுபதமதத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்து, சம்ஹாரகாரணனே உலகைச் சம்ஹரித்து அதை மீண்டும் தோற்று விப்பன் என்பதும் சிவஞானபோதத்தின் தனித்தன்மையைக் காட்டு கிறது. முழுமுதற் காரணனாகிய சிவபெருமானின்றும் வேறற்று விளங்கும் சக்தியை இரண்டாம் சூத்திரம் அவனது ஆணை என்று கூறுவதும் இங்கு நோக்கத் தக்கது. வடமொழிச் சிவஞானபோதம் அந்த சக்தியை சிவனது ஆஜ்ஞை என்றும், சமவாயசக்தி யென்றும் குறிப்பிடுகிறது. இதே கருத்தை வாயுஸம்ஹிதையின் பூருவபாகத்தின் 29ம் அத்தியாயத்தில் காண்கிறோம்*5. சிவபெரு மான் ஆன்மாக்களுடன் அதனின்றும் வேறாகவும் தன்னுடைய வியாப்தியால் வேறற்றும்-அநன்யமாக-விளங்குகின்றான் என்பது மற்றொரு முக்கிய செய்தி. ஸத்யோஜ்யோதி முதலிய முந்தைய ஆசாரியர்களின் கொள்கையில் இப்படிப்பட்ட கருத்து காணப்படவில்லை.

*5  अपरे तु पराशक्तिः शिवस्य समवायिनी । तस्माच्छिवः परो हेतुः तस्याज्ञा परमेश्वरी । (வாயுஸம்ஹிதை, பூருவபாகம், 29:33, 35)

ஆன்மாவை மறுக்கும் சாருவாகம், பௌத்தம் முதலிய மதங்களையும், இந்திரியங்களே ஆன்மா என்னும் கொள்கை முதலியவற்றை முன்போலவே தருக்கத்தின் மூலம் மறுத்து பருவுடல், இந்திரியங்கள், சூக்கும உடல் ஆகியவற்றினின்றும் வேறுபட்ட நிலையான அறிவுடைப் பொருளாகிய ஆன்மா என ஒன்று இப்பருவுடலில் குடிகொண்டு உள்ளது என நிறுவுவதும் சிவஞானபோதத்தின் தனிப்பாங்கு. இப்படிப்பட்ட தருக்கமும் ஆகமங்களில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு முக்கிய அம்சம்: சிவபெருமான் சுத்த சித்துப் பொருள்; ஆதலின் ஜடமாகிய இவ் வுலகம் அதன் முன் விளக்கமுறாது; பெருமானும் அதை வேறு பொருளாக (Objective knowledge) அறியமாட்டார். ஆகவே சிற்றறிவுடைய ஆன்மாதான் இவ்வுலகை ஒரு பொருளாக அறியமுடியும். இக்காரணம் பற்றியும் அறிவுடைய ஆன்மா என ஒன்று எல்லோராலும் கொள்ளப்படவேண்டுமென்று சிவஞானபோதம் வலியுறுத்துகின்றது. இக்கருத்தும் பொதுவாக ஆகமங்களில் காணப்படாத ஒன்று.

சிவஞானபோதத்தின் தனித்தன்மையானது விளக்கம் பெறுவது ஆன்மா சதசத்து என்னும் கொள்கையில்; உலககாரணனாகிய சிவபெருமானை சத்து என்றும், ஜடமாகிய உலகை அசத்து என்றும் வழங்குவது ஆகமங்களில் காணப்படவில்லை. மாயை யினின்றும் தோன்றுவதால் உலகானது ஒளியே வடிவானவனும் சித்துமான சிவபிரான் முன் விளங்காது என்னும் பொருளிலே தான் அசத்து என்னும் சொல் இங்கு சூத்திரத்தில் கையாளப்படுகிறது. உலகம் ஜடமெனினும் அது உள்பொருளே, இல்பொருளல்ல என்பது ஆகமங்களின் துணிபு. மாறாக சங்கரரின் அத்துவிதக் கொள்கையில் இக்கருத்து காணப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, சத்தையும் அசத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறன் ஆன்மா ஒன்றிற்கே உள்ளதால் அதைச் சிவஞானபோதம் சதசத்து எனக் குறிக்கிறது. இந்தக் கருத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிலம். இங்கு நாம் ஒரு கருத்தை மனதில் கொள்ள வேண்டும். சதசத்து என்பதால் ஆன்மாவானது ஒன்றுக்கொன்று முற்றிலும் விரோதமான குணங்களை உடையது என்பதல்ல; ஆன்மாவிற்கு இருவிதமான வழிகளில் சென்று அவற்றைப் பற்றும் வாய்ப்பும் குணமும் உள்ளன; ஆகவே சத்தாகிய சிவத்தைப் பற்றினால் அது முழுதும் சத்தாகி ஒளிர இயலும் என்பதே. ஆக இக்கருத்து இந்தியத் தத்துவ வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று; ஏனைய மதங்களும் சமயங்களும் கூறாத ஒன்றும் கூட. ஆன்மாவானது குருவின் திருவருளினால் தாம் ஐம்புலன்களாகிய வேடர்களின் வயப்பட்டுத் தன் உண்மை நிலையை மறந்து உழன்று பற்பல இன்னல்களுக்குட்பட்டோம் என்று உணர்த்தப் பட்டு முடிவில் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறி கிறது. இங்கு ஐம்புலன்களை வேடர்க்கு ஒப்பிடுதல், வேடர் களுடன் வளர்ந்து தன்னுடைய உண்மையான சொரூபத்தை மறந்து வாழ்தல் ஆகிய கருத்துக்களை சங்கராசாரியாரின் பிருஹதா ரண்யக உபநிடத பாஷ்யத்தில் காண்கிறோம்.

சிவபெருமானின்றும் தன்னுடைய வேறற்ற தன்மையாகிய அநன்னிய பாவத்தை உணர்தலாகிய மோட்சத்தை அடைவதற்குச் சாதனம் பஞ்சாட்சரமெனப்படும் ஐந்தெழுத்தை ஓதுதல் ஒன்றே என்று சிவஞானபோதம் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. தீக்ஷை எனப்படும் தனிப்பட்ட கிரியையை இந்நூல் கூறவில்லை. ஆகமங்களிலும் அதைச் சார்ந்த பத்ததிகளிலும் மிக விரிவாக விளக்கிக் கூறப்படும் தீக்ஷை முதலிய சடங்குகளின் முக்கியத்துவத்தை பெருமளவு குறைத்து, தீக்ஷை ஒன்றே முத்திக்குச் சாதனம்*6 என்னும் கருத்தை மாற்றி, பஞ்சாட்சரமந்திரத்தை குருமுகமாகப் பெறுதல், அதை ஓதுதல் ஆகிய எளிய சடங்கையே இந்நூல் கூறுவது இதன் சிறப்பம்சம். தீக்ஷையின் முக்கிய அங்கமாகப் பிராஸாத மந்திரம் எனப்படும் மூலமந்திரத்தையே குருவானவர் சீடனுக்கு உபதேசிக்கவேண்டும் என்று சைவசித்தாந்த ஆகமங்கள் கூறக் காண்கிறோம். இன்னும் மந்திரங்கள் மூலம் சித்திகளைப் பெற்று இவ்வுலக வாழ்வில் பல இன்பங்களையும் அடைவதற்குத் தேவையான சாதக தீக்ஷை முதலியனவும் சித்தாந்த ஆகமங்களில் விளக்கமாகக் கூறப்படுகின்றன; ஆக, ஆகமங்கள் மோட்சத்திற்கு மட்டுமல்லாமல் உலக வாழ்வில் பல இன்பங்கள் பெறுவதற்கும் வழிவகை செய்கின்றன; ஆனால் சிவஞானபோத சாத்திரம் அவ்வாறல்லாமல் மலநீக்கம் பெற்று முத்தி அடைவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது*7. நம:சிவாய என்று வேதம், அதருவசிகை முதலிய உபநிடதங்கள் வழங்கும் ஐந்தெழுத்து சித்தாந்த ஆகமங்களில் கூறப்படவில்லை. ஆனால் சிவபுராணத்தின் ஏழாவது பகுதியான வாயுஸம்ஹிதையின் உத்தரபாகத்தில் தீக்ஷைய்¢ன் போது ஐந்தெழுத்தாகிய பஞ்சாட்சரத்தைக் குரு உபதேசிக்கவேண்டும் என்றும், அதை ஜபிப்பதே மோட்சத்தை அடையும் உபாயம் என்றும் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது. மேலும் இவ்வாயுஸம்ஹிதையில் வேறு எந்த மந்திரமும் கூறப்படவில்லை என்பதும், இரண்டு அத்தியாயங்கள் முழுவதும் பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளும், அதனால் பெறப்படும் எண்ணற்ற நன்மைகளுமே விரிவாக விளக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

*6दीक्षैव मोचयत्यूर्ध्वं शैवं धाम नयत्यपि । (ஸ்வாயம்புவாகமம்)

*7ரௌரவாகமத்தில் சீடனுக்கு ஞானதீக்ஷை கொடுத்தபின் குருவானவர் சிவஞானபோதசாத்திரத்தை உபதேசிக்கவேண்டும் என்று விதி உள்ளதால் இச்சாத்திரம் ஞானதீக்ஷை பெற்ற துறவிகள் மட்டுமே ஓதி உணரத்தக்கது என்று கொள்ள இடமுண்டு.

ஈசுவரனிடத்தில் பக்தி செய்ய வேண்டியதன் அவசியத்தைச் சிவஞானபோதம் விளக்குவது மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆன்மா வானது எவ்வாறு ஐம்புலன்களுக்கும் அதனதன் பொருள்கைக் காட்டி அவற்றை அறியச் செய்கிறதோ அவ்வாறே பரம்பொருளாகிய சிவபெருமான் ஆன்மாக்களிடத்தில் மிக்க கருணை கொண்டு அவற்றை அறியச் செய்கிறார். ஆதலின் இப்படிப்பட்ட அரிய உபகாரத்தைச் செய்யும் ஈசுவரனிடத்தில் பக்தி செய்யவேண்டும்*8 என்று இந்நூல் வலியுறுத்துகிறது.

*8तस्मात् तस्मिन् परां भक्तिं कुर्यादात्मोपकारके ।

முடிவாகச் சிவஞானபோதத்தின் மற்றொரு சிறப்புத் தன்மையை நாம் காண்போம்: முத்தி அடைவதர்குரிய மற்ற சாதனங்களாக சிவவேடத்தை அணிந்து கொள்ளுவதையும், ஆலயத்தில் அரனைத் தொழுவதையும், அங்கு அலகிடுதல் முதலிய சரியைகளையும் சிவஞானபோதம் கூறுகிறது. திருநீறு அணிதல், அதை உடல் முழுதும் பூசிக்கொள்ளுதல், உருத்திராக்கம் அணிதல் ஆகிய சைவ வேடங்கள் சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகிய நூல்களில் மிக விரிவாகவும், சிவபக்திக்கு இன்றியமையாத சாதனங்களா கவும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. சிவபக்திக் கருவூலமான சிவ தருமம் சோழ மன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டு அதைச் சிவாலயங்களில் வக்காணிப்பதற்கு நிவந்தங்கள் பலவற்றை அவர்கள் ஏற்படுத்தியதையும் நாம் கல்வெட்டுக்களால் அறிகி றோம். சிவதருமத்திலும் பஞ்சாட்சர மந்திரத்தின் மஹிமைகளும் பெருமைகளும், சிவவழிபாட்டு முறைகளும், சிவாலயங்கள் அமைத்து அங்குச் சிவபெருமானின் பற்பல லீலைகளை விளக்கும் வண்ணச் சித்திரங்களைத் தீட்டுவது முதலிய பல செய்திகளும் விளக்கப்படுகின்றன*9. இக்கருத்தும் சித்தாந்த ஆகமங்களில் காணப்படவில்லை.

*9சிவதருமம் விளக்கும் சைவநெறி என்னும் தலைப்பில் ஒரு சிறிய ஆராய்ச்சிக் கட்டுரையை ஒ‎‎‎‎ன்று எழுதப்பட உள்ளது.

இவ்வாறாகச் சிவஞானபோதம் சித்தாந்த ஆகமக் கருத்துக் களை மட்டும் உடன்படாமல் வேதம், சிவபக்திக் கருவூலங்களான தேவாரம் முதலியவற்றையும், வாயுஸம்ஹிதை என்னும் மிகச் சிறந்த சைவபக்தி நூலையும் சார்ந்து சிவபக்தி உடையார் யாவரும் எளிதில் பின்பற்றக் கூடிய ஒழுக்க நெறிகளைத் தன்னகத்தே கொண்டு அதற்குத் தேவையான தத்துவக் கோட்பாடுகளை விளக்கும் ஒரு புதிய நூல் எனக் கொள்ளலாம். மேலும், தமிழ் நாட்டில் அதற்குப் பிறகு தோன்றிய நூல்களான சித்தியார், சிவப்பிரகாசம், இருபா இருப•து ஆகியனவற்றையும், பிற்காலத் தில் தோன்றிய உரைகளும் பலவற்றையும் மனத்தில் கொண்டு நோக்கினால் 12 ம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழ்நாட்டுச் சைவ சம்பிரதாயத்தைச் சிவஞானபோத சம்பிரதாயம் எனக் கூறுவது பொருத்தமுடைத்தாயிருக்குமென்று தோன்றுகிறது.

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

 

Related Articles