Home >
[சிவஞான பூஜா மலர் - துந்துபி ஆண்டு - (1985)]
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை - 600 033
முன்னுரை:-
சங்க நூல்களில் அமைந்துள்ள பாடல்கள், அகமும், புறமும் விரவியவை. சங்க நூல்கலான எட்டுத் தொகை என்னும் மாலையில் போர், வீரம், புகழ், கொடை ஆகிய பன்மலர்கள் கஞலுகின்ற ஒரு கதம்ப மாலை ‘புறநானூறு’ ஆகும்.
இந்நூலில் பண்டைத் தமிழ் நிலமாண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், புலவர் பெருமக்கள், வாழ்வியல், நடை, உடை, உணவுப் பழக்கங்கள் ஆகியவை தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இந்நூலைத் தமிழர் வாழ்வின் பெற்றியைக் காட்டும் கண்ணாடி எனலாம். இன்ன பிற சிறப்புக்களையும் தன்னகத்துக்கொண்ட புறநானூற்றுப் பாடல்களில் கூறப்பெற்றுள்ள – பாடப் பெற்றுள்ள – சைவ சமய நெறியைல் கண்டு, காட்ட முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நற்சமயங்களின் நல்லாறு தெரிந்துரை நம்பர் அருள் வேண்டும். ஓரறிவுயிர்கள் மாட்டும் பெருங்கருணைத் திறத்தைப் பெருக்கிக் காட்டிய கண்ணுதற் பண்ணவனின் திருக்கோலப் பொலிவினையும், திருவருட் செயல்களையும் முன்னர்க் காண்பது சாலும்.
சிவபெருமான்:-
பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையான் ஆகிய பரம் பொருளின் திருமுடி திருமார்பு, மற்றும் திருவுருவக் கோலங்கள் ஆகிய இவை குறித்து இலக்கியங்கள் பலபட விதந்து பேசும், சங்கப் பழந்தமிழ்ப் பனுவலாகிய புறநானூறும் அந்நெறியில் நின்று உலகமுதல்வனின் ஒளிமிகும் திருமேனி நலங்களைத் திறலுற விளக்கும்.
கொன்றைக் கண்ணி முடியோன்:-
ஆலவாயழகன் தன்னுடைய சென்னியில் கொன்றை மாலை சூடுவன் என்று திருமுறைகளும் ஞான நூல்களும் பேசும்.
“வன்னி கொன்றைமத மத்தம் எருக்கொடு கூவிளம்,
பொன்னியன்றசடை யிற்பொலி” என
ஆளுடைய பிள்ளையும் (3-7-1)
“தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்” என ஆளுடைய அரசும். (6-8-9)
“பூங்கொன்றைக் கண்ணியான்” என ஶ்ரீகுமர குருபரரும் எடுத்தியம்புகின்ற கொன்றைக் கண்ணி சூடும் பேரழகை, புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து, ஏத்திப் பாடும்.
“கண்ணி கார்நறுங் கொன்றை” (கடவுள் வாழ்த்து)
செஞ்சடை எம்பெருமான்:-
சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மானின் தாழ்ந்த சிவந்த திருச்சடையின் பொலிவினைப் புறநானூறு,
“தாழ்சடைப் பொலிந்த” (கடவுள் வாழ்த்து)
“எரிமருளவிர் சடை” (56)
“தன்றாய்ந்த நீணிமிர்சடை” (166)
என்றெல்லாம் தயந்து பேசும்.
“செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலும்
செஞ்சடையெம் பெருமானே” (6-4-9)
“மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை ” (6-20-10)
எனும் திருமுறைத் தொடர்கள் ஈண்டு சிந்திக்கற் பாலன.
நெற்றிமேலமர் கண்ணினான்:-
முக்கண் உடை வள்ளலின் மூன்றாவது நெற்றிக் கண்ணைப்பற்றித் தமிழ் நூல்கள் பல்லாற்றானும் பாங்குற மொழியும்.
‘காமற் காய்ந்த கண்விளங்கு நெற்றியார்’ என்பர் ஆளுடைய அரசர்.
புரமெரித்த புங்கவனின் பொலிவுடைய நெற்றியில் பூத்த திருக்கண்ணை,
“முக்கட் செல்வர்” (6)
“கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல” (91)
என்றும் ‘புறம்’ அழகுறக் கூறும்.
நீலமணிமிடற் றொருவன்:-
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விடத்தை அகில உலகமும் உய்ய ஐயன் அமுதாக எண்ணி அதனை உண்ண அதுசமயம் ஜகன்மாதா, கழுத்தை இறுக்கிப் பிடிக்க அது கண்டத்தில் தங்கிக் கறைக் கண்டம் ஆயிற்று. இது இறைவனின் அருட்பெரும் திருவுள்ளத்தைப் பெரிதும் காட்டுவதாகும்.
“வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றின்”
“நஞ்சணி கண்டனே”
என்று திருமுறைகள் இவ்வருட்செயலை நயந்து போற்றும்.
கடல் நஞ்சை அமுதாக உண்டமையால் கறையாகிய நீல மணிபோன்ற மிடற்றினை,
“கறைமிடறு ” (கடவுள் வாழ்த்து)
“நீலமணி மிடற்று ஒருவன்” (91)
என்பதாகப் போற்றும் புறநானூறு.
கொன்றையந் தாரோன்:-
உள்குவார் உள்ளத்து உவந்துறையும் சோதியாம் இறைவன் தன் திருமார்பகத்தில் கொன்றை மாலை தரித்தலை,
“காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை” (கடவுள் வாழ்த்து)
எனப் ‘புறம்’ கூறும்.
“குளிர் கொன்றைத் தார் அணிந்து” (6-2-8)
“பைந் தளிர்க் கொன்றையந் தாரார் போலும்” (6-16-9)
என்னும் திருமுறைத் தொடர்கள் மேற்கூறியவற்றோடு ஒப்புடையன.
ஏழை பங்காளன்:-
பலபல வேடமாகும் பரநாரி பாவகனின் அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தை – பெண்ணுருவை ஒரு பாகத்தில் தாங்கிய பெற்றிமையை – புறநானூறு கூறுவது அழகிதாகும்.
“பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று” (கடவுள் வாழ்த்து)
மாதொரு பாகனாம் இயல்பை,
“பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி”
“புனைமலர்ப் பூங்கோதை யிடப்பாங் குறையும்
முக்கட் பரஞ்சோதி”
என்னும் அருள் நூல்கள்.
எருதோறும் எழிலோன்:-
ரிஷபாரூடனாய்ப் பெருமான் காட்சி தரும் திருக்கோலச் சிறப்பைப் புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல்,
“ஊர்தி வால்வெள் வேறே” (கடவுள் வாழ்த்து)
என்றுரைக்கும்.
“விடையேறி”
“போரார்ந்த மால்விடை யொன் றூர்வான் கண்டாய்”
என்னும் திருமுறைப்பாத்தொடர்கள் இக்கருத்தினை முகந்து நிற்பன்.
ஏற்றுக் கொடியோன்:-
…………………………… “வெள்ளேறு
வலவயின் உயரிய” என்று
திருமுருகாற்றுப்படையும்,
“போரேறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான் காண்”
என்று திருமுறையும் இயம்புகின்ற இறைவனின் ஏற்றுக் கொடியைப் புறநானூறு,
“ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப” (கடவுள் வாழ்த்து)
ஏற்றுவலன் உயரிய என்று கூறும் (56)
முப்புரம் செற்ற முதல்வன்:-
மேரு மலையை வில்லாகவும், வாசுகியென்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு முப்புரங்களை எரித்தழித்த இறைவனின் அருட்செயலைப் புறநானூறு அழகுற மொழியும்.
“ஓங்குமலைப் பெருவில் பாம்புஞான கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமர்ரக்கு வென்றி தந்த” (55)
மழுவேந்தும் மணிமிடற்றோன்:-
இறைவன் திருக்கரத்தில் ஏந்துகின்ற மழுப்படையான்று விலக்குதற்கு அரியது என்பதை,
“மாற்றருங் கணிச்சி” (6)
என்று புறநானூறு புஅகலும்,
நீரறவறியாக் கரகம்:-
சிவபெருமான் குண்டிகை கைக்கொண்டு அருந்தவம் இயற்றுகின்றான்; அக்குண்டிகையில் நீர்தொலைவு அறியாது. எந்நாளும் பெருகும் என்னும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து.
“நீரற வறியாக் கரகத்து” (கடவுள் வாழ்த்து)
இவ்வாறாக கணிச்சிக் கூர்மபடை கண்ணுதற் பண்ணவனின் திருமுடி முதலான திருவுருவப் பொலிவினையும் ஊர்தி, கொடி முதலானவற்றையும், விதந்து பேசிய புறநானூறு அவன் கோயிலை வணங்குக என்றும், இறைவன் வாக்கை மறைமொழியாய்க் கொண்டு போற்றுதல் வேண்டும் என்றும் கூறி அவனைப் பலவாறாக விளிக்கவும் செய்யும்.
முக்கட் செல்வர் நகர்:-
திருக்கோயில் என்று இன்று சொல்லப்பெறும் இறைவனின் கோயில், நகர், ஆலயம், நியமம் என்ற சொற்களாலும் வழங்கப் பெற்றுள்ளது.
காரிகிழார் என்னும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்கு உறுதிப் பொருள்களையும், உய்யும் வழிகளையும் கூறும் வகையில் “மன்னா! நீ மூன்று கண்ணை உடைய சிவபெருமானின் கோயிலை வலஞ்செய்வதற்கு உன்னுடைய குடை தாழட்டும்; மற்ற எதற்கும் தாழக்கூடாது” என்று உரைக்கின்றார்.
பணியியர் அத்தை நின்குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (6)
கூற்றின் சீற்றம்:-
மணிமிடற்றோன், பனைக்கொடியோன், புட்கொடியோன், ஓண்செய்யோன் ஆகியோரோடு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை ஒப்பவைத்து அவன் சீற்றத்தில் சிவபெருமானை ஒக்கின்றான் என்பார் நக்கீரர்.
“ஞாலங் காக்கும் கால முன்பில்
தோலா நல்லிசை நால்வர் உள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்” (56)
என்றுரைப்பார்.
முதல்வன் வாக்கு:-
ஆராய்ந்த, மிக நீண்ட சடையினையுடைய அரனின் வாக்கினை விட்டு நீங்காது அறமொன்றையே பெரிதாகக் கருத வேண்டும் என்னும் கருத்தமைய,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
என ‘புறம்’ பேசுவது சிறப்புடையது.
ஒருவன் என்னும் ஒருவன்:-
இறைவன் ஒன்றானவன். உலக முதலானவன்; உலகிலுள்ள அத்தனைப் பொருட்களுக்கும் உடையான் அவன், எனவே பெருஞ்செல்வன் என்பதைக் கருத்தில் கொண்டு அவனை,
‘முக்கட்செல்வன்’ என்றும்,
‘நீலமணிமிடற் றொருவன்’ என்றும்,
‘முதுமுதல்வன்’ என்றும்
அன்புடன் அழைக்கும்,
‘அவன்அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்’
எனும் ஞானசாத்திரக் கருத்து ஈண்டு ஒப்புநோக்கற்குரியது.
நீலமேனி வாலிழை பாகத்துச் சிவபுரம் பொருளைப் பலவாறாகப் பல நிலைகளில் பாடிப்பரவிய புறநானூறு, பரம்பொருளின் அம்சமாகிய முருகப் பெருமானையும் உரைக்கும்.
நெடுவேள்:-
முருகன் நானிலத்துள் குறிஞ்சிக் கிழவனாகக் காக்கின்றமையைச் ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ எனத் தொல்காப்பியம் கூறும். சங்க இலக்கியங்களுள் முருகாற்றுப் படை முழுமையும் முருகனைப் பாடுவது.
புறநானூறு, முருகப் பெருமானின் தோற்றப் பொலிவினையும், அருட்செயல்களையும், ஆற்றல் திறத்தையும் அழகுதமிழில் கூறும்.
முருகப்பெருமான் சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும் ஆகியவற்றின் வழியே வெளிப்பட்டு நிற்பதாக முருகாற்றுப் படை மொழியும், பெருமானின் திருக்கோயில் சிறப்பை,
“………………………. தாழ்நீர்
வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேன் நிலைஇய காமர் வியந்துறை” (55)
என்றும்,
“அணங்குடை முருகன் கோட்டத்து” (299)
என்றும் ‘புறம்’ கூறும்.
‘பவளத் தன்ன மேனி’ உடையன் என்று குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து குன்றமர் கடவுளைப் போற்றும். புறநானூறும் அவன் சிவந்த நிறமுடையவன்; மயிலை ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டுள்ளான் என்னும்.
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும் (56)
சேவலங் கொடியோன் கடம்பமாலை சூடுபவன்; அவன் பகைவரை அழிக்கையில் மிகவும் சனங்கொண்டு போரிடுவான்; அவன் சூருடலங் கீண்ட சுடர் வேலோன் என்று அவன் பண்புகளை,
‘கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்’ (23)
‘முருகற் சீற்றத்து’ (16)
‘சூர்நவை முருகன்’ (23)
எனப் பாராட்டும்.
மலையுறை மக்கட்கு மனங் கொண்ட முதல்வன்சேய்; அவர்கள் மழைவேண்டின் அவனைப் பரவுவர்; அவன் அவர்களைக் காப்பவன்; அவனுக்குப் பூஜை இடுகையில் பூஜை செய்வோன் உடம்பில் எழுந்தருளுவான்; வாக்கருள்வான், அவன் நினைத்தை முடிக்கும் ஆற்றலுடையவன், அவனைச் சுற்றியுள்ளன் அவன் கணங்கள் என்னும் கருத்துக்களமைய,
“ஈர்ந்தண் சிலம்பின் இருள்தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமை” (158)
“மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்” (143)
“முருகுமெய்ப் பட்ட புலைத்தி போல” (259)
“முருகொத் தீயே முன்னியது முடித்தலின்” (56)
“கார்நறுங் கடம்பன் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்தன்ன” (23)
என்ற புறப்பாட்டுத் தொடர்கள் காணப்படுகின்றன.
போர், வெற்றி, வீரம், புகழ் கொடை முதலியன பற்றிப்புகலும் நூலாக இருந்தபோதிலும் பரவலாகச் சமய நெறிச் செய்திகளையும் கூறுகின்றது புறநானூறு. அவற்றுள் சைவம் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் கண்டோம். அடுத்து வரும் ஆண்டு மலர்களில் இன்னும் விரிவாகவே இச்செய்திகளைக் காணத் திருவருள் துணை நிற்பதாக.
-சிவம்-