logo

|

Home >

articles >

kasi-nannagar-kalambagam-jayalakshm

காசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam

எஸ். ஜயலக்ஷ்மி


     முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட் களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக்கின்றன.

 

உறுப்புகள்

     மதங்கியார், பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார், என்னும் உறுப்புகள் கலம்பகத்தில் அமைந்திருக்கின்றன. மதங்கி என்பவள் வாள் சுழற்றி ஆடுபவள். பிச்சி யென்பவள் சிவ வேடம் புனைந்து வருபவள் . கொற்றியார் வைணவ வேடம் பூண்டவள். இப் பகுதியில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளைச் சொல்லி சிலேடையமைப்பார்கள் புலவர்கள்.

 

     இவை தவிர மறம், குறம், சம்பிரதம், சித்து , களி ஊர், அம்மானை. ஊசல், தூது, பாணாற்றுப்படை யென்னும் உறுப்புகளும் கலம்பகங் களில் இடம் பெறும்.

 

மறம்

     மறம் என்பது மறச் சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை, ஒரு மன்னன் மணம் பேசி விடுக்க, அத்திரு முகத்தைக் கொண்டு வந்த தூதனை அம் மறச்சாதித் தலைவன் சினமுற்றுக் கூறுதல் மறம். குறத்தி குறி சொல்வது குறம்.

 

சம்பிரதம்

     பிறரால் செய்ய முடியாத செயல்களைத்தான் செய்வது போல ஒருவன் கூறுவது சம்பிரதம்.

 

சித்து

     இரசவாதம் செய்யும் வல்ல மையுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக் கொள்வது சித்து. இதில் இரசவாதம் சம்பந்தமான பொருள் தோன்றுவதோடு இயல்பாக உள்ள பொரு ளும் தோன்றும்படி அமைக்கப் பெற்றிருக்கும். இச் செய்யுட்களில் ‘அப்பா” என்ற விளி வரும். பாட்டு டைத் தலைவனுடைய ஊரைச் சிறப்பிப்பது ஊர். மகளிர் அம்மானை ஆடுவதையும் ஊசலாடுவதை யும் விவரிக்கும் செய்யுட்கள் அம்மானை ஊசல் ஆகும்.

 

     தலைவி கிளி, அன்னம், குருகு, வண்டு இவற்றைத் தலைவனிடம் தூதாக விடுத்துத் தன்  காதலைத் தெரிவிப்பது தூது.

 

காப்பு

     குமரகுருபரர், காசிக்கலம்பகம் பாட விநாயகரை வேண்டுகிறார். யானை முகத் தோனை ஒரு யானையாகவே பாவித்துப் பாடுகிறார்.

 

     யானை தனது தளையை (கட்டு) அறுக்கும். கடலைக் கலக்கும். பாகன் கட்டும் போது மீண்டும் தளைப்படும். அதேபோல் விநாயகரும் நமது பாசத்தளைகளை அறுப்பார். நமது பாவங்களாகிய கடலைக் கலக்குவார். பக்தர்களின் அன்பாகிய தளை யில் கட்டுப்படுவார். உமாதேவி அளித்த விநாயகர் என்னும் யானை என் உள்ளத்தில் வந்து அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

 

வாழ்த்து

     விநாயகப் பெருமானை வேண்டிய பின் விசாலாக்ஷி சமேதராகக் கோயில் கொண்டிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்துகிறார்.

 

     கடல் சூழ்ந்த நிலமகளுக்கு அணிகலனாக விளங்கும், மேகம் பொழியும் காசி நகரில் தேவ தச்சனாகிய விசுவகர்மா செய்த, விண் ணைத் தொடும் விமானத்தின் கீழ் சிற்றிடையும் பெருந்தடங் கண்ணும் கொண்ட விசாலாக்ஷி அம்மையோடும் சடாமுடியில் கங்கையும் விளங்க    வீற்றிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்து கிறார் குமரகுருபரர்.

 

        நீர்கொண்ட கடலாடை நிலமகளுக்கு அணியான

        கார்கொண்ட பொழில் காசிக் கடிநகர் குளிர்தூங்க

        இடமருங்கில் சிறுமருங்குல் பெருந்தடங்கண் இன்னமிர்தும்

        சடைமருங்கில் நெடுந்திரைக்கைப் பெண்ணமிர்தும் தலைசிறப்பக்

        கண்கதுவு கடவுண்மணி தெரிந்தஅமரர் கம்மியன்செய்

        விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின்மிசைப் பொலிந்தோய்!

        வரையாது கொடுத்திடும்நின் வள்ளன்மை வாழ்த்துதுமே.

என்று முதலில் வாழ்த்துப் பாடுகிறார்.

 

ஐயன் கருணை ப்ரணவ உபதேசம்

     பெருமானே! நீர்மேல் எழுத்து என்று இகழப்படும் இவ்வுடலை நீத்தவர் களுக்கு நீ ப்ரணவத்தை உபதேசிக்கிறாய். (காசியில் இறப்பவர்களுடைய செவியில் ஈசன் ப்ரணவத்தை உபதேசிப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது.)

 

     ஐயன் அணிவதோ எலும்பு மாலை. உடுப்பதோ புலித்தோலாடை. ஆனால் அவர் அடியார்கள் முன் நான்முகனும் திருமாலும் அல் லவா பணிந்து நிற்கிறார்கள்! பெருமானே! முடை நாற்றம் வீசும் இந்தப் புழுக்கூடான உடலை உனக் குக் காணிக்கையாக அளிக்கிறோம். ஆனால் அண் ணலே! நீ அடியார்களுக்கு அளிப்பதோ ஆனந்தப் பெருவாழ்வை யல்லவா?

 

     பலகாலமாக நோற்று அருந் தவம் செய்தவர்களும் பெறுவதற்கரிய முக்தியை எலும்பு உடலைக் கொண்ட நாங்களும் பெறுவது என்ன வியப்பு! என்று இறை வனின் கருணையை வியக்கிறார்.

 

       என்புஅணிவது உடுப்பது தோல்

       எம்பிரான் தமர்கள்அவர்முன் பணியும்

       பேறுடையார் திசைமுகனும் முகுந்தனுமே

       செடிகொண்ட முடைப் புழுக்கூடே

       சிற்றடியோம் இடுதிரை மற்றுஅடிகள்

       அடியார்க்களிப்பது ஆனந்தப் பெருவாழ்வே.

என்று பெருமிதம் கொள்கிறார்.

 

பிச்சியார்

     பிச்சியார் என்பவள் சிவ வேடம் பூண்டு வருபவள். இவள் சிவச் சின்னத் தோடு சூலமும் ஏந்தி யிருப்பாள். இவள் சொல்வது போல் கங்கை, காசி, பெருமானின் புகழைப் பாடுகிறார் புலவர்.  

 

     கண்ணில் படும் நதிகள் எல்லாம் கங்கையாகி விடுமா? அந்த நதிக் கரை யிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா? மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா? என்னுடைய ஆசையெல்லாம் என்ன தெரியுமா? இந்த உயிர் போகும் போது காசியிலுள்ள மணிகர்ணிகையில் உயிர் போக வேண்டும் என்பதே. ஏன் தெரியுமா? இங்கு தானே விசுவநாதர் இறப்ப வர்களின் செவி யில் ப்ரணவ மந்திரத்தை உபதே சிக்கிறார்! இந்தப் பேற்றைப் பெற்று விட்டால் அப்பு றம் அந்த சிவனைப் போல் பேயோடு ஆடினாலும் கவலையில்லை.

 

          காணும் காணுநதிக ளெல்லாம் புனற்கங்கையே

                         அங்குள்ள தெய்வம் யாவையும்

          தாணு எங்கள் அகிலேசரே மற்றைத்தலங்கள் 

                         யாவும் தடமதிற் காசியே

          பூணும் ஆசை மற்றொன்றே உடல்விடும்

                         போதுநன் மணிகர்ணிகைப் பூந்துறை

          பேணுமாறு பெற வேண்டும் அப்புறம்

                         பேயோடு ஆடினும் ஆடப் பெறுமே.

என்று ஆசையை வெளிப்படுத்துகிறார்.

 

பிரமன் ஏவலாள்

     குமரகுருபரர் அடியார் களுக்கு ஒரு வழி சொல்கிறார். அடியவர்களே நீங்கள் முக்தி பெற, காடு சென்று காய்கனி தின்று தவம் செய்து முக்தி பெற வேண்டாம். ஒரு எளிய வழி சொல்கிறேன். அருள்தரும் காசித்தலம் சென்று மரணமடையுங்கள். உங்களுக்கு வேலை செய்யும் சிறுவனாக பிரமதேவனே வருவார்! என்கிறார்.

 

           செயலாவது ஒன்றில்லை வாளாநெடுந்துயில் செய்யும்உங்கள்

           பயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே!

 

அம்மை படும் பாடு

     குமரகுருபரருக்கு விசாலாக்ஷி அம்மையின் நிலையை எண்ணி பரிதாபமும், ஐயனின் சாமர்த்தியத்தை நினைத்துக் கிண்டலும் தோன்றுகிறது.

 

     ஐயன் தன்னை அண்டி வந்த அடியார்களுக்கெல்லாம் முக்தி என்ற பண்டா ரத்தையே (சரக் கறை) திறந்து விடுகிறார். வாரி வாரி வழங்குகிறார். ஆனால் அனந்தகோடிப் பிள்ளை களைப் பெற்ற உலகநாயகியான விசாலாக்ஷி அம் மைக்கோ குடும்பம் நடத்தக் கேவலம் இரு நாழி நெல் மட்டும் கொடுக்கிறாரே. அது மட்டுமா அந்த இரு நாழி நெல்லில் 32 தருமங்களையும் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறாரே! இது என்ன நியா யம்? என்று அம்மைக்காக வக்காலத்து வாங்குகிறார். மேலும் ஐயன் அடியார்களுக்கு எவ்வளவு அனுக் கிரகம் செய்கிறார் என்பதையும் புலப்படுத்துகிறார்.

 

        சிலர்க்கு முக்திச் சரக்கறையைத்

                திறந்து கொடுத்து அனந்தகோடிப்

        பிள்ளைகள் பெற்றுடைய பெருமனைக்

                கிழத்திக்கே குடும்பம் பேணுகென்னா

        உள்ளபடி இருநாழி கொடுத்துஅதில்

                எண்நான்கு அறமும் ஓம்புகென்றார்

        அள்ளல் வயற்காசி ஆண்தகையார்

                பெருந் தகைமை அழகிதாமே.

என்று ஐயனைப் பழிப்பது போல் புகழ்கிறார்.

 

தேவர்கள் திண்டாட்டம்

     காசித்தலத்தில் இறந்த பலகோடி உயிர்கள் சாரூபம் பெற்று விடுகின்றன வாம்! சாரூபம் பெற்ற உயிர்களோடு விசுவநாதப் பெருமானும் சேர்ந்து இருக்கும் போது, முக்கண்ணும், திருக்கரத்தில் அக்கினியும் இடப்பக்கத்தில் உமை யம்மையும், சடையில் சந்திரனும் கொண்ட பெரு மானை வேதமும், திருமாலும். தேவர்களும் கூட பிரித்து அறிந்து கொள்ள முடியவில்லையாம்! ஏன் எட்டுக் கண்களை யுடைய பிரமதேவனாலேயே கூடக் கண்டு பிடிக்க முடிய வில்லையே! என்று தேவாதி தேவர்களின் திண்டாட்டத்தை விவரிக்கிறார்.

 

சிற்றுயிர்கள் கொண்டாட்டம்

     அவிமுத்தம் என்றழைக் கப்படும் காசிமாநகரில் இறந்த புழு பூச்சி போன்ற சிற்றுயிர்களும் கூட சாரூபம் பெற்று விடுகின்றன வாம்! அவை சாரூபம் பெற்ற ஆனந்தத்தில் தம்மைப் படைத்து அளித்த தேவர்களை நோக்கி, “தேவர்களே! நீங்கள் முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். நாங்கள் சாரூபம் பெற்று உங்களைவிட மேம்பட்ட நிலையை அடைந்து விட்டோம்! என்று தோள்கொட்டி ஆரவாரிக்கின்றன. புழுவும் பூச்சிகளும் கூடக் காசியிலே இறக்க சாரூபம் பெறுகின்றன.

 

ஊசல்

     பெண்களை ஊசல் ஆட அழைக்கிறார் குமரகுருபரர். பெண்களே! தொண்டு கள் எதுவும் செய்யாமலேயே, மலர்களால் அர்ச்சனை எதுவும் செய்யாமலே கூட இத்தலத்தில் இறக்கும் உயிர்களுக்கு சாரூப பதவி நல்கும், யானைத்தோல் போர்த்த ஐயன் வீற்றிருக்கும் காசி நகரத்தின் வளத்தைப் பாடி ஊசல் ஆடுங்கள் என்கிறார்.

 

நெஞ்சுக்கு ஆறுதல்

     குமரகுருபரர் தன் நெஞ் சுக்கு ஆறுதல் சொல்வது போல நம் அனைவருக்கும் ஆறுதலும் அறிவுரையும் சொல்கிறார்.

 

   "நெஞ்சே! இறுதிக் காலத்தில் எருமையில் ஏறி யமன் வருவானே என்று அஞ்ச வேண்டாம். ஒரு வழி சொல்கிறேன் கேள். மதுரை யில் வந்திக் கிழவியின் பிட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனால் பிரம்படி பட்ட உமை பங்கனைத், தாமரை மலர்கள் நிறந்த வயல்களை யுடைய காசி நகரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் போற்றி அவன் அடிகளில் அஞ்சலி செய். அவனடியைப் பற்றினால் கூற்றுவனுக்கு அஞ்ச வேண்டாம்.

 

     கூற்றுஅடிக்கு அஞ்சிக் குலையும் நெஞ்சே

     அஞ்சல் காசிச்சிவக் கொழுந்தைப் போற்று

     அடிக்கு அஞ்சலிசெய் பற்றுவேறு புகல்இல்லையே.

 

கங்கையா கருங்கடலா?

     காசியில் ஓடும் கங்கை யாற்றில் மங்கையர்கள் நீராடும் போது அவர்கள் பூசியிருக்கும் கஸ்தூரிக் குழம்பு கரைந்து கங்கை கருங்கடல் போல் காட்சியளிக்கிறதாம்! இந்தக் கங்கைக் கரையிலே தான் வேதங்களின் சிரசிலும் ஐந்து புலன்களையும் அடக்கியவர்களின் உள்ளத்தி லும் குடியிருக்கும் விசுவநாதப் பெருமான் விசா லாக்ஷி அம்மையோடு காசி மாநகரில் வீற்றிருக்கிறார்.

 

குருகு, கிளி, அன்னம் தூது        

     புலித்தோலை ஆடையாக அணிந்து, காசிநகரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனிடம் காதல் கொண்ட ஒரு தலைவி, தன் தவிப்பைச் சொல்வதாக இப்பாடலில் கற்பனை செய்கிறார் குமரகுருபரர். தானே ஒரு தலைவியாகித் தன் காதலைப் பேசுகிறார். தன் காதலைப் பறவைகளிடம் சொல்லி தூது விடுகிறாள் தலைவி, 

 

     "குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணி வதை விட்டு விட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதே போல சுகத்தை விடுத் தாள் என்றும் சொல். சுகம் என்றால் கிளி என்றும் பொருள். இவள் தன் தேக சுகத்தை விட்டு விட்டாள் என்றும் சொல்லலாம். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் சரீர சுகம் பொருட்டில்லையாம்.

 

     அடுத்ததாக அன்னத்தை தூது விடுக்கிறாள் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னமானது நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உண்ணும். அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள். பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன் பொருட்டு விட்டு விட்டாள் என்று சொல். அன் னத்தை தூதாக விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை!

 

         குருகை விடுத்தாள் எனக்குருகே கூறாய்

                சுகத்தை விடுத்தாள் என்று

        அருகு வளருஞ் சுகமே சென்றுரையாய்

                நிறைநீர் தெளிந்து பால்

        பருகும் அ(ன்)னமே அ(ன்)னம் விடுத்தபடி

                சென்றுரையாய் படிவர் உளத்து

        உருகு பசும் பொன்மதில் காசியுடையார்

                வரித்தோ லுடை யார்க்கே.

என்று நயம் பட தூது விடுக்கிறார்.

 

யம பயம் இல்லை

      மீண்டும் ஒருமுறை யம பயம் இல்லை என்று சொல்கிறார்.

 

        வேதத் துரகர் விரகர் அகிலேசர்

        பாதத்து உரகர் பரிபுரத்தார்—நாதர் இவர்

        சேவடிக்கு அண்டாரேதிறம் பிழைத்துத் தென்புலத்தார்

        கோ அடிக்கு அண்டாரே குலைந்து.

என்று யமபயம் தீர்க்க வழி சொல்கிறார்.

 

புலவர்களுக்கு அறிவுரை

     நிறைவாக தன்னைப் போன்ற புலவர்களுக்கும் முக்தியடைவதற்கான வழியைக் காட்டுகிறார்.

 

     செந்நாப் புலவர்களே! முக்தி பெறுவதற்கான உபாயத்தைக் கேளுங்கள். என்னு டைய புன்மொழிகள் வேப்பம் பழமும், கடுக்காயும் போல கசப்பை உடையனவாக இருந்தாலும் அதை யும், தேனைப்போலப் பாவித்து நான் சொன்ன புன்மொழிகளையும் முக்கண் ஐயன் திருச்செவி மடுத்து எனக்கருள் செய்தான். அதனால் முழுநலம் கொடுக்கும் முக்தி பெறுவதற்குரிய வழியைக் கேளுங்கள். நீங்கள் இன்னிசைப் பாடல்கள் புனைந்து அப்பரமனை நாத்தழும்பேற ஏத்துங்கள்.

 

         வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்

         தேத்தமிழ் தெரிக்கும் செந்நாப் புலவீர்!

         செந்நெறி வினவு திராயின் இன்னிசைப்

         பாத்தொடுத்து அடுத்த பரஞ் சுடரை

         நாத்த ழும்பிருக்க ஏத்து மினீரே.

 

குமரகுருபரர் சொல்லும் உபாயத்தை கைக் கொண்டு நாமும் பரஞ்சுடரை நாத்தழும்பேறப் போற்றுவோம்.

- சிவாயநம -

             

       

Related Articles