logo

|

Home >

articles >

kashmira-shaivam

காச்மீர சைவம்

மும்மொழிக்கொண்டல், பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன், எம்.ஏ., எல்.டி.,

ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர், பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் (ஒய்வு)

 

[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

--------------------------------------------------------------------------------------------------------------------------

      சைவம் மிகத் தொன்மையான ஒரு சமயம். இன்று வழங்கும் சைவம் மூன்று பிரிவுகளைக் கொண்டது (1) ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னாட்டில் நிலவி வரும் சைவசித்தாந்தம், (2) கருநாடகத்தில் பெரும் பகுதியில் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் வழங்கிவரும் வீரசைவம், (3) காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் நிலவிவரும் ‘திரிகம்’ அல்லது ‘பிரத்யபிஜ்ஞாதரிசனம்

      சைவசமயங்கள் வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாண நூல்களாகக் கொண்டுள்ளன. வேதம் பொது நூல் சிவாகமம் சிறப்பு நூல். சைவசித்தாந்திகள் 28 சிவாகமங்களைப் பிரமாணமாகக் கொள்கின்றரன். சைவசித்தாந்தம் பதி (சிவன்), உயிர், பாசம் ஆகிய மூன்றும் என்றும் உள தனித்தனிப் பொருள்கள் என்ற த்வைதக் கொள்கையைப் பின்பற்றுகிறது. வீரசைவமும் காச்மீர சைவமும் அத்வைதக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. எனினும் மூன்றுக்குமே சிவனே பரம் பொருள். காச்மீரசைவர் 64 அத்வைத தந்திரங்களை (ஆகமங்களை) ஏற்றுக் கொண்டுள்ளனர். இவற்றுள் காமிகம், மகுடம், போன்ற ஆகமங்களை சைவ சித்தாந்தம், காச்மீரசைவம் ஆகிய இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் தத்தம் கொள்கைக்கேற்ப விளங்கிக்கொள்கின்றனர்.

      காச்மீர சைவம் தோன்றுவதற்கு (9-ம் நூ.) முன்பு த்வைத சைவமும் பெளத்தமும் அங்கே வேரூம்றியிருந்தன. ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டில் காஷ்மீரத்திற்கு விஜயம் செய்தபோது த்வைதசைவத்திற்கு அத்வைதத் திருப்பத்தைத் தந்திருக்ககூடும் என்று ஊகிப்பதற்கு இடமுண்டு.

      சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது போன்றே பதி, பசு, பாசம் என்ற முப்பொருளை ஏற்றுக்கொண்டுள்ள காச்மீர சைவம் ‘திரிகம்’ என்பது பொருந்தும்.

      இந்த ‘திரிக தரிசனம்’ மூன்று பிரிவுகளைக் கொண்டது.

      1.     ஆகம சாஸ்திரம்: இதில் ஞானம், கிரியை இரண்டும் இடம்பெறுகின்றன. மாலினீவிஜயம், மிருகேந்திரம், மதங்கம் முதலான ஆகமங்கள் ஆளப்படுகின்றன. இச்சமயத்தின் முதனூல் ‘சிவசூத்திரங்கள்’. இவை ஒருமலைப்பாறையில் பொறிக்கப்பட்டிருந்தனவாகவும், வசுகுப்தர் (9-நூ) என்ற ஆசாரியரின் கனவில் தோன்றிய சிவபெருமான் இவற்றை அத்வைதரீதியில் விளக்குமாறு அவரைப் பணித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

       2.     ஸ்பந்த சாஸ்திரம்: ஆகம சாஸ்திரத்தை விளக்க வந்தது. இதன் முதல் நூல் ‘ஸ்பந்த சூத்திரங்கள்’ இவற்றை வசுகுதர் எழுதினார் என்று ஒரு சாராரும் கல்லடர் விருத்தியுடன் இதை எழுதினார் என்று ஒரு சாராரும் கூறுவர்.

      3.     பிரத்யபிஜ்ஞா சாஸ்திரம்: இது தத்துவ விளக்கமாக அமைந்தது. தருக்க நெறியிலே தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. வசுகுப்தரின் மாணாக்கர் சோமானந்தர் ஸ்வபக்ஷம் பரபக்‌ஷம் என்ற முறையில் இதை விளக்கிச் செல்கிறார். இவரது நூல் ‘சிவதிருஷ்டி’ என்பதாகும். இவரது மாணாக்கர் உத்பலர் ‘ஈசுவர பிரத்யபிஜ்ஞா’ என்ற நூலை ஆக்கியவர். அபிநவ குப்தரின் தந்த்ரலோகம், பரமார்த்தசாரம், க்ஷேமராஜரின் பிரத்யபிஜ்ஞாஹ்ருதயம் அகியவை ஒரு சில முக்கியமன நூல்கள்.

பதி அல்லது சிவன்

      சிவன் எக்காலத்தும் ஐந்தொழில்களை (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எப்போதும் செய்துகொண்டே இருக்கிறான். சிவனும் சக்தியும் இணை பிரியாதவை. பல்வேறு உருவும் வண்ணமும் தன்மையும் கொண்ட இப்பிரபஞ்சப் பொருள்கள் பரமேசுவனுடைய சக்தியால் ஆக்கப்பட்டன. இப்பிரபஞ்சம் அவனினின்றும் வேறுபட்டதல்ல. அவனுடைய மறு உருவமே இப்பிரபஞ்சம். ஆகவே சங்கரமதம் கூறுவது போல் உலகம் வெறும் தோற்றமல்ல. சிவனின் மறுபிரதியானதால் அவனைப் போல உண்மைப் பொருள். பிரபஞ்சத் தோற்றமும் ஒடுக்கமும் அவனுடைய லீலை.

      ஒரு பொருளைக் காணும் போது அதுபற்றிய அறிவைப் பெறுகிறோம். அது உயிரின் ஞானசக்தியின் விளைவு. அது நல்ல பொருளானால் அதன் மீது விருப்பு ஏற்படுகிறது. அது உயிரின் இச்சாசக்தி. அதைப் பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. அது உயிரின் கிரியாசக்தி மாயை வயப்பட்டுள்ள உயிரிடத்தில் இம்மூன்றும் குறுக்கப்பட்டிருக்கின்றன. பரமேசுவரனிடத்தில் இம்மூன்று சக்திகள் பரிபூரணமாக இருக்கின்றன. அவன் நிர்மலனாக இருப்பதால்.

      அபிநவகுப்தர் பரம்பொருளின் இலக்கணத்தைக் கூறும் போது சுத்தம், சாந்தம், அம்ருதம், சத்யம், பாஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறார். மூன்று சக்திகளோடு கூடிய அவன் சுவயம்பிரகாசனாய் இருக்கிறான்.

      சைதன்ய சொரூபனான சிவன் பிரகாச – விமர்சமயமானவன் என்று கூறுவர். பிரகாச சைதன்யத்திற்கு முக்கிய இலக்கணம் ‘விமர்சம்’ அல்லது ‘ஸ்பந்தம்’ (அசைவு). இது கிரியையைக் குறிக்கும். முத்தொழிலாகிற கிரியையைச் செய்யும்போது அவன் ‘விமர்ச’ மயமாகிறான்.

      ஞானப்பிழம்பாக பிரகாசிக்கின்ற பரமேசுவரன், தன் ‘விமர்ச’ சக்தியான் உயிருள்ள (சித்) பொருளாயும் உயிரில்லாத (அசித்து) பொருளாயும் காட்சி தருகிறான்.

      ‘பிரத்யபிஜ்ஞாஹ்ருதயம்’, என்ற நூலில் க்ஷேமராஜர் கூறுகிறார் – ‘பராசக்தி சுதந்திரத்தன்மை வாய்ந்தது. இச்சக்தி தொழிற்படத் தொடங்கும்போது உலகம் தோன்றுகிறது; தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் போது உலகம் நிலைபேறுடையதாகிறது, தொழில் முடிவுறுகின்றபோது ‘உலகம் ஒடுங்குகிறது’.

      மகேசுவரனும் அவனது சக்தியும் பிரிப்பின்றி இருப்பன என்பதை சிவஞான சித்தியாகும் கூறும் – ‘அருளது சத்தியாகும் அரன்றனக்கு; அருளையின்றித் தெருள் சிவம் இல்லை; அந்தச் சிவம் அன்றிச் சத்தி இல்லை’. இச்சக்திக்கு மூன்று நிலைகள் கூறப்படுகின்றன. அவை பரை, பராபரை, அபரை என்பன. இந்த அடிப்படையில் காச்மீர சைவத்தை ‘திரிகம்’ (முப்பொருள்) என்று கூறுவாகும் உண்டு. பரை என்னும் நிலையில் சித்சக்தியும் ஆனந்த சக்தியும் முழுமையாகக் காணப்படுகின்றன. பராபரை நிலையில் இச்சாசக்தி செயற்படத் தொடங்குகிறது. அபரை நிலையில் இச்சையின் தூண்டுதலால் ஞான சக்தியும் கிரியா சக்தியும் ஓங்கி நிற்கின்றன.

      சிவனும் அவனது சக்திநிலைகளும் சூரியனும் அவன் ஒளிக் கதிர்களும் போல்வன. சூரியன் தோன்றி கதிர்கள் விரியும் போதுதான் உலகிலுள்ள பொருள்கள் விளக்கம் பெறுகின்றன. அவ்வாறு சிவனுடைய சக்திகள் தொழிற்படும் போது பிரபஞ்சமாக அவனே காட்சியளிக்கிறான். இதைத்தான் அவனுடைய விமர்ச சக்தி என்கிறோம். சித்திலும் அசித்திலும் அவன் உலவுவதைத்தான் அவனுடைய ‘ஸ்பந்தம்’ (அசைவு) அல்லது ‘கிரீடை’ விளையாட்டு என்கிறோம். சந்திரபிம்பம் புனித கங்கையில் ஒடுவது போலவும் அழுக்கு நிறைந்து குட்டையில் நிலைத்திருப்பது போலவும் தோன்றினாலும் சந்திரனுடைய இயல்பான ஒளியும் தூய்மையும் கெடுவதில்லை. அதேபோல் மகேசுவரன் மாயாகாரியச் சேர்க்கையால் பல பிறவிகளில் உருக் கொண்டு இன்பதுன்பங்களை நுகர்ந்தாலும் சித்சொரூமனான அவனிடம் எவ்வித மாறுபாடும் நிகழ்வதில்லை. நீரிலிருந்து அலைகள் பரவுவது போல், தீப்பிழம்பிலிருந்து ஜ்வாலைகள் எழுவது போல், ஈசுவரனிடமிருந்தே பிரபஞ்ச வேறுபாடுகள் தோன்றிக் காட்சியளிக்கின்றன.

      சித்சக்தியே தோற்றுவித்தல் காத்தல் ஒடுக்குதல் என்ற முத்தொழிலைச் செய்வதாக சைவர்கள் கூறுவர். காச்மீர சைவம் இம்முத்தொழிலையும் வேறுவகையாக விளக்குகிறது. சித்சக்தி மாயையின் தொடர்பினால் சிதறுண்டு பலப்பலவாகக் காட்சியளிப்பதையே ‘சிருட்டி’ என்பர். சிவனே சீவனாக நின்று ‘நான் மகிழ்கிறேன்’. ‘நான் துயகுறுகிறேன்’ என்று உணரும் போதும் உலகப் பொருள்களை நோக்கி அதனதன் வண்ணம், பருமன் முதலானவற்றைக் கண்டறியும் போதும் ‘நிலைபேறு’ என்னும் தொழில் நடை பெறுகிறது. சிவனருளால் மெய்யறிவு பெற்றபோது புறப்பொருள்களெல்லாம் என்னினின்றும் வேறானவையல்ல, அனைத்தும் எனது வெளிப்பாடே என்று அறியும் போது ‘ஒடுக்கம்’ என்று தொழிலாகிறது. இம்முத்தொழிலையும் செய்யும் சிவசக்தியை நான்காவது – துரியம் – என்பார்கள். இக்கருத்தைக் கீழ்க்காணும் திருமந்திரம் ஒருவாறு சுட்டுவதைக் காணலாம்.

                பரன்எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்

      திரன்எங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்

      உரனெங்கு மாய்உல குண்டு உமிழ்க்கும்

      வரமிங்ஙன் கண்டுயான் வாழ்ந்துற்ற வாறே.   (2590)

 

      அருவமான சீவாத்மாவே கண், மூக்கு, வயிறு, கை, கால் என்ற பல்வேறு உருவும் வண்ணமும் கொண்டு காணப்படுவது போலவே, அருவமான சிவனும் பல்வேறு யோனி பேதங்களாய் பல்வேறு சக்தி உடையனவாய் காணப்படுகிறான். அவனே ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு அறிவோனாய், செய்வோனாய், நுகர்வோனாய் இருக்கிறான்.

உயிர் அல்லது சீவாத்மா

      சிவனே தனது அகண்ட சக்தியை பல்வேறு கூறுகளாக்கப்பட்ட ஞான இச்சா கிரியா சக்திகளாகக் குறுக்கிக் கொள்ளும்போது பல உயிர்கள் என்ற வகையில் காணப்படுகிறான். அவனது இச்சா சக்தி குறுகிய நிலையில் ‘ஆணவம்’ எனப்படுகிறது. அவனது ஞானசக்தி மாயையின் கூறுகளான அந்தக்கரணம். புத்தி, இந்திரியங்கள் ஆகிய உபாதிவசத்தால் ‘மாயை’ எனப்படுகிறது அவனது கிரியா சக்தி கர்மேந்திரியங்கள் வாயிலாகச் சிறு செயல்களைச் செய்தலாகிய ‘கர்மம்’ எனப்படுகிறது. பரமசிவனின் சர்வ கர்த்திருத்துவம், சர்வஜ்ஞத்வம், பூர்ணத்வம், நித்யத்வம், வியாபகத்வம் என்னும் சக்திகள் சீவனோடு தொடர்புள்ள குறுகிய நிலையில் கலை, வித்தை, அராகம், காலம், நியதி என்ற தத்துவங்களாகக் கருதப்படுகின்றன.

      கருமேகங்கள் சூழ்ந்தாலும் புழுதிப்படலம் பரவினாலும் ஆகாசம் அதனுடைய நித்தியத்தன்மையையோ பரந்து கிடக்கும் தன்மையையோ இழப்பதில்லை. எந்த அழுக்கும் படிவதில்லை. வண்ணமும் தோய்வதில்லை. அதே போன்று மாயையின் காரணமாக பிறப்பு, இறப்பு, மூப்பு முதலான மாற்றங்கள் உயிரைப் பற்றி கூறப்பட்டபோதிலும் சிவ சொரூபத்திற்கு எவ்வித இழுக்கும் ஏற்படுவதில்லை. அவன் நித்யனாய் நிர்மலனாய் இருந்து வருகிறான். ஆணவம் முதலான கோசங்களால் சூழப்பட்டிருப்பதால் அச்சிவ சைதன்யதே அணு, ஆன்மா, சீவன், புருஷன் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. பரமேசுவரனின் சுதந்தரி சக்தியாகிற மாயையே உயிரின் நிலையை மேற்கொண்டுள்ள சிவனுக்கு மறைப்பாகப் பயன்படுகிறது. அவனே பசு (உயிர்) நிலைக்குத் தன்னைக் குறுக்கிக் கொள்லும்போது ஞானம், இச்சைகிரியை என்னும் சக்திகள் சத்துவம் ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

      சீவாத்மா என்ற நிலையிலும் நான்கு நிலைகள் உண்டு. சிவனுடைய தோற்றுவித்தல் நிலைபெறச்செய்தல் ஒடுக்குதல் என்ற முத்தொழிலுக்கேற்ப சீவனுக்கு விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகள் உண்டு. இவற்றைக் கடந்த ஆனந்த நிலையே துரிய (நான்காவது) சாந்த நிலையாகும். இதுவே அத்வைத நிலை. சிவசூரியனின் கதிர்களாகிற அருட்சக்தி படிந்த காலத்தில் பெறப்படுகின்ற நிலை இது. பரமேசுவரன் குறுகிய கால வட்டத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு நல்வினை தீவினைகளுக்கேற்ற சீவவடிவில் சிறுபொருளில் நாட்டங்கொண்டு சிற்றறிவால் சிற்றின்பத்தைப் பெற்று, பின்னர் அலைப்புறுகின்ற நிலையினின்று மீண்டு மாயையைக் கடந்த நிலையில் சச்சிதானந்தப் பிரகாசனாய் ஆகிவிடுகிறான்.

பந்தமும் மோக்ஷமும்

      ‘அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம், உயர்மெய்ஞ்ஞானத்தால் அது போவது’ என்று சிவஞானசித்தியார் கூறும். ஒருவன் தன்னைப் பேரரிவும் பேராற்றலும் கொண்டவன் உன்று உணராமல் சிற்றறிவையும் குறைந்த ஆற்றலையும் உடையவனாகக் கருதுவதே ‘பந்தம்’ என்கிறார் அபிநவகுப்தர். அஞ்ஞானத்தை ‘அக்யாதி’ என்றும் கூறுவர். இறைவனே இப்படி ஏன் தன்னை இழிந்த நிலைக்கு உட்படுத்திக் கொள்கிறான் என்ற கேள்வி எழலாம். அதுதான் அவனுடைய சுதந்திரத்தன்மை. உயிராக உலவ விரும்பினால் யார் அவனைத் தடுப்பதற்கு? அப்படி விரும்புவதற்கும் ஆவதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

      மும்மலங்களிலிருந்தும் விடுபட்டு, பிரகாச விமர்ச மயமான ஞான சொரூபியும் சுதந்திரனுமான பரம்பொருள் நானே என்று அறிவதுதான் முக்தி. மோட்சம் என்பது ஏதோ ஒருலகத்திற்குச் செல்வதல்ல. தேசம், காலம், வடிவம் என்ற எல்லைக் கோடுகள் இதற்கு இல்லை. தனது இயல்பான சொரூபத்தை உணரக்கூடிய அறிவைப் பெறுவதே முத்திப்பேறு. பயன் கருதாமல் வினைகளைச் செய்து வந்தாலும் ‘நான் எதையும் செய்பவனல்ல பரமேசுவரனுடைய சுதந்தரி சக்தியே செய்விக்கிறது’ என்று ‘நான் எனது’ என்ற அபிமானமின்றி செயற்படும்போது அவ்வினைப் பயன்கள் அவனைச் சார்வதில்லை. அவனை சீவன் முக்தன் என்கிறோம். உமி நீக்கப்பட்ட அரிசி எப்படி மீண்டும் முளைக்காதோ அப்படி மல நீக்கம் ஏற்பட்ட சீவனுக்கு மீண்டும் பிறப்பில்லை அனைவருக்கும் முக்தி பெறத்தகுதியுண்டு. குலம், ஆசிரமம், பால், திணை, முதலிய பாகுபாடுகளுக்கு இதில் இடமில்லை.

      முக்திநிலை என்பது சீவன் தன்னைச் சிவம் என்று முந்திய நிலையை நினைவுகூர்வதால் (பிரத்யபிஜ்ஞை) ஏற்படுவது. இந்த நிலை நீரில் கலப்பது போலவும் பாலில் பால் கலப்பது போலவும் இருப்பது. இரண்டு என்ற உணர்வு நீங்கி அத்வைத பாவம் ஏற்பட்டு விடுகிறது. விறகில் உள்ள தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கினால் நாம் காண்பது ஒளிப் பிழம்பு தான். மீண்டும் தீ கட்டையில் புகுவதில்லை. அது போல் ஞானத்தீயால் மாயா தத்துவங்களாகிற கட்டை எரிக்கப்பட்ட பிறகு தேஜோமயமாய்க் காட்சி அளிக்கும் ஜீவன்முக்தனுக்கு மீண்டும் சரீரத்தில் புகுதல் இல்லை என்று சுவச்சந்த தந்திரம் கூறுகிறது.

      முக்தியடைவதற்கு நால்வகை உபாயங்கள் கூறப்பட்டு உள்ளன.

      1.     ஆணவோபாயம்: இதில் மனம் புத்தி கரணங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்தி தூலதத்துவங்களை சூக்ஷ்ம தத்துவங்களிலும், சூக்ஷ்மதத்துவங்களைப் பரதத்துவத்திலும் லயிக்கும் படிச் செய்யப்படுகிறது. மந்திரஜபம், பிராணாயாமம், இஷ்ட தேவதைகளைப் பூசித்தல் இதில் இடம் பெறுவதால் ‘கிரியோபாயம்’ என்றும் இது சொல்லப்படுகிறது.

       2.     சாக்தோபாயம்: இது மந்திர சக்தியின் வெளிப்பாட்டைக் குறிக்கும். பராசக்தியே பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறது என்ற எண்ணம் (மனனம்) பேத உணர்வினின்று ஜீவனைக் காப்பாற்றுகிறது (த்ராணம்) ஆகையால் மந்திரசக்தி உபாயமாகிறது.

            3.     சாம்பவோபாயம்: ஒருவன் இச்சாமத்திரத்தால் சம்புவின் ஆவேசத்தைப்பெறும் உபாயம். இதில் தியானம் கூடத் தேவையில்லை.

            4.     அநுபாயம்: உபாயம் எதுவும் இன்றி குருவருளும் சக்தி நிபாதமும் உடன் சேர முக்தி கிட்டும். இதைத்தான் திருமூலர் ‘கண்ணிய சேதனன் கண் வந்த பேரருள், அண்ணல் அடிசேர் உபாயம்தாகுமே’ (2421) என்றார்.

- சிவம் -


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Related Articles