logo

|

Home >

articles >

chidambara-rahasiyam

சிதம்பர ரகசியம்

ஓம்

பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஶ்ரீ நடராஜர் ஆலய அமைப்பின் தத்துவார்த்தங்கள் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.

 

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,

87, தம்புசெட்டி வீதி, சென்னை

1920

 

சிதம்பர ரகசியம்

 

      இப்பெரும் பூமண்டலத்துள்ளே எல்லாவிதத்தாலும் மிகச் சிறப்புற்றோங்கி விளங்கும் நம் பரதகண்டத்தில் அனேக சிவாலயங்களும், விஷ்ணுவாலயங்களும், வேறு பலதேவர் ஆலயங்களும் இருக்கின்றன. அவைகள் அனைத்தினும் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தூபி, விமானம், பிராகாரம், கோபுரம் என்னும் இவைகள் ஒரு தன்மையவாகவே காணப்படுகின்றன. இவையன்றி, ஒவ்வொரு ஆலயங்களிலும் அவ்வாலயத்தின் பிரதான தேவதா பிம்பம் கர்ப்பக்கிருகத்திலேயே யிருக்கின்றது. இங்ஙனம் ஒன்றுபோல எல்லா ஆலயங்களும் கட்டப்படுவதற்குச் சில முக்கிய காரணங்கள் உள. அவைகளை இங்கே சிறுபான்மை விளக்கிக் காட்டுவோம்: -

      உலகத்திலேயுள்ள மாந்தரனைவரும் உண்ணோக்காக அகப்பொருள்களை அறிந்துய்யும் ஆற்றல் பெற்றிலராதலால், யாவர்க்கும் தத்தம் சரீரவியல்பு எளிதிலே புலப்படும்பொருட்டு, ஆலயங்கள் செங்கல் கருங்கற்களால் வெளி நோக்காகக் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாலயங்கள் இருதயகமலப் பிரஸ்தாரம் (இருதயகமலத்தை விரித்துக் குறிப்பது) எனவும், சரீரப் பிரஸ்தாரம் (சரீரத்தை விரித்துக் குறிப்பது) எனவும் இருவகைப்படுமென்று ஆகமங்கள் கூறுகின்றன. இவற்றுள், இருதயகமலப் பிறதாரத்தாற் சிதம்பர முதலிய சில ஸ்தலங்களும், சரீரப்பிரஸ்தாரத்தால் வேறு பல ஸ்தலங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதருள்ளததே சொல்லாயும் பொருளாயும் அமைந்துள்ள ஒவ்வொரு வஸ்துக்களும் இருதயகமலப் பிரஸ்தார ஆலயங்களாலும், யோகிகளறிய வேண்டிய எழுவகைத்தாதுக்களின் நிலைமை சரீரப்பிரஸ்தார ஆலயங்களாலும் உருவகமாகக் காட்டப்படும். ஶ்ரீ பஞ்சாக்ஷரத்து ஒவ்வொரு எழுத்தின் பொருளென ஆகமங்களில் ஒரோவழி குறிக்கப்பட்ட அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆநந்தமயம் என்னும் பஞ்சகோசங்கள் சிவாலயங்களிலே ஐந்து பிராகாரங்களாகவும், பிரணவமொழிந்த ஶ்ரீ அஷ்டாக்ஷரப் பொருளெனப் பாஞ்சராத்திரத்தின் ஒரிடத்துக் கூறப்படும் சரீரத்திலடங்கிய ரசம், இரத்தம், மாமிசம், மேதை, என்பு, மச்சை, சுக்கிலம் என்னும் சப்த தாதுக்கள் விஷ்ணு வாலயங்களிலே ஏழு பிராகாரங்களாகவும் இருக்கின்றன. பிரணவங்கட்டிற் சிவமந்திரம் ஆறெழுத்தும், நாராயண மந்திரம் எட்டெழுத்துமாகும். சிலவிடங்களிலே ஆலயங் கட்டுவதற்கு இடம் பொருள் குறைவுபடின், அங்கு தூல சூக்ஷ்ம காரணசரீரங்களைக் குறிக்கும் மூன்று பிராகரங்களேனும், அனைத்திற்கும் பொதுவாக ஒரே பிராகாரமேனும் அமைப்பதுண்டு. ஒவ்வொரு சரீரத்திலும் யோகிகளறிய வேண்டிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, அஞ்ஞை என்னும் ஆறாதாரங்கள் இங்கு முறையே கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நானமண்டபம், அலங்காரமண்டபம், சபாமண்டபமெனக் குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கர்ப்பக்கிருகத்திலும் கமலமுகை போன்ற விமானம் ஒன்றிருக்கும். அதன் உட்புறத்திற்றான் கடவுளுடைய திருவுருவம் அமைக்கப்படும்.

      இனி இருதயகமலப் பிரஸ்தார வாலயங்களிலே இருதயத்திலுள்ள விஷயங்கள் விரித்துக் குறிக்கப்படுமென்று முன்னே கூறியதற்குச் சிதம்ப்ராலயத்தையே திருஷ்டாந்தமாக எடுத்து நிரூபிப்பாம்.

      இச்சிதம்பரக்ஷேத்திர மஹிமை புராணங்களிலே மாத்திரம் புகழப்படுவதன்று. வேதத்தும் தரிசனோபநிடதத்திலே “சிதம்பரம் ஹிருதய மத்தியிலுள்ளது” என்று ஓதப்பட்டிருக்கின்றது. இதனால் இது விராட்புருஷனுடைய ஹிருதய ஸ்தானமென்பது துணிபென்க. அது பற்றியே புராணங்கள், “இவ்வாலயங் கட்டும்பொழுது யோகமுதல்வராகிய ஶ்ரீ பதஞ்சலி முனிவர் சிதம்பர ரகசியமறிந்து அதனை விசுவ கர்மாவுக்கு அநுக்கிரகிக்க, அவன் அவராணையைச் சிரமேற் கொண்டு ஆலயஞ் சமைத்தனன்” என்று கூறுகின்றன. ஓர் மகாயோகியின் சரீரத்தை, வடக்கே தலையும் தெற்கே பாதமுகாம வைத்தி நோக்கின் அதுவும் இவ்வாலய அமைப்பும் ஒத்திருக்கும். இவ் வாலய்த்துள்ளே ஆயிரக்கால் மண்டபம் தலையின் புறத்திருக்கும் ஆயிரவிதமுள்ள கமலமென்னப்படும் மூளையையும், சிவகங்கை அம் மூளையின் மேல் புறத்துள்ள சந்திரபுஷ்கரணியெனப்படும் அமுதவாபிகையையும் உவமையாய்ப் பெற்றிருக்கின்றன. சாக்கிரா வஸ்தையிலே ஆன்மாவினுடைய அறிவு மூளையிலே விளங்குவது இயல்பாதலால், தேவமானத்தில் விடியற்காலமும் பிரதோஷகாலமுமாகிய மார்கழி ஆனிமாசங்களில் ஆயிரக்கால் மண்டபத்திலே ஆநந்த நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம் நடந்து வருகின்றது. இவற்றின் தென்புறத்திலே ஶ்ரீ குருமூர்த்தியும் ஜோதிர்லிங்கமும் எழுந்தருளி யிருக்குமிடம் விசுத்தி ஸ்தானமாகப் பாவிக்கப்ப்டும். அதற்குத் தெற்கே “திருச்சிற்றம்பலம்” என்னும் மகாசபை யிருக்கின்றது. அங்கே பிரம விஷ்ணு ருத்திர மகேஸ்வர சதாசிவர்களுக்கென ஐந்து பீடங்க ளிருக்கின்றன. திருவைந்தெழுத்துக்க ளைந்தும் ஐந்துபடிகளா யிருக்கின்றன. அவ்விடத்துள்ள கதவு அவித்தை யெனப்படும். தத்துவ தாதுவிகங்களாகிய தொண்ணூற்று பதார்த்தங்களும் தொண்ணூற்றாறு பலகணிகளா யிருக்கின்றன. நடுவிலிருக்கும் நான்கு பொற்கம்பங்கள் நான்கு வேதங்களும், சுற்றியுள்ள இருபத்தெட்டு மரக்கம்பங்கள் இருபத்தெட்டு ஆகமங்களுமாம். இவைகளுள் அடங்கிய இடத்தைச் சுத்தவித்தையெனவும், ரகசியமுதலாய் ஶ்ரீ நடராஜமூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடம்வரையில் உள்ள பீடம் பிரணவ பீடமெனவும் படும். அப் பிரணவ பீடத்தின்கண்ணே சகளத்திருமேனியையுடைய ஶ்ரீமத் ஆநந்த நடராஜமூர்த்தி யெழுந்தருளி யிருக்கின்றனர். அதன்பின் வாயுபாகத்தில் சகளநிஷ்களமாகிய வியக்தாவ்வியக்த லிங்கமும், அதன்பின்னே ஆரண ஆகமங்களும் அறிந்தோத அரியதும், குணவரம்பு கடந்ததும், “திருச்சிற்றம்பலம்” என உயர்ந்தோராற் புகழ்ந் தேற்றப்படுவதுமாகிய அழியாப் பரசுடர்ச் சிவ்வொளிச் சிதாகாச வடிவும் விளங்கா நிற்கும். இச் சிதாகாச வடிவினையே ஊனக்கண்ணாற் கண்டோர் இரகசியம் என்பர். கர்ப்பக்கிருகமாய் இவ்விடத்தே அகில்லோக மாதாவாகிய சிவகாமசுந்தரியென்னும் பராசத்தியாரோடு ஸ்தூல நடராஜமூர்த்தியும், இரத்தினமயமான சூக்ஷ்ம நடராஜமூர்த்தியும், சூக்ஷ்மதரமான மற்றோர் இலிங்கமும் உள்ளன. இரகசியத்தை நிஷ்கள மென்றும், வியக்தாவ்வியக்த லிங்கத்தைச் சகள நிஷ்கள மென்றும், ஶ்ரீமத் ஆநந்த நடராஜமூர்த்தியைச் சகளவடிவமென்றும் உரைக்கப்படும். இன்னும் கீழ்ப் புறத்திலே சண்டேசுவர ஸ்தானத்திலே பிரமதேவரும், தென்புறத்திலே விஷ்ணுமூர்த்தியும், வடபுறத்திலே வைரவ மூர்த்தி யென்னும் சங்கார ருத்திர்ரும் இருக்கின்றார்கள். விமானத்தின் மேலேயுள்ள ஒன்பது கும்பங்களும் வாமை முதலிய நவசத்திகளாம். அவ் விமானத்திலுள்ள கைமரங்கள் அறுபத்து நான்கு கலைகளையும், செப்போடுகள் இருபத்தோராயிரத்திருநூறும் மனிதனால் ஒவ்வொரு தினமும் விடப்படுகின்ற சுவாசங்களையும், ஆணிகள் எழுபத்தீராயிரமும் அச்சுவாச சஞ்சார ஆதாரமான எழுபத்தீராயிரம் நாடிகளையும் குறிக்கின்றன. மற்றும் அனேக ரகசியங்கள் முன் விளக்கியவற்றுள் அமைந்தன. இச்சபையின் தென் புரத்தேயுள்ள கனகசபை முற்கூறிய சபையின் அனேக பாகங்களைப் பெற்றதும், பதினெண் புராணங்களைப் பதினெண் கம்பங்களாகப் பெற்றதுமாய், மணிபூரக ஸ்தானமாய் விளங்குகின்றது. இங்குள்ள சபைகள் ஐந்தும் ஐவகைக் கோசங்களை யுணர்த்துகின்றன.

      அவையாவன: இராஜசபை (ஆயிரக்கான் மண்டபம்) அன்னமயகோசமும்; தேவசபை (பேரம்பலம்) பிராணமய கோசமும், நிருத்தசபை மனோமயகோசமும், கனகசபை விஞ்ஞானமயகோசமும், சிற்சபை ஆநந்தமயகோசமுமாம். அன்றியும், திரிபுராதந்திரத்திற் சொல்லிய மூன்று கூடங்களும் மூலகூடம் தேவகூடம் ரகசியகூடம் என இங்குக் குறிக்கப்பட்டன. மனிதருடைய ஹிருதயம் சரீரத்தின் நடுவிலிராமல் சிறிது இடதுபுறத்தே விலகியிருத்தலால், இங்கும் ஆலயத்தின் சரிநடுவுக்குச்சிறிது இடப்புறத்தே கர்ப்பக்கிருகம் அமைந்திருக்கின்றது. ஹிருதயத்திலே இரத்தம் பிரவேசிக்கும் வழி நேரிலின்றிப் பக்கங்களிலிருப்ப்தால், இங்கும் வழிகள் கர்ப்பக்கிருஅகத்தின் பக்கங்களி லமைந்திருக்கின்றன. இச் சிற்சபையின் தென்புறத்தே மகாவிஷ்ணு ஸ்தானமும், அதற்குத் தெற்கே சங்கார நிருத்தமூர்த்தி ஸ்தானமும், அதற்குத் தெற்கே கணபதி ஸ்தானமும், தருமவடிவாகிய இடபதேவ ஸ்தானமும், கோபுரமும் இருக்கின்றன. ஐந்து ஆவரண மதில்களும் ஒரேவித அளவில் அமைந்தன. சரீரத்தினும் பிராணன் பன்னிரண்டங்குலம் அதிகமென்னும் யோகநூற் பிரமாணங்கொண்டே இரண்டாவது மதிலிற் கோபுரம் வைக்கப்பட்டிருக்கின்றது.

      இத்தகைய மகா மேன்மை பொருந்தியது சிதம்பராலயம். இவ்வாலயத்திலே சாஸ்திர விதிப்படி மெய்யன்போடு சுவாமி தரிசனஞ் செய்யின் ஞானமுதிக்கும்; பந்தநீங்கும்; பூரணத்துவ முண்டாம்; ஆநந்தம் விளையும்; ஆன்மநிலை விளங்கும்; அத்வைதமுத்தி சித்திக்கும்.

      இவ் வுண்மைகளை அறியும் அறிவு சிறிதேனும் இல்லாத வேதபாகியர்களின் புன்மொழிகளைக் கேட்டு “இது என்ன! கல், மண், செங்கல்தானே” என்று எண்ணலாகாது. ஒருவன் பூகோளத்தைப் படித்தறிய விரும்பி அதற்குத் துணைக்கருவியாய்க் கொண்ட பூகோள படத்தை “இது ஏதோ கோடுகள்; பூமியன்று” என்று நினைப்பானாயின், அவன் கருத்து முற்றுப்பெறுவ தெவ்வாறு? அப் படத்தையே பூமியென்று நினைத்தாலல்லவோ முற்றுப்பெறும். அதுபோல, இவ்வாலயத்தைக் கண்டவுடனே வேறொன்றும் நினையாது ‘இது ஏதோ ஒரு மகா யோகியின் இருதயகமலம்’ என்றும், ‘கடவுளுடைய திருவருள் இவ்விடத்திலே நிறைந்திருக்கின்றது’ என்றும், ‘இவ்வித நிலையே முத்திக்கு வழி’ என்றும் அறிந்து அவ்வழியைச் சிறிது சிறிதாகப் பற்றுதல் வேண்டும்.

      ஆரிய சகோதர்களே! நம் தேசத்திலுள்ள தேவாலயங்களின் உண்மைகளை நன்றாக ஆராய்ந்தறிந்து கடவுளை இடைவிடாது சிந்தித்து உய்யுங்கள். நாஸ்திகர், கிறிஸ்தவர் முதலாயினோர் வார்த்தைகளைக் கேட்டு மதிமயங்காதீர்கள். நாம் உய்யும்பொருட்டே நம் பெரியோர்கள் அவ்வப்பொழுது எவ்வளவு துன்பம் வரினும் அவைகளுக்குச் சிறிதும் அஞ்சாது நம் அருமையாகிய சமயத்தைக் காத்துவந்தார்கள். அதுபோல் அவர் சந்ததியிற் பிறந்தவர்களாகிய நீங்களும், உங்கள் உங்களால் இயன்றவளவு பிரயாசைப்பட்டு நம் சமயத்தைப் பாதுகாத்தருளுங்கள். அப்படிச் செய்தாலன்றி நாம் ஆரியர்களாகோம். சகோதர்களே! உங்களுக்கு நல்லறிவும் நற்புகழும் நன்னிலையும் நன்மேனியும் ஐக மத்தியமும் கைகூடுமாறு, ஶ்ரீமத் ஆநந்த நடன குஞ்சிதபாதன் திருவருளைப் பிரார்த்திக்கின்றோம். சுபமஸ்து.

சிதம்பர ரகசியம்

முற்றிற்று.

Related Articles