logo

|

Home >

articles >

aagamangal-potrum-anjezhuthu

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த ‏இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக ‏இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பி‎ன்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவெ‎‎ன்று ஆகமங்கள் பறைசாற்றுகி‎ன்றன.

சைவசித்தாந்த ஆகமங்களில், குறிப்பாக சந்திரஞானம், யோகஜம், வீராகமம், வித்தியாபுராணம், வாயுசங்கிதை முதலியனவும், சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகியனவும் திருவைந்தெழுத்து மந்திரத்தி‎‎ன் பெருமைகளை விரித்துக் கூறுகி‎ன்றன. ஏனைய ஆகமங்கள், குறிப்பாக மதங்க்பாரமேசுவரம், மிருகேந்திரம், காமிகம் முதலியன பிராஸாதமந்திரத்தைச் சிறப்பிக்கின்றன. அதிலும் மதங்கபாரமேசுவரம் வியோமவியாபி மந்திரத்தையே தீ¨க்ஷ முதலிய கிரியைகளில் சிறப்பித்துக் கூறுகின்றது.

வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவின‎ன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் ‏இல்லை எ‎‎ன்றும் ஆகமங்கள் கூறுகி‎ன்ற‎ன. ஐந்தெழுத்து மந்திரந்தா‎ன் யாது ? அது ந‎கார‎ம், மகாரம், சிகாரம் வகாரம் யகாரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. ‏‏இது பெரும்பாலும் மேற்குறித்த ஆகமநூல்களில் காணப்படுவது; ஆ‏யினும் அகாரம், உகாரம் மகாரம் பிந்து நாதம் ஆகியன அடங்கிய ஐந்தெழுத்து மந்திரத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். ‏‏இதற்கு ஸூக்ஷம பஞ்சாக்ஷரமந்திரமெ‎‎ன்று பெயர். சிவஞா‎னபோதம் 9 ம் சூத்திரத்தில் “எண்ணும் அஞ்செழுத்தே” எ‎ன்னும் சொற்றொடரால் குறிக்கப்படும் ஐந்தெழுத்து நம சிவாய எ‎ன்னும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும் ஓம் எ‎னப்படும் பிரணவ பஞ்சாக்ஷரத்தையும் ஹௌம் எனப்படும் பிராஸாத பஞ்சாக்ஷரத்தையும் குறிக்கும் எ‎ன்று சிவாக்கிரயோகிகள் தம்முடைய வடமொழிச் சிவஞா‎னபோதத்தி‎ன் லகுடீகை எ‎‎ன்னும் சுருக்கமான உரையில் கூறுகி‎ன்றார். எனவே பஞ்சாக்ஷர மந்திரம் மூவகையெ‎‎ன்று தெளிகிறோம்.

பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள்

महादेवसमो देवो नास्ति कश्चिज्जगत्त्रये ।
पञ्चाक्षरसमो मन्त्रो नास्ति नास्ति महामुने ॥

ஓ முனிவரே ! மஹாதேவராகிய சிவபெருமானுக்கொப்பான கடவுள் மூவுலகிலும் இல்லை; பஞ்சாக்ஷரத்திற்கொப்பான மந்திரம் இல்லை, இல்லை.

पञ्चाक्षरं महामन्त्रं भस्मेति परमौषधम् ।
महादेवः परो बन्धुरिति शास्त्रस्य निश्चयः ॥

பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது.

இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட அனைத்துப் பாவங்களும் விலகும்:

पुण्यं पवित्रं पापघ्नं पञ्चाक्षरमिदं जपेत् ।
यस्य स्मरणमात्रेण ब्रह्महत्या व्यपोहितम् ।

வித்தியாபுராணம் என்னும் ஆகமம் கூறும் செய்திகள்: பஞ்சாக்ஷரமென்பது நகாரம் மகாரம் சிகாரம் வகாரம் யகாரம் என்னுன் ஐந்தெழுத்துக்களைக் கொண்ட மந்திரம்; இதனுடன் தொடக்கத்தில் ஓம் என்னும் பிரணவத்தைச் சேர்த்தால் ஓம் நம சிவாய என்னும் ஷடக்ஷரமந்திரம். இந்த ஐந்து எழுத்துக்களும் முறையே ஸத்யோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசானம் என்னும் பஞ்ச பிரஹ்மங்களைக் குறிக்கும்; ஐவகைப் பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியனவும் குறிக்கப்பெறும்; மேலும், இவ்வைந்தெழுத்துக்களுக்கும் முறையே பிரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன், ஸதாசிவன் ஆகியோர் அதிதேவர்கள். நகாரம் தங்கநிறமுடையது,; மகாரம் கருநிறமுடையது; சிகாரம் தீயையொத்த நிறமுடையது; வகாரம் கருநீலநிறத்தையும் யகாரம் ஸ்படிகநிறத்தையுமொத்தவை. நகாரம் ருக்வேதத்தையும் மகாரம் யஜுர்வேதத்தையும் சிகாரம் ஸாமவேதத்தையும் வகாரம் அதர்வணவேதத்தையும் யகாரம் இதிஹாஸங்களையும் குறிக்கின்றன.

முடிவில் 
यावत्सिद्धिर्यदा सिद्धिर्नित्यमेवं जपं तथा ।
पदे पदे जपं देवि यो दध्यात् स विचक्षणः ॥

எவ்வளவு தடவை ஜபித்தால் மந்திரம் ஸித்தியாகுமோ அத்வரையிலும் எப்பொழுது ஸித்தியாகுமோ அதுவரையிலும் ஒருவன் இம்மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும் என்று இவ்வாகமம் கூறுகிறது.

சிதம்பரரஹஸ்யமென்னும் நூல் 

सृष्टिः स्याड्डमरुके स्थितिं स्यादभयहस्तके ।
संहारं चाग्निरूपे स्यात् तिरोभावः स्थिराङ्घ्रिके ॥
अनुग्रहं चापराङ्घ्रौ आत्मनः कुरुते शिवः।

ஆடல்வல்லானான நடராசப் பெருமானின் உடுக்கை (டமரு) உலகத்தின் சிருஷ்டியையும் பெருமானின் அபயஹஸ்தம் பிரபஞ்சம் நிலை பெற்றிருத்தலையும் பெருமான் தாங்கியிருக்கும் அக்னி அழிவையும் ஊன்றிய திருவடி திரோபாவத்தையும் தூக்கிய திருவடி அனுக்கிரஹத்தையும் குறிப்பன என்று மேற்கண்ட சுலோகம் கூறுகிறது. இக்கருத்தை அப்படியே நமக்கு வழங்குகிறார் மனவாசகம்கடந்தார் தம்முடைய உண்மைவிளக்கம் என்னும் நூலின் 36 ம் பாடலில். பாட்டு சைவப்பெருமக்கள் யாவருமறிந்ததே:

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்றுமலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

சிவதாண்டவமானது மக்களுக்கு எவ்வாறு முத்திப் பேறு அளிக்கிறதென்பதையும் இச்சிதம்பரரஹஸயம் கூறுகிறது:

विधूय मायां पापं च . . . . ज्ञानविनाशनम् ।
कृत्वोद्धृत्य . . . . ज्ञानहस्तेनानन्दसागरे ॥
स्थापितं परमात्मानं सन्ततं शिवताण्डवम्  ।

"மாயை, பாவம் புண்ணியம் முதலிய கருமவினைகள் ஞானத்தை மறைக்கும் ஆணவமலம் ஆகிய மும்மலங்களையும் அறவே நீக்கி தன்னுடைய அபயமென்னும் ஆனந்தக் கரத்தினால் எல்லையில்லா ஆனந்தக்கடலில் அமிழ்த்துவதே நடராசப் பெருமானின் ஆனந்ததாண்டவரஹஸ்யம்". என்பதூ இதன் பொருள்.

இதே கருத்தை நாம் உண்மை விளக்கத்தில் 37-ம் செய்யுளில் மீண்டும் காண்கிறோம்:

மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் 
ஆனந்தவாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான் .

28 மூலாகமங்களுள் ஒன்றான வீராகமம் பஞ்சாக்ஷரபடலமென்னும் இரண்டாம் படலத்தில் பெரும்பான்மை வித்தியாபுராணக் கருத்துக்களையே கூறுகின்றது; மேலும், சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரமென்னும் மூவகைப்பட்ட நியாஸங்களையும் அங்கநியாஸத்தையும் இம்மந்திரத்தைக் கொண்டே செய்யும் முறையைக் கூறுகிறது.

சைவாகமவசனஸங்கிரஹமென்னும் நூல் பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையைக் கூறுவதாவது:

कोटिजन्मकृतं पापं मनोवाक्काकर्मणा ।
सकृत् पञ्चाक्षरमन्त्रं कृत्वा चेत् शुद्धिमान् भवेत् ॥

"கோடிக்கணக்கான பிறவிகளில் மனம் மெய் மொழி ஆகியவற்றால் செய்த பாவங்களனைத்தும் ஒருமுறை பஞ்சாக்ஷரமந்திரத்தை உச்சரிப்பதால் விலகும்; அவன் தூயவனாகிறான்" என்பது. மேலும் இம்மந்திரம்

चण्डालान्नं सुरापानं मोघान्नं श्राद्धभोजनम् ।
ब्रह्मघ्नदोषा इति सर्वपापं विनश्यति ॥

சண்டாளனுடைய அன்னத்தைப் புசிப்பதாலும் கள் முதலியவற்றை அருந்தியதாலும் திருட்டுவழியில் சம்பாதித்துப் புசிப்பதாலும் சிராத்தம் முதலியவற்றில் உணவு உட்கொள்ளுவதாலும் பிராஹ்மணனைக் கொன்றதால் விளையும் பிரஹ்மஹத்தி என்னும் மிகக் கொடியபாவத்தையும் முற்றும் அழிக்கவல்லது" .

அடுத்து, "சிவ" என்னும் ஈரெழுத்துக்களின் பெருமையை மற்றொரு சுலோகம் கூறக்கேட்கலாம்:

चतुर्णामपि वेदानां शतरुद्रीयमुत्तमम् ।
एकादशानुवाकानामष्टमं चेष्टदानकम् ॥
विद्यासु श्रुतिरुत्कृष्टा रुद्रैकादशिनी श्रुतौ ।
तत्र पञ्चाक्षरं चैव शिव इत्यक्षरद्वयम् ॥

கற்கவேண்டியவற்றுள் வேதம் தலைசிறந்தது; அவற்றுள் [யஜுர்வேதத்திலமைந்துள்ள] ருத்ரைகாதசினீ என்னும் ஸ்ரீருத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது; அதனுள் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களும் அதனுள் சிவ என்னுமிரண்டெழுத்துக்களும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தனவென்று இச்சுலோகம் முழங்குகிறது.

நம சிவாய என்னும் ஐந்தெழுத்துக்களை மாற்றியமைத்து யநவாசிம என்னும் மந்திரத்தால் உச்சாடனம் மாரணம் என்னும் கிரியைகளையும், மவாயநசி என்னும் மந்திரத்தால் வித்துவேஷணம் என்னும் கிரியையும், வாசிமயந என்பதால் மோஹனத்தையும், செய்யலாம் என்று சிவஞானவித்தியா என்னும் நூல் கூறுகிறது.

तेनाधीतं श्रुतं तेन ।।।।  सर्वमनुष्ठितम् ।
येनों नमःशिवायेति मन्त्राभ्यासः स्थिरीकृतः ॥
जिह्वाग्रे वर्तते यस्य सफलं तस्य जीवितम् ।
अन्त्यजो वाऽधनो वापि मूर्खो वा पण्डितोऽपि वा। 
पञ्चाक्षरजपे निष्ठः मुच्यते पापबन्धनात् ॥

எவனொருவன் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை இடையறாது பக்தியுடன் செய்கிறானோ அவனால் கற்கப் படவேண்டிய நூல்களனைத்தும் கற்றனவாகின்றன; எல்லா நற்செயல்களும் இயற்றப்பட்டதாகின்றன. எவனுடைய நாவில் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் விளங்குகின்றதோ அவனுடைய வாழ்வு நிறைவுற்றதாகிறது; மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவனோ பொருளற்றவனோ கல்வியறிவற்ற மூர்க்கனோ எல்லாக் கல்வியையும் கற்றவனோ எவனாகிலும் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை மன உறுதியுடன் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான் என்பதே அதன் பொருள்.

சிவபெருமானுடைய திருவாக்கில் தோன்றிய எல்லா மந்திரங்களும் பஞ்சாக்ஷரமந்திரத்தினுடைய 16 ல் ஒரு பங்கு மஹிமைக்குக் கூடச் சமமற்றவை என்றும் சிவஞானவித்தியா என்னும் நூல் கூறக்காண்கிறோம்.

பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையை விளக்க வந்த இந்நூலானது கூறும் மற்றொரு செய்தி: சிவபெருமான் தேவியாருக்குக் கூறுகிறார்:

பிரளயம் ஏற்பட்ட போது எல்லாத் தாவரங்களும் உயிர்களும் தேவர்களும் அரக்கர்களும் அழிந்து பிரகிருதியில் ஒடுங்கின; அப்பிரகிருதி என்னிடத்தில் ஒடுங்கியது. என்னைத் தவிர வேறெவரும் இல்லை. நானோ பஞ்சாக்ஷர வடிவில் அவை யாவற்றையும் தாங்கியிருந்தேன். அதிலிருந்து மீண்டும் பிரபஞ்சத் தோற்றத்திற்காக என்னுடைய சக்தியே நாராயணன் என்னும் வடிவமாகவும் அதிலிருந்து பிரஹ்மாவும் தோன்றினர். உலகத்தைப் படைப்பதற்காக பிரஹ்மாவானவர் பஞ்சாக்ஷரமந்திரத்திலிருந்தே மீண்டும் யாவற்றையும் தோற்றுவித்தார். எனவே அம்மந்திரத்தின் மஹிமை பெருமைகள் கணக்கிலடங்கா. அவற்றைப் பேசவும் அரிது எனப் பெருமான் கூறுகிறார்.

சைவசாஸ்திரமென்னும் நூல் கூறுவதாவது:

महादेवसमो नास्ति यथा देवो जगत्त्रये ।
पञ्चाक्षरसमो मन्त्रो न भूतो न भविष्यति ॥

சிவபெருமானுக்கிணையான வேறொரு தெய்வம் மூவுலகிலுமில்லை; பஞ்சாக்ஷரமந்திரத்திற்கிணையாக மந்திரம் கடந்தகாலத்திலும் இனி வரும் காலத்திலுமில்லை.

गच्छतस्तिष्ठतो वापि स्वेच्छया कर्म कुर्वतः ।
अशुचिर्वा शुचिर्वा मन्त्रोऽयं न निष्फलः ।

நடந்துகொண்டோ நின்றுகொண்டோ தனக்குத் தோன்றிய முறையில் செயல்களைச் செய்துகோண்டோ சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்துகொண்டோ ஜபம் செய்தாலும் இம்மந்திரம் பலனளிக்காமல் போகாது .

सर्वदेवान् परित्यज्य यजेत् पञ्चास्यमीश्वरम् ।
सर्वमन्त्रान् परित्यज्य जपेत् पञ्चाक्षरीं सदा ॥

எல்லாத்தெய்வங்களையும் நீக்கி ஐந்துமுகங்கொண்ட சிவபெருமானையே வழிபடு; எல்லா மந்திரங்களையும் நீக்கி பஞ்சாக்ஷரமந்திரத்தையே ஜபம் செய் என்பதாகும் அதன் பொருள். வில்வமரத்து நிழலில்பக்தியுடன் இம்மந்திரத்தை ஜபித்து, பின்னர் பூசைக் கேற்ற இலைகளையோ அல்லது புஷ்பங்களையோ ஹோமம் செய்தால் எல்லா நற்குணங்களும் பொருந்திய மகனைப் பெறுவான் என்பது திண்ணம். இது சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவது.

சாரதாதிலகமென்னும் பழமையான மந்திரசாத்திரநூல் கூறுவதாவது:

உத்தராயணம், தக்ஷ¢ணாயனம், சந்திர சூரியகிரஹணஙள் ஆகிய புண்ணிய காலங்களில் தொப்புள் அளவு நீரில் நின்றுகொண்டோ, அல்லது சிவபெருமான் சந்நிதியிலோ பத்து லக்ஷம் தடவை இம்மந்திரத்தை ஜபிக்க எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டு அவன் நிர்மலனாகிறான். முடிவில் சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவதாவது:

सप्तकोटिमहामन्त्रैः उपमन्त्रैरनेकदा ।
मन्त्रैः षडक्षरो भिन्नः सूत्रव्याख्यानता यथा ॥

ஸப்தகோடிமந்திரங்களினின்றும் மற்றுமுள மந்திரங்களினின்றும் பஞ்சாக்ஷரமந்திரமானது முற்றிலும் வேறுபட்டது; எவ்வாறெனில் சூத்திரமும் அதன் வியாக்கியானமும் போல. எனவே பஞ்சாக்ஷ¡ரமந்திரம் சூத்திரத்தைப் போன்று பலபொருள்களைத் தன்னுள்ளடக்கியது. அதன் விரிவே மற்றெல்லா மந்திரங்களும்.

ஸித்தவீரணசிவயோகியார் இயற்றிய அநாதிவீரசைவஸங்கிரஹ மென்னும் வீரசைவ நிபந்தநூலிலும் இப்பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள் விரித்துக் கூறப்படுகின்றன: பிரஹ்மோத்தரகண்டமென்னும் நூற்பகுதியில்

किंतस्य बहुभिर्मन्त्रैः शास्त्रैर्वा बहुविस्तरैः ।
यस्यों नमः शिवायेति मन्त्रोऽयं संस्थितो हृदि ॥

என்று கூறப்படுகிறது. எவனுடைய இதயத்தில் எப்போதும் ஓம் நமசிவாய என்னும் மஹாமந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ அவனுக்கு மற்ற மந்திரங்களாலோ அல்லது மற்ற சாத்திரங்களலோ என்ன பயன் ? ஒன்றுமில்லை எனச் சிவபெருமானே அம்மந்திரத்தின் மஹிமையை விளக்குவதாகக் காண்கிறோம் . மேலும் அந்நூல் கூறுவதாவது:

कैवल्यमार्गदीपोऽयम् अविद्याब्धेश्च बाडवः ।
महापातकदावाग्निः सोऽयं शैवषडक्षरः ॥
एषः पञ्चाक्षरो मन्त्रः केवलो मुक्तिदायकः ।
संसेव्यते मुनिश्रेष्ठैरशेषैः सिद्धिकाङ्क्षिभिः ॥

ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரம் கைவல்லியமென்னும் மோக்ஷத்தை அடைவதற்கான வழியாகும்; அவித்தியை என்னும் அஞ்ஞானக் கடலை அணைக்கும் படவா என்னும் பிரளயகால நெருப்பு; கொடிய பாவங்களாகிய காட்டை எரிக்கும் காட்டுத் தீ. இம்மந்திரம் ஒன்றே முத்திய அளிக்கவல்லது. ஆதலின் முத்தியை அடையும் பொருட்டு எல்லா முனிவர்களாலும் இம்மந்திரம் ஒன்றே எப்போதும் ஜபிக்கப்படுகின்றது.

பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை விளக்கிக் கூறும் நிபந்தநூலொன்றில் கீழ்க்கண்டவாறு அதன்மஹிமைகள் விரித்துக் கூறப்படுவதைக் காண்கிறோம்:

எப்படிப்பட்ட கொடிய பாவங்களையும் அழிக்கவல்லன மந்திரங்கள்; ஆனால் சிவபெருமானுடைய திருநாமங்கள் அழிக்கக் கூடிய அளவுக்குப் பாவங்களே இல்லாமையால் மனு முதலிய ஸ்மிருதிகளில் சிவநாமத்தைப் பிராயச்சித்தமாக ஜபிக்கும்படி கூறவில்லை. அப்பாவங்களைப் போக்க மற்ற மந்திரங்களுள்ளன என்பது இதன் உட்பொருள்.

ஸ்காந்தபுராணத்தின் ஒருபகுதியான சங்கரஸம்ஹிதையில்

पञ्चाक्षरीमहामन्त्रं पञ्चपातकनाशनम् ।
तज्जापकानां न पुनर्जनिरस्तीति ध्रुवम् ॥

ஐந்து கொடிய பாவங்களையும் அழிக்கவல்ல பஞ்சாக்ஷரமந்திரத்தை ஜபிப்போர்க்கு அப்பாவங்களினின்றும் விடுதலை, பிறவியிலிருந்தும் விடுதலை. மேலும், அகஸ்தியர், இராமர் முதலிய புண்ணிய புருஷர்களால் இம்மந்திரம் ஓதப்படுவதாலும், வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுவதாலும் வேதத்தில் காணப்படுவதாலும் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும் மந்திரமாதலாலும் நமசிவாய என்னுமிம்மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பீராக என்று முனிவர்கள் வேண்டுகின்றனர்.

சிவபுராணத்தின் கடைசி பாகமான வாயுஸம்ஹிதையும் இம்மந்திரத்தின் மஹிமையை விளக்குகின்றது:

पञ्चाक्षरेण मन्त्रेण सर्वोपनिषदात्मना ।
लेभिरे मुनयः सर्वे परं ब्रह्म निरामयम् ॥ 

எல்லா உபநிஷதங்களுடைய பொருள்களை ஒருங்கே கொண்ட பஞ்சாக்ஷரமந்திரத்தின் மூலம் முனிவர்கள் பரம் பொருளான சிவபெருமானை அடைந்தனர்.

सततं भस्मरुद्राक्षसमलङ्कृतविग्रहः ।
पञ्चाक्षरीजपासक्तः सर्वप्राण्यभयप्रदः ।
विहरत्येव निष्ठावान् जीवन्मुक्तः स ईरितः ।
एष ज्ञानी विरक्तश्च मतिमान् लोकपूजितः ॥

எப்போதும் திருநீறும் ருத்திராக்ஷம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு பஞ்சாக்ஷரமந்திரத்தையும் எப்போதும் ஜபித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன் ஜீவன்முக்தன் எனப்படுவான்; அவனே முற்றும் உணர்ந்த ஞானி, வைராக்கியமுடையவன், அறிவிற் சிறந்தவன், மூவுலகிலும் போற்றப்படுபவன்.

சிவதருமோத்தரமென்னும் ஒப்பற்ற சைவநூல் உபாகமங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றப்படுகின்றது; இது சைவர்களுக்குச் சரியை, கிரியை ஆகியவற்றைத் தெள்ளெனவிளக்கிக் கூறும் நூல். மிகப் பழமையானது. 12 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் 16 ம் நூற்றாண்டில் தில்லையில் வாழ்ந்த மிகச் சிறந்த சைவ ஆசாரியரும் வடமொழியிலும் தமிழிலும் பல சைவ நூல்களை இயற்றி அக்காலத்தில் சைவத்திற்குப் புத்துணர்ச்சியூற்றி மக்களிடையே பரப்பியவருமான மறைஞானசம்பந்தரால் சொற்சுவையும் பொருட்சுவையும் ஒருங்கே அமைந்த பாக்களாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதை சைவர்கள் அறிவர். பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை அந்நூல் கூறுவதாவது:

मन्त्रं सुसुखमुच्चार्यमशेषार्थप्रसाधकम् .
प्राहोन्नमः शिवायेति सर्वज्ञः सर्वदेहिनाम् .
सबीजं सर्वविद्यानां मन्त्रमाद्यं षडक्षरम् .
अतिसूक्ष्मं महार्थं च ज्ञेयं तद्वटबीजवत् .

அகத்தியமுனிவர் கந்தப்பெருமானை வேண்டி உலகில் மக்கள் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கும் உபாயமொன்றைக் கூறும்படி கேட்க, அதற்குக் கந்தப்பெருமான் இந்த ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் கூறினார்: இது எல்லா ஞானத்திற்கும் விதை போன்றது; ஆலங்கனியில் மிகச் சிறிய விதையானது பின்னர் பெரிய மரமாக வளர்வதுபோல் எல்லாக் கலைகளுக்கும் ஞானத்திற்கும் மந்திரங்களுக்கும் இம்மந்திரம் விதை போன்றது; மிக சூக்குமமானது; அதே சமயம் பரந்த பொருள் விரிவையுடையது.

அடுத்து அந்நூல் கூறுகிறது,

मन्त्रे षडक्षरे सूक्ष्मे पञ्चब्रह्मतनुः शिवः .
वाच्यवाचकभावेन स्थितः साक्षात् स्वभावतः .
वाच्यः शिवः प्रमेयत्वात् मन्त्रस्तद्वाचकः स्मृतः .
वाच्यवाचकभावोऽयमनादिः संस्थितस्तयोः .
यथानादिः प्रवृत्तोऽयं घोरः संसारसागरः .
शिवोऽपीह तथानादिः संसारान्मोचकः स्थितः .

இந்த சூக்குமமான மந்திரத்தினுள் ஸத்யோஜாத்ம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்னும் ஐந்து பிரஹ்மங்கலான ஸதாசிவப் பெருமான் அடங்கியுள்ளார்; இம்மந்திரம் ஸதாசிவப் பெருமானைக் குறிப்பது, பெருமான் அதன் மூலம் குறிக்கப்படும் பொருள். இந்தத் தொடர்பு அநாதிகாலம் தொட்டே நிலவிவருகிறது. இந்த கோரமான ஸம்ஸாரக்கடல் அநாதிகாலம் தொட்டே இருப்பதுபோல் சிவபெருமானும் அநாதிகாலமாக அக்கடலைக் கடக்கச் செய்பவர்.

व्याधीनां भेषजं यद्वत् प्रतिपक्षं स्वभावतः .
तद्वत् संसारदोषाणां प्रतिपक्षः शिवः स्थितः .

நோய்களுக்கு எதிர்மறையாக மருந்து விளங்குவதுபோல் ஸம்ஸாரமென்னும் நோய்க்கு எதிர்மறையாக அதனை முற்றிலும் அழிக்கவல்லவர் சிவபெருமானே.

இவ்வாறு பலதிறத்தானும் பல விளக்கங்களாலும் ஆகமங்களும் புராணங்களும் சிவபெருமானைக் குறிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மஹிமை பெருமைகளை ஒப்புயர்வற்றநிலையில் வைத்துப் போற்றுகின்றன. அந்நூல் கடலிலிருந்து சில துளிகளை ஸமுத்திரகலசநியாயமாக என் சிற்றறிவுக்கேற்ற வகையில் இச்சைவ சபையில் சைவ ஆன்றோர்கள் முன்னர் பகிர்ந்துகொண்டேன்.

 


See Also : 
1. Panchakshara Mantra
2. Pranava Mantra
3. Mantras of Lord Shiva

Related Articles