1.1 திருமலைச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
011 | பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப் பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை. |
1.1.1 |
012 | அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும் எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய புண்ணியந் திரண்டு உள்ளது போல்வது. |
1.1.2 |
013 | நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை. |
1.1.3 |
014 | மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் கான வீணையின் ஓசையும் காரெதிர் தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர் வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். |
1.1.4 |
015 | பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ் அனித கோடி அணிமுடி மாலையும் புனித கற்பகப் பொன்னரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம். |
1.1.5 |
016 | நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறட்சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம். |
1.1.6 |
017 | நாயகன் கழல் சேவிக்க நான்முகன் மேய காலம் அலாமையின் மீண்டவன் தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்று ஆய அன்னமும் காணா தயர்க்குமால். |
1.1.7 |
018 | காதில் வெண்குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான் சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு மீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்றதன் கீழ் ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான் என்றதனை வந்தணைதரும் கலுழன். |
1.1.8 |
019 | அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இருகையும் ஏந்தி நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுயர் வழியினால் ஏறிப் புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு. |
1.1.9 |
020 | வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும் காதலால் மிடைந்த முதல் பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளான் பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும் நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான். |
1.1.10 |
022 | நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர் பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார் மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான். |
1.1.11 |
022 | கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும் மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன் செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு. |
1.1.12 |
023 | அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து இன்ன தன்மையன் என்றறியாச் சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் உன்னாரும் சீர் உபமன் னிய முனி. |
1.1.13 |
024 | யாதவன் துவரைக்கிறை யாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன் பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு ஆதி அந்தம் இலாமை அடைந்தவன். |
1.1.14 |
025 | அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் பத்தராய முனிவர் பல்லாயிரர் சுத்த யோகிகள் சூழ இருந்துழி. |
1.1.15 |
026 | அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம் இங்கி தென்கொல் அதிசயம் என்றலும். |
1.1.16 |
027 | அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள் சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன் எந்தையார் அருளால் அணைவான் என. |
1.1.17 |
028 | கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர். |
1.1.18 |
029 | "சம்புவின் அடித் தாமரைப் போதலால் எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத் "தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன் நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்". |
1.1.19 |
030 | என்றுகூற இறைஞ்சி இயம்புவார் வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் நன்று கேட்க விரும்பும் நசையினோம் இன்றெமக்குரை செய்து அருள் என்றலும். |
1.1.20 |
031 | உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் "வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும் அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன். |
1.1.21 |
032 | அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத் துன்னினான் நந்தவனச் சூழலில். |
1.1.22 |
033 | அங்கு முன்னரே ஆளுடை நாயகி கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத் திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார் பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். |
1.1.23 |
034 | அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் கந்த மாலைக் கமலினி என்பவர் கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி வந்து வானவர் ஈசர் அருள் என. |
1.1.24 |
035 | மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப் போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக் காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். |
1.1.25 |
036 | முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர் என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன பன் மலர் கொய்து செல்லப் பனிமலர் அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின். |
1.1.26 |
037 | ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே ' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி மீது தோன்றி அம் மெல்லியலார் உடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்' என. |
1.1.27 |
038 | கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான் 'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன் மையல் மானுடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டருள் செய்' என. |
1.1.28 |
039 | அங்கணாளன் அதற்கருள் செய்த பின் நங்கை மாருடன் நம்பிமற்றத் திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன். |
1.1.29 |
040 | அந்தணாளரும் ஆங்கது கேட்டவர் "பந்த மானிடப் பாற்படு தென்திசை இந்த வான்திசை எட்டினும் மேற்பட வந்த புண்ணியம் யாதெ"ன மாதவன். |
1.1.30 |
041 | "பொருவருந் தவத்தான் புலிக் காலனாம் அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால். |
1.1.31 |
042 | அத் திருப்பதியில் நமை ஆளுடை மெய்த் தவக்கொடி காண விருப்புடன் அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று இத் திறம் பெறலாம் திசை எத்திசை.. |
1.1.32 |
043 | பூதம் யாவையின் உள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படு மேதினிக் காதல் மங்கை இதய கமலமாம் மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால். |
1.133 |
044 | எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள் தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக் கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று உம்பர் போற்றும் பதியும் உடையது. |
1.1.34 |
045 | நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து பொங்கு நீடருள் எய்திய பொற்பது கங்கை வேணி மலரக் கனல்மலர் செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது. |
1.1.35 |
046 | தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை ஈசர் தோணி புரத்துடன் எங்கணும் பூசனைக்குப் பொருந்தும் இடம் பல பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை". |
1.1.36 |
047 | என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை அன்று சொன்ன படியால் அடியவர் தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன். |
1.1.37 |
048 | மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம் புற்று இடத்து எம்புராணர் அருளினால் சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப் பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம். |
1.1.38 |
049 | அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி புந்தி ஆரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம். |
1.1.39 |
050 | உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம். |
1.1.40 |
திருச்சிற்றம்பலம்