logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-agil-maram

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்


அகில் மரம்


அகில் Aquilaria agallocha, Linn.; Meliaceae.

நீரானே நீள்சடை மேலொர் நிரை கொன்றைத்	
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்	
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் 	
ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.

                                                                        . - திருஞானசம்பந்தர்.

 

 

திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும். இது அகருமரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கும்.

 

கட்டை மருத்துவப் பயனுடையது. பித்தநீர் பெருக்குதல், வீக்கம் கரைத்தல், உடல் வெப்பம் மிகுத்தல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

 

திருமுறைகளில் அகில் பற்றிய குறிப்பு :-

அந்தமும் ஆதியும் நான்முகனும் 
	அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர் 
	மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் 
	சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங் 
	கணபதி யீச்சரங் காமுறவே.		1.6.9

அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.	1.13.4

தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.	1.61.4

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் 
	திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி 
	வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் 
	தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல் 
	இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.	1.78.8

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே.		1.121.6

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.	2.34.7

மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து 
	மலையான் மடந்தை மணிபொன்
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை 
	பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப 
	அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் 
	நனிபள்ளி போலு நகர்காள். 		2.84.6

பாரும் நீரொடு பல்கதிர் 
	இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் 
	வேள்வியில் தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு 
	வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர 
	புரந்தொழும் அடியவர் வருந்தாரே.		2.102.5

திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே.		3.31.1

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.		3.31.4

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.		3.36.1

வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.		3.36.5

மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.	3.91.2

கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
	கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
	நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
	நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
	தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.	7.3.01

சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
	மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
	நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
	பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
	அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.		7.3.07

மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
	மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
	ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
	அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்
	கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.	7.16.4

குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
	குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
	திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
	மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
	விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.	7.42.2

காடும் மலையுந் நாடு மிடறிக்
	கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
	திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
	பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
	விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.	7.42.8

உயர்கொடி யாடை மிடைபட லத்தின் 
	ஓமதூ மப்பட லத்தின்
பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் 
	பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
	நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
	வடிகள்என் மனத்துவைத் தருளே.		9.1.1

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
	சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்¢ன்
	பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
	வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
	பூவணங் கோயில்கொண் டாயே.		9.14.1

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.		9.24.4

ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.	9.24.5

விரிகடல் பருகி .... 
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப் (15) 
பொங்குபுனல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.	(20)	11.சேரமான்.1

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல		11.நக்கீரர்.300

கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர் 
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப் 
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின் 
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.	1.2.27

அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி 
முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த 
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை 
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.	1.5.16

மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் 
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் 
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில் 
செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார்	1.5.82

உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து 
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் 
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் 
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார்	3.3.98

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால் 
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தே 
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் 
பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி	4.5.21

காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 
மேலெல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை	5.1.4

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் 
நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் 
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார்.	12.சம்.39

அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் 
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் 
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் 
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.	12.சம்.332

மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப் பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி 
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம் 
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக் 
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை. 12.சம்.897

மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும் மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும் 
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப் 
பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு 
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.	12.சம்.1029

மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப் 
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத் 
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் 
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக.	12.சம்.1177

அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த 
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது 
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த 
இகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.	12.சம்.1231

பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை 
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு 
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் 
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி.	12.ஏயர்.35

மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார். 	12.ஏயர்.185

தூமலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் 
மாமழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் 
பூமலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ 
ஓமநல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும்.	12.சிறப்.2

அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர் 
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார் 
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் 
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார்.	12.கழற்.70

பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள் 
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார் 
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன 
வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.	12.கழற்.142

துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில் 
அலையில் தரளம் அகில் ஒடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும் 
குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை 
நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால்.	12.கோச்.1

 

 

< PREV <
வேம்பு
Table of Content > NEXT >
அத்திமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)

temple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி