|
Home > Scriptures & Stotras > Tamil >ThirumuRai > thiruvAcakam Index
21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்
திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)
Tiruvasakam of Manikka Vasakar
(தில்லையில் அருளியது)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
திருச்சிற்றம்பலம்
1. உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378
2. முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379
3. உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380
4. முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381
5. அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382
6. ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383
7. இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384
8. அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385
9. சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386
10. நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387
திருச்சிற்றம்பலம்
Etext of this work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998
The TSCII version was first put up on Dec 12, 2000
This unicode version was last revised on 13 sept.2002.
Please send your comments and corrections to the Webmaster(s) of this site
Index to all thiruvAcagam songs
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page
|