|
Home > Scriptures & Stotras > Tamil > Seventh ThirumuRai
7.98 திருநன்னிலத்துப் பெருங்கோயில்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஏழாம் திருமுறை)
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
995 தண்ணியல் வெம்மையினான் 7.98.1
தலையிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழியார்
இடக் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர்
முறையால்அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
996 வலங்கிளர் மாதவஞ் செய் 7.98.2
மலைமங்கை யோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கை தங்கச்
சடைஒன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்
பனிவெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
997 கச்சிய னின்கருப்பூர் 7.98.3
விருப்பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சைய உண்ணி
உலகங்கள்எல் லாம்உடையான்
நொச்சியம் பச்சிலையான்
நுரைதீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
998 பாடிய நான்மறையான் 7.98.4
படுபல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான்
அடிபோற்றிஎன் றன்பினராய்ச்
சூடிய செங்கையினார்
பலதோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
999 பிலந்தரு வாயினொடு 7.98.5
பெரிதும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
பிளவாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்
நெடுமாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1000 வெண்பொடி மேனியினான் 7.98.6
கருநீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான்
பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர்
பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1001 தொடைமலி கொன்றைதுன்றுஞ் 7.98.7
சடையன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய்யிற்
பகட்டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம்
மலர்மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1002 குளிர்தரு திங்கள்கங்கை 7.98.8
குரவோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமே
லுடையான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை
தடமாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1003 கமர்பயில் வெஞ்சுரத்துக் 7.98.9
கடுங்கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்தி அருச்
சுனனுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில்
தகுசைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1004 கருவரை போல்அரக்கன் 7.98.10
கயிலைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்தின்
னருள்செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த்
துறைவன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனே.
1005 கோடுயர் வெங்களிற்றுத் 7.98.11
திகழ்கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப்
பெருங்கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை
சடையன் திருவாரூரன்
பாடிய பத்தும்வல்லார்
புகுவார்பர லோகத்துள்ளே.
திருச்சிற்றம்பலம்
Back to Complete Seventh thirumuRai Index
Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page
|