|
Home > Scriptures & Stotras > Tamil > Seventh ThirumuRai
7.44 முடிப்பதுகங்கை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஏழாம் திருமுறை)
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை யோஎம் பிரானுக்கே. 7.44.1
தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே. 7.44.2
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே. 7.44.3
நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்க ணிந்எஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே. 7.44.4
வேயன தோளி மலைம களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாடன் ஆகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப ரால்எம் பிரானையே. 7.44.5
இறைவனென் றெம்பெருமானை வானவர் ஏத்தப்போய்த்
துறையொன் றித்தூ மல ரிட்ட டியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை யோஎம் பிரானுக்கே. 7.44.6
தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊரும்ஒன் றில்லை உலகெ லாம்உகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ரால்எம் பிரானுக்கே. 7.44.7
அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
எரிஅன்றி அங்கைக்கொன் றில்லை யோஎம் பிரானுக்கே. 7.44.8
கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை யோஎம் பிரானுக்கே. 7.44.9
காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரன் எட்டோ டிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்அடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர் காள்எம் பிரானையே. 7.44.10
திருச்சிற்றம்பலம்
Back to Complete Seventh thirumuRai Index
Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page
|